*
ஐந்து
வயதிற்குப் பிறகு வாழ்க்கை மதுரையில் தொடர ஆரம்பித்தது. ஆனால வேர் விட்ட இடத்தை
அவ்வளவு எளிதில் விட்டு விட முடியுமா என்ன? முதல் சில ஆண்டுகளில் ஒவ்வொரு
விடுமுறைக்கும் ஊருக்குப் புறப்பட்டு போய் விடுவோம். பின், வீட்டில் எண்ணிக்கை
கூடியது. மூன்று என்ற பயணம் இரண்டாக மாறியது. கிறிஸ்துமஸ் – புத்தாண்டு கொண்டாட
டிசம்பர் மாதமும், நீண்ட முழுத்தேர்வு விடுமுறை என்று ஏறத்தாழ இரு மாதங்கள்
ஊருக்குப் போவது என்பதானது. பின் அதுவும் முடிந்து நான் மேல் பள்ளிக்கு வந்த
காலத்தில் கோடை விடுமுறை மட்டும் சொந்த ஊர் என்றானது. அதன் பின் அம்மிக் கல் தேய்ந்த கதை தான். சில
நாட்கள்மட்டும் ஊருக்கு தலை காட்டுதல். பாட்டையா என் பள்ளி நாட்களிலேயே
மரணமடைந்து விட்டார். அப்பம்மா என் மூத்த பிள்ளையைக் கொஞ்சிய பிறகே
இறந்தார்கள். இருப்பினும் அவர்கள் வயதான பின் ஊருக்குச் செல்வது மிகக் குறைந்து,
அவர்கள் காலத்திற்குப் பிறகு ஊருக்குப் போவதே நின்று விட்டது. இந்த நாட்களில்
வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை பிறந்த ஊரில் நன்கு பார்த்து விட்டேன்.
டீன் வயது வரை
ஊருக்குப் போவது மிக இனிமையாக இருந்தது.
சின்ன வயதில் கோவிலும், கடவுள் பக்தியும் என்னை ஊருக்கு இழுத்தன. அடுத்த
கட்டத்தில் நண்பர்கள், ஆட்டம், பாட்டம், கோவில், நீச்சல், விளையாட்டு என்று
பெரிதானது. அதைத் தாண்டிய வயதில் ஊருக்குச் செல்லும் மாதத்தில் வரும் ஆலடி அம்மன்
கொடைத் திருவிழாவும், நல்லூர் பள்ளிக் கிணற்றில் மாலை நேரத்தில் நல்ல தண்ணீர்
எடுக்க வரும் சோடிப் பெண்களைப் பார்ப்பதுவும் பெரிய ஈர்ப்பாகப் போனது.
விடுமுறை
சமயத்தில் ஊருக்குப் புறப்படுவதே மிக சந்தோஷமான காரியமாக சிறு பருவத்தில் இருந்தது.
பல ஆச்சரியங்களைக் கடந்தே ஊருக்குச் செல்லும் பயணம் தொடரும். ஊருக்குச் செல்லும் முன்பே மதுரையில்
கிடைக்கும் இரண்டு விளையாட்டுச் சாமான்களை ஊரில் இருக்கும் நண்பர்களுக்கு எடுத்துச்
செல்வது வழக்கமாக இருந்தது. ஒன்று கண்ணாடிக் கோலிக் குண்டு. பல வண்ணங்களில் பல
சைஸ்களில் ஊருக்குப் போவதற்கு முன் சேர்த்து விடுவேன். அந்தக் கோலிக் குண்டுகள்
ஊரில் ‘கிடைக்காத’ பொருட்கள். அடுத்து மதுரையில் கிடைக்கும் கலர் கலராக இருக்கும்
குண்டு பம்பரம். செப்புப் பம்பரம் என்போம். அப்போதெல்லாம் ’கள்ளிக்கட்டைப் பம்பரம்’ மட்டும்
தான் ஊரில் கிடைக்கும். விளையாடுவதற்கு கள்ளிக்கட்டைப் பம்பரம் தான் நன்றாக
இருக்கும்; நன்றாக குத்தும்; குத்து வாங்கும். மதுரையில் வாங்கும் குண்டாக
பெரியதாக அழகாக இருக்கும்.
