Saturday, October 27, 2012

599. A FIAT FROM A PRIME MINISTER

* The whole world needs a leader like this!




Prime Minister Julia Gillard - Australia Muslims who want to live under Islamic Sharia law were told on Wednesday to get out of Australia, as the government targeted radicals in a bid to head off potential terror attacks.

Separately, Gillard angered some Australian Muslims on Wednesday by saying she supported spy agencies monitoring the nation's mosques. Quote: 'IMMIGRANTS, NOT AUSTRALIANS, MUST ADAPT... Take It Or Leave It.

I am tired of this nation worrying about whether we are offending some individual or their culture. Since the terrorist attacks on Bali , we have experienced a surge in patriotism by the majority of Australians.' 'This culture has been developed over two centuries of struggles, trials and victories by millions of men and women who have sought freedom.' 'We speak mainly ENGLISH, not Spanish, Lebanese, Arabic, Chinese, Japanese, Russian, or any other language. Therefore, if you wish to become part of our society, learn the language!'

'Most Australians believe in God. This is not some Christian, right wing, political push, but a fact, because Christian men and women, on Christian principles, founded this nation, and this is clearly documented. It is certainly appropriate to display it on the walls of our schools. If God offends you, then I suggest you consider another part of the world as your new home, because God is part of our culture.' '

'We will accept your beliefs, and will not question why. All we ask is that you accept ours, and live in harmony and peaceful enjoyment with us.'

 'This is OUR COUNTRY, OUR LAND, and OUR LIFESTYLE, and we will allow you every opportunity to enjoy all this. But once you are done complaining, whining, and griping about Our Flag, Our Pledge, Our Christian beliefs, or Our Way of Life, I highly encourage you take advantage of one other great Australian freedom, 'THE RIGHT TO LEAVE'.' 'If you aren't happy here then LEAVE. We didn't force you to come here. You asked to be here. So accept the country YOU accepted.'



*

Muslim protest at the Global Atheist Convention, 

Melbourne 2012 

*



 *

Monday, October 22, 2012

598. ‘தம்மடிக்க’ போவோமா ... ? காணாமல் போன நண்பர்கள் - 6





*

அதீதம் இணையிதழில் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் இதழில் வந்த என் கட்டுரை


*






 1959-ல் ..... 

அது என்ன மாயமோ .. மந்திரமோ தெரியவில்லை. சின்ன வயதிலிருந்தே யாரும் புகைக்கும் போது வரும் வாசனை (நாற்றம்...??) மிகவும் பிடித்தது. அந்தக் காலத்தில் திரையரங்குகளில் புகைப்பிடிக்கத் தடையேதும் இல்லாததால் என்னை மாதிரி ஆட்களுக்கு உள்ளே நுழைந்ததும் வரும் புகை மண்டலம் ரொம்பவே பிடிக்கும். அதைவிடபடம் ஆரம்பித்ததும் அங்கங்கிருந்து புகை மண்டலங்கள் ப்ரொஜெக்டரின் ஒளி ஓட்டத்தில் தெரிய ஆரம்பிக்குமே அந்தக் காட்சி கூட ரொம்ப பிடிக்கும். அப்படியே அந்த ஒளி வட்டத்தின் அடியில் குவிந்து ஆரம்பிக்கும் புகை அப்படியே மெல்ல மேலே எழுந்து .. பிரிந்து .. மெல்லிய மேகமாகப் போகுமே ...  அதையெல்லாம் பார்த்து ரசிக்கணும்; முகர்ந்து அனுபவிக்கணும்.

இப்படி இருந்த நமக்கு எப்படியாவது புகைக்க வேண்டுமென்ற ஆவல் சின்ன வயசிலேயே வராமல் போய்விடுமா? வந்தது. ஆனால் எப்போன்னு நினைவில் இல்லை. ஆனால் ஒரு இடம், நேரம் மட்டும் நினைவில் இருக்கிறது. கோவில் பக்கத்தில் மேளம் அடிப்பதற்கோ எதற்கோ ஒரு உயர மேடை கட்டியிருப்பார்கள். நான் அதில் உட்கார்ந்திருக்கிறேன். கோவிலில் ஏதோ விசேஷம் போலும்.  கீழே நல்ல வெளிச்சம். எனக்கு ‘புகைத் தாகம்’ வந்திருக்கும் போலும்! ஒரு பேப்பரைச் சுருட்டி பீடி மாதிரி உருட்டி, ஒரு தீக்குச்சியை உரசி பற்ற வைத்தேன். பற்ற வைக்கும் போது மூச்சை உள்ளே இழுக்கணும் அப்டின்ற ‘இயற்பியல்’ மட்டும் தெரிந்திருந்தது. அதே போல் இழுத்தேன். அம்மாடி ... தொண்டைக்குள் தீப்பிடிச்சது மாதிரி அம்புட்டு புகை .. இருமல் ... கண்ணீர் .. இப்படியாச்சு என் முதல் புகைப்பிடித்த திருவிழா! எந்த வயசு என்று எதுவும் நினைவில்லை. ஏதோ ஒரு சிறு வயது. .. ஏதோ ஒரு கிராமத்து நிகழ்வு - இது மட்டுமே நினைவில் உள்ளது.

நாமளும் வளர ஆரம்பிக்க வேண்டாமா? வளர்ந்து வரும் காலத்தில் இதற்கெல்லாம் மதுரை சரியில்லை என்று உணர்ந்து, நமது அடுத்த ‘போர்க்களம்’ நமது சொந்த ஊர்தான் என்று நிர்ணயம் பண்ணியிருந்தேன். எங்கள் ஊர்ப்பக்கம் வீட்டில் பெண்கள் எல்லோரும் அனேகமாக பீடி சுற்றுவார்கள்.  வீட்டிலோ, வீதியிலோ, முற்றத்திலோ நாலைந்து பேர் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே பீடி சுற்றுவதை ஊரில் எங்கும் காணலாம்.

நான் சின்னப்பயலாக இருந்த அந்தக் காலத்தில் எங்கள் பாட்டையா வீட்டில் யாரும் பீடி சுற்ற மாட்டார்கள். below our prestige ...! வீட்டில் பாட்டையா காலங்கார்த்தால எழுந்திருச்சி, வயல் வேலைக்கு ஆட்களை விரட்டி அனுப்புவதில் குறியாக இருப்பார். நான் எழுந்திருக்கும் போதே அப்பாம்மா பெரிய பானை ஒன்றில் மோர் கடையும் ஒலி கேட்கும்.  பெரிய மத்து வைத்து கயிறு போட்டு கடைந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அத்தைமார்கள் வரிசையாக பாட்டையா நடத்திய பள்ளியில் ஆசிரியைகள். குடும்பம் அப்போது உச்சத்தில் இருந்தது.

