Saturday, November 26, 2022

1200. FIFA '22



*


ப்ரேசில்  -  செர்பியா

கட்டாயம் ப்ரேசில் பற்றியெழுதியாகணுமே ... நம்ம கட்சியை அதுவும், ஆரம்பத்திலேயே நாமளே கைவிட்டுறலாமா?

ஏற்கெனவெ அர்ஜெண்டினா, ஜெர்மனி கதை உலகறிந்து போச்சு. அதே நிலை ப்ரேசிலுக்கும் நீடிக்குமோ என்ற பயம் பலருக்கு; எதிர்பார்ப்பும் பலருக்கு இருந்தது. முதல் அரைமணி நேர ஆட்டம் போய்க்கொண்டிருக்கும் போது அந்த பயம் நிஜமாகிவிடுமோ என்று தான் எண்ண வேண்டியதிருந்தது. விளையாட்டு நன்றாகவே போய்க்கொண்டிருந்தது. ஆனால் கோல் எதுவும் விழவுமில்லை. அதோடு இரண்டு மூன்று முறை பந்து கோல் கம்பங்களில் பட்டுத் திரும்பியது. ஒரு கார்னர் ஷாட் நெய்மர் அடித்தார். அழகு. பந்து மேலெழுந்து வந்து மிகச் சரியாக கோல் போஸ்டின் நடுவில் கீழிறங்கியது. ஆனால் கோல் கீப்பர் தடுத்து விட்டார். இருப்பினும் மிக அழகான ஷாட்.

62 நிமிடம் என்று நினைக்கின்றேன். Richarlison முதல் கோலைப் போட்டார். ஆட்டம் இன்னும் வேகமெடுத்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் தன் இரண்டாவது கோலைப் போட்டார் Richarlison. இதுவே இன்று கால்பந்து உலகம் முழுவதும் வியந்து பாராட்டும் ஷாட். அது சைக்கிள் ஷாட் / ரிவர்ஸ் கிக் என்று பல பெயர்களில் வியந்தோதும் ஷாட். ஏறத்தாழ இதே மாதிரி ஒரு ஷாட்டை ரொம்ப ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஓர் உலகப் போட்டியில் பார்த்த நினைவு. ஆண்டு, அடித்தவர் யார் என்பதெல்லாம் மறந்தே போச்சு. ப்ளாட்டினி என்று ஒரு பெயர் நினைவுக்கு வந்தது. ஆங்கிலேயரா, பிரஞ்சுக்காரரா ... தெரியவில்லை.

இந்த கோல் போட்டு சிறிது நேரத்தில் Richarlison திருப்பி வெளியே எடுக்கப்பட்டு விட்டார். பாவம் ...அவர் ஒரு “தொப்பித் தந்திரம்” ... அதாங்க hat trick செய்ய முயற்சித்திருக்கலாமே. சரி... ரெண்டு கோல் போட்டுட்டாரென்று அழைத்திருக்கலாம். அவரோடு நெய்மரையும் வெளியே எடுத்து விட்டார்கள். அவருக்குக் கரண்டைக் காலில் வீக்கம். அடுத்து எப்போது களம் இறங்குவாரோ தெரியவில்லை.

ப்ரேசில்  -  செர்பியா ...2:1

இரண்டாம் பகுதியில்  விறுவிறுப்பு 90% விழுக்காட்டிற்கு மேலே போனது.

 *


https://www.facebook.com/sam.george.946/posts/pfbid02bP82QahP9DoiHRh18ha3En9Lf1pdyV2XBuZaR9unqgy46DnMBXxgZVgW2zfMhKzrl






*



Friday, November 25, 2022

1200. FIFA '22









8

FIFA ’22

SPAIN  vs  COSTA RICA

போங்கப்பா இதெல்லாம் புல்லா கள்ள ஆட்டம்.  கேட்டா ஸ்பெயின் 7 கோல் போட்டுச்சும்பாங்க .. அதெல்லாம் ரொம்ப தப்புங்க. எதிராளிய விளையாட விட்டு கோல் போட்டா பரவாயில்லை. இங்க என்னடான்னா .. பந்து முழுவது ஸ்பெயின் ஆளுகட்ட தான் இருந்தது. ஒரு தடவை டிவி யில அண்டர் லைன் போட்டுச் சொல்லுவாங்களே அதில் 90:7 அப்டின்னு இருந்துச்சி. அதென்ன ஒர் டீம் 90% பந்தை வச்சிக்கிட்டு, அடுத்த ஆளுக்குப் பங்கு கொடுக்காமலேயே இப்படி ஒரு சைட் ஆட்டம் ஆடி, 7 கோல் போட்டா நியாயமா, நியாயமாரே?

