Sunday, September 23, 2018

1003. சாதிகள் உள்ளதடி பாப்பா .....




*


இணைய நண்பர் ஜி.எம். பாலசுப்ரமணியன் அவர்களின் பதிவை நேற்று மாலை வாசித்தேன்.   எனக்கும் சீனியர். நெடுநாளைய பதிவர். சாதியில்லா உலகம் வேண்டி ஒரு பதிவிட்டிருக்கிறார். ”இது நம் ரத்த அணுவில் ஊறிய சமாச்சாரம். எளிதல்ல நீக்குவது என்கிறார் ஜி.எம்.பி ஐயா.. அப்பதிவுக்கு நான் ‘முறை’ கட்டாயம் செய்ய வேண்டுமல்லவா! என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளை - 23.9.18 தமிழ் இந்துவில் அழகிய பெரியவன் என்ற எழுத்தாளரின்  - சாதியம் மேலும் கூர்மைஅடைந்திருக்கிறது என்ற தலைப்பில் வந்திருந்த பேட்டி  என் கண்ணில் பட்டது.
அதில் ‘சாதியை ஒரு மனநிலை’ என்ற அம்பேத்கரின் வார்த்தையை மேற்கோளிடுகிறார். அதோடு இப்போது நான் மொழியாக்கம் செய்து கொண்டிருக்கும் நூல் - அம்பேத்கரின் உலகம் (Eleanor Zelliot). இவைகளோடு ஏற்கெனவே என் கருத்துகள். எல்லாம் ஒன்றோடு ஒன்றிணைந்து ... மண்டைக்குள் சிறிது குழப்பம். என் கருத்தும் என்னவென்று பார்த்து விடலாமே என்றெண்ணி இப்பதிவை எழுத ஆரம்பித்தேன். 


தலித் பிரச்சனை பற்றி மனதுக்குள் பல ஆண்டுகளாக பல எண்ண ஓட்டங்கள் உண்டு. ஒரு வேளை நான் சின்ன வயதில் நேசித்த “ஏமன்” இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்,. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள நீங்கள் என் பழைய பதிவு ஒன்றை  கட்டாயம் வாசிக்கணுமே! 

சாதி வித்தியாசங்களில் என் சிந்தனை ஒரு வழியில் போனதற்கு ஏமன் ஒரு காரணமாக இருக்கலாம். ப்ளாக் எழுத ஆரம்பித்து மதங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த போது இந்து மதமே ஒரு இரட்டை மதம், என்றும் அதில் பிராமணர்கள் சிறு பான்மையினர்; மற்றோர் (ஆங்கிலேய அரசின் போது எடுத்த மக்கள் கணிப்பின் மூலமாய்) இந்து மதத்திற்குள் தள்ளப் பட்டவர்கள் / இழுத்து வரப்பட்டவர்கள் என்றும் எனக்குப் புரிந்தது. ஆயினும் சிறுபான்மையினரான பிராமணர்கள் இந்து மதத்தை மட்டுமல்லாது அதற்குள் இழுத்து வரப்பட்டவர்களையும் தங்கள் H.R. திறமையினால் தங்கள் (மதக்) கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அறிந்தேன். முன்னோரை குலச்சாமியாக்கி வணங்கியவர்கள் பின்னாளில் மும்மூர்த்திகளைக் கடவுளாகக் கொண்டதாக அறிந்தேன்.

இதில் நடந்த ஒரு பெரும் சோகம் .. இந்து மதத்தின் வர்ணாசிரமக் கொள்கைகள் மக்கள் மீது பற்றிப் படர்ந்து அவர்களை முழுமையாக ஆட்கொண்டன. என் தலை மீது வலியவனின் கால் இருக்கிறதென்றால் நான் அதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் என்றில்லாமல், என் கீழ் யார் இருக்கிறார்கள்; அவர்கள் தலை எங்கே இருக்கிறது என் கால்களை வைக்க என்ற நோக்கம் பரந்து பட்டு அனைத்து இந்தியர் மேலும் ஆதிக்கம் கொண்டு விட்டது. ப்ராமணியம் என்பது அனைத்து சாதியினரும் படிநிலையை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக மாறி விட்டது. இன்று பிராமணர்கள் வெளிப்படையாக (overt) மற்ற சாதியினரை மட்டம் தட்டுவதில்லை என்றாலும், மற்ற சாதியினர் ‘நான் ஆண்ட சாதி ... நீ அடிமை சாதி’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு சாதியைக் கட்டி அழுகிறார்கள். இது தான் இன்றைய பிராமணியம். நடுமட்ட சாதிகள் புதியதாகப் பிறந்த ’நவீன சத்திரியர்களாக’ மாறிவிட்டனர். (காஞ்சா அய்லய்யா) இதனால் தான் இன்று அழகிய பெரியவன் என்ற எழுத்தாளர் “சாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது” என்று தனது பேட்டியில் சொல்லியிருப்பது எனக்கு இதுவரை ஏன் தோன்றியதில்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

