Tuesday, April 12, 2011

495. மெழுகுவர்த்தி ஏற்றுவது அவ்வளவு தவறா ...?

*

அன்னா ஹஸாரே நமத்துப் போன வெடியில் ஒரு திரியைப் பற்ற வைத்து விட்டதில் எனக்கு மகிழ்ச்சி. வெடி வெடிக்குமா என்பதற்குப் பல கேள்விகளும், கவலைகளும் வந்து விட்டன. ஆனாலும் திரி இன்னும் நெருப்போடுதான் இருக்கிறது. வெடி வெடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் - தமிழ்நாட்டு ஊடகங்கள் ஊமைகளாகிப் போகின இந்த நிகழ்வில் - இதை மீண்டும் மீண்டும் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன. இதைக் குறை கூறுவது கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது.  நாடாளுமன்றத்தில், மும்பையில் குண்டு போடட்டும்; கிரிக்கெட் விளையாடுங்கள்; எந்திரன் போன்ற ஒரு படம் ரிலீசாகட்டும்; அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தட்டும் - இதில் எது நடந்தாலும் ஊடகங்கள் வெளிச்சம் போட்டுத்தான் காண்பிக்கும். ஊடகங்களுக்கு T.R.P. rating .. readership இவைகள் தான் முக்கியம். எந்த ‘வேடிக்கைகளையும்’ வேதனைகளையும் காட்சிப் படுத்துவது அவர்கள் பொறுப்பு. ஹஸாரே போராட்டத்தில் ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்கள் எடுத்த பங்களிப்புக்கு ஏன் சிலருக்கு கோபமோ தெரியவில்லை.

மத்திய தட்டு மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதும் சிலருக்குக் கோபம். என்ன செய்வது? வெங்காயமும், தக்காளியும் விலையேறிய போது இவர்கள் எங்கே போனார்கள்? ஏ.சி. அறையில் அமர்ந்து கொண்டு, பிட்சாவும் கொக்கோ கோலாவும் குடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இன்றைக்கு என்ன அப்படி ஒரு பெரிய அக்கறை? கையில் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு ஆடினால் எல்லாம் சரியாகி விடுமா?அந்த நடிகனுக்கும் ஒரு கவலை. அவனும் இணைந்து கொண்டான்.

விலைகள் ஏறி இறங்கும். நாட்டில் நல்லதும் நடக்கும்; கெட்டதும் நடக்கும். சமீபத்தில் காதில் விழுந்த கெட்டவைகள் ஏராளம். ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு லட்சக் கணக்கான கோடி ரூபாய்கள் ஊழலில் விழுந்தன. வெளிநாட்டு வங்கிகளில் நம் கறுப்புப் பணம்; விளையாட்டில் பணம்; ஸ்பெக்ட்ரத்தில் பணம். தலை சுற்றும் அளவிற்கு ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிர்ச்சியில் உறைந்து நின்ற நேரத்தில் ஒருவர் வந்து தூங்கிக் கிடந்த திரியில் நெருப்பு வைக்கிறார். முதலில் அதிர்ச்சி; பின் ஆச்சரியம். ஒரு மகிழ்ச்சி. கூட்டம் சேர்ந்தது. இதில் என்ன தவறோ தெரியவில்லை.

இதுபோல் இந்த ‘கூட்டம்’ வேறெந்த நிகழ்வுக்கும் வரவில்லையே என ஒரு கூப்பாடு. ஐரோம் ஷர்மிளாவை பற்றி ஏன் யாரும் இதுவரை பேசவில்லை. (எனக்கு மிகச் சமீபத்தில்தான் தெரியும். என்னால் முடிந்தது ஒரு பதிவு.) நியாம்கிரி மலையைப் போஸ்கோவிடமிருந்து காப்பாற்ற அதன் கைத்தடியான இராணுவத்தையும் சல்வாஜூடும் குண்டர்படையையும் எதிர்த்து நிற்கும் ஒரு கோண்ட் பழங்குடி (நன்றி: வினவு) -  பிட்சா சாப்பிடாமல், பெப்ஸி குடிக்காமல் வெறுமே  சோறு, சப்பாத்தி சாப்பிடும் எத்தனை பேருக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்கும்?