SPAIN  vs  COSTA RICA   7 : 0

விறுவிறுப்பு ... விறுவிறுப்புன்னா... அதென்ன

 

 

போர்ச்சுகல்  -  கானா

ஒரு ஆளை நம்பி ஆட்டம் பார்க்க ஆரம்பித்தோம். அதுதானே உண்மை. அவருக்கு ஒரு பெனல்டி கிடைத்தது. கோல் போட்டார். அந்த பெனல்டி கொடுத்தது எனக்குச் சரியாகப் படவில்லை. ஆனால் அதற்கு முன்னால் ரொனால்டோ ஒரு கோல் போட்டார். அதை ஏன் disallow பண்ணினாங்கன்னு தெரியலை. எனக்குத் தெரிஞ்சு அது ஆஃப்சைட் இல்லை. சரி ... ஆட்டம் இரு பக்கமும் பந்து மாறிமாறிப் போச்சுது. போர்த்துகல் கை சிறிது ஓங்கி இருந்தது. ஆனால் கானா ஆட்டமும் ரொம்ப குறைச்சல் இல்லை.

எனக்கு எப்போதுமே இந்த பெனல்டி கோல் மேல் அதிக மரியாதை கிடையாது. ஆனால் அதுவும் கணக்கில் உண்டே. ஒரு கோல் வாங்கிய வெகுசில நிமிடங்களில் கானா ஒரு கோல் போட்டது. கலகலப்பாக இருந்தது. எனக்கும் கானா வீரர்களுக்கும் அத்தனை மகிழ்ச்சி. யாரும் எதிர்பார்க்காமல் கானா இரண்டாவது கோலையும் போட்டது.  மகிழ்ச்சி. ஆனால் அது அதிக நேரம் இல்லை. அடுத்து 78வது நிமிடத்தில் போர்த்துகல் தனது இரண்டாவது கோலைப் போட்டது. 2:2 என்ற கோல் கணக்கு. விளையாட்டின் வேகம் மிக அதிகமாக இருந்தது. இரண்டாவது கோல் போட்ட மூன்று நிமிடம் 20 வினாடிகளில் அடுத்த கோல் விழுந்தது கானாவிற்கு. கடைசிப் பத்து நிமிடங்களில் தீப்பொறி பறந்தது.

ஆக, போர்ச்சுகல்  -  கானா கோல் கணக்கு:  3:2

விறுவிறுப்பு: அதான் சொல்லி விட்டோமே ... 90%








*




Wednesday, November 23, 2022

1199.FIFA '22 DAY 3



*

DAY 3

ARGENTINA  - SAUDI ARABIA

அர்ஜெண்டினா 3:0 ஜெயிக்கும் என்ற நினைப்போடு பார்க்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரம் ஆட்டம் பார்த்து விட்டு சில நிமிடம் கழித்து 3:1 ஆகிவிடும்னு நினச்சேன்.

போற போக்கப் பார்த்தா ... அர்ஜென்டினா ஒரு கோல் போட்டுது. அதுவும் penalty goalதான். அதுவும் தேவையில்லாமல் கொடுத்தது மாதிரி இருந்தது. Experts சொன்னது மாதிரி, கால்பந்து விளையாட்டை கைப்பந்து விளையாட்டு மாதிரி, ஆளை இடிக்கக்கூடாது, தள்ளக் கூடாதுன்னு விளையாட முடியாதில்லையா? அந்த கோலை நம்மாளு மெஸ்ஸி போட்டுட்டாரா .. சரி, நம்ம கணக்குக்கு இன்னும் இரண்டு கோல் போடணுமேன்னு யோசிக்கும் போது செளதி அந்த இரண்டு கோலை தன் கணக்கில் போட்டு விட்டது.

