சுல்தானுக்கு மட்டும் ... அல்ல
சுல்தான் அவர்களின் "பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும்" என்ற பதிவொன்றின் பின்னூட்டப் பகுதியில் நான் கேட்ட சில கேள்விகளுக்காக மூன்று தனிப் பதிவுகள் மூலம் மிகவும் பொறுமையாகவும், விளக்கமாகவும், தன்மையாகவும் பதிலளித்துள்ளார். காலம் மிகவும் தாமதித்து அவரது பதில்களின் மேல் எழும் என் கேள்விகளை இப்பதிவில் இட்டுள்ளேன். அவர் ஏற்கென்வே பதிலாக எழுதிய மூன்று பதிவுகளின் தொடுப்பு இவை:
1.தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1)
2.தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2)
3.தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி
முதல் கேள்வி:
//வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இது உங்கள் (சுல்தான்) கருத்து.
எனது கேள்வி:
ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."
உங்களது வார்த்தைகளுக்கும், இந்த மேற்கோளுக்கும் உள்ள வித்தியாசம் ஏன்?//
சுல்தானின் பதில்: - //முஸ்லீம்கள் தங்களிடையே ஏற்படும் எல்லா பிணக்குகளுக்கும் பூசல்களுக்கும் தீர்வை, அடிப்படையான குர்ஆனைக் கொண்டே பெறச் சொல்கின்றனர். அவ்வாறு தீர்ப்பளிக்காவிட்டால் மக்கள் சிதறுண்டு விடுவார்கள். அதனால் அவ்வாறு தீர்ப்பளிக்காதவர்கள் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் (நொறுக்கப்படுவார்கள்) என்று எச்சரிக்கிறார்கள்.//
ஏற்கெனவே சொன்னது போலவே இது இறைவன் - மனிதர்கள் நடுவில் உள்ள வன்முறைதானே? அவர்கள் அல்லாவை நம்புபவர்களோ, இல்லை, மற்றையோரோ யாராயிருப்பினும், அது இந்த பிறவிக்குரியதாயினும் இல்லை மறுமை வாழ்விலாயினும் இந்த வசனத்தில் உள்ள வன்முறையைப் பற்றிதான் நான் பேசினேன். அதுவும் நீங்கள் சொல்லிய "வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை" என்ற கூற்றுக்கு முழுமையாக எதிராக இருப்பது பற்றித்தான் என் கேள்வி..
இரண்டாம் கேள்வி:
////"அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்." இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.//
இதற்குரிய தங்கள் விளக்கம் எனக்குப் பொருத்தமானதாய் தோன்றவில்லை. "பல கிரந்தங்களில் நேர்வழியைத் தேடும் ஒருவனால் வழி தவறத்தான் முடியுமே ஒழிய..."..சரி...மனிதன் தேடும்போது நீங்கள் சொல்வது போலவே வழிதவறுவான என்று சொன்னால் பிரிந்துகொள்ள முடியும்; ஆனால் கடவுளே "...(வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்" என்பது (god himself would MISLEAD some one who tries to find his own way to god) சரியாகவா இருக்கிறது.
இதற்குப் பதிலாகத்தான் "my Q is based on the VIOLENCE in the words. whether it is aimed at fidels or infidels it is a very violent statement - a divine violence towards human beings.
a god need and should not bother whether a man reaches him through path A or B ... man should reach him, that is all what it should be. " என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன்.
மூன்றாம் கேள்வி:
3. //"மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது"
இந்தக் கூற்று எனக்குத் தவறாகத்தெரிகிறதே. பொதுவாக பகுத்தறிவு சொல்கின்றது என்று எதை ஒன்றையும் குறிப்பிடுவது தவறாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன். ஆளாளுக்கு மாறுபடக்கூடிய விஷயமாக பார்க்கிறேன்.//
மிக அழகாக பல உதாரணங்கள் கொடுத்துள்ளீர்கள். அண்ட சராசரத்தையும், நம் உடல் உறுப்புகளின் தொழில் நேர்த்தி பற்றியும் எழுதியுள்ளீர்கள். இத்தனை உதாரணங்கள் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன பூவை எடுத்து அதன் அழகை, மணத்தை, மென்மையை, அமைப்பின் நேர்த்தியைப் பார்த்தாலே போதும்; நீங்கள் சொன்ன பிரமிப்பு ஏற்பட்டுவிடும்.
இத்தகைய பிரமிப்புகளைப் பார்க்கும் கடவுள் நம்பிக்கையளர் உடனே, ஆஹா! என்னே கடவுளின் "திறமை" என்று சொல்வது இயல்பே! ஆனால் என்னைப் போன்ற கடவுள் மறுப்பாளனுக்கு நிறைய வேறு கேள்விகள் பதில்கள். பதில்கள் இல்லாவிட்டாலும் கேள்விகள் எங்களுக்கு நிறையவே உண்டு. நான் அடிக்கடி சொல்வது - இத்தகையக் பிரமிப்புகளால் எழும் கேள்விகளுக்கு அடுத்து நீங்களும் உங்களைப் போன்ற நம்பிக்கையாளர்களும் ஒரு முற்றுப் புள்ளியோ, அல்லது ஒரு ஆச்சரியக் குறியோ இடுவீர்கள்; என்னைப் போன்றோர் ஒரு கேள்விக் குறி இடுகிறோம்.
சான்றாக, "பத்து நிறங்களில் பல கோலி குண்டுகளை எடுத்து, ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு எண்ணாக 1 முதல் 10 வரை இலக்கமிட்டு, ஒரு பையினுள் போட்டு, கண்ணை மூடிக்கொண்டு, ஒழுங்கான வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக 1 முதல் 10 வரை எடுப்பதற்கு உண்டான வாய்ப்பு, நிகழ்தகவு (Probability) படி, சுமார் இரண்டரை கோடி தடவைகளில் ஒன்று என்று சொல்கிறார்கள்" என்று கூறியுள்ளீர்கள்.
இது பரிணாமக் கொள்கைக்கு எதிராக, D.N.A.- வில் ஏற்படும் சிறு சிறு வேதியல் மாற்றங்களே நிறமிகளின் மாற்றங்களுக்குக்( mutations) காரணிகளாக இருந்து, பரிணாம வளர்ச்சி நடந்தது என்பதற்கு எதிராகச் சொல்லும் விவாதம் என்பது உங்களுக்குத் தெரிந்தேயிருக்கும். இல்லையா? நீங்கள் சொல்வதுபோல நடக்க முடியாது அல்லது இரண்டரை கோடி தடவைகளில் நடக்கக் கூடும் என்று சொல்லும் அந்த விஷயம், சில ஆயிரம் தடவைகளிலேயே எப்படி நடக்க முடியும்; நடந்திருக்க வேண்டும் என்று அறிவியல் பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் சிம்ஸன் என்பவர் மிக அழகாக Simpson alphabet analogy என்ற விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதை இங்கு நான் விளக்கிக் கொண்டிருப்பதை விடவும் எந்த நல்ல பரிணாமப் புத்தகத்திலும் கொடுக்கப் பட்டிருக்கக்கூடிய இதை வாசித்துத் தெரிந்து கொள்வது நலமாயிருக்கும்.
பிரமிப்புகளோடு நில்லாது அதை மேலும் மேலும் கேள்விக்குறியதாக்குவதே அறிவியலின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம்.
