Wednesday, May 19, 2021

1168. துளசி அய்யா





*

1966-ம் ஆண்டு முதுகலை முடித்து, வேலை தேடும் படலம். நாலைந்து மாதம் அத்துவானக் காட்டில் மந்திரிச்சி உட்ட கோழி மாதிரி அலைக்கழித்துக் கொண்டிருந்தேன். தேன் மாதிரி ஒரு செய்தி; தஞ்சையில் உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் ஒரு வேலை காலி என்று ஒரு நல்ல செய்தியை Dr.வின்சென்ட் போஸ்ட்கார்ட் வழியாகத் தெரிவித்தார். வேலை அத்தனை எளிதாகக் கிடைத்தது. கல்லூரி முதல்வர் திரு.முருகன் ஒரு தமிழ்ப் பேராசிரியர். என் மதிப்பெண்களில் இளம்கலையில் நான் தமிழில் வாங்கிய மதிப்பெண்ணைப் பார்த்ததுமே, அதைக் குறிப்பிட்டே எனக்கு வேலையைக் கொடுத்தார்.

அப்போதெல்லாம் முதுகலை முடித்தவர்கள் நேரடியாக விரிவுரையாளர்களாகத்தான் சேர்வது வழக்கம். என்னைப் போல் - unlucky fellows - சித்தாள் வேலையில் (demonstrator / tutor) விழுந்து தொலைப்போம். என் பதவியுயர்வுக்கு என் பேராசிரியர் முழு முயற்சியெடுத்தும் அந்தப் பதவி துறைக்கு வராமலே நான்காண்டுகள் அங்கே சித்தாள் வேலை பார்த்துவிட்டு, பின் 70- அக்கல்லூரியிலிருந்து விலகி, அமெரிக்கன் கல்லூரியிலும் அடுத்த ஆண்டு பதவி உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சித்தாளாகச் சேர்ந்தேன்.

இது நடந்து சில மாதங்களில் புஷ்பம் கல்லூரியின் புதிய தாளாளராக திரு துளசிய்யா வாண்டையார் பதவியேற்றார். அவர் உடனே அடுத்த ஆண்டுக்கான புதிய பதவிகளை அனுமதித்தார். நண்பர்கள் மூலம் அதைக் கேள்விப்பட்டு 1971 கல்வியாண்டின் ஆரம்பத்தில் நேர்முகத் தேர்விற்குச் சென்றேன். துறைத்தலைவர்’நீங்கள் இங்கிருந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ, அதை இப்போது உங்கள் இடத்திற்கு வந்தவருக்குச் செய்து விட்டேன்’ என்றார். அதாவது என்னிடத்தில் சித்தாளாகச் சேர்ந்தவரின் பதவி உயர்வுக்கு அவரது சிபாரிசினை எழுத்து மூலமாகக் கொடுத்துள்ளார். தேர்வாக மாட்டோம் என்று தெரிந்தது. இருந்தும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். அதிலும் புதிய தாளாளர் இன்னொரு மாற்றம் கொண்டுவந்திருந்தார். துறைத் தலைவருக்குப் பதில் அதற்கு அடுத்த பேராசிரியரை நேர்முகத் தேர்வை நடத்த அழைத்திருந்தார். தாளாளர் ‘ஏன் இந்தக் கல்லூரியிலிருந்து போனீர்கள்?’ என்று கேட்டார். காரணம் சொன்னேன். அதன் பின் அவரும், பேராசிரியரும் கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்கள் சொன்னேன்.

துறைத் தலைவர் சொன்னதிலிருந்து எனக்கு அப்பதவி கிடைக்காது என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் தேர்வு முடிந்து வந்த பேராசிரிய நண்பர் ‘உங்கள் மீது தாளாளருக்கு மிகுந்த நல்ல எண்ணம். நீங்கள் பேசியது அவருக்கு மிகவும் பிடித்து போனது. அதனால் கொஞ்சம் பொறுங்கள்’ என்றார். ஆனால் என்னைத் தேர்ந்தெடுத்தால் இருப்பவரை என்ன செய்வது என்ற கேள்வி எழும்ப, அவரையே இறுதியில் தேர்ந்தெடுத்தார்கள். அதுதானே சரி.

அதன் பின்னும் அக்கல்லூரி பற்றிய ஆர்வம் குறையவில்லை. புஷ்பம் கல்லூரி வேகமாக வளர்ந்ததையும் தொடர்ந்து பார்த்து வந்துள்ளேன். நான் வேலையிலிருந்து விலகி ஓராண்டு கழித்து வருவதற்குள்ளாகவே கட்டிடங்களில் நிறைய மாற்றங்கள் இருந்தன. வெறும் ‘ப’ வடிவத்திலிருந்த கட்டிடத்திற்கு அருகிலும் பின்னாலும் பெரிய புதிய கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்திருந்தனர். சுயாட்சியும் விரைவில் பெற்றது. அதைவிட நான் கல்லூரியில் வேலை பார்த்த போது விளையாட்டுப் போட்டிகளில் சிறந்திருந்தது. அச்சிறப்பும் தொடர்ந்து இருந்து வந்ததையும் பார்த்து வந்தேன். இன்னும் அக்கல்லூரியில் வேலை பார்த்த அந்த இனிய நான்காண்டுகள் மிகப் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

இன்னொரு முக்கியமான மாற்றத்தையும் பார்த்தேன். நானிருந்த நான்கு ஆண்டுகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் தஞ்சையிலிருந்து ரயிலில் தான் வருவோம். மாணவர்கள் செயினை இழுத்து ரயிலை நிறுத்துவது அடிக்கடி நடக்கும். பெரும்பான்மையான ஆசிரியர்கள் அதே ரயிலில் வருவதால் மாணவர்களுக்கும் கவலையில்லை. ஆனால் துளசிய்யா தாளாளராக வந்ததும் செய்த முதல் சில மாற்றங்களில் ஒன்று, ஆசிரியர்கள் காலையில் பேருந்து மூலம் வரவேண்டும் என்று ஏற்பாடு செய்துள்ளார். அது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கல்லூரி ஒழுங்காக நடக்க அவர் எடுத்த எளிய வழி அது. அது பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததாக அக்கல்லூரி நண்பர்கள் கூறியதுண்டு.




1 comment:

  1. நன்றி எந்த வடிவுலும் இருக்கலாம் சார்.

    ReplyDelete