Wednesday, April 11, 2018

978. ஆத்தா .... நான் பாஸாயிட்டேன்





*


 அட .. ஒரு படிச்ச புள்ள .. தான் படிச்சது கொண்டதைப் பத்திப் பேசாம வெறுமனே சினிமாவுக்குப் போனது… ஊரைச் சுத்துனதுன்னு எழுதிக்கிட்டு இருந்தா எப்படி? படிச்சிக் கிழிச்ச அனுபவத்தையும் கொஞ்சம் சொல்லணுமே …

 என் ஆசிரியர்கள் பலர் மேல் எனக்கு மிகுந்த மரியாதையும், மதிப்பும் உண்டு. ஆனாலும் ஒரு பெருங்குறை அத்தனை பேரின் மீதும் உண்டு. அதில் என் அப்பாவும் சேர்த்தி தான். இன்று பிள்ளை முளைச்சி மூணு இலை உடுறதுக்கு முன்னாலேயே என் பிள்ளையை அதுவாக ஆக்கப் போறேன் .. இதுவாக ஆக்கப் போறேன்னு பெத்தவங்க சொல்ல ஆரம்பிச்சிர்ராங்க. ஆனா எங்க காலத்தில பெற்றோரும் சரி ஆசிரியர்களும் சரி, சின்னப் பசங்களுக்கு எந்த வித முனைப்பும் கொடுக்கத் தவறிட்டாங்க. என்னைப் பொறுத்தவரை ஒரு வாத்தியார் பிள்ளையா பிறந்தேன். அதனால் தொடர்ந்து படிக்கணும்னு நினைச்சேனே தவிர படிச்சி என்னவாக ஆகணும்னு நினச்சும் பார்த்ததில்லை. பெத்தவங்களும் அந்த முனைப்பைத் தரவில்லை. அதை விட ஒரு ஆசிரியர் கூட பள்ளியிலோ கல்லூரியிலோ அதைப் பற்றித் தவறுதலாகக் கூட ஒரு முறை கூட பேசியதில்லை. (இதனாலேயே நான் ஆசிரியனாக ஆன பிறகு மாணவர்களுக்கான சிலபஸை விட ”நாளை” என்பதைப் பற்றி அவர்களிடம் அடிக்கடி பேசினேன். பயனுமிருந்தது என்றே நிச்சயமாக நினைக்கின்றேன்.)

பெற்றவர்கள், ஆசிரியர்கள் தான் சொல்லித் தரவில்லை என்றாலும் நானே கூட வெகு சில மாணவர்கள் போல் கொஞ்சம் புத்திசாலித் தனமாக எதிர் காலம் பற்றி யோசிக்கத் தெரிந்திருக்கலாம். அதுவுமில்லை. நான் ஒரு சரியான கூமுட்டை. எதிர்காலத்தில் அப்படி செய்யணும், இப்படி இருக்கணும் என்ற கனவு கூட இல்லாமல் வெறும் மொட்டைப் பயலாக இருந்திருக்கிறேன். ஊக்குவிக்கவும் எந்த வார்த்தையும் அப்பாவிடமிருந்தோ, ஆசிரியர்களிடமிருந்தோ வந்ததேதில்லை.

இதனால் தானோ தேர்வில் வெற்றி பெறுவேன் என்ற எண்ணத்தைத் தவிர எத்தனை மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நினைக்கவேயில்லை. அதிக மதிப்பெண் தான் மரியாதை என்ற நினைப்புகூட இல்லாமல் இருந்திருக்கிறேன். எப்படியோ எல்லாம் சேர்ந்து வெளியில் சொல்ல முடியாத மொத்த மதிப்பெண் வாங்கினேன், அதிலும் நான் எப்படி ஒரு கணக்குப் புலியாக இருந்து கணக்குப் புளியாக மாறினேன் என்பதைச் சொன்னேனே … அது மாதிரி கணக்கு மார்க்கும் காலை வாறி விட்டிருந்தது. பாஸ் செய்தேன். அந்த அளவு தான் என் S.S.L.C. பற்றிச் சொல்ல முடியும்.

 அதுவும் தேர்வு முடிவு வந்த நாள் இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது. அப்போது நான் பொன்னியின் செல்வன் கதை வாசித்துக் கொண்டிருந்தேன். மொட்டை மெத்தையில் உட்கார்ந்து கதை வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது நானும் வந்தியத்தேவனோடு சேர்ந்து குந்தவியைக் காதலிக்க ஆரம்பித்திருந்தேன். மூன்றாம் பாகம். சிறையிலிருக்கும் வந்தியத் தேவனை குந்தவி வந்து சந்திக்கும் சீன். வாவ்! நானே அப்போது சிறையில் அடைபட்டுக்கிடந்ததாக ஒரு நினைப்பு. குந்தவி என்னைப் பார்க்க வருகிறா(ர்க)ள்! அந்த நினைப்பில் சிறிதே கண்ணயர்ந்து விட்டேன். 

