Wednesday, May 19, 2021

1168. துளசி அய்யா





*

1966-ம் ஆண்டு முதுகலை முடித்து, வேலை தேடும் படலம். நாலைந்து மாதம் அத்துவானக் காட்டில் மந்திரிச்சி உட்ட கோழி மாதிரி அலைக்கழித்துக் கொண்டிருந்தேன். தேன் மாதிரி ஒரு செய்தி; தஞ்சையில் உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரியில் ஒரு வேலை காலி என்று ஒரு நல்ல செய்தியை Dr.வின்சென்ட் போஸ்ட்கார்ட் வழியாகத் தெரிவித்தார். வேலை அத்தனை எளிதாகக் கிடைத்தது. கல்லூரி முதல்வர் திரு.முருகன் ஒரு தமிழ்ப் பேராசிரியர். என் மதிப்பெண்களில் இளம்கலையில் நான் தமிழில் வாங்கிய மதிப்பெண்ணைப் பார்த்ததுமே, அதைக் குறிப்பிட்டே எனக்கு வேலையைக் கொடுத்தார்.

அப்போதெல்லாம் முதுகலை முடித்தவர்கள் நேரடியாக விரிவுரையாளர்களாகத்தான் சேர்வது வழக்கம். என்னைப் போல் - unlucky fellows - சித்தாள் வேலையில் (demonstrator / tutor) விழுந்து தொலைப்போம். என் பதவியுயர்வுக்கு என் பேராசிரியர் முழு முயற்சியெடுத்தும் அந்தப் பதவி துறைக்கு வராமலே நான்காண்டுகள் அங்கே சித்தாள் வேலை பார்த்துவிட்டு, பின் 70- அக்கல்லூரியிலிருந்து விலகி, அமெரிக்கன் கல்லூரியிலும் அடுத்த ஆண்டு பதவி உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சித்தாளாகச் சேர்ந்தேன்.

இது நடந்து சில மாதங்களில் புஷ்பம் கல்லூரியின் புதிய தாளாளராக திரு துளசிய்யா வாண்டையார் பதவியேற்றார். அவர் உடனே அடுத்த ஆண்டுக்கான புதிய பதவிகளை அனுமதித்தார். நண்பர்கள் மூலம் அதைக் கேள்விப்பட்டு 1971 கல்வியாண்டின் ஆரம்பத்தில் நேர்முகத் தேர்விற்குச் சென்றேன். துறைத்தலைவர்’நீங்கள் இங்கிருந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ, அதை இப்போது உங்கள் இடத்திற்கு வந்தவருக்குச் செய்து விட்டேன்’ என்றார். அதாவது என்னிடத்தில் சித்தாளாகச் சேர்ந்தவரின் பதவி உயர்வுக்கு அவரது சிபாரிசினை எழுத்து மூலமாகக் கொடுத்துள்ளார். தேர்வாக மாட்டோம் என்று தெரிந்தது. இருந்தும் நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். அதிலும் புதிய தாளாளர் இன்னொரு மாற்றம் கொண்டுவந்திருந்தார். துறைத் தலைவருக்குப் பதில் அதற்கு அடுத்த பேராசிரியரை நேர்முகத் தேர்வை நடத்த அழைத்திருந்தார். தாளாளர் ‘ஏன் இந்தக் கல்லூரியிலிருந்து போனீர்கள்?’ என்று கேட்டார். காரணம் சொன்னேன். அதன் பின் அவரும், பேராசிரியரும் கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில்கள் சொன்னேன்.

துறைத் தலைவர் சொன்னதிலிருந்து எனக்கு அப்பதவி கிடைக்காது என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால் தேர்வு முடிந்து வந்த பேராசிரிய நண்பர் ‘உங்கள் மீது தாளாளருக்கு மிகுந்த நல்ல எண்ணம். நீங்கள் பேசியது அவருக்கு மிகவும் பிடித்து போனது. அதனால் கொஞ்சம் பொறுங்கள்’ என்றார். ஆனால் என்னைத் தேர்ந்தெடுத்தால் இருப்பவரை என்ன செய்வது என்ற கேள்வி எழும்ப, அவரையே இறுதியில் தேர்ந்தெடுத்தார்கள். அதுதானே சரி.

அதன் பின்னும் அக்கல்லூரி பற்றிய ஆர்வம் குறையவில்லை. புஷ்பம் கல்லூரி வேகமாக வளர்ந்ததையும் தொடர்ந்து பார்த்து வந்துள்ளேன். நான் வேலையிலிருந்து விலகி ஓராண்டு கழித்து வருவதற்குள்ளாகவே கட்டிடங்களில் நிறைய மாற்றங்கள் இருந்தன. வெறும் ‘ப’ வடிவத்திலிருந்த கட்டிடத்திற்கு அருகிலும் பின்னாலும் பெரிய புதிய கட்டிடங்கள் கட்ட ஆரம்பித்திருந்தனர். சுயாட்சியும் விரைவில் பெற்றது. அதைவிட நான் கல்லூரியில் வேலை பார்த்த போது விளையாட்டுப் போட்டிகளில் சிறந்திருந்தது. அச்சிறப்பும் தொடர்ந்து இருந்து வந்ததையும் பார்த்து வந்தேன். இன்னும் அக்கல்லூரியில் வேலை பார்த்த அந்த இனிய நான்காண்டுகள் மிகப் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

இன்னொரு முக்கியமான மாற்றத்தையும் பார்த்தேன். நானிருந்த நான்கு ஆண்டுகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் தஞ்சையிலிருந்து ரயிலில் தான் வருவோம். மாணவர்கள் செயினை இழுத்து ரயிலை நிறுத்துவது அடிக்கடி நடக்கும். பெரும்பான்மையான ஆசிரியர்கள் அதே ரயிலில் வருவதால் மாணவர்களுக்கும் கவலையில்லை. ஆனால் துளசிய்யா தாளாளராக வந்ததும் செய்த முதல் சில மாற்றங்களில் ஒன்று, ஆசிரியர்கள் காலையில் பேருந்து மூலம் வரவேண்டும் என்று ஏற்பாடு செய்துள்ளார். அது ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. கல்லூரி ஒழுங்காக நடக்க அவர் எடுத்த எளிய வழி அது. அது பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்ததாக அக்கல்லூரி நண்பர்கள் கூறியதுண்டு.




