*
முதல் இடுகை ... 1
இரண்டாம் இடுகை ... 2
மூன்றாம் இடுகை ... 3
நான்காம் இடுகை ... 4
ஐந்தாம் இடுகை...5
COME BE MY LIGHT
THE PRIVATE WRITINGS OF THE "SAINT OF CALCUTTA"
நான் நம்பிக்கைகளோடு இருந்த காலத்திலும் கிறித்துவம் பற்றிப் பல ஐயங்கள் எனக்குள் எழுவதுண்டு. ஆனாலும் அந்த அவநம்பிக்கைகளை உடனே புறந்தள்ளி, 'விசுவாசத்திற்குள்' மனதை இழுத்துக் கொள்வதுதான் வழக்கமாக நடந்து வந்தது. (நம்பிக்கை என்பதற்கான கிறித்துவ சொல்: விசுவாசம்.) வந்த ஐயங்களில் பல ஐயங்கள் எனக்கு மிக்க நியாயமாகவே தெரியும். ஆனாலும் இப்படிப்பட்ட சந்தேகங்களோடு எப்படி மதத்திற்குள் இருப்பது என்ற கேள்வி மனதுக்குள் எழும். அதைவிடவும் மத அறிவு முழுவதுமாக இல்லாத எனக்கு இது போன்ற சந்தேகங்கள் வருகின்றன. ஆனால் மிகவும் ஆழந்த மத அறிவு பெற்ற பெரியவர்கள் - குருக்கள், பிஷப், போப் - எவ்வளவு பேர் இருக்கிறார்கள்; அவர்களெல்லோரும் எந்த அளவு மதங்களைப் பற்றிய ஆய்வு செய்திருப்பார்கள்; theology - சமய அறிவு எவ்வளவு அவர்களிடம் இருக்கும் ... ஒருவர் குருவானவராவதற்கு ஏறத்தாழ 10 - 12 ஆண்டுகள் இறையியல் படிப்பார்கள். அப்படிப்பட்டவர்களே கிறித்துவத்தில் நம்பிக்கையோடு இருக்கும்போது நான் என்ன ஒரு சரியான 'பிசாத்து' .. ஆகவே என் சந்தேகம் தவறானதாகத்தான் இருக்க வேண்டும்; நம் சந்தேகத்திற்கான நல்ல பதில்கள் இருக்க வேண்டும்; அது நமக்குத் தெரியவில்லை என்ற ஒரு காரணத்தை எனக்கு நானே சொல்லிக் கொண்டு 'விசுவாசத்தில்' உறுதியாக நின்ற காலமும் உண்டு.
ஆனால் இப்போது சில விஷயங்கள் புரிகின்றன. "பெரிய & நல்ல " கிறித்துவர்களுக்கும், (கிறித்துவர்களுக்கு மட்டுமல்ல; எல்லா மத நம்பிக்கையாளர்களுக்கும் ) இதுபோன்ற கேள்விகள் மனத்தில் எழுகின்றன. நானொரு சாதாரணமானவன்; என் சந்தேகங்கள் வலுப்பெறும்போது நான் என் நம்பிக்கைகளிலிருந்து வெளியே எளிதாக வந்துவிட முடிந்தது. ஆனால் உலகத்துக்கே தெரிந்த அந்த "பெரிய & நல்ல " கிறித்துவர்கள் எப்படி அது போல் எளிதாக வெளிவர முடியும்? இருந்து வளர்ந்த அந்த மதங்களை அவர்கள் எப்படி புறந்தள்ள முடியும்?
மதங்களை நமது மேல்சட்டை என்று நான் கூறுவதுண்டு. என்னால் என் மேல்சட்டையை எளிதாகக் கழற்றி வைத்துவிட முடியும்; முடிந்தது. ஆனால் அந்த மதமே என் உயிர் என்று சொல்லிக்கொண்டிருக்கக் கூடிய ஒருவரால் அப்படி எளிதாக 'சட்டை கழற்ற முடியாது'.
