Sunday, May 28, 2017

938. மாடுகளுக்கு ஒரு நீதி… மற்றவருக்கு வேறு நீதியா?







*


எல்லாம் நாமக்கல்லில் தான் முதலில் ஆரம்பித்தது. அங்கே தானே கோழிப்பண்ணைகள் அதிகம் இருக்கிறது! அடச் சே….! நான் ஒன்றும் அங்கே இருக்கிற இன்னொரு பண்ணைகளான ‘மார்க்’ பள்ளிகளைப் பற்றி ஒன்றும் பேசவில்லை. நான் பேசுவது நிஜ கோழிகளை நிஜமாக வளர்க்கும் கோழிப்பண்ணைகள் பற்றித்தான். ஊருக்கே .. ஏன் உலகத்துக்கே … மார்க் வாங்கிக் கொடுக்கும் பள்ளிகள் இருக்குமிடத்தில் இந்த கோழிப்பண்ணைகள் இருப்பதாலோ என்னவோ, அந்தப் பண்ணையில் இருக்கும் கோழிகளிடம் அதிக ‘அறிவு’ இருக்குமோ என்னவோ. அவர்களிடமிருந்து தான் முதல் தகவலும், அதனால் முதல் எதிர்ப்பும் வந்து விட்டது.


காலையில் தினசரி எந்தக் கோழி பார்த்ததோ என்னவோ தெரியவில்லை. மாடு, அதிலும் பசு மாடு, பன்றி, ஒட்டகம் இவைகளையெல்லாம் வெட்டக்கூடாது … சாப்பிடக் கூடாதுன்னு நம்ம அரசியல்வியாதிகள் கட்டளைகள் போட்டிருந்தது அந்த தினசரிகளில் முக்கிய செய்திகளாக வெளிவந்திருந்தன. அதைப் பார்த்ததும் கோழிகளுக்கெல்லாம் பயங்கர கோபம். அது என்ன மாடு ஒட்டகம் என்றெல்லாம் தடை விதிக்கப்பட்டிருக்கிறது; ஆனால் ஏன் கோழியையும் கொல்லக்கூடாது; தின்னக்கூடாது என்றும் சட்டம் வரவில்லை என்ற கோபம் அவர்களுக்கு.


தங்களைத் தின்னக் கூடாது என்று சட்டம் வரவில்லையே என்று அவர்கள் கோபப்படவில்லை. அவர்கள் கோபப் பட்டதற்கான உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு, அதாவது கோழிகளுக்கு, என்ன கோபமென்றால் தின்னப்படும் மிருகங்கள் பட்டியலில் கோழிகளுக்கு ஏன் இடம் கொடுக்கவில்லை என்ற ஒரு தன்மானக் கோபம் அது. சாப்பிடக்கூடிய மிருகங்களில் ஏன் எங்களைச் சேர்க்கவில்லை.நாங்களென்ன மாடு, ஒட்டகங்களை விட தரத்தில் தாழ்ந்து போய்விட்டோமா என்றொரு தன்மானக் கோபம் அது.


கோழிகள் எல்லாம் ஒரு கூட்டம் போட்டு இந்தப் பட்டியலில் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய இடத்தைக் கொடுங்கள் என்று ஒரு தீர்மானம் போட்டதாகத் தெரிகிறது. அது சரி … அவர்கள் கோரிக்கை நியாயமானதே. அவர்களையும் அந்தப் பட்டியலில் சேர்ப்பது தான் நியாயம் என்பது நமது அரசுக்குத் தெரியாதா என்ன? அவர்களுக்கு எத்தனை விழுக்காடு கொடுப்பது என்பது பற்றி அரசே தீர்மானித்துக் கொள்ளட்டும். ஆனால் பட்டியலில் எங்கள் பெயரும் வரவேண்டும் என்பது தான் கோழிகளின் முதல் கொள்கை முழக்கம். பறிக்கப்பட்ட கிள்ளுக் கீரை போல் நாம் சும்மா இருந்து விடக் கூடாது என்பது அவர்களது திண்மையான எண்ணம்.


கோழிகள் கூட்டத்தில் ஒரு வயதான கோழி மெல்ல தன் கரகரத்தக் குரலில் கேட்டதாம்: ‘நாம் பட்டியலில் இல்லை என்பதற்காகப் போராடலாம் என்கிறீர்கள். ஆனால் நம்மை விட அளவில் பெரிய ஆடுகள் அது போலெல்லாம் குரல் கொடுக்கவில்லையே. அப்படி இருக்கும் போது நாம் குரல் எழுப்புவது சரியா?’ என்று கேட்டிருக்கிறது. பெரும்பான்மைக் கோழிகளுக்கு கோபம் வந்து விட்டது. ‘ஆடுகளைப் பற்றி நமக்குத் தெரியாதா … எல்லாம் கூட்டம் கூட்டமாக ‘மே’ன்னு கத்திக்கிட்டு ஒண்ணுக்குப் பின்னால் ஒண்ணு என்று போகும் ஆட்டுக் கூட்டம் அது. அவர்கள் யாரும் யோசிக்கவில்லை என்றால் அதற்காக நாமும் யோசிக்காமல் இருக்கவேண்டுமா என்று உரத்துச் சொல்லி போர்க்குரல் எழுப்பியுள்ளன. வயதான அந்தக் கோழி ‘கப் சிப் காராவடை’ என்று அடங்கி விட்டதாம்.