எல்லாம் கூட்டி கழிச்சி பார்க்கும்போது கடைசியில் நம்ம போட்ட கணக்கெல்லாம் தப்பா போய் 1:2 என்ற கணக்கில் மெஸ்ஸி கட்சி தோத்துப் போச்சு. இது முதல் போட்டி தானேன்னு மனசுக்குள்ள நிறைய பேர் தங்களையே ஆறுதல் படுத்திக் கொண்டார்கள்.

செளதி அர்ஜென்டினாவுடன் போட்டி போட்டதால் இத்தனை நல்ல ஆட்டத்தைக் கொடுத்திருப்பார்கள் என்று தோன்றியது. ஆட்டம் வேகமாக இருந்தது.

விறுவிறுப்பு ... 85% (முதல் கோல் வாங்கும்வரை செளதி ஆடிய ஆட்டம் சுத்தமாக அதன் பிறகு  மாறியது; சீறினர்.)

 

மெக்சிகோ  -  போலந்து

அவரு பேரு என்ன லவ்டான்சிகோ...அந்த மாதிரி!! (Lewandowski) இவரு ஒரு பக்கம்; எதிர்த்தாற்போல் மெக்சிகோ (என்னைப் பொறுத்தவரையில் அது ஒரு பெரிய் டீம்) ஆனால் களத்தில இரண்டும் சம பலத்தோடு இருந்தன. அதனால் தானோ என்னவோ ஆட்டத்தில் பொறி பறந்தது. நான் பார்த்த வரையில் இரு அணிகளிலும் ஒரு குறை இருந்தது. லாங் பாஸ்கள் அதிகம் கொடுத்தார்கள். ஆனால் பல முறை இவர்கள் கொடுத்தால் அவர்கள் எடுப்பார்கள்; அவர்கள் கொடுத்தால் இவர்கள் பந்தை எடுப்பார்கள் என்பது போலவே மாறி மாறி நடந்தது.

சமமான ஆட்டம். அதில் ஒரு பெனல்ட்டி கிடைத்தது போலந்துக்கு. பந்தை அடித்தவர் லெவண்டாஸ்கி. ஆனால் பந்து தடுக்கப்பட்டது. Goal keeper Ochoa became the hero of the day.

இதற்குப் பிறகு டிவியில் வந்த காட்சிகளால், ப்ரேசில் 1986ல் காலிறுதிப் போட்டியில் தோல்வியுற்றதும் அன்று காண்பித்த காட்சிகள் மீண்டும் நினைவுக்கு வந்தன. இரண்டிலும் ஓர் ஒற்றுமை. கைத்தடி ஊன்றி வந்த ஒரு ப்ரேசில் பெரியவர் தன் கைத்தடி வளைவில் தன் நாடியை வைத்துக் கொண்டு கண்ணீரோடு உட்கார்ந்திருந்தார். நேற்று வயதான ஒரு பெரியவர் செளதி வெற்றி பெற்றதற்காக, கண்ணீரோடு அல்லாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

இரண்டாவது கோலாக செளதி போட்டதும் வெற்றி உறுதியானது. டிவியில் செளதி மக்களின் ஆனந்த ஆட்டங்களைக் காண்பித்தார்கள் அதன்பின் தோற்றவர்களின் சோகத்தோற்றங்களைக் காண்பித்தார்கள்.

அதென்னவோ தோற்றவர்களின் வருத்தங்கள் மனதில் பதிந்து நின்று விடுகின்றன. அன்று ப்ரேசில் தோற்றதும் அந்தப் பெரியவர் வடித்த கண்ணீர் இன்னும் என் நினைவில் அப்படியே நின்று விட்டது.

ஆட்டம் 0: 0

 

ஆனால் விறுவிறுப்பு:  88%







*


Tuesday, November 22, 2022

1198. FIFA '22 -- DAY 2



*

DAY 2

ENGLAND   -   IRAN

இந்த விளையாட்டைப் பார்க்கும் போது தான் நமக்கு GENERAL KNOWLEDGE ரொம்ப கம்மிங்கிறது ஞாபகத்துக்கு வரும். ஈரான் கொடியைப் பார்த்தேன். நம்ம கொடியை அப்படியே உல்ட்டா பண்ணினது மாதிரி தெரிஞ்சிது. எந்தெந்த நாடு எங்கெங்க இருக்குங்குறது கூட தெரியாம இந்த உலகக் கோப்பையைப் பார்க்கிறது தப்பு தான். அப்பதான் இந்த நாடு இங்க இருக்கு... அது கொடி இப்படியிருக்கும் அப்டின்னெல்லாம் தெரிந்திருக்கும். நம்மளோ ஒரு பெரும் மக்கு. சரி ... விளையாட்டுக்கு வருவோம்.

