Tuesday, May 23, 2023

1223. WHAT A LIFE ....?

நீண்ட நாள் மருத்துவத்திற்காக நெடுந்தூரம் பயணம் செய்து ஓர் ஊரில் வந்து தங்கியிருக்கிறோம். மருத்துவம் பற்றியோ, மருத்துவர் பற்றியோ எதுவும் பேசுவது இப்போது என் நோக்கமல்ல. ஆனால் மருத்துவத்திற்காக வந்த மக்களைப் பற்றிக் கட்டாயம் பேச வேண்டுமென்று முதலிலிருந்து ஓர் உறுத்தல்.

சேர்ந்த முதல் நாள் காதில், கண்ணில் ஏதும் விழவில்லை. அங்கங்கே அலைந்து கொண்டிருந்தேன். இரண்டாம் நாள் மருத்துவத்திற்காக வந்த மக்களோடு ஒருவனாய் காத்திருந்த போது பார்த்த காட்சிகள் என்றும் மனதை விட்டு அகலாது. பெரியவர்கள் பலரும் சிரமத்துடன் பார்த்த போது மனம் ஒன்றும் சிரமப்படவில்லை. ஆனால் சின்னஞ்சிறு குழந்தைகளையும் அவர்களின் குறைபாடுகளையும் பார்த்து மனம் பதறியது. அங்கே தொடர்ந்து இருக்க முடியாமல் ஓட வேண்டும் போல் இருந்தது. பக்கத்தில் உறவுக்காரப் பெண் என்னோடு இருந்தாள். இறை நம்பிக்கை நிறைந்த பெண். எங்களுக்கருகில் சாமி உருவங்கள் இருந்த அலங்கார மேடை ஒன்றும் இருந்தது. பலரும் வணக்கம் செலுத்திக் கொண்டிருந்தனர். என்னால் கண்முன் நடப்பதையோ பார்க்க முடியாமல் மனம் பதைத்தது. இல்லாத அந்த தெய்வத்தின் மேல் கோபம் வந்தது. உறவுக்காரப் பெண்ணிடம், “இப்படி ஒரு கடவுள் இருந்து இப்படி படைத்தாரென்றால் அந்தக் கடவுளைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்து விடணும்என்று கோபமாகச் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

முதல் அனுபவே இப்படிக் கசந்தது. அப்போது எந்தக் குழந்தை பற்றியும் தனித்து ஏதும் தெரியாது. தங்கிய நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்த போது ஒவ்வொரு குழந்தை பற்றியும் தெரியத் தெரிய ... மனசு தாங்கவில்லை.

ஒரு சின்னக் குழந்தை. பத்துப் பதினோரு வயதிருக்கும். மலரின் பெயர் அந்தப் பெண்ணுக்கு. அழகுக் குழந்தை. முகம் அத்தனை அழகு. மெல்லிய குரலில் பேசும் அழகே அழகு. பிறந்த நாளிலிருந்து கை கால்களின் எலும்புகளினாலோ என்னவோ நடக்கவோ, கையால்  எதையும் பிடிக்கவோ முடியாது. நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம். என்ன பாவம் செய்தது அந்தக் குழந்தை. கடவுள் படைத்தான் என்பதோ, ஊழ்வினைப் பயன் என்பதோ நான் நம்ப மறுக்கும்  வெறும் வெத்து வேட்டுகள்.

பத்துப் பன்னிரண்டு வயது என்று அந்த பெண்ணைப் பார்த்த போது நினைத்தேன். ஆனால் உண்மையில் இருபதைத் தாண்டிய பெண். உடம்பே கோணலாகி வளைந்திருக்கிறது. காலில் சுத்தமாகப் பலமில்லை. ஏழெட்டு வயது வரை துள்ளி ஓடிய பிள்ளையாம். நடனம் ஆடுவதை போட்டோ எடுத்து வைத்திருக்கிறார்களாம். குழந்தைப் பருவத்தில்வெகு விரைவாக நடக்க ஆரம்பித்த குழந்தை. இப்போது முழுவதும் முடங்கிப் போன பிள்ளை.

இன்னொரு பையன். பிறவியிலேயே மூட்டை முடிச்சாகப் பிறந்தான் போலும். கால்கள் திருகி இருக்கின்றன. அவனது தந்தை ஒரு வருடமாக உடனிருந்து வைத்தியம் பார்க்கிறாராம். முதலில் அம்மாவோடு இருந்திருக்கிறான். அம்மா செல்லமாக இருந்ததால் அவரை வியாபாரம் பார்க்க தன் கடையில் இருத்தி விட்டு அப்பா பையனை சிறிது முரட்டுத்தனத்தோடு கவனிக்கிறார் என்றார்கள். அதுவே பையனை விரைவில் சுகமாக்கும் என்று அப்பா நினைக்கின்றார் என்றார்கள்.

