*
‘ஜெயிலுக்குப் போன சித்தாளு’ அப்டின்னு தலைப்பு கொடுக்கலாமான்னு நினச்சேன். இரண்டு காரணத்தால் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். ஒண்ணு, சித்தாளுன்னா என்னன்னு முதல்ல சொல்லணும்; இரண்டு, ஜெயிலுக்குப் போனப்போ நான் சித்தாள் நிலையிலிருந்து பதவி உயர்வு பெற்றுவிட்டேன். (இப்போ சித்தாளு வேல பற்றி தெரிஞ்சுக்க விரும்புறவங்க - அங்கே போங்க.) கல்லூரி ஆசிரியர்களின் நிலைமை நான் வேலைக்குச் சேர்ந்த காலத்தில் மிகவும் பரிதாபமான நிலையில்தான் இருந்தது. (பின் ஏன் அந்த வேலைக்குப் போனாய் என்று கேட்கிறீர்களா? அப்போது அவ்வளவுதான் அறிவு; அதோடு வாத்தியார் வேலை குடும்பத்தொழில் போல தொடர்ந்து வந்தது; வேறு சிந்தனை ஏதுமின்றி, குதிரைக்குக் கண்ணில் கட்டுவார்களே ‘blinkers’, அது போல ஒரே நோக்கோடு சேர்ந்தேன் என்பதே உண்மை. அதன் லாப, நஷ்டங்களைப் பற்றிப் பிறகு பேசுவோம்…)
அதுவும் ஏற்கெனவே சொன்னது போல நான் பார்த்த ‘சித்தாளு’ வேலை ரொம்பவே பரிதாபம். ஆண்டாண்டு மறு பிழைப்பெடுக்க வேண்டும். கல்வியாண்டின் இறுதியில் மொத்தமாக இந்த சித்தாளு கேசுகளுக்கு கல்லூரி முதல்வரிடமிருந்து ‘ஓலை’ வரும் - அது அவர்களது பதிவு நீக்க நோட்டீசாக இருக்கும். பிறகு, கல்லூரி திறக்கும் நேரத்தில் ‘மந்திரிச்சி விட்ட கோழிகள்’ மாதிரி அவரவர் துறைத்தலைவர், முதல்வர் இவர்களைச் சுற்றிச் சுற்றி வருவோம். பொதுவாக, முந்திய ஆண்டில் வேலை பார்த்த அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்றாலும், அது முந்திய கல்வி ஆண்டில் துறைத் தலைவரிடம் எவ்வளவு நயந்து போனோம் என்பதும், அவரது வீட்டு விசேஷங்களில் எவ்வளவு ‘ஆர்வமாய்’ கலந்து கொண்டோம்; வாழை மரம் கட்டினோமா; அங்கு ‘கொஞ்சி விளையாடும்’ நண்டு சிண்டுகளிடமெல்லாம் நன்றாக இருந்தோமா என்பதையெல்லாம் பொருத்திருக்கும். ஒரு கொத்தடிமைத்தனம் எல்லா கல்லூரிகளிலும் இருந்தது என்பது நிஜம். (இந்த விதயத்தில் முதல் நான்கு ஆண்டுகளில் (1966-70 )நான் ஓர் அதிர்ஷ்டக்காரன். என் துறைத்தலைவர் என்னிடம் மிகுந்த வாஞ்சையோடு இருந்தவர். என் முன்னேற்றத்தில் ஆர்வமுள்ளவர்.)
எத்தனை ஆண்டுகள் வேலை பார்த்தாலும் இந்த ‘சித்தாளுகளுக்கு’ எப்போதுமே தலைக்கு மேல் ஒரு ‘Damocles sword’ தொங்கிக் கொண்டே இருக்கும். ஆண்டின் ஆரம்பத்தில் வேதனைகளும் வேடிக்கைகளும் கலந்தே இருக்கும். எங்கள் ‘பிழைப்பை’த் தெரிந்தே வைத்திருப்போம் என்பதால், அப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் கல்லூரி ஆசிரியர்கள்- இந்த சித்தாளு cadre-ல் இருப்பவர்கள் - எல்லோரும் வேக வேகமாக ஜனவரி - மார்ச் மாதங்களில் பெண் பார்க்கும் படலம் வைத்துக் கொண்டு, கோடை விடுமுறையிலேயே கல்யாணத்தை முடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அந்தக் கால கட்டத்தில் கல்லூரி ஆசிரியர் என்று சொல்லிக்கொள்ள முடியுமே! ஆனால், அந்த மாதிரி ஆட்கள் எல்லோரும் ஜூன் மாதத்தில் ‘வயித்தில் நெருப்பைக் கட்டி கொண்டு’ continuation கிடைக்க எல்லா சாமியையும் கும்பிட்டுக் கொண்டிருப்பார்கள் - துறைத்தலைவர்கள் இந்த ‘சாமி’களில் அடக்கம். நாங்களே இப்படி அல்லாடிக்கொண்டிருப்போம். அந்த நேரத்தில் கல்லூரியில் இடம் தேடும் கூட்டம் எங்களிடம் ரெக்கமெண்டேஷனுக்கு வரும். அதில் என் நண்பன் ஒருவன் தனி டெக்னிக்கே வைத்திருந்தான். பையில் எப்போதும் ஒரு துண்டு பேப்பர் இருக்கும். இடம் தேடி வருபவர்களிடமெல்லாம் ரொம்ப ஒழுக்கமாக அவர்களது விவரங்களைக் கேட்டு குறித்துக் கொள்வான். ‘நான் துறைத் தலைவரிடம் சொல்றேன், பார்க்கலாம்’ என்று ‘காமராஜ் ஸ்டைலில்’ சொல்லி வைப்பான். ‘சார், சீட் கிடைச்சிருச்சு’ அப்டின்னு யாராவது வந்தால் உடனே அந்த லிஸ்டை எடுத்து அவர்கள் முன்னால் அதை அடித்து விட்டு, ‘சார் எப்போதும் இப்படித்தான்; நமக்கு எப்போதுமே நன்கு ‘oblige’ பண்ணுவார்’ அப்டின்னு சொல்லிக்குவான். ஆனால் எனக்குத் தெரிந்து அவன் யாரிடமும் என்றும் சொன்னதேயில்லை; எங்க சொல்றது - நம்ம பிழைப்பே அங்க அல்லாடிக்கிட்டு இருக்கும்!