நானும் பல ஆண்டுகளுக்கு முன்பே இடப்பங்கீடுபற்றிய ஒரு நீண்ட நெடிய கட்டுரை ஒன்றினை எழுதிப் பதிவிட்டேன். ஆனால் அழகிய பெரியவன் கூறிய ஒரு கூற்று இதுவரை என் மனதில் படவேயில்லை. “தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டில் (இடப்பங்கீட்டில்!) 30% பிற்படுத்தப்பட்டவர்க்கு, 20% மிகவும் பிற்படுத்தப்பட்டவர்க்கு, 18% பட்டியலினத்தார்க்கு, 1% பழங்குடியினர்க்கு என்று இட ஒதுக்கீடு இருக்கிறது. இட ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்டு (இன்னும்) 31% இடங்கள் இருக்கின்றன. இதில் தலித்துகளுக்கான 18% ஒதுக்கீட்டை மட்டும் சுட்டி எப்படி ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையும் தலித்துகளோடு இணைத்துப் பேசுகிறார்கள்?எனக்கு இந்த உண்மை இதுவரை உரைக்கவில்லை. இடப்பங்கீடு என்றாலே அது தலித்துகளுக்கு மட்டும் கொடுக்கப்படும் ஒரு ”கொடை” என்ற நினைப்பு தான் எல்லோருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் இடப்பங்கீடு தலித்துகளுக்கு மட்டும் என்ற நினைப்பில் கொந்தளிப்பார்கள். வேதனையான  வேடிக்கைதான். தங்கள் முதுகு தங்களுக்குத் தெரியாதே!

என் கட்டுரையின் இறுதியில் இடப்பங்கீடு எதுவரை என்பதற்கு ஒரு எல்லைக்கோட்டையும் கொடுத்திருந்தேன். ஆனால் அந்த மாற்றங்களைக் கொண்டுவர நல்ல அரசும், சமூக முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைச்சரவையும் வர வேண்டும். நடப்பவைகளை வைத்துப் பார்க்கும் போது அப்படி ஒரு ‘நல்ல காரியம்’ நம் திருநாட்டில் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.

ஆனால் ஜி.எம்.பி. ஐயாவுக்கு எப்படியோ கொஞ்சம் நம்பிக்கை. ஆனால், என்னைப் போல் எழுபதைத் தாண்டிய ஆட்களுக்கு இந்த நம்பிக்கை வரும் வாய்ப்பு மிகக் குறைவு. நாங்கள் படித்த காலத்தில் என் வகுப்புத் தோழர்களின் சாதி என்ன என்று எந்த ஆராய்ச்சியும் நாங்கள் யாரும் செய்ததாக நினைவில்லை, ஆனால் இன்று கலர் கலர் கயிறுகள் கட்டி சாதியைப் பிரகடனம் செய்யும் சின்னப் பசங்களை நிறைய பார்க்க முடிகிறது. அந்த வயதில் சாதி மேல் ஒருவனுக்குப் ‘பாசம்’ பிறந்து விட்டால் எப்போது அது அவனை விட்டுப் போகும்?


நம் தமிழ் சினிமா முன்னேறவே முடியாது என்றும் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது வரும் பல படங்கள் எனது அந்தப் பழைய கருத்தை முறித்துக் கொண்டுள்ளன. நல்ல தமிழ்ப்படங்கள் மெல்ல மெல்லப் பெருகும் என்ற நம்பிக்கை வருகிறது, அது போலவே சாதி மறையும் காலம் பக்கத்தில் இல்லை என்பது என் எண்ணம். சினிமாவைப் பொறுத்த வரையில் நான் தோற்றது போல் இக்கருத்திலும் விரைவில் தோற்க ஆசைப்படுகிறேன்.