முதல் கட்டு மெத்தையில் ஆறு ஏழு அடி உயரத்திற்கு நெல் குலுவைகள் சில நிற்கும். எல்லாவற்றிலும் நெல். அதற்கு மேலே உள்ள மெத்தையின் கூரை நடுவே ஒரு ஓட்டை. அங்கே காயப்போடும் நெல் மழை நாளில் நனைந்து விடக்கூடாதே என்று போட்ட ஒரு ஓட்டை. மழை வந்ததும் காயப்போட்ட நெல்லை கூட்டி, அந்த ஓட்டை மூலம் கீழே தள்ளிய ஒரு நாள் அனுபவம் இன்னும் நினைவிலிருக்கிறது.  சரி ... அப்படியெல்லாம் இருந்த வீடு எல்லாமுமாய் மாறி இப்போது இருக்கும் நிலையைச் சமீபத்தில் பார்க்கும் போது சோகமே மிஞ்சியது. பாட்டையா காலத்தில் நின்றிருந்த பீடி சுற்றல் இப்போது உறவு வீடுகளில் வழக்கமாகி விட்டது. மூன்று தலைமுறைகளில் இந்த  பீடி சுற்றல் ஒரு reference point போல் ஆகி விட்டது. ம் ..ம்.. பாட்டையா வீட்டுப் பொருளாதாரம் அப்படி ஆகிப் போச்சே என்று சமீபத்தில் ஊருக்குப் போனபோது தோன்றியது. அப்படியே அம்மா ஊருக்குப் போனால் அங்கே எல்லாமே அப்படியே மாறி இருந்தது.  அங்கே போனது  மனதுக்கு மகிழ்ச்சி.

நானும், மதுரையிலிருந்தே வரும்  பெரியப்பா வீட்டு அண்ணனும் ஒரு விடுமுறையில் பீடி குடித்து விடுவது என்று முடிவெடுத்தோம். ஊருக்கு வந்தாச்சு. கடையில் போய் பீடி வாங்கினால் அடுத்த நிமிடமே வீட்டுக்கு செய்தி வந்து விடும்.ஊரில் அனைவரும் சொந்தக்காரர்கள் தானே... ! என்ன செய்வது ...? ஆபத்பாந்தவனாக வந்தான் ஜான்சன். எங்கள் வயதுக்காரன். அவர்கள் வீட்டில் பீடி சுற்றுவார்களாம். நான் ஒரு கட்டு பீடி எடுத்துட்டு வந்திர்ரேன் என்றான். அடுத்து தீப்பெட்டி, அதுவும் யாரோ வீட்டிலிருந்து ‘சுட்டு’ விட்டு வருகிறோம் என்றார்கள்.

அடுத்து இடம் தேடும் படலம். யார் வீட்டு மாடியில் வைத்துக் கொள்வோமா என்றுதான் முதலில் நினைத்தோம். அதுவும் பெரிய பாட்டையா வீடு - வாழைப்பழக் குலை வீடு - நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். பெரிய வீடு. மேலே போய்விட்டால் யாருக்கும் தெரியாது என்று நினைத்தோம். ஆனா யாராவது பார்த்து விட்டால் ...? ஆக, அந்த இடம் வேண்டாம் என நினைத்தோம். பாட்டையா வீட்டுப் பள்ளிக்கூடத்திற்கு கிழக்குப் பக்கம் ஒரு ஓடை .. அதைத் தாண்டி ஒரு புளிய விளை. அந்த ஓடையில் தான் நாங்கள் வழக்கமாக ‘வேட்டைக்குப்’ போவோம். அங்கே போகலாம் என முடிவு செய்தோம். நாலைந்து பேர் - நான், அண்ணன் (Sam Joseph), ஜான்சன் ... இன்னும் இரண்டு மூன்று பேர் போனோம். யார் யாரென்று நினைவில் இல்லை. ஜான்சன் நல்ல பையன்! ஏனென்றால் ‘நான் பீடி எடுத்து வந்து கொடுக்கிறேன். ஆனால் நான் குடிக்க மாட்டேன்’ என்று சொல்லி விட்டான்.

புளிய விளைக்குப் போனோம். ஒரு புளிய மரத்தடியில் உட்கார்ந்து, அங்கிருந்து ஒரு நோட்டம் விடுவோம். பார்வையில் ஏதும் படவில்லையென்றால் பீடி பற்ற வைப்போம். காற்று, பயம், புதிய பழக்கம் - எல்லாம் சேர்ந்து பற்ற வைப்பதே ஒரு பெரிய நிகழ்ச்சியாகப் போனது. ஏதும் சத்தம் கேட்டால் பீடியை அங்கேயே போட்டு விட்டு அடுத்த இடத்திற்கு ஓடுவோம். இப்படியாக ஓடி ஓடி பீடி குடித்தோம். நாற்றம் தெரியக்கூடாதென்பதற்காக புளிய  இலைகளை மேய்ந்தோம். பல மணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பினோம்.

ஆனாலும் இந்த ‘பீடி உற்சவம்’ எனக்கும் அண்ணனுக்கும் திருப்தி அளிக்கவில்லை. பீடியோடு நின்றால் நம் தகுதிக்கு என்னாவது என்று ஒரு நினைப்போ என்னவோ? சிகரெட் குடித்து விட வேண்டும் என்று நானும் அவனும் ஒரு திட்டம் தீட்டினோம்.

எங்கள் ஊரிலிருந்து ஓரிரு மைலில் ஆலங்குளம் என்றொரு பெரிய ஊர். அங்கு எங்களை யாருக்கும் தெரிந்திருக்காது. ஆக அங்கே போய் சிகரெட் வாங்கி விடலாம். அங்கே போய் சிகரெட், தீப்பெட்டி, வாசனை போக மிட்டாய் எல்லாம் கொள்முதல் செய்து விட்டு, இரண்டு ஊருக்கும் நடுவில் சாலையைத் தாண்டி ஒரு கிணறு - ஏறி இறங்க வசதியான படிகளோடு - தெரியும். அங்கே போய் ‘அடித்து விட’ திட்டம் தீட்டினோம். காசு எப்படி ‘சம்பாதித்தோமோ’ தெரியவில்லை. காசை எடுத்துக் கொண்டு ஆலங்குளம் போனோம். கடையில் நான் தான்சிகரெட் வாங்க வேண்டும் என்பது ‘அண்ணனின் ஆணை’! ஏனென்றால் நான் சின்னப் பையனாம், அதனால் யாரும் என்னைச் சந்தேகிக்க மாட்டார்களாம்.

கிணற்றுக்கு வந்தோம். சிகரெட் ... ம்.. பற்ற வைத்தோம். சிகரெட்டின்முதல் பிரச்சனையைச் சந்தித்தோம். பீடியை நல்லா கடித்து வைத்துக் கொள்ள முடியும். இங்கே சிகரெட்டை வாயில் வைத்து இழுப்பதற்குள் முனை எச்சிலால் ஈரமாக ...  இழுத்தால் இருமல் வர ...  எப்படியோ ஒரு வழியாக ஒன்றிரண்டு சிகரெட் இழுத்துக் கொண்டிருந்திருப்போம்.