Wednesday, May 05, 2021

1167. அம்பேத்கரும் அவர் எழுதிய நமது அரசியலமைப்புச் சட்டமும்




*
முந்திய பதிவு: அம்பேத்கரை குறை சொல்கிறேன் ….

***


அம்பேத்கர் அவர்களை இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று இன்றும் நாம் பெருமையோடு கூறிவருகிறோம். ஆனாலும் எனது முந்தைய கட்டுரையில் - அம்பேத்கரின் தவறு தானே இது .... ?  - என்ற  ஒரு கேள்வியை எழுப்பியிருந்தேன். அத்தனை பெரிய மனிதரை எளிதில் குற்றம் சாட்டி விட்டோமோ என்றொரு எண்ணம் உள்ளே ஓடிக் கொண்டிருந்தது. அதற்காக வரலாற்றுப் பக்கங்கள் சிலவற்றைப் புரட்டிப் பார்க்க நினைத்தேன். அம்பேத்கரை ஒரு “சூழ்நிலைக் கைதியாகப்” பார்க்க வேண்டிய சூழல் எனக்கமைந்தது. அரசியலமைப்பு எழுதுவதில் புலமை மட்டுமில்லாமல், அதிகார பூர்வ அரசியலமைப்புக் குழு அமைப்பதற்கு முன்பே தானாகவே அவர் ஒரு புதிய அரசியலமைப்பை எழுதியுள்ளார். ஆனால் அதற்காகவே ஒரு குழு உருவாகி, அதன் தலைவராகவே ஆன போது நடந்தவைகள் அவருக்குத் திருப்தியளிக்காதவைகளாகவே அமைந்து விட்டன.

அரசியலமைப்பை எழுதும் பணியில் அம்பேத்கரும் அவரோடு சேர்ந்த ஏழு பேரும் பகலில் விவாதித்தவைகளை இரவில் அம்பேத்கர் ஆங்கிலத்தில் எழுத வேண்டும். அதாவது, அம்பேத்கரின் ஆங்கிலப் புலமைக்குக் கிடைத்த “தண்டனை” இது. ஆகவே அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குழுவினரின் முடிவை அவர் ஆங்கிலத்தில் எழுதும் பணி தான் நடந்திருப்பதாகத் தெரிகிறது. பல இடங்களில் அம்பேத்கரின் சொந்த விருப்புகளுக்கு அங்கு இடமில்லாமல் போய் விட்டது. எந்த அளவிற்கு என்றால் ”நான் பொதி சுமக்கும் கழுதையாக” அவர்கள் கொடுத்தவைகளை மனமின்றிச் சுமந்தேன்” என்று சொல்லியுள்ளார். (People always keep on saying to me, ‘Oh! you are the maker of the Constitution.’ My answer is I was a hack. What I was asked to do, I did much against my will.”) 

நமது அரசியலமைப்புச் சட்டம் பல நாட்டு சட்டங்களை முன் மாதிரியாக வைத்து எழுதப்பட்டது. பத்து வெவ்வேறு நாடுகளின் அரசியலமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டது. இங்கிலாந்தின் பாராளுமன்ற அமைப்பும், அமெரிக்க நாட்டின் பெடரல் அமைப்பும் முக்கிய இடம் பெற்றன. பி.என்.ராவ் (Sir Benegal Narsing Rau,  26 February 1887 – 30 November 1953) என்பவரின் பங்களிப்பு இதில் மிகவும் முக்கியமானது  அரசியலமைப்புக் குழுவிற்கு அவர் ஆலோசகராக பணியிலமர்த்தப்பட்டார். ஜனநாயக அரசியலமைப்பின் கட்டமைப்பிற்கும், அடக்கத்திற்கும் அவரது பங்களிப்பு பெரிது. இது எழுதப்பட்டு, பின் விவாதங்கள் மூலம் திருத்தப்பட்டு 1949ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் நாள் தன் இறுதி வடிவத்திற்கு வந்தது. 

ஆனால் இறுதி வடிவம் வருவதற்குள் அம்பேத்கர் மிகக் கடின உழைப்பு தரவேண்டியதிருந்தது. அவர்தான் அரசியலமைப்பு எழுதும் குழுவின் தலைவர். இன்னும் ஏழு உறுப்பினர்கள் இருந்த போதும், அரசியலமைப்பில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் அம்பேத்கரின் எழுத்துகளே. குழுவின் ஆலோசனைகளின் படி இரவெல்லாம் விழித்து எழுதுவார். ஆனால் அடுத்த நாளே குழுவின் எதிர்ப்புகளும், மாற்றங்களும் நிறைய வரும். பின், மக்களவையில் எப்பகுதியைக் கொண்டுவந்தாலும் எதிர்ப்புகள் வரும்; ஒவ்வொரு முறையும் இதுவே நடந்து வந்தது. மிகக் கடினமான பாதையை அம்பேத்கர் தாண்ட வேண்டியதிருந்தது. இவ்வாறு சிரமப்பட்டு எழுதி முடித்த பிறகும் அதன் இறுதி வடிவம் அம்பேத்கருக்குப் பிடிக்காதவாறே இருந்தது. அதோடு, தாம்ஸ் ஜெபர்சன் சொன்னது போலவே, அம்பேத்கரும் ஒவ்வொரு தலைமுறையும் புத்தம்புது அரசியலமைப்புகளைக் கொண்டு வர வேண்டும்; அப்போது தான் இந்த உலகம் சோர்வின்றி, சாகாது, முழு உயிர்ப்போடு எப்போதும் இருக்கும் என்று நம்பினார். 

அரசியலமைப்புக் குழுவின் தலைவராக ஆவதற்கு ஏழு மாதங்களுக்கு முன்பே அம்பேத்கர் தான் விரும்பிய ஒரு திட்டத்தை மக்களவைக்குக் கொண்டு வந்தார். அத்திட்டம் “இந்திய ஐக்கிய நாடுகள்” - (United States of India (U.S.I.) - என்ற அரசியலமைப்பு. இது ஏறத்தாழ அமெரிக்க அரசை ஒட்டிய அமைப்பு. மாநிலங்களுக்கு அதிக சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் அளிக்கும் அமைப்பு.  உச்ச நீதி மன்றம் முழுமையான சுதந்திரமான தனியமைப்பாக இருக்கும். அமெரிக்க சட்டங்கள் போலவே  இங்கும் அடிப்படை உரிமைகள் பேணிக் காப்பாற்றப்படும். இந்த திட்டத்தை எழுதிய அம்பேத்கரின் மொழி நடையும் கூட அமெரிக்க சுதந்திர அறிவிப்பு போலவே அமைந்திருந்தது. மேலும் அவர் ஆங்கிலேய பாராளுமன்ற முறைகள் சிறுபான்மையோருக்குத் துன்பம் தரக் கூடியதாகவும், அதனால் அவர்களின் சுதந்திரங்களும், கனவுகளும் நசுங்கிவிடும் என்றும் கூறியுள்ளார். 

ஏன் அம்பேத்கருக்கு தான் எழுதிய அரசியல் சட்டம் முழுமையாகப் பிடிக்காமல் போனது? அரசியலமைப்பு எழுதி, அதுவும் ஏற்றுக் கொண்ட பிறகும் அம்பேத்கர் தன் அதிருப்தியை பலமுறை வெளிக்காண்பித்துள்ளார். 

அரசியலமைப்புச் சட்டம் பெரும்பான்மை மக்களுக்குச் சாதகமாக இருப்பது அம்பேத்கரைத் தொல்லைபடுத்தியது. இந்துப் பெரும்பான்மையுள்ள நம் நாட்டிற்கு இவ்வித அரசு பொருந்தவே பொருந்தாது என்று எண்ணினார். ஏற்கெனவே முதலில் அவர் எழுதிக்கொடுத்த அரசியலமைப்பு இச்சூழலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று நம்பினார். 

அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து, பாராளுமன்றத்திலேயே 1953-ல் தன் விருப்பமின்மையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்: ”நான் தான் அரசியலமைப்பை உருவாக்கினேன் என்று என் நண்பர்கள் கூறுவதுண்டு. ஆனால் வெளிப்படையாகச் சொல்வதென்றால், அதை எரிக்க வேண்டும் என்றால் அதற்கான முதல் ஆளாக நானிருப்பேன். எனக்கு இந்த அரசியலமைப்பு பிடிக்கவேயில்லை; இது யாருக்கும் பொருந்தாத ஒன்று.” 

1953-ம் ஆண்டில் பி.பி.சி.க்கு கொடுத்த பேட்டியில், “ஜனநாயகம் இந்தியச் சூழலுக்குப் பொருந்தாது; ஏனெனில், பாராளுமன்ற குடியரசும், நாட்டில் நிலவும் சமூக அமைப்புகளும் ஒன்றுக்கொன்று பொருந்தாதவை.” 

பெருத்த கல்வியாளர்; பல்துறை விற்பன்னர்; ஆங்கில மொழியில் அத்தனை தேர்ச்சி; சமூக ஏற்றத் தாழ்வுகளில் தன் கவனத்தை முழுமையாகச் செலுத்தியவர்; சிறுபான்மையருக்காகத் தொடர்ந்து போராடியவர்; தாழ்த்தப் பட்ட மக்களுக்கு மட்டுமின்றி இடைநிலை சாதியினருக்கும் தன் உரத்த குரலைக் கொடுத்தவர். ஒரு வேளை அவர் முதலில் கொடுத்த அவரது அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப் பட்டிருந்தால் நாம் நிச்சயம் இப்போதிருக்கும் அரசியல் நிலமையை விட கட்டாயம் நல்ல நிலையை எட்டியிருந்திருக்கலாம். அல்லது முழு அரசியலமைப்பையும் அவர் மட்டுமே தனித்து எழுதியிருந்திருந்தாலும் நல்லூழ் நம் பக்கம் இப்போது இருந்திருக்கும். ஒன்றிய அரசைப் பார்த்து அஞ்சும் இன்றைய நிலை இல்லாமல் போயிருந்திருக்கும். ஆனால், அவரது ஆங்கிலப் புலமையைக்காகவே அவருக்கு முற்றும் பிடிக்காத ஓர் அரசியலமைப்பை எழுத வேண்டிய கட்டாயம் அவர் தலைமேல் விழுந்து விட்டது. கொடுத்த பணியைச் செய்து முடித்தார் - ஆனால், அவர் மனதிற்கு அது பிடித்ததாகவும் இல்லாமல் போனது.

அம்பேத்கர், தாம்ஸ் ஜெபர்சன் இருவரும் கூறியது போல் ஒரே அரசியலமைப்பை வைத்துக் கொண்டிராமல் அவ்வப்போது அதனைப் புதுப்பித்து, சீர் திருத்தி, மாற்றி எழுதினால் தான் வரும் தலைமுறையினருக்கும் நம் அரசியலமைப்பு பொருத்தமானதாகவும், பொருள் உள்ளதாகவும் இருக்கும். ஆனால் அப்படி நல்லது ஒன்று நடப்பதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை.


****


https://www.thequint.com/news/india/father-of-the-indian-constitution-dr-ambedkar-wanted-to-burn-it

https://caravanmagazine.in/law/ambedkar-disappointment-final-draft-india-constitution

https://indianexpress.com/article/research/when-ambedkar-defended-time-taken-for-drafting-constitution-4970935/

https://zeenews.india.com/news/india/br-ambedkar-did-not-write-constitution-he-just-corrected-its-language_1892708.html

https://www.thequint.com/voices/opinion/why-ambedkar-did-not-like-indian-constitution

 

 முந்திய பதிவு: அம்பேத்கரை குறை சொல்கிறேன் ….