இதுபோன்ற ஒரு நிகழ்வை, நாமெல்லோரும் அறிந்த அன்னை தெரஸாவின் வாழ்க்கையில் நடந்ததை நினைக்கும்போது முதலில் அதிர்ச்சியானதாகவும், பிறகு ஆச்சரியமானதாகவும் தோன்றியது. அவர் தன் வாழ்நாளில் தனது ஆன்மீக வழிகாட்டிகளிடம் மதங்களில், கிறிஸ்துவில் தான் கண்ட ஐயங்களை கடிதங்கள் மூலமாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவைகளை தன் காலத்திற்குப் பின் எரித்து விட அவர் கேட்டுள்ளார். ஆனால் கிறித்துவத் திருச்சபை அவைகளை எரிக்காமல் இருந்தது மட்டுமின்றி, அவைகளை நூலாக யாரும் வாசிக்கும்படி அச்சிட்டிருப்பது மிகுந்த ஆச்சரியப்படும் விஷயமாக உள்ளது.
இந்த நூலில் அன்னையின் வாழ்வின் பெரும்பகுதியில் அவரது ஆன்மீக வாழ்வில் அவருக்கு நடந்த கடினமான, மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டமான வாழ்க்கை தெளிவெனத் தெரிகிறது. இறை நம்பிக்கைகளில் இருந்த குழப்பத்தை அவர் தனது சமூக வாழ்க்கையில் வெளிக்காண்பிக்காது, தன் சேவைகளைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார். மனதுக்குள் இருந்த அந்த வெருட்டும் தனிமையும், ஆன்மாவை அழுத்திய கருமையும் அவரது இதயத்தில் இருந்த சமூக ஆர்வத்தைத் தொடாமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். வெளியே கொழுந்து விட்டு எரிந்த ஏழைகளின் மீதான அன்பு; உள்ளே தனக்குள் நடத்திக் கொண்ட ஆன்மீக தவிப்பு -- இந்த இரண்டுக்கும் நடுவில் நடந்த வாழ்க்கை அவரை ஒரு அபூர்வ ஆன்மீகவாதியாகக் காண்பிக்கிறது.
இப்பதிவை மிகவும் யோசித்த பிறகே வலையேற்றுகிறேன். அன்னை தெரஸாவை எல்லோரும் மிகவும் மதிப்பும் மரியாதையும் மிகுந்த இடத்தில் வைத்திருக்கிறோம். எனது இப்பதிவு அவரை அவ்விடத்திலிருந்து கீழே இறக்கி விடுமோ என்ற ஒரு சிறு அச்சம். ஆனால் பலரும் அவர் மேல் வைத்திருக்கும் அன்பிற்கான காரணம் அவர் ஒரு பெரிய கிறித்துவர் என்பதால் அல்ல; ஆதரவற்ற பலரின் அமைதியான இறுதிக் காலத்திற்கு வழி கோலியவர்; எப்போதும் ஏழைகளுக்கு பெரும் ஆதரவாயிருந்தவர் என்பதே காரணம். அந்தக் கோணத்தில் பார்த்தால் இப்பதிவு அவரின் மேல் நாம் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையும் இன்னும் அதிகமாக்கும் என்றே நினைக்கிறேன்.
இந்து பக்தி இலக்கியங்களில் ஜீவாத்மா பரமாத்வாவைத் தேடி ஓடும்; பல தடைகளைத் தாண்டும். சூடிக்கொடுத்த ஆண்டாளும், மீராவும் அப்படி பரமாத்வைத் தேடி ஓடிய ஜீவாத்மாக்கள். பரமாத்வோடு இணைந்து பரவசமாகத் துடித்த மனத்தோடு இருந்தவர்கள்.
அதுபோல், இங்கும் அன்னை தனது இறை நம்பிக்கையையே கேள்வியாக எழுப்பினும், இதுவரை தன்னை ஆண்டு வந்த இறைவனை மீண்டும் மீண்டும் தனக்குதவ அழைக்கிறார். தான் ஒரு இருட்டில் இருப்பதாகவே எண்ணுகிறார்.
அவரது கடிதங்கள் பல ஒன்றாக சேகரிக்கப்பட்டு இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. அன்னைக்கு மதத்தில், ஏசுவிடத்தில் எழுந்த ஐயங்களையும், அதையும் தாண்டி அவர் கடவுளை நோக்கி தனக்கு 'ஒளி' வரவேண்டுமென பக்தியோடு வேண்டி நின்றதையும், இவ்வித ஐயங்கள் இருப்பினும் அவரது ஏழைகளுக்கான தியாக வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்து வந்ததையும் இந்த நூல் கூறுகிறது. அன்னை தன் இறை நம்பிக்கையோடு போராடிய தருணங்களில் சிலவற்றை மட்டும் இங்கு தொகுத்துத் தருகிறேன்.
