Wednesday, March 13, 2013

642. காணாமல் போன நண்பர்கள் - 14 - டாக்டர் கேசவன்






*
அதீதம் இணைய இதழில் வெளிவந்த கட்டுரையின் மறுபதிப்பு ....


1961 - 64-ல் ...........

 B.Sc. முடித்து விட்டு முதுகலை போக நினைத்திருந்தேன். அந்த சமயத்தில் B.Sc. முடித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சில இடங்கள் என்று அறிவிப்பு ஒன்று வந்தது. அட .. இப்படி ஒரு சான்ஸா என்று நினைத்து நானும் எனது B.Sc. வகுப்பு நண்பர்கள் இருவரும் நேர்முகத் தேர்வுக்கெல்லாம் போனோம். சென்னைக்கு மூவரும் ஒன்றாகப் போனோம். அந்த இரு நண்பர்கள் - மாணிக்க வாசகம். மதுரையில் இவரது வீடு என் வீட்டுக்குப் பக்கத்தில். ஆகவே சைக்கிளில் தினமும் கல்லூரிக்கு ஒன்றாகப் போவோம். இவர் இளம் வயதிலேயே காலமாகி விட்ட செய்தி கிடைத்தது. இன்னொருவன் I. கேசவன். ஜாலியான பயல். வகுப்பில் இவனுக்கு dissection சரியாக வராது. இருவரும் செய்முறை வகுப்புகளில் அடுத்தடுத்த வரிசையில் இருப்போம். அந்தக் காலத்தில் அடிக்கடி தவளையை அறுத்து என்னென்னமோ பண்ணுவோம். அநேகமாக தலையில் உள்ள நரம்புகளை - cranial nerves - எடுத்து தொடர்புகளை அழகு படுத்தணும். கேசவன் திடீரென்று என்னைப் பெயர் சொல்லி அழைப்பான். அப்படி அழைத்து விட்டால் அவன் எடுக்க வேண்டிய நரம்பை அறுத்து விட்டான் என்று அர்த்தம்.

மூன்றாமாண்டு படிக்கும் போது நானும் அவனும் ஒட்டிக் கொண்டோம். முக்கிய காரணம் ‘தம்’. இருவரும் வகுப்புகளுக்கு நடுவில், மாலையில் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு டீக்கடையில் ஒன்றாகச் செல்வோம். நான் அதுவரை திருட்டுத் தம் மட்டும் அடித்தவன் மூன்றாமாண்டில் ‘ஓப்பன்’ டைப்பாகி விட்டேன். இருவரும் அங்கே போவோமா .. அங்கே எனக்கு ஒரு புதுப் பழக்கம் சொல்லிக் கொடுத்தான். டீ வாங்கணும் ... மெல்ல உறிஞ்சிக் குடிக்கணும் .. பாதி டீ குடித்ததும் ஒரு சிகரெட் பற்ற வைக்கணும் .. அடுத்த இரண்டு மூன்று உறிஞ்சில் டீ முடிஞ்சிடணும் .. பின் இன்னும் ரசித்து சிகரெட் இழுக்கணும். ஆஹா ... நல்லா இருந்தது. ஆனால் பிரச்சனை என்னடான்னா ... இதுவரை அப்பப்போ திருட்டு தம் அடிச்ச நான் இப்போ டீ + சிகரெட் இரண்டுக்கும் - ஒரு காம்போ எஃபெக்ட் - சேர்ந்து அடிமையாக ஆய்ட்டேன். பின்னாளில், அட மாபாவி கேசவா இப்படி பண்ணிட்டியேடா ... அப்டின்னு அடிக்கடி நினச்சிக்குவேன்.

 மருத்துவக் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குப் போனோம். அங்கு எங்கள் ஆசிரியர் ஒருவரும் எங்களோடு நேர்முகத் தேர்வுக்கு வந்தார். அவர் B.Sc. முடித்து எங்களுக்கு தாவரயியலில் ஓராண்டு ஆசிரியராக - demonstrator - இருந்தார். மொத்த மதிப்பெண்கள் எல்லோருக்கும் ஒன்றாக இருந்தது - B Grade. ஆனால் தமிழ் ஆங்கில மதிப்பெண்களும் சேர்த்துப் பார்ப்பதாகச் சொன்னார்கள். அப்படியென்றால் எங்கள் நால்வரில் எனக்கு மதிப்பெண்கள் கொஞ்சம் பெட்டர்.

அதிக நம்பிக்கையில்லாமல் நேர்முகத் தேர்வுக்குப் போனோம். கேசவனுக்கு நேர்முகத் தேர்வை விட நாங்கள் அதிகம் அப்போது கேள்விப்பட்டிருந்த புகாரி ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்று குறியாக இருந்தான். நேர்முகத் தேர்வு நடக்கும் இடத்திற்கு அதற்கு முந்திய நாள் போய்விட்டு அதன் பின் புகாரி போக முடிவு செய்திருந்தோம். புகாரி ஹோட்டலைத் தேடி போனோம். சர்வர் மெனு கார்டை வந்து கொடுத்தார். இரு குருவிகள் BH என்ற எழுத்துகளைத் தூக்கி செல்வது போல் அட்டையில் ஒரு படம். நீளமான அந்த அட்டையைக் கொடுத்தார்.குருவிப்படம் அது இதெல்லாம் பார்த்தவுடன் கேசவனுக்குக் குழப்பம். இவர் எதற்கு எனக்கு ஏதோ அழைப்பிதழ் எல்லாம் கொடுக்கிறார் என்று முழித்தான். அவன் குழப்பம் எனக்குப் புரிந்தது. சர்வரை அனுப்பி விட்டு கேசவனிடம் ‘டேய் .. இது மெனு’டா’ என்றேன். அதுவும் அவனுக்குப் புரிபடவில்லை. திறந்து காண்பித்தேன். பட்டியல் என்று புரிந்தது. ‘ஓ .. இதுவா?’ என்று சொல்லி உள்ளே பார்த்தோம். ஒன்றும் புரியற மொழியில் இல்லை! ஏதோ சொல்லி எதையோ சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.
வெளியே வந்ததும் கேசவன், ‘டேய் .. ஏதாவது ஒரு புரோட்டா கடைக்குப் போய் சாப்பிடுவோமா ... நல்லா பசிக்குது’ என்றான்.