இவைகளோடு, இன்னொரு முக்கியமான பொருளும் சேர்த்து வைக்கணும். குறைந்தது
இரண்டு ஜாண் நீளத்திற்குப் பழைய சைக்கிள் டியூப். இதையெல்லாம் சேர்ப்பது பெரிய
விஷயமல்ல. அதை ஊருக்குக் ‘கடத்துவது’ தான் பெரிய பிரச்சனை. எப்படி இதை ஊருக்கு எடுத்துச் செல்லும்
பெட்டியில் வைத்துப் பத்திரமாக ஊருக்குக் கடத்துவது ஒவ்வொரு முறையும் பெரிய
பிரச்சனையாக இருக்கும். குண்டுகளையும், பம்பரத்தையும் எளிதாக சட்டை,
கால்சட்டைக்குள் பதுக்கி வைத்து விடலாம். பார்த்தாலும் வீட்டில் கண்டு கொள்ள மாட்டார்கள்.
ஆனால் ட்யூப் பார்த்து விட்டால் திட்டு விழும். தூக்கி வெளியே எறிந்தாலும் எறிந்து
விடுவார்கள். இதெல்லாம் எதுக்குடா என்பார்கள், அப்பாவோ, அம்மாவோ. அது ஊருக்குப்
போனதும் நாங்கள் ‘வேட்டை’க்கெல்லாம் போவோமே, அப்போது பயன்படுத்தும் ’கவுட்டை’ (Catapult) செய்றதுக்காக என்று சொன்னால் வீட்ல அப்போதே உதை விழுமே!
எப்படியோ
சில தடவை இந்த மாதிரி கடத்தல் வேலைகளைச் செய்திருக்கிறேன். அதே மாதிரி ஊரிலிருந்து
கண்ணாடி கோலி குண்டுகளைக் கொடுத்து, அதற்குப் பதில் அங்கே ஊரில் நண்பர்கள்
கருங்கல்லை, காலால் கல் மேல் உருட்டி, உருட்டி செய்த கல் கோலிக் குண்டுகளைப்
பரிமாற்றம் செய்து கொண்டு வருவேன். இந்தப் பரிவர்த்தனையில் எனக்குத்தான் லாபம்.
ஏனெனில் கோலி குண்டு கடையில் வாங்கி விடலாம். ஆனால் கல் குண்டு – அப்படியே கண்ணாடிக்
குண்டு போலவே, ஆனால் கொஞ்சம் பெரிதாக, அழகாக,ரவுண்டாக – உருட்டியிருப்பார்கள். மதுரை நண்பர்களிடம்
அதைக் காண்பிப்பதில் எனக்குப் பெரிய பெருமை. மதுரை நண்பர்களுக்கு அது எப்பவுமே ஒரு
ஆச்சரியமான பொருள் தான். Hand made .. sorry .. leg
made பொருளில்லையா ..!