இது ஒரு பக்கக் கதை என்றால் இன்னொரு பக்கம்- சித்தாளுகள் என்றில்லாமல் - பல கல்லூரிகளில், எல்லாருக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இன்னொரு தலையாய பிரச்சனை - சம்பளம். அப்போதெல்லாம் அரசு, கல்லூரி நிர்வாகங்களுக்கு மொத்தமாக ‘grants’ அனுப்பிவிடும். அதில் ஆசிரியர்களின் சம்பளமும் உள்ளடக்கம். சம்பளம்னா எவ்வளவுன்னு நினைக்கிறீங்க? அப்போது என் முதல் மாதச் சம்பளம் ரூபாய்: 198. நான் 1966, அக்டோபர் இரண்டாவது வாரத்தில்தான் சேர்ந்தேன்; ஆகவே, முக்கால் மாதச் சம்பளம்தான். முதல் மாதச்சம்பளம் நூத்தி முப்பத்தைந்து சில்லறை ! (சம்பளத்தில் ரூபாய் 75-யை மாதாமாதம் வீட்டுக்கு அனுப்பணும்னு அப்பா சொல்ல, நான் முடியாது 25தான் அனுப்புவேன் என்க, ஒரு ‘கட்டப்பஞ்சாயத்து’ வைத்து மாதம் 50 ரூபாய் அனுப்பி விடவேணும்னு முடிவாச்சு ) லெக்சரர் என்னும் விரிவுரையாளருக்கு சம்பளம் 360 என்று நினைவு. பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் அவர்களது உண்மையான சம்பளத்திற்குக் கையெழுத்து போட்டு விட்டு, மிகக் குறைந்த சம்பளத்தையே கையில் வாங்குவார்கள். மீதி கல்லூரி நடத்துபவர்கள் ‘ஸ்வாஹா’தான். (இப்போது self-financing institutions-களில் நடக்கும் கூத்துதான்! ஒரு வித்தியாசம் - இப்போதாவது ‘உனக்கு இவ்வளவுதான் சம்பளம்’ என்று சொல்லியே கொள்ளை அடிக்கிறார்கள்; அப்போது அரசிடமிருந்து ஆசிரியர்களுக்கு நியாயமாய் வரவேண்டிய காசை முழுங்கினார்கள்!) ஒரு கல்லூரியில் - கல்லூரியின் பெயர் வேண்டாமே!- நடந்தது அப்போது மாநிலத்திலேயே பிரசித்தம். என்னவெனில், கல்லூரி நிர்வாகத்திற்குச் சொந்தமாக மளிகைக் கடையும், ஜவுளிக்கடையும் இருந்தன. ஆசிரியர்கள் சம்பளமாக அரசிடமிருந்து வரும் பணம் ‘சுற்று’க்குப் போய்விடும்; ஆண்டுக்கு அநேகமாக இருமுறைதான் சம்பளப் பட்டுவாடா செய்யப் படும். ஆசிரியர்கள் எல்லோரும் தங்கள் குடும்பத் தேவைகளுக்கு நிர்வாகத்தினரின் கடைகளில் கணக்கில் வாங்கிக்கொள்ளலாம். சம்பளம் கொடுக்கும்போது அவரவர் கடைகளுக்குக் கொடுக்கவேண்டியதை எடுத்துக் கொண்டு, ஏதாவது மீதி இருந்தால், பெரிய மனது பண்ணிக் கொடுப்பார்கள். உள்ளூர் சினிமாத் தியேட்டர்களிலும், சலூனிலும் கணக்கு வைத்திருப்பீர்களா என்று மற்ற கல்லூரி ஆசிரியர்கள் அவர்களைக் கிண்டலடிப்பதுண்டு.
1970-ல் நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சேர்ந்தேன். இங்கிருந்த பிரச்சனை வேறு எங்கேயும் இல்லாத பிரச்சனை ! அங்கங்கே அவனவன் மாதா மாதம் பார்த்த வேலைக்கு சம்பளம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருக்க இங்கே ஒவ்வொரு கோடை விடுமுறை விடும்போதும் மார்ச், ஏப்ரில், மே மாத சம்பளத்தை ஏப்ரில் மாதமே கொடுத்துவிட்டு ‘போய்ட்டு வாங்க,ராஜா’ன்னு விடுமுறைக்கு அனுப்புவாங்க. விடுமுறைக் காலத்தின் முதல் பாதியில் ராஜ வாழ்க்கை வாழ்ந்திடுவோம்; அதன் பிறகு ஒரு பயங்கர ‘dry spell’தான். கல்லூரி ஆரம்பிக்கும்போது எல்லோரும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பாத்துக்கிட்டு…எப்படா, ஜூலை ஆரம்பிக்கும்’ சம்பளம் வாங்குவோம்னு இருப்போம். அப்ப அநேகமா எல்லோரும் ஒரு ‘பிரசவ வைராக்கியம்’ எடுத்துக்குவோம்: இனி அடுத்த வருஷம் ஒழுங்கா பிளான் பண்ணி செலவு செய்யணுனும்னு!
இதுகூட பரவாயில்லை. இன்னொரு காரியத்தில் அமெரிக்கன் கல்லூரி அமெரிக்க ஸ்டைல் ஒன்றை அப்படியே பின்பற்றும். இன்று கூட பல கல்லூரிகளில் காலையில் இத்தனை மணிக்கு முன்பும், மாலை இத்தனை மணிக்குப் பின்னும் தினமும் கையெழுத்து போடவேண்டும் என்று பயங்கர சட்டம் வைத்திருப்பார்கள். ஆனால் எங்கள் கல்லூரியில் அந்தக் காலத்தில் கையெழுத்து என்பதே இல்லை. ‘உனக்கு வேலை இருக்கிறதா; பார்த்துட்டு போய்க்கிடே இரு’ என்பது மாதிரியான பெரும் போக்கு. இந்த ’supervisory cadre’ என்பதே நம் நாடு போன்ற காலனிய நாடாக, அடிமை நாடாக இருந்த நாடுகளில் மட்டுமே உள்ள வழக்கம் என்பதும், அது நமக்குத் தேவையில்லை என்ற எண்ணமும் இருந்தது. பின்னாளில் அரசு நேரடிச் சம்பளம் வந்த பிறகே, அரசு வலியுறுத்தி யமைக்காகவே கையெழுத்து போடும் முறை வந்தது. சொல்லப்போனால் அரசின் நேரடிச் சம்பளம் வந்ததால் நாங்கள் அப்போதிருந்த சில சலுகைகளை இழக்க வேண்டியதாயிற்று. இப்படிப் பட்ட கல்லூரியிலும் என்னைப் போன்ற அதிர்ஷ்டக்கட்டைகள் கொஞ்சம் உண்டு. தேவையில்லாமலும், சரியான காரணமில்லாமலும், மனிதர்களின் (துறைத் தலைவர்களின்) ego clash-ன் நடுவில் நான் மாட்டிக்கொண்டு ஐந்து ஆண்டுகள் சித்தாள் வேலையில் நீடிக்கும்படி ஆயிற்று.