நாலாவது கேள்வி:
4) "//"அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்."
இக்கூற்றும் சரியாக எனக்குத் தோன்றவில்லை. பார்க்குமிடமெல்லாம் வேற்றுமைகள் நிறைந்த உலகமாகத்தானே இருக்கிறது. படைப்பினில் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? இல்லையே!//"
கடவுள் நம்மையெல்லாம் பேதமின்றி எந்த வித்தியாசமில்லாமல்தான் பார்ப்பார் என்று நீங்கள் கூறுவதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான் கேட்டது படைத்தவன் பல வேற்றுமைகளோடுதானே நம்மைப் படைத்திருக்கிறான் என்பதே.
ஐந்தாம் கேள்வி:
5)//"பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும்"
பின் எதற்கு 6 நாட்கள் படைப்பிற்கு - அதுவும் ஒவ்வொன்றாய்? பின் கடவுள் ரெஸ்ட் எடுத்ததாகவும் உள்ளதே!//
இதற்கு உங்கள் பதில்: ஏன் அவ்வாறு செய்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்...
இதைத்தான் என் பதிவில் 'எல்லாம் அவன் திருவிளையாடல்.." என்பதுபோன்ற ஒரு பதிலைத்தவிர வேறு ஏதாவது இருந்தால் கூறுங்கள் என்று கூறியுள்ளேன். பலப்பல அறிவியல் உண்மைகளை எல்லாம் கடவுள் அன்றே குரானிலோ, பைபிளிலோ, வேதங்களிலோ தந்துள்ளான் என்று அடிக்கடி கூறும் நம்பிக்கையாளர்கள் இது போன்ற கேள்விகளுக்குச் சொல்லும் இப்பதில் எனக்கு ஒப்பவில்லை. இன்றைக்குக் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை எங்கள் வேதத்தில் / பைபிளில் / குரானில் ஏற்கெனவே அன்றே சொல்லப்பட்டு விட்டன என்று ஒரு பக்கம் சொல்லுகிறீர்கள். அப்படியெல்லாம் சொல்லப்பட்டிருந்தால் இன்னும் முழுமையாகவே "எல்லாமே" சொல்லப் பட்டிருக்கலாமே என்றுதான் எனக்குக் கேள்வி எழுகிறது. இன்றைக்கு இன்னும் விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருக்கும் alternative energy, semiconductor, cloning, stem cell therapy, gene therapy - என்பது போன்ற விஷயங்களை பேசாமல் முழுவதுமாகக் கொடுத்திருக்க வேண்டியதுதானே என்று தான் தோன்றுகிறது. லேசு பாசாக ஏதாவது ஒரு விஷயம் இன்றைய விஞ்ஞானத்துக்குத் தொடர்புள்ளதாக வேதப் புத்தகங்களில் இருந்துவிட்டால் அறைகூவும் எல்லா மத நம்பிக்கையாளர்களுமே, இதுபோல் uneasy questions என்று வந்துவிட்டால் இறைவனின் 'திருவிளையாடல்' இது என்று கூறுவது என்னைப் பொறுத்தவரை ஒரு escapism தான்.
மேற்கண்ட கருத்து தொடர்பான என் விவாதங்களை எனது 59-ம் பதிவில் கிறித்துவத்திற்கு எதிராக நான் எழுப்பியுள்ள கேள்விகளில் ஐந்தாவது கேள்வியாக இதை வைத்து உட்கேள்விகளாகவும் சிலவற்றை வைத்துள்ளேன். அதில் கூறியிருப்பது: "இவை எல்லாமே கடவுளின் "திருவிளையாடல்" என்று மட்டும் கூறிவிடக்கூடாது." அந்தக் கேள்விகளை அங்கே வந்து கொஞ்சம் வாசித்துக் கொள்ளுங்களேன்.
ஆறாம் கேள்வி:
6)(அ)//"தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால்..."
இதையும் கூடவா கட்டளையாகக் கடவுள் கொடுப்பார்// ஒரு உம்மைத்தொகையைச் சேர்த்துள்ளேன் அழுத்தத்திற்காக ..
இதற்கு நீங்கள் கொடுக்கும் காரணம் எனக்குக் கொஞ்சமும் பொருத்தமாகத் தெரியவில்லை. அப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமை காண்பிக்கக் கடவுள் நினைத்திருந்தால் அதை அவரே செய்திருக்க வேண்டியதுதானே - நீங்கள் சொல்லும் விலங்கினங்களில் இருப்பது போலவே !
அதோடு சிறுநீர் கழிப்பதைப் பற்றிக்கூட நபிகள் மூலமாகக் கடவுள் நிபந்தனைகள் விதித்துள்ளார் என்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உட்கார்ந்துதான் சிறு நீர் கழிக்க வேண்டும் என்பதுவும், ஒரே ஒரு முறை நபிகள் நின்று கொண்டே சிறுநீர் கழித்து ஒரு exceptional clause ஏற்படுத்தியதையும் கேள்விப்பட்டதுண்டு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அன்றைய அராபியர் அணிந்திருந்த லூசான ஆடை, அங்கே திறந்த வெளியில் அடிக்கக் கூடிய வலுவான காற்று - இவையெல்லாமே உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதை புத்திசாலித்தனமான ஒரு விஷயமாக ஆக்கியிருக்கும். ஆனால் இன்று இருக்கும் public water closet-களில் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க அமைக்கப் பட்டிருக்கும் கழிப்பறைகளில், நாம் அணியும் இறுக்கமான உள்ளாடையும், அதற்கு மேலணியும் ஜீன்ஸும் நம்மை உட்கார அனுமதிக்குமா என்று யோசியுங்கள். இப்படி அந்தக் காலத்துக்குப் பொருந்திய அப்போதைய நடைமுறைகளைக் காலாகாலத்துக்கும் பொருத்தமானதாகவும் எங்கள் புத்தகங்களில் சொல்லப்பட்டு விட்டதால் அதைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதும் முறையா என்ற கேள்வி எனக்கு. அதோடு ஏதோ ஒரு காலகட்டத்துக்கும், ஒரு நாட்டின் அப்போதைய பழக்க வழக்கங்களுக்கும் சரியாக இருந்த விஷயங்களை பொதுவாக எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஆக்குவதாலுமே no religion is universal என்ற விவாதத்தை என் பதிவு 68; பத்தி: 9-ல் வைத்துள்ளேன்.
இதை ஒட்டியே //...அன்று நபி சொன்னது எல்லாருக்கும் எல்லா காலத்துக்கும் பொதுவான விஷயங்களாக இல்லை, இருக்கவும் முடியாது என்பது தெளிவாகிறதல்லவா? // - என்று என் பதிவு 67:பத்திகள் 16 & 17 -ல் சொன்னேன். அதையும் கொஞ்சம் பார்த்து விடுங்கள். அதோடு இக்காரணம் பற்றியே அன்றைக்குப் பொருந்தி வந்திருக்கக் கூடிய பர்தா, தாடி, சிறுநீர் கழிக்கும் முறை, பலதாரச் சட்டம், ஹஜ் யாத்திரை, அடிமை முறை, அடிமைகளை நடத்தவேண்டிய முறை என்று நீண்ட பட்டியல் தரக்கூடும். இவைகள் இன்றும் என்றும் எப்போதைக்கும், எல்லோருக்கும் பொருந்திய ஒன்று என்பதில் எனக்கு ஒப்பில்லை.
