*
அதீதம் இணைய இதழில் வந்த பதிவின் மறு பதிப்பு
*
சின்ன வயதில் அவ்வப்போது நடந்த ஆச்சரிய நிகழ்ச்சி இப்போதெல்லாம் நடப்பதேயில்லை; ஏன் என்றும் புரியவில்லை. ஒரு மழை – கொஞ்சம் பெரிய மழையாக- பெய்து விட்டால் போதும். ஊரில் எங்கள் வீட்டு முன்னே உள்ள அந்த குறுகிய தெருவில் தண்ணீர் வெள்ளமாக ஓடும். ஓடும் அந்த நீரில் இறங்க கஷ்டப்பட்டு பெரியவர்களிடம் அனுமதி வாங்கணும். மழை பெய்யும் போது இரண்டாவது மொட்டை மெத்தையிலிருந்தும் நீர் அருவியாகக் கொட்டும். ஓடும் தண்ணீர் ... தலையில் சட சடவென இறங்கும் ‘நீர் வீழ்ச்சி’ .. ஆஹா இரண்டும் சேர்ந்து ஒவ்வொரு மழையையும் ஒரு பெரிய அனுபவமாக ஆக்கி விடும்.
அந்த மழையெல்லாம் என்ன ஆயிற்று? எங்கே போனது அந்த வெள்ளம்? அந்தக் கால்வாய் எல்லாம் மூடிப் போனது. எப்படி எந்தச் சின்ன மழைக்கும் அவ்வளவு நீர் திரண்டது. ஊருக்குப் போய், அங்கே எப்போதாவது மழை பெய்தால் அந்த பழைய வெள்ள நினைவுகளும், மழைக் கால அனுபவங்களும் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் இதே கேள்விகள் மனதிற்குள் எழும். ஆனால் இதுவரை பதில் ஏதும் கிடைக்கவில்லை.
ஒரு ஓடு கால்வாயில் போய் தான் இந்த வெள்ளம் எல்லாம் போய்ச்சேரும் என்று சொன்னேனே .. அந்த ஓடு கால்வாய் எங்கள் குடியிருப்பையும் பக்கத்தில் ஊருக்கு சற்றே வெளியே இருந்த குடியிருப்பையும் பிரித்து வைக்கும். அங்கே வீடுகள் அனேகமாக கூரை வீடுகளாகத் தானிருக்கும். அப்போதெல்லாம் சாதிப் பிரச்சனை பற்றி ஒன்றும் தெரியாது. இருந்தும் கால்வாய் இரு பகுதிகளையும் பிரித்து நிற்பது ஏதோ ஒரு மறைந்த தகவல் ஒன்றைச் சொல்வது போல் இருக்கும். புரிய நாளாயிற்று.
ஏழெட்டு வயதில் ஊருக்கு வரும்போதெல்லாம் எங்கள் பள்ளிக்கும் சென்று வருவதுண்டு. நான் எந்த வகுப்பு படிக்கிறேனோ அந்த வகுப்பிற்கு நான் போவேன். நம்ம ‘சிட்டி லைஃப்’பை அங்கே கொஞ்சம் ‘படம்’ காண்பிப்போமல்லவா! அப்படி நான்காம் ஐந்தாம் வகுப்புகளுக்குப் போகும் போது ராஜம்மாள் என்றொரு பெண் தெரியும். அவள் ஒரு தனிப் பிறவி மாதிரி இருப்பாள். யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். தனியாகவே இருப்பாள். என்னிடம் கொஞ்சம் பேசுவாள். எனக்கு அவளைப் பிடிக்கும்.
இவளது வீடு அந்தக் கால்வாய் இரு குடியிருப்பையும் பிரிக்குமே அந்த இடத்தில் இருந்தது. எங்கள் குடியிருப்பின் அடுத்த பகுதிக்குப் பக்கத்தில் அவர்கள் வீடு இருந்தது. நல்ல பெரிய காரைக் கட்டிடம். மெத்தையெல்லாம் வைத்துக் கட்டியிருந்தார்கள். ஆனால் அந்த வீடு மட்டும் தனியாக இருக்கும். கால்வாய்க்கு ஒரு புறம் அந்த அடுத்த குடியிருப்பு. அதற்கு எதிர்ப்புறம் இந்த வீடு. அதாவது எங்கள் குடியிருப்பிலிருந்து விலகியும், அடுத்த குடியிருப்பிற்குப் பக்கத்திலும் இருந்தது. ஆனால் அந்தக் குடியிருப்போடு ஒட்டாமல் கால்வாயின் எதிர்ப்பக்கத்தில் இருந்தது.