 

 

 


 

 

 






*



Monday, May 03, 2021

1166. அம்பேத்கரின் தவறு தானே இது .... ?




*
தொடர் பதிவு: 

அம்பேத்கரும் அவர் எழுதிய நமது அரசியலமைப்புச் சட்டமும்


***
 

அம்பேத்கரை குறை சொல்கிறேன் ….


 

 

அம்பேத்கரை குறை சொல்கிறேன் ….

தேர்தல்கள் ஒருவழியாக முடிந்தன. கட்சிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கும் தேர்தல் காலத்தில்இந்து திசைநாளிதழில் நடுப்பக்கக் கட்டுரையாக 13 கட்டுரைகள் பதியப்பட்டிருந்தன. “யார் முதல்வர்?” என்ற தலைப்பில்  செல்வ புவியரசன்  என்பவர் எழுதிய தொடர் கட்டுரைகள் அவை. வாசித்த பின் எனக்கு மனதில் ஏற்கெனவே இருந்த அச்சம் மேலும் பன்மடங்கானது.

முதலில் ஆசிரியரைப் பற்றிச் சில வரிகள்: எனக்குத் தெரிந்த வரையில் சில பெரும் வழக்கறிஞர்களைப் பற்றிப் பேசும் போது, அவர்களில் பலரை (constitutional experts) இந்திய அரசியலமைப்பின் வல்லுநர்கள் என்று விளிப்பதுண்டு. இக்கட்டுரையின் ஆசிரியரை நான் அப்படிப்பட்ட ஒருவராகவே பார்க்கிறேன். சட்டமைப்பின் விதிகளை விரல் நுனியில் வைத்திருப்பது போல் அவர் எழுதி வந்ததை வியப்போடு வாசிக்க ஆரம்பித்து, அச்சத்தோடு தொடரவைத்து, அயர்ச்சியோடும் சோகத்தோடும் முடிக்க வைத்து விட்டார்.

ஏற்கெனவே மோடி அரசின் அரசியல் நடவடிக்கைகளும், மாநிலங்களவைகளையும், முதலமைச்சர்களையும் நடத்திய விதம் எல்லாமே இந்த அரசை பலரும் பாசிச அரசு என்று சொல்ல வைத்து விட்டது. ஏழாண்டுகளாக அவர் அரசியலையும், எதிர் கருத்துள்ள ஏனைய கட்சிகளை நடத்துவதிலும் முழுமையான ஒரு அராஜகப் போக்கு தெரிந்தது. நீட் தேர்வு வேண்டாமென நம் மாநிலம் எதிர்த்த போது, அந்த எதிர்ப்பை சிறிதும் கண்டு கொள்ளாமல் தன் வழியில் போனார். ஜி.எஸ்.டி.க்கு எதிராக மாநிலங்கள் நின்ற போதும் அது அவரை கிஞ்சித்தேனும் அசைக்கவில்லை. தமிழ் நாட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் தில்லியில் நடத்தினார்கள். அப்போராட்டத்திற்கும், இப்போதும் வட மாநிலத்து விவசாயிகள் பல மாதங்களாக நடத்தி வரும் போராட்டங்களுக்கும் ஒன்றிய அரசிடமிருந்தோ, தலைமை அமைச்சரிடமிருந்தோ எவ்வித செவி மடுப்பும் இல்லையென்பது நாம் Catch - 22 என்ற கட்டுக்குள் கட்டுண்டு கிடக்கிறோம் என்று தான் தோன்றுகிறது. ஒரே ஒரு கட்சி, R.S.S. என்ற அதிகாரத்திற்கு உட்பட்ட அந்த கட்சி, இன்று பலரும் எதிர்த்தாலும்ஒரு நாடு; ஒரு கட்சி; ஒரு மதம்; ஒரு மொழி; ஒரு உணவு; ஒரே ஒரு பண்பாடுஎன்ற முரட்டுப் போக்கில், வெண்கலக் கடையில் எதுவோ புகுந்தது போல் அனைத்துயும்ஒரு கைபார்த்து விடுகிறேன் என்று முட்டி மோதிக்கொண்டிருக்கிறது.

இதைப் பார்க்கும்போது பல ஆண்டுகளுக்கு முன்பே ஆளுநரின் பங்களிப்பைஆட்டுக்கு எதற்கு தாடி?” என்று கேலி செய்த அண்ணாதுரையின் வார்த்தைகளின் முழுப் பொருளும் புரிகிறது. அதோடு மட்டுமின்றிமத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சிஎன்ற கோட்பாட்டின் அழுத்தமும், அர்த்தமும் இன்றே நன்கு புரிகிறது. அதுவும் இன்றைய மோடி அரசின் போக்குகள் புரியும் போது, அண்ணாவின் அன்றைய வார்த்தைகள் காலத்தால் எத்தனை முந்திய சிந்தனை என்பதும் தெளிவாகிறது.

