உன் ஒரு பதிவைப் படிப்பதே பெருசு; அதில இங்க வந்தா (1)இந்த, (2) இந்த பதிவுகளை முதலில் படிச்சிட்டு வந்தாதான் இந்தப் பதிவின் பொருளடக்கம் புரியும் அப்டின்னு சொன்னா உங்களுக்கு ..
கொடுமை .. கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை தலைய விரிச்சி ஆடிக்கிட்டு இருந்துச்சாம் அப்டின்றது மாதிரிதான் தெரியும். இருந்தாலும் என்ன செய்வது. அந்தப் பதிவுகளை முதலில் வாசிச்சிக்கிங்க ...
இந்தப் பதிவு ஜாலிஜம்பரின் பதிவிற்குப் பின்னூட்டமாக ஆரம்பித்து, தனிப் பதிவாகவே இட்டுவிடுவது என்று முடிவு செய்து இட்டுள்ளேன்.
ஜாலிஜம்பர் தன் பதிவில் சொல்லியுள்ள சில பகுதிகளும் என் கருத்துக்களும்:
1. //ஜென்னியை தமிழில் எழுதும் போது சென்னி என எழுத இனி தயக்கமேதும் இல்லை.//
ஜாலி,
1. ஒழுங்கா ஜென்னியை ஜென்னின்னே கூப்பிடுங்க .. எழுதுங்க .. தயவு செய்து. சரியா? உங்கள் பெண்ணாகவே இருந்தாலும் உங்கள் தமிழார்வத்திற்காக மகளின் பெயரைக் கொலை செய்யக்கூடாது. நீங்க சென்னின்னு கூப்பிட்டா அவளது பெயரையும், (என் மகள் பெயரையும் கூட!), ஒரிஜினலா நீங்கள் நினைத்துவைத்த 'அந்த' ஜென்னியின் (மார்க்ஸின் மகள்) பெயரையும் கெடுக்கிறீர்கள். வேண்டாமை'யா அந்தக் கொடுமை .. நல்ல அழகுப் பெயர்!எவ்வளவு ஆசை ஆசையாக வைத்தோம்; அதெல்லாம் இந்தக் கொடுமைக்கா? உங்கள் மகளே வேண்டாமென்றுதான் கூறுவா(ர்க)ள்; உங்கள் இல்லாளும்தான்!
இந்தத் தமிழ்ப்படுத்தும் கொடுமையைத்தானய்யா வேண்டாமென்கிறேன். இதனால் நீங்கள் சாதிப்பது ஏதுமில்லை. 'எண்ணித்துணிக கருமம்' - பெயர் வைப்பதற்கு முன் யோசித்திருக்கலாம். சரி, இங்கே உங்கள் மகள் பெயர், உங்கள் பெயர்; அவைகளை எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொல்/ள்வீர்கள். ஆனால்,
அதே மாதிரி ஏன் ஜாலி ஜம்பர் என்று பெயர்வைத்துக் கொண்டார் என்பதே புரியாமல் இருக்கும்போது புதிதாக சாலி சம்பர் என்றால் என்னவென்று புரிந்து கொள்வது? சென்னி என்று நீங்கள் எழுதும்போது ஜென்னி என்ற பெயர்தான் அது என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?
2. //மொழியின் இசைவுக்கு மாறான எழுத்துக்களை பயன்படுத்துவது, மொழியைக் கறைப்படுத்துவதாகவே எனக்குத்தெரிகிறது//
இந்த விவாதம் எனக்குப் புரியவில்லை. தமிழ்மேல் காதல் இருப்பது சரிதான்; ஆனால் வெறியாகக்கூடாது. இந்த 'கன்னித்தமிழ்' என்று பெயர் வைத்தது தவறாகப் போய்விட்டது. பெண்ணுக்கு ஏற்றி வைத்த "கற்பை" மொழிக்கும் ஏற்றி வைத்துவிடுகிறீர்கள். நம் மொழியில் இல்லாத ஒரு ஓசை உள்ள சொல்லை உங்கள் (நம்) மொழிக்குக் கொண்டுவரும்போது அந்த ஓசையைத் தரக்கூடிய எழுத்து நம்மிடம் இல்லையெனில், ஏன் அடுத்த மொழி எழுத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது?. அதற்கு மறுப்புத் தெரிவிப்பது எதற்கு? நம் மொழியின் கற்புக்கு காப்பா? நிறைய chastitiy belt கதைகள் உண்டு; அவைகள்தான் என் நினைவுக்கு வருகின்றன! ஜென்னி என்றால் உங்கள் மொழி "கறை" பட்டுவிடுவது எப்படி?
3 //பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்வது வேறு பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது வேறு என்று நான் சொன்னேன்//
முதலாவது உங்களுக்கு ஏற்புடைத்ததாயின் இரண்டாவதற்கும் உடன்பட்டே ஆகவேண்டும். ஏனெனில், வேறு வழி ஏது? ஜார்ஜ் =சார்சு; ஜென்னி=சென்னி; ஸ்டாலின்=சுடாலின் என்பது நிச்சயமாகத் தவறு மட்டுமல்ல; கேலிக்கூத்தான காரியம். ஆகஸ்ட் என்பதை ஆகசுடு என்று எழுதியதைப் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது. இல்லை, இது சரிதான் - இதுதான் சரி - என்கிறீர்களா?
4.//அதைப்போலவே தமிழிலும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தும் போது தமிழில் உள்ள எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துவது தான் சிறப்பு என்றும் (நன்னன்) கூறினார்//
நன்னனே கூறினாலும் எனக்கு அது சரியான கருத்தாகத் தெரியவில்லை. அய்யா, ஆகஸ்ட் என்பதை வேறு எப்படி எழுதுவது என்று சொல்லுங்கள். நான் அன்று சொன்னதும் இதுபோன்ற சொற்களைத்தான். அறிவியல் சொற்களில் வரும் ஸ், ஷ்,ஹ் போன்ற வடமொழி எழுத்துக்களுக்கு வேறு தமிழ் எழுத்துக்களைப் பயன்படுத்தினால் பொருளே மாறிவிடும் அபாயம் உண்டு என்றேன்; அதற்கு உங்கள் பதில் என்ன?
