*
எனது ஆராய்ச்சிப் படிப்பின் ஆரம்பத்தில் எனக்கு மிகவும் இளம் வயது. அப்போது நான் இளைய மற்றும் முதிய ஆதிவாசி மக்களோடு நெருங்கிப் பழகி வந்தேன். அவர்களது மொழியான துர்வா எனக்குக் கைவசமானது. அவர்களது கிராமிய சமூக வாழ்வும், அதிலிருந்த பல நுண்ணிய விஷயங்களும் எனக்குத் தெரியவந்தன. எனக்கு மிகவும் பிடித்த மகிழ்ச்சியான, உற்சாகமான காலகட்டம் அது. நான் சிரித்து மகிழ்ந்த காலமும்கூட. .... அங்கிருந்த பெண்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அதிகமாகக் கிடைத்தது. ... அவர்கள் வாழ்வியலை உடனிருந்து தெரிந்து கொண்டேன். பகலில் அவர்களோடு இருந்துவிட்டு மாலையில் வீடு திரும்புவேன். பௌர்ணமி இரவுகளில் மெல்லிய ஒளியில் சுற்றி இருக்கும் வயல் வெளிகளைக் கண்டு மகிழ்வேன். அந்த ஒளியில் கதிர்களைத் தாங்கி நிற்கும் பயிர்களைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
******
காலை 11 மணி. அதற்குள் அந்தக் கிராமத்திலிருந்த எழுபது மண் வீடுகளும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டு, நெருப்பு மூட்டப்பட்டன. ஆடிய ஆட்டத்தில் அந்தப் படையாட்கள் களைப்படைந்து விட்டனர். தலைவர் போதுமென்றார். படையாட்கள் எரிந்துகொண்டிருந்த குடிசைகளைத் தாண்டி ஓரிடத்தில் சமைக்க ஆரம்பித்தனர். கைப்பற்றிய அரிசி சமைக்கப்பட்டது. ஓடித் திரிந்த கோழிகள் அவர்களுக்கு விருந்தாகின. உணவு தயாராகி, அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். மணி மாலை இரண்டு. இனி அடுத்த கிராமம் அவர்களது இலக்கு.
எரிந்த கிராமத்தில் தரை மட்டமாகிப் போன இடங்களில் புற்களும் பூண்டுகளும் முளைக்கத் தொடங்கின. பாதைகள் மறைந்து போயின. காடு மெல்ல கிராமத்திற்குள் நுழைந்து மண்டியது.
ஒரு கிராமம் எவ்விதத் தடயமும் இன்றி அழிந்துபோனது.
******
சார்கோவன்-கொண்டாபக்கா-ஹஹாலடி குன்றுகள், ராவோகாத் ஆகியவை வடக்குப் பக்கமாகவும், பைலாடில்வா மலைப் பகுதி தெற்கிலும் உள்ளன. இம்மலைப் பகுதிகளில்தான் இரும்பு தாதுப் பொருட்கள் நிறைந்து, நம் நாட்டின் ஆன்மாவைத் தன் பக்கம் சுண்டி இழுக்கிறது. இதன் மனித மாண்புகள் சிதைக்கப்படுகின்றன. காலத்தால் முந்திய இப்பகுதி இன்று ஒரு வேட்டைக் காடாக மாறி நிற்கிறது.
******
ஆதிவாசிகளுக்காக அரசு பிறப்பித்த பல திட்டங்களைத் தங்கள் சுய லாபத்துக்கே பயன்படுத்தி வந்தனர். இப்பகுதியில் உள்ள அரசின் வன இலாகா காவலர்களும், பட்வாரி என்றழைக்கப்படும் வரி வசூலிப்போரும் ஆதிவாசிகளிடமிருந்து அவர்களுடைய உழைப்பையோ அல்லது அவர்கள் வளர்க்கும் கோழிகளையோ ஏமாற்றிப் பெறும் வழக்கம் அதிகமாக இருந்து வந்தது.
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களின் உழைப்பால் இது ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டது.
******
காவலர் ஒருவர் கிராமத்துக்குள் நுழையும்போது கிராமத்தின் மூத்தவர்களுக்கு ஏற்படும் அச்சமும், மயான அமைதியும் பயங்கரமானவை.
******
புரட்சிக்கான எதிர்வினைகளின் பட்டியல்
எதிர் நடவடிக்கை பற்றிய கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது? எரியும் மெழுகுவர்த்தியிலிருந்து ஆரம்பிப்பதா அல்லது அந்த ஒளியை அணைக்கும் குப்பியை வைத்து ஆரம்பிப்பதா? கனவுகளிலிருந்து ஆரம்பிக்கவா அல்லது கனவுகள் முடியும் மரணத்திலிருந்து ஆரம்பிப்பதா? பச்சை பசும் காட்டிலிருந்து ஆரம்பிக்கவா அல்லது உருகி, பின் உறைந்து நிற்கும் கடும் இரும்புத் தூணிலிருந்து ஆரம்பிக்கவா?
******
கொலைகளுக்கு வரம்பு ஏதுமில்லை. ஆணோ பெண்ணோ குழந்தைகளோ, கண்ணில் பட்ட அனைவரும் கொல்லப்பட்டனர். பெண்களின் நிலை இன்னும் மோசம். கொடூரமான பாலியல் பலாத்காரங்கள் கணக்கிலடங்காதவை. இதற்கான எதிர்வினையாக பல ஜுதும் தலைவர்கள் மாவோயிஸ்டுகளால் குறி வைக்கப்பட்டனர்
*******
போர் மேகங்கள் எங்கும் கறுத்து இருண்டு பரவியிருந்தன. சாலைகள், காடுகள், பள்ளிகள், மின்சார மின்மாறிகள், தண்ணீர்க் குழாய்கள் என்று அனைத்தும் ஒட்டுமொத்தாக நிர்மூலமாக்கப்பட்டன. அரசு காடுகளை அழித்து சாலைகளை நிறுவியது. ஆனால், மாவோயிஸ்டுகள் இரவுகளில் கிராமத்து மக்களை வைத்துப் புதிதாகப் போடப்பட்ட சாலைகளின் குறுக்கே பள்ளங்கள் தோண்டி அவற்றைப் பயன்படுத்தமுடியாத நிலைக்குக் கொண்டுசென்றனர்.
******
*
நறுக்குகளாக பத்திகளைப் பகிரும் விதம் அருமை.
ReplyDelete