அதென்னமோ, வயசாகிப் போச்சா .. இப்போவெல்லம் தடுமன் பிடித்தால் அது என்னை விட்டு
விட்டுப் போக அதற்கு மனதே வருவதேயில்லை. என்னுடனே தொடர்ந்து இருந்தே ஆக வேண்டுமென்
அடம்பிடித்துக் கொண்டு மாதக்கணக்காக என்னோடு ‘living together’ ஆக இருந்து விடுகிறது. எத்தனை விரட்டினாலும் விடுவதாயில்லை. நானும்
வகைவகையாக விரட்டிப் பார்த்து விட்டேன். பாட்டி வைத்தியத்தில் ஆரம்பித்து, ஹோமியோபதி பக்கம் போய்,
அங்கிருந்து அப்படியே குறுக்குச் சால் ஓட்டி, அல்லோபதி போய் மறுபடி பாட்டி
வைத்தியத்திற்குத் திரும்பி வந்து ... சாமி,,, போதுமப்பா போதும் என்று சொல்லும்
அளவிற்கு இருமித் தீர்த்தாகி விட்டது.
எங்க காலத்தில் மருந்து
சாப்பிட்டாஒரே வாரத்தில் ஜல்த் சரியாகி விடும்; இல்லையென்றால்
ஏழு நாள் ஆகிவிடும் என்று சொல்லும் அளவிற்குத் தான் தடுமனும், இருமலும் இருந்து வந்தன. மனித ஆயுள் நீட்சி போலவே இப்போது வியாதிகளும்
தொடர்ந்து நம்மோடு ஒட்டி உறவாட ஆரம்பித்து விட்டன போலும். அதுவும் கடந்த இரண்டு மூன்று வருஷமாக உள்ள ‘கொரோனா காலத்தில்’
தடுமன், இருமல், காய்ச்சல்,
மேல்வலி என்றாலே கொரோனா தானோன்னு அப்படியே மனசுக்குள்ள டைட்டில்
ஓடுது. ஏற்கெனவே மருத்துவமனையில் இருந்து அனுபவித்த காட்சிகள் எல்லாம் டைட்டில்
கார்ட் மாதிரி ஒவ்வொண்ணா ஓடியாருது. அதனால நாடித் துடிப்பு, ரத்தத்
துடிப்புன்னு எல்லாவற்றையும் ஏறுமுகத்திற்குக் கொண்டு போகுது.
இப்படித்தான் மூணு நாலு வாரத்த்ற்கு
முன் ஆரம்பித்தது எனது இருமல் போராட்டம். இந்த தடவை இருமல் போவதற்கு இன்னும்
அதற்கு முழுசாக மனம் வரவில்லை. ஆனாலும் இந்தக் கால கட்டத்தில் பல புது விஷயங்கள்
அனுபவங்களாக விரிந்தன. இருமல் வரும்; இருமுவேன்
... சரி .. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். புதிதாக சில வித்தியாசமான
அனுபவங்கள். ஏறத்தாழ இருமல் ஆரம்பித்து இரண்டாம் வாரத்தில் தூக்கத்தைக் கெடுக்கும்
அளவிற்குத் தொடர்ந்த இருமல். இருமல் வந்ததும் எழுந்து உட்கார்ந்து இருமல்...
படுத்ததும் மீண்டும் இருமல். சரியென்று படுக்காமல் உட்கார்ந்திருந்தால் இருமலைக்
காணோம். இது ஒரு புதுவகைத் தொந்தரவாக இருந்தது. அடுத்து அதனோடு இணைந்து இன்னொரு
புது அனுபவம். இருமலோடு சேர்ந்து தூங்கினாலும், அதனோடு
தொடர் கனவுகள் வந்து கொண்டிருந்தன. எல்லாமே கலர் கனவுகள் .. அதையும் விட எல்லாமே 3D கனவுகள். கனவுகள் நடந்து கொண்டிருக்கும். இருமலில் முழித்தால் தொடர்ந்து
இருமி முடித்துப் படுத்ததும், மிகவும் சரியாக விட்ட
இடத்திலிருந்து கனவுகள் தொடரும். கனவுகள் மாதிரியே இல்லாமல் எல்லாமே உண்மைகள்
என்பது போன்ற அனுபவம்.
இதிலும் சில experiments
செய்து பார்த்தேன். கனவுக் காட்சிகள் அத்தனை நிஜமாக இருந்தன.
தொடர்ச்சியும் மிகச் சரியாக இருந்தது. நான்
ஒன்றைச் சோதித்துப் பார்த்தேன். கனவு வந்ததும் கண் விழித்துப் பார்த்தேன். கனவு
மறைந்தது. உடனே கண் மூடிப் படுத்தேன். கனவில் கண்டது நினைவில் தெரிந்து, கனவும் தொடர்ந்தது. அதுவும் என் கண் ரெக்கைகளுக்குப் பக்கத்திலேயே அந்த
கனவுருவங்கள் இருந்தன. கைநீட்டித் தொட்டுவிடலாம் போல் இருந்தது. அத்தனை அருகே !