நான் நேர்முகத் தேர்வுக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே போய்விட்டேன். என் அப்பா நேர்முகத் தேர்வு அன்று சென்னை வந்தார். நேர்முகத் தேர்வு முடிந்த அன்று மாலை ஒரு உறவினர்  சுகாதார அமைச்சரின் (அப்போது ஜோதி வெங்கடாசலம் அமைச்சர் என்று நினைக்கிறேன்.) செயலர் எனக்குத் தெரியும். ஆனால் இப்போ ரொம்ப லேட் என்றார். சரி .. ரிசல்ட் பாத்து சொல்லுங்க என்றோம். அடுத்த நாள் கல்லூரிகளில் பட்டியல் போட்டிருவாங்க. ஆனால் அதற்கு முந்திய நாள் பட்டியலில் என் பெயர் இருப்பதாக அவர் சொன்னார். ஆஹா .. மகனுக்கு மருத்துவ சீட் கிடச்சிருச்சி அப்டின்னு என்ற சந்தோஷத்தோடு அப்பா அன்றே மதுரைக்குப் பயணமானார். நான் போய் எல்லாம் தயார் பண்றேன்’டா அப்டின்னு சந்தோஷமா சொல்லிட்டு அப்பா மதுரைக்குப் புறப்பட்டாச்சு.

நான் அடுத்த நாள் நண்பர்களோடு ரிசல்ட் பார்க்கப் போனேன். நான் நமக்குத்தான் சீட் கிடைச்சாச்சேன்னு போய் பார்த்தேன். லிஸ்ட் இருந்துச்சி... ஆனா அதில் என் பெயரைத்தான் காணோம். தங்கியிருந்த உறவினர் வீட்டிலிருந்து சீட் கிடச்சுதுன்னு சொன்னவருக்குப் பேசினோம். அவர் தம்பி பெயரை நான் முந்திய நாள் மாலை பார்த்தேன். ஆனால் ராத்திரி அமைச்சர் கடைசி நிமிட மாற்றல் சில செய்தாராம். அதில் எப்படியோ இப்படி ஆகிப் போச்சு என்றார். அதற்கு ஒரு கதையும் சொன்னார்.  சோகமாக மதுரை வந்தோம்.

 கேசவன் மிகவும் எளிதாக இந்த நேர்முகத் தேர்வை எடுத்துக் கொண்டது போல் தெரிந்தது. ஆனால் அடுத்த வருஷம் முதலிலேயே சில ஏற்பாடுகளைச் செய்தான். அந்த வருஷம் அவனுக்கு மருத்துவ சீட் கிடச்சிது. மதுரையில் சேர்ந்தான். அதற்குள் நான் முதுகலை முதலாண்டு முடித்திருந்தேன். சில தடவை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று கேசவனைப் பார்த்து விட்டு வந்தேன். ‘நீ மெடிக்கல் முடிப்பதற்குள் நான் முதுகலை முடித்து Ph.D. முடிச்சிர்ரேண்டா. ரெண்டு பேரும் ஒண்ணா டாக்டர் பட்டம் வாங்கிருவோம்’ என்றேன். ஆனால் அது வெறும் வார்த்தையாகவே போச்சு. எங்களுக்குள் தொடர்பும் அதன் பிறகு விட்டுப் போச்சு ...


*

4 comments:

  1. வாழ்க்கையில் ஏமாற்றங்கள் இப்படித்தான் வரும்.

    ReplyDelete
  2. நானும் மருத்துவப்படிப்புக்காக மதுரை மருத்துவக்கல்லூரிக்கு இரு முறை வந்திருக்கிறேன். 1977 புகு முக வகுப்பு 1980 இளமறிவியல் தாவரவியல் முடித்த பிறது. பி எஸ் சி மாணவர்களுக்கான 10% இட ஒதுக்கீடு என்ற ஒன்றை அன்றைய முதல்வர் எம் ஜி ஆர் 1980 ஆம் ஆண்டு இல்லையென்று சொல்லி விட்டார். ஆனாலும் 1981இல் மீண்டும் வந்தது அந்த ஒதுக்கீடு. அதற்குள்ளாக முதல் வகுப்புப்பட்டதாரி ரிக்ஷாவாலா ஆகி இருந்தார். பிறகு தொலைத்தொடர்பு இலாகாவில் ஒரு 450 ரூபாய் சம்பளத்துக்கு போய்விட்டார். பிறகென்ன... எம் பி பி எஸ் அவ்வளவுதான்... திலிப் நாராயணன்.

    ReplyDelete
  3. தொலைத் தொடர்பு அதிகாரின்னா சும்மாவா ...!


    அது சரி ... திலிப் நாராயணன் யாரு? Arjunan Narayanan யாரு?

    ReplyDelete
  4. இரண்டுமே நான் தான். அப்பா பெயர் அர்ஜூனன். திலிப் என்பது எனது மகன் பெயர். என் பெயர் நாராயணன். எழுத்துக்காக வைத்துக்கொண்டது. எனது வலைத்தளம்: http://sugadevnarayanan.blogspot.in

    ReplyDelete