Monday, December 03, 2012

608. கோபாலும், நாராயணனும் ... - காணாமல் போன நண்பர்கள் ...8





*

அதீதம் இணைய இதழில் பதிவிட்ட என் கட்டுரையின் மீள் பதிவு:


*


கோபாலும் நாராயணனும் ...
காணாமல் போன நண்பர்கள் ... 8

 1958 - 60 ..... 

1960-ல்  S.S.L.C. தேர்வு எழுதினோம். ஆனால் அப்போது மாணவர்களான எங்களுக்கோ ... இல்லை ..  எங்கள் பெற்றோருக்கோ ஸ்பெஷலாக காய்ச்சல் ஏதும் வரவில்லை! அதெல்லாம் இப்போ உள்ள மாணவர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் தான். எங்கள் காலத்தில் அப்படியேதும் பெரியஅழுத்தம்ஏதும் கிடையாது. படித்தோம் .. அரசுத் தேர்வு என்பது மட்டும் அடிக்கடி எங்கள் பேச்சில் இருக்கும்.  முனைந்து படிக்க வேண்டுமென்றெல்லாம் என் போன்ற மக்குப் பசங்களுக்கு அதிகம் தெரியாது. மற்ற வகுப்புகளை விட இன்னும் கொஞ்சம் சீரியசாக இருந்தோம். அவ்வளவே ...


படிப்பது ஏற்கெனவே சொன்னது போல் அதிகமாக சாலை விளக்குகளுக்கு  அடியில் தான். பாதி நேரம்  அரட்டையும் விளையாட்டும் இருக்கும். எல்லாம் எங்கள் தெருப் பசங்களின் கூட்டாகத்தானிருக்கும். S.S.L.C. தேர்வுக்காக இன்னும் சில நண்பர்களின் தொடர்பு கிடைத்தது.  கோபாலும், நாராயணனும். இருவருமே என் வகுப்புத் தோழர்கள். நாராயணன் என்னை விட நன்றாகப் படிப்பான். கோபால் என்னைவிட கொஞ்சம் கம்மி. நாராயணன் கொஞ்சம் பணக்காரப் பையன். கோபால் என்னை விட சிறிது கம்மி. கோபாலும் நாராயணனும் என்னைவிட நெருங்கிய நண்பர்கள். கோபால் நாராயணன் வீட்டுக்குப் படிக்க வர ஆரம்பித்தான். நானும் சில நாள் அங்கே நாராயணன் வீட்டுக்கும் போவேன்.

பல நாள் கோபால் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் என்னோடு படுத்துக் கொள்வான். அவன் சுத்த பயந்தாங்கோளி. அவனை அடிக்கடி  பயமுறுத்துவேன். எங்கள் பக்கத்து வீட்டு மெத்தையில் ஒரு ஆள் தற்கொலை பண்ணிக் கொண்டதாகச்  சொல்வார்கள். முதலில் எனக்குப் பயமாக இருந்தது. ஆனால் அங்கேயே இருந்த்தால் அந்தப் பேய் எனக்கு தோஸ்த் ஆகி விட்ட்தா ... இல்லை .. நான் அதோடு பழகி விட்டேனோ தெரியவில்லை. எனக்குப் பயம் போய் விட்டது. கோபால் தூங்க ஆரம்பிக்கும் நேரம் பார்த்து அந்த தற்கொலை பற்றிப் பேசுவேன். கோபால் எழுந்திருந்து உட்கார்ந்து கையெடுத்துக் கும்பிடுவான். அவன் தூங்கி நான் உடனே தூங்காவிட்டால் இடுப்பில் இருக்கும் பெல்டை எடுத்து கூறையில் இருந்து தொங்க விட்டு அவனை எழுப்பி .. பாம்புன்னு சொல்லி .. கத்தவைப்பதும் ஒரு ஜாலி!  படிக்க வந்த நண்பனை இப்படி அலற விடுவதில் அப்படி ஒரு சந்தோஷம்!

கோபாலோடு சில நாள் நாராயணன் வீட்டுக்குப் போயிருக்கிறேன். நான் இருந்ததோ சரியான ஒண்டுக் குடித்தனம். என்னைப் போல் ஆட்களுக்கு நாராயணன் வீடு ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவன் வீடு தெற்கு வெளி வீதியிலிருந்து தாயுமானம் பிள்ளை மருத்துவ மனைக்கு ஒரு சந்து போகுமே .. அந்த மூலையில் மெயின் ரோட்டில் தான் அவன் வீடு. நான் வழக்கமாக மளிகைச் சாமான்கள் வாங்கப் போகும் அருணாசல அண்ணாச்சியின் கடைக்கு நேர் எதிரே அவன் வீடு. உள்ளே நுழைந்ததும் இட்து பக்கம் ஒரு பெரிய சமையலறை. அடுத்து ஒரு பெரிய வெற்றிடம் கூரை ஏதுமில்லாமல் இருக்கும். அதன் பின் அவன் வீடு. நாலைந்து படிகள் வைத்து உயரமாக, கொஞ்சம் பெரிதாக இருக்கும். அதற்குள் அதிகம் போனதில்லை. ஆனால் இடது பக்கம் ஒரு படிக்கட்டு மெத்தைக்குச் செல்லும். அதில் ஒரு பெரிய அறை. அதுதான் நாராயணனின் அறை. அவனுக்குப் படிக்க நிறைய வசதி இருக்கும். ஏன் நமக்கெல்லாம் இப்படி வசதியெல்லாம் இல்லை என்ற எண்ணம் அந்த அறைக்குள் நுழையும்போது எனக்குத் தோன்றும்.

