முதல் பதிவு: 1
இரண்டாம் பதிவு: 2
மூன்றாம் பதிவு: 3
*
*
Philip Pullman அதிகமாக குழந்தைகளுக்கான நூல்கள் எழுதியவர்.நடுவிலே இப்படி ஒரு நூல்.
அவர் கடவுள் மறுப்பாளர். Allegory என்ற முறையில் இந்நூலை எழுதியிருக்கிறார். சொல்லப்படும் கதை, உள்ளடக்கி அவர் சொல்லும் செய்திகளுக்கான வெளியாடைதான்.
இன்று நாம் அறியும் கிறிஸ்து ஒருவரல்ல. குறைந்தபட்சம் மூன்று கிறிஸ்துக்கள் உள்ளனர். வரலாற்றுக் கிறிஸ்து யூதர்களின் வரலாற்று நூல்களில் இருந்து நமக்குத்தெரியவருபவர். ஆன்மீகக் கிறிஸ்து கிறிஸ்துவின் சொற்கள் வழியாக கடந்த இருபது நூற்றாண்டுகளில் மாபெரும் மதங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டிக்கொண்ட ஓர் ஆளுமை. மதக் கிறிஸ்து கிறித்தவ திருச்சபையாலும் மதவாதிகளாலும் முன்வைக்கப்படுபவர். -- ஜெய மோகன்.
வரலாற்று வழியே ஒருமனிதனை நாம் எப்படியெல்லாம் 'படைக்கிறோம்' என்று ஜெயமோகனின் எழுத்தில் தெரிகிறது. இக்கதையும் இதே கருத்தைத்தான் கூறுகிறது.
கிறிஸ்து தன் உடன் பிறப்பை மிகவும் நேசிப்பதாகக் கதை செல்கிறது. பல இடையூறுகளிலிருந்து ஜீசஸை கிறிஸ்து காப்பாற்றுகிறார். அதற்கு பழைய ஏற்பாட்டின் கதைகள் அவருக்கு உதவுகின்றன.
அதில் அவர் சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும் மாற்றுகிறார். சான்றாக, திருக்குளிப்பின் போது மேலே பறந்து போன புறா தன்னிடம் பேசியதாக தன் தாயிடம் பொய்யாகக் கூறுகிறார். விவிலியத்தில் ஜீசஸிடம் சாத்தான் தன் 'வேலை"யைக் காட்டியது போல் இங்கே கிறிஸ்து ஜீசஸை சோதிக்கிறார். அதோடு அந்த சோதனைகளின் வெற்றியே அவரை பலருக்கும் தெரியப்படுத்தும். அதுவே புதிய சபை ஒன்று உருவாக உதவும் என்கிறார். விவிலியத்தில் உள்ள சாத்தானின் வேலையாகக் கருதப்படும் ஒன்றை இப்படி மாற்றிக் காண்பிக்கிறார்.
கதையின் நடுவில் ஒரு "மர்ம மனிதன்" வருகிறார். கிறிஸ்துவுக்கு அது தேவதூதனாகத் தெரிகிறது. வாசிக்கும் நமக்கு அப்படி தோன்றுவதில்லை. ஒரு வில்லனாகத்தான் தெரிகிறது.
ஜீசஸ் ஜெத்ஸமேனியில் "கடவுளிடம் பேசுவது" நூலில் ஒரு முக்கிய கட்டம். கதாசிரியரின் கடவுளைப் பற்றிய கருத்து என்ன என்பதைத் தெளிவாகக் காண்பிக்கும் கட்டம் அது. அதே போலவே "திருச்சபைக்கு ஏற்றதாக இருப்பதற்காகவே நான் அவருக்கு உடந்தையாக இருந்தேன். ....ஆனால் திருச்சபை தனது அதிகாரத்தால் ஜீசஸின் கதையை தன் போக்கிற்கு மாற்றிவிடலாம்."" என்ற கிறிஸ்துவின் கடைசி வாக்கியம் கிறிஸ்துவ மதத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளைத் தெளிவாகக் காட்டுகிறது.