இந்த விசேஷங்கள் எல்லாம் எனக்கு பள்ளியிறுதி வகுப்புகளுக்கு வந்த பின்பு தான் ஏனென்று அரை குறையாகப் புரிந்தது. இந்த வயதில் எனக்கு மூன்று நான்கு வயது மூத்த, சித்தப்பா முறையில் இருந்த தேவதாஸ் என் நண்பரானார். ஊரில் இருக்கும் போதெல்லாம் பொதுவாக அவரோடு சுற்றுவது வழக்கம். பள்ளியிறுதி ஆண்டுகளில் தான் ராஜம்மாள் வீடு தனியாக இருந்ததற்கான காரணம் புரிந்தது. ராஜம்மாவின் அப்பா எங்க பகுதிக்காரராம். ஆனால் அப்பகுதிப் பெண்ணை மணந்து கொண்டதால் அப்படி ஒரு தனியாளாக, ஒரு தனி வீட்டில் இருந்திருப்பார் போலும். ராஜம்மாள் தனியாகவே இருந்ததற்கான காரணம் அப்போது தான் புரிந்தது. சாதியின் அழுத்தங்கள்....
இதே போன்ற இன்னொரு சாதித் தகராறையும் ஊரில் பார்த்தேன். அப்போது நான் சின்னப் பயல் தான். எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற் போல் ஒரு சின்ன சந்து மாதிரி ஓரிடத்தில், அதாவது இப்போது எங்கள் கிறித்துவக் கோயில் உள்ளதே அதற்கு நேர் பின்னால் ஒரு சின்னக் கோவில் இருந்தது. நயினார் கோவில். வருஷத்துக்கு ஒரு விழா நடக்கும். ஊரில் அதிகமாக மின்சார விளக்குகள் இல்லாத காலம் அது. ஆனாலும் கோயில் விழாவிற்காக ஜெனரேட்டர் வைத்து விளக்கெல்லாம் போட்டு விழா நடந்தது. விழா முடிந்து
நாங்களெல்லோரும் அதைச் சுற்றி விளையாடி முடித்து தூங்கப் போய் விட்டோம். திடீரென்று குழாய் விளக்குகள் உடைகிற சத்தம் கேட்டது. அடிதடி சத்தம், கல் வீச்சு என்று ஒரே குழப்பம். எங்கள் வீடு ’வேதக்கார்ர்கள் வீடு’ இல்லையா? அதனால் எங்கள் வீட்டுப் பக்கம் கல் ஏதும் விழவில்லை. இருப்பினும் மொட்டை மாடியிலிருந்து எட்டிப் பார்த்தோம்.
சிலர் வந்து ஒரே கலாட்டா பண்ணினார்கள். குழல் விளக்குகள் அத்தனையும் நொறுங்கிக் கிடந்தன. காலையில் எழுந்ததும் காரணம் சொன்னார்கள். விழாவில் பாட்டு வைத்த போது ஒரு பாட்டு: ‘ஆனந்தக் கோனாரே ... அறிவு கெட்டு தான் போனாரே’ன்னு ஒரு சினிமாப் பாட்டு. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் அந்த சாதியினராம். அவர்கள் அந்தப் பாட்டுக் கேட்டு விட்டு அதனால் தகராறு செய்து விட்டுப் போனார்கள்.
என்ன வித்தியாசம்.... அன்று அந்தப் பாட்டுக்கு சண்டை; இன்று ‘தேவரய்யா காலடி மண்ணே...’ பாட்டுக்கு சண்டை.
காலம் அப்படி ஒன்றும் மாறவேயில்லையோ? வெள்ளம் எங்கே போனது என்று தெரியவில்லை. ஆனால் ‘சாதி’ மட்டும் இன்னும் அப்படியே இருக்கிறது !!
*
மழை மிகவும் குறைந்து போய்விட்டது! ஆனால் மதம், சாதி சண்டைகள் அதிகரித்து கொண்டு இருக்கிறது! கொடுமைதான்!
ReplyDelete