திடீரென்று நாலைந்து தெரு நண்பர்கள் வந்து என்னை எழுப்பினார்கள். அப்பொதெல்லாம் S.S.L.C. தேர்வு முடிவுகள் தனியாக தினசரிகளின் விசேஷப் பதிப்புகளில் வரும். நண்பர்கள் ஒரு பத்திரிகை வாங்கி வந்திருந்தார்கள். எப்போதும் செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி இதழ் அது. ஏற்கெனவே அவர்கள் என் எண்ணைப் பார்த்திருக்கிறார்கள். பேப்பரில் என் எண் இல்லை. என்னை எழுப்பியவர்கள் மெல்ல என்னிடம் அதைச் சொன்னார்கள். நான் கண்டுக்கவேயில்லை. பேப்பரை எடுத்துப் பார்த்தேன். என் எண் இல்லை, சிறிதே யோசித்தேன். மறுபடி பேப்பரை எடுத்துப் பார்த்தேன். என் எண் மட்டுமல்ல .. என்னோடு சேர்ந்து ஏறத்தாழ நூறு எண்களைக் காணோம்.

நான் சிரித்துக் கொண்டே ஷெர்லாக் ஹோம்ஸாக (அவரை அப்போது எனக்குத் தெரியாது) நினைக்காமல், என்னை ஒரு சங்கர்லாலாக நினைத்து நண்பர்களிடம் ”பேப்பர்தாண்டா தப்பு”ன்னு சொன்னேன். பசங்க நம்பவில்லை. நான் படித்ததோ VI Form “A” Section. அதாவது ஆனானப்பட்ட புனித மரியன்னைப் பள்ளியில் ஆறாவது பாரத்தில், அதுவும் A” Section மாணவன். அதாவது ஒரு உயர்ந்த பள்ளி; அதிலும் A” Section - டாப் மாணவர்கள் மட்டுமே இருக்கும் Section! அதில் எப்படி நூறு எண்கள் இல்லாமல் ஒரேயடியாக பெயிலாக முடியும் என்றேன் துணிச்சலாக.

ஆனால் நண்பர்களுக்கு இந்த லாஜிக் பிடிபடலை. “வாடா .. அடுத்த பேப்பர் பார்ப்போம்” என்று கூட்டிக் கொண்டு போனார்கள். இதுவரை அப்பாவுக்கும் இதெல்லாம் தெரியாது. சைக்கிள் படையோடு பேப்பர் வாங்கப் போனோம். அடுத்த தினசரி .. ஒரு வேளை அது மாலை முரசாக இருக்கலாம். இனிதான் அது வரும் என்று கடையில் சொன்னார்கள், முதலில் ரயில்வே நிலையத்தில் தான் வெளியே வரும் என்றும் சொன்னார்கள். எல்லோரும் ரயில் நிலைத்திற்குச் சென்றோம்.

சிறிது நேரம் கழித்து என் பள்ளியில் வேறொரு Section ல் படித்து கிறித்துவ மாணவர்களுக்கான தனி வகுப்பில் என்னோடு படித்த யாக்கோபு என்ற மாணவன் அந்த ஸ்பெஷல் பதிப்பைக் கையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் பேப்பர் வாங்கி … அதுவும் நண்பர்கள் தான் முதலில் என் தேர்வு முடிவைப் பார்த்தார்கள். நான் சொன்னது தான் நடந்திருந்தது. நான் பாஸாயிட்டேன். (தனிமையில் போய் யாக்கோபுவிடம் பேசினேன். அவன் பாவம் தேறவில்லை.)

 இப்படியாக மிக மோசமாக என் பள்ளிப் படிப்பு முடிவடைந்தது. அடுத்து கல்லூரிக்குப் போவோமா?



 *

3 comments:

  1. அந்த காலத்து S.S.L.C ரிசல்ட்டை பேப்பரில் பார்த்ததிலும் ஒரு 'த்ரில்' இருக்கத்தான் செய்தது. மகிழ்ச்சியான மலரும் நினைவுகள்.

    ReplyDelete
  2. நான் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற நாள் நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
  3. ஆத்தா.. நான் பாஸாகிட்டேன்... ஹா.. நல்ல அனுபவம்

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    ReplyDelete