ஏழாம் கேள்வி (அ):
7அ). "புஷ்ஷின் கருத்திற்கும், .. இஸ்லாமியக் கருத்திற்கும் .. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?//
சுல்தான், நல்ல விவாதம் கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆனாலும் நீங்கள் கவனிக்கத் தவறிய ஒன்று: நீங்கள் கொடுத்த நான்கு விவாதங்களில் ஆசிரியர், திருடன் இரண்டை மட்டும் கொள்வோமே. ஆசிரியர் சொல்வதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது - எல்லோருமே - முழு மனித வர்க்கமே - நீங்கள் சொல்லியுள்ளபடியே ஆசிரியரது வார்த்தையை ஒத்துக் கொள்வோம்; அதே போல திருடனனின் கருத்தை எல்லோரும் ஒதுக்கி விடுவோம் தவறென்று. no second opinions on these two. no cotroversies in them. ஆனால் இஸ்லாமியக் கருத்து அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்குச் சரியாகப் படுவது போல் எல்லோருக்குமா இருக்கும்? இல்லையே! "இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது." - இது எப்படி மற்றைய மதத்தவருக்கு சரியான கருத்தாக இருக்கும்? இது உங்கள் நம்பிக்கை; ஒரு கிறித்துவனுக்கு " நானே வழியும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை" என்பது சரியாக இருக்காதா? என் வழிக்கு வா என்பதுகூட பரவாயில்லை; வராவிட்டால் ... (நொறுக்க) தண்டிக்கப் படுவாய் என்பது..? இந்த இரு வேறுபாடுகளால்தான் புஷ்ஷின் கூற்றையும், குரானின் வார்த்தைகளையும் ஒத்து நோக்குகிறேன்; இரண்டுமே தவறென்கிறேன்.
ஏழாம் கேள்வி (ஆ):
//மனிதனை விடவும் பலகோடி மடங்கு ரோஷமானவன். "அல்லாஹ்//
- Man created gods in his own image என்றும், If triangles have gods, they will be triangles என்றும் வாசித்த இரு மேற்கோள்கள்தான் நினைவுக்கு வருகின்றன. மனிதனுக்குக் கடவுளை இன்னொரு (பெரீய்ய்ய) மனிதனாகவேதான் பார்க்க முடியும் என்பதே இந்த மேற்கோள்களின் பொருள். நீங்கள் சொல்லும் 'ரோஷக்காரன்" என்பது அதைத்தான் நினைவு படுத்துகிறது!
// "அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது.// அப்படிக் கூறும் "ஒருவன்" இறைவனாக இருக்க மாட்டான்; இருக்க முடியாது. அப்படித்தான் இருப்பானென்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது என்பது என் கருத்து. (இப்படி சொல்வது ஒவ்வொரு நம்பிக்கையாளனுக்கும் வருத்தத்தைத் தரும் என்பது தெரிந்தும் என் கருத்தைக் கூற வேண்டியதுள்ளது...) அதோடு இந்தக் கூற்றில் உள்ள வன்மத்துக்கு, வன்முறைக்கு 'ரோஷம்' என்ற excuse ஒரு நொண்டிச் சாக்கு என்பதாகவே தோன்றுகிறது.
மிகவும் பொறுமையாக, விளக்கமாக அதைவிடவும் எதிர்க் கேள்விகளால் கோபம் கொள்ளாமல் தன்மையாகப் பதில் சொன்ன சுல்தான் அவர்களுக்கு மீண்டும் என் நன்றியும் பாராட்டுக்களும். எதிர்க் கருத்துக்கள் வைப்பதாலேயே கேள்வி கேட்பவரை விரோதியாகப் பார்க்காததற்கு நன்றி.
உங்களுக்கு விருப்பமானால் இன்னும் தொடர்வோம்.
தருமி ஐயா,நாலாவது கேள்வி பல முறை மனசுல வந்துப் போகும். மனிதருக்குள் ஏன் இவ்வளவு வேற்றுமைகள், ஏற்ற தாழ்வுகள
ReplyDeleteஅப்படி ஏன் படைத்தான்? படைத்தவன் அவ்வளவு சாடிஸ்டா என்று :-) இந்து மதத்தில் கர்மம் விதி என்று அதன் மேல் பழிப் போட்டு விடுவார்கள். ஆனால் போன ஜென்மத்தில் நான் செய்த கொடுமைக்களுக்கு இந்த ஜென்மத்தில்
அனுபவிக்கிறேன் என்றால், போன ஜென்மத்தில் எனக்கு அந்த மோசமான குணம் யார் கொடுத்தது? இப்படி எல்லாம் யோசிச்சி கடைசியே சாமியாவது, பூதமாவது என்று தோன்றிவிடுகிறது. நம் எண்ணமும், செயலுமே வாழ்க்கையை நிர்ணயிக்கிறது
என்று முடிவுக்கு வந்தாச்சு.
தருமி, அச்சத்தால் ஆண்டவனை நாடுதல் நன்றன்று. வணங்கினால்தான் வாழ்வு என்று இருந்தால் இறைவனுக்கும் ஜமீந்தாருக்கும் வேறுபாடு இல்லாமல் போய் விடும். இன்றைய நிலையில் என்னைப் பொறுத்த வரைக்கும் மதங்கள் மனிதனை வேறுபடுத்திக்கொண்டிருக்கின்றன என்றே நம்புகிறேன். மதங்களை மீறிய இறையுணர்வு இருந்தால் மட்டுமே இறைநம்பிக்கையாளர்களிடையே ஒற்றுமை ஏற்படும். அதுவரையில் கம்பெனி விளம்பரங்கள் போல...இங்கு வந்தால் அது கிடைக்கும். அங்கு வந்தால் இது கிடைக்கும். இங்கேயே இருந்தால் இதெல்லாம் கிடைக்கும் என்றுதான் தொடரும்.
ReplyDeleteஒவ்வொரு மதத்திற்கும் ஒரு காலம். அது சுழற்றி. மாறி மாறிப் போய்க் கொண்டேயிருக்கும். எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் பெண்ணை அல்லது பெண் தெய்வத்தை முன்னிலைப் படுத்தி புதிய மதம் தோன்றும் என்று. எப்பொழுது என்று சொல்ல முடியவில்லை. ஆனால் தோன்றும் என்று தோன்றுகிறது. classified மதமாகத்தான் அதுவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. சாதீய வேறுபாடு போல மதவேறுபாடும் சமூகத்தில் புரையோடிக்கொண்டிருப்பது வருத்தத்தையளிக்கிறது.
எனது பின்னூட்டம் இந்தப் பதிவிற்குத் தொடர்பானதா என்று தெரியவில்லை. ஆனால் அது என் கருத்து. அதை இங்கே சொல்ல வேண்டும் என்று தோன்றியது. சொல்லி விட்டேன்.
உஷா,
ReplyDelete//நம் எண்ணமும், செயலுமே வாழ்க்கையை நிர்ணயிக்கிறது
என்று முடிவுக்கு வந்தாச்சு.//
நல்ல தீர்க்கமான முடிவு. இந்த முடிவுக்கு வருவது எந்த அளவு உங்களுக்கு எளிமையாக / கடினமாக இருந்தது என்று தெரிய ஆசை. ஏனெனில் வளர்க்கப்பட்ட வழியில் இருந்து வெளியே வருவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு அனுபவபூர்வமாகத் தெரியும்.
