Tuesday, July 29, 2014

781. தருமி பக்கம் (20) - அம்மா வீடு







*




 அப்பாவின் ஊருக்குப் போகும் போது அங்கே நடக்கும் பல சிறு பிள்ளை  விளையாட்டுகள்,  ‘தீவிரச் செயல்கள்’ ஏதுமில்லாமலும், மற்றைய என் வயது பிள்ளைகளோடு போடும் ஆட்டங்கள் எதுவுமில்லாமலும் அம்மா ஊரில் வீட்டுக்குள்ளேயே சித்தி, பாட்டியுடன் நேரம் போகும். எப்போதாவது தான் பிள்ளையார் கோவில் பக்கம் போவேன். மற்றபடி வீட்டில் மட்டும் தான் இருப்பேன். பஞ்சமில்லாமல் புளியங்கொட்டை இருக்கும். அதை வைத்து ஒத்தையா ரெட்டையா விளையாட்டு நடக்கும். இல்லாவிட்டால் பாண்டி விளையாட்டு. ஆனால் இரண்டாவது விளையாட்டு நமக்கு ஒத்து வராது. ஏனெனில் அங்கு விளையாடுபவர்களுக்கு எந்தக் குழியில் ஆரம்பித்தால்
நிறைய முத்து கிடைக்கும் என்பதெல்லாம் தெரியும். அதை மனப்பாடம் செய்து வைத்துக் கொள்ளும் வரை எனக்கு ஞாபக சக்தி சுத்தமா கிடையாது. எப்போதாவது சாயங்காலம் கண்ணா மூச்சி ஆட்டம் இருக்கும். இதைத் தவிர நினைவில் இருப்பதெல்லாம் சித்தியுடன் இருந்தது தான். 

நினைவில் இருப்பதெல்லாம் இரு நினைவுகள் மட்டுமே. ஒன்று கடவுள் சம்பந்தப்பட்டது; இரண்டாவது மனிதன் தொடர்புடையது. முதலில் ‘கடவுளைப்’ பற்றிப் பார்ப்போமா ...?

தாத்தா வீட்டிற்கு அருகில் ஒரு ஆழமான கமலைக் கிணறும் அதன் இரு பக்கமும் இரு தோட்டங்களும் உண்டு; கிணற்றின் கிழக்குப் பக்கம் உள்ள தோட்டம் பெரியது; நடுவில் ஒரு பெரிய மாமரம் உண்டு; சுற்றி என்னென்னவோ பயிர்கள் போடுவார்கள்.மேற்குப் பக்கம் உள்ள தோட்டத்தில்  அதிகமாக பயிர்கள் பார்த்ததில்லை; ஆனால் அதன் வடக்கு ஓரத்தில் நிறைய செடிகளும் ஒரு பெரிய சமாதியும் இருக்கும். என் பூட்டனாரும், பூட்டியும் புதைக்கப்பட்ட இடங்களாம். சமாதியில் பெயர்கள் போன்ற எதுவும் இருக்காது; இந்தச் சமாதிக்குப் பக்கத்தில் வெகு காலம் ஒரு மனோரஞ்சிதச் செடி இருந்தது. இதைத் தவிர பச்சை வண்ணத்தில் வேறு ஏதேனும் பூ இருக்கிறதா ... தெரியவில்லை.

நான் ஊருக்குப் போகும் பல நேரங்களில் இந்தச் சமாதியில் பூஜை நடக்கும். திவசமாக இருக்கலாம். அப்போது அந்தச் சமாதியில் நைவேத்தியம் எல்லாம் செய்வார்கள். அது முடிந்ததும் அதை எல்லோருக்கும் கொடுப்பார்கள். முதலிலிருந்தே மறுத்து விட்டேனா ... இல்லை.. பின்னால் அப்பா சொல்லிக் கொடுத்து மாறினேனா என்று தெரியவில்லை. அதை வாங்க மறுத்து விட்டேன். அதோடு எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டதை அங்கே
  

சொன்னேன்: "இது பேய்க்குப் படைக்கப்பட்டது; நான் சாப்பிட மாட்டேன்”. இப்போது நினைத்துப் பார்த்தாலும் வெட்கமாக இருக்கிறது. முன்னோர் முன்னால் வைத்ததை  பேய்க்குப் படைக்கப்பட்டது என்று நான் சொன்னதும் என் இந்து உறவினர்களுக்கு எப்படியிருந்திருக்குமோ தெரியவில்லை; ஆனால் அது பெரிய தவறு என்று இப்போது புரிகிறது. அந்த வயதில் சொல்லிக் கொடுத்ததை அங்கே வாந்தி எடுத்திருக்கிறேன். இப்போதும் இளம் வயதில் ஆப்ரஹாமிய  மதங்கள் மடத்தனமாக போதிக்கும் சில மத மாச்சரியங்களை நினைத்து வருத்தப் படுகிறேன்.

