L.K.G. போற பசங்ககூட 'bore' அப்டீங்கிறதை சர்வ சாதாரணமா பயன்படுத்துறாங்க. இந்த 'போர் அடிக்கிறதுன்னா' என்னன்னு யோசிச்சு பாத்தா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணா இருக்கு. அப்போ பொதுவா அது என்னதான்னு பயங்கரமா, இருக்க ஒண்ணு ரெண்டு முடியையும் பிச்சுக்கிட்டு சிந்தனை பண்ணி ஒரு definition கண்டு பிடிச்சேன். அது என்னென்னா, Repetition is bore - அப்டின்னுதான். சும்மா சொன்னதேயே சொல்லிகிட்டே இருக்கீங்கன்னு வச்சுக்குவோம் - சொல்றவனுக்கு எப்படியோ கேக்றவன் செத்து சுண்ணாம்பாயிருவான்ல! அது மாதிரிதான் ஒவ்வொரு திங்கட்கிழமையும் யாரோ ஒருத்தர் 'இந்த வார நட்சத்திரம்' ஆயிடுராறு; காசிக்கும், மதிக்கும் ரொம்ப நன்றின்னு சொல்லுவார். பாவம், அந்த ரெண்டு பேரும்; ஒரேமாதிரி கேட்டுக் கேட்டு 'bore' அடிச்சி ...பாவங்க அவங்க...அதனால ஒரு மாற்றத்திற்கு அவங்களுக்கு நன்றி (இப்போ) சொல்லாம விஷயத்துக்கு வருவோம்.
என்னமோ, எப்படியோ, எதனாலேயோ 'இப்படி' ஆயிப்போச்சு - அதான் நான் இந்த வார நட்சத்திரமா ஆனதைத்தான் சொல்றேன். எவ்வளவோ பாத்த ஆளுக நீங்க..ஒரு வாரந்தானே...தாக்குப் பிடிக்க அல்லது தாண்டிப்போக மாட்டீங்களா என்ன?
தேசிகனின் வலைப்பதிவுகளைப் பற்றிய விவரங்கள் திடீரென எனக்கு மெயில்களாக வர ஆரம்பித்தன. எப்படியென்றோ,என்னவென்றோ தெரியாமலே அவைகளை வாசிக்கும்போது 'அட, இது நல்லா இருக்கே..இப்படியும் தமிழ்ல என்னென்னமோ பண்றாங்களே' அப்டின்னு 'மதுரக்காரன் பட்டணத்து மிட்டாய்க் கடையை பாத்தது மாதுரி' திகைச்சு, சந்தோசப்பட்டேன். பிறகு எப்படியோ தமிழ் மணம் id கிடச்சுது; எப்டின்னு கூட ஞாபகம் இல்லை. கொஞ்சம் அங்க இங்க வாசிச்சேன். பிரமிப்பு கூடியது - technology பார்த்து. நம்மகூட எழுதலாமோன்னு லேசா ஒரு ஆசை எட்டிப் பாத்துச்சு. அந்த சமயத்திலதான் சென்னை கடற்கரைக் கூட்டம் பற்றி தமிழ்மணத்தில படிச்சேன். நானும் சென்னைக்குப் போகவேண்டியிருந்தது. திட்டத்தக் கொஞ்சம் மாற்றி நானும் போய் கலந்துகிட்டேன்; அப்படி சொல்றதவிடவும் ஒரு ஓரத்தில உட்கார்ந்து 'மூஞ்சில ஈ ஆடறதுகூட தெரியாம' (நிறைய ஈ இருந்திச்சு) திகச்சுப் போய் உட்கார்ந்திருந்தேன். டோண்டு (பேரு நல்லா வித்தியாசமா இருந்திச்சு), தமிழ் சசி (அன்னைக்கி அங்க யாரோ சொன்னதுமாதிரி, நானும் அவர் பெயரை முதலில் தமிழச்சின்னுதான் வாசிச்சேன்), பத்ரி, (அவரு கெட்ட நேரம், தற்செயலா அவர் பக்கத்தில உட்கார்ந்தேன்),மாலன், இராமகி, - இப்படி கொஞ்ச பேருடைய பெயர்கள் அப்பவோ, அல்லது அதுக்கு முன்பே தமிழ்மணத்திலேயோ பார்த்து / கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.
