Sunday, September 30, 2018

1004. மேற்குத் தொடர்ச்சி மலை





*



 மேற்குத் தொடர்ச்சி மலை படம் பார்த்ததும் அதைப் பத்தி நாலு வரியாவது எழுதணும்னு ஆசைப்பட்ட போது முகநூலில் புதிய பதிவுகள் ஏதும் போட முடியாத சூழ்நிலை. இப்போது நாட்கள் கடந்திருச்சு. ஆறின கஞ்சி பழங்கஞ்சியாகிப் போய்விட்டது. இருந்தாலும் சொல்லணும்னு நினச்ச ஒரு விஷயத்தை யாருமே இது வரை சொல்லததால் அதை மட்டுமாவது சொல்லி விட வேண்டுமென்று ஆசை வந்திருச்சு.


 அழகர்சாமியின் குதிரை என்ற படத்தைப் பார்த்து அதைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை சொல்லியிருந்தேன். படத்தைப் பார்த்து எழுதியவன் அதன் ஒளிப்பதிவாளர் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இப்படம் பார்ப்பதற்கு முன்பே தேனி ஈஸ்வர் அவர்களின் புகைப்படங்களை நிறைய பார்த்து வியந்திருக்கிறேன். முதன் முதல் பார்த்தது ஒரு நாட்டியக் குழுவின் படம் என்று நினைக்கின்றேன். அதன் பின் அவரது வளர்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வந்து கொண்டிருந்தேன். அவர் சினிமா படம் எடுக்கிறார் என்பது தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சி. (என்னைப்போல் காமிராவைக் காலம் காலமாய் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்து கடைசி வரை ஒன்றும் தேறாமல் போகாமல், பலர் அதில் உயர் இடத்திற்கு வரும் போது ஒரு சின்ன மகிழ்ச்சி வருவதுண்டு.) அந்த மகிழ்ச்சியோடு அந்தப் படம் பார்த்தேன். ஏனோ எனக்கு அதில் அவர் ஏறிய உயரம் போதாது என்று தோன்றியது. முதல் படம் இன்னும் முயன்றிருக்க வேண்டும் என்று நினைத்தேன். இருப்பினும் அப்படத்தில் எனக்குப் பிடித்த ஒளிப்பதிவு பற்றியும் பேசியிருந்தேன். ஆனாலும், //இரவுக் காட்சிகளாக நாலைந்து காட்சிகள். உண்மையான இருளில் படப்பிடிப்பு நடத்தியிருந்தார்கள். நன்றாக அந்தக் காட்சிகள் இருந்தன. ஈஸ்வரின் stills எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்படத்தில் படப்பிடிப்பு இன்னும் அவர் நன்றாக செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.// என்று எழுதியிருந்தேன். ஏன் அப்படி எழுதினேன் என்பதற்கான காரணங்கள் மறந்து போய்விட்டன. அடுத்த படம் தரமணி பார்த்தேன். ஓஹோ என்று சொல்ல மனம் வரவில்லை. 



அவை எல்லாவற்றிற்கும் ஈஸ்வரிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று மே.தொ.ம. படம் பார்க்கும் போதே தோன்றியது. மிரட்டும் அழகு என்பார்களே... அதை இப்படத்தில் அங்குலம் அங்குலமாக உணர்ந்தேன். பல டைரடக்கர்கள் நினைவுக்கு வந்தார்கள். முதலில் வந்தவர் “ப்ரம்ம்மாண்ட ஷங்கர்”! அவரது பிரமாண்டத்தையெல்லாம் இப்படத்தின் சில காட்சிகளோடு மனம் ஒப்பிட்டது. காசை வாரி இறைப்பது தான் பிரமாண்டம் என்ற ஒரு தியரியை உருவாக்கி வைத்திருக்கும் ஷங்கர் இப்படத்தின் பிரமாண்டத்தோடு போட்டி போட முடியாது என்று தோன்றியது. முழுக்காரணமும் தேனி ஈஷ்வர் தான்.


படம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு காட்சி. மேகம் மூடிய ஒரு மலை உச்சி. காமிரா அந்த பனிக்குள்ளிருந்து reverseஆக வெளியே நகரும். உறைந்து போனேன். panoramic காட்சிகள் பிரம்மாண்ட உலகத்தில் நாம் எத்தனை சிறிது என்று கணத்திற்குக் கணம் காண்பித்துக் கொண்டிருந்தன. இப்படத்தின் வெற்றிக்கும், புகழுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் வெற்றியின் பெரும்பங்கிற்கு ஈஸ்வர் ஒரு பெரும் காரணம்.


மணிரத்தினம் படத்தில் சின்னச் சின்ன வசனங்கள் என்பார்கள். இந்தப் படத்திலோ வசனங்கள் பல நீண்டு இருக்கும். அந்த வித்தியாசம் பளிச்செனத் தெரிந்தது. ஆனால் தன் வீராப்பை வழி நெடுக வழவழவென்று பேசிக்கொண்டு சென்று, இருமி கீழே விழும் அந்த மனிதனின் நீண்ட பேச்சை மேலிருந்து கீழே நடந்து செல்வதைப் பார்த்த போதும், அம்மாவுடன் பத்திரம் எழுதச் செல்லும் கதாநாயகன் ரங்கசாமி ‘சீக்கிரம் நடந்து வா’ என்று அம்மாவிடம் சாதாரணமாகச் சொல்ல, பதிலாக அந்த அம்மா முழக்கணக்கில் திட்டிக் கொண்டே பதில் சொல்வதும் நிஜம் மட்டுமல்ல இயற்கை. நிஜ அம்மா. நிஜ கிராமத்து அம்மா. லெனின் சொல்லும் சமூகத்தின் இலக்கணமே அது தானே. 


இது ஒரு பிரம்மாண்டமான படம். பிரம்மாண்டமாக ஆக்கியது ஈஸ்வரின் பொட்டி தான்! எனக்கு ஒரு வருத்தம். நான் பார்த்த பல youtube படங்களிலோ. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ ஈஸ்வரின் படப்பிடிப்பு பற்றி யாரும் பேசியது என் கண்களிலோ காதுகளிலோ விழவேயில்லை. பெரும் வருத்தம். அதற்காகவே இப்பதிவு.


மணிரத்தினத்தின் முதல் படமான ப்ரியா ஓ ப்ரியா என்ற படம் பார்த்துக் கொண்டிருந்தேன் மதுரை மினிப்பிரியா தியேட்டரில். அப்போது மணிரத்தினம் பற்றி தெரியாது. படத்தில் என்னை மிகவும் மிரட்டியது காமிரா. சில ”நல்ல” தமிழ் வார்த்தைகளை மனதிற்குள் போட்டுக் கொண்டு ‘எவண்டா இந்த ஒளிப்பதிவாளர்” என்று நினைத்துக் கொண்டே படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டு, இடைவேளையில் வேகமாக வெளியே வந்து அங்கிருந்த போஸ்டர்களைத் தேடி ஓடினேன். பாலு மகேந்திரா. அதற்கு முன்பும் எனக்கு அவரைத் தெரிந்திருந்தாலும் அன்று அவர் அடிமையானேன்.


 இந்த நிகழ்வும் எனக்கு மே.தொ.ம. படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது.





*

No comments:

Post a Comment