ஆனாலும் ஆபிரகாமிய மதங்களை விட, இந்த பூர்வ ஜன்ம தத்துவத்தில் கொஞ்சமாவது லாஜிக் இருக்கு. ஆனால் அதிலேயும் //போன ஜென்மத்தில் எனக்கு அந்த மோசமான குணம் யார் கொடுத்தது?// - இது அந்த லாஜிக்குக்கு அடி கொடுத்துறுது...
ஜிரா,
ReplyDelete//அதுவரையில் கம்பெனி விளம்பரங்கள் போல...இங்கு வந்தால் அது கிடைக்கும். அங்கு வந்தால் ...//
அதிலும் இப்படி கூவி கூவி விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு கடையிலும் வித விதமான வியாபாரம்; விள்ம்பரம் !!
அதுசரி, அந்தப் புதிய வரப்போகும் மதம் பற்றி சீரியஸாகவா சொல்கிறீர்கள்? இல்லை.. அப்படி ஐடியா ஏதும் கைவசம் உண்டா? அப்படியாயின், முதல் பார்ட்னராக என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.. ப்ளீஸ் :)
ஜிரா,
ReplyDeleteநீங்கள் சீரியஸாக எழுதியதை தடம் மாற்றி விட்டேனோ?
//classified மதமாகத்தான் அதுவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. //
இதில் classified மதம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
இவ்வளவு மேற்கோள் இணைப்புகளுடனும் விவரத்துடனும் பொறுமையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்குரிய பொறுமை!. ஆனால், என்ன செய்வது, என்னைப் பொறுத்தமட்டில், தேவையில்லாத பொறுமை. அது வேறு விஷயம்.
ReplyDelete//ஆனாலும் ஆபிரகாமிய மதங்களை விட, இந்த பூர்வ ஜன்ம தத்துவத்தில் கொஞ்சமாவது லாஜிக் இருக்கு. ஆனால் அதிலேயும் //போன ஜென்மத்தில் எனக்கு அந்த மோசமான குணம் யார் கொடுத்தது?// - இது அந்த லாஜிக்குக்கு அடி கொடுத்துறுது...//
இந்த விஷயத்தை மட்டும் நான் உபன்யாசம் கேட்ட மட்டில் விளக்கிவிட முயல்கிறேன்.
நமது வாழ்க்கை முழுக்க முழுக்க சாய்ஸ்களால் நிரம்பியது. அர்ச்சுனன் போர்க்களத்தில் நிற்கும்போது அவனுக்கு பிறக்கும் எக்சிஸ்டென்ஷியல் கேள்வி நம் வாழ்க்கை முழுவதும் நிறைந்திருக்கிறது.
அவன் போர்வீரனாக பிறந்து போர்வீரனாக தன்னை வரித்துக்கொண்டவன். அந்த போர்முனையிலிருந்து தப்பிபோய் தன் உயிரை காப்பாற்றிக்கொண்டுவிடலாம். அல்லது மக்களை ஒரு தீய அரசனிடமிருந்து காப்பாற்றும் பொறுப்புக்காக போர்புரிந்து அறத்திற்காக போர் புரிய ஆரம்பிக்கலாம். அப்போது அவனுக்கு வரும் குழப்பத்திற்கு கண்ணன் பதில் கூறுகிறான்.
மனித வாழ்க்கை இப்படிப்பட்ட சாய்ஸ்களால் நிறைந்தது. அரசாங்க வேலை என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டவன், தனது தனி செலவுகளுக்காக கையூட்டு பெறுவதா இல்லையா போன்ற கேள்விகளும் இது போன்றவையே. அரசாங்க வேலை என்ற பொறுப்பை ஏற்றுக்கொள்பவனுக்கு தன் உயிரை காப்பாற்றிக்கொள்ளக்கூட மக்களின் பணத்தை எடுக்கக்கூடாது என்பதை கண்ணனின் உரையாக எடுத்துக்கொள்ளலாம்.
அவன் போர்வீரன் குணங்களோடு பிறந்தது அவனது முன்னாள் கர்மங்களின் வினை. ஆனால், இந்த ஜன்மத்தில் அவன் செய்யும் செயல்கள் அவனது அடுத்த ஜன்மத்தை நிர்ணயிக்கும். இதுவே கர்மபலன். கர்மவினை என்பது அவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகள். அந்த வாய்ப்புகளை எப்படி எடுத்து பயன்படுத்துகிறான். அறத்தை வளர்க்கிறானா மறத்தை வளர்க்கிறானா என்பது அடுத்த ஜன்மத்திற்கானவை. போர் வீரனின் மகனாக பிறப்பவன் போர் வீரனல்ல. போர் வீரனின் குணங்களோடு பிறப்பவன் தான் போர் வீரன். நீங்கள் பொருத்தம்பார்க்க உங்களது ஜாதகத்தை ஒருவரிடம் கொடுத்தால், உங்களது வர்ணம் என்ன உங்கள் மனைவியின் வர்ணம் என்ன என்று சொல்வார். ஒரே குடும்பத்தில் பிறந்த இருவரது வர்ணங்கள் வெவ்வேறானதாக, ஒருவரது பிராம்மண வர்ணமாகவும், ஒருவரது சத்திரிய வர்ணமாகவும் இருப்பதை பார்க்கலாம்.
மனிதர்களுக்கு நல்வினை தீவினை உண்டு. ஆனால், இறைவன், இவற்றுக்கு அப்பாற்பட்டவன். இருள்சேர் இருவினையும்சேரா இறைவன்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவுவது, ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றி வைப்பது ஆகியவை உங்களது கர்மபலனுக்கு ஆனவை. இந்த நாட்டின் மக்களை காப்பாற்ற போர் முனையில் நிற்பவன் தன் கர்மவினையை செய்கிறான். அவன் அந்த போர்முனையிலிருந்து ஓடுவானானென்றால், தன் கர்மவினையை அறத்திற்கு எதிரான திசையில் சென்று கொடுத்த வாக்குறுதியையும், எடுத்துக்கொண்ட வேலைக்கும்,எடுத்துக்கொண்ட அறத்துக்கும் மாறாக சென்று தீவினை சேர்த்துக்கொண்டவன்.
கர்மா உண்மையா? எனக்கு தெரியாது. ஆனால், இதுதான் நம் உள்ளத்தின் ஓரத்தில் நம்மை வழி நடத்துகிறது என்று நினைக்கிறேன். அது இலலையென்றால், யாரோ ஒருவர் காயம் பட்டுக் கிடக்கும்போது அவருக்கு உதவ நம்மை உந்துவது எது? என்ற கேள்வி எழுகிறது. அல்லது ஒரு ஆடு நடுத்தெருவில் காயம் பட்டு கிடக்கும்போது நம் மனம் நம்மை அறியாமல் இரங்குவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
நல்ல பதிவு, ஆழமான கேள்விகள். இதில் சில கேள்விகள் அனைத்து மதங்களுக்கும் பொருந்தும். என்னுள்ளும் இக்கேள்விகள் எழுந்திருக்கின்றன, இப்போதும் எழுகின்றன.
ReplyDeleteஉதாரணத்திற்கு, உஷா அவர்கள் சொல்லியுள்ளது போன்று, இந்து மதத்தின் 'வினைப்பயன்' கோட்பாடு குறித்த கேள்வி எழுந்திருக்கின்றது, இப்போதும் இருக்கின்றது.