அடுத்த
சந்தோஷம் ரயிலில் போவது. அது என்னவோ ரயில் நிலையத்தைத் தாண்டும் போது இப்போது கூட
அங்கிருந்து வரும் ஒலியும், அறிவிப்புகளும் என்னைச் சுண்டி இழுக்கும். அந்தக்
காலத்தில் ரயிலில் போவது அப்படி ஒரு சந்தோஷம். இப்போது மாதிரி முந்தியே டிக்கெட்
எடுப்பது, படுக்கை வசதி ... இப்படி ஏதும்
இல்லை. ரயில் வர கொஞ்சம் முன்னாலேயே போய் விடணும். சிகப்புச் சட்டைக்காரர்கள்
யாரையாவது அனேகமாக அப்பா பார்த்து, காசு கொடுத்து இடம் பிடிப்பார்கள். இரண்டணா,
நாலணா கொடுத்தால் எப்படியும் ஜன்னல் ஓரத்தோடு சீட் பிடித்து விடுவார்கள். ஆனால்
இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. அனேகமாக எல்லா ரயில்களும் குறித்த
நேரத்தில் புறப்பட்டு, சரியான நேரத்தில் சென்றடைகின்றன. அந்தக் காலத்தில் மதுரை
ரயில் நிலைய மெயின் கதவருகே ஒரு கரும்பலகை பெர்மனென்டாக இருக்கும். வந்து போகும்
எல்லா ரயில்களும் தாமதமாகத்தான் வரும்; போகும். எத்தனை நிமிடங்கள் லேட் என்பது
அதில் போடப்பட்டிருக்கும். எல்லாம் நூற்றுக்கணக்கான நிமிடங்கள் லேட் என்பது மிகச்
சாதாரணம். 140 நிமிடங்கள் ... 220 நிமிடங்கள் தாமதமாக வரும் என்பதெல்லாம் ஒரு சாதாரண விஷயம்!
ரயிலில் இடம்
பிடித்து உட்கார்ந்ததும் பல எல்லைப் பிரச்சனைகள் வரும். பொதுவாக காசு கொடுத்து,
துண்டு போட்டு போர்ட்டர் மூலம் இடம் பிடித்தாலும் ரயில் புறப்பட்டதும் பல எல்லைத்
தகராறுகள் வரும். துண்டு போட்டு இடம் பிடித்தவர்களில் சிலருக்கு மேலே ’சாமான்களுக்கு
மாத்திரம்’ என்று எழுதிப் போட்டிருக்கும் இடத்தில் இடம் கிடைத்து விடும். அங்கே
நீங்கள் உட்கார்ந்து போவீர்களோ, அல்லது படுத்துக் கொண்டே போவீர்களோ அது உங்கள்
சாமர்த்தியம், உடல் திறன், குரல்வளையின் திறன் போன்ற பல வெளிப்பாடுகளின் பலனாகவே அது
இருக்கும்.
காசு
கொடுத்து, துண்டு போட்டு இடம் பிடிப்பவர்களுக்கு அனேகமாக ஒரு ஜன்னல் சீட் நிச்சயம்
உண்டு. ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார வைக்கப்பட்டாலும் சின்ன பசங்க ஒரு கட்டத்தில்
மேல் தட்டுக்கு மாற்றி அனுப்பி விடுவார்கள். அரைத் தூக்கத்தில் கால்களையும்
உடம்பையும் எப்படி எப்படி வளைத்து வைத்துக் கொண்டு தூங்க முடியுமோ அப்படி தூங்க
வேண்டும். ஜன்னல்களுக்கும் பயங்கர போட்டியிருக்கும். ஏனெனில், ரயில் போகும்
போக்கில் இருக்கும் ஜன்னலில் உட்கார்ந்திருந்தால், ரயில் எல்லாம் கரிவண்டிதானே...
எல்லா புகை, கரித்தூள் எல்லாம் கண்களில் விழுந்து கண்ணே சிகப்பாக ஆகிவிடும். எதிர்த் திசையில் இருந்தால் கண்கள் மட்டும்
கொஞ்சம் தப்பிக்கும். ஆனால் எப்படியோ
ஜன்னல் பக்கம் உட்கார்பவர்களின் சட்டைகள் மட்டும் திப்பி திப்பியாய் கரியோடு தான்
இறங்க வேண்டும்.
ஊருக்கும்
போகும் போதெல்லாம் நன்றாக நினைவில் இருக்கும் ஒரு விஷயம் – பலரும், அதுவும்
கொஞ்சம் வசதியுள்ளவர்கள் எல்லோரும் – கையில் எடுத்துச் செல்லும் ஒரு விஷயம் ஒரு
கூஜா. பித்தளையில் செய்தது. ஒரு மூடி போட்டிருக்கும். உள்ளே ஒரு தம்ளர்.