இச்சூழலில் அரசியல் சட்டமைப்பு எழுதுவற்காகக் கூடி நின்ற அத்தனை அரசியல் பெருந்தலைகள் மீதும் கோபம் மட்டுமே மிஞ்சி நிற்கிறது. மாநிலப்பட்டியல் என்று இருந்தாலும் அதிலும் கூட இறுதி அதிகாரம் ஒன்றிய அரசிடமே உள்ளது. எல்லாவற்றையும் விட என்னைப் பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அமைச்சர்களை விட, ஒன்றிய அரசால் - எல்லாவித அரசியல்/சாதி/கூழைக்கும்பிடு போடும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் அல்லது நீதிபதிகள் என்று - யாரை வேண்டுமானாலும் ஆளுநராக ஆக்கி, மாநில அரசு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற அரசியல் சட்டம் பொருளற்றதாகவும், மிகவும் கேலிக்குரியதாகவும் எனக்குப் படுகிறது. ஒன்றிய அரசிடம் இருக்கும் கடிவாளங்கள் போதாது என்பது போல் ஆளுநரின் கையிலும் இன்னுமொரு பெரிய கடிவாளத்தைக் கொடுத்தது மாநில மக்களின் வாக்குரிமையையே கேள்வி கேட்பதாக ஆக்கிவிட்டதாகவே உள்ளது. கல்வி, பல்துறை அறிவு, சமுதாயத் தொண்டு என்று அனைத்திலும் அம்பேத்கரை மிக மிக உயரமான இடத்தில் வைத்திருக்கிறேன். ஆனால் இந்தக் கட்டுரைகள் வாசித்த பிறகுகுடியரசுஎன்னும் நல்லதொரு அமைப்பையும், அதற்கான சட்ட அமைப்புகளையும் அவரும், அவர் தலைமையில் கீழ் இருந்த அமைப்பும் சரியாகச் செய்யாமல் விட்டு விட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. அளவுக்கதிகமான அதிகாரங்களை ஒன்றிய அரசிடம் குவித்து விட்டு, மாநில அரசை மிகப் பெரிய அளவில் தவிக்கவிட்ட ஓரமைப்பாகவே நமது அரசியல் சட்டங்கள் இருக்கின்றன. அதிலும் மொழியாலும், பண்பாட்டாலும் மிகுந்த வேறுபாடுகள் கொண்ட ஒரு பெரிய நாட்டிற்கு Federal அரசே சரியான அமைப்பாக இருந்திருக்கும். அதுவும் இப்போதைய அரசு அடிக்கடிஇதுதான் அரசியல் சட்டதில் இருக்கிறதுஎன்று அடிக்கடி ஒரு குண்டைத் தூக்கிப் போடும். ஆம்இன்றைய பி.ஜே.பி. அரசு நம் சட்டமைப்புகளை உன்னிப்பாகப் படித்து விட்டு, சட்டங்களின் மூலமாகவே அனைத்து மாநில மக்களையும் ஓர்இருட்டறைக்குள்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

*****

அக்கட்டுரைகளின் சில முக்கிய பகுதிகளை மட்டும் இங்கு தந்துள்ளேன். இன்னும் சுருக்கமாகப் படிக்க வேண்டுமென்றால் வண்ண எழுத்துகளை மட்டும் படித்தால் போதும் - நம் பரிதாப நிலை புரியும்!

*****

 

 14 Apr 2021

1. யார் முதல்வர்?

அதிகாரங்களைப் பற்றி ஒன்றிய அரசு பேசுகிறபோது, மாநில அரசு அதிகாரங்களை அல்ல, உரிமைகளைப் பற்றியே பேச வேண்டியிருக்கிறது. இந்தியக் கூட்டாட்சி அமைப்பின் சிறப்பியல்புகளைப் படிக்கும்போதெல்லாம்ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா(து) அலியுமல்லன்என்ற நம்மாழ்வார் பாசுரம்தான் நினைவுக்கு வருகிறது. இந்திய அரசமைப்புமுழுமையான கூட்டாட்சி அமைப்பு அல்ல. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சியைக் குறிக்கும்ஃபெடரல்என்ற வார்த்தை இடம்பெறவே இல்லை.

 ஒன்றிய அளவில் அமைச்சரவைக் குழு அதிகாரம் மிகுந்ததாக இருக்கிறது என்றால், மாநில அளவில் அத்தகைய அதிகாரம் மாநில அமைச்சரவைக்கும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அப்படியில்லை. ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்கிற ஆளுநர் கையில் அளவுகடந்த அதிகாரங்கள்

 15 Apr 2021  

2.எங்கே இறையாண்மையில் பங்கு?

இந்தியாவில் மாநில அரசுகளைப் பொறுத்தவரையில் தமது ஆட்சிப் பரப்பை மட்டுமல்ல, அங்கு வசிக்கும் மக்களின் குடியுரிமையைக்கூட தீர்மானிக்கும் அதிகாரம் அவற்றுக்கு இல்லை.

2019-ல் தேசிய அளவில் பெரும் விவாதங்களை எழுப்பிய இரண்டு பிரச்சினைகள், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஒன்றியப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதும், குடியுரிமைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஒன்றிய அரசு எந்தவொரு மாநிலத்தின் எல்லையையும் திருத்தியமைப்பதற்கு முழு உரிமை பெற்றிருக்கிறது என்பதுதான் உண்மை நிலை.

1974-ல் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கச்சத்தீவு ஒப்பந்தத்தின்படி, … அன்றைய முதல்வர் கருணாநிதி ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூடி முடிவெடுத்தும் ஒன்றிய அரசு அதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

குடியுரிமைச் சட்டத்தில் ஒன்றிய அரசு கடந்த 2019-ல் கொண்டுவந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று சில மாநிலங்களின் முதல்வர்கள் வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். ….  உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளிடமிருந்து வந்த பதில், ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள விஷயத்தின் மீது இயற்றப்பட்ட சட்டங்களை மறுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு அறவே இல்லை என்பதுதான்.

திமுக தொடக்கத்திலிருந்தே குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துவருகிறது. மு..ஸ்டாலின் சொல்வது போல அக்கட்சி ஆட்சிக்கு வரும் வாய்ப்பிருந்தால், அச்சட்டத் திருத்தத்தை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றவும்கூடச் செய்யலாம். ஆனால், அந்தத் தீர்மானம் மாநில அரசின் கருத்தை ஒன்றிய அரசுக்குத் தெரிவிப்பதாக இருக்குமே தவிர, ஒன்றிய அரசைக் கட்டுப்படுத்த முடியாது.

16 Apr 2021

3. சட்டமியற்றும் அதிகாரம் எதுவரை?

ஒன்றிய அரசு இயற்றிய சட்டத்துக்கும் மாநில அரசின் சட்டத்துக்கும் முரண்பாடுகள் எழுந்தால், ஒன்றிய அரசின் சட்டமே செல்லுபடியாகும்.