இது குறித்து இஸ்லாமியர்கள் ஒரே வரியில் கடவுள் நமது ஈமானை சோதிப்பதற்காக ஒருவனை வசதியானவனாகவும், ஒருவனை ஏழையாகவும், ஒருவனை பலசாலியாகவும் ஒருவனை ஊனமுற்றவனாகவும் படைத்திருக்கின்றான் என்று சொல்லிவிடுவார்கள்.
ஆனால், ஏன், பக்கத்துவீட்டுக்காரனை ஏழையாகவும் என்னை பணக்காரனாகவும் கடவுள் படைத்து சோதனை செய்யவேண்டும் என்ற கேள்வி ஒரு நம்பிக்கையாளனுக்கும் தோன்றக்கூடும் - எந்த மதத்திலும் இதற்கெல்லாம் விடை கிடையாது.
அது போன்றே, இந்த படைப்பு , உலகம், சண்டை, சச்சரவுகள் எல்லாம் கடவுளின் விளையாட்டு(god's play) என்று இந்து தத்துவங்கள் ஒரே வரியில் சொல்லிவிடுகின்றன. சில தத்துவங்கள், இதெல்லாம் நமது மனதின் பிரதிபலிப்பு, மனமடங்கினால் இதெல்லாம் மறைந்துவிடும் என்று சொல்லிவிடுகின்றன - இதெல்லாம் கூட நமது சிந்தனையை ஒரு மட்டிலேயே நிறுத்திவிடுகின்றது.
இஸ்லாம் சிந்தனையைக் கட்டிப்போடுவது உண்மைதான். ஆனால், அதையே அனைத்து மதங்களும் - தத்துவங்களும் - வழிபாட்டு முறைகளும் செய்கின்றன, வேறு வேறு அளவுகளில். என்ன, இஸ்லாம் இதை extreme ஆக செய்கிறது - வன்முறையுடன், அதுதான் வித்தியாசம்.
// தருமி said...
ReplyDeleteஜிரா,
//அதுவரையில் கம்பெனி விளம்பரங்கள் போல...இங்கு வந்தால் அது கிடைக்கும். அங்கு வந்தால் ...//
அதிலும் இப்படி கூவி கூவி விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு கடையிலும் வித விதமான வியாபாரம்; விள்ம்பரம் !! //
அதே அதே. ஆனால் இதை எந்த மதமும் ஒத்துக்கொள்ளாது.
// அதுசரி, அந்தப் புதிய வரப்போகும் மதம் பற்றி சீரியஸாகவா சொல்கிறீர்கள்? இல்லை.. அப்படி ஐடியா ஏதும் கைவசம் உண்டா? அப்படியாயின், முதல் பார்ட்னராக என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.. ப்ளீஸ் :) //
என்னங்க இது! விட்டா என்னப் புனிதராக்கி...இறைவனோட மகன்னோ...உள்ளபடிக்கு எல்லாரும் இறைவனுக்கு மகந்தான்....அப்படீன்னு சொல்லீருவீங்க போலிருக்கு. நமக்கெல்லாம் இது ஆகாதுங்க. அதுக்கெல்லாம் மதத்தலைவருங்க இருக்காங்க. அவங்க பாத்துப்பாங்க. நமக்கெல்லாம் முருகான்னு சொன்னாப் போதும்.
// தருமி said...
ஜிரா,
நீங்கள் சீரியஸாக எழுதியதை தடம் மாற்றி விட்டேனோ? //
:-) இருக்கட்டுமே. அதுனால் என்ன? சிரிச்சிக்கிட்டே பேசுவமே. ஏற்கனவே ஒரு மாதிரின்னுதன் ஊருக்குள்ள பேச்சு. அது உண்மைன்னு அவங்களும் நம்பட்டுமே. :-))))
// //classified மதமாகத்தான் அதுவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. //
இதில் classified மதம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? //
classified மதம் என்று சொல்வது எல்லாரும் வாருங்கள் என்று அழைப்பதைக் குறிப்பதற்காகச் சொன்னேன். ஒரு விதத்தில் எல்லாரும் ஒரே மாதிரி இருப்பது என்று கேட்பது நன்றாகத்தான் இருக்கும். ஆனால் அது நடக்கவே முடியாதது. எத்தனை மனங்களுண்டோ அத்தனை குணங்களுண்டு. இன்றை சூழலில் கிட்டத்தட்ட எல்லா மதங்களும் classified மதங்கள்தான்.
எழில்,
ReplyDelete//நமது வாழ்க்கை முழுக்க முழுக்க சாய்ஸ்களால் நிரம்பியது.//
-இதுதான் உதைக்குது. அப்படியெனில் அந்த சாய்ஸ்களில் எதை எடுக்க்ப் போகிறோம் என்பது நம் கையில் மட்டும்தானா? கடவுளுக்கு அதில் கன்ட்ரோல் இல்லையா? நான் எந்த சாய்ஸை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பது omniscinet ஆன கடவுளுக்குத் தெரியாதா? - இது போன்ற கேள்விகளை எனது 53-ம் பதிவின் இரண்டாம் கட்டத்தில் கேட்டுள்ளேன்.
இந்த free will Vs omniscience -விவகாரத்தில் சரியான ஒரு பதில் கிடைக்காதென்றே உறுதியாக நினைக்கிறேன்.
நேசகுமார்,
ReplyDelete//இஸ்லாம் சிந்தனையைக் கட்டிப்போடுவது உண்மைதான்.// - இல்லை நீங்களே சொல்வது போல - //எந்த மதத்திலும் இதற்கெல்லாம் விடை கிடையாது// இதில் exception ஏது?
அதனால்தான் - //மனமடங்கினால் இதெல்லாம் மறைந்துவிடும் என்று சொல்லி// இதுபோன்ற கேள்விகளைக் கேட்காத மனம் வேண்டும் என்பது மதங்களினால் தீர்மானிக்கப்படுகிறது.
எழில், ஊஹ¥ம்.. உலகில் வாழ்பவர்களுக்கு எத்தனை பேர்களுக்கு சாய்ஸ் கிடைக்கிறது? எத்தனை சோகக்கதைகள்? ஏழ்மை, வறுமை, பசி பட்டினி, போர், ஒரு வேலை
ReplyDeleteசோற்றுக்காக எதுவும் செய்ய துணிகிற சிறுவ, சிறுமியர்கள், கழித்துக்கட்டி விடப்பட்ட முதியோர்கள், இளமையில் துர்மரணம், அதன் பாதிப்பில் உயிருடன் நடமாடும்
உறவுகள் இது எல்லாம் ஏன் என்ற கேள்வி அன்றைய சித்தார்தனுக்கு தோன்றியது. விடை? இரண்டு வருடங்களுக்கு முன்பு, சின்ன குழந்தை (ஒரு வயதுக்கும் குறைவான
பெண் குழந்தை என்று நினைவு) ஒன்றை வன்புணர்ந்து அதைக் கொலை செய்த ஒருவனுக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை தந்தார்களே, அந்த குழந்தைக்கு ஏன் அந்த கொடு மரணம்? அந்த ஆளுக்கு ஏன் அந்த எண்ணம் ஏற்பட்டது? இப்படி கேள்விக் கேட்டால், மத நம்பிக்கையாளர்கள் ஏதோ பதில் சொல்கிறார்கள். என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
நேசகுமார், அதே! எல்லாம் அவன் செயல் என்றால் அவனை விட கெட்ட ராஸ்கோல் யாரூ :-)
ஜீரா, இருக்கிற கடவுள்கள் போதுமய்யா, நீ வேற புதுசா ஒன்றையை உருவாக்க வேணாம்பா!!!