"நான் ஒரு புனிதையாக ஆக்கப்பட்டாலும், நான் இருளில் இருந்த ஓர் ஆத்மா; நான் வானுலகு செல்லாது, உலகில் இருட்டில் இருப்போரின் ஒளியற்ற விளக்குகளை ஏற்றுவிக்கும் திரியாகவே இருப்பேன்.",(1)
"சில நேரங்களில் -- எனது இதயம் 'கடவுளே ... ' என்று இறைஞ்சும் ஒலி மட்டுமே எனக்குக் கேட்கிறது -- என் மனத்தின் காயங்களையும் அதன் வலியையும் என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது." (2)
தன் மனநிலை ஒரு ரகசியமாக இருக்க எண்ணி Father Van Exem என்ற குருவிடம் அவர் சொன்னது: என் ரகசியம் என்னோடு இருக்கட்டும். உலகத்திற்கு அது தெரியவேண்டாம். என் கடிதங்கள் எரிக்கப்படவே விரும்புகிறேன். (5)
அன்னையே தன் எழுத்துக்கள் பலவற்றை எரித்து விட்டார். (7)
செப்டம்பர் 1946 - சிலுவையில் இருந்து ஏசு 'நான் தாகமாயிருக்கிறேன்' என்று சொன்ன வாசகமே அன்னையை மேலும் மேலும் தன் சேவையில் நாட்டமுறச் செய்துள்ளது. ஏசு தன்னை அழைப்பதாகக் கூறுகிறார். இவ்வழைப்பினை அவர் "call within a call" என்று கூறுகிறார். (40)
இதே ஆண்டின் செப்டம்பர் 10ம் தேதியிலிருந்து அடுத்த ஆண்டின் நடு வரைக்கும் கடவுள் தன்னை அழைப்பதாகக் கூறுகிறார். (The "Voice" - She calls it 'interior locutions'.) அன்னைக்கு இந்தக் குரல் ஏசுவின் குரல் என்பதில் எந்த வித ஐயமுமில்லை. (44)
இந்த 'குரலின்' அழைப்பின் பேரில்தான் இந்தியாவில் புதிய சபை ஒன்று நிறுவி ஏழைகள் மத்தியில் உழைக்க எண்ணுகிறார். அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். தான் சேர்ந்திருந்த லாரட்டோ சபையிலிருந்து (Loreto Congregation) விலகி புதிய சபை ஒன்றில் தன்னை ஒரு இந்தியனாக, இந்திய சேரிகளில் வாழும் ஏழைகளுக்குச் சேவை செய்ய திருச்சபையின் உத்தரவைப் பெற முயல்கிறார். (106)
நூலின் 149 வது பக்கம். புதிய தலைப்பில் அடுத்த பகுதி.
தலைப்பு: LIGHT
THE THIRST OF JESUS CRUCIFIED
A TERRIBLE DARKNESS WITHIN
DARKNESS DISCLOSED
(தலைப்புகளே நமக்கு நிறைய சொல்கின்றன ... )
தன் ஆன்மீகக் குருக்களுக்கு எழுதுகிறார் - 'என்னுள் பயங்கரமான இருள்; எல்லாமே முடிந்து, மடிந்து விட்டது'.
இத்துணை மன உளச்சலூடேயும் தன் கடிதம் ஒன்றில் "நான் உதவ நினைக்கும் நோயில் உழலுவரோடு எனக்கு ஒருஆன்மீக உறவு ஏற்பட்டதாக நினைக்கிறேன்'.
(இந்த ஆழமான, ஏழைகளின் துன்பம் துடைக்க உதவும் அவர் மனது இந்த நூலில் பல இடங்களில் காணக் கிடைக்கிறது.)