இக்கதை ஆங்கிலத்தில் ALLEGORY என்று சொல்வார்களே அந்த பாணியில் அமைந்துள்ளது. சொல்லும் கதை ஒன்றாக இருப்பினும் சொல்ல வந்தவைகள் மறைபொருளாக சொல்லப்படும் கதையின் ஊடே ஒளிந்துள்ளன. ஜீசஸ் நல்லவைகளைச் சொல்லும் ஒருவர். அவர் சொன்னவைகளை மட்டும் வைத்துக் கொண்டால் அது யார்சொல்லியதாக இருந்தாலும் அவை நல்லவை; பயனுள்ளவை என்பது தெளிவு. அதை ஜீசஸ் சொல்லியதாக வைத்து, அதனை மேலும் மெருகூட்டி ஜீசஸை ஒரு கடவுளாகவோ, கடவுளின் மகனாகவோ தூக்கி வைத்து ஒரு புதிய மதத்தையே தோற்றுவித்து விடுகிறார்கள்.
ஜீசஸ் தன் முதல் புதுமையாக கானாவூரில் நீரை ரசமாக மாற்றிய கதையில் கதாசிரியர் ஒரு சின்ன மாற்றம் செய்கிறார். என்றோ நடந்த ஒன்று; அதனை எந்த கோணத்தில் பார்க்கிறோம் என்பதே அதற்குரிய சிறப்புத் தன்மை அல்லது சாதாரணத் தன்மை தெரிகிறது. கடவுள் தன்மை ஏற்றஇப்படி சில 'நகாசு வேலை' செய்தாலே போதுமே ... யாரை வேண்டுமானாலும் ஒரு சித்தராகவோ, கடவுளின் மகனாகவோ, நபியாகவோ, புத்தராகவோ மாற்றி விடலாம் என்பதையே இந்த கானாவூர் கதை, தலைக்கு மேல் பறந்த, பேசிய புறா நினைவுறுத்துகின்றன.எனக்குத் தெரிந்த வரையில் இந்த தேவ தூதர்களில் பலர் மிக மிகச் சாதாரண மனிதர்களே. ஆனால் வலிய அவர்கள் மேல் ஏதேதோ தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார்கள்.
முந்திய பதிவில் பக்கம் 145-ல் அந்த மர்ம மனிதன் / தேவ தூதன் ஜீசஸின் அரசு இந்த உலகிற்கு வந்துவிடும் அப்படி ஒரு அரசு வருமாயின் அது நிறைய மக்களைக் கொண்டதாகவும், யூதர்கள் மட்டுமின்றி வேற்று மக்களும் இருக்குமாறு அமைய வேண்டும் என்ற நம்பிக்கையில் ஜீசஸைத் தொடர்ந்து செல்லுமாறு கிறிஸ்துவைப் பணிக்கிறார். ஒரு திருச்சபை (church) கட்டாயம் அமைய வேண்டும்' என்ற முனைப்போடுதான் திட்டமிடுகிறார்.
இந்த திட்டங்கள் எல்லாமே இன்று நாம் முக்கிய மதங்களாக நினைக்கும் எல்லா மதங்களுக்கும் ஒரு பொதுவான நிலைப்பாடாகவே இருந்து வருகிறது. ஏசு, முகமது, ராமகிருஷ்ணர், அரவிந்தர், பால் ரிச்சர்ட் என்ற அன்னை-அரவிந்தர் போன்ற மனிதர்கள் சொன்னவைகளை மேலும் 'நகாசு' வேலை செய்து, அவர்களுக்கும் கடவுளுக்கும் 'நேரடி தொடர்பு' இருந்ததாகச் சொல்லப்பட்டு இந்த மனிதர்களுக்கு ஒரு சிறப்பிடம் கொடுக்க்ப் படுகிறது. இவர்களைப் பற்றிய வாசிப்பில் அனேகமாக எதுவும் என் அறிவைத் தொடுவதாக ஏதும் காணேன்.
இதில் உள்ள ஒவ்வொருவரின் கதையும் கொஞ்சம் ...
ஏசுவின் கதை இதில் கொஞ்சம் சிறப்பாக அமைந்தது என்று நினக்கிறேன். அவரது மரணம் மட்டுமல்லாமல், மூன்றாம் நாள் 'உயிர்த்தெழுந்தது' குறித்தவைகள் அவரை ஒரு கடவுள் மனிதனாக அல்லது கடவுளாகவே சித்தரித்துள்ளன. ஏனையோர் மனிதக் கடவுளாக இருக்க, இவர் அதையும் மீறி ஒரு கடவுளாகவே ஆக்கப்பட்டுள்ளார். ஏசு உயிர்த்தெழுந்ததை இந்த நூல் ஒரு முக்கிய கேள்வியாக்கி விடுகிறது. டாவின்ஸி கோட் ஒரு புனைவு. ஆனாலும் இப்புனைவு Jesus Papers, Holy Blood and Holy Grain போன்ற சில ஆய்வு நூல்களில் ஒரு முக்கிய கேள்வியாக நிற்கும் செயலைத்தான் ஒரு கேள்வியாக வைத்திருக்கிறது.
