Thursday, December 19, 2013

701. தருமி பக்கம் (11) - அந்தக் காலத்தில ....




 *



அந்தக் காலத்தில ....
* இரண்டரை வயதிலிருந்து ஐந்து வயதில் மதுரை வந்து பள்ளியில் சேரும் வரை வாழ்க்கை காசியாபுரத்தில் அப்பம்மா, அத்தைமார்கள், சித்தி இவர்கள் அணைப்பில் வாழ்க்கை ஓடியது. அதனால் தானோ என்னவோ போன பதிவில் சொன்னது போல் பாட்டையா வீட்டின் ஒவ்வொரு பகுதியும் வாழ்வோடு இணைந்த பகுதிகளாக மாறி விட்டன. நினைத்து பார்த்தால் காலையில் எழுந்ததும் என்னைப் பல் விளக்க ஒவ்வொருவரும் எடுக்கும் முயற்சியிலிருந்து ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறது. அதென்னவோ அந்தக் காலத்திலிருந்து இன்று வரை காலையில் படுக்கையில் இருந்து எழுந்து வர மனசே வருவதில்லை. இப்பவே இப்டின்னா ... அப்போ எப்படி இருந்திருக்கும்.

பெருசுக கஷ்டப்பட்டு எழுப்பி பல் விளக்க பெரும் முயற்சி எடுக்கணும். நான் சொன்ன சமையலறை பக்கத்தில் இருக்கும் திண்ணை இருக்கிறதே .. அதில் இரண்டு கல் தூண்கள் இருக்கும். லேசான செவலைக் கலரில் சுரசுரப்புடன் இருக்கும் இரு தூண்கள். ஒன்று ஆட்டு உரல் பக்கம் ஒதுங்கி இருக்கும். இன்னொன்று எல்லோரும் புழங்கும் இடத்தில் இருக்கும். தூணின் அடிப்பகுதி ஒரு சதுரக் கல். அதன் மேல் இந்தத் தூண். அதனால் சதுரக்கல்லின் நாலு பக்கமும் கொஞ்சம் முக்கோண வடிவத்தில் free space இருக்கும். அது தான் எல்லோருக்கும் பல் விளக்க சாம்பல் வைக்கும் இடம்.

அதில் எனக்குப் பிடித்த வழக்கமான பக்கத்தில் போய் உட்கார்ந்து விடுவேன். இந்த இடத்தில் இருந்தால் தான் உட்கார்ந்து கொண்டே மெல்லப் பல் விளக்க முடியும். பல் விளக்க உட்காரும் அந்த வேளையில் சமையல் கட்டின் தென்கிழக்கு மூலையில் அப்பம்மா உட்கார்ந்து ஒரு பெரிய மண்பானையில் மோர் கடைவார்கள். மத்து நீளமாக இருக்கும். காலை நீட்டி வைத்து அதில் மத்தை எப்படியோ உருட்டி அப்பம்மா கடைவார்கள். கடையும் ஒலி சீராக வரும். (இன்னும் காதில் கேட்கிறது!)  நான் பல் விளக்குவதற்கு அந்த சத்தம் ஒரு BGM மாதிரி இருக்கும்.

அப்பம்மா மோர் கடைவது பற்றிச் சொன்னேனா ... முதலில் அந்த மோர்ப்பானை அம்புட்டு பெருசா இருக்கும். மதுரை வந்த பின் விடுமுறைக்கு ஊருக்கு வருவோமா அப்போது பார்த்த போது, அந்தப் பானையின் அளவு கொஞ்சம் கொஞ்சமா சிறிதாகிக் கொண்டே வந்தது. பானை சிறிதானது. சின்னப் பானை போய் கலயம் வந்தது. மோர் கடைவது நின்று போச்சு. நான் கல்லூரிக்குப் போன பிறகு நிலைமை மோசமாகப் போனது. கலயம் போய் செம்பில் பால் மட்டும் இருந்தது. கொஞ்ச நாளில் பால் வாங்க ஆரம்பித்தார்கள். எனக்கு தயிர், மோர், நெய் எல்லாம் பிடிக்குமா. பாவமாக இருக்கும். அப்பம்மா பக்கத்து வீட்டில் போய் மோர் வாங்கி வருவார்கள். நெய் இப்போது சாப்பிடுவதில்லை என்று அப்பம்மாவிடம் பொய் சொல்லி விட்டேன்.