பார்த்த வேலைக்குச் சம்பளம், ஆண்டாண்டாய் பார்க்கும் வேலையில் நிரந்தரம், பதவி உயர்வுகளில் எந்த வித நெறிமுறைஇல்லாமை - இப்படி கல்லூரி ஆசிரியர்களுக்கு எல்லாவித நெருக்கடியும் இருந்தும் ஊர்வலம், வேலை நிறுத்தம் போன்ற போராட்ட வழிகளில் இறங்குவதற்கு ஆசிரியர்களின் மத்தியிலேயே மிகுந்த தயக்கம் இருந்தது. காலங் காலமாய் தலையில் ஏற்றிவைத்த ‘கீரீடத்தை’ அவ்வளவு சாதாரணமாக இறக்கி வைத்துவிட முடியுமா, என்ன? போராட்டம் என்ற பேச்சு வந்த போதே ஆசிரியர்கள், சமூகத்தில் பல தர மக்களிடமும் ஏச்சும் பேச்சும் பெற வேண்டியிருந்தது. ‘Letters to the Editor’-களில் கடிதங்கள் குவிந்து விடும் - எப்படி ஆசிரியர்கள் போராட்டம் என்றெல்லாம் பேசப்போயிற்று என்று; ஆனால், ‘ஏன்’ என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. ஆசிரியர்கள் போராடலாமா? அவர்கள் போராடிச் சிறை செல்லலாமா? அவர்கள் தெருவுக்கு வந்து, போராடி சிறை செல்லலாமா என்ற கேள்விகளெல்லாம் இன்று காலாவதியாகிப் போனவைகள். ‘குரு’வாக இருந்து ‘காணிக்கை’ வாங்கைய காலமல்ல இது; ஆசிரியர்களும் அரசாங்கத்தில் மாதச்சம்பளத்தில் வேலை பார்க்கும் அலுவலர்களே; அவர்கள் தங்கள் உரிமைகளையும், சலுகைகளையும் அரசாங்கங்கள் புரிந்துகொள்ளும் ஒரே மொழியான போராட்டங்கள் மூலமாகவே பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ‘Noble job’ என்று பட்டம் கட்டி, மூலையில் உட்கார வைத்த காலம் போய், ஆசிரியர்களும் தேவை ஏற்படின் போராடத் தயங்க மாட்டார்கள் என்ற சூழலை நம் மாநிலத்தில் மட்டுமல்ல அகில இந்தியாவுக்கும் தெரிய வைத்த பெருமை ‘மூட்டா’ என்ற Madurai University Teachers’ Association ( MUTA )ஆசிரியர் கூட்டணிக்குச் சேரும்.
இருந்த பிரச்சனைகளால், ஆசிரியர் சங்கம் ஒன்று வேண்டும் என்ற உணர்வு மிக மிக மெல்ல உருவாகத் தொடங்கியது. அதற்குக் காரண கர்த்தாவாக இருந்தவர் பேரா. ராஜன் என்பவர். இவர் முதலில் ஒற்றை ஆளாக ஆரம்பித்தாலும் விரைவில் அந்த உணர்வு பரவியது; ஏனெனில் அவனவன் கஷ்டம் அப்படி! ஆனாலும் அவர் கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களை நேரடியாகப் பார்த்துப் பேசுவதற்காக மாலைகளில் கல்லூரி முடிந்த பின் கூட்டம் போட முயற்சிப்பதுண்டு. மாலையில் வீட்டுக்கு ஓடும் மூடில் இருக்கும் மக்கள் அவ்வளவு எளிதாக கூட்டத்திற்கு வருவதில்லை என்பதே அவரது அனுபவம். அவருக்குத் தெரிந்த நண்பர் மூலம் எங்கள் கல்லூரியில் அப்போது இருந்த பேரா. ஜெயராஜ் என்பவரைச் சந்திக்க வந்தார். அப்போது நானும் ஜெயராஜும் ‘பயங்கரமாக’ grand slam level-க்கு டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தோம். வந்த பேரா. ராஜன் சங்கம் ஒன்று ஆரம்பிப்பது பற்றி எங்களிடம் பேசினார். நாங்கள் அவரையும் கூட்டிக்கொண்டு எங்கள் முதல்வரிடம் அழைத்துச் சென்றோம். ராஜனுக்கு அது அவ்வளவு சரியாகப் படவில்லை. ஏனெனில், மற்ற கல்லூரிகளில் ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகிகளுக்கோ, முதல்வர்களுக்கோ தெரியாமல்தான் ராஜனின் கூட்டங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை. ஆனால் நாங்களோ நேரடியாக முதல்வரிடமே அழைத்துச் சென்றது அவருக்கு வினோதமாகப் பட்டிருக்க வேண்டும். அதைவிட முதல்வர் ஒரு கூட்டத்தை official-ஆக ஏற்பாடு செய்து அவரைச் சிறப்பு விருந்தினராக அழைத்து, பேசவும் வைத்தது அவரை மிக வியப்பில் ஆழ்த்தியது. இப்படிச் சிறுக சிறுக ஆரம்பித்த சங்கம் 72-ம் ஆண்டில் சட்ட பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. சங்கத்திற்கு முதல் பொருளாளராக ஜெயராஜ் இருந்தார். அவர் நடுவில் அமெரிக்கா சென்றதால் சில மாதங்களுக்கு அப்பொறுப்பு என்னிடம் வந்ததாகவும், இரண்டாவது பொருளாளராக நான் இருந்ததாகவும் பின்னாள் எங்கள் சங்கத்தலைவராக இருந்த என் பள்ளிக் கூட்டாளி பேரா. பார்த்தசாரதி சொல்லித் தெரிந்தது. எனக்கு அது மறந்தே போச்சு; அவ்வளவு வேலை பார்த்திருப்பேன் போலும்!
72-ல் ஆரம்பித்தாலும், மனுக்களும், விண்ணப்பங்களும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தாலும் ஆசிரியர்களின் நிலைமையில் மாற்றம் ஏதுமில்லாமல் காலம் நகர்ந்தது. இந்த இழுபறியில் சங்கத்திற்கு ஒரு நல்ல காலம் பிறந்தது. முதலாவதாக, ஆசிரியர்களின் மனங்களில் மாற்றம் ஏற்பட்டது. ரோட்டுக்கு வரலாமா என்ற கேள்வி போய் ரோட்டுக்கு வந்தால் மட்டும் போதாது; சிறைக்குச் செல்லவும் தயாராக வேண்டும் என்ற மனமாற்றம் வந்தது. இரண்டாவதாக, சோதனைகளும், வேதனைகளும் சங்கத்தின் ஓற்றுமையை வலுப்படுத்தியது. இதே நேரத்தில் சில வடக்கு மாநிலங்களில் U.G.C. பரிந்துரை செய்த சம்பள உயர்வு ஆசிரியர்களுக்குக் கிடைத்தது. எல்லாமாகச் சேர்ந்து 77-ல் இறுதித் தேர்வுகளைப் புறக்கணித்தல், மறியல் போராட்டம் நடத்தி சிறைக்குச் செல்லுதல் என்ற முடிவெடுக்கப்பட்டது.