அவைகளுக்கு நிகரான தமிழ்ச்சொற்கள் கொண்டு வரலாமென நீங்களோ, டி.பி.சி.டி.யோ பதில் கூறினீர்கள் என்று நினைக்கிறேன். அதற்குரிய என் அன்றைய பதிலை மீண்டும் இங்கு பதிகிறேன்: It is too late now! வேகமாக வளரும் அறிவியலை இப்போது மொழிமாற்றம் செய்து தமிழை வளர்ப்பதைவிடவும் அப்படியே எடுத்துக் கொள்வதே அறிவு பூர்வமான காரியமாக எனக்குத் தோன்றுகிறது.
நாம் இப்போது பசியோடு இருக்கிறோம்; சாப்பிட வேண்டும்; தட்டில் இருப்பதை கரண்டியால் சாப்பிடுவதா இல்லை ஜப்பானிய அதாவது சப்பானிய முறையில் குச்சியால் சாப்பிடுவதா, இல்லை கையால் சாப்பிடுவதா என்ற பட்டிமன்றம் தேவையில்லை.
இந்த இடத்தில் அன்று சொன்னதை மீண்டும் சொல்கிறேன்: தாய்மொழிக் கல்விதான் சிறப்பு. அதில் நாமும் நம் முழு நாடுமே மிகவும் பின்தங்கி விட்டோம். நீங்கள் சொல்லும் புதுச்சொற்களைக் கண்டுபிடித்து மொழியை வளர்ப்பதல்ல நம் நோக்கம். நம் மொழி வளர்ந்த மொழி. இனி மற்ற ஓசைகள் இங்கு நுழைவதால் தமிழின் 'கற்பு' ஒன்றும் கெட்டுப் போய்விடாது!
5. //பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொண்டால் தானே தமிழ் வளரும் என்பது தருமியின் வாதம். பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்வது வேறு; பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது வேறு என்று நான் சொன்னேன்.//
Throwing the baby out with the bath water என்றொரு ஆங்கிலச் சொலவடை உண்டு. அதுபோல ஒலிகளுக்காக சொற்களை ஒதுக்கும் அபாயம் இதில் இருப்பதாகப் படுகிறது. உதாரணமாக (!), உதாரணம், விஷயம் போன்ற சில வடமொழி எழுத்துக்களுக்கும், risk, interesting போன்ற சில ஆங்கிலச் சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்களுக்கு நானும் அலைமோதிப் பார்த்து விட்டேன். சான்றாக என்பதோ,பற்றியம் என்பதோ, கண்டம் என்பதோ,interesting - இதற்கு ஈடு ஒன்றும் இல்லை என்னிடம், எனக்கு முழுப் பொருளை அளிப்பதாகத் தோன்றவில்லை. அது என் குறையாகவும் இருக்கலாம்.
பிறமொழிச் சொற்களே வேண்டாம் என்ற "உயந்த" நிலையிலிருந்து சிறிதே கீழே இறங்கி வந்து இப்போது சொற்கள் வரட்டும்; ஒலி வேண்டாமென்கிறீர்கள் என நினைக்கிறேன். இந்தப் போக்கில் போனால் இன்னும் சிறிது காலத்தில் ஒலிக்கும் ஓகே சொல்லிவிடுவீர்கள் என்பது புரிகிறது. (கடவுள் மறுப்புக்கு முன்னால் ஒரு வித பயத்தினால், agnostic என்ற ஒரு நிலையைச் சொல்லுவார்கள். எல்லா கடவுள் மறுப்பாளர்களும் இப்படித்தான்; theist -> agnostic -> atheist என்ற பரிணாம வளர்ச்சிதான் இயற்கை. (நான் அதையும் தாண்டி antireligious என்ற "உயர்நிலை'(!)க்கு முன்னேறி விட்டேன் !) அதுபோலவேதான் நீங்கள் சொல்லும் சொற்கள் வரலாம்; ஒலி வேண்டாமென்ற விவாதம்.
பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்.
......
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை.
(தொல்காப்பியரும், நன்னூலும் பிறமொழி ஒலிகளைக் கடன்வாங்கலாம் என விதி கொடுத்திருப்பதாக அறிகிறேன். அதைப் பற்றிய குறிப்பை சின்னாளில் பதிவிடுவேன்.)
ஏற்கெனவே இந்த விவாதம் பதிவுகளில் அங்கங்கே நடந்து வந்திருப்பது இப்போதுதான் என் கண்களில் பட்டன. நல்ல விவாதப் பொருள்தான் போலும். ஆகவே நன்கு தமிழாய்ந்த பதிவர்களை இந்த விவாதத்தை வளர்த்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
*
இந்த ஜ,ஸ,ஷ எலிக்குட்டி பிறக்காத எலிமெண்டரி ஸ்கூல் வார்த்தைகள்.என்னால் விடமுடியவில்லை.அதோடு நீங்க சொல்வது போல் ச ன்னு உச்சரிக்கவே சிரிப்பாத்தான் இருக்குது.ரோஜாதான் அழகு ரோசா அல்ல.
ReplyDeleteFantastic points. Wish you to have good health and long live.
ReplyDelete"sam george" என்ற பெயரை தமிழில் எழுத முடியவில்லை என்ற ஏக்கத்திலும் கோபத்திலும் தான் நீங்கள் பேசுவதாக தோன்றுகிறது. சுப.வீ போன்றவர்களால் எப்படி இன்று வரை தூய தமிழில் பேச முடிகிறது? அவர்கள் போன்றவர்கள் தூய தமிழில் பேசுவதை கேட்டாலே மனசுக்கு ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கு. நம்மால் முடியவில்லை என்பதற்காக நாம் தான் சரி என்று சொல்ல கூடாது. முழுமையாக இல்லாவிட்டாலும் முடிந்த வரை வேற்று மொழிச் சொற்களை தவிர்ப்போம்.
ReplyDeleteராஜ நடராஜன்,
ReplyDelete//ரோஜாதான் அழகு ரோசா அல்ல.//
இப்டி சொன்னீங்கன்னா யாராவது இப்படி - 'a rose by any other name would smell as sweet'- சொல்லப் போறாங்க!
அந்த "எலிக்குட்டி பிறக்காத எலிமெண்டரி ஸ்கூல் வார்த்தைகள்" அப்டின்னா என்ன?
thank u, kabeesh
ReplyDeleteவோட்டாண்டி,
ReplyDelete//sam george" என்ற பெயரை தமிழில் எழுத முடியவில்லை என்ற ஏக்கத்திலும் கோபத்திலும்..//
இருக்குமோ? என்னமோ ஆழ்மனது, உள்மனது அப்டிம்பாங்களே அதுமாதிரியோ?
அதே மாதிரி மேல ராஜ நடராஜனும் என் கட்சியில் சேருவதற்கு அதுதான் காரணமோ? :-)
வோட்டாண்டி,
ReplyDelete//முழுமையாக இல்லாவிட்டாலும் முடிந்த வரை வேற்று மொழிச் சொற்களை தவிர்ப்போம்.//
இதற்கு எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லையே.ஆனால் "முழுவதுமாகவேவா" என்பதுதான் கேள்விக்குறி.
ரவிசங்கர்,
ReplyDeleteமன்னிக்கணும். உங்கள் பின்னூட்டம் ஏனோ இங்கு ஏறாமல் போய்விட்டது. இரண்டு பின்னூட்டங்களில் இருந்தன; ஒன்றை ஏற்றிவிட்டு அடுத்ததை reject செய்தேன், இரண்டு எதற்கு என்று.
நீங்கள் கொடுத்த தொடுப்பு: கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவது குறித்த என் கருத்துகள்
ரவிசங்கர்,
ReplyDeleteநிறைய எழுதியிருக்கிறீர்கள்; ஆழ்ந்து வாசிக்க வேண்டிய பதிவுகள். ஐயங்களிருப்பின் அங்கே கேட்கிறேன்.
நன்றி.
தருமி அய்யா,
ReplyDeleteஇன்று மாலையே இப்பதிவைப் பார்த்து விட்டேன்.மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ரவிசங்கரின் பதிவுகளை மேய்ந்துவிட்டு இங்கு வருவதற்கு தாமதமாகிவிட்டது.
அவருடைய மூன்று,நான்கு பதிவுகளை முழுமையாக படித்தால் நீங்களும் உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
//1. ஒழுங்கா ஜென்னியை ஜென்னின்னே கூப்பிடுங்க .. எழுதுங்க .. தயவு செய்து. சரியா?//
ReplyDeleteஅய்யா,கூப்பிடும்போதும்,ஆங்கிலத்தில் எழுதும் போதும் jenny என்றே பயன்படுத்த முடிவு செய்துள்ளேன்.ஆனால் தமிழில் எழுதும் போது சென்னி என்று எழுதலாம் என்றும் முடிவுக்கு வந்துள்ளேன்.செ என்ற எழுத்து ஜெ என்ற உச்சரிப்பைத்தான் குறிக்கிறது என்று நம் மூளை புரிந்து கொள்ள தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும் சில நாட்களிலேயே பழகிவிடும்.(ஆனால் ரவிசங்கரோ அத்தகைய அந்நிய ஒலிகளே தேவையில்லை என்னும் தீவிர நிலையை வலியுறுத்துகிறார்.)
மற்ற பதில்களை நாளை இடுகிறேன்.
என்னை மட்டும் ஏன் இப்படி நட்டாத்துல விட்டுட்டீங்க..?
ReplyDeleteஐயா,
ReplyDeleteஅந்நிய ஒலிகளை ஏற்றுக் கொள்வது பற்றி தொல்காப்பியர் ஏதேனும் சொல்லியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் வேற்று மொழிச் சொற்களை, குறிப்பாக சங்கதச் (செங்கிருத, சமஸ்கிருத) சொற்களை, தமிழில் எழுதும் போது இருவகையில் எழுதலாம் என்கிறார் - தற்சமம், தற்பவம். தற்சமம் என்பது வடசொல் அப்படியே தமிழிலும் வருவது - கருணன், தருமன், அருச்சுனன் போன்றவை. தற்பவம் என்பது வடசொல் தமிழொலிகளுக்கு ஏற்ப மாறி வருவது.
விபீஷணன் என்பதை விபீசனன் என்று எழுதினால் தற்சமம். வீடணன் என்றால் தற்பவம் - இதுவே இலக்கியங்களில் பயின்று வந்திருக்கிறது.
தஷரதன் என்பதை தசரதன் என்று சொன்னால் அது தற்சமம். தயரதன் என்று சொன்னால் அது தற்பவம். இலக்கியத்தில் இதற்கும் தற்பவம் தான் பயின்றுள்ளது.
யுதிஷ்டிரன் என்பதை யுதிட்டிரன் என்று எழுதுவது தற்பவம். யகரம் சொல்லுக்கு முதல் எழுத்தாக வராது என்பதால் உதிட்டிரன் ஆவதும் உண்டு. அதே போல் யசோதை அசோதை ஆவதும் உண்டு; யசோதை என்ற பயன்பாடும் உண்டு.
கம்ஷன் கம்சன் ஆவது தற்சமம்; கஞ்சன் ஆவது தற்பவம்.
இப்படி நிறைய எடுத்துக்காட்டுகள் உண்டு.
இலக்கணப்படி என்ன இருக்கிறது என்பதைச் சொன்னேன்; அவ்வளவு தான். இலக்கணங்கள் மாறக்கூடாது என்றில்லை.
முன்பே 'கூடல்' பதிவில் 'சொல் ஒரு சொல் ஏன்' போன்ற தலைப்புகளில் இவ்விதயங்களைப் பற்றி நீண்ட நெடிய கட்டுரைகளை எழுதியிருப்பது உங்களுக்கும் தெரியும்; நீங்களும் படித்திருக்கிறீர்கள். :-)
அன்பின் ஜாலி ஜம்பர் ( அல்லது சாலி சம்பர்)
ReplyDeleteதருமி அண்ணனின் கருத்துகளோடு ஒத்துப் போகிறேன். பிறமொழிச் சொற்களைத் தவிர்ப்பதை முழு மனதுடன் ஆதரிக்கிறேன். அதே சமயம் பெயர்ச்சொற்களை ஒலி மாற்றம் செய்வது எனக்கு உடன் பாடில்லை.
ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என அழைத்த காலமெல்லாம் உண்டு - அவர் பெற்றோர் இட்ட பெயரை மாற்ற நமக்கு உரிமை இல்லை - மாற்றிய பெயரும் நிலைக்க வில்லை.
சென்னி என்றால் தலை எனப் பொருள் என்று நினைக்கிறேன். அண்ணனின் கூற்றுப்படி, மார்க்ஸின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவரது மகள் பெயரை உங்கள் மகளுக்கும் வைத்து விட்டு - அருமை மகளை சென்னி என அழைத்தால் அது உறவு மற்றும் நட்பு வட்டத்தில் எப்படி எடுத்துக் கொள்ளப்படும் - வரவேற்கப் படும் என்பதே கேள்விக்குறி தான்.
தனித்தமிழ் வேண்டும் - இல்லை யெனச் சொல்ல வில்லை. காலம் செல்கிற வேகத்தில் நாம் தனித் தமிழில் பின் தங்கி இருக்கிறோம். காலத்தின் வேகத்திற்கு ஈடு கட்டி நம்மால் தனித்தமிழைப் பரப்புவது என்பது இயலுமா ?
முதல்வர் - தமிழறிஞர் கலைஞர் தன் மகனை அன்புடன் ஸ்டாலின் எனத்தான் அழைக்கிறார். ச்டாலின் என்றோ சுடாலின் என்றோ அழைப்பதில்லை.
தமிழ் மொழி அறியாத பலரும் நம் அருமைத் தமிழ்ப் பெயர்களை உச்சரிக்கத் தெரியாமல் குத்திக் குதறுவது காதுக்கு நாராசமாக இல்லையா நண்பர்களே !
என் கருத்தினைக் கூறி விட்டேன்.
ஸ் - தமிழில் சு ஆகுமா?
ReplyDeleteஅது மெய் எழுத்தாச்சே. அப்புறம் அதை உயிர்மெய்யாக்கினால் எப்படி?
சடாலின் - நல்லாவா இருக்கு?
அயல்நாட்டு அறிஞர்கள்/மனிதர்கள் மேல் உள்ள ஈர்ப்பால் அவுங்க பெயரை வச்சுக்கும்போது, கொஞ்சமாவது யோசிச்சு இருக்கலாமுல்லே தமிழ்க் காவலர்கள்?
அவுங்க அதான் அந்த அயல்நாட்டுக்காரங்க நம்ம தமிழ்ப் பேரை வச்சுக்கிட்டா எப்படிச் சமாளிப்பாங்க?
வெறும் கோபால் என்றதையே Dopaul, Dobal, Gopaul, Gobul இப்படிக் கொடுமை செய்யறாங்க. ஒருத்தர் இவுங்களையெல்லாம் மிஞ்சி
Gospal ன்னு எழுதுனார்.
இயன்றவரை இனிய தமிழில் எழுதுனா ஆகாதா?
வலிய இழுத்துப்போட்டு மாற்றணுமா?
என்னமோ போங்க.......
2.//நம் மொழியில் இல்லாத ஒரு ஓசை உள்ள சொல்லை உங்கள் (நம்) மொழிக்குக் கொண்டுவரும்போது அந்த ஓசையைத் தரக்கூடிய எழுத்து நம்மிடம் இல்லையெனில், ஏன் அடுத்த மொழி எழுத்துக்களைப் பயன்படுத்தக் கூடாது?.//
ReplyDeleteஅய்யா,அடுத்த மொழி எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்று நேர்மையாகவே நம்பும்போது அதில் தவறேதும் இல்லை தான். ஆனால் வேற்று மொழி வார்த்தைகளை தமிழ்மயப்படுத்தினால் சிறப்பாக இருக்குமே என்பது தான் என் எண்ணம்.
குமரன் அழகான உதாரணங்களை கொடுத்துள்ளார்.
செங்கிஸ்கான் என்று தமிழில் புழங்கும் பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது இயல்பாகவே genghiskhan என்று புரிந்துகொண்டு நடக்கிறோம்.
சீசர்,கெய்சர்,சார்(ஜார்) மூன்றுமே ஒரே அர்த்தம் தான், ஆனால் அந்தந்த மொழிக்கேற்றவாறு மாறுதல் கொண்டுள்ளது.
//ஷேக்ஸ்பியரை செகப்பிரியர் என அழைத்த காலமெல்லாம் உண்டு - அவர் பெற்றோர் இட்ட பெயரை மாற்ற நமக்கு உரிமை இல்லை - மாற்றிய பெயரும் நிலைக்க வில்லை.//
ReplyDeleteசீனா அய்யா,
சேக்குப்பியரை [:-))] வெள்ளையர் போன்றே உச்சரிக்க அவசியம் இல்லை.புஷ்பா,ஹரீஸ் போன்ற பெயர்களை நம் மக்கள் புசுப்பா,அரீசு என்றே உச்சரிப்பது இயல்பானது.
துளசியம்மா,
ReplyDeleteஇ முன்னால் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இசுடாலின்.
இசுகூல் என்பது போல.
nouns (இதுக்கு தமிழ்ல பெயர்சொல்னு நெனைக்கிறேன்) தவிர மற்ற எல்லா இடத்துலயும் தூய தமிழ்ல கொஞ்சம் சிரம பட்டாவது பயன்படுத்தலாம்
ReplyDeleteஇண்ட்ரஸ்டிங் என்பதை நேரடி தமிழில் ஆர்வம் என எழுதலாம், அதற்காக இன்ரசுடிங் என்பது காமெடியாக(நகைச்சுவை)தான் இருக்கும்.
ReplyDeleteஉங்களுடன் ஒத்து போகிறேன்
// //sam george" என்ற பெயரை தமிழில் எழுத முடியவில்லை என்ற ஏக்கத்திலும் கோபத்திலும்..//
ReplyDeleteஇருக்குமோ? என்னமோ ஆழ்மனது, உள்மனது அப்டிம்பாங்களே அதுமாதிரியோ?
அதே மாதிரி மேல ராஜ நடராஜனும் என் கட்சியில் சேருவதற்கு அதுதான் காரணமோ? :-) //
அய்யா,உங்களுடைய இந்தப்பதிலுக்குப் பின் , மேற்கொண்டு நான் விளக்கங்கள் சொல்ல முற்படுவது அதிகப்பிரசங்கித்தனமாக தோன்றுகிறது, அதனால் நிறுத்திவிடுகிறேன்.
ஜாலி சம்பர்,
ReplyDeleteகீழே கொடுத்துள்ள உங்கள் கருத்துக்களோடு முற்றிலுமாக முரண்படுகிறேன்.
//தமிழில் எழுதும் போது சென்னி என்று எழுதலாம் என்றும் முடிவுக்கு வந்துள்ளேன்.//
அதாவது தமிழன்னைக்கு chastitiy belt கட்டாயம் போட்டு விடுவது என்று முடிவு செய்து விட்டீர்கள்; இல்லையா?
//சேக்குப்பியரை [:-))] வெள்ளையர் போன்றே உச்சரிக்க அவசியம் இல்லை.//
அதாவது தமிழை மற்றவர்களும் அவர்களுக்குப் பிடித்தது மாதிரி சொல்லலாம். இல்லையா? 9Mஉடியாமல் பேசுவதைச் சொல்லவில்லை.)
//இ முன்னால் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்கும். இசுடாலின்.
இசுகூல் என்பது போல.//
உங்க பள்ளியில் நீங்க இப்படித்தான் 'இசுகூல்' என்றா சொன்னீர்கள்?
//மேற்கொண்டு நான் விளக்கங்கள் சொல்ல முற்படுவது அதிகப்பிரசங்கித்தனமாக தோன்றுகிறது, //
இதில் ஏதுங்க அதிகப் பிரசங்கித்தனமெல்லாம்?
உ.த.,
ReplyDelete//என்னை மட்டும் ஏன் இப்படி நட்டாத்துல விட்டுட்டீங்க..?//
என்ன சொல்றீங்க?
ஜாலி ஜம்பர்,
ReplyDelete//அடுத்த மொழி எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை என்று நேர்மையாகவே நம்பும்போது அதில் தவறேதும் இல்லை தான். //
நல்லது.
//ஆனால் வேற்று மொழி வார்த்தைகளை தமிழ்மயப்படுத்தினால் சிறப்பாக இருக்குமே என்பது தான் என் எண்ணம்.//
அதாவது நமது மொழியையும், எந்த மொழியிலிருந்து சொற்களை எடுக்கிறீர்களோ அந்த மொழியையும் 'உண்டு இல்லை என்று பார்த்து விடுவது' என்கிறீர்கள்; இல்லையா? அதாவது 'இசுடாலின்', 'சேக்குப்பியர்' என்பது மாதிரி.
வாழ்க உங்கள் தமிழார்வம் - வேறென்ன சொல்வது!
சாலிசம்பர் சொல்வது சரி!!!!
ReplyDelete//BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...
ReplyDeleteசாலிசம்பர் சொல்வது சரி!!!!//
அதாவது,
ப்ளுச்பேசு அறிவுமணி செர்மனியில இருந்து சாலி சம்பர் சொல்றது சரின்னு சொல்றார்.
சரிதானே!
அடடா...அட டட..டா...
ReplyDeleteசாலிக்கு ஒரு ஓ போடுவோம்..
இப்போதைக்கு உள்ளேன் ஐயா...
பொறுமையாக நாளை நானும் கலந்துக்கிறேன்.
ஃஃஃஃஃஃஃஃஃ
நடுவில் நம்ம நிழற்பட வித்தகர் ஐயப்பன் (சீவ்சு என்று எழுதினால் அடிப்பாரோ என்ற பயம்), ஏன் தமிழில் பொய்யார்வம் காட்டுறீங்க..ஆர்வம் இருந்தால் தொல்காப்பியம் கற்க வந்திருக்கனும் என்று குட்டிவிட்டுப் போய்விட்டார்..
அதனால்..மனசாட்சியின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிட்டு, உங்கள் கேள்விகளுக்கு பதில்..போடுறேன் :P
TBCD,
ReplyDeleteஐயப்பன் சொன்னது சரி தான். தொல்காப்பியம் மட்டும் இல்லை. மற்ற சங்க இலக்கியங்களையும் தமிழார்வம் உள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். எத்தனை நாளுக்குத் தான் அடுத்தவர்கள் சொல்வதையே தமிழர் வரலாறு என்று படித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கப் போகிறோம்? நேரடியாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்தே தெரிந்து கொள்ளலாமே. தொடக்கமாக எனது 'கூடல்' வலைப்பதிவில் 'இலக்கியம்', 'இலக்கியத்தில் இறை' என்ற வகைகளைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கு வேறுபட்ட தமிழர் வரலாறு தென்படத் தொடங்கும்.
கற்றுணரவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை..
ReplyDelete///
TBCD,
ஐயப்பன் சொன்னது சரி தான். தொல்காப்பியம் மட்டும் இல்லை. மற்ற சங்க இலக்கியங்களையும் தமிழார்வம் உள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
///
இயல்பாக தமிழிலேயே எழுதுங்க என்றுச் சொன்னால், எல்லாரும், எட்டுத்தொகைப் படிச்சிட்டு தான் இயல்பான தமிழில் எழுதனும் என்பதாக நீங்க சொல்லவில்லை என்று புரிந்துக்கொள்ளலாமா.. :P
///
எத்தனை நாளுக்குத் தான் அடுத்தவர்கள் சொல்வதையே தமிழர் வரலாறு என்று படித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கப் போகிறோம்? நேரடியாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்தே தெரிந்து கொள்ளலாமே.
///
தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுதிய குமரன் என்று சொல்லாமா... :))
///
உங்களுக்கு வேறுபட்ட தமிழர் வரலாறு தென்படத் தொடங்கும்.
///
TBCD,
ReplyDeleteகிண்டல்களைக் கொஞ்சம் நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு சொல்ல வந்ததைச் சரியாகப் புரிந்து கொள்ள முயல்வோம். சரியா?
கட்டாயம் தமிழில் எழுதுபவர்கள் எல்லாம் சங்க இலக்கியங்களைப் படித்துவிட்டுத் தான் எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. சொன்னது, சொல்ல வருவது எல்லாம் தமிழார்வம் இருக்கிறது என்று சொல்லிக் கொள்பவர்களாவது சங்க இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்பதே. அவர்கள் கூட 'ஆர்வம் இல்லை' என்று ஒதுங்கினால் பின்னர் அவர்கள் பேசும் தமிழார்வம், தமிழ்ப்பற்று என்பதெல்லாம் வெறும் வெளிவேடம் என்று தான் புரிந்து கொள்ளப்படும். தமிழார்வமும் தமிழ்ப்பற்றும் பாராட்டப்படவேண்டியவை. அந்த ஆர்வமும் பற்றும் சங்க இலக்கியங்களைக் கற்றுணர்வதால் இன்னும் நன்கு வளரும் - அவ்வளவு தான் சொல்ல வந்தேன். அதற்கு மேல் எதையும் உய்த்துணராதீர்கள். :-)
தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுத இந்த குமரன் யார்? தரவுகளை வரிசையாகத் தந்து வருகிறேன். அதற்கு என்னுடைய விளக்கங்களையும் உய்த்துணர்வுகளையும் தருகிறேன். வெறும் இடைபரட்டுகளை (Interpretation) மட்டும் தந்து சென்றால் அது முழுமையாக இருக்காது என்பதால் தரவுகளோடு தருகிறேன் - அத்தரவுகளை மற்றவர் இன்னும் நன்கு உரசிக் கற்று என்னுடைய இடைபரட்டுகள் சரியா இல்லையா என்று சொல்லலாம் என்றே. தமிழார்வமும் பற்றும் உடையவர்களேனும் அவற்றைப் படிக்க வேண்டும் இல்லையா? எவ்வளவு நாட்கள் தான் வெறும் இடைபரட்டுகளை மட்டுமே அதுவும் வெளியாட்கள் சொன்னதையே படித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? நேரடியாக நாமே தமிழ் இலக்கியங்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாமே? இதைத் தான் சொன்னேன். தமிழர் வரலாறு பலவித இடைபரட்டுகளுடன் பலவித தவறுகளுடன் எழுதப்பட்டிருப்பதாகவே சங்க இலக்கியத்தை நேரடியாகப் படிக்கும் போது தோன்றுகிறது. அவற்றை எடுத்து வைப்பதால் 'வரலாற்றை மாற்றி எழுதியவன்' ஆகிவிடமாட்டேன். அந்த அளவிற்குத் தமிழ்ப்புலமையும் பயிற்சியும் இன்னும் ஏற்படவில்லை.
///
ReplyDeleteTBCD,
ஐயப்பன் சொன்னது சரி தான். தொல்காப்பியம் மட்டும் இல்லை. மற்ற சங்க இலக்கியங்களையும் தமிழார்வம் உள்ளவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
///
கற்றுணரவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை..
///
எத்தனை நாளுக்குத் தான் அடுத்தவர்கள் சொல்வதையே தமிழர் வரலாறு என்று படித்துக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கப் போகிறோம்? நேரடியாகத் தமிழ் இலக்கியங்களைப் படித்தே தெரிந்து கொள்ளலாமே.
///
இயல்பாக தமிழிலேயே எழுதுங்க என்றுச் சொன்னால், எல்லாரும், எட்டுத்தொகைப் படிச்சிட்டு தான் இயல்பான தமிழில் எழுதனும் என்பதாக நீங்க சொல்லவில்லை என்று புரிந்துக்கொள்ளலாமா.. :P
///
உங்களுக்கு வேறுபட்ட தமிழர் வரலாறு தென்படத் தொடங்கும்.
///
தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுதிய குமரன் என்று சொல்லாமா... :))
TBCD,
(முன்னும் பின்னுமாக) இப்படி பதிவிட்டால் வாசிப்பவர்களுக்கு எளிதாயிருக்காதா?
தமிழ் மேல என் இந்த (கொலை) வெறி? விடங்கப்பு தமிழ் மேல ஆர்வம் இருக்குறது தப்பு இல்லை. பேச்சு வழக்குல தூய தமிழ் பயன்படாது முடியாதுன்றத எல்லாரும் ஒத்துகுறீங்கள.. அது போதும். எழுத்து வழக்குல தூய தமிழ் பயன்படுத்த எல்லாரும் கொஞ்சம் சிரம பட்டாவது பயன்படுத்துவோம்.
ReplyDeleteசுவாரசியமாகத்தான் இருக்கிறது விவாதம்.
ReplyDelete- எந்த ஒரு மொழியுமே தோன்றிய காலந்தொட்டு ஒரே வடிவத்தையோ, லிபியையோ, சொற்களையோ கொண்டிருப்பதில்லை. தமிழ் மொழியின் எழுத்து வடிவம் பல்வேறு காலத்திலும் மாறுபட்டு வந்திருக்கிறது. எழுத்துருக்களின் பயனம் என்ற தலைப்பில் பதிவர் பிகேபி பதிவிட்டிருக்கிறார். உதாரணமாக ’ஐ’ என்னும் எழுத்துரு ஆரம்பகாலத்தில் இல்லை. கிபி 9ம் நூற்றாண்டில்தான் சேர்ந்தது. ‘ஔ’ மற்றும் ‘ஃ’ வெகு பின்னர் சேர்ந்திருக்க வேண்டும்.
அதுபோல் ஜ, ஷ, ஹ, கஷ போன்ற எழுத்துகளும் பின்னர் சேர்ந்திருக்க வேண்டும். தமிழ் மொழி பல்வேறு எழுத்துருக்களை சேர்த்து கொண்டிருப்பது அது மொழியின் வளர்ச்சிக்குத்தானே வழி வகுக்கும்? இல்லை நமது மக்கள் உச்சரிக்கும் முறையில்தான் மொழியும் இருக்க வேண்டும் என்றால் சிறப்பு ‘ழ’கரம் தமிழில் இருந்திருக்கவே முடியாது. மலையாளிகள் உச்சரிக்கும் அளவிற்கு கூட தமிழர்களில் பெரும்பாலோனோர் ‘ழ’கரத்தை உச்சரிப்பது கிடையாது.
எழுத்துருக்களின் வடிவ மாறுதலை பார்க்கும்போது கிபி பதினைந்தாம் நூற்றாண்டு வரை பல்வேறு இந்திய மொழிகளின் (தமிழ் உட்பட) எழுத்துரு ஒன்றாகவே இருக்கிறது. பின்னர் சற்று வேறு வடிவத்தில் (தற்போதைய தென்னிந்திய எழுத்துருக்களின் வகை போன்று) சேர்ந்து எழுதும் அளவிற்கு மாறியிருக்கிறது. இது அன்றைய தேவைக்கு ஏற்ப மாறியிருந்திருக்கலாம். இல்லை நான் இப்பொழுதும் 14-ம் நூற்றாண்டு முறைதான் ‘க’ எழுதுவேன் என்று அடம்பிடிக்கமுடியுமா என்ன?
வங்காள மொழியில் ‘ர’கர ஒலி கிடையாது. அதனால் அந்த மாநிலத்தில் பலருக்கும் ‘ர’கர ஒலிக்கவே வராது. எண்ணற்ற இலக்கியம் இயற்றப்பட்டாலும், ‘சக்ரபர்த்தி’ என்றுதான் அவர்கள் சொல்ல பழக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழில் பெரும்பாலும் எல்லா ஒலிகளுமே உண்டு. 19-ம் நூற்றாண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட எழுத்துகள் மட்டும் என்ன பாவம் பண்ணியதோ (ஔ மற்றும் ஃ தவிர).
லை, னை, போன்ற எழுத்துகளில் துணையெழுத்து மாற்றம் போன 40 ஆண்டுகளில்தான் நடந்தது. தற்போதைய unicode-ல் அப்படித்தான் நாம் பயன்படுத்துகிறோம். அதே சமயம் கூ, சூ, லூ போன்ற வெவ்வேறு விதமான முறையில் நெடில் எழுதும் வழக்கம் இன்றும் தொடரத்தான் செய்கிறது.
ஆகவே எழுத்துரு மாற்றங்களோ, புதிய எழுத்துகளோ மொழிக்கு சிறப்பு தருபவையாகவே இருக்கின்றன என்பது எனது எண்ணம்.
கம்பர் தம் பல்லாயிரம் பாடல்களில் இராமன் கதையையே கூறுகின்றாராயினும் ஓரிடத்தில்கூட இராமனை ராமனென்று குறிக்கவில்லை.அவர் வடமொழிப் பெயர்களைத் தமிழ் ஒலிப்படுத்தியும் மொழிப்படுத்தியும் ஆக்கும் பெயரமைப்புகள் குறிப்பிடத்தக்கன. அவற்றை நம் இளைய தலைமுறையினர் அறியவேண்டாமா?
ReplyDeleteரிஷபம் இடபமாய், லட்சியம் இலட்சியமாய், பைபிள் விவிலியமாய்,ஜாக்கப் ஆக்கோபு ஆய் ஆக்கம் பெற்ற பழம் மரபுகளை என்ன செய்வது? இவற்றை அவ்வாறே எடுத்தாள்கின்ற பழந்தமிழிலக்கியங்களை எதிர்கால இளம்தலைமுறையினர் விளங்கிக் கொள்ள வேண்டாமா?
பழைய மரபையும் விட்டுவிடாமல், இன்றைய புதிய சொல்லாட்சிகட்கும்
இடம் கொடுத்துத் தமிழின் இனிமையும் எளிமையும் இளமையும் கெடாமல் வரம்புகட்ட வேண்டி நேரம் இது. இதில் தமிழர்கள் ஓற்றுமையுடன்
கூட்டுணர்வுடன் செயற்பட வேண்டும்.
வெறும் விவாதங்கட்கு இடம் தந்து தமிழை இழந்துவிடக் கூடாது.
பிறமொழிச் சொற் கலப்பு ஒரு மொழிக்குப் புறத்தே ஏற்படும் மாற்றம் போன்றது; ஒலிக்கலப்பு அகத்தே ஏற்படும் மாற்றமாகும். பிற சொற்களை தமிழ்ப்படுத்தி , தமிழ்மயமாக்கி ஆள்வதன் மூலம் தமிழ் வளரும்; பிறமொழி ஒலிப்புக்களைப் புகுத்தப்புகுத்த ஒரு மொழி வேறொரு மொழி போல் மாறித் தோன்றத் தொடங்கும்.
ReplyDeleteஒரு மொழியின் இலக்கண மரபுகள் அதன் வாழ்வாகும். அடிப்படை இலக்கண மரபுகளை மாற்றுவது, இனம் மாறிப் பிறிதொரு இனத்திற்கு ஆட்படுவதாகும்.
தமிழ் விடுதலை ஆகட்டும் !
ReplyDeleteசி. ஜெயபாரதன், கனடா
http://jayabarathan.wordpress.com/
புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! …
சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! ….
என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!
மகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)
தலைமுறை ஒரு கோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்! ….
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!
பாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)
மின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்
உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாச்சாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.
தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தூய தமிழரும், தூய தமிழும்
ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றைப் புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?
அன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசி யிருக்கலாம்! திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.
2500 ( ?) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!
தூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்!
நண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் (Pathivukal.com)[2] என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார்! என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார்! அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன்! வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்! வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ? நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.
தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!
பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த நுட்ப விஞ்ஞானப் பொறியியற் திறங்களையும், புத்தம் புதிய கலைகளையும் தமிழ்மொழியில் படைத்திடப் பின்வரும் பாடலில் நமக்கெல்லாம் கட்டளை யிட்டுச் சென்றிருக்கிறார்.
புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!
என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!
ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் பெண் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரியா வித்தியாலய உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது! தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது! ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன! இதே போல் எத்தனையோ தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை! புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன்! திரு இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்!
இதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடைகளில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம்! ஆயினும் அது ஒற்றைப் பணிதான்! நூறு பணிகள் அல்ல! அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார்! ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்! தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்!
போலித் தமிழர்கள் ! தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !
தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ் நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !
தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள்! தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன! இது போன்று வங்காளத்தில் உண்டா ? பஞ்சாப்பில் உண்டா ? மகாராஷ்டிராவில் உண்டா ? தமிழ் நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு! அவர்கள்தான் போலித் தமிழர்கள்!
ரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்; உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.
சலுகை போனால் போகட்டும்! என்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒருகோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!
என் உயிர் போனால் போகட்டும்!
என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!
என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும்‘, என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.
***********
தகவல்:
1. http://www.geotamil.com/pathivukal/jeyabarathan_on_buhari_oct2005.html
2. http://www.geotamil.com/pathivukal/response2_on_jeyabarathan.html
3. http://www.geotamil.com/pathivukal/response3_by_jeyabarathan.html
4.http://www.geotamil.com/pathivukal/response6_jeyabarathan_barathithasan.html
********
S. Jayabarathan
http://jayabarathan.wordpress.com/
[jayabarat@tnt21.com (April 14, 2008)]
//உங்க பள்ளியில் நீங்க இப்படித்தான் 'இசுகூல்' என்றா சொன்னீர்கள்?//
ReplyDeleteCzech: škola
Danish: skole
Dutch: school
Estonian: kool
Finnish: koulu
French: école
German: die Schule
Hungarian: iskola
Icelandic: (barna)skóli
Indonesian: sekolah
Italian: scuola
Latvian: skola
Lithuanian: mokykla
Norwegian: skole
Polish: szkoła
Portuguese (Brazil): escola
Portuguese (Portugal): escola
Romanian: şcoală
Slovak: škola
Slovenian: šola
Spanish: escuela, colegio
Swedish: skola
Turkish: okul
இந்த வரிசையோடு 'இசுகூல்-isukul' என்று இடம் பெறுவது என்ன தவறு?
ஆங்கிலத்தில் 'ஸ்கூல்' என்று உச்சரிக்கத்தெரிந்ததனால் , தமிழிலும் அதே உச்சரிப்பைக் கொண்டு வரவேண்டும் என முனையும் போது தமிழின் இயல்பை நாம் மாற்றுகிறோம்.ஆங்கில உச்சரிப்பைக் கற்காத ஒரு தமிழன் 'இசுகூல்' என்றே உச்சரிக்கிறான்.
'Z' என்ற ஆங்கில எழுத்தை 'இசட்' என்று பெரும்பாலானோர் உச்சரிக்கவும்,எழுதவும் செய்கிறோம்.'zed' என்று உச்சரிக்க,எழுத சிரமம் என்பதால் 'இசட்' என்று பயன்படுத்துகிறோம்.இதில் என்ன தவறு இருக்கிறது?
//உதாரணமாக ’ஐ’ என்னும் எழுத்துரு ஆரம்பகாலத்தில் இல்லை. கிபி 9ம் நூற்றாண்டில்தான் சேர்ந்தது. ‘ஔ’ மற்றும் ‘ஃ’ வெகு பின்னர் சேர்ந்திருக்க வேண்டும்.//
ReplyDeleteஇந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வாதம் சரியானது தான்.ஆனால் இது தவறான செய்தி.
//இந்த வரிசையோடு 'இசுகூல்-isukul' என்று இடம் பெறுவது என்ன தவறு?//
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை அது தவறுதான். .
தமிழில் பள்ளி/ பாடசாலை என்று சொல்லுவோம். இசுகூல் என்றால் தமிழும் அசிங்கப்படுகிறது. அதுபோலவே ஆங்கிலமும்.
ஜாலி ஜம்பர்,
//தமிழன்னைக்கு chastitiy belt கட்டாயம் போட்டு விடுவது என்று முடிவு செய்து விட்டீர்கள்; இல்லையா?/
இதன் பொருளைப் புரிந்து கொண்டீர்கள் என்றே நினைக்கின்றேன்.
நானும் தருமி கட்சி என்பதை சொல்லத்தேவையில்லை ..இல்லையென்றால் நான் 'சோ' ஆகிவிடுவேன் என்பதற்காக அல்ல :)
ReplyDelete//உதாரணமாக ’ஐ’ என்னும் எழுத்துரு ஆரம்பகாலத்தில் இல்லை. கிபி 9ம் நூற்றாண்டில்தான் சேர்ந்தது. ‘ஔ’ மற்றும் ‘ஃ’ வெகு பின்னர் சேர்ந்திருக்க வேண்டும்.//
ReplyDeleteஸ்ரீதர்,
இராம.கி அய்யாவின் இந்தப்பதிவைப் பாருங்கள்.
http://valavu.blogspot.com/2006/10/1.html
(ஸ்ரீதரை ஆங்கிலத்தில் sridhar என்று எழுதுவது சரிதானா என்பதை உறுதிப்படுத்துங்கள்.)
தொல்காப்பிய செய்யுளில், ஐ வருதே..
ReplyDelete{
4. ஆ ஈ ஊ ஏ ஐ
ஓ ஔ என்னும் அப்பால் ஏழும்
ஈரளபு இசைக்கும் நெட்டெழுத்து என்ப.}
http://kaduveli.blogspot.com/2006/06/02.html
http://valavu.blogspot.com/2006/10/3.html
ஒருவேளை தொல்காப்பியமே 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று சொல்லுறாங்களோ..
தொல்காப்பியம் கி.மு700க்கு முற்பட்டது என்று சொல்லப்படுது.
"ஐ" ஆதியிலே இருந்ததா இல்லையா என்று தெரியவில்லை..ஆனால், தொல்காப்பிய காலத்திலே இருந்திருக்கிறது...