வாத்தியார் ஐயா, எப்பொழுது நெட் கட் ஆகும் என்று தெரியவில்லை. அதுவரை எட்டிப் பார்த்துக் கொண்டு இருப்பேன் சுவாரசியமான மேட்டர் என்பதால் வந்துவிட்டேன்.
காஞ்சி பெரியவர், ஒரு முறை சொன்னது, வெள்ளைக்காரர் ஒருவர் தான் கடவுளை நம்புவதில்லை. ஆனால் நிறைய உதவிகள் ஏழைகளுக்கு செய்கிறேன். எனக்கு சொர்க்கம்
கிடைக்குமா என்றுக் கேட்டதற்கு, நல்ல சிந்தனைகள், பிறருக்கு உதவும் மனம் இவை இருந்தால் போதும். எந்த கடவுளையும் கும்பிட வேண்டாம். நற்பேறு என்று
ஒன்று இருந்தால், உனக்கில்லாமல் யாருக்கு என்றார். ஏனோ அது மனதில் அப்படியே பதிந்துவிட்டது. ஆனால் கடவுளைப் போல சொர்க்கம் கான்செப்டிலும் நம்பிக்கை இல்லை. மீதம் எல்லாம் மே முதல் வாரத்துக்கு பிறகு :-)
உஷா,
ReplyDeleteநீங்க சொன்னது எல்லாத்துக்கும் நானும் 100% ஒத்துப் போகிறேன்.
ஆனா என்ன, உங்க கருத்துக்களைத் தெரிந்ததும் உங்களை 'உஷா அம்மையாரே' என்று விளிக்கத் தோன்றுகிறது. :)
தருமி ஐயா,
ReplyDeleteமிகப் பொறுமையாக எழுதி இருக்கிறீர்கள்.
எத்தனையோ விதி முறைகள் சமுதாயத்தில். எதையும் ஆராய ச்சாய்ஸ் இருக்கிறதா என்பதே கேள்வி!
நிலைமை தீவிரமாகப் போகும்போது சில முடிவுகள் தெளிவாக எடுக்க முடியாமல் விளைவுகளுக்காக எடுக்கப் படுகின்றன.
'ஃப்ரீவில்' குடும்பத்துக்கு மறுக்கப் படுகிறது.
நனமி,தீமை இரண்டும் நமக்குக் கண்கூடாகத் தெரியும்போது
பாதை கடினமனதாக இருந்தாலும் அதில் தான் போக வேண்டி வரும்.
சின்ன புழுவிலிருந்து சித்த ஸுவாதீனம் உள்ள பெரிய மனிதன் வரை வாழ்க்கை முழுவதும் போராட்டம்தான்.
உள்ளே உறையும்மனம்,புத்தி இரண்டும் வேறு வேறு என்று புரிந்து செயல் பட வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வது நாம் கேட்டுத்தானே வளர்கிறோம்.
இது ஒரு பிறவிக்கு மட்டும் நாம் காரணம் இல்லை.
அது ஒரு தொடர் சங்கிலி.
கர்மா என்பது உண்மை.
நிறைய விவேகம் இருந்தால் தான் இந்தத் தொடரில் விடுபடும் சக்தி கிடைக்கும்.
அது முடிகிற, செய்யக் கூடிய காரியம் இல்லை.
வாழ்க்கை நம்மை எப்படியெல்லாமோ பதப் படுத்துகிறது.
இருந்தும் நாம் வழிக்கு வந்துவிட்டோமா என்பது கடைசி வரை தெரிவதில்லை.
இது என் அனுபவத்தை வைத்தே சொல்கிறேன்.
நன்றி . நல்ல விஷயங்களைச் சிந்திக்க வைத்தீர்கள் தருமி.
தரும் ஐயா!
ReplyDeleteநல்ல விவாதம். உங்கள் கேள்விகள் மிக ஆதார புள்ளியை தொட்டு செல்கிறது. இப்படிப் பட்ட பக்குவப்பட்ட விவாத்தை காண்பது மிக அரிது. உங்கள் கேள்விகளுக்கும், சுல்தான் ஐயாவின் பதில்களுக்கும் மிக்க நன்றி.
கடவுள் 6 நாட்களில் உலகை படைத்தாரோ அல்லது ஒரு பெரும் மோதலில் (Big Bang) உலகம் தோன்றி விரிவடைந்து கொண்டே செல்கிறதோ எதுவாயினும் நீங்கள் கேள்வி கேட்க நிறைய காரணிகள் இருக்கத்தான் செய்கிறது.
(திருவிளையாடல் படத்தின் தருமியின் வசனம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல :-)) )
//அந்த குழந்தைக்கு ஏன் அந்த கொடு மரணம்? அந்த ஆளுக்கு ஏன் அந்த எண்ணம் ஏற்பட்டது? இப்படி கேள்விக் கேட்டால், மத நம்பிக்கையாளர்கள் ஏதோ பதில் சொல்கிறார்கள். என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
//
இந்த கேள்வி எல்லார் மனதிலும் தோன்றுவது இயல்புதான். மத நம்பிக்கையாளர்கள் சொல்வது சப்பைக் கட்டுதான். இந்த மாதிரியான கொடுமைக்கு உங்கள் பதில் என்ன?
உங்களை கேள்வி கேட்டு மடக்கும் எண்ணம் இல்லை. உங்களிடம் பதில் இருந்தால் மத நம்பிக்கையாளர்களை கேட்க மாட்டீர்கள்.
கணித சாஸ்திரத்தில், ஒன்றை இருக்கு என்று நிரூபிப்பதை விட இல்லை என்று நிரூபிப்பது மிகவும் கடினம்.
வாழ்க்கை அநேக சாத்தியங்களை கொடுத்துக் கொண்டே இருக்கும். எல்லா சாத்தியங்களிலும் 'கடவுள் இல்லை' என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொண்டவர்கள் அநேகமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏதோ ஒரு புள்ளியில் ஒத்துக் கொண்டு விடுகிறார்கள்.
- இப்படிக்கு,
ஒரு இரண்டுங்கெட்டான் :-)
தருமி அய்யா தங்களது பதிவுகளைப் படிக்கும் போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது.
ReplyDelete//என்னைப் பொறுத்த வரைக்கும் மதங்கள் மனிதனை வேறுபடுத்திக்கொண்டிருக்கின்றன என்றே நம்புகிறேன். மதங்களை மீறிய இறையுணர்வு இருந்தால் மட்டுமே இறைநம்பிக்கையாளர்களிடையே ஒற்றுமை ஏற்படும். //ஜி.ரா வின் கருத்துடன் முழுவதும் உடன்படுகிறேன்.உலகில் வளத்தையும்,சமாதானத்தையும் கொண்டுவருவது அறிவும்,ஆயுதமும் தான்.மதங்களால் ஏற்படுவது அழிவும்,சண்டையும் தான்.வரும் காலங்களில் மக்கள் மீதான மதத்தின் செல்வாக்கு குறையும் என்றே வரலாற்றில் இருந்து உணர முடிகிறது.