மற்ற கல்லூரிகளில் ஏறத்தாழ எல்லா ஆசிரியர்களும் சங்கத்தில் உறுப்பினராக இருப்பார்கள். ஆனால், எங்கள் கல்லூரியில் மற்ற கல்லூரிகளில் உள்ள பிரச்சனைகள் கிடையாதே; அதனால், மக்கள் சங்க உறுப்பினராக ஆகாமல் இருப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் கண்டு பிடித்து வைத்திருப்பார்கள். எங்கள் கல்லூரி பெரியது; சங்க உறுப்பினர்கள் குறைவு என்பதே ஒரு விதியானது எப்போதைக்குமே! போராட்டம் என்று வரும்போது அதுவரை இல்லாத தத்துவங்களும், விவாதங்களும் வரும்.
முதல் முதல் செய்த போராட்டம் என்பதாலோ என்னவோ ஒரு தவறான நடைமுறையை சங்கம் எடுத்தது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கல்லூரிகளில் வேலை நிறுத்தம் செய்வது, தேர்வுகளைப் புறக்கணிப்பது என்பதே அந்த முடிவுகள். நடந்தது என்னவெனில், ஒரு கல்லூரியில் ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்; ஆனால் கல்லூரி நிர்வாகமும், பலகலைக்கழகமும் மற்ற அரசு ஊழியர்களை வைத்து தேர்வுகளை ஜாம் ஜாம் என்று நடத்திவிடுவார்கள். ஏறத்தாழ 15 நாட்களுக்கு மேல் போராட்டம் நடக்கிறது; ஆசிரியர்கள் சிறையிலடைபடுகிறார்கள்; ஆனால் தேர்வுகள் நன்கு நடைபெறுகின்றன. எவ்வித தாக்கமும் இல்லாமல் கல்லூரிகள் நடைபெறுகின்றன.
வழக்கம்போல் எங்கள் கல்லூரியில் விவாதங்களும்…தத்துவங்களும்…
பெண்கள் கல்லூரிகளிலும், எங்கள் கல்லூரியிலும் மட்டுமே ஆசிரியர்கள் தங்கள் கடமை தவறா உணர்வை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தோம். ஆயினும் ஒரு கட்டத்தில் சிலராவது போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென எங்கள் கல்லூரிக் கிளை முடிவெடுத்தது. எல்லா கல்லூரிகளிலும் lock,stock and barrel என்பார்களே அதே போல் ஏறத்தாழ எல்லோருமாகச் சிறையேக எங்கள் கல்லூரியில் ஒரு 15 பேராவது போக வேண்டுமென ஒரு சனிக்கிழமை மாலை முடிவெடுத்தோம். 15 பேர் தயாரானோம்; லிஸ்ட் எல்லாம் கொடுத்தாச்சு.
திங்கட்கிழமை காலை; மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும் வேளையில் கோஷங்கள் ஆரம்பித்தோம். மாணவரிடையே சல சலப்பு. அதற்குள் திட்டப்படி கலெக்டர் அலுவலத்தின் முன்னால் மறியல் போராட்டம். போலீஸ் வந்தது; எங்களைக் கல்லூரிக்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வேனில் ஏற்றி அழைத்துச் சென்றார்கள். நாங்கள் கைதான சேதி கல்லூரிக்குச் சென்றது. மாணவர்கள் தேர்வுத் தளங்களிலிருந்து வெளியே வந்தார்கள்; தேர்வின் வினாத்தாள்கள் கிழிக்கப்பட்டன; பல்கலைக் கழகமே எல்லா தேர்வுகளையும் நிறுத்தியது. போராட்டத்தின் பெரிய திருப்புமுனை நிகழ்ந்தது. போலீஸ் நிலையத்தில் இருந்த எங்களுக்கும் இந்த சேதி வந்தது. ஆனால் ஜெயிலுக்குள் இருந்தவர்களுக்கு முழு விவரமும் தெரியாது.
சிறைக்கு எங்களைக் கூட்டிச் செல்லும் நேரத்தில் எங்கள் பெயர்களையெல்லாம் எழுதி ஒரு லிஸ்ட் தயாரித்தார்கள். அப்போதுதான் தெரியும் நாங்கள் 10 பேர் மட்டுமே போராட்டத்தில் நேரடிப் பங்கு கொண்டிருக்கிறோம் என்று. மீதி அந்த 5 பேர் ஆட்களையே காணோம்! பெயர்களை எழுத ஆரம்பித்த போலீஸ்காரருக்கு அங்கு நன்கு தெரிந்த முகம்: பேரா. சாலமன் பாப்பையா. அவர் பெயரை முதலில் எழுத, அப்படியே தமிழ்த்துறை பேராசிரியர்களின் பெயர்கள் எழுத (5 பேர்), அதன் தொடர்ச்சியாக ஆங்கிலத் துறை பெயர்கள் எழுதி முடிக்க (4 பேர்), அடுத்ததாக விஞ்ஞானத்துறை ஒவ்வொன்றின் பெயராகச் சொல்ல ஆரம்பிக்க, அங்கே பார்த்தால் நான் ஒருவன் மட்டுமே அந்த ‘ஜாதி’யில் இருந்தேன். அதுவே எனக்கு ஒரு ‘மகுடமா’கிப் போச்சு.
பிறகு சிறைக்குச் சென்று, ‘உள்ளே’ போகும் முன் உடல் அடையாளாங்கள் எழுதி - இன்னபிற சடங்குகள் முடித்து உள்ளே போகும்போது மணி 6-க்கு மேல் ஆகியிருந்தது. நாங்கள் எல்லோரும் படுக்கை, பெட்டி என்று சகல வசதிகளோடு சென்றோம். உள்ளே போன பிறகுதான் தெரிந்தது முதலில் கைதானவர்களுக்கு உடன் எடுத்துச் செல்ல எதுவுமே அனுமதிக்கப் படவில்லை என்று. அரைஞாண்கூட கழட்டும்படி -சிறை வழக்கப்படி - சொல்லப்பட்டதாம். நாங்கள் உள்ளே வந்த ‘அழகை’ப் பார்த்து ‘அவனவன் கட்டின வேட்டி சட்டையோடு வந்தான்; இதுகளைப் பாரேன்; ஏதோ பிக்னிக் வந்த ஆளுக மாதிரி’ என்றெல்லாம் எங்கள் காது கேட்க comments வந்தன. நாங்களோ அன்றைய மாலை செய்தித் தாளோடு போயிருந்தோம். எங்கள் கல்லூரி மாணவர்களின் போராட்டக் கோலத்தைப் புகைப்படமாகவும், தேர்வுகள் காலவரையின்றை ஒத்தி வைக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் உத்தரவைப் பற்றிய செய்திகளும் வந்திருந்தன. ‘பத்து பேர் செய்தாலும் இது மாதிரில்ல பண்ணணும்னு’ நாங்க ‘பந்தா’ பண்ணிக்கிட்டோம். செய்தி தெரிந்த பின் கேலி செய்தவர்கள் கூட நல்லபடி மரியாதையாக இருந்தார்கள். உள்ளே உடனே ஒரு கூட்டம்; எங்களுக்குப் பாராட்டு.
