சநாதனம்னா என்னாங்க ...5
1946ல் அம்பேத்கர் “யாரிந்த
சூத்திரர்கள்?” என்ற ஒரு கேள்வியை எழுப்பி, ஒரு புதிய பிரக்ஞ்யை சமுக வெளிக்குக் கொண்டு வந்தார். தாங்கள் யார்?;
எங்கே இருக்கிறோம்?; என்னவாக இருக்கிறோம்?
என்ற எந்த சுயமதிப்பீடும் இல்லாத “பாவப்பட்ட மக்களாக” இன்னும்
இருப்பது தான் அவர்களின் இன்றைய பரிதாப நிலை.
இதைப் பற்றி விரிவாக எழுதப்பட்ட
நூலை தமிழில் மொழி பெயர்த்துள்ளேன். விரைவில் அச்சில் வரும் என்று
எதிர்பார்க்கிறேன்.
அதிலிருந்து சில பகுதிகளை
அவ்வப்போது இங்கு தர நினைத்துள்ளேன்.
பிராமணியத்தின் ஆன்மிக,
அறிவியல் கொள்கைகள் எல்லாமே ஒரு முனைப்பாக, சூத்திரர்களுக்கு
உடலுழைப்பைக் கட்டாயமாக்கி, வர்ண தர்மத்தை உயர்த்திப்
பிடிப்பதாகவே உள்ளன. இந்தத் தத்துவம் சமயத்தின் புராணக் கதைகள் மூலம் தொடர்ந்து
வலியுறுத்தப்பட்டே வந்துள்ளன. எண்ணிக்கையில்லா ஸ்மிருதிகளும், சூத்திரங்களும், சாத்திரங்களும் மகாபாரதம், இராமாயணம் போன்ற சமயப் புராணங்களில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ
வர்ண தர்மங்களின் அடிப்படைக் கோட்பாடுகளை வலிந்து நிலை நிறுத்துகின்றன. இந்தக்
கோட்பாடுகள் த்விஜாக்களின் ஆளுமையையும், அதிகாரத்தையும்
உயர்த்திப் பிடித்துக் கொண்டு, அதே சமயத்தில் பூணூல் அணிய
முடியாத சூத்திர மக்களின் தலை மீது உழைப்பையும், தண்டனைகளையும்
அடுக்கடுக்காய் ஏற்றி வைக்கின்றன.
தங்களது வேதமும்,
வட மொழியும்தான் உயர்ந்தவை என்று பறை சாற்றிக் கொண்டிருக்கும்
த்விஜாக்கள், அதோடு நில்லாது ஆங்கில மொழி மூலமும் தங்கள் ‘கொள்கை விளக்கங்களை’ பரப்பிக் கொண்டுள்ளனர். அதிலும்,
‘ஆதிக்க சாதியினர்’ என்று இன்று அழைக்கப்படும்
சாதியினர் - ஜட்கள், குஜ்ஜார்கள், பட்டேல்கள்,
யாதவர்கள், மராத்தியினர், நாயர்கள், ரெட்டிகள்,
கம்மாவினர், கௌனம்பிகள், லிங்காயத்துகள் - தங்கள் முன்னே பிளந்து கிடக்கும் சமூக
ஏற்றத்தாழ்வுகளையும் பிரித்தாளும் இரட்டை முனைக் கத்தி போலிருப்பதையும்
முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களாகவே உள்ளனர். 2
பூலே பிராமணர்கள் எந்த அளவு
சூத்திரர் மீது தங்கள் சுரண்டலைத் தொடர்கிறார்கள் என்பதையும்,
பிராமணர்கள் சமயக் கதைகள் மூலம் ஏனையோரை அடக்கி ஆள்கிறார்
என்பதையும் தன் சுய சிந்தனையின் வெளிப்பாடாகக் கொண்டுவந்தார். புரட்சிகளும் சீர்
திருத்தங்களும் நடக்காவிட்டால் எதிர்காலம் முழுமையாகப் பிராமணர் வசப்பட்டு விடும்
என்று கூறினார். அப்படி ஒரு போராட்டம் இன்றுவரையும் தேவையாகவே இருந்து வருகிறது.
காலம் இன்னும் அதற்குக் கனியவில்லை.
தெற்கே மதராஸ் மாகாணத்தில்
அயோத்திதாசர் (1845 - 1914) என்ற பறையர் இனத்து
அறிஞர், அந்தப் பத்தொன்பதாவது நூற்றாண்டிலேயே ‘சாதியற்ற தமிழன்’ என்றொரு சமூக, அரசியல் நிலைப்பாட்டிற்கான முதல் முயற்சியை எடுத்தார். மேலும் அவர்
அப்போது நிலவி வந்த ‘பிராமணியத் தேசியவாதத்திற்கு’ எதிராகத் திராவிடக் கருத்தியலைக் கொண்டு வந்தார். அயோத்திதாசர் ஏற்றிய
தீபத்தை மேலும் எடுத்துச் சென்றவர் பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர். அப்போதிருந்த
காலனிய அரசமைப்பில் பிராமணர் அல்லாதவர்களுக்கும் வியத்தகு பெருமை தரும் முறையில்
தன் சிந்தனைகளைப் பரப்பினார். ஒரு பெரிய பகுத்தறிவுவாதியாகவும் இறை
மறுப்பாளராகவும் இருந்து சமயப் புராணக் கதைகளைத் தோலுரித்து தன் கருத்துகளைப்
பரப்பினார். பழைய மூடநம்பிக்கைகளைக் களைந்து ஒரு புதிய சாதியற்ற, பகுத்தறிவுள்ள சமூக அமைப்பு வர பெரும் முயற்சி மேற்கொண்டார்.
திராவிடக் கருத்துகள் சாதிய
மறுப்புக் கொள்கைகளாக இருந்தாலும் தலித் மேம்பாட்டிற்கான பங்களிப்புகள் அதில்
ஏதுமில்லை. அதிலும் இன்னும் சூத்திரர் சமூகம் இன்றளவிலும் அடிமைப்பட்டே
இருக்கின்றது. சாதியச் சமூக அழுத்தங்கள் அவர்களைத் தலைதூக்க விடாமல் வைத்துள்ளது.
சமத்துவம் இல்லாமல் த்விஜாக்களின் அழுத்தத்தில் இருந்து விடுபடாமல்
இருக்கிறார்கள்.
தெற்கே சில தலைவர்கள்
தோன்றினார்கள். முன்னெடுப்புகளும் நடந்தேறின. தாழ்த்தப்பட்ட மக்களின்
முன்னேற்றமும் பிராமணர்களின் ஆதிக்கத்தின் அளவுகோலைச் சுருக்குவதும் ஓரளவாவது
நடந்தேறின. ஆனால் வடக்கிலும் கிழக்கிலும் நடந்த சில சீர்திருத்த முயற்சிகளும்
பிராமணச் சாதியக் கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே நடந்தது.
No comments:
Post a Comment