:)
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சு எந்த கடவுளும் மனிதனை பிடித்துவைக்கவில்லை( ஏனெனில் என்னை பொருத்தவரை கடவுளின் இருப்பு விளக்கங்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை). இங்கு மனிதன்தான் கடவுளை பிடித்துகொண்டிருக்கிறான் வரட்டு கவுரவத்திற்காக.
அருமையான விவாதம் தருமி சார். உணர்ச்சி இல்லாமல் அருமையாக நடத்தி செல்கிறீர்கள். கடவுள் நாட்டம் (ஆன்மிக அனுபவ நாட்டம்) ஒரு உயிரியல் விழைவு. ஏன் வோர்ட்ஸ்வொர்த் கவிதை எழுதினார்? ஏன் ஆப்லர்ட் ஐன்ஸ்டைன் பிள்ளை வண்டியை தள்ளிக்கொண்டு பிரபஞ்ச சிருஷ்டியை சிந்தித்தார்? ஏன் டார்வின் ஒரு மலரின் முன் ஐந்து மணிநேரம் நின்றார்? ஏன் இந்த தேடல்? சில கவித்துவ விடைகளை சில அறிவியல் விடைகளை தேடி அலைய வைப்பது என்ன? 5000 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கில்காமெஷ் காவியத்தின் கூறுகளை நாம் இன்றும் வாழ்க்கையில் உணர்கிறோம். புத்தனின் தேடலை அர்ஜுனன் விஸ்வரூப தரிசனத்தில் ஏற்பட்ட அச்ச மய புளகாங்கித உணர்வை ஒரு மலை உச்சியில் மாலைப்பொழுதில் உணர்கிறோம். முதல் கல் எறிவது குறித்த குற்ற உணர்வுடன் நம்பாவங்கள் நினைவுக்கு வர பாவி என உலகம் பழிப்பவனை தீர்ப்பிடாது நகர்கிறோம். எங்கிருந்து சில படிமங்களுக்கு இத்தனை வலிமை கிடைக்கிறது? நம் நரம்பியல்கட்டமைப்புகளில் ஓடும் இதற்கான காரணங்கள். நம் பரிணாம பாதையில் கிடைக்கும் இதற்கான வேர்கள். குகையோவியங்கள் முதல் ஸென்னின் சடோ ரி வரை இணைக்கும் இழைகள் நம் டி.என்.ஏ இன் நியூக்கியோடைட் தொடர்களின் கோலத்தில் இருக்கலாம். பல உன்னத உச்சங்களை மானுடம் அடைய இந்த தேடல் வழிகோலியுள்ளது. இத்தேடலை அதிகார நிறுவனங்களாக்கி உறைநிலை புனிதநூல்களாக்கி புனிதப்போர்களையும் வெறியர்களையும் உருவாக்குவது இந்த தேடல் எனும் உயிரியல் உணர்வின் எதிர்மறை விளைவுகள். இவை இரண்டும் ஒரே மோதிரத்தின் இருபக்கங்கள். மோதிரம் மோபியஸ் ஸ்டிரிப்பாக இருப்பது ஒரு உயிரியல் முரண்நகை அல்லது க்கோன்.
ReplyDeleteவல்லி சிம்ஹன்,
ReplyDeleteநிறைய சொல்லியிருக்கிறீர்கள்; நன்றி
ஸ்ரீதர்வெங்கட்,
ReplyDeleteஉங்கள் கேள்வி உஷாவிற்கு என்று நினைக்கிறேன்.
இருந்தாலும் -
ரோட்டில் போய்க் கொண்டிருக்கிறீர்கள்; எதிர் வரும் மாடு திடீரென்று உங்கள் மீது பாய்கிறது. ஏன்? மனிதர்கள் எல்லோருமே மிருகங்கள்தானே. திடீரென்று ஒரு மிருகத்ததனம் வெளிப்படுகிறது. nature (genes?) & nurture இரண்டில் ஏதோ ஒன்று ...
கேள்விகளையெல்லாம் பார்த்தால் அப்படி ஒன்றும் 'ரெண்டுங்கெட்டான்' மாதிரி தெரியலையே!
ஸ்ரீதர் வெங்கட், தருமி மாதிரி எனக்கு கேள்விக் கேட்க மட்டுமே தெரியும்
ReplyDelete:-) ஐ மீன் திருவிளையாடல் நாகேஷ் மாதிரி!
டெல்ஃபின்,
ReplyDeleteஎன்னங்க இப்படி அடிக்கிறீங்க .. நல்லா எழுதுற .. ஆனா எழுதுற விஷயம் மட்டும் நல்லா இல்லைன்னா .. அடிப்படையே ஆடுது அப்டிங்கிறீங்க ..இல்லையா?
"உலகம் முழுவதையும் ஒருவன் தன் ஆதாயமாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்? - St. Ignatius - அப்டின்னு ஒருவர் சொன்னதை எனக்குச் சொல்றீங்களோ?
ஆனா உங்களுக்கு என் 'கொள்கைகள்' பிடிக்கலைன்னுதான்சொல்லியிருக்கீங்க; அது தப்புன்னு சொல்லலை .. இல்லையா?
நன்றி.
ஜாலி ஜம்பர்,
ReplyDelete//வளத்தையும்,சமாதானத்தையும் கொண்டுவருவது அறிவும்,ஆயுதமும் தான்//
ஏதோ சொற்பிழை இருப்பதுபோல் தெரிகிறதே ...
//வரும் காலங்களில் மக்கள் மீதான மதத்தின் செல்வாக்கு குறையும் என்றே வரலாற்றில் இருந்து உணர முடிகிறது.//
நடப்பு வேறு விதமாக இருப்பதாகத்தானே தெரிகிறது. :(
நாடோடி,
ReplyDelete//மனிதன்தான் கடவுளை பிடித்துகொண்டிருக்கிறான் //
வர்ர வம்பெல்லாம் அதனாலதானே ... இங்க சாமிகளா வந்து ஒண்ணோட ஒண்ணு சண்டை போடுதுக... அதுக பேரச் சொல்லிட்டு மனுசங்கதான 'சாமியாட்டம்' போடுறாங்க .
அரவிந்தன் நீலகண்டன்,
ReplyDeleteநிறையா படிப்பீங்கன்னு தெரியுது.
நிறைய சொல்லியிருக்கீங்க...கொஞ்சம் மட்டுமே புரியுது..
நன்றி
தருமி ஐயா,
ReplyDeleteஅந்த கேள்வி உங்களுக்குதான். நீங்கள் இயற்கை / வளர்ப்பு என்கிறீர்கள். இன்னும் நுணுக்கி பார்த்தால் வேறு 'வெளி' காரணிகள் தோன்றலாம். கடைசியில் சாய்பாபா கொடுத்த மோதிரத்தில் போய் கூட முடியலாம்.
ஒரு மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு இலக்கை அடைவது எளிது.
மார்க்கமில்லாமல் இலக்கை தேடுவது கடினமான காரியம். ஜிரா சொல்வது போல் புதிய மார்க்கம் தோன்றக்கூட அபாயம் நிறைய உண்டு :-) All the best!