அத்தனை நிஜம்! செடிகள், கட்டிடங்கள் என்று எல்லாமே அத்தனை
தத்ரூபம்.
இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், இப்போதெல்லாம் அடுத்த நாள் ஏதாவது செய்யவேண்டுமென்று திட்டமிட்டால் தொடர்
கனவுகளில் திட்டங்களே வந்து கொண்டிருக்கும். அதிலும் ஏதாவது எழுத வேண்டும் என்று
நினைத்தால், என்ன எழுதுவது என்றும், எந்த
வார்த்தைகள் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றும் அந்த “நினைவுகள்” வரும்.
இம்முறையிலும் இருமலைப் பற்றியெழுத
வேண்டும் என்று நினைத்துப் படுத்த நாட்களில் வந்த கனவுகள் இருமலைப் பற்றியும் அதன்
தொடர்பான பலவும் கனவின் நினைவில் வந்தன.
இருமல் தொடர்ந்து அல்லல்படும் போதெல்லாம்
தன்னையறியாமல் வாயிலிலிருந்து ‘அம்மா, அப்பா’ என்ற வார்த்தைகள் முனகல்களாக வரும். எல்லோருக்கும்
இது வழக்கம் தான். ஆயினும் எதற்காக இந்த வார்த்தைகள் மட்டும் எனக்கு வரவேண்டும்
என்று நினைத்தேன். ஒரு வேளை மலையாளக்காரனாக இருந்தால், ‘அம்மே...
அச்சா” என்று முனகியிருந்திருப்பேனோ? தெரியவில்லை. சரியென்று
மற்ற மொழிக்காரர்கள் எப்படி முனகுவார்கள் என்று தூக்கத்திலேயே நினைத்துப் பார்த்தேன்.
எப்படி என்று தெரியவில்லை. உதாரணமாக, ஆங்கிலேயர்கள் ‘Oh
my mum, Oh my dad” என்றா முனகியிருப்பார்கள்?
சான்சே இல்லை. ஒரு வேளை Oh my god என்று சொல்லலாம்.
கடவுளும் வேணாம்னு நினச்சா எப்படி ஆங்கிலத்தில் முனகுவது? அதே
போல் எனக்கும் அம்மா, அப்பா என்று அனத்துவது பிடிக்காமல் போயிற்று.
பெத்த அம்மா சின்ன வயசிலேயே ‘எப்படியோ இரு’டே’ அப்டின்னு சொல்லிட்டு
டாடா காண்பிச்சிட்டு, செத்துப் போச்சு ... வளர்த்த அம்மா கடைசியில
செமயா வச்சி செஞ்சிட்டுப் போச்சு ... அப்பா .. வழக்கம் போல , எல்லா ரெண்டு கல்யாணம் பண்ற ஆம்பிளைங்க வழக்கமா செய்றதை - தசரத மகாராசா மாதிரி - அப்படியே முழுசா செஞ்சி வச்சிட்டுப் போய்ட்டாரு. பிறகு எதுக்கு
அப்பா.. அம்மா...ன்னு அனத்தணும்னு தூக்கத்திலேயே தோன்றியது. வீட்டுக்கார அம்மா தன்
அப்பா அம்மாவைக் கூப்பிடுவதை விட கர்த்தரைக் கூப்பிடுவார்கள். நமக்கு அதுவும் சரிப்பட்டு
வராது. ஆக சோகத்தில் எப்படி அனத்துவது என்பது பற்றியும் நினைவிலும் கனவிலும் யோசிச்சாச்சு... முடிவு தான் தெரியலை.
எப்படியோ மூன்று வாரம் தாண்டியதும்
பறிபோன தூக்கம் திரும்பி வந்திருச்சி. இதெல்லாமே ஏறத்தாழ கனவில் வந்து போன நினைவுகள்.
அப்போதே எழுத நினைத்தும் எழுத முடியாமல் போனவை. ஓரளவு நினைத்ததை rewind செய்து tinker வேலை பார்த்து எழுதியிருக்கிறேன். ஆனாலும்
...
இருமல் இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கிறது.
தங்களின் அனுபவப் பதிவு ரொம்பவே சுவாரசியம்.
ReplyDeleteஇந்த வைத்தியம் உங்களுக்குத் தெரிந்திருக்குமா தெரியவில்லை.
துண்டு மஞ்சளின் ஒரு பக்கத்தை நெருப்பில்[மெழுகு திரியைப் பயன்படுத்தலாம்] சுடும்போது வெளியாகும் புகையை அவ்வப்போது உறிஞ்சினால் நல்ல பலன் தெரியும். இது என் அனுபவத்தில் அறிந்தது.