இன்னொரு கடிதத்தில் 'என் இதயத்தில் ஒரு ஆழமான தனிமை ... அதைப் பற்றி என்னால் முழுமையாகச் சொல்ல முடியாது', என்று எழுதுகிறார். (158)
அன்னையின் இந்த மருட்டும் இருள் குறைவதாகவும் தெரியவில்லை. தான் நம்பக்கூடியவர்களிடம் இதனைப் பற்றிக் கூறவும் அவரால் முடியவில்லை. (160) இருப்பினும் அவ்வப்போது தன் குருமார்களிடம் இதனைப் பகிர்கிறார். 'எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள். என்னுள் எல்லாமே மரத்துப் போய்விட்டன. (within me everything is icy cold.) வெறும் கண்மூடித்தனமான நம்பிக்கை மட்டுமே (blind faith) என்னை இந்த இருட்டிலிருந்து வழி நடத்திச் செல்கிறது; ஆனாலும் எல்லாமே எனக்கு இப்போது இருட்டுதான். (163)
பிப்ரவரி 1956-ல் Archbishop Perier-க்கு எழுதும் கடிதத்தில் தான் தன் ஆன்மீக நிலை பற்றி முழுமையாக எழுதுகிறார். மனிதனால் குணமாக்க முடியாத அந்த நிலையைப் பற்றி எழுதுகிறார்.
நான் ஏங்குகிறேன்.
எல்லாமே கடவுளுக்குத்தான் என்ற வலிநிறைந்த ஏக்கம்.
ஒரு புனிதையாக, அவர் என்னில் முழுமையாக வாழும்படியாக.
அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேனோ அந்த அளவு நான் அவரால் விரும்பப்படவில்லை.
அவரை யாரும் நேசிக்காத அளவிற்கு நான் நேசிக்க விரும்புகிறேன்.
ஆனாலும் ... நடுவே ஒரு பிரிவு .. வெற்றிடம்.
அந்த பயங்கரமான வெறுமை ... கடவுள் என்று ஒன்றுமில்லாமை ...
the terrible emptiness, that feeling of absence of God. (164)
இத்துணை மருகலிலும் அவரது மனது, தான் பழகிவந்துள்ள வழியிலிருந்து பிறழ மறுக்கிறது. ஆகவே தான் ஒரு கடிதத்தில் "என் இதயத்தில் வேறொன்றுமில்லை - அவரைத் தவிர; அவரைத் தவிர வேறு யாருக்கும் என் அன்பில்லை; நான் சுற்றும் தெருக்கள், காளிக்கட், சேரிகள், என்னோடு இருக்கும் கன்னியர்கள் -- எல்லாவற்றிலும் நான் அவரை மட்டும் தான் பார்க்கிறேன்'. (168)
1958 அக்டோபரில் ஒரு நாள் தன் மனத்தில் இருந்த இருளெல்லாம் நீங்கி விட்டதாக அன்னை சொல்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில் இருந்த மாயை நீங்கி இப்போது தன் ஆன்மா முழுமையும் கடவுளின் அன்பால் நிறைந்ததாகச் சொல்கிறார்.
நூலாசிரியர் இந்த தருணத்தை ஒரு விழல் என்று அழைக்கிறார். ஏனெனில் வெகு சீக்கிரம் 'கடவுள் நீ உன் இருண்ட சூழலிலேயே இரு என்று சொல்லிச் சென்றது போல், நான் மறுபடியும் தனிமையில் தள்ளப்பட்டு விட்டேன்" என்கிறார் அன்னை. (177)
............. இன்னும் வரும்
ம்ம் வேற மாதிரி வரும்னு நினச்சேன். அன்னை தெரசா மாதிரி மத்த பெரிய/நல்ல கிறிஸ்துவர்களும் வெறுமை, நம்பிக்கையின்மையை அனுபவித்திருக்கலாம். வெளிய வராம இருந்திருக்கலாம். நிறய சொல்ல தோணுது வார்த்த வரல. ஒரு வேளை பயமா எனக்கு
ReplyDeleteமனிதம் என்ற முறையில் தடுமாற்றம் என்பது இயற்க்கையே அனைத்து விசயத்திலும் எல்லோறுக்கும்.
ReplyDelete//வெளிய வராம இருந்திருக்கலாம். //
ReplyDeleteவெளியே வந்திருக்குங்க. மூன்றாவது பதிவில் அவை வரும்.