உள்ளே மக்கள் எப்படி இருப்பார்களோ என்று எண்ணிக்கொண்டு சென்றோமோ அந்த அளவு உள்ளே மோசம் இல்லை. என்ன, எல்லோரும் பந்தல் போடப்பட்டு அதில் சுத்தமான, ஆனால் வெறுந்தரையில் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். மாலை வெளியிலேயே ஒரு ‘பிடி’ பிடிச்சிட்டு தயாரா போனதால் இரவு சாப்பாடு அங்கே சாப்பிடவில்லை. இரவு ரேடியோ செய்தியிலேயே நாளை ஆசிரியர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், பேச்சு வார்த்தைக்கு அரசு அழைத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. ‘விடுதலை கொண்டுவந்த போராளிகள்’ என்றானோம்., அடுத்த நாள் காலையிலேயே நாங்கள் எல்லோரும் விடுதலை செய்யப்படப் போகிறோம் என்ற சேதி தெரிந்தது. அடுத்த நாள் - விடுதலை நாள்! அதிலும் பாருங்கள் எங்கள் அதிர்ஷ்டத்தை - alphabetical order-ல் வெளியே அனுப்பப்படப் போகிறோம் என்பதுதான் அது. ஆக, ஒரு பெரிய irony என்னவென்றால் கடைசியில் உள்ளே வந்தது நாங்கள்; முதல் ஆட்களாக வெளியே வந்தது நாங்கள். வெறும் 12 மணி நேர தங்கலோடு முதல் ஜெயில் அனுபவம் முடிந்தது - ‘ஜெயில் களி’ அனுபவம்கூட இல்லாமல்!
அடுத்தமுறைதான் உண்மையிலேயே ஜெயில் வாழ்க்கை வாழ்ந்தோம் - வாரக்கணக்கில்.
===================================
*
நேரடிச் சம்பளம், சில வட இந்திய மாநிலங்களில் வழங்கப்பட்ட U.G.C. பரிந்துரை செய்த சம்பள உயர்வு என்ற இரு கோரிக்கைகளும் முந்திய போராட்டத்தால் கிடைத்தது. சந்தோஷத்தில் மிதந்த கல்லூரி ஆசிரியர்களுக்கு அடுத்து ஒரு பேரிடி காத்திருந்தது. என் கல்லூரி நாட்களுக்கு முன்பு, பள்ளிப் படிப்பு 11 வருடமும் (5+6), கல்லூரியில் முதல் இரண்டு வருடம் intermediate course என்றும், பின் இரண்டு வருடப்படிப்பாக degree-யும் இருந்து வந்தன. அதன் பின் 60-களின் ஆரம்பத்தில், கல்லூரியில் மட்டும் ஒரு மாற்றம் - பள்ளியில் அதே 11 ஆண்டுகள்+1(Pre-University class)+3 (degree course) என்றானது. இந்த கணக்கு 78-79-ல் X (10)+ XII(2) என்று பள்ளிப்படிப்பும், கல்லூரிகளில் degree courses(3 years) என்றும் மாறியது. அப்போதெல்லாம் கல்லூரிகளின் பலமே இந்த pre-university (P.U.C.) என்ற வகுப்புகளை வைத்துதான். உதாரணமாக அமெரிக்கன் கல்லூரியிலேயே 40% மாணவ எண்ணிக்கை இந்த வகுப்புகளை வைத்தே இருக்கும். 8 sections with each seciton having 90-100 students; திடீரென இந்த எண்ணிக்கை குறைந்தால் மற்ற பல விழைவுகளோடு, முக்கியமாக ஆசிரியர் எண்ணிக்கை என்ன ஆகும்? கல்லூரி ஆசிரியர்களில் பாதிக்குமேலேயே வெளியே அனுப்பப் படும் நிலை வந்தது.
‘எடுத்தோம்; கவிழ்த்தோம்’ என்ற வகையில் முடிவெடுப்பதுதான் நமது அரசியல்வாதிகளின் நிலைப்பாடாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போதுகூட பாருங்கள் - இந்த ஆண்டு entrnace exam எல்லாம் எழுதி முடித்த பிறகு குட்டையைக் குழப்பினார்கள். XII வகுப்புகள் ஆரம்பித்த பிறகு பாடத்திட்ட மாறுதல்கள் பற்றிய அறிவிப்புகள் வருகின்றன. பொறியியல் கல்லூரி சேர்க்கை முடிந்த பிறகு இன்னும் ஆயிரம் அதிக இடங்கள் கல்லூரிகளுக்கு அளிக்கப்படுகின்றன. சொல்லிக்கொண்டே போகலாம். அன்றும் இதே நிலைதான். எண்ணித் துணிக என்பது மாறி, துணிந்த பின் ‘எண்ண’ ஆரம்பிக்கிறார்கள்.
அன்று பல கல்லூரிகள் P.U.C. வகுப்புகளை மட்டுமே நம்பி கல்லூரிகளை ஆரம்பித்து நடத்தியும் வந்தார்கள். இந்நிலையில் அந்த வகுப்புகள் அப்படியே நீக்கப் படுமானால், கல்லூரிகளுக்கு பெரிய இழப்புகள், ஆசிரியர்களுக்கு வேலை காலி என்ற நிலைகளுக்கு மறுதீர்வு என்ன என்பதே சிந்திக்கப் படவேயில்லை. தங்கள் கழுத்துக்குக் கத்தி என்ற நிலையில் ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தில் குதிப்பது தவிர வேறு வழியின்றி 78-ன் கடைசியிலோ, 79-ன் ஆரம்பத்திலோ மறுபடியும் மறியல், வேலை நிறுத்தம், சிறை நிரப்புதல் என்ற பழைய, பழகிய போராட்ட வழிகளில் செல்ல முடிவெடுத்தோம்.
இம்முறையும் போராட்டம் ஆரம்பித்து சிலர் சிறை செல்ல, நடுவில் ஒரு தொய்வு ஏற்பட்டுவிட்டது. இதனால், முதலில் சிறை சென்ற ஆசிரியர்கள் ஏறத்தாழ 15 நாட்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் எந்த வித தனிச்சலுகைகளும் இல்லாமல் மற்ற கைதிகள் போலவே நடத்தப் பட்டனர். பகலில் மட்டும் வெளிய இருக்க அனுமதி தரப்பட்டு, இரவில் கைதிகள் போலவே ‘செல்’ உள்ளே வைத்துப் பூட்டி விடுவார்களாம். அங்கே உள்ளேயே திறந்த மூத்திரப் பிரை. அந்த நினைவே அவர்களை அருவருப்புப்பட வைத்ததாம். இந்த நிலையில் அந்த நாட்களில் ஒரு நாளில் உள்ளே இருந்த கைதிகள் அவர்களுடைய குறைதீர்க்க போராட்டம் ஒன்று நடத்தி, அதில் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் நடந்த போராட்டத்தில் உள்ளே இருந்த ஆசிரிய நண்பர்கள் தங்களைத்தானே செல்லுக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டார்களாம்.