அடடா ... தொழுவத்தைப் பற்றிச் சொல்லவேயில்லையே. வீட்டிலிருந்து சிறிது தள்ளி பள்ளிக்கும் போகும் வழியில் தொழுவம் இருக்கும். காளை மாட்டுக்கும், பசு மாடுகளுக்கும், எருமை மாடுகளுக்கும் என்று தனித் தனி இடங்கள். இன்னொரு மூலையில் குப்பை கூளமாக பெரிதாகக் கிடக்கும். இந்தத் தொழுவத்தோடு பார்த்தால், மதுரையில் இருந்த வீடு தொழுவத்தில் நாலில் ஒரு பங்காகத்தான் இருக்கும். நிறைய மாடுகள் இருந்தன. பானையும் பெரியதாக இருந்தது. மாடுகள் குறைய பானையும் சிறிதாகி, மாடுகளும் இல்லாமல் ஆகி, கடைசியில் பால் கடையில் வாங்கும் நிலைக்குப் போய் விட்டது. மெத்தையில் நெல் குதிர் சிறுத்து, இல்லாமல் போனதும், பால் பானை மறைந்ததும் எனக்குச் சோகமான விஷயங்களாக இருந்தன. காலம் அப்படி மாறிப் போனது.

பல் விளக்கி முடித்ததும் மோர் ஊற்றி சோறு தருவார்கள். நன்றாகப் பிசைந்து தயிரும் மோரும் கலந்து கும்பாவில் தருவார்கள். அந்தப் பித்தளைக் கும்பாவில் சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். என்னமா .. விஞ்ஞான ரீதியாக அப்பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள்! சாப்பிடுவது நீராகாரம். சிந்தாமல் சிதறாமல் அதைக் குடித்துக் கொண்டே சாப்பிட என்ன வசதி ..! வளர்ந்த பிறகு அங்கிருந்து கும்பா ஒன்றை மதுரைக்கு எடுத்து வர நினைத்தேன். கடைசி வரை செய்யவில்லை. கடைசியில் ஒரு தடவை கேட்ட போது, ‘அட போய்யா .. கும்பாவெல்லாம் எப்பவோ போயிரிச்சே..!’ அப்டின்னுட்டாங்க.

 பல் விளக்கி முடித்ததும் அடுத்தது பள்ளிக்கூடம் தான். என் காலைச் சாப்பாடு முடிகிறதோ இல்லையோ, அல்லது அதற்கு முன்பே அப்பம்மாவும், சித்தியும் காட்டு வேலைக்குப் போய் விடுவார்கள். இரண்டு அத்தைகள் .. அதன் பின் ஒரு அத்தை வீட்டில் இருந்தார்கள். பாட்டையா ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார் – ஜோசப் ஆரம்பப் பள்ளி. அப்போவெல்லாம் பள்ளிக்கூடங்கள் நடத்துவது காசு பார்க்க அல்ல! உண்மையிலேயே அப்போது அது ஒரு சேவை தான்.

என்னோடு சின்ன அத்தைகள் இருவரும்
எங்கள் கிராமத்திற்கு வரும் வழியில் நல்லூர் என்ற ஊர். கொஞ்சம் பெரிய ஊர். அதோடு பல ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி, அதில் வேலை பார்க்கும் ஆசிரியர் குடும்பங்கள், பெரிய கோவில் ஒன்று – ஊர் கொஞ்சம் தட புடலாகத்தான் இருக்கும். படிச்சவங்க நிறைய பேர் அங்கே. ஆனால் எங்கள் ஊரில் அப்படியெல்லாம் இல்லை. அந்த ஊரில் இருந்த கிறித்துவர்கள் பிரிவினைக் கிறித்துவர்கள் – protestants. எங்கள் ஊரில் சின்ன எண்ணிக்கையில் இருந்த கிறித்துவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள். எங்கள் வீடு, பெரிய பாட்டையா வீடு. இந்த இருவர் வீடு மட்டும் தான் சொல்லிக்கொள்ளும் நிலையில் அன்று இருந்தவர்கள். மற்ற சில குடும்பங்கள் அப்படியில்லை. அதனால் கோவில் என்று ஒன்றும் கிடையாது. ஆகவே பாட்டையா ஒரு பள்ளிக்கூடம் -cum - கோவில் ஒன்று ஆரம்பித்தார். வீட்டில் படிக்கும் பெண்கள் வேலை பார்த்துக் கொள்ளலாமே என்ற ஏற்பாடு. பள்ளிக்கூடத்தையே தேவை இருக்கும்போது கோவிலாக மாற்றிக் கொள்ளலாமே என்று அதையே பள்ளியும் கோவிலாகவும் வைத்துக் கொண்டார்கள்.

மொத்தம் எனக்கு நான்கு அத்தைகள். அனைவரும் படித்து விட்டு, அப்பள்ளியில் தொடர்ந்து, ஆள் மாற்றி மாற்றி அங்கு வேலை பார்த்தார்கள். என்னைத் தனியாக வீட்டில் விட்டு விட்டா போக முடியும். அதனால் இரண்டரை,  மூன்று வயதிலேயே அத்தைமார்கள் கையைப் பிடித்துக் கொண்டு பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன்.

”படிப்பாளி” !!!