மேற்குப் பக்கம் ஒரு ஜன்னல் இருக்கும். அதற்கருகில் ஒரு பாய் விரித்து வைத்திருக்கும். இந்த வேலை, சமையல் வேலையெல்லாம் பார்ப்பதற்கு அவர்கள் வீட்டில் ஒரு பெரிய வேலைக்கார அண்ணன் இருப்பார். அந்தப் பாயில் கணக்குப் பிள்ளை மேசைன்னு ஒண்ணு சொல்லுவாங்களே .. அது ஒண்ணு இருக்கும். மேல் மூடி சாய்வாக இருக்கும். அதைத் திறந்தால் உள்ளே நமது புத்தகமெல்லாம் வச்சுக்கலாம். அந்த மேசையின் ஓரத்தில் ஒரு சின்ன க்ளிப் ஒண்ணு இருக்கும். மேசையின் இட்து பக்க ஓரத்தில் இருக்கும். அந்த க்ளிப்பில் ஒரு சின்ன குண்டு பல்பும் அதைச் சுற்றி ஒரு சின்ன ஷேடும் இருக்கும். அந்த ஷேடிலிருந்து இரண்டு கம்பி வளையங்கள் இருக்கும். அவைகளை பல்பின் மேல் அமுக்கினால் அப்படியே க்ளிப் மாதிரி ஒட்டிக்கும். வேண்டிய பக்கம் அதைத் திருப்பலாம். அட .. இதெல்ல்லாம் பெருசா ..? என்றெல்லாம் நீங்கள் கேட்கப்படாது! ஏன்னா நான் சொல்றது 52 வருஷத்துக்கு முந்திய விஷயம். அப்போ இதெல்லாம் பெரிய அதிசயம். அந்த மாதிரி சின்ன குண்டு பல்பெல்லாம் ரொம்ப அரிது. கட்டாயம் அது ஒரு வெளிநாட்டுச் சரக்காகத் தான் இருக்க வேண்டும். அந்தக் காலத்தில் ட்யூப் லைட் கூட கிடையாது.

ட்யூப் லைட் அப்டின்னதும் இன்னொண்ணும் நினைவுக்கு வருது. அந்தக் காலத்தில பஸ்ஸில் ராத்திரியெல்லாம் சின்னச் சின்ன பல்பு விளக்குகள் தானிருக்கும். கண்டக்டர்கள் எல்லாம் அந்த லைட் கிட்ட வந்து தான் டிக்கெட் எல்லாம் போடுவார்கள். கொஞ்ச ஆண்டுகள் போன பிறகு முதல் தடவையாக ட்யூப் லைட் போட்டு பஸ் போனதைப் பார்த்த போது மிக அதிசயமாக இருந்தது. என்னவோ .. அழகா .. லைட் போட்ட ஒரு பெரிய வீடு அப்படியே ரோட்டில் ஓடுவது போல் தெரிந்தது இன்னும் நினைவில் உள்ளது.

சரி ... நாம நாராயணன் வீட்டுக்கு, அங்கிருந்த விளக்கிற்கு வருவோம் ...  அந்த விளக்கைப் பார்க்கவே எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த லைட் போட்டால் அந்த மேசையில் மட்டும் வெளிச்சம் அடிக்கும். இந்த மாதிரி லைட் எல்லாம் வாங்கிக் கொடுத்தால் நாமும் நாராயணன் மாதிரி நல்லா படிக்கலாம்னு ஒரு பக்கம் மைன்ட் வாய்ஸ் கேக்கும்! 

அவ்வப்போது நாராயணன் வீட்டுக்கு கோபாலுடன் படிக்கப் போயிருந்தாலும் நாராயணனுடன் படித்ததை விட அவனோடு விளையாடியது தான் அதிகம். நாராயணன வீட்டுக்கு எதிரில், அண்ணாச்சி கடைக்கு அடுத்ததாக ஒரு கார்ப்பரேஷன் பள்ளி இருந்தது. அந்தப் பள்ளிக்கூட வாசல் தான் எங்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம்’!  

