Monday, June 23, 2008
259. துருக்கியின் voodoo மந்திரம்
EURO CUP 2008
ஐரோப்பிய கால்பந்து கோப்பை ஆட்டங்களை இதுவரை முனைந்து உட்கார்ந்து பார்த்ததில்லைதான். போகிற போக்கில் பார்த்துட்டு போறதுதான் பழக்கம். உலகக் கோப்பை மாதிரி விழுந்து விழுந்து பார்க்கிறதெல்லாமில்லை. ஆனாலும் இந்த முறை அப்பப்போ பார்த்துக் கொண்டு இருந்த போது இந்த துருக்கி அணி என்ன மந்திரமோ மாயமோ தெரியவில்லை .. துருக்கி ஆளை ரொம்பவே இறுக்கிப் பிடித்துப் பார்க்க வைத்துவிட்டது. அவர்கள் அரையிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்த விதம் மிகவும் ஆச்சரியமாக அமைந்துவிட்டது.
லீக் ஆட்டத்தில் செக். நாட்டுடன் மோதிய ஆட்டம் பார்த்தேன். ஆரம்பித்திலிருந்தே பந்து என்னவோ துருக்கியின் பக்கமே இருந்தாலும் அடுத்தடுத்து செக். அணி இரு கோல்கள் போட்டு முன்னணியில் இருந்தது. அதோடு, தெரிந்த முகம் ஒன்றே ஒன்று- Koller - இருந்ததால் செக். அணிக்கு என் மானசீக ஆதரவை அளித்துக் கொண்டு ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்தேன். மொத்த 90 நிமிடங்களில் 75 நிமிடங்கள் முடிந்து விட்டிருந்தது. துருக்கி அணி இனி என்னதான் ஆடினாலும் ‘பப்பு வேகாது’ என்ற நிலையில் 75வது நிமிடத்தில் ஒரு கோல் துருக்கி அணி போட்டது. கொஞ்சம் அவர்களுக்குத் தெம்பு வந்தது. சமனாவது செய்துவிடலாமென நினைத்து விளையாடினார்கள். இரு அணிகளுமே தொடர்ந்து அதே வேகத்தில் ஆடின. இந்த சமயத்தில் வெளியே பெஞ்சில் substitute ஆக இருந்த செக். அணி Boars-க்கு நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்தது ஏனென்று தெரியாவிட்டாலும் வேடிக்கையாக இருந்தது. ஏனெனில் இதுவரை விளையாடாது வெளியே இருக்கும் வீரருக்கு ‘அட்டை’ கொடுப்பதை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்த்தேன். சூடான இந்த ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் துருக்கி அணியின் Nichat ஒரு கோலும், அடுத்து 89வது நிமிடத்திலேயே அவரே அடுத்த கோலும் போட துருக்கி செக்.கை 2:1 என்ற கோல் கணக்கில் வென்றது.
சரிதான். துருக்கிக்கு இது ஒரு நல்ல அதிர்ஷ்டமான நாள் போலும் என்று நினைத்து, இந்த விளையாட்டு கொடுத்த ஆர்வத்தில் அதன் அடுத்த பந்தயத்தையும் பார்க்கலாமென உட்கார்ந்தேன். அடுத்த அதன் ஆட்டம் க்ரோஷியாவுடன். கால் இறுதிச் சுற்று. வெற்றி பெற்ற அணி அரை இறுதிச் சுற்றுக்குள் நுழையும். சும்மா சொல்லக்கூடாது; இரண்டு அணிகளுமே முனைந்து விளையாடின. முழுநேரமும் விளையாடியும் எந்த அணியும் கோல் எதுவும் போடவில்லை. 90 நிமிடங்கள் முடிந்து, அடுத்து இரு 15 நிமிட நேரம் கொடுக்கப் பட்டதிலும் ஏதும் கோல் விழவில்லை என்ற நிலையில் இருக்கும்போது 29வது நிமிடத்தில் – அதாவது (90+30) ஆட்டத்தின் 119 வது நிமிடத்தில் துருக்கி கோல்கீப்பர் கொஞ்சம் அசந்த போது க்ரோஷியா அணி முதல் கோலைப் போட்டது. இன்னும் ஒரு நிமிடமே இருக்கிறதென்ற நிலையில் சரி … ஆட்டம் முடியப் போகிறது; வேறு வேலையைப் பார்ப்போம் என்று ரிமோட்டைத் தேடி குனிந்தெடுக்கப் போகும்போது பயங்கர ஆரவாரம் கேட்க என்னவென்று பார்த்தால் அந்தக் கட்டக் கடைசி நிமிடத்தின் இறுதியில் துருக்கி ஒரு கோல் போட்டு சமன் செய்தது.
எனக்கு எப்பவுமே இந்த பெனால்டி முறை பிடிப்பதில்லை. கடைசியில் எல்லாமே இதுவரை அந்த அணியில் விளையாடிய மீதி 10 பேரின் பங்கை எல்லாம் மீறி கோல்கீப்பர் ஒருவரால் மட்டுமே தீர்மானிக்கப் படுவது என்பது கொடிதாகத் தெரியும்.என்னைப் போன்ற ஒருவரைச் சில வினாடிகள் கூட்டத்தில் காட்டினார்கள். பெனால்டி அடிக்கப் படும்போது அந்த மனிதர் வேறு பக்கம் பார்த்திருக்க, அவரோடு இருந்த பெண் அவருக்கு running commentary கொடுத்துக் கொண்டிருந்தாள்! நம்ம கேசு போல என்று நினைத்துக் கொண்டேன்.
பெனால்டி ஆரம்பித்தது. முதல் ஷாட் க்ரோஷியாவுக்குத்தான். முதல் பந்தே வெளியே அடிக்கப் பட்டது. துருக்கியின் ஷாட் சரியாக உள்ளே அடிக்கப் பட்டது. துருக்கி: க்ரோஷ்யா= 1:0 இரண்டாவது: இரு அணிகளும் சரியாக அடித்து விட்டார்கள். 2:1 மூன்றாவது ஷாட்: க்ரோஷிய அணி இம்முறையும் வெளியே அடிக்க, துருக்கி வீரர் சரியாக அடித்தார்;. 3:1 க்ரோஷியாவின் முதல் கோல் விழுவதற்குக் காரணமாக இருந்த துருக்கி கோல்கீப்பர், க்ரோஷியாவால் நாலாவதாக அடிக்கப் பட்ட பந்தை தடுக்க … 4:2 என்ற கோல் கணக்கில் துருக்கி வென்று அரையிறுதி ஆட்டத்திற்குள் நுழைந்தது. ஜெர்மனியோடு மோத வேண்டும். பார்க்க வேண்டும் இம்முறையும் அந்த voodoo மந்திரம் வேலை செய்கிறதா என்று?!
No comments:
Post a Comment