இங்கிலாந்தில் Saka, Kane கேள்விப்பட்ட பெயர்கள். விளையாட்டு ஜவ்வாக நடந்து முடிந்தது. ரெண்டு டீமும் முழுவதும் டிபென்ஸிவ் விளையாட்டு. அதிலும் பந்து இங்கிலாந்து பக்கமே இருந்த்து. ஒரு தடவை 75% - 12% அப்டின்னு காமிச்சாங்க. முடிவு 6:2. இங்கிலாந்து அப்படி நல்லா விளையாடி 6 கோல் போட்டாங்கன்னு சொல்றத விட, ஈரான் ரொம்ப மோசமா விளையாடியதால் இங்கிலாந்து 6 கோல் போட்டாங்கன்னு சொல்லலாம். ஈரான் போட்டதுல்ல இரண்டாவது கோல் கடைசி வினாடியில் கிடைத்த பெனல்ட்டியில்.

விளையாட்டே ரொம்ப ஸ்லோவாக இருந்தது. நம்ம ஊர்ல மூக்கின் அழகைச் சொல்லும்போது நம்ம கதாசிரியர்கள் ஈரானிய மூக்கு  மாதிரி அழகான கூர்மையான மூக்குன்னு சொல்லுவாங்கல்லா ... ஈரான் கோல் கீப்பருக்கு அது இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக நீண்ட பெரிய மூக்கு. பாருங்க... அவரு பந்தைப் பிடிக்க எகிற, அவங்க ஆளும் ஒருத்தரும் அதுமாதிரி எகிற ..மண்டையும் மூக்கும் மோதிக்கிருச்சி. சில்லு மூக்கு பெயர்ந்து போய் .. ரத்தம் வந்து ... சிகிச்சை கொடுத்து... இதனால் முதல் பாதி முடிந்தும் 15 நிமிடம் எக்ஸ்ட்ரா டைமில் விளையாட்டு தொடர்ந்தது. விளையாட்டே போரடிச்சிதுன்னு இந்த மாதிரி எக்ஸ்ட்ரா டைம் ரெண்டு பாதிக்கும் ரொம்ப நேரம் கிடைச்சிது.

கோல்  6 : 2

நேற்றைய ஆட்டத்தில் இருந்த விறுவிறுப்பு இன்று சுத்தமாக இல்லை.

நேற்றைய விறுவிறுப்பு 55%

இன்றைய விறுவிறுப்பு 35%

இது தான் நம்ம ரிசல்ட்.

பிகு: ஒரு சரியான முட்டாள் இந்தியப் பயல் ஒருத்தன் சட்டையில்லாம, கையில ஒரு குச்சிய பிடிச்சிக்கிட்டு காந்தி மாதிரி வேஷம் போட்டு நின்னான். அந்தக் குச்சியில் ஒரு கொடி வேற பறந்தது ... இங்கிலீஷ் பய நாட்டுக் கொடி. நம்மளையும், நாட்டையும், காந்தியையும் கேவலப்படுத்தினான். இப்படியும் சில ஜென்மங்கள்

 

 

செனிகல் -  நெதர்லாண்ட்

விக்கியில செனிகல் எங்க இருக்குன்னு பார்த்துக்கிட்டேன். 17 million மக்கள் தானாம்! நம்ம இங்கிலாந்துக்கு அடிமை; அவுக பிரஞ்சுக்காரவுக கிட்ட மாட்டிக்கிட்ட ஆளுக.  Senegal is classified as a heavily indebted poor country, with a relatively low Human Development Index. .. ஆனா அங்க இருந்து விளையாட வந்திருக்காங்க .. Senegal is a secular state, as defined in its Constitution, although Islam is the predominant religion in the country, practiced by 97.2%.