ஆனால் ஊழல் அப்டின்னா எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அதுக்கு  வேட்டு வைக்கிறேன்னு ஒருத்தர் சொன்னா அவர் பின்னால் கூட்டம் சேருவது இயற்கை. இதில் கோபப்பட ஏதுமில்லை. நாடு நல்லா இருக்கணும்னு நினைக்கிறவனுக்கு ஐரோம் ஷர்மிளா மேலும் கவலை; கோபம். ’சந்தையில் டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் வரை விலை போகும் இரும்புத் தாதுவை ரெட்டி சகோதரர்கள் வெறும் 27 ரூபாயை அரசுக்குக் கொடுத்து விட்டு அள்ளிச் செல்வது’ம் (நன்றி; வினவு) கவலை; கோபம். ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி நட்டத்தை உண்டு பண்ணிய ராசாமேலும் கோபம். இதற்கெல்லாம் என்னால என்ன பண்ண முடியும்னு ஒரு ஆதங்கம். இந்த ஆதங்கத்திற்கு ஒரு வடிகால் அன்னா ஹஸாரே தருகிறார் என்றதும் பின்னால் சென்றது கூட்டம்; இதற்கு ஏன் கோபம் வரலாம்? இதற்காவது எழுந்திருந்து வந்தாயே என்று போராட்டக்காரர்களாக தங்களை மட்டும் நினைத்துக் கொள்பவர்கள் மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும்.

’ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராஜா வெறும் வாட்ச்மேன் வேல பார்த்ததிற்கு கிடைச்ச டிப்ஸ்தான் அந்த ஊழல் பணம். அதே சமயத்தில் அந்த ஓப்பந்தத்தை பெற தெரிந்தே ஊக்குவித்த டாடா, மிட்டல், அம்பானிகளும் அதனை விட பெரிய திருடர்கள் என்று ஏன் மக்களுக்கு தெரிய படுத்தவில்லை’ (நன்றி: தெக்ஸ்)அன்னா ஹஸாரே என்ன ‘ஒண்ணாங்க்ளாஸ்’ வகுப்பெடுக்கவா வந்தார், தெக்ஸ்?  டாடா, மிட்டல் பத்தி யாருக்குமே தெரியாதா? ஆனால் என்னைப் பொறுத்தவரையில் டாடா, அம்பானிகளைப் பத்தி நாம் கவலைப்பட வேண்டாம்; ஏனெனில் இந்த டாடா, அம்பானி,  போனால் இன்னொரு பணமுதலை வரும்; இன்னும் பல ராடியா வரும்.  ஒவ்வொருத்தனையாக நாம் நிறுத்த முடியாது. ஆனால் ஒவ்வொருத்தரும் தங்களுக்குத் துணையாகக் கொள்வது யாரை? ஏதோ  ஒரு அமைச்சனை. அந்த அமைச்சன் சட்டத்தில் உள்ள ஓட்டை  வழியாக இதுவரை தப்பித்துக் கொண்டிருக்கிறான்கள். பிரதம மந்திரி சொல்லியும் ஆ. ராசா, சந்தோலியா & சித்தார்த்த பெஹூராவையும் கூட்டு சேர்த்துக் கொண்டு ராசவாழ்க்கை வாழவில்லையா?  ஆயிரத்தெட்டு பணக்காரர்கள் கட்சி சேர்த்துக் கொண்டு தங்கள் லாபத்திற்கு என்னென்னவோ செய்வார்கள். ஆனால் நமது ‘குடியாட்சியில்’ சுதந்திரமாக எல்லாவற்றையும் செய்ய முடியாது. ஒரு லைசன்ஸ் வாங்கணும்; அனுமதி வாங்கணும். எங்க இருந்து வாங்கணும்? லோக்கல் தலைகளிடமிருந்து. அந்தத் தலைகள் அரசியல் வாதிகளும் அவர்களது அல்லக்கைகளான அதிகாரிகளும்.

/தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா?/ (நன்றி: வினவு) தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கக் கூடாதுன்னு சுற்றுச் சூழல் துறை சொல்லும். ஆனால் அதையெல்லாம் கண்டுக்காமல், நீ உன் வேலையைப் பார் - எனக்கு மட்டும் காசு வெட்டுன்னு சொல்றது ஒரு அமைச்சனும் அவன் அல்லக்கைகளும். இவன் கையெழுத்து போடலைன்னா எவனும் தண்ணீரைத்  திருட முடியாது.

