***
***
இந்து மதம் எங்கே போகிறது?
அக்னிஹோதரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
******
இவ்வளவு விஷயங்களை பார்த்த நாம் எங்கேயாவது ஒரு இடத்திலாவது ‘ஹிந்து’ என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறோமா?
இந்தக் கேள்வி வரும்போது தான் இந்தப் பதம் எப்படி வந்தது என்று சொல்ல வேண்டியதுள்ளது.
மனித இனங்களை ஐந்தாகப் பிரிக்கிறார்கள்:
Semetic ... யூதர்கள், அரேபியர்கள்
Hemetic .... இவர்கள் இன்று இல்லை என்கிறார்கள்
Negroes ... ஆப்ரிக்கா மக்கள்
Mangolis ... சீனா தேசத்தவர்
Aryans ... ஐரோப்பியர்கள், இந்திய பிராமணர்கள்(317)
உலகின் மிக இருட்டான பழைய காலத்தை புரட்டிப் பார்த்தால் அங்கே இரண்டு கலாச்சார வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது. ஒன்று பபிலோனியா; மற்றொன்று எகிப்து. (318)
பபிலோனியர்களிடம் Totemism worship விலங்கு உருக்களை வழிபடும் வழக்கம் இருந்தது. (319)
கடவுளிடம் அறிவைக் கேட்டார்கள் பபிலோனியர்கள்.(321) மத குருவிற்கு ‘சேங்கு’ என்று பெயர். தலைவர் என்று அர்த்தம். இவரை விட உயர்ந்தவர் ‘சேங்கு ரேபு’.இவருக்கு மேல் ’சேக்கு டேனு’. - Mighty priest. கடைசியாக supreme priest – ‘சேங்கு மேஹூ’.
மன்னர்கள், பாமரர்கள், அடிமைகள் அனைவரும் ஒன்றாக கூட்டு வழிபாடு நடத்துவர். ஒரே ஒரு தகுதி – வரி கட்ட வேண்டும், இல்லாவிடில் கோயில் காரியங்களை சிலவற்றைச் செய்ய வேண்டும். உடல் உழைப்பை அர்ப்பணிக்க வேண்டும். பெண்களும் கலந்து கொள்வார்கள். மதகுருமார்கள் பக்தி, ஆன்மீகம், வழிபாடு இவற்றில் மட்டுமல்ல; பல்வேறு நிர்வாகப் பணிகளையும் செய்து வந்திருக்கிறார்கள்.
இந்த நாடு மீது பக்கத்து நாட்டு மன்னனுக்கு ஒரு கண்.
2600 ஆண்டுகளுக்கு முன் ...பபிலோனிய நாட்டுக்குப் பக்கத்து நாடான பாரசீக நாட்டின் மன்னன் Cambysis I என்பவனின் மகன் . இந்த அரசு மிடீய நாட்டு அரசனான Astyages என்பவரின் கீழ் அடிமைகளாக - vassals - இருந்தனர். (323) அப்போது பாரசீக நாட்டிற்கு அன்சன் என்று பெயர். Cambysis-ன் மகன் சைரஸ் தன் தந்தையை விட பழங்குடி மக்களிடம் அதிகமாகத் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான். அவர்கள் எதிர்க்க ஆரம்பித்தார்கள். மிடீயன் அரசனும் இவனைக் கட்டுப்படுத்த தன் படையை ஏவினான். ஆனால் மிடீயனின் படையை சைரஸ் வென்று விரட்டினான். தனது vassal என்ற நிலையை மாற்றி சுதந்திர மன்னனாகினான்.
இதில் ஒரு ரகசியம் என்கிறார் வரலாற்றாசிரியர் ஹெரடாடஸ். மன்னன் Cambysis மிடீய நாட்டு மன்னன் மகளைத் திருமணம் செய்து தன் அந்தப்புரத்தில் வைத்திருந்தான். ஆனால் மிடீய நாட்டு மன்ன்னின் இன்னொரு மகளை மகனான சைரஸ் திருமணம் செய்து கொண்டான். இதனால் சைரஸ் தன் நாட்டோடு சேர்த்து மிடீய நாட்டையும் இணைத்து ஆண்டு கொண்டான்,
பபிலோனிய நாட்டின் மீது கண் வைத்த சைரஸ் அதை வெற்றி கொள்ள அதிக ராணுவம் வேண்டியதிருந்தது. (325) கொஞ்ச தூரம் தள்ளிச் செல். அங்கே சிந்து தேசம் உள்ளது. அவனிடம் உதவி கேள் என்று சைரஸிற்கு அறிவுரை வந்தது.
வரலாற்றாசிரியர் Arrian தன் குறிப்பில் சைரஸ் சிந்து பகுதிக்கு வந்திருக்கிறான். ஆனால் அதை அவன் படையெடுத்து வென்றதாக கல்வெட்டுகளோ, ஆதாரங்களோ இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
சிந்து தேசம் என்றால் இன்றைய சிந்து நதியில் கரைப்பகுதியை உள்ளடக்கிய பிரம்மாண்ட தேசம். இன்றைய திபெத்தில் உள்ள மானசரோவரில் பிறந்து, ஓடி ஓடி பாகிஸ்தானின் கராச்சியில் கடலில் போய் கலக்கிறது.