இன்னொரு கோழிக்கும் ஒரு சின்ன சந்தேகம். நம்ம வியாதிகள், அதாவது அரசியல்வியாதிகள் உயிர்க்கொலை வேண்டாம் என்பதற்காக இந்தத் தடைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். சரி … இருக்கட்டும். ஆனால் அது காய்கறியோ, கீரையோ, பழங்களோ அதுகளைப் பறித்து, அவித்து தின்பது மட்டும் சரியா என்றொரு கேள்வி அதற்கு. அட பழங்கள், காய்கள் என்று பறித்துத் தின்றால் தாய்ச் செடி இன்னும் உயிரோடு இருந்து தன் ஆயுளைத் தொடரும். ஒரு கீரையை எடுத்துக் கொள்ளுங்கள். அடியோடு பெயர்த்து, அதாவது ஓரு உயிருள்ள செடியை அப்படியே ‘கொன்று’ தின்பது மட்டும் எப்படி சரியாகும் என்று ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளது.


உயிர்க்கொலை வேண்டாம் என்றால் எல்லா உயிரையும் ஒரே மாதிரி நினைத்து முடிவெடுக்க வேண்டும் அல்லவா? மாடு, ஒட்டகம் என்று ஓரங்கட்டி ஆடு, கோழி இவைகளை ஒதுக்கி வைத்தாகி விட்டது. இன்னொரு பக்கம் செடிகளைக் கொல்வது பாவமே இல்லை என்பது தர்க்க ரீதியில் சரியில்லையே என்று அந்தக் கோழி கேட்டது.


அந்தக் கோழியின் கேள்விக்குப் பதில் எனக்குத் தெரியவில்லை. 

உங்களுக்கு தெரியுமா?

7 comments:

  1. கோழி யோசிக்க வைக்குது

    ReplyDelete
  2. கோழிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமானால் அவர்களை மத நூல்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும். பசு புனிதமானது, பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ள தடுத்துள்ளார் கடவுள் என்பது போல.

    ReplyDelete
  3. ஆடு கோழி வெட்டத்தடை என்றால் எதிர்ப்பு மிக பலமாக இருக்கும். பக்தாளிலேயே பாதி பேர் எதிர்க்க ஆரம்பிச்சுடுவா. செயேந்திரன் பேச்சை கேட்டு செயா செய்து தேர்தல் தோல்விக்கு பின் பின்வாங்கியதை மறவாதிர்.

    ReplyDelete
  4. கோழி வெட்டத்தடை என்றால் தமிழகத்தில் எதிர்ப்பு மிகவும் பலமாக இருக்கும் என்று நானும் அறிந்திருக்கிறேன். ஊரில் தாவர உணவுகளை விரும்பாதோர் கோழி இறைச்சியையே மிகவும் விரும்புகிறார்கள். வெளிநாடுகளிலும் கூட கொழுப்பு, இதய நோய் பிரச்சனைகளால் கோழி தான் ராப் இடத்தில் நிற்கின்றது.
    எனக்கு புரியாதது என்னவென்றால் ஜெயலலிதா ஆலயங்களில் கோழி பலி கொடுப்பதை தடைசெய்ததினால் தேர்தலில் தோல்வி அடைந்தார் என்று பலரும் சொல்கிறார்கள்! ஜெயலலிதா இறைச்சிக்காக மக்களின் விருப்பு உணவான கோழிகள் இறைச்சி கடையில் வெட்டபடுவதை, விற்பனை செய்வதை தடை செய்யவில்லை. ஆலயங்களில் கோழி பலி கொடுப்பதையே தடை செய்தார். மக்களுக்கு தங்களது விருப்பமான கோழி இறைச்சியை உண்பதில் இங்கே என்ன தடை உள்ளது?
    மக்களில் பலர் கோழியை கடவுளின் முன்பாக வெட்டி கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து கடவுளை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என்ற நோக்கத்திலேயே உறுதியாக இருந்திருக்கிறார்கள் என்ற மிகவும் வருத்தமான உண்மையையே இங்கே அறிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
  5. வேகநரி
    அன்று கோழி வெட்டக்கூடாது என்னும்போது தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு இப்போது ஏன் வரவில்லை? Going immune?

    ReplyDelete
  6. :)
    அதை தான் சொன்னேன்.கோழிகளை உற்பத்தி நிலையத்தில், கடையில், வீட்டில் வெட்டி உண்பதை ஜெயலலிதா தடை செய்யவில்லையே! மக்கள் பொங்கி எழுந்தது எல்லாம், கடவுளுக்கு என்று சொல்லி ஆலயங்களில் கோழிகளை வெட்டி, கடவுளுக்கே அல்வா கொடுத்துவிட்டு,அதை தாங்கள் உண்பதை ஜெயலலிதா தடை செய்துவிட்டாரே என்பதிற்காக.
    இலங்கை நண்பர் இலங்கை தமிழர்களின் டாப் செய்திபத்திரிக்கை தலையங்கத்தில் என்ன கேட்டுள்ளது என்று எனக்கு இன்று அனுப்பியிருந்தார். தகவலுக்காக உங்களுக்கு அனுப்புகிறேன் படிச்சு பாருங்கள்.
    இந்தியப் பிரதமரின் முடிவை இலங்கையும் எடுக்க வேண்டும்
    http://www.valampurii.lk/valampurii/content.php?id=14708&ctype=news
    இலங்கை தமிழர்களுக்காக அரசியல் செய்யும் சீமானும், திருமாளவனும், வைகோவும் மாட்டு தடைக்கு ஆதரவு தெரிவிப்பார்களோ?

    ReplyDelete