ஆனால் இப்போது ஒரு அமைச்சன் தன் பதவிக்காலத்தில் காசு வாங்கிவிட்டு ஒரு ஆணை; அதை ஒரு அல்லக்கை அதிகாரி தான் ஓய்வு பெறும் நேரத்தில் கையெழுத்து போட்டு விட்டு போய்விடுவான். அந்த ஆணையை வைத்து பணக்காரன் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போவான். மக்கள் முழித்தாலும் ஸ்டெர்லைட் விவகாரம் மாதிரி இழுத்துக் கொண்டே போய் அந்தப் பணக்காரன் தன் வேலையை முடித்து விடுவான். இதுதான் நம் நாட்டு கதை.

இப்படி கையெழுத்து போட்ட அமைச்சனை நாம் ஏதாவது செய்ய முடியுமா? அப்படியே ராசா மாதிரி எல்லா வசதிகளும் அடங்கிய சிறையில் போட்டாலும் வெளியே ‘தியாகி’ மாதிரி வந்து, அதுவரை சம்பாதித்ததைப் பத்திரமாக வைத்து வாழையடி வாழையாக வாழ்வான்.


காவல் போடுவதே களவு போகாமல் இருக்க.

திருடர்களை வரிசையாக நிறுத்த முடியுமா என்ன? காவலாளியை நன்றாக அமைத்து விட்டால் நடப்பவை நல்லவைகளாக, முறையானவைகளாக இருக்காதா?

களவு எல்லா பண முதலைகளாலும் நடக்கும். எத்தனை முதலைகளை நீங்கள் தடுப்பீர்கள்? எத்தனை காலம் டாடாவைத் தடுப்பீர்கள்? ஒருவனைத் தடுத்தால் அடுத்தவன் தட்டிக்குள் பாய்ந்து வந்து விடமாட்டானா? பாதைகளையே அடைத்தால் எவன் என்ன செய்ய முடியும்? இந்த ஊழல் தடைச் சட்டத்தின் நோக்கமே இதுதான் என நான் நினைக்கிறேன்.

அப்படி ஊழல் செய்பவனைக் கண்டிக்க என்ன சட்டம் இருக்கிறது? அந்த சட்டம் வந்துவிடும் என்ற கனவே நன்குள்ளதே! அதை வரவிடாமல் தடுக்க ஆயிரம் அரசியல்வாதிகள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் போராட்டக் குணமுடையோரும் அந்தக் கூட்டத்தில் இருக்கலாமா?



*
இதையும் பாருங்கள் ...




6 comments:

  1. அசத்தல் தருமி. திடீர்னு திருந்தினா ஏன் இத்தன நாளும் மண்ணாந்தையா இருந்தே இப்போ மட்டும் என்ன வந்துச்சுன்னு கேட்டு திருந்தறவங்கள திருந்த விடாம செய்வாங்க. அவங்க மட்டுமே எல்லாத்தையும் இனிஷியேட் செய்யணும் மத்த யாராலயும் எதுவும் நல்லது நடந்துர கூடாது

    ReplyDelete
  2. வினவுக் கும்பலின் நோக்கமே இந்தியாவில் கம்யுனிச சர்வாதிகார ஆட்சியை கொண்டு வரவேண்டுமென்பதுதான். அப்படிப்பட்டவர்களால் ஜனநாயகம் சீர்படுவதை எப்படிப் பொறுத்துக்கொள்ள முடியும்?

    ReplyDelete
  3. எல்லோருக்குமே நாடு ஊழலில் இருந்து விடுபடாதா என்று ஆசைதான்.

    இந்த மசோதாவின் சரத்துகள்,பயன்பாடு பார்த்துவிட்டே பதில் சொல்ல முடியும்.
    அண்ணா ஹசாரே பரணில் கிடந்த இந்த மசோதாவை மீண்டும் அமல் படுத்த முயற்சி எடுத்தார் என்பதுவரை சரி. இது சுமார் 40 வருடங்களுக்கு முந்தியது என்றால் அப்போதைய சரத்துகள் எனா?.இதில் என்ன மாற்றம் செய்ய போகிறார்கள்?.இதற்கு பிறகே பெரும் பணி இருக்கிறது.