//மனிதம் என்ற முறையில் தடுமாற்றம் என்பது இயற்க்கையே ..//
ReplyDeleteet tu Brutus!
கல்லூரி படித்த காலத்தில் எனது கிராமத்து ஆலயத்தில் நடந்த தியான கூட்டத்தில் தியான வகுப்பெடுத்த பாதிரியாரை நோக்கி யேசுவின் வாழ்கையில் 12 வயது வரை பைபிளில் உள்ளது, அதுக்கு அப்பறம் 30 வயசுக்குட்பட்ட 18 வருட வாழ்க்கை எப்படியிருந்தது என்று கேள்வி எழுப்பியதற்காக எல்லோராலும் கண்டிக்கப்பட்டவன் நான்.
ReplyDeleteகேள்விகள் எழுப்பாமல் எதையும் ஏற்றுக்கொள்ள முடியவும் இல்லை, அதே சமயம் சிறுவயதில் இருந்து பழக்கப்பட்ட மதத்தையும், கடவுளையும் எதிர்த்து வெளிப்படையாக பேசவும் மனமில்லை என்ற குழப்பம் இன்றும் உண்டு.
எல்லா மதங்களும் குறிப்பது ஒன்றை மட்டும் தான், எல்லாரும் போதிப்பது அன்பை தான், எல்லா மதங்களும் ஒரே கடவுளை அடைய இருக்கும் வெவ்வேறு வழிகள் என மதங்களுக்கிடையே உள்ள பிரிவினையை நீக்க வழி சொல்ல தெரிந்த மனதிற்கு,நான் பிறந்ததில் இருந்து பழகிய மதத்தில் உள்ள கேள்விகளுக்கு விடை காண தெரியவில்லை.
இது எல்லோருக்கும் இருக்கும் குழப்பம் தான்.
கல்லூரி படித்த காலத்தில் எனது கிராமத்து ஆலயத்தில் நடந்த தியான கூட்டத்தில் தியான வகுப்பெடுத்த பாதிரியாரை நோக்கி யேசுவின் வாழ்கையில் 12 வயது வரை பைபிளில் உள்ளது, அதுக்கு அப்பறம் 30 வயசுக்குட்பட்ட 18 வருட வாழ்க்கை எப்படியிருந்தது என்று கேள்வி எழுப்பியதற்காக எல்லோராலும் கண்டிக்கப்பட்டவன் நான்.
ReplyDeleteகேள்விகள் எழுப்பாமல் எதையும் ஏற்றுக்கொள்ள முடியவும் இல்லை, அதே சமயம் சிறுவயதில் இருந்து பழக்கப்பட்ட மதத்தையும், கடவுளையும் எதிர்த்து வெளிப்படையாக பேசவும் மனமில்லை என்ற குழப்பம் இன்றும் உண்டு.
எல்லா மதங்களும் குறிப்பது ஒன்றை மட்டும் தான், எல்லாரும் போதிப்பது அன்பை தான், எல்லா மதங்களும் ஒரே கடவுளை அடைய இருக்கும் வெவ்வேறு வழிகள் என மதங்களுக்கிடையே உள்ள பிரிவினையை நீக்க வழி சொல்ல தெரிந்த மனதிற்கு,நான் பிறந்ததில் இருந்து பழகிய மதத்தில் உள்ள கேள்விகளுக்கு விடை காண தெரியவில்லை.
இது எல்லோருக்கும் இருக்கும் குழப்பம் தான்.
நான் அடிக்கடி சொல்வதையே மிக அழகாக அதைவிட மிகச் சுருக்கமாக சொல்லி விட்டீர்கள்.
ReplyDeleteஎல்லோருக்கும் இது புரிவதில்லை!
ஜோ,
ReplyDelete//சமயம் சிறுவயதில் இருந்து பழக்கப்பட்ட மதத்தையும், கடவுளையும் எதிர்த்து வெளிப்படையாக பேசவும் மனமில்லை என்ற குழப்பம் இன்றும் உண்டு.
இது எல்லோருக்கும் இருக்கும் குழப்பம் தான்//
எல்லோருக்கும்னா, எல்லா மதத்தினருக்குமா?