ஆளுநரின் தன்விருப்புரிமை அதிகாரம் கேள்விக்கு உட்பட்டது அல்ல.

ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட சட்ட வரைவுகள் எதுவுமே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியாமல் போனது.

19 Apr 2021

4: வைஸ்ராய்கள் காலத்தில்தான் வாழ்கிறோமா?

முதல்வரும் பிரதமரைப் போல அமைச்சரவையின் தலைவர் என்ற அடிப்படையில்தான் அதிகாரங்களைப் பெறுகிறார். ….   ஆளுநர் தனது விருப்புரிமை அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் விஷயங்களில், அமைச்சரவையின் கருத்துகளை அவர் கேட்க வேண்டியதில்லை. இத்தகைய சிறப்பு அதிகாரங்களின்படி ஒரு ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்தின் அமைச்சரவையைக் கட்டுப்படுத்த முடியும் எனில், இது எப்படி ஜனநாயகமாகும்? இன்னும் நாம் காலனியாட்சி காலத்தில்தான் வாழ்கிறோமா?

நாம் தேர்ந்தெடுத்து அனுப்புகிற முதல்வரையும் அவர் தலைமையிலான அமைச்சரவையையும், ஒன்றிய அரசு தனது முகவரைக் கொண்டு முழுக் கட்டுப்பாட்டில் வைக்கவே முயல்கிறது.

20.4.21

5: விவசாயிகளின் நலன்களுக்கு யார் பொறுப்பு?

 மாநிலப் பட்டியலில் விவசாயம் இடம்பெற்றிருந்தாலும் அது பெயரளவிலான அதிகாரமாகவே இருக்கிறது. விவசாயத்துடன் தொடர்புடைய பெரும்பாலான விஷயங்கள் நேரடியாகவும் பொதுப்பட்டியலின் வழியாக மறைமுகமாகவும் ஒன்றிய அரசின் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், அத்துறையின் மேம்பாடு குறித்து ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் வலுவான ஒருங்கிணைப்பு வேண்டியிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அத்தகைய திட்டமிடல்களில் மாநிலங்களின் பங்களிப்பும் பொறுப்பும் என்னவென்பது இன்னும் விடையளிக்கப்படாத கேள்வியாகவே நீடித்துவருகிறது

21.4.21

6: தாராளமயம் தந்த பரிசு

பொருளியல் சார்ந்த முடிவுகளை எடுப்பதிலும் நிதியாதாரங்களைப் பங்கீடு செய்வதிலும் நிலவிய மைய அதிகாரம், மாநிலங்களின் பொருளாதாரத் தன்னாட்சிக்குத் தடையாகவே இருந்தது.

பொதுத் துறை முதலீடுகளுக்குத் திட்டமிடும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தனது முழுப் பொறுப்பில் வைத்திருந்தபோது மாநில அரசுகள் அது தொடர்பான ஒவ்வொரு கோரிக்கைக்காகவும் போராட வேண்டியதிருந்தது. சேலம் உருக்காலைத் திட்டத்துக்கான முயற்சிகளையே அதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். காங்கிரஸ் தொடங்கி திமுக வரையிலான தமிழகத்தின் 15 ஆண்டு காலக் கோரிக்கை அது. 1970-ல் டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.கருணாநிதி வலியுறுத்திப் பேசிய பிறகே, பிரதமர் இந்திரா காந்தி அத்திட்டத்துக்கு அனுமதியளித்தார். அதே கூட்டத்தில்.. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவருவதே தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நாட்டின் நலனுக்கும் நல்லது என்று பேசினார் கருணாநிதி. அரசமைப்புச் சட்டத்தில் அத்தகைய திருத்தங்கள் இன்று வரையிலும் வந்தாகவில்லை.

தாராளமயத்தின் காரணமாக மாநிலங்களின் வரிவருவாய்களும் அதிகரித்திருக்கின்றன. அதை ஒன்றிய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா? 2017 ஜூலையில் நடைமுறைக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரியின் நோக்கம், மாநிலங்களுக்கான அந்தப் புதிய வருவாய் வாய்ப்புகளையும் பிடுங்கிக்கொள்வதுதான்.

22 Apr 2021

7: இன்னும் கிடைக்காத மொழியுரிமை

நான்கு அம்சங்கள் கொண்ட ஆட்சிமொழித் தீர்மானம், கூறு 351-ன்படி இந்தியை வளர்ப்பது ஒன்றிய அரசின் கடமை என்றும் இந்தி வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து, நாடாளுமன்ற அவைகளிலும் சட்டமன்றங்களிலும் ஆண்டுதோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியது. எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்காகவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அதன் இரண்டாவது அம்சத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது வெறும் பெயரளவுக்குத்தான். அனைத்து நிலைகளிலும் ஆட்சி மொழியாக இந்தியை வளர்த்தெடுப்பதே நோக்கம்

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத அம்மொழியைப் பேசாத தமிழ்நாட்டில் 55% அலுவலகப் பணிகள் இந்தியில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அனைத்து மாநிலங்களுமே இந்தியில் வருகிற கடிதங்களுக்கு இந்தியிலேயே பதிலளிக்கவும் அலுவலகப் பணிகள் யாவும் இந்தியில் மேற்கொள்ளவும் வற்புறுத்தப்படுகிறது. எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்று ஒன்றிய அரசு முயற்சித்துவரும் வேளையில், தமிழகக் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறக் கூடுமா எனத் தெரியவில்லை. ஆனால், அதற்காக மாநில அரசுகள் சும்மா இருந்துவிடவும் கூடாது.

உத்தர பிரதேசத்தில் மட்டுமல்ல... ராஜஸ்தானிலும்கூட உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தங்கள் மாநில மொழிகளில் வாதாடுகிறார்கள். தமிழகத்தில் அத்தகைய ஒரு முயற்சி 2006-ல் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதியால் எடுக்கப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகளில் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இருப்பதால் அந்தக் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டது. மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்கப்பட்டதன் நோக்கமே அந்தந்த நிலப் பகுதியில் வாழும் மக்களின் மொழியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான். மொழிப் பற்று தேச ஒற்றுமையைக் குலைத்துவிடக் கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். மொழியுரிமை மறுக்கப்படுவதும்கூட அதே அளவுக்கு அபாயங்களைக் கொண்டதுதான்.