அவங்க பேசினதுல முக்காவாசி ஒண்ணும் புரியலை. அப்போ மொத்த பதிவர் எண்ணிக்கை நானூத்திச் சொச்சம். ஒண்ணு அப்ப முடிவு பண்ணினேன். இது ஒரு தனி "தமிழ்-உலகமா" விரியப்போகுது நாமும் சீக்கிரம் இந்த 'ஜோதியில இணஞ்சிடணும்'னு முடிவு பண்ணிட்டேன். அதப்பத்தி யோசிச்சிக்கிட்டே போனப்போ புத்தருக்கு போதி மரம் மாதிரி எனக்கு ஒரு ஞானோதயம் petrol bunk-ல் கிடச்சுது. பெட்ரோல் போடும்போது என்னப் பார்த்த அங்கே வேலை பார்க்கும் ஒரு பெண் - பாவம், கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் - ஐயா, இந்த தாத்தா பாரேன்; ஜீன்ஸ் போட்டிருக்காரு'ன்னு கத்திச்சி. பொறி தட்டிருச்சி; நம்ம வயச காமிக்காம இருக்கிறதுதான் நல்லதுன்னு. அப்போ ஒரு புனைப்பெயரை வச்சிக்கிறது நல்லதுன்னு பட்டிச்சி. அன்னைக்கு 'தருமி பிறந்தான்'. பிறந்த நாள்: 24.04.'05. இத்தமிழுலகின் 463-வது பிரஜை என்று நினைக்கிறேன். வயசும் இப்போ அஞ்சு மாசமாச்சு.(முதல் இரண்டு மாதமும் சவலைப் பிள்ளையா இருந்து, அதுக்குப் பிறகு நீங்களெல்லாம் ஊட்டி வளர்த்ததில் நானும் இப்ப ஸ்டார் ஆயிட்டேன். நிறைவா இருக்கு. எல்லாத்துக்கும் (அதாவது, எல்லோருக்கும்), எல்லாத்துக்கும் (அதாவது, எல்லாவற்றிற்கும்) நன்றி. கட்டாயமா இங்க ஒரு ஸ்பெஷல் நன்றி ஒருத்தருக்குச் சொல்லணும். அது பெனாத்தல் சுரேஷ் இவருக்கு மட்டும் எப்படி தோன்றியதோ, என் முதல் பதிவிற்கு வந்த ஒரே ஒரு பின்னூட்டத்ததை அளித்தவர் இவரே. நன்றி, சுரேஷ்.(தப்பு பண்ணிட்டோமோன்னு நினைக்கப்போறார்) It did give a great pep to me.
உள்ளே வந்தது - it is not all that rosy as was seen from outside - அப்டின்னுதான் தோன்றியது. ஏன்னா அப்போ இருந்த நிலை அப்படி. பலர் உள்ளே இருந்து கஷ்டப்பட்டார்கள்; சிலர் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் நிலைமை சீரடைந்து விட்டது. இன்னும் சில பிரச்சனைகள் உண்டுதான். ஆனால், these are all just teething problems. We have to simply outgrow. அதற்குரிய அறிகுறிகள் நன்கு தெரிகின்றன.
என் விளக்கின் ஒளிவட்டத்தில் நான் பார்த்த சில பதிவாளர்களில் இத்தருணத்தில் என் மனதில் தோன்றும் சிலரைக் குறிப்பிடுகிறேன். இது எனது முழுமையான பட்டியல் இல்லை.
பாடநூல் எழுதும் ஓர் ஆசிரியருக்கு இருக்க வேண்டிய ஒரு seriousness தமிழ் சசியின் 'சசியின் டைரி'யில் பார்க்க முடிகிறது. காஷ்மீர் பற்றிய அவரது கட்டுரையோ, இப்போது எழுதிவரும் 'கனவுகளோ' எளிதாக, கண்ணை மூடிக்கொண்டு, பாட நூல்களில் அப்படியே சேர்த்துவிடலாம். அந்த அளவுக்கு அவரது எழுத்துக்களின் பின்னால் அவரது உழைப்பு தெரிகிறது. பணி தொடர வாழ்த்துக்கள். இவர் மூளையைத் தொடுகிறார் என்றால் மற்றொருவர் என் மனதைத் தொட்டார். இளவஞ்சி. வேலைப்பழுவோ, வேறு என்னவோ மிகக்குறைவாகவே எழுதுகிறார் என்று நினைக்கிறேன். ஒரே கட்டுரையில் நகைச்சுவையோடு ஆரம்பித்து, முடிக்கும்போது மனதைத் தொட்டு விட்ட அவர் எழுத்துக்களைப் -அவர் ஸ்டாராக இருக்கும்போது - பார்த்து வியந்தேன். தன் வலி தெரியா வாலியோ அவர். துளசி -சின்னவன் சின்னாட்களுக்கு முன்பு ஒரு சரியான பட்டம் கொடுத்திருந்தார் இவருக்கு, 'பின்னூட்ட நாயகி' என்று - இவரது எழுத்தில் உள்ள எளிமை படிக்கும்போது எளிதாகத் தெரிகிறது. 'காப்பி'யடிக்க நினைத்தால்தான் தெரிகிறது அது அவ்வளவு எளிதில்லையென்று. இழையோடும் நகைச்சுவையும்,எழுத்துக்களில் காணப்படும் நட்புத்தன்மையும் ஈர்க்கிறது. புலம் பெயர்ந்தவர்களின் மனத்து வேதனகளையும், வாழ்வின் சோதனைகளையும் சொல்லும் ஸ்ரீரங்கன், தங்கமணி, சந்திரவதனா,பெயரிலி, வசந்தன்,மயூரன் இன்னும் பலரின் எழுத்துக்களின் ஈரம் நம்மை நனைக்கிறது. ரம்யா, பத்மா இவர்களின் பொதுநோக்கும், மனிதயியல் சிந்தனைகளும் (பெண்ணியல் என்றழைக்க மாட்டேன்)நெகிழவைக்கும் பதிவுகளில் பொதிந்திருக்கின்றன. சில சமயங்களில் இது தேவைதானா என்ற கேள்வியை எழுப்பினாலும் பல முறை நம் உதடுகளில் புன்னகை ஏற்படுத்தும் 'லொள்ளு குரூப்' முகமூடி,வீ.எம்., குழலி, ஞானபீடம் - இப்போது இவர்களோடு சின்னவனையும் சேர்த்து இந்த ஐமர் நல்ல 'பஞ்ச் (punch) பாண்டவர்கள்'!