15 நாள் தனியே இருந்த பிறகே மற்றவர்களும் போராட்டத்தில் இறங்கி, சிறைக்குள் சென்றோம். முதலிலேயே சிறை சென்றவர்கள் இம்முறை அமெரிக்கன் கல்லூரியிலிருந்து நால்வர் - நால்வருமே இளைஞர்கள்; அதில் ஒருவருக்குத் திருமணமாகி சில நாட்களே ஆகியிருந்தது - முதலிலேயே உள்ளே சென்று விட்டார்கள். நாங்கள் உள்ளே வந்த பிறகே அவர்களுக்கு உயிர் வந்ததாம். அவர்கள் ஏற்கெனவே பல நாட்கள் உள்ளேயே இருந்ததாலும், கைதிகள் போலவே நடத்தப்பட்டதாலும் அவர்களுக்கு ‘ஆயுள் கைதிகள்’ என்று நாமகரணம் செய்தோம். பல வருடங்களுக்கு அந்த பெயர் நிலைத்து நின்றது.
சிறை நாட்கள் முதலில் நன்றாகவே இருந்தது. எண்ணிக்கை நிறைய இருந்தமையால் மரத்தடிகளில் பெரிய பந்தல் எங்களுக்காகப் போடப்பட்டது. ‘செல்’களுக்கு முன்னால் இருந்த இந்த பந்தல்கள் வெயிலுக்கு ஓரளவு பாந்தமாக அமைந்தன. ‘செல்’லுக்குள் எங்கள் படுக்கைகள், பைகள் ஒரு மூலையில். இன்னொரு மூலயில் shift போட்டு எங்களைப் பார்க்க வரும் மற்ற ஆசிரிய நண்பர்கள் கொண்டுவரும் பழங்கள், பிஸ்கோத்துகள். சமைத்த உணவுகள் உள்ளே வர தடை. ஆனால், அது பெரிய இழப்பல்ல; ஏனெனில் உள்ளே கொடுக்கப்பட்ட மதிய உணவு நன்றாகவே இருந்தது. உள்ளே வந்த ஓரிரு நாட்களில் சிறைச் சட்டங்களில் எங்கள் தலைவர்கள் சிலர் கைதேர்ந்தவர்களாக ஆனார்கள். தலைக்கு இவ்வளவு அரிசி,காய்கறி, பருப்பு என்ற அளவுகளைத் தெரிந்து கொண்டு, அந்த ‘ரேஷன்களை’ ஜெயிலர்களிடமிருந்து வாங்கி, சமையல் தெரிந்த அல்லது அதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் சிலரின் மேற்பார்வையில், உள்ளேயிருந்த கைதிகளில் சிலரைச் சேர்த்துக்கொண்டு நாங்களே சமையல் செய்தோம். 600 பேருக்கு மேல் அப்போது உள்ளே இருந்தோம்.
காலையில் ஒரு நல்ல காப்பி, (டிபனைப் பற்றி அதிகமாக யாரும் கண்டுகொள்வதில்லை.) மதியச் சாப்பாடு ஒரு கப் சோறு, ஒரு கூட்டு, சாம்பார், ரசம், நல்ல தயிர். ஆனால் இதில் ஒரு பிரச்சனை. குழம்பில் ஆரம்பித்து ரசம் தயிர் என்று வருவதற்குள் பல சமயங்கள் தயிர் காலியாகிவிட்டது. தயிர் பிரியர்களுக்கு இது ஒரு பெரிய பிரச்சனையாகி விட்டது. எப்படி சமாளிக்கலாமென யோசித்து, ஒரு திட்டம் தீட்டினோம். இருவர் இருவராகச் சேர்ந்து கொண்டு ஒரு தட்டில் கப் சோற்றுடன் சாம்பார், ரசம் இரண்டையும் ஒரே சமயத்தில் ஒருவர் வாங்கிக் கொள்வது, அவரின் பார்ட்னர் இன்னொரு பிளேட்டில் இருவரது ரேஷன் தயிரை வாங்கிக் கொள்வது… பிறகென்ன ஒரே தட்டிலிருந்து சாப்பிட்டுக் கொள்வோம். இப்படி சாப்பாட்டுக்காக ஜோடி சேர்ந்து கொண்டவர்களுக்கு -எல்லோரும் இப்படி செய்யவில்லை; சிலரே அப்படி - S.P. என்று பெயர் வைத்துக்கொண்டோம்; அப்டின்னா, ‘சோத்துப் பார்ட்னர்’ என்று பொருள்! பிந்திய ஆண்டுகளில், மூட்டாவை வைத்தே கருத்து வேறுபாடு கொண்டு மாறுபட்ட நிலையில், எதிர் எதிரணியில் நின்று கொண்டிருந்த போதும் ‘அந்தப் பழைய’ நினைவுகளின் தாக்கத்தால்’ மற்றவர்களிடம் இருந்ததை விடவும் என் S.P.-உடன் நான் தோழமையோடிருந்தேன். எல்லாம் ஒன்றாக ஒரே தட்டில் உண்ட பாசம்தான்! மாலையில் அது என்ன combination என்று தெரியாது; ஒரு கடலை உருண்டையும், தேநீரும்… சிலர் கடலை உருண்டைகளுக்கு விசிறிகள்; சிலருக்கு அது பிடிக்கவில்லை. அதனால், தேநீர் குடுத்தவுடன் பயங்கரமாக ‘பண்டமாற்று’ நடக்கும். சிலர் உருண்டைகளைப் பத்திரமாக வைத்திருந்து வெளியில் உள்ள நண்பர்களுக்கு, பார்வையாளர் நேரத்தில் ‘கள்ளக் கடத்தல்’ செய்வதுண்டு.
காலை, இரவு உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எப்படி கொடுப்போம்; அதுதான் மூலையில் பழமும், பிஸ்கட்டும், ரொட்டி வகைகளும் நிறைந்திருக்குமே. ஆனால், உள்ளே வந்த எங்கள் ஆசிரியர்கள் இருவர் - ஒருவர் தமிழ்த்துறை பேரா. தினகரன், இன்னொருவர் ஆங்கிலத்துறை - பேரா. பத்மனாபன் நாயர் - உள்ளே இருந்த அத்தனை நாட்களிலும் ஒரு தடவைகூட உள்ளே வழங்கப்பட்ட உணவு வகையறாக்களைத் தொடவும் இல்லை. ஏறத்தாழ 20 நட்களுக்கும் மேலாக ‘சோறில்லா வாழ்வாகப்’ போய்விட்டது. முதலாமவரின் உணவுப் பழக்கம்: பன் ஒன்றை எடுப்பார்; கையாலேயே இரண்டாகப் பிரித்து, பச்சை வாழைப்பழத்தை நடுவில் வைத்து அவர் செய்யும் ‘banana sandwich’ சிறையிலேயே பிரசித்தமானது. இரண்டாமவரோ ஏதோ சாப்பிடுவார் பழம், பிஸ்கட்டுன்னு; அதைவிட முக்கியம் சிகரெட்தான். இப்போதெல்லாம் அவர் என்னை மாதிரி, இல்லை..இல்லை.. எனக்கு முன்பே அவர் சிகரெட்டை விட்டுவிட்டார்.