நெதர்லாண்ட் பற்றிய கால்பந்து வரலாறு செனிகலை விட நன்றாக இருந்தது. ஆகவே நெத்ர்லேண்ட் வெற்றி பெறும் அப்டின்னு ஏற்கெனவே நம்ம சார்ட்ல டிக் போட்டிருந்தேன். (இதுவரை அப்படி போட்ட டிக்கு எல்லாமே ரைட்டு தான்!)  ஆனால் விளையாட ஆரம்பித்ததும் செனிகல் பிடிச்சிப் போச்சு.விளையாட்டில் பந்து அங்கும் இங்கும் மாறி மாறி சென்று கொண்டிருந்தது. யாரையும் குறை சொல்ல முடியாத விளையாட்டு. முந்திய விளையாட்டு மாதிரி போர் அடிக்காமல் நன்றாக சென்று கொண்டிருந்தது. ஒரு மாதிரி செனிகல் பேன் ஆகி விட்டேன். எப்படியும் ஒருகோல் போட்டு ஜெயிச்சிருவாங்கன்னு நினச்சேன். ஆனா கடைசி பத்து நிமிடத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல். 



அதிலும் இரண்டாவது கோல் ஒரு substitute போட்டது. கொஞ்சம் வயசான ஆளு மாதிரி தெரிஞ்சார். கோல் போடுறதுக்கு ஒரு நிமிஷத்துக்கு முந்தி ஒரு பயங்கர ஆக்ட் கொடுத்து ஒரு ஃப்ரி கிக் வாங்கினார். பொய் சொன்ன வாய்க்க்கு போசனம் கிடைக்காது அப்டிம்பாங்க .. இவரு பொய் சொல்லி ஒரு ஃப்ரிகிக்;  அடுத்த நிமிடம் ஒரு கோலும் அடிச்சாரு. இதுல் இருந்து  என்ன தெரியுதுன்னா ..........?

விறுவிறுப்பு  -- 70%

 

 






*


Monday, November 21, 2022

1197. FIFA - 22 DAY 1

FIFA -1 

QATAR (HOST)   Vs  ECUADOR


ஆயிரந்தான் சொன்னாலும் கத்தார்  host என்பதால் மட்டும் ஆட்டைக்குள்ள வந்த பசங்கதானே. அதுனால் எனக்கு அவங்க கிட்ட இருந்து பெரிய ஆட்டம் எதிர்பார்க்கவில்லை. அது மாதிரிதான் அவங்க ஆட்டமும் இருந்தது. ஆனாலும் இப்படியா 2 நிமிடம் 50 வினாடியில் ஒரு கோல் வாங்கும் என்றும் நினைக்கவில்லை.

ரெண்டு வருஷத்துக்கு மேலே ஜியோ பயன்படுத்திக் கொண்டு வர்ரேன். ஆனால் நேற்று மாதிரி மோசமா ஒரு நாளும் இருந்ததில்லை. பல குழப்பங்கள். போட்டியின் முதல் நாள்; முதல் ஆட்டம். 3 நிமிஷத்தில ஒரு கோலா அப்டின்னு நினச்சப்போ அப்படியே டிவி உறைந்து நின்னு போச்சு ... அங்க இங்க ஓடிப் பார்த்தேன். மறுபடி 6 நிமிஷம் ஆனப்பிறகு பார்த்தா ஆட்டம் தொடர்ந்தது. அங்க என்னடான்னா மொதல்ல ஒரு கோல் அப்டின்னு ஸ்கோர் போர்டில் தெரிந்தது. இப்போ பார்த்தா 0:0 என்று இருக்கு. பிறகு rewind போட்டப்போதான் தெரிஞ்சிது V.A.R.ல ஆப்சைட்  கொடுத்திருக்குன்னு. நாலஞ்சு இஞ்ச் இருக்கும். அதுக்காக பாவிப்பய மெசினு ஆப்சைட் கொடுத்திருக்கு.