திடீரென்று தலைக்கு மேல் இரு உறவினர்கள் - மச்சான்கள் - பீட்டர் மச்சானும், பொன்னுச்சாமி மச்சானும் - வந்து நின்றார்கள். எங்களுக்கு ஏழெட்டு வயது மூத்தவர்கள். கிணற்றுக்குள் இறங்கி வந்தார்கள். ‘ஏண்டா ... இப்படி சிகரெட் குடித்துக் கெட்டுப் போறீங்க’ன்னு ஒரே அட்வைஸ் மயம். மீதி இருந்த சிகரெட்டைத் தண்ணிக்குள் வீசியெறியச் சொன்னார்கள். சிகரெட் பாக்கெட்டைக் கிழித்து, அவர்கள் வைத்திருந்த பேனாவை வைத்து, ‘நாங்கள் இனி சிகரெட் குடிக்க மாட்டோம்’  என்று எழுதி அதன் கீழ் எங்களைக் கையெழுத்து போடச் சொன்னார்கள். கையெழுத்து போட்டதும், அந்த அட்டையைச் சுக்கு நூறாகக் கிழித்து கிணற்றுக்குள் போட்டார்கள். ‘இந்த அட்டைகளையெல்லாம் நீங்கள் ஒன்றாக்கினால் இனி நீங்கள் சிகரெட் குடிக்கலாம். அது முடியாவிட்டால் இனி நீங்கள் சிகரெட்டைத்தொடக் கூடாது’. என்று ஒரு புதிய சட்டம் போட்டார்கள். அதை மீறி சிகரெட் குடித்தால் என்னென்னமோ நடக்கும் என்று சொல்லி பயங்காட்டினார்கள்.

நல்ல பிள்ளைகளாய் இருவரும் கையெழுத்துப் போட்டு, அதைக் கிழித்துக் கிணற்றில் போட்டு வெளியே வந்தோம். அதென்னமோ என் அண்ணன் அந்த சட்டத்தைத் தாண்டாமல் சிகரெட்டை விட்டுட்டான். நாம தான் பயங்கர புரட்சியாளனாச்சே!  கொஞ்ச நாள் சிகரெட் பக்கம் போகவில்லை. ஆனாலும், ஆசை விடவில்லை. மெல்ல அங்கங்கே, அப்பப்போ அப்டின்னு ஆரம்பிச்சி .... 26 வருஷம் குடிச்சி ... 1990 ஜனவரி 6-ம் தேதி வரை ..... சுகமாக, அனுபவிச்சி, ஆனந்தமா குடிச்சிக்கிட்டு ...  இருமிக்கொண்டு இருந்தேன்.

ஆரம்பத்தில் பீடி கொடுத்து உற்சாகப்படுத்திய ஜான்சனும் ஓரிரு ஆண்டுகளில் ஊரிலிருந்து சென்னை பயணமானான். புளிய விளை பீடிப் போராட்டத்திற்குப் பிறகு அவனோடு ஏதும் தொடர்பில்லாது போயிற்று. ஆனாலும் பீடி, சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது என்ற நினைப்பு வரும் போதெல்லாம் ஜான்சனும் புளிய விளையும் மனசுக்குள் காட்சிகளாக விரியும். அதோடு சத்தியம் வாங்கிய மச்சான்களும் மனசுக்குள் வந்து தரிசனம் கொடுப்பார்கள்.












*




Monday, October 15, 2012

597. நீயா .. நானா ..? - ஒரு கரும்புள்ளி





*


 ஒரு நீயா .. நானா? நிகழ்ச்சியில், பழைய தொழில் சார்ந்த வியாபாரிகள், புதிய தொழில் சார்ந்த வியாபாரிகள் என்று இரு குழுக்களுக்கு நடுவிலான ஒரு விவாதம் நடந்தேறி வந்தது. அதன் கடைசி பாகத்தில் நகர சுத்திகரிப்பாளர்கள் நால்வரையும், அதில் ஒருவரின் மகளையும் அறிமுகப்படுத்தினார்கள். அவர்கள் ஐவரையும் மதுரை சமூக ஆர்வலர் முத்துக் கிருஷ்ணன் எங்களூரிலிருந்து அழைத்து வந்திருந்தார்.

அந்த ஐவரையும் ஒரு பக்கம் நிறுத்தி அவர்களிடம் கேள்விகளை கோபிநாத் கேட்டுக் கொண்டிருந்தார். நான் தங்க்ஸிடம் ஏன் இவர்களை மட்டும் தனியே நிற்க வைத்துக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர்களை உட்காரவைத்து பேச வைக்கக்கூடாதா என்று சொல்லிக் கொண்டிருந்தேன். இது என் முதல் ஏமாற்றம். 

அந்த ஐவரில் ஒரு இளம்பெண். மலம் அள்ளும் ஒருவரின் குழந்தை. மிக மகிழ்ச்சியாக தான் முதுகலை முடித்து (M.Sc., B.Ed. ??) முடித்து இப்போது கணினியில் ஒரு டிப்ளமா கோர்ஸ் படிப்பதாகச் சொன்னார். தன் தந்தையின் தொழிலை எங்கும், யாரிடமும் மறைப்பதில்லை என்றும் கூறினார். அவரை அப்படி மகிழ்ச்சியாகப் பார்த்தது நன்றாக இருந்தது. அவர் படிப்பு, ஆர்வம், வேலை பார்க்கும் எண்ணம் பற்றி அங்கிருந்த புதிய தொழில் சார் மக்கள் யாரேனும் கேள்வி கேட்டு அவருக்கு அங்கேயோ வேலையளிக்க முன் வருவார்களோ என்று நான் எதிர்பார்த்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை.  அவர்கள் எல்லோருமே வியாபாரிகள் தானே!  .. இல்லையா?! . இது என் இரண்டாவது ஏமாற்றம்.

வந்திருந்த மற்ற நால்வரில் இருவர் பெண்கள். அதில் ஒருவர் தான் சொல்ல வந்ததை மிகக் கோர்வையாக, வெகு இயல்பாக எடுத்துச் சொன்னார். அடுத்தவர் பேசவில்லையே என்று நினைத்த போது, அவர் கோபிநாத்தைப் பார்த்து, நீங்களும் கூட எங்களை நிற்க வைத்து தானே பேசுகிறீர்கள்; எங்களை இங்கே உட்காரவைக்கவில்லையே என்று நேருக்கு நேர் கேட்டார். இதன் பிறகு கூட கோபிநாத் அவர்களை அங்கே உட்கார வைக்கவில்லை.  வேகமாக வந்து நீங்க என் அக்கா என்றெல்லாம் கோபி சொல்லி அப்பெண்ணை அணைத்து ஈடு கட்டியது ... ஹூம் .. “பப்பு வேகவில்லை”!  அவரும் அவரது குழுவும் மிகவும் மோசமாக இடறிய இடம் இது. இது மூன்றாவது ஏமாற்றம். ஏமாற்றம் மட்டுமல்ல மிகக் கொடுமை.

 மரியாதையை கேட்காமல் கொடுத்திருக்க வேண்டும். கேட்டும் கொடுக்க மனமில்லையெனில் அது மிகக் கொடுமையே. ஒருவேளை அங்கே ஏற்கெனவே உட்கார்ந்திருந்தவர்களோடு இவர்களை உட்கார வைத்தால் அவர்கள் கஷ்டப்படுவார்களோ என்று நினைத்திருப்பார்களோ? என் பார்வையில் அங்கு உட்கார்ந்திருந்த பல பெண்களை விட நிற்க வைக்கப்பட்டு அனுப்பப்பட்ட சுத்திகரத் தொழிலாளிப் பெண்கள் இருவரும் மிகவும் நன்றாக இருந்தார்கள். They were more presentable that many in the audience. பின்னும் ஏனிந்த நடைமுறை?