 23 Apr 2021

8: மாநிலப் பட்டியலுக்குத் திரும்புமா கல்வி?

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 1919-ல் இரட்டை ஆட்சியின் கீழும் 1935-ம் ஆண்டு சட்டத்தின் கீழும் கல்வித் துறையில் மாகாண அரசுகளுக்குக் கிடைத்த அதிகாரங்களும் சுதந்திர இந்தியாவின் அரசமைப்பில் குறைக்கப்பட்ட நிலையைத் தெளிவாகவே தனது பதிலறிக்கையில் தமிழக அரசு சுட்டிக்காட்டியிருந்தது.

மாநிலப் பட்டியல் என்பதே ஒரு மாயை. அரசியல் சட்டத்தை மிகவும் மேலோட்டமாகப் படித்தாலே புரிந்துவிடக் கூடிய உண்மை அது.

கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை. ஆனால், கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவந்து விடுவதாலேயே மாற்றங்கள் நடந்துவிடும் என்று நம்புவதற்கில்லை. சட்டம் இயற்றும் நிலையில், முரண்பாடுகள் எழுந்தால் ஒன்றிய அரசின் அதிகாரமே மேலோங்கி நிற்கும். எனவே, அடையாளரீதியான மற்றுமொரு வலுவான எதிர்ப்பு என்பதே இந்தக் குரல்களின் முக்கியத்துவம்.

  26 Apr 2021

9: இடஒதுக்கீட்டின் எல்லை எது?

ஒரு பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் சமுதாய அளவிலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை அனுமதிக்கும் கூறு 15(4) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுப்பதற்குக் கூறுகள் 15(4) மற்றும் 16(4) ஆகியவற்றின் கீழ் மாநில அரசுகள் அதிகாரம் பெற்றுள்ளனவா என்பது முக்கியக் கேள்வியாக நீதிமன்றத்தின் முன்னால் நிற்கிறது.

சட்டநாதன் குழுவை அமைத்தது மு.கருணாநிதியின் சாதனை என்றும், அம்பாசங்கர் குழுவை அமைத்தது எம்ஜிஆரின் சாமர்த்தியம் என்றும், 69% இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த அதைத் தனிச் சட்டமாக்கி ஒன்பதாம் பட்டியலில் சேர்க்க டெல்லியிலேயே முகாமிட்டு ஒன்றிய அரசின் ஒப்புதலைப் பெற்றது ஜெயலலிதாவின் சாகசம் என்றும் போற்றப்படுகிறது. ஆனால், அத்தனை முயற்சிகளும் தற்போது 102-வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தால் கேள்விக்குரியதாகிவிட்டன.

பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் பட்டியலில் ஒரு சமூகத்தைச் சேர்ப்பதற்கான அதிகாரத்தைக் குடியரசுத் தலைவரும் அந்தப் பட்டியலில் திருத்தங்கள் செய்வதற்கான அதிகாரத்தை நாடாளுமன்றமும் மட்டுமே பெற்றுள்ளன. மாநில அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை.

அரசமைப்பின்படி உறுதிசெய்யப்பட்டுள்ள இடஒதுக்கீட்டைத் தக்கவைத்துக்கொள்ளவே மாநில அரசுகள் சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கையில், தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை விரித்தெடுப்பது எல்லாம் ஒரு நீண்ட கால இலக்காக மட்டுமே இருக்க முடியும்.

27 Apr 2021

10: நெருக்கடிநிலை என்னும் நெருப்பாயுதம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளில் சிலவற்றை நெருக்கடிநிலையின்போது இடைநிறுத்தி வைக்கவும் கூறு 359-ன் கீழ் ஒன்றிய அரசு அதிகாரம் பெற்றுள்ளது. மிஸா கொடுமைகளுக்கு அதுவே காரணம்.

நெருக்கடிநிலையின்போது நிதித் துறை சார்ந்து முழுமையான அதிகாரத்தை ஒன்றிய அரசு தனது கைகளில் எடுத்துக்கொண்டுவிடும்

கூறு 356, அரசமைப்புச் சட்டம் சரிவர இயங்காமையைக் காரணம்காட்டி, மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வகைசெய்கிறது. இக்கூறானது, மாநிலத்தின் நிர்வாகத்தைக் குடியரசுத் தலைவருக்குக் கொடுப்பதோடு அல்லாமல், மாநிலச் சட்டமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் நாடாளுமன்றத்துக்கு அளிக்கிறது.

ஒருவேளை நிதி நெருக்கடி நோக்கி நாம் தள்ளப்பட்டால், மாநிலத்தின் சகல நிதி அதிகாரங்களும் ஒன்றிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். மேலும், ஒன்றிய அரசு மாநில ஊழியர்களின் ஊதியங்களைக் குறைக்கலாம். மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படுகிற நிதிநிலை அறிக்கைகள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட வேண்டியதும் கட்டாயம்.

28 Apr 2021 

11: பி.வி.ராஜமன்னாரும் ஆர்.எஸ்.சர்க்காரியாவும்

1969-ம் ஆண்டிலேயே ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக தமிழக அரசின் சார்பில் ஒரு குழுவை அவர் நியமித்தார்பி.வி.ராஜமன்னார் தலைமையிலான அந்தக் குழு தனது அறிக்கையை 1971-ல் அளித்தது.

மாநில அரசின் அதிகாரங்கள் குறித்த கோரிக்கைகள் எழும்போதெல்லாம் ராஜமன்னார் குழுவின் அறிக்கை இன்றளவும் மேற்கோள் காட்டப்படுகிறது. இத்தகைய ஒரு குழுவின் அவசியத்தைப் பற்றி அண்ணா 1967-ல் டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பிலும் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திலும் வலியுறுத்தியிருந்தார் எனினும், கருணாநிதியால்தான் அது செயல்வடிவம் கண்டது.