முதல் பாதியில எனக்கு டிவி சானலோடு ஒரே தகராறு. அப்பப்போ frozen ஆகி நின்னுடும். அங்க இங்க ஓடுறதுன்னு சொன்னேனே ...வேற சானல் தெரியுதான்னு தேடினேன். அதுல இந்தி, பெங்காலி, இங்கிலிஷ், மலையாளம், தமிழ் .. அப்டின்னு போட்டு நாலஞ்சு சேனல் தெரிஞ்சிது. ஆனா எங்க போனாலும் இங்கிலீஷில் தான் பேசிக்கிட்டு இருந்தாங்க. எல்லாமே ஒரு ஸ்டார்ட்டிங் பிரச்சனையான்னு தெரியலை. ஆனா இரண்டாம் பாகம் வந்தப்போ டிவி நிக்காம ஓடிச்சி.

கத்தார் ஆளுக பத்தி யாருக்குத் தெரியும். ஆனால் ஈக்வேடரில் ரெண்டு பேர் கேள்விப்பட்ட பெயராக இருந்தன. ஒண்ணு வேலென்ஷியா ..இன்னொண்னு மென்டஸ். அதுல மொத ஆளுதான் ரெண்டு கோலையும் போட்டார். 13 நிமிஷத்தில் ஒரு கோல். பெனல்ட்டி. வேலென்ஷியா லேசாதா உதைச்சாரு. ஆனால் கோல் கீப்பரை நல்லா ஏமாத்திட்டாரு. கீப்பர் வலது பக்கம் பாய, இவரு பந்தை அடுத்த பக்கம் உருட்டி விட்டுட்டார். அடுத்த கோலையும் முதல் பாதியிலேயே அவரே போட்டுட்டார். மொதல் கோல் சரியா கோலாக இருந்திருந்தால் முதல் ஆட்டத்திலேயே ஒரு ஹாட் ட்ரிக் ஆகியிருந்திருக்கும்.

முதல் பாதியில் பந்து முழுவதும் ஈக்வேடர் காலில் தானிருந்தது. அதிலும் எதிராளிகளிடமிருந்து பந்தை வாங்கும் லாவகம் ஈக்வேடர்களிடம் மிகவும் நன்றாக இருந்தது. கத்தார் கொஞ்சம் முரட்டு ஆட்டம். நிறைய மஞ்சள் கார்ட் வாங்கினார்கள். முதல் பாதி முடியும் கடைசி வினாடியில் அழகான வாய்ப்பு ஒண்ணு கத்தாருக்கு வாய்ச்சிது. ஆனால் கோல் விழலை. அதே மாதிரி வேலன்ஷியா வெளியே போய் மாற்றாளாக ஒருவர் வந்தார். அவருக்கும் 80 நிமிடத்தில் நல்ல அழகான  வாய்ப்பு. ஆனால் கோல் விழவில்லை.

 





கத்தாரின் கோச் சான்ஷே பாவம் போல் அங்கங்கே உலாத்திக் கொண்டிருந்தார். முதல் மூன்று நிமிடக் கோலிலேயே அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. நம்ம ப்ளாக், முகநூல் இளவஞ்சி மாதிரியே இருந்தார்; தாடி மட்டும் சான்ஷேக்கு கொஞ்சூண்டு கம்மி. இளவஞ்சிக்கு  டோலீஸ் கிடைக்காமல் ஒரு அறைகலனில் படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்துக் கொண்டு, மிக்சர் கொறித்துக் கொண்டே  ஏங்கிக்கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அதே மாதிரிதான் சான்ஷே வானத்தைப் பார்த்துக் கொண்டு பாவம் போல் இருந்தார்.

ஆட்டம் விறுவிறுப்புதான். எதிர்பார்த்தது போல் முடிவும் இருந்தது.

தொடருவோம்

*

இன்னும் சில பல பின்குறிப்புகள்: 

மைதானத்தைச் சுற்றி விளம்பரம் வைப்பாங்கல்ல ... நேத்து ஆட்டத்தில ஒரு விளம்பரம் பார்த்தேன்:   IMPOSSIBLE IS NOTHING  அப்டின்னு போட்டிருந்துச்சு. எல்லோரும் NOTHING IS IMPOSSIBLE அப்டின்னுதானே சொல்லுவங்க. 

என்னன்னு பார்க்கணும் ...