தருமி நீங்க ஜோ சொன்னதுல முழுசா ஒத்துப்போறிங்களா? எதிர்பாக்கல
//எல்லோருக்கும்னா, எல்லா மதத்தினருக்குமா?//
ReplyDeleteஆமாம்.
//தருமி நீங்க ஜோ சொன்னதுல முழுசா ஒத்துப்போறிங்களா?
ஆமாம்.
//எதிர்பாக்கல//
ஏன்?
எல்லா மதத்தினருக்கும் இந்த குழப்பம் இருக்கும்னு என்ன விதத்துல சொல்றீங்கன்னு புரியல. அப்போ கண்டிச்சு பேசறவங்க குழப்பத்தோடவே பேசறாங்களா.
ReplyDeleteதருமி நீங்க இப்போவும் வெளிப்படையா பேச தயங்கறீங்கன்னு சொல்ற மாதிரி அர்த்தத்துல புரிஞ்சுகிட்டேன். இப்போ நீங்க வெளிப்படையா தானே விமர்சிக்கறீங்க உங்க மதத்த. அதனால எதிர்பாக்கலன்னு சொன்னேன்.
//கண்டிச்சு பேசறவங்க குழப்பத்தோடவே பேசறாங்களா.//
ReplyDeleteஆமாம். கடவுள் என்பது ஒரு concept. இதை இல்லைன்னு சொல்றதும் இருக்குன்னு நம்புறதும் நம் வாழ்க்கைச் சூழலின் கட்டாயம். நம்புறவங்க கிட்ட சில விஷயம் சொன்னா அவங்களுக்கும் அதை எப்போதும் மறுக்க முடியாது. ஆனாலும் மதநம்பிக்கையால் அதை மறுக்க முயற்சிப்பார்கள்.
ஒரு சின்ன உதாரணம். விந்து உற்பத்தி பற்றி பேசும்போது அடுத்து எதிர்த்து பேச முடியாத ஒரு நம்பிக்கையாளர் 'ஒரு வேளை இனி குரானில் சொல்லப்படுவது நிரூபிக்கப் படலாம்' என்றார். escapism.
நம்பிக்கையாளர்கள் பல அறிவியலை மறுப்பது பார்த்தாலே புரியும். fossils disprove creation and none can deny presence of fossils of extinct animals. இதைப்பற்றி ந்மபிக்கையாளர்களிடம் பேசினாலே நான் சொன்னது சரியென்று உணரலாம்.
கபீஷ்,
உங்கள் இரண்டாம் பத்தி புரியலை .
அந்தக் கோணத்தில் பார்த்தால் இப்பதிவு அவரின் மேல் நாம் வைத்திருக்கும் அன்பையும் மரியாதையும் இன்னும் அதிகமாக்கும் என்றே நினைக்கிறேன்.
ReplyDeletekandippaaga avarin mel iruntha mathippu uyarnthuthaan pogindrathu
இனியா,
ReplyDeleteநான் நினைத்ததை உறுதியாக்கியமைக்கு மிக்க நன்றி.
அன்னையின் மீது உள்ள மரியாதை அதிகரிக்கிறது. மேலும் மனிதன் தடுமாறுவதும் இயற்கையே... தடுமாற்றங்கள் தான் நல்ல பாதையை வகுக்கும் என்பது என் கருத்து... அது அன்னையின் வாழ்விலும் சரியே...
ReplyDeleteபல பதிவுகளை தவற விட்டுருக்கேன் போலவே!
ReplyDelete//"பெரிய & நல்ல " கிறித்துவர்கள் எப்படி அது போல் எளிதாக வெளிவர முடியும்? //
ரொம்பவே கஷ்டம் என்றுதான் எண்ணச் செய்கிறது. ‘பிரபலம்’ என்ற அடைமொழிக்குள் சிக்கி தனக்கென்று ஒரு சித்தாந்தத்தையும், தனக்கேயான தோலுக்குப் பதிலாக ‘சட்டையாக’ அதனை அணிந்து கொள்ள நேரிடின் அதிலிருந்து உடைத்து வெளிக் கிளம்புவது அவ்வளவு சாத்தியமான காரியமாக தெரியவில்லை.