சும்மாவா சொன்னர்கள்; இரண்டு கேள்வியை மூன்று ஆசிரியர்களிடம் கொடு; அவர்கள் நான்கு வித பதில் கொடுப்பார்கள் என்று. பகல் நேரங்களில் காலையில் அங்கங்கே அரட்டைக் கும்பல்; எல்லா விதயங்களையும் அலசி ஆராய்ந்து ‘காயப்போடுவதுதான்’! மதியத்தில் ‘உண்ட கழைப்பு’; மாலையில் ஆறு மணிக்கு முதலில் பத்திரிகைச் செய்திகள்,வெளியிலிருந்து வரும் கல்லூரிச் சேதிகள், தலைவர்களிடமிருந்து வரும் செய்திகள், அதைப் பற்றிய விவாதங்கள் என்று இருக்கும். சில நாட்களில் இந்த விவாதங்களே நீண்டு விட அதை முடித்து விட்டு சாப்பாட்டுக்குத் தயாராக வேண்டியதுதான். மற்ற நாட்களில் ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சி இருக்கும். டி.எம். செளந்திரராஜன் குரலில் பாட ஒரு ஆசிரியர் - அவரது ‘புல்லாங்குழல் தந்த மூங்கில்களே’ என்னும் கிருஷ்ணன் மேல் பாடும் தனிப்பாடலுக்கு நான் உட்பட பலர் விசிறிகள்; சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளை அரங்கேற்றினார்கள்; பட்டிமன்றம் நடந்தேறும். பேரா.சாலமன் பாப்பையாவும் , மற்றொரு பேராசிரியரும் பட்டி மன்றம் நடத்தினார்கள். பாப்பையா வழக்கம்போல் பேசுவார் என நினைத்து மற்ற ஆசிரியர்கள் ஜோக் வெடிகளாக வெடிக்க, பாப்பையா தன் ஸ்டைலை முழுவதுமாக மாற்றி மிக மிக ஆழமான, அர்த்தமுள்ள சமூகப்பிரச்சனைகளைத் தொட்ட பேச்சு நன்றாக இருந்தது. அதன்பின் நான் பலதடவை அவரிடம் அந்த ‘ஜெயில் பேச்சு’ போல எதுவும் அமையவில்லை என்று கூறியதுண்டு.
Biological clock பற்றித் தெரியும்தானே. Personal habits என்று வைத்துக் கொள்வோமே; இதை இதை இந்த நேரத்தில் செய்வது என்று ஒரு தனி ஒழுக்கம் வைத்திருப்போமே, அதை முழுவதுமாக மாற்றிக்கொள்ள வேண்டியதாயிற்று. இருந்ததோ மிகக்குறைந்த கழிப்பறைகள்; எங்களுக்காகச் சிரமம் எடுத்து ஓரளவு சுத்தமாக வைத்திருந்தார்கள். என்ன, காலை வேளைகளில் எப்போதும் ‘ஹவுஸ் ஃபுல்’தான். கலயாண வீட்டில் பந்தியில் இடம் பிடிக்க பாவம், அப்பதான் சாப்பிட உட்கார்ந்தவர்கள் முன்னால் நின்று கொண்டு, அவர்களையும் அவர்கள் இலையையும் பாத்துக்கிட்டே இருந்து அவர்களைச் சாப்பிடவிடாமல் ‘நொம்பலப் படுத்துவார்களே’ அது மாதிரி இங்கேயும் இருக்கும். ஆனால் இங்கு கழிப்பறைக் கதவுகள் எல்லாமே அரைக் கதவுகள்தான். அதனால் அந்த ‘பந்தி ஸ்டைல்’ இங்கே நடக்காது. புறமுதுகு காட்டிதான் நிக்கணும். உள்ளே இருப்பவர்களுக்கு அது ஒன்றுதான் வசதி. பல விஞ்ஞான ரீதியான experimentations and executions மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. ‘காலைக் கடன்களுக்கெல்லாம் காப்பியே பிரதானம்’ என்ற நிலையை மாற்றிக்கொள்வது; காலைக் கடனென்றால் அது காலையில்தான் இருக்கவேண்டுமா என்ன, கூட்டம் குறைவான மதியமாகவும் இருக்கலாமே என்ற மேற்சொன்ன மாதிரி biological clock-யை வேறுவிதமாக set செய்து கொள்வது; அல்லது அதிகாலை (?) இரண்டு, மூணு மணிக்கு மாற்றிக்கொள்வது; - இப்படியாக அவரவர் ‘சக்தி’க்கு ஏற்றவாறு internal & external adjustments செய்து கொண்டோம்; வேற வழி?
உள்ளே இருந்த மற்ற கைதிகளுக்கு முதலில் எங்களைப் பார்க்கக் கொஞ்சம் வேடிக்கையாக இருந்திருக்கும் போல. கொஞ்சம் தள்ளியே இருந்தார்கள். நாளாவட்டத்தில் கொஞ்சம் நெருங்கினோம். எனக்கு இரு நண்பர்கள் கிடைத்தார்கள். எல்லாம் சின்ன வயசுப் பசங்கள். பங்காளிச் சண்டைகள் அது இதுன்னு சொன்னார்கள். அதில் ஒருவனுக்கு ‘தீட்சை’ கொடுத்தேன். வெளியே போனதும், வெளியே இருக்கும் பகையாளியை ‘மேலே’ அனுப்புவதுதான் அவன் குறிக்கோளாக இருந்தது. அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது பற்றிச் சொல்லி அவன் அப்படி செய்ய மாட்டேன் என்று என்னிடம் உறுதிமொழி கொடுத்தான். ஒரு வித்தியாசமான நடையில் பாவனையில் இருந்த இன்னும் இரு இளைஞர்களைப் பற்றிக் கேட்டேன். அவர்கள் இருவருமே ‘கோழிகள்’ என்றார்கள். அப்டின்னா என்னன்னா, வேறு யாரோ செய்த குற்றத்தைத் தான் செய்ததாகச் சொல்லி வலிய தண்டனையை ஏற்றுக்கொள்ளும் ஆட்களாம்; அவர்கள் குடும்பம் அவர்களது தண்டனைக் காலத்தில் நல்ல படியாக கவனித்துக் கொள்ளப் படுமாம்; அதேபோல் இவர்கள் வெளியே போனவுடன் ‘நல்ல′ வேலையோ, பொறுப்போ கிடைக்குமாம். என்ன குற்றம்னா ‘கள்ளக் கடத்தல்’ கேசுகள். நம்ம ஊர்ல இதுக்குத்தான் ‘பினாமி’ என்று கணக்கு ஏதும் கிடையாது போலும்! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பினாமியே போற்றி!!