***

எந்தெந்த விளையாட்டுக்காரங்க என்னென்ன சாமி கும்பிடுறாங்க ... அதுல் எந்த சாமி செயிக்குதுன்னு பார்க்கணும். நேத்து கத்தார் ஆளு பிரார்த்தனை பண்ணினார். கோல் விழுந்ததும் ஈக்வேடர் ஆளுக குருப்பா நின்னு மொத்தமா vote of thanks கொடுத்தாங்க.

இப்படி ஒரு statistics எடுத்துப் பார்த்தா எந்த சாமி பெருசு ... எது செயிக்கிற சாமின்னு தெரிஞ்சுக்கிட்டா நாளைக்கு நமக்கும் பயன்படும்லா .... என்ன சொல்லுதிய ...?






Tuesday, November 15, 2022

1195. மதங்களும் சில விவாதங்களும் ...







https://www.facebook.com/M.Elangovan/posts/pfbid031NEYUsZAxbqXY5RL1jnfAtfpLjar3N7wqiLZspbq5J1S7waoG3rhd4ceMq5CzZEJl


எங்கள் அப்பாவின் பிறந்த நாள் இன்று. உயிரோடு இருந்திருந்தால் இன்றோடு அவருக்கு 78 வயது நிறைவடைந்திருக்கும்.
அப்பா அவரது பள்ளிப்பருவத்தைக் கழித்தது ஆன்மிக நிலமான இராமேஸ்வரத்தில். “கடவுள் அப்படீங்கறதே மனுசன் உருவாக்குன ஒரு கான்செப்ட்தான்” இவை… மதம் குறித்த விவாதங்களின் போது எங்களுடைய அப்பா தவறாமல் சொல்லும் வார்த்தைகள்.
அக்னிதீர்த்தக் கடற்கரையில் நீத்தார் கடன் தீர்க்கும் சடங்குகளை செய்யும் புரோகிதர்களும், கோவில் முழுக்க விதவிதமான பெயர்களோடும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு புராணக் கதைகளோடும் நிறைந்து கிடக்கும் தீர்த்தத் தொட்டிகளில் நீராட வரும் வட இந்திய மக்களிடம், அவரவர் மொழியில் கதையளந்து காசு கறக்கும் உள்ளூர் கைடுகள் பற்றியும் எங்கள் அப்பா சொல்லிக் கதைகள் கேட்க வேண்டும். விலா நோகச் சிரிக்க வைப்பவை அவை. மேலும் “கொடிது, கொடிது இளமையில் வறுமை” என்பதையும் முழுமையாக அனுபவித்தவர் அப்பா. இளம் பருவத்தில் மற்றவர்களைப்போல காசு கிடைக்கிறதே என்று கோவிலில் கைடு வேலை பார்க்கப் போகாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தியவர்.
அதனால்தானோ என்னவோ அவருக்கு இறை நம்பிக்கை என்பது சற்றும் இல்லாமல் போய்விட்டது போல. ஆனால் அக்காலத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்களைப் போலவே அவரும் தனது கொள்கைகளை வீட்டில் யார்மீதும் திணித்ததில்லை. வீட்டுச் சடங்குகளில் கூட குடும்பத்தலைவராகக் கலந்து கொள்ளவே செய்தார்.
ஆனால், கோவில்களுக்குச் செல்லுதல், மூட நம்பிக்கைகள், பலியிடுதல் போன்ற சடங்குகள், வேண்டுதல்கள், வேண்டுதல் நிறைவேற்றங்கள், விரதங்கள், நல்ல நாள், கெட்ட நாள், ஜோதிடம், ஜாதகம் போன்ற எந்த ஒன்றிலிருந்தும் அவர் தன்னளவில் வெகுதூரம் விலகியே இருந்தார். அதே நேரம் இவை அனைத்திலும் நம்பிக்கை கொண்டிருந்த அம்மாவை அவர் கேள்வி கேட்டதுமில்லை, சண்டையிட்டதுமில்லை.