முகமது - முன்பே என் பதிவில் சொன்னதுதான்: //எந்த விதத்தில் முகமது நம் வாழ்க்கையில் நாம் நித்தம் நித்தம் காணும் சாதாரண மனிதர்களை விட உயர்ந்தவராக இருந்ததாக வரலாறு கூறுகிறது?//
நம்பிக்கை என்பதைவிட அவரை எப்படி ஒரு தேவதூதராக அதுவும் கடைசித் தூதுவராக நம்புகிறீர்கள்? அவரே ஹீரா மலையில் ஜிப்ரேல் வந்து சொன்னதாகச் சொன்னதைத் தவிர வேறு என்ன சான்று? அவருக்கே முதன் முதலில் உன்னிடம் வந்து சொன்னது கடவுள் / ஜிப்ரேல் என்று அவரது மனைவிதான் confirmation கொடுக்கிறார்கள்; அவருக்கே தெரியாததை அவரது மனைவி மட்டும் எப்படி அவ்வாறு திடமாக நம்பினார்கள்? எத்தனையோ பேர் நான் கடவுளைப்பார்த்து பேசிக்கிட்டே இருக்கிறேன் என்பார்கள். கிறித்துவ மத போதகர்களில் பலர் ஏசுவோடு உட்கார்ந்து breakfast முடிச்சிட்டு வர்ரேன் அப்டிம்பாங்க... அதையெல்லாம் எப்படி சீரியஸா எடுத்துக்கிறது. கவுஜ மாதிரி நான்கூட ஒண்ணு எழுதினேன். வாசிச்சி பாருங்களேன் .. இதுக்கெல்லாம் ஏதாவது ஒரு நிரூபணம் வேண்டாமா? ஒருவர், அவர் யாராக இருந்தாலும், சொன்னால் அப்படியே நம்பிவிடுவதா?
ராமகிருஷ்ணர்: இவரைப் பற்றி வாசித்த போதும் mental seizure போன்ற விஷயங்கள் பேசப்பட்டன. ஒவ்வொரு மதமாக மாறி மாறி test செய்தார் என்கிறார்கள். இவரது வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லும் அடங்கா பசி போன்ற பல விஷயங்கள் எவ்வித உயர் விஷயங்களை எனக்குச் சொல்லவில்லை.
அரவிந்தர் & அன்னை: விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவருக்கு மனதுக்குள் 'புதுச்சேரிக்குப் போய்விடு' என்ற குரல் எழுந்ததாகச் சொல்வது ஏனென்ன்று தெரியவில்லை. அது ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வராத ஒரு safe place .. அவ்வளவே.
இப்படியே செல்கின்றன பலரைப் பற்றியவை. இவர்களெல்லோரும் பல நல்ல விஷயங்களைச் சொல்லியுள்ளார்கள். இல்லையென்று கூறவில்லை. ஆனால் நல்ல பல விஷயங்களைக் கூறினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இவர்களை அத்துணை பெரிய பீடங்களில் ஏற்றி வைக்க வேண்டுமா? எல்லோருமே கடவுளோடு தொடர்பு கொண்டதுபோல் சொல்வதானால் நான் எந்தக் கடவுளை நம்புவது? எந்த கடவுள் சொல்வது சரியென்று போவது? முகமதுவைத் தவிர மற்றையோரை கடவுளாக வழிபடுவதும் எந்த அளவு சரி?
அவர்கள் சொல்லும் 'வசனங்கள்' தேவ வார்த்தைகளாக மறுபிறவி எடுக்கின்றன. அந்த வார்த்தைகளை அச்சாணியாகக் கொண்டு புதிய 'மதங்கள்' தோன்றுகின்றன.