வீட்டிலேயே ‘நல்ல’ தண்ணீர் பிடித்துக் கொண்டு செல்வது சிலர் வழக்கம். இன்னும் சிலர் இன்னும் மிக ‘ஆரோக்கியமான
வாழ்க்கை’ நட்த்துபவர்களாக இருப்பார்கள். அல்லது சிறு குழந்தைகளோடு வருவார்கள். அவர்கள்
அவ்வப்போது வேகமாக ரயிலை விட்டுக் கீழே இறங்கி, நேராக புகைவண்டி எஞ்சினுக்குச்
சென்று, அங்கே ஒரு குழாயிலிருந்து பிளாட்பாரத்தை ஒட்டி பயங்கர சூடாக வெந்நீர் வரும்.
அதைப் பிடித்துக் கொண்டு வருவார்கள். டிரைவர்கள் மிகவும் தாராளமாக அவர்களுக்குக் குழாயை
நன்கு திறந்து விடுவார்கள்.
என்ன
சொல்லுங்கள் .. அந்தக் காலத்தில் கண்ணில் விழும் கரித்தூளையும் தாண்டி இரவில்
ரயிலில் பயணம் செய்வதே பேரழகு. ரயில்வே ஸ்டேஷனைத் தாண்டினால் எங்கும் இருள்.
ரயிலின் வெளிச்சம் மட்டும் கண்ணுக்குத் தெரியும். ரயில் வண்டிகள் உள்ளே இருக்கும்
மங்கலான ஒளி வெளியே தரையில் படுவது கூடத் தெரியாது. அவ்வளவு மங்கலாக இருக்கும்.
எங்காவது அங்கொன்று இங்கொன்றாக லேசாக ஒளிப்பொட்டுகள் அவ்வப்போது தெரியும்.
எங்காவது ஒரு ஸ்டேஷன் வந்தால் ரயிலின் விசில் ஓங்கி நீளமாக ஒலிக்கும்.
அப்போதெல்லாம் எனக்கு ஒரு விஷயம் பார்க்கப் பிடிக்கும். இரவில் சில ஸ்டேஷன்களில்
நிற்காமல் போகும் போது, ஸ்டேஷனின் ஆரம்பத்தில் ஒருவர் ஒரு கையில் தீப்பந்தத்துடன்,
இன்னொரு கையில் ஒரு வளையத்தோடு நிற்பார். ஓடும் ரயிலில் உள்ள ஒருவர் தன்
கையிலிருக்கும் வளையத்தைத் தூக்கிப் போட்டு விட்டு, உடனே கீழே நிற்பவரின் வளையத்துக்குள்
லாவகமாக கையைக் கொடுத்து அதை வாங்கி விடுவார். அது என்ன, எதற்கு என்றெல்லாம்
தெரியாது. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த வளைய மாற்றத்தைக் காண்பதில்
அப்படி ஒரு திரில்.
மதுரை –
நெல்லை பயணம் முடிந்ததும் அடுத்து பஸ் பயணம். அதில் நினைவிருப்பது அந்தக்
காலத்தில் இருந்த ’கரி பஸ்’. இந்த பஸ்களின் பின்புறம் பஸ்ஸின் உயரத்திற்கு உருண்டையாக
ஒரு சிலிண்டர் இருக்கும். அதற்குள் கரி இருக்கும். சிலிண்டரின் கீழே காற்று ஊத ஒரு
துருத்தி இருக்கும். எங்கெங்கு பஸ் நிற்குமோ அங்கே ரொம்ப சின்னச் சின்னப் பையன்கள்
ஓடி வருவார்கள். காலணா கொடுப்பார்களாம். அதற்காக வேகமாக அந்தத் துருத்தியைச்
சுற்றுவார்கள். வேகமாகச் சுற்றினால் தான் காசு. அதனால் பல தடவை இரண்டு சின்னப்
பையன்கள் சேர்ந்து ஒரு co-operative அமைத்துச் சுற்றுவார்கள். அப்போதெல்லாம் பஸ்சின் கடைசி சீட்டில் யாரும்
உட்காரமாட்டார்கள். அம்புட்டு ஹீட் ...