இரண்டாவது மனிதன் தொடர்பானது என்று சொல்லியிருந்தேன். அது அம்மா வீட்டிற்கு நான் வந்திருப்பது தெரிந்ததும் என்னை உடனே ஓடிவந்து பார்க்கும் ஏமன் என்பவரைப் பற்றியது. எமன் என்ற பெயரைத் தான் இப்படி ஏமன் .. ஏம(ன்) என்று சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னைப் பார்க்க வரும் ஏமன் வீட்டு முற்றம் வரைதான் வருவார். நான் வெளியே வந்ததும் என்னைத் தூக்கி வைத்துக் கொள்வார்.  ஒரு வேட்டி மேலே ஒரு துண்டு. அந்த துண்டும் வீட்டிற்குள் வரும்போது தோளில் இருக்காது. கிராமத்தில் இருக்கும் மற்ற வீடுகளை விட அம்மா வீடு இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை போலிருக்கும் என்று நினைக்கிறேன். மற்ற வீடுகளில் இப்படி பிள்ளைகளைத் தூக்க விடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

ஏமன் சின்னப் பையனாக இருக்கும் போது அவரது அக்கா இறந்து விட்டார்களாம். அதற்காக அழுத ஏமனிடன் என் அம்மா ஒரு அக்கா போல் அன்பாக இருந்திருந்தார்களாம். அழக்கூடாது என்றெல்லாம் தேற்றினார்களாம். இதனால் என் அம்மா மேல் அவருக்கு அப்படி ஒரு மரியாதையும் பக்தியும். அம்மா இறந்த பின் அத்தனையும் என் மீது பெரும் அன்பாகப் பாய்ந்தது. நான் ஏறத்தாழ எட்டு பத்து வயதிருக்கும் போது அவர் மருத்துவத்திற்காக மதுரைக்கு வந்திருந்தார். அப்பா அவரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று வந்தார்கள். அவர்கள் அப்போது சொன்னதை வைத்துப் பார்க்கும் போது ஏமனுக்குச் சக்கரை வியாதியால் காலில் வந்த புண் ஆறாமல், சில விரல்களை எடுத்து விட வேண்டுமென சொல்லியுள்ளார்கள். மனமில்லாமல் ஊருக்குச் சென்று, சில நாட்கள் கழித்து வந்த போது முழங்கால் வரை காலை எடுக்க வேண்டும் என்று சொன்னதும் மீண்டும் ஊருக்குப் போய் விட்டார். அதுவே அவரை நான் கடைசியாகப் பார்த்தது. அதன்பின் அம்மா ஊருக்குப் போகும் போது அவர் வீட்டிற்கு ஓரிரு முறை சென்று வந்தேன். சில நாட்கள் ... சில பொழுதுகள் மட்டுமே ஏமனோடு இருந்திருக்கிறேன். ஆனால் இன்று வரை ஏமனின் உயர்ந்த ஆஜானுபாகுவான உடம்பும், அவரது சிரித்த முகமும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அவரது உடலிலிருந்து வரும் வாசனை எனக்குப் பிடிக்கும். அந்த வாசனையையும் நான் இன்னும் உணர முடிகிறது. 

முன்பெல்லாம் ஊருக்குப் போகும் போது அவரது வீட்டிற்கு ஓரிரு முறை போயிருக்கிறேன். ஆனால் என் வீட்டார்தான் என்னைக் கூட்டிக் கொண்டு போக வேண்டும். ஏமனின் வீட்டினருக்கு நான் ஏமனின் மீது வைத்திருந்த அன்பு புரிந்திருக்காது. அவர் வீட்டுக்கு என்னைக் கூட்டிக் கொண்டு போகும் என் உறவினருக்கும் அது புரிந்திருக்காது. ஆகவே அதை நான் நாளாவட்டத்தில் நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் மிகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நான் சென்ற போது வளர்ந்து நெருங்கியிருந்த தெருவில் ஏமனின் பழைய வீட்டை நினைத்துக் கொண்டு தேடிப்பார்த்தேன் - கண்டு பிடிக்க முடியாது என்று தெரிந்தும்.

அவர் என்ன சாதியோ எனக்குத் தெரியாது இன்று வரை.. சிறு வயதிலிருந்தது என்னிடமிருந்தது அவர் மீதான பாசம் மட்டும். சிறிது அறிவும் வயதும் கூடும்போது அவர் ஏனைய சாதியினரால் ஒதுக்கப்பட்டவர் என்பது புரிந்தது. அவர் காலத்திற்குப் பின் என்னைப் பார்த்ததும் அவர் வீட்டினர் காண்பிக்கும் பதட்டமும், என் வீட்டார் என்னை அங்கே அழைத்துப் போக காண்பிக்கும் தயக்கமும் மெளனமாக எனக்குப் பல செய்திகளைச் சொல்லியது. முழுச் சித்திரமும் கிடைக்க பல்லாண்டுகள் ஆகிப் போய் விட்டது. கிராமங்களில் தலித் மக்களுக்குக் கொடுக்கப்படும் இடம் (கொடுக்கப்படாத இடம்?) எத்தனை மோசமானது என்று பின்னாளில் புரிந்தது. ஒரு வேளை நான் ஏமன் மீது வைத்திருந்த அன்பினால், என்னால் பின்னாளிலும் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான பரிவாக மாறியதோ என்னவோ தெரியவில்லை. Freud இடம் தான் கேட்கணும்!