ஊடகங்களில் சாதி இந்துக்கள், தலித்துகள் என்று பிரித்து எழுதுவது வழக்கம். ஒரு வேளை நீயா நானாவில் சாதி இந்துக்கள் மட்டும் தான் உட்காரவைத்து மரியாதை செய்யப் படுவார்களோ? இது போன்ற நல்ல நிகழ்வுகளிலேயே இந்த சாதிய முறை இப்படிப் பட்டவர்த்தனமாகப் பார்க்கப்படுமாயின் நாம் வேறே எங்கே போய் முட்டிக் கொள்வது?






 *

Friday, October 12, 2012

596. ’பரதேசி’ பாலா .. ஒரு பெரிய பரதேசி.








*



வியாழக்கிழமை காலையில் மேசை மேல் கிடந்த தினசரிகளின் நடுவே இருந்து ஒரு முகம் என்னை முறைத்தது. ஆ.வி.யின் அட்டைப் படம் ... பரதேசி படத்தின் கதாநாயகனின் முகம் .. அதர்வா ... நினைத்தே பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது அப்படம். அதர்வாவைக் காணோம். ஒரு பாவப்பட்ட கோவக்காரனின் வெறித்த கண்கள் நம்மை ஊடுறுவுவது போல் இருந்தன.




உள்ளே கட்டுரையில் பாலா: “பிழைக்க வழியில்லாமல் சொந்த மண்ணைவிட்டுப் பிரியும் ஒவ்வொருத்தனும் பரதேசி தான். படம் எடுக்கிற நானும் பேட்டி எடுக்கிற நீங்களும்கூட பரதேசிகள்தான்!”

எங்கும் எத்தனை எத்தனையோ பரதேசிகள். எல்லாப் பரதேசிகளும் நன்கு ‘பிழைத்து’ விடவில்லை. பாலா சென்னைக்கு வந்த கதை எல்லோருக்கும் தெரியும். அப்படி வந்த பரதேசி இன்று மலைக்க வைக்க உயர்ந்து நிற்கிறார்.

வாழ்க ... வளர்க ....

ஆ.வி. கட்டுரையில் வரும் படங்களும் தனி ஒரு உலகைக் காட்டின. பாலா காண்பிப்பது எல்லாமே ஒரு தனி உலகாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு படத்திலும் அந்த எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடியாது என்றே நினைக்கிறேன். சில மனிதர்கள் ... அவர்கள் உலகம் என்றே அவரின் கதைகள் பயணிக்கின்றன. கதை மாந்தர்களை நிஜமான மனிதர்களை மாற்றி நமக்குத் தருகிறார். அவர்களின் அந்த உலகமும் - அந்த உலகம் மட்டுமே - நம்மைச் சுற்றி வருகின்றன. An embossed world!

அதர்வாவைத் தேர்ந்தெடுத்துள்ளாரேன்னு நான் கூட நினைத்தேன். ஆனால் பாலா, ‘அதர்வாவைக் கவனிச்சிப் பாருங்க. வெள்ளந்தியா சிரிக்கும் போதும் அவன் கண்ணுல ஒரு சோகம் தெரியும்’ என்கிறார். என்னமோ பார்க்கிறார் .. எதையெதையோ நடிகர்களிடமிருந்து கொண்டு வருகிறார். நல்ல magician ... நல்ல creator .... ஒவ்வொரு நடிகனையும் எப்படி இவ்வாறு மாற்றி போடுகிறார்.

வெறும் ஒரு அட்டைப் படமே இந்த அளவிற்கு என்னை ‘உசுப்பேற்றி விட்டதே’ என்று நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. படத்தில் வரும் மற்ற stills எல்லாமே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. படத்திற்கு ஆனந்த விகடனின் அட்டைப் படம் நல்ல ஒரு திறப்பு .. a real good bang!




கட்டுரையில் வரும் படங்களும் தனி ஒரு உலகைக் காண்பிக்கின்றன. படங்களில் உள்ள முகங்களில் அதர்வா முகம் பட்டுமே பார்த்த முகமாக இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஸ்ரீவித்யா மாதிரி முகம் தெரிந்தது. இன்னொரு பெண் யாரென்று தெரியவில்லை. இப்போதைக்குப் பிடித்த ஹீரோயின் - அதாவது இந்தப் படத்தின் ஹீரோயின் - அனுஷ்கா என்கிறார். படங்களில் தெரிந்த அந்த முகத்தைத் தேடிப்பார்த்தேன். அடையாளம் தெரியவில்லை. ஒரு வேளை இது வேறு ஒரு அனுஷ்காவோ??



முதல் நாள் .. முதல் ஷோ பார்க்கணும் .. பார்த்தே ஆகணும் !!

*

பின் குறிப்பு:
ஆ.வி.யில் அனுஷ்கா என்று கூறியுள்ளனர். அது தனுஷ்கா. தன்ஷிகா. அரவான் பட நாயகி.









 *

Monday, October 08, 2012

595. ஒரே வார்த்தை; ஒரே அறை .. நட்பு காணாமல் போச்சு! - காணாமல் போன நண்பர்கள் ... 5

*  
இது  அதீதம் இணைய இதழில் செப்ட் முதலிதழில்  வெளி வந்தது.
*


1958-ல் ........... 

எதிர்த்தாற்போல் நிற்பவரின் முகத்தில் ஓங்கி பொளேர்என்று நான் அறைந்தது வாழ்க்கையில் மூன்றே மூன்று முறைதான் நடந்தது. முதல் தடவை தான் இது.

என் பள்ளி நாட்களில்  தெற்கு வாசல் மார்க்கட் பகுதி மட்டும் கூட்டம நிறைந்த பகுதியாக இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் தெற்கு வாசல் மார்க்கட்டிலிருந்து தெற்கு மாரட்டு வீதி முழுவதும் ஒரே சந்தை தான். இதில் இப்போது அந்த வீதி ஒரு வழிப் பாதைவேறு. எப்படியோ மக்களும் வாகனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தங்கள் வழியைப் பார்த்துக் கொள்கிறார்கள்.   மார்க்கெட்டிலிருந்து கிழக்கே உள்ள காளியம்மன் கோவில் வரை ஏறக்குறைய மாலை வரை பெருங்கூட்டம் தான். இப்போதெல்லாம் அந்தப் பக்கம் போனாலேயே நம் சின்ன வயதில் பார்த்த தெருதானா என்று சந்தேகம் வந்து விடுகிறது. அவ்வளவு நெருக்கும் மனிதக் கூட்டம். நாங்கள் குடியிருந்த பழைய வீட்டின் வாசலை இப்போது போய் பார்த்தேன்.  அம்மாடி .. சின்னூண்டு வாசலாகப் போய்விட்டது. நெடுக அந்த வாசல் இருட்டுக்குள் நீளமாகப் போனது. யார் அங்கு இருக்கிறார்களோ என்ற நினைப்பில் உள்ளே போகவில்லைஒரு நாள் முயற்சிக்கணும்.
எண் 1 போட்டது தான் பழைய வீட்டு வாசல். ஆனாலும் அந்தக் காலத்தில இம்புட்டு சிறுசா இல்லை. எண் 2 போட்டது நான், தாவூது, அத்தா மூணுபேரும் உக்காந்து பேசுன திண்ணை.


இந்த வீட்டிற்கு மேற்குப் பக்கத்தில்பருப்புக் கடைஎன்று ஒன்று பெரிதாக இருந்தது. அரிசி, பருப்பு, மாட்டுக்கான புண்ணாக்கு என்று பல வகை இருந்தன. ஆனால் எல்லோரும் சொல்வது பருப்புக் கடை என்று தான். அந்தக் கடை இருந்த அந்த வீட்டின் உரிமையாளர் அதற்கு அடுத்த வீட்டில் இருந்தார். அவர் பெயரெல்லாம் தெரியாது. அப்பா பெரிய பள்ளிக்கூடத்து ஆசிரியரா .. அதனால் அந்த ஏரியாவில் கொஞ்சம் பிரபலம் தான்.  நானும் வாத்தியார் பையன்என்ற பெயரில் சுற்றி வந்தேன். பருப்புக் கடைக்காரர், அடுத்த வீட்டு பாய் எல்லோருக்கும் என்னை நன்கு தெரியும்.
சிகப்பு கலர்ல 1 போட்டது பழைய வீட்டு வாசல். பச்சைக் கலர்ல 3 போட்டிருக்கிறது பருப்புக் கடை. அதுக்கு அடுத்த வீடுதான் தாவூது வீடு.

எங்கள் வீட்டிற்கு கிழக்குப் பக்கம் நாலைந்து வீடுகள் தாண்டியதும் உயர்ந்த படிக்கட்டோடு ஒரு முக்கு வீடு. அப்போது அது எங்கள் ஏரியாவின் தபால் நிலையம். படிக்கட்டும் நல்ல உயரம். அதோடு முன்னால் தகரத்தில் ஒரு சாய்ப்பு இருக்கும். அந்த வீட்டிற்குப் பக்கத்திலேயே ஒரு பெரிய முன் விளக்கு. மெர்க்குரி விளக்குன்னு நினைக்கிறேன். நல்ல பிரகாசமா இருக்கும். அதனால் எங்க தெருப் பசங்கள் ராத்திரி படிப்பதற்கு வசதியாக இருக்கும். குளிர் காலத்திலும் மழைக் காலத்திலும் படிக்க எங்களுக்கு வசதி.
4-ம் எண் தான் அந்தக் காலத்து  தபால் நிலையம். எங்களுக்குப் படிக்க இடம் (திண்ணை) கொடுத்த இடம்.

எங்கள் வீட்டுக்கு அடுத்த கீழ்ப்பக்கத்து வீட்டில் முன்புறம் ஒரு திண்ணை இருக்கும். அந்த வீட்டின் கதவு திறந்தே நான் பார்த்தது இல்லை. இந்த வீட்டு பாய், பருப்புக்கடைக்கு அடுத்த வீட்டுக்கார பாய்க்கு உறவினர். இந்த வீட்டின் பின்புறம் எங்கள் வீட்டு மெத்தையிலிருந்து பார்த்தால் நன்கு தெரியும். முன்பக்கத்தில் இருந்த அந்த வீடு சின்னது தான். ஆனால் அதன் பின்னே ஏறத்தாழ 20 சின்னச் சின்ன ஓட்டு வீடுகள் இருக்கும். எல்லாம் வாடகைக்கு இருப்பவர்கள். ஏழைகள். என் மெத்தைக்கு அடுத்து நேரே கீழே இருந்த ஒரு வீட்டில் யாரோ ஒரு பெண்ணுக்கு பேய் பிடிக்குமாம். ராத்திரி நான் வேறு எங்கள் மொட்டை மாடியில் தனியாக இருப்பேனா .. அப்போவெல்லாம் ரொம்ப பயமாக இருக்கும். அந்தப் பெண் போடும் சத்தம் கொஞ்சம் வேடிக்கையாகவும், ரொம்ப பயமாகவும் இருக்கும். ஏன் வேடிக்கைன்னு சொல்றேன்னா ... அந்த அம்மா பேய் வந்த போதெல்லாம் ஆ .. ஆஆ .. இ...ஈன்னுமாதிரி சத்தம் போடும். என்னடா .. பேய் வந்து அ, , , படிக்குதுன்னு பேசிக்குவோம்.

அடடா ... நண்பனைப் பத்தியும் அவனுக்கும் எனக்குமான சண்டையைப் பற்றிச் சொல்ல வந்தவன் ரொம்பவே scenario பத்தி  சொல்லிட்டேனோ ... சரி .. விஷயத்துக்கு வருவோம்.

அந்த பருப்புக் கடைக்கு அடுத்த வீடு சொன்னேனே ... அந்த பாய் அந்த ஏரியாவில் இருந்த முஸ்லீம்களில் ரொம்ப முக்கியமான ஆள். அவருக்கு வேண்டியவர் தான மதுரை முனிசிபாலிடி மெம்பராக தேர்தலில் நின்றார். அப்போ மதுரை முனிசிபாலிடியாக இருந்தது மட்டுமல்ல ... அப்போ நடக்கும் தேர்தல்களில் கட்சிப் பெயர்கள் ஏதும் இருந்ததாக நினைவில்லை. நினைவில் இருக்கும் பெரிய விஷயம் என்னவென்றால் அப்போதெல்லாம் ஓட்டு போட சின்னம் என்று ஏதும் இருக்காது. எனக்கு பச்சை பொட்டி ... உனக்கு சிகப்பு பெட்டி .. அவருக்கு நீலப்பெட்டி ... இப்படிதான் இருக்கும். பெட்டியின் கலர் சொல்லித்தான் ஓட்டுக் கேட்பார்கள். மக்கள் அம்புட்டு கல்வியறிவோடுஇருந்திருக்காங்க போலும்!  அதோடு அப்பவே கொஞ்சம் காசும் தேர்தலில் விளையாடியது. வெற்றிலையில் நாலணா, எட்டணா வைத்துக் கொடுத்து, பொட்டியின் கலரைச் சொல்லி, அதில் ஓட்டுப் போடச் சொல்வார்கள். வெற்றிலையில் காசு வைத்துக் கொடுத்தால் சத்தியம் பண்றது மாதிரியாம். அதனால் அந்த ஓட்டெல்லாம் நமக்குத்தான் அப்டின்னு மக்கள் பேசிக்குவாங்க. ஒரு நாள் தேர்தல் நேரத்தில் என் அப்பாவும் அந்த பாயும் இதையெல்லாம் பேசிக்கொண்டு இருந்தைக் கேட்டேன்.

அந்த பாயின் மகன் பெயர் தாவூது. நல்ல சிகப்பா, சதை போட்டு கொஞ்சம் குண்டாக இருப்பான். அவனோடு எப்போதும் ஒரு பையன் இருப்பான். இந்தக் காலத்து வார்த்தையில் சொல்லணும்னா, அவன் தாவூதுக்கு ஒரு அல்லக்கை. கறுப்பா ஒல்லியா சின்ன பையனா இருப்பான். தாவூதும் நானும் சேர்ந்து விளையாடியிருக்கிறோம். நானும் அவன் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பலகாரம் கொடுக்க  போயிருக்கிறேன்.  தாவூதின் அத்தாவுக்கு  நானும், அவனும்  நல்ல நண்பர்களாக இருக்கணும் என்று ரொம்ப ஆசை. சேர்ந்து விளையாடுங்கப்பா என்று அடிக்கடி சொல்வார்.

ஒரு நாள் நான், தாவூது, அவனது அல்லக்கை மூன்று பேரும் எங்கள் வீட்டுக்கு அடுத்த வீட்டுத் திண்ணையில் விளையாடிக்கொண்டிருந்தோம். திடீரென எனக்கும் தாவூதுக்கும் ஏதோ பிரச்சனை. விவாதித்துக் கொண்டிருந்தோம். தாவூதுக்கு ரொம்ப கோபம் வந்து என்னை, ‘போடா சு**என்று மூன்றெழுத்துக் கெட்ட வார்த்தையால் திட்டி விட்டான். நானெல்லாம் அப்போ ரொம்ப சுத்தம்”. மயிர் என்றாலே கெட்ட வார்த்தை என்று நினைத்த நல்ல காலம் அது! தம்பி, தங்கச்சி யாரும் இதைச் சொல்லிட்டா அப்பாட்ட போட்டுக் குடுத்து அடி வாங்கிக் கொடுக்குற அளவுக்கு அந்த வார்த்தைன்னாலே ஒரு ‘இது’!!  தாவூது இப்படி சொன்னதும் என் கோவம் உச்சிக்குப் போய் விட்டது. ஓங்கி அவன் கன்னத்தில் பொளேர் என்று அறைந்து விட்டேன். சிவத்த பயலா .. அப்படியே கன்னம் சிவந்து போச்சு. அல்லக்கை சும்மா குதிச்சான். அப்படியே எதிர்த்தாற்போல் நின்றேன். தாவூது கலங்கி நின்றான். நான வீட்டுக்குப் போய் விட்டேன்.

நான் அப்போவெல்லாம் ரொம்ப பயப்படுவது என் அப்பாவிற்குத் தான். இப்படி சண்டை போட்டேன் என்று தெரிந்தால் நல்லா உழும்’. ஆனால் இந்த தடவை நான் அப்பாவுக்குப் ப்யப்படவேயில்லை. தாவூது அவன் அத்தாவிடம் சொல்லுவான்; அவர் நேரே வீட்டுக்கு வருவார்; அப்பாவிடம் போட்டுக் குடுப்பார். நல்லா நமக்கு விழும்’ ... இப்படி ஒரு screen play  தயார் செய்து விட்டிருந்தேன். இருந்தாலும் அப்பா மேல் இந்த தடவை பயம் வரவில்லை. சத்தியத்தின் support இருந்ததால் இருக்குமோ!

ஆனால் என் screen play தோத்துப் போச்சு. தாவூது போய் அத்தாவிடம் போய் சொல்லியிருக்கிறான். அல்லக்கை நல்லா தூபம் போட்டிருந்திருக்கிறான். மாலை நேரம். அல்லக்கை என் வீட்டுக்கு வந்து,  வா .. உன்னை அத்தா கூப்பிடுறார்அப்டின்னான். நானும் வெளியே வந்தேன். அடுத்த வீட்டுத் திண்ணையில் அத்தா உட்கார்ந்திருந்தார்; கோபத்தோடு என்னைப் பார்ப்பார் அப்டின்னு நினச்சேன். அவர் ரொம்ப சாதாரணமாக என்னைக் கூப்பிட்டார். பக்கத்தில் நிற்க வைத்துக் கொண்டார்.

என்னப்பா ... தாவூதை அடிச்சியா?’ என்றார்.

ஆமா.

எதுக்குப்பா அவனை அடிச்ச்?’

கெட்ட வார்த்தை சொல்லித் திட்டினான். அதான் ...

என்ன வார்த்தை சொல்லித் திட்டினான்?’

இங்க தான் ஜார்ஜ் ஒரு ஸ்கோர் பண்றான். (யாரு ஜார்ஜுன்னு கேக்றீங்களா? அது நான் தான்!)

அப்டி சொல்ற வார்த்தையா இருந்தா, நான் ஏன் அவனை அடிக்கப் போறேன்என்றேன்.

அத்தா என்னை இழுத்து அணைத்துக் கொண்டார். தாவூதைப் பார்த்து அவனை அப்படி திட்டினீயா? என்றார். அவன் தலையை ஆட்டினான். அவனைப் பாரு .. அந்த வார்த்தையைக்கூட அவன் சொல்ல மாட்டேங்குறான். ஆனா நீ அப்படி சொல்லி அவனைத் திட்டியிருக்க. இனிமே அவனை மாதிரி அந்த வார்த்தையெல்லாம் நீயும் பேசக்கூடாதுஎன்றார். தாவூதும் தலையை ஆட்டினான்.

அத்தா எங்க ரெண்டு பேரையும் பார்த்து, ‘இன்னும் ரெண்டு பேரும் ந்ல்ல பிரண்ட்ஸா இருக்கணும்என்றார், இருவரும் தலையை ஆட்டினோம். சரிப்பா ... நீ வீட்டுக்குப் போஎன்று முதுகில் தட்டி என்னை அனுப்பி வைத்தார்.

அதன் பின்னும் எனக்கும் தாவூத்துக்கும் ஒத்து வரலை. கொஞ்சம் தனித் தனியாகி விட்டோம். பின்னாளில் அந்த தெருவில் இருந்த,  இருக்கும் இன்னொரு நண்பர்  பேரா. ஜாபர் ஹூசைனிடம் கேட்டேன். தாவூது, என்னை மாதிரி இல்லாமல், நல்லா படிச்சி C.A. முடிச்சி, ஆடிட்டராகிட்டான் என்றார். அதோடு ஒரு கல்யாண மண்டபம் தெற்கு வெளி வீதியில் கட்டியிருக்கிறான் என்றார்.

எனக்கும் அவனைப் பார்க்கணும்னு இன்னும் ஆசைதான் ... ஆனாலும் கொஞ்சம் ஒரு இதுவாக இருக்கிறது.


பின்கதை:
கெட்ட வார்த்தைன்னா அப்ப்டி ஒரு காண்டோடுஒரு காலத்தில் இருந்திருக்கிறேன். அப்படி இருந்த நான் எப்படி ஆனேன்??

கெட்ட வார்த்தை பக்கமே நான் போனதில்லையா. 1970 அக்டோபர் மாதம் ஒரு பைக் வாங்கினேனா ... அப்போ வண்டி ஓட்ட சொல்லிக் கொடுத்த நண்பரோடு மதுரை ஆல்பர்ட் பாலத்தில் அவரைப் பின்னால் வச்சிக்கிட்டு போனப்போ .. எவனோ ரோட்டில் தப்பா வண்டி ஓட்டினானா ...  உடனே நான் முட்டாப்பயலே ...என்பது போன்ற ரொம்ப நீட்டான வார்த்தைகளால் அவனைத் திட்டினேன். ஆனால் பின்னாலிருந்த நண்பர் - அவ்ர் பெயர் எதுக்கு .. வேணாமே ... - இப்படியெல்லாம் திட்டக் கூடாது ... சிறுசா சொல்லணும் ... effective ஆக இருக்கணும் அப்டின்னு ஒரு ரெண்டு எழுத்து கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுத்தார். அது தான் ஆரம்பம்.

கொஞ்ச நாளிலேயே கத்துக் கொடுத்தவரே ஆச்சரிய்பப்டும் அளவிற்கு அந்த ரெண்டெழுத்துக் கெட்ட வார்த்தைக்கு முன்னால் இன்னும் கொஞ்சம்பண்புத்தொகையெல்லாம்  சேர்த்து பயங்கர expert ஆய்ட்டேன். நம் நண்பரே அசந்துட்டார்னா .. பாத்துக்கங்களேன்.

அட .. அதைவிட இன்னொரு நிகழ்ச்சி. பின்னால் ரவி என்ற நண்பன் உட்கார்ந்திருந்தான்.பயலுக்கு என்னை விட இருபது வயது கம்மி; நல்ல பயல். சுத்தமா கெட்ட வார்த்தை ஏதும் பேச மாட்டான். நாங்கள் போகும் போது சந்துக்குள் இருந்து ஒருத்தன் சைக்கிளில் திடீர்ரென்று வர ...நாங்கள் எப்படியோ ப்ரேக் அடித்து நிற்க ... அவன் சறுக்கி விழுந்தான். விழுந்தவன் எழுந்ததும் என்னைப் பார்த்து கெட்ட வார்த்தையோடு ஏதோ சொன்னான். சும்மா ... ஆவேசம் வந்திருச்சில்ல .. எடுத்து உட்டேன். மதுரையின் சங்கத் தமிழை ... சும்மா பீறிட்டு வந்திருச்சில்லா .. செமையாக் கொட்டித் தீர்த்தேன். விழுந்த பயல் அசந்துட்டான் ... வண்டிய எடுத்துட்டு ஓடியே போய்ட்டான்.

கொஞ்ச தூரம் போனதும். ரவி ஒரு டீக்கடையில் நிப்பாட்டச் சொன்னான். நிறுத்தி விட்டு என்னப்பா ஏதும் அடி .. கிடி பட்ருச்சான்னு கேட்டேன். 

இல்ல சார் .. கொஞ்சம் மூச்சு வாங்கணும்என்றான். 

எதுக்கு?’ என்றேன்.

எப்டி சார் ... இம்புட்டு வார்த்தை தெரிஞ்சிருக்கு .. அதுவும் சட சடன்னு வருதுஎன்றான்.

அது எல்லாம் ஒரு flow-வில வர்ரது தானே!என்றேன்.

ஆனா பாருங்களேன் ... அன்னைக்கி ஒரு வார்த்தை காதில் விழுந்ததும் எப்படி கோபம் வந்திச்சி .. இப்போ என்னடான்னா  .. வண்டி வண்டியா வார்த்தைகள் வந்து விழுதுன்னு நினச்சிக்கிட்டேன்.  

அப்படி இருந்த நான் இப்படியாயிட்டேனே!!


















*




Saturday, October 06, 2012

597. ஒரு மன்னிப்பும் ஒரு வேண்டுகோளும் ...

*

பெறுனர்:
திரு
கனம்
உயர் திரு
ex-மாண்புமிகு
பழைய அமைச்சர் பெருந்தகையே
பழைய மின்சார அமைச்சரே
கழகத்தின் காவல் தூணே

 .............. ஆற்காடு நாராயண வீராசாமி அவர்களே

ஏதோ நாங்கள் செய்வது என்னவென்று தெரியாமல் ஏதேதோ செய்து விட்டோம்; சொல்லி விட்டோம். உங்கள் மகத்துவம் இப்போது தான் எங்களுக்குத் தெரிகிறது. என்னென்னமோ நடக்குது; எப்படி எப்படியோ நடக்குது.  

எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்


*


அடுத்து ...

இன்னொரு பெறுனர்.

மின்சார அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்


ஐயா, உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்

தினமும் எங்களுக்கு மின்சாரம் வேண்டும் என்று கேட்க நாங்கள் அத்தனை முட்டாள்களா? அதெல்லாம் வேண்டாம்.

ஆனால் இன்னொரு உதவி மட்டும் செய்து விடுங்கள். சென்னைக்காரர்களுக்கும் மின் தட்டுப்பாடு என்றால் என்ன என்று தயவு செய்து சொல்லிக் கொடுத்து விடுங்கள். உங்க ஊரு நத்ததிலேயும் (அங்கெல்லாம் மின்சாரத் தடை இருக்குல்ல??) , அட .. எங்க ஊர் மதுரையிலேயும் எப்படியெல்லாம் மின்சாரத் தடை நடக்கிறது என்பதை சென்னைக்காரர்களுக்கும் செய்து காண்பித்து விடுங்கள் - உங்களுக்கு ரொம்ப புண்ணியமாக இருக்கும்.

கரண்ட் வரக்கூடாது. அப்படியே  வந்தாலும் அது மோசமான voltage drop-உடன் இருக்கணும். எல்லாம் இது மாதிரி சென்னைக்கும் பாத்து பாத்து செய்யுங்க ...

இப்படிக்கு

மின்துறை விலக்குகளால்
விளக்கு இல்லாமல் இருக்கும்,

மின்சாரத்தை எதிர்பார்த்து
ஈசி சேரில் படுத்தே கிடக்கும் ஒரு மதுரைப் பரதேசி



*
மதுரைக்கு வந்த (மின்சார) சோதனை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இங்கே பாருங்கள் ....

*

 
*

Thursday, October 04, 2012

596. இடப்பங்கீடு வேண்டவே வேண்டாம் ...







*


 வீட்டுக்கு வந்த பேத்திக்கு இரண்டு சக்கர வண்டியில் போவதென்பதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அந்த ஆர்வத்தில் ஓடியாடி ஏறியதில் புதிதாக வாங்கிய செருப்பு அறுந்து போய் விட்டது. அவள் அம்மாவிற்கு மகள் ஆசையாய் வாங்கிய செருப்பு அறுந்து விட்டதே என்று கவலை.  செருப்பை எடுத்துக் கொண்டு செருப்பு தைப்பவர் இருக்குமிடம் தேடிப் புறப்பட்டேன். நாலைந்து கிலோ மீட்டர் அலைந்தும், ‘அந்தக் காலத்தில்’ அவர்கள் இருக்குமிடமான பஸ் நிலையம், தெரு மூலைகள் எங்கும் யாரையும் காணோம். ஒரே இடத்தில் கடை ஒன்றிருந்தது. பக்கத்தில் போனால் ஆளே இல்லை. மறுபடி வேட்டை தொடர்ந்தது. எங்கும் யாரும் இல்லை. திரும்பிப் போகலாம் என்று வந்த போது அந்தக் கடையில் ஆள் இருந்தது.

 அப்பாடா என்று அந்தக் கடைக்குப் போனேன். இளைஞன் டி-ஷர்ட் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். இடையில் ஒரு கைலி. அந்தக் கைலிக்குப் பதிலாக ஒரு ஜீன்ஸ் போட்டிருந்தால் --- there would be another decent good looking young man there - என்றிருந்திருக்கும் என்று நினைத்தேன். அவரைப் பற்றி நினைத்ததைச் சொல்லலாமா என்று நினைத்துப் போகும்போது அவர் என் மீது ஒரு ‘குண்டு’ போட்டார்;

 ‘வாங்க சார் .. யாரோ வெளிநாட்டுக்காரர் வந்திருக்கார்னு நினச்சேன்’ என்றார்.

 ‘அட .. என்னங்க இப்படி கேலி பண்றீங்க?’ என்றேன்.

‘இல்ல சார்’ அப்டின்னுட்டு நான்  போட்டிருந்த ட்ரவுசரைப் பார்த்தார்.

‘கிழடுக எதைப் போட்டா என்னங்க ... வசதியாகவும் இருக்குதில்ல’ என்றேன்.

அடுத்து அவரிடம் செருப்பு தைக்க இடம் தேடியும் யாரும் கிடைக்கவில்லை. நீங்கள் தான் இந்த ஏரியாவிலேயே ஒரே ஆளு போலும் என்றேன்.சொல்லிட்டு,’அதிகமா யாருமே இல்லைன்னு பார்த்ததும் சந்தோஷமா இருக்குது’ என்றேன்.

’ஏன் சார்?’

‘குலத் தொழில்னு ஒண்ணை வச்சிக்கிட்டு நாங்கல்லாம் ஆட்டம் போடுறோம்ல ... அதெல்லாம் இப்ப குறைஞ்சதும் சந்தோஷம் தான். நீங்க கூட ஏன்யா இன்னும் இந்த தொழில் பாக்குறீங்க?’ அப்டின்னேன்.


அவர் பதில் சொல்வதற்குள் இன்னொரு இளைஞன் பாண்ட், ஷர்ட்டில் வந்தார். (செருப்பு தைப்பவர் பெயர் ஆனந்த் என்று ஏற்கெனவே பெயர் கேட்டு வைத்திருந்தேன். ) ஆனந்த்,  வந்தவர் தன் தம்பி என்றும் அவருக்கு அரசு வேலை கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியோடு சொன்னார்.

’நான் இந்த தொழிலை விட முடியலை,சார். ஆனா என் பிள்ளைகளை நல்லா படிக்க வச்சு கலெக்டர், டாக்டர் வேலைக்கு அனுப்பணும்னு ஆசையா இருக்கு’ என்றார்.

 ‘ரொம்ப நல்ல ஆசை. வழிநடத்துங்க; பிள்ளைகளிடமும் எல்லாமும் சொல்லுங்கள்; நல்லா படிக்க வையுங்கள். இன்னும் காலம் காலமா ‘குலத்தொழில்’னு ஏதாவது ஒண்ணை சுமந்துகிட்டு இருந்தது போதும்’யா. செத்தா சங்கு ஊதணும்னு நினைச்சா, செத்தவன் வீட்ல உள்ள ஒரு ஆள் அப்படி ஊதிக்கட்டும்; சாவுக்கு டான்ஸ் ஆடணுமா .. அவங்க வீட்ல இருக்கிறவனுங்க ஆடட்டும். குலத் தொழில்னு பழைய வேலையெல்லாம் இன்னும் பாத்துக்கிட்டே இருக்கிறது தப்புல்ல’ என்றேன்.

ஆனந்த் நான் சொன்னதை முழுமையாக ஆதரித்தார். தன் குடும்பத்தின் அடுத்த வாரிசு செருப்பு தைக்காது’ என்று முழு நம்பிக்கையோடு சொன்னார்.

மகிழ்ச்சியாயிருந்தது. ஆனாலும் ஆனந்த் தன் வாழ்க்கையை அதுபோல் ஆக்க வேண்டும் என்ற ஆவலில்  இல்லையே என்று சிறிது கவலைதான். அந்தப் ‘பொறி’ இவர்களிடையே இல்லாமல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

தாழ்த்தப்பட்டவர்களாக பலரை முடக்கி வைத்து, குலத்தொழில் அப்டின்னு அவங்க தலையில மிக மோசமான வேலைகளை ஏற்றிவைத்து மேலும் அவர்களை முடமாக்கி வைத்துள்ளோம். எல்லோருக்கும் இதில் முழுப்பங்கு இருக்கிறது. பீ அள்ளணும், செருப்பு தைக்கணும், அர்ச்சகர் ஆகணும்; துணி துவைக்கணும்; மயிர் வெட்டணும்;   -- இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு சாதியை அடையாளப்படுத்தி, மனிதர்களை மேம்படுத்தி அல்லது சிறுமைப் படுத்தி வைத்திருக்கும் இந்த இடப் பங்கீடு போதுமே.  இன்னும் காலங்காலமாய் குலத் தொழில் என்ற பெயரில் அடிமைத்தனம் இன்னும் நீண்டு கொண்டே போகணுமா?  

இந்த சாதிக்கு இந்த வேலை என்ற இடப்பங்கீடு தோற்க வேண்டும்;  அது விரைவில் சாக வேண்டும்.  

தலித் கலை விழாக்கள் என்று அடிக்கடி நடத்துகிறார்கள். அந்தச் சாதியில் பிறந்து உழைப்பால் முன்னுக்கு வந்தவர்கள், உயர் கல்வி பெற்றவர்கள், அறிவியல் துறையில் முன்னேறியவர்கள்,  வியாபாரம் செய்பவர்கள் ... இவர்களை அடையாளப்படுத்தி  இந்த விழாக்களில் அவர்களின் உயர்வைக் கொண்டாடினால் நல்லது. அதை விட்டு விட்டு இன்னும் குலத் தொழிலாகவே பார்க்கப்படும் சில கலைகளை அந்த மேடைகளில் ஆண்டு தோறும் நடத்துவது யாருக்கும் பெருமையுமில்லை; அதனால் எந்த நல் விளைவும் இருக்கப் போவதுமில்லை. அந்தக் கலைகள் சாதியோடு பின்னப்பட்டிருந்தால் பிறகு எதற்கு அந்தக் கலைகள்? பின் ஏன் இந்த விழாக்கள்? அந்த விழாக்கள் நடப்பதாயிருந்தால் அது அந்த சாதியினருக்கு உயர்வைத் தர  முயல வேண்டும்.  இல்லாவிடில் அந்த விழாக்கள் நடத்தாமல் இருப்பது நல்லது.


*


தொடர்புள்ள பழைய பதிவொன்று இங்கே


             
*









*