 
ரொம்ப சின்ன வயதிலேயே பள்ளிகூடம் போக ஆரம்பித்ததால் தானோ என்னவோ, படிப்பு வராத படு மக்காகிப் போய் விட்டேன் போலும்!




*

11 comments:

  1. மலரும் நினைவுகள் அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது.
    பள்ளிக்கூடத்தையே தேவை இருக்கும்போது கோவிலாக மாற்றிக் கொள்ளலாமே என்று அதையே பள்ளியும் கோவிலாகவும் வைத்துக் கொண்டார்கள்.//
    பள்ளிதலம அனைத்தும்ங் கோயில்செய்குவோம் என்று பாரதி சொன்னது போல கடை பிடித்து இருக்கிறார்கள் பாட்டையா!
    படிப்பாளி படம் அருமை.

    ReplyDelete
  2. நன்றி
    பள்ளி பற்றிச் சொல்லி விட்டு, கோவில் பற்றியும் எழுதணும்.

    ReplyDelete
  3. தருமிய்யா,

    மலரும் நினைவுகள்!!!

    பழைய படங்களை இன்றும் பாதுகாப்புடன் வைத்திருப்பது சிறப்பான ஒன்று.

    # பள்ளித்தலமனைத்தும் கோயில்கள் செய்வோம்னு பாரதியார் பாடியது வேறு பொருளில் அதை யாரும் இன்னும் புரிந்துக்கொள்ளவில்லையே அவ்வ்!

    ReplyDelete
  4. * இரண்டரை வயதிலிருந்து ஐந்து வயதில்...அப்பம்மா, அத்தைமார்கள், சித்தி இவர்கள் அணைப்பில் வாழ்க்கை ஓடியது!

    கோந்தே ஷோக்கா இருக்கு! திஷ்டி சுட்டிபோடுங்கானும்!

    உங்கள் வழக்கில் சின்னம்மா இல்லை வரனும்? சித்தி எப்படி? சும்மா ஒரு ஆர்வக் கேள்வி தான்!

    ReplyDelete
  5. சுவையான அனுபவங்கள்.

    ReplyDelete
  6. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள். மோர்ப் பானை, தொழுவம், நெல் குதிர், நீராகாரம், கும்பா (அனைவர் வீட்டிலும் இப்படி மறக்க முடியாத பாத்திரங்கள் இருக்கும். ) என நினைவலைகளும், சிறுவயதுப் படங்களும் அருமை. கடைசிப் பத்தியை ஏற்றுக் கொள்ள முடியாது:)!

    ReplyDelete
  7. //கோந்தே ஷோக்கா இருக்கு! திஷ்டி சுட்டிபோடுங்கானும்! //

    அட .. அது எதுக்கு? என்னைப் பொறுத்தவரை ஷோக்கா இருக்குற பிள்ளைகளை விட, ஆய் பிள்ளைகளுக்குத் தான் திருஷ்டிப் பொட்டு மக்கள் வைக்கிறாங்கன்னு நான் நினைக்கிறேன். கண்ணுல படுற திருஷ்டிப்பொட்டு வச்ச பிள்ளைங்களை பார்க்கிறப்போவெல்லாம் இதுதான் தோணுது!

    //சித்தி எப்படி? சும்மா ஒரு ஆர்வக் கேள்வி தான்! //

    அட ... நீங்க பழைய பதிவு ஒண்ணைப் படிக்கலையோ? அதை படிங்க முதலில். இந்தச் சித்தி கடைசிச் சித்தப்பாவின் மனைவி.

    //சித்தி எப்படி? //
    வண்டி நல்லாதான் போச்சுது. அதுக்குப் பிறகு கடைசியில் ஒரு பெரிய ட்ராஜடி தான்!

    ReplyDelete
  8. //கடைசிப் பத்தியை ஏற்றுக் கொள்ள முடியாது:)! //

    உள்ளதைச் சொன்னேன்!

    ReplyDelete
  9. நன்றி பழனி. கந்தசாமி

    ReplyDelete
  10. வவ்ஸ்
    //பழைய படங்களை இன்றும் பாதுகாப்புடன் வைத்திருப்பது சிறப்பான ஒன்று.//

    இன்னும் கொஞ்சம் இருக்கு. போடலாமோ?!

    ஏதோ செய்தி ஒண்ணு சொல்ல வச்சிரிக்கீங்க போல. சொல்லிடுங்க.

    ReplyDelete
  11. பழைய நினைவுகளை கீறி விட்டாற் போல்
    ஆம்
    அந்த சுவடுகள் காணாமல்தான் போய் விட்டது

    பெரிய பானையில் மோர் கடைந்து கடையில் வாங்கியது போல்

    பித்தளை கும்பா, பித்தளை தாலா இப்படி சொற்களும் காணாமல் போய்விட்டன

    ReplyDelete