சின்ன வயதிலிருந்து இந்த இருவேறு துருவங்களுக்கிடையே வளர்ந்த நான், இறை நம்பிக்கை குறித்து பலவகையான குழப்பங்களுடனேயே வளர்ந்தேன். “எதையும் ஒருமுறை” என்கிற வினோத கிறுக்குத்தனமும் எனக்கு உண்டு. எனவே அதனடிப்படையில் என் முப்பது, முப்பத்தி ஐந்து வயதுக்குள் இறை நம்பிக்கை சார்ந்த, ஆன்மிகம் சார்ந்த பெரும்பாலான விஷயங்களில், சொல்லப்போனால் திருவண்ணாமலை கிரிவலம் முதல், ஈஷா யோகாவின் முதல் நிலை யோக வகுப்புகள் வரை ஒரு எட்டு, எட்டிப் பார்த்துவிட்டு வந்தவனும் கூட. ஆனால் எல்லாவற்றிலிருந்து பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு தலைதெறிக்க ஓடிவந்தவன், இப்போது திரும்பிப் பார்க்கும் போது அவற்றிலிருந்தெல்லாம் வெகுதூரம் நகர்ந்து வந்துவிட்டது தெரிகிறது.
உடலமைப்பிலும், உடல் மொழியிலும், சிந்திக்கும் முறையிலும் என் அப்பாவின் இன்னொரு போட்டோ காப்பியாக இருக்கும் என் மகன் இந்த இறைநம்பிக்கை, மதங்கள், சடங்குகள் குறித்தெல்லாம் அவனாகவே ஒரு சில கருத்துகளை வைத்திருக்கிறான். பெரும்பாலும் என் அப்பா இருந்தால் என்ன சொல்லுவாரோ அதே போன்ற கருத்துகள். அதே மென்மையான எதிர்க்கேள்விகள். இறை என்ற ஒன்று இருக்க முடியாது என்பதற்கான, அவனளவிலான இயல்பான வாதங்கள் கொண்டவன் அவன். இதைச் சொல்லும்போது நிறைய நண்பர்கள் “அவன் உங்களிடமிருந்து கற்றுக்கொண்டிருப்பான் அல்லது நீங்கள் உங்கள் கருத்துகளை அவன் மீது திணித்திருப்பீர்கள்” என்று சொல்லுவார்கள். அதில் உண்மையில்லை. உண்மையைச் சொல்வதானால் அவனுக்கு என்னைத் தவிர மற்ற அனைத்து நெருங்கிய உறவினர்களும் இறை நம்பிக்கை கொண்டவர்கள்தான். அதிலும் பல ‘சாமி கொண்டாடிகள்’ கூட உண்டு. நான் எதையும் எவர் மீதும் திணிப்பவனும் அல்ல, இங்கேயும் உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இந்த விஷயத்தில் என் மீது திணிக்கப்படுபவற்றை மறுப்பதற்கே எனக்கு நேரம் போதவில்லை.
இந்த வருடம் நடந்த புத்தகத் திருவிழாவில் என் மகன் விருப்பப்பட்டு அவனுக்கு சுரேஷ் காத்தான் சார் வாங்கிக்கொடுத்தது “மதங்களும் சில விவாதங்களும்” என்கிற புத்தகம். தருமி என்ற பெயரில் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் சாம் ஜார்ஜ் அவர்கள் எழுதி, எதிர் வெளியீடாக வெளியாகியிருப்பது. இப்போது புத்தகத்தின் பாதி வரை படித்திருக்கிறான் போல.
இரண்டு நாட்களுக்கு முன்பு சாப்பாட்டு வேளையில் இந்தப் புத்தகம் குறித்து பேச்சு வந்தது. ”புத்தகம் எப்படி இருக்கிறது?” என்றேன்.
“ஹா ஹா, பாகுபாடு இல்லாம, யாரையும் விட்டு வைக்காம, எல்லாரையும் நல்லா கழுவிக்கழுவி ஊத்தியிருக்காரு” என்றான் சிரித்துக்கொண்டே.
நான் நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு என் மனைவியைப் பார்த்து விளையாட்டாக “சோழர் பரம்பரையில் இன்னொரு எம்எல்ஏ” என்றேன்.
“ம்க்கும்…. ” என்றொரு சத்தம் மட்டும் அங்கிருந்து வந்தது.
https://www.facebook.com/M.Elangovan/posts/pfbid031NEYUsZAxbqXY5RL1jnfAtfpLjar3N7wqiLZspbq5J1S7waoG3rhd4ceMq5CzZEJl
 Nattarasan, Prabhakar Annamalai and 6 others
2 Comments
Like
Comment
Share