கோலிக்குண்டு, பம்பரம் எல்லாம் அங்குதான் விளையாடுவோம். கோலிக்குண்டு விளையாட்டில் பேந்தா என்று ஒரு விளையாட்டுதான் அடிக்கடி விளையாடுவோம். அதில் நாராயணன் பயங்கர எக்ஸ்பெர்ட்.. பேந்தா எப்படி விளையாடணும் தெரியுமா?  ஒரு சதுரம் அதுக்குள்ள குறுக்கா ஒரு கோடு .. தரையில வரைவோம்.
 அதிலிருந்து ஒரு பத்து அடி தாண்டி ஒரு கோடு. அங்க இருந்து குண்டுகளை உருட்டி விடணும். யார் கோலிக் குண்டு அந்தச் சதுரத்திற்கு அருகில் இருக்கிறதோ அவன் ஜெயிச்சவன். மத்தவங்க குண்டு எல்லாம் அந்த சதுரத்திற்குள் வைத்து விட வேண்டும். ஜெயித்தவன் தன் குண்டு வச்சி, சதுரத்திற்குள் இருக்கும் குண்டுகளை சதுரத்திற்கு வெளியே வரும்படி அடிக்கணும். குண்டு வெளியே வந்ததும் ஜெயிச்சவன் சொல்ற் ஆளுக மட்டும் குண்டை எடுத்துக்குவோம். கடைசியா ஒருத்தன் மாட்டிக்குவான். அவன் குண்டை மற்றவர்கள் மாற்றி மாற்றியடித்து அந்தச் சதுரத்திலிருந்து விரட்டி விடணும். யாராவது குறி வைத்து அடிக்கும் போது அடிக்காவிட்டால் அவன் அவுட்.. தோத்தவன் கடைசியில் முட்டிக் கையால் அந்தக் குண்டை சதுரம் வரைக்கு தேக்கணும்’.  நாராயணன் கோலிக்குண்டை அடிக்கும் போது அவனது வலது நடுவிரல் நல்லா வளையும். ஏறக்குறைய புறங்கையை தொடுறது மாதிரி வளையும். அதனால தூரத்தில் உள்ள குண்டையெல்லாம் குறியா அடிச்சிருவான். அதுனால அவ்னோடு சைடு சேர்ரதுல பேந்தா விளையாடும்போது போட்டியாக இருக்கும். 

அதோடு எனக்கு அப்போ ஒரு தியரி: நாராயணனின் கையெழுத்து நல்லாயிருக்கும். அவன் விரல் அப்படி அழகா வளையறதுனால தான் அவனால அழகா எழுத முடியுது என்பது என் அப்போதைய தியரி!

மூணு பேரும் S.S.L.C. முடிச்சோம். வேற வேற கல்லூரியில் சேர்ந்தோம். ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு கோபாலைச் சந்தித்தேன். நாராயணன் கலைக் கல்லூரியில் ஒரு ஆண்டு முடித்து விட்டு, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விட்டான் என்றும் அதிகம் தொடர்பில் இல்லையென்றும் சொன்னான்.

பின்னாளில் பார்த்த போது கோபால் அரசு நூலகத்தில் வேலை பார்ப்பதாகக் கூறினான். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து கோபாலைப் பார்த்தேன். மதுரை, சிம்மக்கல்லில் உள்ள தலைமை நூலகத்தில் பொறுப்பாளராக Librarian – இருப்பதாக்க் கூறினான். நாராயணன் பற்றி ஏதும் தகவல் உண்டா என்று கேட்டேன். கோபாலுக்கு ஏதும் தெரியவில்லை. நான் ஒருமையில் கோபாலுடன் பேசினேன். கோபாலுக்கு அப்படிப் பேச மனம் வரவில்லை. மரியாதையாகப் பேசினா(ன்)ர் !

ஏனோ .. என்னை மாதிரி இல்லாமல் மற்றவர்கள் எல்லோரும் இப்படி நல்ல மனிதர்களாக மாறிப் போனார்கள் ...!

*

5 comments:

  1. உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.....

    ReplyDelete
  2. இப்படியான பதிவுகளைத் தான் நான் விரும்புகின்றேன், அக்காலங்களை நாங்கள் கண்டதில்லை, உங்களைப் போன்றோரின் எழுத்துக்கள் மூலம் அறிய முடிகின்றது. குறிப்பாக அக்கால வாழ்க்கை, பஸ்களின் லைட், தெருவிளக்கு, விளையாட்டு, அருமை... ஆனால் பால்ய காலத் தோழமைகளை சந்திக்கும் போது வருடும் மகிழ்ச்சி, நெருடும் சோகம் ...

    ReplyDelete
  3. நினைவுகள் இனிமை! அருமை! நன்றி!

    ReplyDelete
  4. நட்பில் அவன் இவன் என்பது ஏக வசனமோ?! அல்ல ஏற்புடைய அன்பே ஆனால் வளர்ந்துவிட்ட போதில் அந்த நெருக்கம் குறைந்து விட்டதோ அல்ல தொடர் சந்திப்புகள் குறைந்து விட்டதோ அவர், இவர் என்று விளிக்க

    ReplyDelete
  5. சுவாரஸ்யமான பகிர்வு.

    ReplyDelete