பிறக்கும் போதே காது கேளாமையுடன் பிறந்த பையன். அவனோடு மல்லாடும் பெற்றோர். அப்பா work from home software ஆள். வேலையும் பையனையும் எப்படியோ சமாளிக்கிறார் அப்பா.

இப்படி எத்தனையோ குழந்தைகள். இப்படி கொத்துக் கொத்தாய் பாவப்பட்ட குழந்தைகளைப் பார்க்கும் போது மனது தாங்கவில்லை. அதிலும் குழந்தைகள் என்பதால் அவர்களுக்கு தங்களுக்கான கொடுமைகளைச் சரியாகக்கூட புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆனால் பெற்ற தாய் தந்தையரை நினைத்தாலே மனம் பதறுகிறது. எத்தனை எத்தனை பெற்றோர் தூக்கம், இன்பம் தொலைத்து பிள்ளைகளின் நிலையறிந்து சோகமுற்றிருக்கிறார்கள் என்று தோன்றியது. பிள்ளைகள் நிலைகளை விட இவர்கள் நிலைதான் பாவம் என்று தோன்றியது. நம்பிக்கைகளோடு காத்திருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை நடக்கட்டும், நடந்தேறட்டும் என்று மட்டுமே மனதில் தோன்றுகிறது. circumstances make one go very philosophical.

சோகமான சூழல்தான். ஆனால் அதிலும் ஒரு வெகு நல்ல விஷயம் பார்த்தேன். Camaraderie எ-ன்ற சொல்லின் முழுப்பொருளையும் இங்கு ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறேன்.  எல்லோரும் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்கிறார்கள். மனதில் சோகத்தைச் சுமையாகத் தூக்கிக்கொண்டு வெளியே இன்முகத்துடைன் உடனிருப்போரிடம் பழகுகிறார்கள். உயர்வு தாழ்வு இல்லை. எனக்குத் தோன்றியதை சிலருடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னேன். “நம்ம கெட்ட குணங்களையெல்லாம் வெளியே விட்டுவிட்டு நல்லவர்களாக அனைவரும் இருக்கிறோம்என்றேன். பலமாக எல்லோரும் ஒத்துக் கொண்டனர். நான் தொடர்ந்து, “யார் கண்டது? வெளியே போனதும் பழைய குணங்கள் மீண்டும் வந்து நம்மீது ஏறிக் கொள்ளலாம் என்றேன். ஒரு பெண்மணி உடனே ஒரு பதில் சொன்னார்கள். “அப்படியெல்லாம் நடக்காது சார். இங்கே பத்தியம் இருப்பது போல் இருக்கிறோம். இந்தப் பத்தியமும் என்றும் நம்மோடு இருக்கும். என்றும் இப்படியேதான் வெளியேயும் இருப்போம்” என்றார் உறுதியாக. என்றார். அது உண்மையாக இருக்க வேண்டும். அது உண்மையானால் உலகமே அன்பு மயமாகி விடும் என்றே தோன்றியது. 

3 comments:

  1. உலகம் அன்புமயமாகிவிட்டால் உலகத்தையே வென்றுவிடலாம்.அன்னை தெரசா சொன்னதை நீங்கள் மீண்டும் சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  2. பல தரபட்ட மக்கள் மருத்துவத்திற்கு வந்து இருப்பதையும், அவர்கள் வந்த காரணங்களை அறியும் போதும் மனம் கலங்கி போகிறது.
    இறைவா! "ஏன் பிஞ்சு குழந்தைகளை இப்படி கஷ்டபடுத்துகிறாய்" என்று கேட்க தோன்றுகிறது.

    எல்லோரும் விரைவில் நலமாக வேண்டும். நம்பிக்கையும், மருந்தும் நல்லபடியாக வேலை செய்து அனைவரும் நலம்பெற வேண்டுகிறேன்.

    உங்கள் உடல் நலமும் விரைவில் சரியாகும். நாம் மற்றவர்களுக்கு ஆறுதலான அன்பான வார்த்தையால் நம்பிக்கை அளிப்போம். இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம். பிறருக்கு செய்யும் பிரார்த்தனை கண்டிப்பாய் நிறைவேறும்.

    ReplyDelete
  3. மன்னிக்கணும், கோமதி அரசு. எப்படியோ பின்னூட்டங்களை இடாமல் காலம் தாழ்த்தி விட்டேன். (Touch விட்டுப் போச்சு ...!) வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete