Thursday, January 14, 2010

366. நீயா .. நானா? & சூர்யாவின் "அகரம்"

*

'காக்க காக்க' படத்தில் இதுவரை தமிழ் திரையுலகில் யாரும் செய்யாத அளவு காவலதி்காரியின் உடல் மொழிகளைக் கையாண்டபோது கூட இது இயக்குனரின் ஆளுமை என்றே நினைத்தேன். ஆனால் பாலாவின் பிதாமகனில் தான் வரும் பாத்திரத்தை மிக அழகாக ஆக்கியதைப் பார்த்ததும் சூர்யா என்ற நடிகனை நிரம்பப் பிடித்து விட்டது. ஆனால் பொங்கல் நாளான இன்று நடந்த நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்ததும் அந்த 'மனிதனை' மிக மிகப் பிடித்து விட்டது.



தான் முதல் 10 லட்சம் என்றளித்து, இன்னும் 9 பேரிடமிருந்து 90 லட்சம் வாங்கி இன்று "விதை'யாக ஒரு முதல் கோடி ரூபாயைச் சேர்த்து, 'இது உங்கள் பணம்; படிக்க அல்லலுறும் குழந்தைகளுக்கான கல்விக்கு உதவியாக இது தனது 'அகரம்' அமைப்பில் இருக்கும்' என்று கூறியது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.


கோபிநாத், இந்த ஒரு கோடியை நீங்களே கொடுத்திருக்கலாமே; எதற்காக இன்னும் 9 பேர் என்று கேட்ட போது, 'அப்படி நானே கொடுத்திருந்தால் அது வெறும் பண பலம்; ஆனால் இப்போது இந்த ஒரு கோடி காண்பிப்பது மனபலம்' என்ற பதில் நன்றாக இருந்தது.

ஒரு ஏழைப்பெண் தன் நிலை பற்றிக் கூறிக்கொண்டிருக்கும்போது கலங்கிய சூர்யா, இனி அகரம் உன்னைக் கவனித்துக் கொள்ளும் என்று சொல்லியதும் நன்றாக இருந்தது.

தன் தந்தை ஆரம்பித்த கல்விப்பணியை மேலும் ஒரு படி உயர்த்தி செம்மையாக நடத்த நினைக்கும் சூர்யாவிற்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுகளும், நன்றியும்.

இது ஒரு publicity stunt என்ற போர்வைக்குள் நிச்சயமாக வந்த ஒரு செயல்பாடு அல்ல என்று மிக உறுதியாக நம்புகின்றேன். காலத்தால் செய்யும் உதவி ... இன்னும் பலரும் அதில் பங்கெடுப்பார்கள் என்றே நம்புகிறேன்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சி 10 லட்சம் கொடுத்து தன்னையும் இதில் இணைத்துக் கொண்டதையும், இன்று காலையில் இரு மணிநேரம் இக்காட்சியை ஒளிபரப்பியதையும், மாலையே மீண்டும் ஒளி பரப்பியதையும் பார்க்கும்போது அந்த தொலைக்காட்சியின் மீதும் நல்லெண்ணம் தோன்றியது. இந்த நிகழ்ச்சிக்கு இத்துணை சிறப்புத் தன்மை அளித்த அந்த தொலைக்காட்சிக்கும் என் நன்றியும் பாராட்டுக்களும்.

ஏழ்மையில் வாடும் அந்தச் சின்னப்பசங்களைப் பார்க்கும்போது ஒரு வித பெருமையும் மனதில் தோன்றியது. 15 ஆண்டுகளாகக் கூலி வேலை செய்யும் தன் பெற்றோருடன் வேலை செய்து இன்று இரண்டாமாண்டு மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஒரு மாணவன்; அவனது முதலாண்டுக்கு அகரம் உதவியளித்த போது தனக்கு இந்த ஆண்டுக்கான உதவி கிடைத்து விட்டது, ஆகவே இவ்வருட உதவி வேண்டாம் என்ற அந்தப் பையனின் பெருந்தன்மை; உடுத்த உடையின்றி அடுத்தவர் உடையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏழைப் பெண்; அவளின் உயர்ந்த மதிப்பெண்; கோயம்பேட்டில் மூட்டை தூக்கி சகோதரர்கள் இருவர் கல்லூரிக் கல்வி பயில்வது --- அம்மாடி! நமது சமூகத்தில் இப்படிப்பட்ட இளைஞர்களா என்ற பெருமையை அளித்தது. அதுவும் கல்வியில் அவர்களின் உயர்வு நமக்குப் (எனக்கு ..?) பழக்கமான சில 'கானல்நீர்'களை உடைத்ததுவும் மிக்க மகிழ்ச்சியை அளித்தது.

நாம் வளர்கிறோம் ....

"அகரம்" இணையப் பக்கம்: http://agaram.in


*

20 comments:

  1. கண்டிப்பாக நாம் வளர்கிறோம்.பாராட்டப்படவேண்டிய செய்தி. நம் பதிவர் ஒருவர் கூட ஆண்டுக்கு 10 லட்சம் தன் சொந்தப்பணம் செலவு செய்து கல்விச்சேவை செய்கிறார். ஏனோ அவர் வெளியில் சொல்வதில்லை. ஒருவேளை எதிர்பார்ப்புகள் அதிகமானால் பூர்த்தி செய்யமுடியாது என்ற எண்ணமாக இருக்கலாம்.

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல விஷயம்.. சூர்யாவுக்கும், அவரோடு கை கோர்த்திருக்கும் நண்பர்களுக்கும், விஜய் டிவிக்கும் வாழ்த்துகள்..-))))

    ReplyDelete
  3. ஆமா தருமி .. நீங்க சொல்லுறது சரி தான் .. காலைல நான் அந்த நிகழ்ச்சி பாத்தேன் . ரெம்ப அருமையா சூர்யாவும் முருக தாசும் பேசினாங்க /

    ReplyDelete
  4. ம்ம்..இனிமேதான் பார்க்கணும்!

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. நல்ல பகிர்வு. நல்லது நடந்தால் நன்மையே...

    ReplyDelete
  6. குடுகுடுப்பை,
    கா.பா.,
    மீன் துள்ளியான்,
    gulf-tamilan,
    தென்றல்

    ...........நன்றி

    ReplyDelete
  7. //நம் பதிவர் ஒருவர் கூட ஆண்டுக்கு 10 லட்சம் தன் சொந்தப்பணம் செலவு செய்து கல்விச்சேவை செய்கிறார். //

    வெளிச்சத்திற்கு வந்தால் நன்றாக இருக்காதா? இப்படியும் சில நல்ல உள்ளங்கள்!

    ReplyDelete
  8. அன்பின் தருமி அண்ணே

    இடுகை அருமை - நானும் நீயா நானா பார்த்த உடன் இடுகை இட எண்ணினேன் - சற்றே தாமதம் - இடுகை வந்து விட்டது

    சூரியாவின் நல்ல உள்ளத்திற்கும் - அகரத்தில் இணைந்த நல்ல உள்ளங்களுக்கும் நல்வாழ்த்துகள்

    மனபலம் நிறைந்த உறுதி நிச்சயம் வெற்றி பெறும்

    நன்றி தருமி அண்ணே

    ReplyDelete
  9. மிகவும் நல்ல முயற்சி. இந்த முயற்சியோடு தொடர்புள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்.

    உதவி செய்ய நினைப்பவர்களுக்கு எழும் முதல் ஐயம்... அந்த உதவி சரியான நபருக்குச் செல்கிறதா என்பதுதான். அது போன்ற ஐயங்களை நீக்க அகரம் போன்ற அமைப்புகள் வழியாகவும் உதவலாம்.

    ReplyDelete
  10. மனபலம் பெருகட்டும்.

    ReplyDelete
  11. நானும் பார்த்தேன் ,நல்ல விஷயம்.சூர்யாவையும் அவருடன் இந்த முயற்சியில் இருப்பவர்களையும் பாராட்ட வேண்டும்.

    ReplyDelete
  12. நானும் பார்த்தேன் தருமி.
    அந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது ,மிகவும் பெருமையாக இருந்தது. தன்னடக்கம்,வறுமையில் தெளிவு,
    சுயபச்சாதாபம் சிறிது கூட அவர்கள் முகத்தில் இல்லை.
    சூரியாவின் கண்கலங்கினது கூட ஒரு ஆட்டோமாடிக் நிகழ்ச்சியாகத்தான் நடந்தது.
    அகரம் வளரட்டும்.
    காலம் மாறி,வறுமைக் கோடே இல்லாமல் போகட்டும்.

    ReplyDelete
  13. இரண்டு முறையும் அந்த நிகழ்ச்சியினைப் பார்த்தேன்...
    அந்த பேஸ் மேக்கர் வைத்த ப்ரபசரின் பேச்சு என்னை அதிகம் கலங்க வைத்தது. .. பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளை நான் அவற்றின் அபத்தமான தலைப்புகளுக்காக பார்ப்பதே இல்லை.. இம்முறை தான் பார்த்தேன்.. நீங்க குறிப்பிட்டிருப்பது போலவே வேறு பல நிகழ்ச்சிகளை செய்ய வாய்ப்பிருக்கும் ஒரு சிறப்பு தினத்தில் இதை இருமுறை ஒலிபரப்பியது பாராட்டப்படவேண்டிய விசயமே.. (லாபத்தில் தான் நஷ்டம் என்றாலும் செய்ய மனம் வேண்டும்)

    ReplyDelete
  14. 1134 மதிப்பெண் பெற்று, கட்டணம் கட்ட வசதியில்லாததால், கூரியர் டெலிவரி வேலை செய்யும் மாணவன் பேசியபோது அப்படியே அதிர்ந்து போனேன், நிஜமாகவே உடல் நடுங்கியது. சூர்யா அந்த மாணவனிடம், "இப்போ படிக்க சந்தர்ப்பம் கிடைச்சா படிப்பீங்களான்னு" கேட்டபோது ஆறுதலாக இருந்தது.

    அதேபோல, கொயம்பேட்டில் மூட்டை தூக்கி தம்பியையும் படிக்க வைத்து, அண்ணன் தானும் படிப்பதும்.

    ReplyDelete
  15. எல்லா நடிகர்களும் இப்படியே இருந்துட்டா நாட்டில் ஏழ்மையை ஒழிச்சிரலாம் போலயே!

    ReplyDelete
  16. நானும் பார்த்தேன்.

    அகரத்தில் இணைந்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. பசிக்கு உணவு கொடுத்த அது ஒரு வேளை பசியத்தான் போக்கும்.
    ஆனா ஒரு மாணவணுக்கு கல்வியக் கொடுத்தா அது ஒரு தலைமுறையையே நிமிர்த்தி நிறுத்தும் என்பது தான் நான் நம்புவது. மீனைக் கேட்டால் தூண்டிலை கொடுன்னு சொல்லுற ஜப்பானிய பழமொழி போல.
    கல்விக்கு உதவி செய்பவர்கள் யாரா இருந்தாலும் அவங்க கடவுள் போலத் தான். சூர்யாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    சிவக்குமார் என்ற சிறந்த மனிதரின் பிள்ளை என்பதை பலமாக நிருபிக்கிறார் சூர்யா.

    ReplyDelete
  18. நான் உண்மையில் நடிகர் சூர்யாவின் ரசிகை அல்ல.ஆனால் அகரம் நிருவகி சூர்யாவின் மாபெரும் ரசிகை.

    ReplyDelete
  19. i love agaram and also surya.i pray for all the members of agaram.god bless u and ur family surya.

    ReplyDelete