இரண்டுங்கெட்டான் என்றால்... நான் கடவுள் ஆதரிப்பாளனும் இல்லை. மறுப்பாளனும் இல்லை. இல்லை இரண்டுமாய் இருக்கிறேனோ தெரியவில்லை :-)
//i like the way you write, i like the way you put across your thoughts, i like the way you answer to the comments and the arguments...i simply love your sense of humour.....//
ReplyDeleteடெல்பின் சொன்னதை முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால், முதல் பகுதியை நானும் வழிமொழிகிறேன். தருமி அவர்களின் அனைத்து பதிவுகளையும் நான் படித்ததில்லை. ஆனால், படித்த சில பதிவுகளில் வார்த்தைகளின் ஊடாகத் தெரிந்த மெலிதான புன்னகை இன்னமும் என் மனதில் ஒரு ரம்மியத்தை ஏற்படுத்துகின்றது.
அதே போன்று,சிறு வயது நினைவுகளை தருமி எழுதியிருந்தது இன்னமும், லாந்தர் விளக்கின் ஒளி பட்டுத் தெரியும் வெளிச்சமும், நிழலுமான பிம்பங்களைப் போல மனதின் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கிறது.
தருமி, முன்பொருமுறை உங்களது தொலைபேசி எண்ணை எனக்கு அனுப்பி வைத்திருந்தீர்கள். இப்போது தேட முடியவில்லை. மீண்டும் அனுப்ப முடியுமா?
நேசகுமார்,
ReplyDeleteஅருமையான வார்த்தையாடல்கள் ... அதுவும் என்னைப் பற்றி நன்றாகச் சொல்லியிருப்பதால் இன்னும் பிடிக்கிறது! :) தமிழைப் பார்த்து கொஞ்சம் பொறாமைதான்...
கைத்தொலை பேசி # : 98945 28849
//எழில்,
ReplyDelete//நமது வாழ்க்கை முழுக்க முழுக்க சாய்ஸ்களால் நிரம்பியது.//
-இதுதான் உதைக்குது. அப்படியெனில் அந்த சாய்ஸ்களில் எதை எடுக்க்ப் போகிறோம் என்பது நம் கையில் மட்டும்தானா? கடவுளுக்கு அதில் கன்ட்ரோல் இல்லையா? நான் எந்த சாய்ஸை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்பது ஒம்னிச்cஇனெட் ஆன கடவுளுக்குத் தெரியாதா?//
படைத்ததையும் படைக்கப்பட்டதையும் தனித்தனியாக பார்ப்பது யூத கிறிஸ்துவ தத்துவ அடிப்படை என்று நினைக்கிறேன். அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு பார்த்தால், இதற்கு விடை இல்லாது போகலாம்..
மற்றபடி, ஒரு விவாதத்துக்கு, கேள்விகலுக்கு பதில் கிடைத்தே ஆகவேண்டும் என்பது இல்லை.. தேடல்தான் வாழ்கை என்று சொல்கிறார்கள்.. உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள இருக்கிறது...
எழில்,
ReplyDelete//படைத்ததையும் படைக்கப்பட்டதையும் தனித்தனியாக பார்ப்பது யூத கிறிஸ்துவ தத்துவ அடிப்படை என்று நினைக்கிறேன்//
இந்துமத "அத்வைத தத்துவ"த்தில் இந்தக் கேள்விக்குத் தேவையில்லை என்கிறீர்கள்; இல்லையா..? அங்கே "விதி" என்பது பதிலாக இருக்குமோ? ம்ம்ம். தெரியவில்லை...
தருமி ஐயா,
ReplyDeleteநான் நேற்றே ஒரு பதில் பின்னூட்டம் இட்ட மாதிரி ஞாபகம். வரவில்லையா?
நினைவில் இருந்து...
----------------
//திடீரென்று ஒரு மிருகத்ததனம் வெளிப்படுகிறது. nature (genes?) & nurture இரண்டில் ஏதோ ஒன்று ...
//
அந்த கேள்வி உங்களுக்குத்தான்.
மத நம்பிக்கையாளர்கள் 'கர்ம வினை' என்று சொல்லலாம். நீங்கள் 'வளர்ப்பு / இயற்கை' என்று சொல்கிறீர்கள். இன்னும் நுணுக்கி பார்த்தால் வேறு காரணிகள் இருக்கலாம். சாய்பாபா தந்த மோதிரத்தில் கூட முடியலாம். :-))
நான் சொல்ல விழைவது - தேடல் எல்லாருக்கும் இருக்கிறது. ஒரு மார்க்கத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு தேடுகிறார்கள். அதில் இலக்கு தீர்மானிக்கப் பட்டுவிடுகிறது.
இருக்கும் மார்க்கங்களை நிராகரித்து விட்டு தேடும்பொழுது, ஜிரா சொல்வது போல் புதிய மார்க்கங்கள் தோன்றக்கூடிய அபாயம் இருக்கிறது :-)
உங்கள் தேடலுக்கும் முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்!
நான் ஏன் இரண்டுங்கெட்டான் என்று சொல்லிக் கொண்டேன் என்றால், நான் ஒரு கடவுள் மறுப்பாளனும் இல்லை, மத நம்பிக்கையாளனும் இல்லை.
அல்லது இரண்டுமாகா இருக்கின்றேனோ என்னவோ... பாருங்க இதிலும் இரண்டுங்கெட்டான் :-)))
//ஏன்றாலும் இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்த சுல்தானைக் காணோம்.???//.
ReplyDeleteதருமி ஐயா. மற்றும் delphine வருகிறேன். வருவேன். எனக்கும் கொஞ்சம் அவகாசம் தேவை.
எப்போதும் சொல்வதுதான். அழகான கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் உண்டு.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteசுல்தான்,
ReplyDelete//எப்போதும் சொல்வதுதான். அழகான கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் தெளிவான பதில்கள் இஸ்லாத்தில் உண்டு.//
எப்போதும் மட்டுமல்ல எல்லா இஸ்லாமிய நம்பிக்கையாளர்களும் இதையேதான் சொல்வதுண்டு என்பது தெரியும். அதையே பல முறை ஒரு கேள்வியாக்கிட வேண்டியதுள்ளது.
எனக்கு இன்னொரு ஐயம்; தெரிந்து கொள்ளவே இந்தக் கேள்வி:
குரானில் திருநங்கைகளைப் பற்றிய தகவல் ஏதுமுண்டா?
கடவுளே எல்லாவற்றையும் படைத்து அருள் பாலிப்பவன் என்றால் திருநங்கைகளை இவ்வாறாகப் படைத்தது ஏன்?
(சமீபத்திய தொலைக்காட்சித் தொடர் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது மனதில் தோன்றிய கேள்வி.)
நன்றி தருமி ஐயா.
ReplyDeleteதங்களுக்கு பதில் சொல்லிய பதிவுதான் கடைசி. அதன் பின் இவ்விடுகையில் நான் பதிவெதுவும் எழுதாமல், தொடப்படாமலேயே இருக்கிறது.
உங்களுக்கு பதில் எழுதுவதன் மூலம் மீண்டும் தொடங்கி, தொடர முயற்சிக்கிறேன்
நன்றி சுல்தான்.
ReplyDeleteநானே இப்போதுதான் பார்க்கிறேன். நாம் ஒருவரை ஒருவர் பதிவுகளில் கேள்வியும் பதில்களுமாய் பார்த்துக் கொண்டு சரியாக ஓர் ஆண்டாகி விட்டது.
//........ மீண்டும் தொடங்கி, தொடர முயற்சிக்கிறேன்//
ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்; நன்றி.
மீள் வாசிப்புக்கு வாய்பளித்தமைக்கு நன்றி!
ReplyDelete