அடுத்து இன்னொரு குரூப். இவர்கள் தங்களை ஒரு 'தேவ தூதர்களாக'க் காண்பிக்கிறார்கள். ஆனால் படிப்படியாக தங்களையே ஒரு 'தேவனாக' உயர்த்திக் கொள்கிறார்கள். சாய்பாபா, மேல்மருவத்தூர், அம்ரிதா, கல்கி, ப்ரேமானந்தா போன்றோர் தங்கள் வாழ்நாளிலேயே கடவுள் என்ற நிலைக்கு தங்களையே உயர்த்திக் கொள்கிறார்கள். முதலில் சொன்னவர்களை பின் வந்தவர்கள் கடவுளாக்கி விட்டார்கள். ஆனால் பின்னால் வந்த இந்த குரூப் கொஞ்சம் அவசரக்காரர்கள் -- தங்களையே கடவுளாக்கிக் கொண்டு விட்டார்கள்; புத்திசாலிகள்!
கடவுளுக்கு எதற்கு மதம்? நாம் அவரை துதி செய்ய வேண்டும்; தொழ வேண்டும் என்ற ஆவல் எல்லாம் கடந்த எந்த கடவுளுக்கு தேவை? கிறித்துவத்தில் மனிதனை ஏன் கடவுள் படைத்தார் என்று சின்னப்பிள்ளைப் பருவத்தில் சொல்லிக் கொடுப்பார்கள். மனிதன் கடவுளை அறிந்து அவரை சேவித்து வணங்கி, அவர் படைத்த சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டுமாம். இதே கருத்துதான் மூன்று ஆபிரஹாமிய மதங்களின் கருத்து.
யோசித்துப் பார்த்தால் இந்தக் கோட்பாடு வேடிக்கையாகத் தெரியவில்லை? கடவுளே மனிதர்களைப் படைக்கிறாராம்; அவர்கள் மீது மிக இரக்கம் கொண்டவராம்; ஆனாலும் ஏனோ சுவர்க்கத்தோடு நரகத்தையும் படைக்கிறாராம்.' இரக்கம் மிகுந்த அவர்' இறுதியில் நமக்கான சம்பாவனையைக் கொடுக்கிறாராம். அன்பானவர் ஏன் நரகத்தைப் படைத்தார்; (என் போன்ற) பலரை நரகத்திற்கு அனுப்பும்படியான நிலைக்கு யார் காரணம்? 'எல்லாம் வல்ல கடவுள்'தானே காரணம். "ஆட்டுவித்தான்; ஆடுகிறேன்!" (குரான் 9:51)
கொஞ்ச வருஷம் இங்கே இருந்து செஞ்ச தப்புக்கு நித்திய தண்டனையாக நரகமோ நித்திய பரிசாக சுவர்க்கமோ கிடைக்குமாம். இதில் இஸ்லாமிய மதத்தின் சுவனப் பரிசுகள் கொஞ்சம் கோரமான அல்லது விகாரமானவைதான். ஆனால் எந்த ஆண்மகனுக்கும் மிகவும் பிடிப்பதுதான்!
மனுஷங்களே எவ்வளவு பெரிய குற்றம் செய்தாலும் தூக்குத் தண்டனை கூடாது. அது தப்பு அப்டின்னு சொல்றாங்க. ஆனால் 'இரக்கம் மிகுந்த ஆண்டவன்' தூக்குத் தண்டனையை விட மோசமான நித்திய தண்டனைக் கொடுக்கிறார். இது என்ன logic அப்டின்னு தெரியலை! இப்படி perpetual jannah / heaven / jahannam - hell கொடுக்கிற கடவுள் நியாயமானவரா? எனக்கு அப்படித் தெரியவில்லை.
இந்நூலில் எனக்கு இரு விஷயங்கள் பிடித்தன. ஒன்று விவிலியத்தில் சொன்ன சில விஷயங்களை நாம் மறு பரிசீலனை செய்ய உதவுகிறது. அடுத்து எப்படி வரலாற்றில் மதங்கள் உருவாகின்றன என்பதை அழகாக எடுத்துச் சொல்லியுள்ளார். சிலர் நல்லது சிலவைகளைச் சொல்லிப் போக பின்னால் வந்தவர்கள் அந்த நல்ல விஷயங்களைத் தொகுத்து, அதனைச் செய்தவர் 'அப்படியாக்கும் ...இப்படியாக்கும் ..' போன்று சில கதைகளை ஜோடித்து அந்த மனிதரை தெய்வமாக்கி, புதிய மதத்தினைத் தோற்றுவித்து, அந்த மதத்தினையும் இப்புத்தகத்தில் கடைசி இரு வரிகளில் ஏசு சொல்வது போல் புதிய திருச்சபையை உருவாக்கி விடுகிறார்கள். "திருச்சபை தனது அதிகாரத்தால் ஜீசஸின் கதையை தன் போக்கிற்கு மாற்றிவிடலாம். ... ஆனாலும் இந்தக் கதை இல்லாவிட்டால் திருச்சபை தான் ஏது?"