ஏமனோடு இருக்கும் போது எனக்கு இன்னொரு அமானுஷ்ய அனுபவமும் எனக்குக் கிடைத்தது. வாழ்க்கையில் இது வரை இரு நிகழ்வுகளை தெய்வாதீனமான, அல்லது அமானுஷ்யமான நிகழ்வுகளாகப் பார்க்கிறேன். அதில் இரண்டாவது நிகழ்வு நான்  என் அம்மா ஊரிலிருந்து அப்பா ஊருக்கு வரும்போது நிகழ்ந்தது. ஏமன் தான் என்னை அம்மா ஊரிலிருந்து பஸ்ஸில் அப்பா ஊருக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். ஊருக்குத் தள்ளியிருக்கும் சாலையில் இறங்கி நடந்து எங்கள் ஊருக்க வர வேண்டும். கொஞ்சம் தொலைவு என்பதால் ஏமன் என்னை வழக்கம் போல் தோளின் மீது வைத்துக் கொண்டு வந்தார். வழியில் அப்பா ஊருக்குள் நுழையும் போதிருந்த கல்லறைத் தோட்டத்தில் என் அம்மாவின் கல்லறை இருந்தது.

                                                             பூட்டையா - பாட்டையா 
                                                             கல்லறைகளுக்கு நடுவில் அம்மா கல்லறை

அந்த வயதில் என் அம்மாவின் கல்லறையைப் பார்க்கும் போது மனதுக்குள் என்னமோ செய்யும். ஒரு தயக்கம்; பயம் போலவும் இருக்கும். அதனால் லேசாக அந்தப் பக்கம் பார்த்து விட்டு வேறு பக்கம் பார்ப்பது வழக்கம். ஏமன் என்னைத் தூக்கிக் கொண்டு வரும்போது நான் கல்லறை பக்கம் பார்க்காது இருந்தேன். கல்லறையை நாங்கள் தாண்டிய பின் ஏமனின் தோளிலிருந்து திரும்பிப் பார்த்தேன். அம்மாவின் கல்லறையின் இரு



அம்மா கல்லறை - 13.10.’47
                                                                                 











புறமும் ஏறத்தாழ அந்த தோட்டத்திலிருந்த பனை மரங்களின் உயரத்திற்கு வெள்ளை வெளேரென்று இரு சம்மனசுகள் முழந்தாளிட்டு இருப்பது போல் தோன்றியது. எல்லாம் ஓரிரு வினாடிகளுக்கு தான். வேறுபுறம் உடனே திரும்பி விட்டேன்.


 *




 

4 comments:

  1. இரு நினைவுகளும் நெகிழ்வாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. நினைவுகள்
    நாம் வாழ்ந்த வாழ்க்கையின்
    அடையாளங்கள்
    தம 1

    ReplyDelete
  3. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிடமுகவரி.
    http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_2.html?showComment=1406943320490#c8058890132868713880
    வாருங்கள்..வாருங்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. Interesting Article, Its Very Profitable for us Please Share this kind of Article.
    Please Visit Once Satta King Online Game Result on Our Website.
    The Satta King - An Important Online Game for Marketing is a game based on strategy and planning in a marketing campaign. It is a Satta King Online Game. which has been designed by Tony Czyzewski and Frank Kern, the two stalwarts of Sattaonline Result. The game comes with various modules, which have their own story line which revolves around a conflict that occurs in between two factions; the evil forces pitted against the good forces include the zombies, aliens, and robots. The players take a turn and their objective is to either destroy all the enemies and win the level or to save their own position and win the level. The fun part of this game is the planning stage, in which you need to think of the best strategies to attack your opponents from different angles.
    Visit here for more Results
    Satta KingLive Result
    SattaKing
    Satta
    GaliSatta Result
    Sattabajar
    Satta Game
    Satta Result
    SattaMatka
    Delhi Satta King
    Satta King Desawar
    GaliSatta Result
    Satta king bajar
    Satta king Online
    Satta King Online Result
    Satta King Online
    Satta King Result
    Satta King
    Satta King up
    Satta King Game
    SattaMatka Result
    GaliSatta King Result
    DisawerSatta King Result
    GaziyabadSatta King Result
    Faridabad Satta King Result

    ReplyDelete