சிந்து நதி அரசன் கொடுத்த யானைப் படை, குதிரைப்படை மூலம் சைரஸ் பாபிலோனியாவை வென்றான்.(326) இந்த சைரஸ், சிந்து தேச ராஜா நட்பின் மூலம் சிற்சில வார்த்தைகளாவது பரிமாறப்பட்டிருக்காதா?
உலக பிலாலஜி அதாவது மொழியியல் வல்லுனர்களின் முடிவுப்படி சமஸ்கிருதப் பாஷைக்கும், பாரசீக பாஷைக்கும் இடையிலான சில ஒற்றுமை வேற்றுமைகள் உள்ளன. அதாவது இங்கே ‘ஸ’ என்பதை அவர்கள் ‘ஹ’ என உச்சரித்தார்கள். அதாவது சரஸ்வதியை ஹரக்வதி என்றார்கள். நாம் ‘அசுர்ஹா’ என்று சொவதைப் போல் அவர்கள் ‘அஹூரமஸ்தா’ என்ற கடவுளை வணங்கினார்கள்.
இந்த வகையில் தான் அவர்கள் சிந்து தேசம் என்பதை ஹிந்து தேசம் என தப்பாக உச்சரித்தார்கள்.(327)
வேதங்களில் ஆயிரம் இடங்களில் சிந்து என்ற வார்த்தை தான் உள்ளதே தவிர ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை; கிடையவே கிடையாது.
ஆபஸ்தம்ப சூத்திரம்:
நதேவாஹா நகந்தர்வாஹா
நபிததீ ஆஜக்ஷதே
அயந்தர்மோ ஆயந்தமேதீ
யந்தா ஆர்ய க்ருமாணம் சம்சந்தி நதமஹா’
மக்கள் செய்ய வேண்டிய இந்த மந்த்ர கர்மாக்களுக்கு தேஸாச்சாரம் என்று பெயர். இந்த ஆச்சாரத்தை ஆர்ய மதம் என்று அழைக்க வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர். (328)
அதாவது சிந்து நதிக்கரை மக்களின் பழக்கத்துக்கு சிந்து மதம் என்று கூட அவர் பெயர் வைக்கவில்லை. ஆர்ய மதம் என்றுதான் பெயர் வைத்தார்.
ஆனால் சிந்து நதியிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் கடந்து வாழும் நம்மூர் பையனின் பள்ளி சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே ... ஏன்?
சிந்து தேசம் என்று பாரசீகக்காரன் சொன்னானே தவிர, அந்த தேசத்தை வேதக்காரன் ’பாரதம்’ என்று தான் அழைத்தான். ரிக் வேதத்தில் விஸ்வாமித்ரர் என்ற பிரபலமான முனிவர் பெயர் அடங்கிய மந்தரம் எழுந்து வருகிறது.
’விஸ்வாமித்ரஸ்ய ரக்ஷதீ
ப்ரம்மே இதம்
பாரதஞ்ஜனம்’
விஸ்வாமித்ரர் சொல்கிறார்: என்னுடைய ஞான தேஜஸினால் நான் கற்ற சாஸ்திரங்களின் பலனால், நான் உபதேஸிக்கும் மந்த்ரங்கள் இந்த பாரத தேசத்தின் ஜனங்களையெல்லாம் வாழவைக்கும்; பாதுகாக்கும். (329)
இன்னொரு உதாரணம்.
ப்ராமணர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. சங்கல்பம் – அதாவது ஒவ்வொரு கர்மாக்கள் செய்யும் போதும் இதை இந்த கர்மாவை சிறப்பாக சிரத்தையுடன் பூர்த்தி செய்வேன் என்ற சபதம் எடுத்துக் கொள்ளும் மந்த்ரம் தானிது.
’விஷ்ணோ ... ஆக்ஞாய
........
........
பாரத வர்ஷே பரத கண்டே ... சகாப்ஹே ..’
பாரத வர்ஷே என்றால் ‘பாரத தேசத்தில் வாழும்’ என்று அர்த்தம். பாரத கண்டே என்றால் ‘பரதன் ஆண்ட தேசம்’ என்று அர்த்தம்.
விஷ்ணு புராணம், பாகவதம் போன்ற பழம்பெரும் பக்தி இலக்கியங்களில் ‘பாரத தேசம்’ என்று தான் சொல்லியிருக்கிறார்கள். (331)
பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன் முதல் ‘Zindoo’ என்று குறிப்பிட்டான். நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமெண்டை பார்த்திருக்கிறேன்; படித்திருக்கிறேன். (332)
காலப் போக்கில் ‘Zindoo’ என்பதை Hindu என்று உச்சரித்தான். நமது மதத்தின் பெயரான ’ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். (333)
வேத மதம், ஆரிய மதம். பிராமண மதம் இங்கே வந்தது. அதை எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வைதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது. விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது. சமணம் தோன்றியது. வைணவத்தில் கூட தென்கலை, வடகலை என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.(334)
நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறு தெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம். காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி .... என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வளவு வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய வெள்ளைக்காரன் எல்லாவற்றிற்கும் மொத்தமாக சேர்த்து, இந்த தேசத்தில் வாழ்பவர்களையெல்லாம் மொத்தமாக ‘ஹிந்து’ என்று அழைத்தான்.
**********
*