அந்தக் கைதிகளின் கூட்டத்தில் இரண்டே இரண்டு பேர் மட்டும் தனித்துத் தெரிந்தனர். நம்ம ‘தோஸ்துகள்’ மூலம் அவர்களைப் பற்றிய விவரங்கள் சேகரித்தேன். ஒருவர் வயதானவர்; 60-க்கு மேலிருக்கும். வட இந்தியர்; சேட் என்று எல்லாரும் கூப்பிடுவார்கள்; எப்போதும் வெள்ளை வெளேரென்று குர்தா, பைஜாமாவில் இருப்பார். ஒரு மரத்தடியில் ஒரு folding chair இருக்கும் அவருக்காகவே; அதுதான் அவரது அரியணை; பக்கத்தில் இன்னும் இரண்டு கைதிகள் இருப்பார்கள். இவருக்குத் தனியாகச் சமைப்பதும், மற்ற குற்றேவல்கள் செய்வதுமே அவர்களுக்கு உள்ளே அளிக்கப் பட்டிருந்த வேலைகள். எல்லாம் ஒரு extra-cosnstituional power centres தான்! பண மோசடி வழக்கில் உள்ளே வந்த ஆளாம். அடுத்த கேசு: ஒரு ‘தாதா’; ஒரு அரசியல்வாதியின் பெயர் சொன்னார்கள்; அவருடைய அடியாளாம். இவனோடு எப்போதும் இன்னும் இருவர் கூடவே அலைவார்கள்; அல்லக்கைகளாம். இந்த மூவரையும் யாரும் கண்டு கொள்வதில்லை.
இந்த நால்வரைத் தவிர மற்ற கைதிகள் எல்லோருமே வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள்தான். அப்படியென்றால் நம்ம ஊர்ல, நாட்ல, பணக்காரர்கள் எல்லோரும் தவறே செய்யாத நல்லவர்களாகவும், ஏழைகளில் பலருமே கெட்டவர்களாகவும் இருக்கிறார்களோ? அந்தத் தோற்றம்தான் உள்ளே இருந்தது. ஜாதி இரண்டொழிய வேறில்லை….. அது சரிதான்; ஆனால், ஆண், பெண் என்ற வேறுபாடு அவ்வைக் கிழவி காலத்தில் சரி; இப்போ காசு உள்ளவன்; இல்லாதவன் - haves and have-nots தான் அந்த இரு சாதிகளும்தான். நமது நீதியும், நீதியரசர்களும், வழக்குரைஞர்களும் யாருடைய சட்டைப்பைகளில் இருக்கிறார்கள் என்று யாருக்குத்தான் தெரியாது. நம் ஊர் சட்டங்களும், நீதித்துறையும் எவ்வளவு கேவலமானவைகள் என்றுதான் எனக்குத் தோன்றியது. அடுத்த முறை கண்ணைக் கட்டிக் கொண்டிருக்கும் அந்த நீதி தேவதையின் கைகளில் இருக்கும் தராசை நன்றாகப் பார்க்க வேண்டும்; நிச்சயமாக ஏதோ ஒரு ‘கோல்மால்’ அதில் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் எப்படி ஏழைகள் மட்டுமே, அதிலும் ‘பாவப்பட்ட’ஏழைகள் மட்டுமே ‘உள்ளே’ இருக்கின்றனர்? உள்ளே இருக்கும் ஒரே ஒரு பணக்காரனும் ஏக தடபுடலுடன் வசதியாகவே இருந்தான்; அடிதடி தாதா பற்றி சொல்லவே வேண்டாம்! அடிப்படைக் கோளாறுகளுடன் நாம் இயங்கி வருகிறோம் என்பது மட்டும் தெளிவாச்சி. நீதிக்கு முன் எல்லோரும் சமம்; சட்டம் தன் வேலையைச் செய்யும்; - இப்படிதான் எத்தனை, எத்தனை வார்த்தை ஜாலங்கள். நம்மை நாமே முட்டாளாக்கிக்கொண்டு …’இன்னும் எத்தனை காலம்தான் ஏமா(ற்)றுவாய் இந்த நாட்டிலே…’
நாட்கள் கழிந்தன; பேச்சுகள் சுற்றுக்குபின் சுற்றாக சுற்றிக்கொண்டிருக்க, நாங்கள் ஒருவருக்கொருவர் தைரியமூட்டிக்கொள்ளும் நிலை. வீட்டிலிருந்து யாரையும் பார்க்க வர வேண்டாமென சொல்லியிருந்தேன் - என்ன சில நாட்கள்தானே என்றநினைப்பில். இப்போதோ ஏறத்தாழ இருபது நாட்கள் ஓடிவிட்டன. நண்பர்களிடம் சொல்லியனுப்பினேன். மனைவி இரண்டு மகள்களோடு வந்தார்கள். சில நிமிஷங்கள். சின்னவளுக்கு ஒரு வயதும், சில மாதங்களும். தூக்கி வைத்துக்கொள்ள ஆசை. எப்படி முடியும். குழந்தைகள் அழுகையோடு விடைபெற்றார்கள். அகநானூரில் ஒரு பாடல் வருமே: கிணற்றுக்குள் தண்ணீர் மேலே மிதக்கும் பாசி, மேலிருந்து தண்ணீர் மொள்ள வரும் குடம் பட்டவுடன் விலகி, வாளி மேலே போனவுடன் மீண்டும் வந்து மூடிக்கொள்ளும் - தலைவன் தொட்டதும் பசலை விலகி, அவன் பிரிந்ததும் மீண்டும் வரும் பசலை போல். அந்தக் கதைதான். குடும்பத்தினரைப் பார்த்த பிறகு ஜெயில் ஜெயிலாகவே ஆனது. பற்றாக்குறைக்கு அடுத்த நாள் பார்க்க வந்த குடும்ப நண்பர்கள் ‘உங்களைப் பார்த்துவிட்டு வந்தவுடன் சின்னவளுக்கு இரவெல்லாம் காய்ச்சல்’ என்று சொன்னார்கள். அதிலிருந்து ஐந்தாறு நாட்கள் கழித்து விடுதலையான நாள் வரை மருந்தில்லாத மனக்காய்ச்சல் எனக்கு.
அதற்குப் பிறகும் சிறை வாசம் வந்தன. மொத்தம் ஏறத்தாழ 10 /11 முறை சிறை சென்றதாக ஒரு நினைப்பு. ஒரு முறைதான் மிக நீண்ட வாசமாயிற்று.
No comments:
Post a Comment