இந்நூலில் மூன்று முக்கிய இடங்கள் மிகவும் பிடித்தன.
1. பெத்திஸ்டாவில் உள்ள ஒரு குளத்தில் மூன்று பிச்சைக்காரர்களிடம் நடக்கும் உரையாடல். முந்திய பதிவில் சொன்னது போல் இந்த உரையாடல் மனித சமூகம், தனி மனித மனம் இவற்றையெல்லாம் அலசும் அழகான ஒரு பகுதி.
2. ஏசு ஜெத்சமேனியில் 'கடவுளோடு' நடத்தும் பதில் இல்லா உரையாடல். இதனை வாசிக்கும்போது அன்னை தெரஸாவின் கடிதங்கள் அடங்கிய COME BE MY LIGHT என்ற நூலில் கடவுளை நோக்கி அன்னை செய்யும் ஜெபங்கள், பதிலில்லா அந்த ஜெபங்களால் அவர்களுக்கு வரும் நம்பிக்கையின்மை -இவை எல்லாமே ஏசு கடவுளை நோக்கி நடத்திய ஜெபத்தினை ஒத்திருக்கும். (இரு நூல்களையும் அடுத்தடுத்து வாசிப்பதால் ஏற்பட்ட ஒரு நல்ல பலன்!)
3. இந்நூல் விவிலியத்தைப் புரட்டி எழுதியதாகத் தோன்றினாலும் உள்ளடக்கம் அன்பை மட்டும் முக்கியப் படுத்துகிறது. ஒரு நல்ல மதம் எப்படியிருக்க வேண்டும் என்பதையும் சிறப்பாக வெளிப்படுத்துகிறது. (எந்த மதமும் ஏழ்மையானதாக, எந்த ஆளுமையும் இல்லாமல் சாதாரணமானதாக இருக்க வேண்டும். அன்பைத் தவிர வேறு எந்த வித ஆளுமையும் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கென்று சொத்து, சட்ட திட்டங்கள் என்று ஏதுமிருக்கக் கூடாது. யாரையும் தண்டிக்கக் கூடாது; மன்னிக்க மட்டுமே செய்ய வேண்டும். ஆல மரமாய் தழைத்து பலருக்கும் தங்குமிடமாக இருக்க வேண்டும்)
இப்படி ஒரு மதம் இல்லையே :(
முதல் பதிவு: 1
இரண்டாம் பதிவு: 2
மூன்றாம் பதிவு: 3
மதம் ஒரு வியாபாரம், அதில் எங்கிருந்து இரக்கம் வரும்!
ReplyDelete// அன்பானவர் ஏன் நரகத்தைப் படைத்தார்; (என் போன்ற) பலரை நரகத்திற்கு அனுப்பும்படியான நிலைக்கு யார் காரணம்? 'எல்லாம் வல்ல கடவுள்'தானே காரணம்.ஆட்டுவித்தான்; ஆடுகிறேன்!//
ReplyDeleteதருமி, இந்த இடத்தில படிக்கும் பொழுது எழுந்த சிரிப்பை அடக்க முடியல. சரியான கேள்வி. என்ன சின்னப்புள்ளத்தனமான வெள்ளயாட்டு இதுன்னு கேட்டு இருக்கீங்க :P
இருந்தாலும், அந்தக் கேள்வி கேட்டதின் மூலமா நீங்க ஒரு முடிவோடதான் இருக்கீங்கன்னு தெரியுது, நரகத்தில வைச்சு நீங்க ‘கடவுளோடவே’ தர்க்கம் பண்ணுற ரேஞ்சிக்கு தெளிவாகிட்டீங்க... :))
மேலே நான் போயி படிக்கிறேன் ;)
நன்றாக ஒப்பிட்டு தாங்கள் அனௌவருக்கும் புரியும் விதத்தில் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள்.
ReplyDelete