ஆனாலும் அப்படி எளிதில் தோற்க முடியுமான்னும் தெரியவில்லை. ஏனெனில் யார் யாரைத் தூக்கி விடுவது என்று யோசித்தால் பதில் தெரியவில்லை. அதோடு பாழாய்ப் போன இந்தப் படி நிலை எல்லாவிதத்திலும், எல்லா நிலையிலும் இருப்பதால் எப்படி இந்த நிலை மாறும்? தலித்துகளுக்குள்ளும் உள்ள இந்தப் படி நிலை அவர்களையும் ஒரே அணியாய் நிற்க விடாதே.









 *

6 comments:

  1. //சினிமாவைப் பொறுத்த வரையில் நான் தோற்றது போல் இக்கருத்திலும் விரைவில் தோற்க ஆசைப்படுகிறேன்.//
    சினிமாவில் நீங்க தோற்றது போலவே, இந்தியாவில் உள்ள அருவருப்பான ஜாதி முறைகள் ஒழிந்து இந்தியர்கள் மனிதர்களாவார்கள்.

    ReplyDelete
  2. இக்கருத்திலும் தாங்கள் தோற்பீர்கள் ஐயா. உங்கள் ஆசை நிறைவேறும்.

    ReplyDelete
  3. /ஆனால் ஜி.எம்.பி. ஐயாவுக்கு எப்படியோ கொஞ்சம் நம்பிக்கை. ஆனால், என்னைப் போல் எழுபதைத் தாண்டிய ஆட்களுக்கு இந்த நம்பிக்கை வரும் வாய்ப்பு மிகக் குறைவுஎனக்கு இப்போது வயதுஎண்பதை எட்டிக்கொண்டிருக்கிறது யார் யாருக்கோ எதிலெல்லாமோ நம்பிக்கை எனக்கு மட்டும் நம் மக்கள் மீது நம்பிக்கை கூடாதா எதையாவது ஆராய்ச்சி செய்யும்போது நம்பிக்கை குறைகிறது யாரையும் குறைசொல்லாமல் தீர்வுக்கான வழி முறைகளைத் தொட்டு சென்றிருக்கிறேன் சினிமாத் துறை முன்னேறு வதுபோல் சாதியமும் மறைந்து எல்லோரும்சமமென்னும் நிலை வரும் ஆனால் எதிர்பார்க்கும்வேகத்தில் இல்லைஎன்பதே குறை பொருளாதார வளர்ச்சியும் கவியும் அதைதுரிதப்படுத்தும் என்றே நம்புகிறேன் நீச்சயம்சாதியம் கூர்மைஅடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை

    ReplyDelete
  4. கல்வியும் என்று இருந்திருக்கவேண்டும்

    ReplyDelete
  5. நான் எழுதி இருந்த பின்னூட்டம் என்னாயிற்று

    ReplyDelete
  6. நான்முன்பு எழுதி இருந்த பின்னூட்டம் மட்டறுத்தலில் மாட்டிவிட்டதோ என்று நினைத்தேன் ஒரு முறை எழுதிய பின்னூட்டம்போல் மறு முறையுமமையுமா தெரியவில்லை இருந்தாலும் எழுதுகிறேன் யர் யாரோ எதிலெதிலோ நம்பிக்கைவைக்கிறார்கள் நான் ஒரு வேறு பாடுகளில்லாதசமுதாயத்தை நினைக்கக்கூடாதா எதிர் பார்க்கும் மாற்றங்கள் உடனே நிகழாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது சினிமா பற்றிய உங்கள் கருத்துகளே உதாரணம் நான் என்நம்பிக்கைகளை நிகழ்த்த எனக்குத் தோன்றிய வழிமுறைகளையும் எழுதி இருக்கிறேனே கல்வியே ஒரு great levellerஅடுத்து பொருளாதார சுதந்திரம் அப்துல் கலாம்கூறியதாக நினைவு நகர வசதிகளுடன் கூடிய கிராமங்கள் இதில் பங்கேற்கலாம் கிராமங்களில் இருக்கும் அளவு நகரங்களில் வேற்றுமைகள் காணப்டுவதில்லை மாற்றங்களை நான் சொல்லும் முறையில் கல்வி அமைந்தால் துரிதப்படுத்தலாம்
    அண்மையில் தலித் என்னும் சொல்லுக்குப்பதில் பிற்படுத்தப்பட்டோர் எனக் கூற வேண்டும் என்பது அரசின் கொள்கை என்றும் கவனித்தநினைவு எப்படிஆனாலும் மனிடரில் உயர்வுதாழ்வு பார்ப்பது சரியில்லை என் செய்ய காலம் காலமாக நிலவி வரும்நிலையாயிற்றே

    ReplyDelete