கடந்த சில நாட்களில் புதிதாக வந்தவர்களில் என் கண்ணில் பட்டு, என்னை வாசிக்கவைத்த எழுத்துக்களின் சொந்தக்காரர்கள் மூவர். அவர்கள் பெயர்களும், அவர்கள் எழுத்துக்களும்:ஸ்ருசல் இது புனைப்பெயரா, இல்லை உண்மைப் பெயரா? - (தடாகம்) ஐ.ஐ.டி. பற்றிய கண்ணோட்டம், மாலிக்கின் (விளம்பி) பூனைக் கதையும், இளவ்ரசியைத்த்தேடி...கதையும் (அதாவது, அவர் இதுவரை எழுதிய இரண்டு பதிவுகளுமே), சோம்பேறிப்பையன் ஜோதியின் எண்ணங்கள். அவர்களை வாழ்த்தி, வரவேற்கிறேன்.
பின்னூட்டம் இட விரும்பும் நண்பர்கள் 'புது வீட்டிற்கு' வந்து அங்கேயிட அழைக்கிறேன். நன்றி.........
முகமூடியும் குழலியும் எப்போதாவது ஒரு சில, பஞ்சு போல பறக்கும் இலகுவான பதிவுகளை இட்டாலும்,
ReplyDeleteஅவர்கள் இருவரும் ஆழமாக சிந்தித்து, கனமான கருத்துக்களை, அழுத்தமாக பதிகிறார்கள் என்றே எண்ணுகிறேன்.
வாழ்த்துக்கள் தருமி..
ReplyDeleteநடசத்திரம் ஆன உடன் வரும் வழக்கமான bore கமெண்டதான் இதுவும்
நட்சத்திரம், வாங்க. Boredom ஏன் மனிதனுக்கு நிகழ்வதாய் தோணுகிறது என்று யோசித்தீர்களானால் சுவரஸ்யமான இடத்துக்கு அழைத்துப்போகும். There is a key.
ReplyDeleteநீங்கள் நன்றி கூறவேண்டியவர் (பினாத்தல்) சுரேஷ் என்று நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட பதிவர்களின் சுட்டியையும் இட்டிருந்தால் புதியவர்களுக்கு உதவியாகயிருக்கும். உங்கள் நட்சத்திரப் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
ReplyDeleteவாங்க வாங்க தருமி !!! இந்த வார ஸ்டாரா நீங்க...... "நான் ஏன் ஸ்டாரானேன்னு?" ஒரு பதிவு கண்டிப்பா போடுவீங்க தானே
ReplyDeleteஇந்தக் கிழமை கலக்கலாப் போகுமெண்டு நினைக்கிறன்.
ReplyDeleteஉங்கட, 'மதம்' பற்றிய தொடர் கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. அவற்றைவிட உங்கள் அனுபவங்களைச் சொல்லும் முறையும் நன்று.
அதுசரி, திரைப்படங்களைப் பற்றி எழுதுவதை விட்டுவிட்டீர்களே? ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் தருமி சார்!
ReplyDeleteஇங்கேயும் ஸ்டார் அந்தஸ்து உண்டோ! எது எப்படியோ நீங்க ஸ்டார் ஆனதிலே எனக்கு மகிழ்ச்சியே!ஆமா ஸ்டார் ஆவனுமானா என்ன சார் பண்ணனும்? என் பொட்டீக்கடை செம சூப்பரா ஓடுது... நீங்க அவசியம் வரனும்...
சத்யா
இண்டைக்குத்தான் இந்தப் பதிவைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைச்சுது.
ReplyDeleteஎன்னையும் நினைச்சிருக்கிறிங்கள். சந்தோசமான நன்றி
// தனி "தமிழ்-உலகமா" விரியப்போகுது நாமும் சீக்கிரம் இந்த 'ஜோதியில இணஞ்சிடணும்'னு முடிவு பண்ணிட்டேன்//
ReplyDeleteஅருட்பெரும் ஜோதி! அருட்பெரும்ஜோதி!