அன்னை தெரசா போன்றவர்கள் தன்னை முழுதுமாக கடவுளின் பார்வை தன் பக்கமாக இருக்க வேண்டுமென புறத் தேவைகளை வெளித் தள்ளி விசுவாசத்தின் வழி நடந்தாலும், அவர்கள் எப்பொழுதெல்லாம் ‘விசுவாசத்தை’ இழக்கிறார்களோ அப்பொழுதெல்லாம் இருன்மையையும், தனிமையின் உக்கிரத்தையும் ஒரு சாதா மன நிலையில் கண்டிப்பாக அனுபவித்திருக்கக் கூடுமென்று இந்த கடிதங்கள் நமக்கு ஊர்ஜிதப் படுத்துவதாக உள்ளது.
இந்தக் கடிதங்களை புத்தக வடிவில் கொண்டு வந்தது மேலும், அன்னை தெராசாவின் மீது உள்ள மரியாதயை மென்மேலும் உயர்த்தத்தான் கண்டிப்பாக செய்யும்...
தருமி
ReplyDeleteசமீபத்தில், துர்கா பூஜாவின் போது மதர்ஸ் ஹவுஸ் இல் காலடி எடுத்து வைக்கும் பக்கியம் கிடைத்தது.. என் வாழ்வில் இது நடக்குமா என்று எதிர்பார்த்து காத்திருந்த ஒரு நிகழ்வு... அன்னையை அடக்கம் செய்திருந்த இடத்தில் நின்று கண்ணை மூடிய போது மனதில் மின்னலாய் வந்து போன ஒரு அமைதியை இப்பொழுது நினைத்தாலும் உடம்பு சிலிர்க்கிறது.. அஙகே இருந்த காட்சியகத்தில் பல வாசகங்கள்..ஒவ்வொன்றும் நமக்கு ஒரு வாழ்க்கை பாடத்தை புகட்டுபவை... அனைத்திலும் சமூக கண்ணோட்டம் தூக்கலாக இருந்தது..
//Where is my faith? Even deep down ... there is nothing but emptiness and darkness ... If there be God—please forgive me. When I try to raise my thoughts to Heaven, there is such convicting emptiness that those very thoughts return like sharp knives and hurt my very soul ... How painful is this unknown pain—I have no Faith. Repulsed, empty, no faith, no love, no zeal, ... What do I labor for? If there be no God, there can be no soul. If there be no soul then, Jesus, You also are not true
அங்கே இருந்த இந்த வாசகத்தை கையில் இருந்த டிஷ்யூ பேப்பரில் எழுதீட்டு வந்தேன்...
ஏழைகளை காணச் செல்லும் போது வெறும் கையோடு போகாமல் அவர்ளுக்கு கொடுக்க ஏதாவது எடுத்துக்கொண்டு போகவேண்டும் என்ற வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது..
//ஆனால் பலரும் அவர் மேல் வைத்திருக்கும் அன்பிற்கான காரணம் அவர் ஒரு பெரிய கிறித்துவர் என்பதால் அல்ல; ஆதரவற்ற பலரின் அமைதியான இறுதிக் காலத்திற்கு வழி கோலியவர்; எப்போதும் ஏழைகளுக்கு பெரும் ஆதரவாயிருந்தவர் என்பதே காரணம். //
ReplyDeleteஅதே.
நண்பர் தெகாவை வழிமொழிகிறேன்!!
தெரஸா திணிக்கப்பட்டவர்,அதுபோல் பாண்டி அரவிந்து ஆசிரம அன்னையும் திணிக்கப்ப்பட்டவரே.
ReplyDeleteஇப்போதும் ஒரு திணிக்கப்பட்ட அன்னையின் கையிலே நாடு உள்ளது.
புரிந்தால் சரி.....
குழப்பங்கள் தேடலின் முன்னோடி .
ReplyDeleteஅன்னை அவர்களின் இந்த குமுறல்கள் , ஒவ்வொரு மனிதனின் மனமும் வெவ்வேறு கட்டத்தில் எதிர் கொள்ளும் நிதர்சனம் ,
நம்பிக்கைக்கும் தர்க்க அறிவுக்குமான போட்டி ,அதை மீறி வாழ்வை பயனுள்ளதாக செலவிடுவது அவரது வலிமையை குறிக்கிறது