ராஜமன்னார் குழுவின் அறிக்கையும் ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையில் முன்வைக்கப்படவில்லை. ஒரு மாநிலத்தின் தன்னாட்சிக் குரலைச் சட்டபூர்வமான வழியில் தெரியப்படுத்துவதற்கான வாய்ப்பாகவே அது கருதப்பட்டது.

அண்ணாவின் மாநிலங்களவை உரைகளை மேற்கோள்காட்டி ஜெயலலிதா ஆற்றிய உரை, தமிழகத்தின் தன்னாட்சிக் குரல் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டெல்லியில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும் என்பதை எடுத்துச்சொல்லும் வகையில் அமைந்திருந்தது.

ஜெயலலிதா அன்று டெல்லியில் ஆற்றிய உரை, முன்பு சர்க்காரியா ஆணையத்தின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு அளித்த பதில்களைக் காட்டிலும் கூர்மை கொண்டவையாக இருந்தன

29 Apr 2021

12: பறிக்கப்படும் நிதி அதிகாரங்கள்

மாநிலங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் வரியினங்கள் நிலவரி, விவசாய வருமான வரி போன்று விரிவடையாத தன்மை கொண்டவை. குறைந்த வருவாயை மட்டுமே பெற்றுத் தரக் கூடியவை. மாறாக, ஒன்றிய அரசின் வசம் உள்ள வரியினங்களோ விரிவடையும் தன்மை கொண்டவையாக உள்ளன.

தமிழகத்தில் எழுந்த தன்னாட்சிக் குரல் என்பது சட்டமியற்றும் அதிகாரங்களுக்கும் நிர்வாக, நீதித் துறை அதிகாரங்களுக்கும் மட்டுமானதல்ல. நிதியாளுகைக்கான அதிகாரத்தையும் உள்ளடக்கியதுதான்.

நம் அரசமைப்புச் சட்டத்தில் மக்கள் நல்வாழ்வுப் பணிகள் அனைத்தும் நேரிடையாக மாநில அரசுகளிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றைத் திறம்படச் செய்து முடிப்பதற்கான நிதி வசதிகளை மாநிலங்கள் பெற்றிருக்க வேண்டாமா?

 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, நிகர வரி வருவாயில் 42% மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், 2015-16 தொடங்கி, ஏறக்குறைய 33% மட்டும்தான் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுவருகிறது

சிறப்புத் தீர்வைகள் மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கப்படுவதில்லை. தற்போதைய பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கும்கூட ஒன்றிய அரசு விதிக்கும் இத்தகைய சிறப்புத் தீர்வைகள் ஒரு முக்கியக் காரணம்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று தமிழக அரசியல் கட்சிகள் அளித்துள்ள தேர்தல் வாக்குறுதிக்கு மாநிலங்களின் வரிவருவாயைக் குறைத்துக்கொள்வது என்றே பொருள்கொள்ள வேண்டும்.

 2019-20 நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளின்படி ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் 12% உயர்ந்துள்ள நிலையில், மாநில அரசுகளின் திட்டங்களுக்கான நிதியுதவிகள் 9% மட்டுமே உயர்ந்துள்ளன.

வருமானம் குறைவான மாநிலங்கள் நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி வரிவருவாய்ப் பகிர்வில் அதிக பயனடைகின்றன. அதிக வருமானம் உள்ள மாநிலங்களோ, திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் வருவாய்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் வேண்டியிருக்கிறது

நாட்டின் வரிவருவாயில் ஏறக்குறைய சரிபாதி, ஜிஎஸ்டியிலிருந்தே கிடைக்கிறது. இந்தப் புதிய வரியமைப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பைச் சரிசெய்வதில் ஒன்றிய அரசு தான் உறுதியளித்தவாறு நடந்துகொள்ளவில்லை. ….  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.

 வரிவருவாயில் நமக்கான பங்கைப் பெறுவதற்கே காத்திருக்கும் காலம் இது.

 30 Apr 2021

13: அதிகாரப் பெருந்தொற்று

மக்கள் நல்வாழ்வு தொடர்பான பொறுப்புகளை மாநிலங்களிடம் ஒப்படைத்துவிட்டு, அதற்குத் தேவையான அதிகாரங்களை ஒன்றிய அரசு தன்னிடமே வைத்துக்கொண்டிருப்பதே உண்மையான காரணம்

 மாநிலங்கள் தமக்குத் தேவையான தடுப்பூசிகளை உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக வாங்கிக்கொள்ள வற்புறுத்துவதும் வெவ்வேறான விலை நிர்ணயங்களை அனுமதிப்பதும் ஒன்றிய அரசு தனது சட்டரீதியான பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதாகவே பொருள்படும்.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரக் கட்டமைப்புகளை வலுப்படுத்த நிதியுதவியை எதிர்பார்த்து நின்ற காலங்களில், ஒன்றிய அரசு கிராமப்புறச் சாலைகளை இணைக்கும் திட்டங்களுக்காக மட்டுமே தமது நிதியுதவிகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது. தமிழகத்தின் கிராமப்புற இணைப்புச் சாலைப் பணிகள் ஏற்கெனவே முழுமையாகிவிட்டன என்பதைக்கூட ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை

இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்தே ஒன்றிய அரசிடம் இப்படித்தான் அதிகாரங்கள் குவிந்துகிடக்கின்றன

 

 *

தொடர் பதிவு: 

அம்பேத்கரும் அவர் எழுதிய நமது அரசியலமைப்புச் சட்டமும்

 ***

#indiancontstitution

#இந்தியஅரசியலமைப்பு

#இந்தியஅரசியல்சட்டம்

 #அம்பேத்கரும்இந்தியஅரசியல்சட்டமும்

#மாநிலசுயாட்சி

 

 

 

 

 

 

 

 

 

 





*