    இந்த லோக்பால் மசோதாவை எப்பொழுது எழுத ஆரம்பிப்பார்கள்?.இந்த மசோதா வடிவமைப்பது வெளிப்படையாக நடக்க வேண்டும்.இதனை பற்றி விளக்கமான பதிவுகள் ,விவாதங்கள் இந்திய அளவில் நடந்தால் மட்டுமே இது விஷயமாக ஏதேனும் நல்லது நடக்கலாம்.ஆனாலும் நமது அரசியல்வாதிகள் தங்களை பாதிக்கும் ஒரு விஷயத்தை கொண்டுவர அனுமதிப்பார்களா என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

    அண்ண ஹசாரேவை புகழ்வதை விட மசோதா வடிவமைப்பில் கவனம் செலுத்துவது முக்கியம்.அவரே எல்லாம் செய்து இந்தியன் தாத்தா மாதிரி ஊழலை(சினிமாவில் மட்டுமே) ஒழித்து விடிவார் என்பது பகல் கனவே.

    அய்யா இந்த மசோதா குறித்து இப்போதைய வடிவம்,சரத்துகள் குறித்து ஒரு பதிவிடுங்கள்.பிறகு என்ன மாற்றம் தேவை என்று பார்க்கலாம்.
    நன்றி.

    ReplyDelete
  4. இந்த சட்டமும், 1000ல 1001னா இருந்திடாம இருந்தா சரித்தான். 65 வருட பரிணமிப்புதான் இன்னிக்கு நாம் பார்த்து திளைத்து கொண்டிருக்கும் இந்த எண்கள். நீங்கள் நம்புறபடி இந்த ஒரே சட்டம் எல்லாத்தையும் ஃபிக்ஸ் பண்ணிட்டா யாருக்குத்தான் மகிழ்ச்சியில்லை. பார்ப்போம், இன்னுமொரு ஐந்து வருஷம் கழிச்சு என்னாகிதுன்னு.

    ஆமா, அந்த லோக்பால் பில் நேரடியா மக்கள் மகேசன கேள்வி கேக்குற மாதிரி தொடர்பு செய்யலயாமே அப்படியா? படிச்சி பார்த்தீங்களா, தருமி?

    அதே மசோதா கிராமங்களில் வார்ட் அளவில ஊழல், லஞ்ச முதலைகளை மக்களே தைரியமா முன் நின்று கேள்வி கேட்டு தண்டனையை பெற்றுத் தரும் ஓர் அமைப்பா இருந்தா இன்னும் சிறப்பா இருக்காது. அது என்ன இன்னமும் தொட முடியாத தூரத்தில் இருக்கும் பிரபலங்கள் மட்டுமே பங்கேற்க முடியும்... ஒரு பெஞ்ச்?

    ReplyDelete
  5. நல்லா எழுதி இருக்கீங்க தருமி.

    - \\பிட்சா சாப்பிடாமல், பெப்ஸி குடிக்காமல் வெறுமே சோறு, சப்பாத்தி சாப்பிடும் எத்தனை பேருக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்கும்?//

    ஆமாம் பல சாதரணக்குடிமகன்னு சொல்றமே அவனுக்கு அடுத்தவனை துன்பம் செய்யாம வாழ்வது மட்டுமே ஒரு குறிக்கோளா இருக்கும். அதற்காக அவன் எதற்காகவும் போராடலன்னு சொல்லி அவனை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கலாமா..?
    தனிமனித ஒழுக்கத்துடன் தன்னால் இயன்றவரை வாழ்ந்தது கூட குற்றமாகுமா?

    ReplyDelete
  6. // இதற்காவது எழுந்திருந்து வந்தாயே என்று போராட்டக்காரர்களாக தங்களை மட்டும் நினைத்துக் கொள்பவர்கள் மகிழ்ச்சியல்லவா கொள்ள வேண்டும்.
    ரொம்ப சரியாய் சொன்னீங்க தருமி. இது ஒரு நல்ல ஆரம்பம்னு சந்தோஷ படவேண்டிய விஷயம், இதுக்கு மட்டும் ஆதரவான்னு அங்கலாய்ப்பது பயனற்ற காரியம். இதை ஒரு முதல் படியாய் நினைப்போம். போக வேண்டிய இடம் தூரம். இந்த லோக் பால் மசோதாவில் உள்ள குறைகளையும் அதை நடை முறைபடுத்தும் போது தெரிய வரும் குறைகளையும் ஒவ்ஒன்றாய் களைய முயிற்சி எடுக்க வேண்டும். அதை விடுத்து முதல் படியிலேயே ஏன் அலுப்பு அடைய வேண்டும்?

    ReplyDelete