*
எற்கெனவே கர்னாடக சங்கீதப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா பற்றி வாசித்திருக்கிறேன். வித்தியாசமான ஆச்சரியமான மனிதராகத் தோன்றினார். இப்போது ஆனந்த விகடன் 31.12.14 இதழில் கி. கார்த்திகேயன் என்பவரால் “அனைவரும் வரட்டும் .. அரங்கங்கள் அதிரட்டும்!” என்ற தலைப்பில் வந்த கட்டுரை அவரை மேலும் உயர்ந்து பார்க்க வைத்தது.
அக்கட்டுரையில் இருந்து சில பகுதிகள்:
“கர்னாடக சங்கீதத்தை ஏ.சி. அரங்குகளில் மட்டும் தான் பாடணும்னு எதுவும் சட்டம் இருக்கா என்ன? இல்லை ... குறிப்பிட்ட சாதியினர் மட்டும் தான் பாடணும்னு கட்டுப்பாடு இருக்கா?”
“டிசம்பர் சீசனில் சபாக்களில் கச்சேரி நடக்கும் போது, குப்பத்திலும் அது போலவே நடக்கும்.”
“எலியட்ஸ் பீச் இருக்கிற ஊரூர் ஆல்காட் குப்பத்தைத் தேர்ந்தெடுத்து அந்த மக்களிடம் விஷயத்தைச் சொன்னோம். .. டிசம்பர் 29, 30 தேதிகள்ல ஊரூர் ஆல்காட் மார்கழி விழா களை கட்டும்.”
“இங்கே கலைகளுக்குள்ளயே ஏற்றத் தாழ்வு இருக்கு. பரதம் உசத்தி; பறையாட்டம் தாழ்ந்தது. கர்னாடக சங்கீதப் பாடகர்கள் உசத்தி; தோல்பாவைக் கூத்துக் கலைஞர்களுக்கு மதிப்பே இல்லை. இப்படி கலைக்கும் கலைஞர்களுக்கும் இடையிடையே ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள்.என்னைப் பொறுத்தவரை ‘கலை’ ஒண்ணுதான்.ஒவ்வொரு கலைஞனின் படைப்பும், ரசிகனின் ஆன்மாவைத் தொடணும்; ரசனையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தணும். அது எங்கே .. எப்படி நடந்தாலும் எனக்கு ஓ.கே. இன்னைக்கு குப்பத்திலே பரதநாட்டியம் நடக்கிற மாதிரி, அடுத்த சில வருஷங்களில் மயிலாப்பூர் சபாக்களில் கட்டைகூத்து நடக்கணும்.”
“எந்த இன மக்கள் வந்தாலும் கர்னாடக சங்கீதம் கத்துக்க இங்கே வாய்ப்பு இருக்கு. அந்தத் தன்னார்வத்தை எப்படி தூண்டுறது? அந்தத் தூண்டில் முயற்சிதான் இந்தக் குப்பத் திருவிழா. இப்படி எல்லாம் ஒரு கலைவடிவம் இருக்குன்னு தெரிஞ்சாதானே, எல்லா பசங்களும் அதைக் கத்துக்க ஆசைப்படுவாங்க. வரட்டும். எல்லாரும் வரட்டும். அரங்கங்கள் அதிரட்டும்.”
“பிராமணராப் பிறந்ததாலேயே கஷ்டப்படுறோம்னு யாராவது சொன்னா, அது அவங்க அறியாமைனுதான் சொல்லத் தோணுது. இந்த இட ஒதுக்கீடுதான் எனக்கு எல்லா வாய்ப்புகளையும் அடைச்சிருச்சு. ... அட, 2000 வருஷங்களா பல சாதி மக்களுக்கு மறுத்து அடக்கி வச்சிட்டு, இப்போ 40 வருஷங்களாத் தானே இட ஒதுக்கீடு கொடுக்கிறீங்க. அதுக்குள்ள அதைக் குத்தம் சொன்னா எப்படி? ... என்னைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு அவசியம். ஆனா,, எப்பவோ வகுத்த கொள்கைகளோட இருக்கிற இட ஒதுக்கீட்டை இப்போதைய தேவைகளுக்கு ஏற்ப மறுபரிசீலனை செய்யணும்னு தோணுது.”
“சில சாதி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பத்தி பிராமணர்கள் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியாது.”
இவரை வழிகாட்டியாக நினைத்து, இன்றிருக்கும் நிலையில் சாதிப் படிக்கட்டுகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சற்றே மேலுள்ள சாதியினரும் இது போன்ற புரிதலோடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது.
உயர்ந்த நோக்கோடு குப்பத்திற்கு இசை, நடனத்தை அழைத்துச் செல்கிறார். எல்லாம் வெற்றிகரமாக நடக்க என் வாழ்த்து.
விழா ஒரு முறை நடப்பதோடு நின்று விடாமல் தொடர்ந்து நடப்பது, நடத்தி வைப்பது அந்தக் குப்பத்து மக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே முடியும். அவர்கள் இந்த நல்ல விதைக்கு நீரூற்றி, வேலியிட்டுக் காத்து நடக்க வழிகாட்டலும் உந்துதலும் மிகவும் தேவை.
*