பஸ் விட்டு
ஆலங்குளத்தில் இறங்குவோம். அங்கிருந்து ஒன்றரை மைலுக்கு மாட்டு வண்டிப் பயணம்.
கூண்டு வண்டி அல்லது வில் வண்டி என்பார்கள். அதில் போவோம். அநேகமாக சிறுசுகளும், சாமான்களும்
மட்டும் வண்டியில். பெரியவர்கள் வண்டியோடு சேர்ந்து நடந்தே வருவார்கள். மாட்டு
வண்டியில் ‘ட்ரைவர்’ பெட்டி மாதிரி ஒன்றில் உட்கார்ந்து ‘ட்ரைவ்’ செய்வார். அதை ‘சேஸ் பெட்டி’ என்பார்கள் - கார்ல glove box மாதிரி! அவருக்குப் பக்கத்தில் அதில் உட்கார்ந்து, காலை கீழே தொங்கவிட்டுப் போவதற்கு
பிள்ளைகளிடம் ஒரு போட்டி வழக்கமாக நடக்கும். எங்கள் வீட்டில் நான் பெரிய பையன்
அல்லவா, அதனால் அந்த சீட் எப்போதும் எனக்குத் தான்.
அப்பாடா .... ஒரு
வழியா வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம்.....
*
இனிய நினைவுகள்... எனது சில இனிய நினைவுகளும் மனதில் வந்து போயின...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
//எனது சில இனிய நினைவுகளும்...//
ReplyDeleteபகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
ஊர் பயண அனுபவங்கள் . பஸ், ரயில் மாட்டுவண்டி பயணங்கள் மிக அருமை.
ReplyDeleteவூர் பயண அனுபவம் சூப்பர்
ReplyDeleteபழைய நினைவுகளை அசைபோடுவதே ஒரு அலாதியானதுதான்.
ReplyDeletehand madeஅல்ல legmade படித்து விட்டு சிரித்தேன்அருமையான கட்டுரை. நன்றிகள்
ReplyDeleteஅருமையான பதிவு அய்யா ,
ReplyDeleteநீண்ட நாள் கழித்து பின்னூடம் இடுதலுக்கு மன்னிக்கவும்,செல் பேசியில் வாசிக்க மட்டும் முடிகிறது ,பின்னோட்டம் இட முடியவில்லை.
கொழும்பிலேயே பிறந்து வளர்ந்ததால் கிராமம் மண்வாசனை எல்லாம் எப்போவாது சிலாபம்,யாழ்பாணம்,கண்டி போன்ற பகுதிகளக்கு போகும் போது மட்டுமே காண கிடைக்கிறது, தங்கள் பதிவுகளை வாசிக்கும் போது அவ் வாழ்வை எவ்வளவு தூரம் இழந்துள்ளோம் என புரிகிறது..
//எங்கெங்கு பஸ் நிற்குமோ அங்கே ரொம்ப சின்னச் சின்னப் பையன்கள் ஓடி வருவார்கள். காலணா கொடுப்பார்களாம். அதற்காக வேகமாக அந்தத் துருத்தியைச் சுற்றுவார்கள். வேகமாகச் சுற்றினால் தான் காசு. அதனால் பல தடவை இரண்டு சின்னப் பையன்கள் சேர்ந்து ஒரு co-operative அமைத்துச் சுற்றுவார்கள். அப்போதெல்லாம் பஸ்சின் கடைசி சீட்டில் யாரும் உட்காரமாட்டார்கள். அம்புட்டு ஹீட் ..//. புதிய விடயம்
தகவலுக்கு நன்றி
நன்றி
விஜய்