Sunday, November 08, 2020

1132. அம்பேத்கர், காந்தி, ஜின்னா ...



*

ஜின்னாவின் வாழ்க்கை பற்றிய நூலொன்றை மொழிபெயர்த்துள்ளேன். விரைவில் வெளிவர இருக்கிறது. ஏற்கெனவே "அம்பேத்கரின் உலகம்" என்ற நூலை மொழிபெயர்த்து, விற்பனைக்கு வந்து இப்போது இரண்டாம் பதிவாக வர இருக்கிறது.

இந்த இரு நூல்களிலும் இவ்விரண்டு வரலாற்றுப் பெரியவர்கள் இருவருமே காந்தியை ஏறத்தாழ ஒரே மாதிரி கணித்து வைத்திருப்பதாகப் பார்க்கிறேன். அரசியல் போட்டி … அதனால் எப்படி இருக்கலாம் … என்றும் சிலர் சொல்கிறார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம்.

இந்து மதம் என்ற பெயர் ஆங்கிலேயர்கள் காலத்தில் மக்கள் கணக்கெடுக்கின் போது இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம், புத்தம், ஜைனம் … போன்ற சிறுபான்மை மக்களைத் தவிர பிற அனைத்து மக்களையும் ஒரே கூட்டாகப் போட்டு பெரும்பான்மை மக்களை இந்து மதத்திற்குள் “அடைத்து” விட்டார்கள். இன்றும் நம் கிராமத்து மக்களுக்கு பிராமணிய இந்து மதத்தையும் விட குல தெய்வ வழிபாடு - அதாவது, முன்னோர்களை வழிபடுதல் - மட்டுமே முக்கிய பழக்கமாக உள்ளது.

இஸ்லாம், கிறித்துவ மதங்களின் வேத நூல்களை வைத்தும், அவர்களது நம்பிக்கைகளையும் வைத்து எனது கருத்துகளை என் நூலான ‘மதங்களும், சில விவாதங்களும்…’ என்ற நூலில் எழுதியுள்ளேன். ஆனால் இந்து மதம் பற்றிப் பேசும்போது முக்கியமாக நான் எடுத்துக் கொண்ட விஷயம் - சனாதன தர்மம் என்ற தலைப்பில் சாதிய வேறுபாடுகளைக் கட்டிக் காத்து வருவது பற்றியே. எத்தனை பெரிய மனிதர்கள் வந்தாலும், சமூகச் சீர்திருத்தவாதிகள் வந்தாலும் நமது நாட்டில் சாதி வேறுபாடுகள் அழியாது. ஏனெனில் அவை மதங்களோடு இணைக்கப்பட்டு நம்பிக்கைகளோடு பிணைக்கப்பட்டதால் அவைகளை மக்களிடமிருந்து பிரிப்பது கடினம் … கடினம் என்பதை விட முடியாத ஒன்று என்று சொல்வதே சரி.

இப்படிப்பட்ட சாதி வேற்றுமைகளை காந்தி கட்டிக் காக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார் என்பதை (ப்ளாக் உலகத்திற்குள் வந்த பிறகு) அறிந்த போது அவர் மேலிருந்த மரியாதை பெருமளவு குறைந்து விட்டது.  தீண்டாமை வேண்டாம் என்கிறார் … ஆனால் சாதியக் கட்டுகள் இருக்க வேண்டும்; அதுவே இந்து மதத்தைக் கட்டிக் காக்கும் என்கிறார். தொட்டிலை ஆட்டிக் கொண்டு … அந்தக் கதை தான் நினைவுக்கு வருகிறது. எது வேஷம் … எது உண்மை? தெரியவில்லை.

ஜின்னா மதத்தை அரசியலில் கலக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவர் பின்னாளில் அரசியல் சதுராட்டங்களால் மதத்தின் பக்கம் சாய்ந்தார். அவர் காந்தியிடம் அரசியல் தோல்வி கண்ட பிறகே இந்த மாற்றம் நடந்தது என்றறிகிறேன். ஏனெனில் காந்தி இந்து மதத்தை மக்களுக்கு பிடித்த வகையில் கையாண்டுள்ளார். அவரது அரசியல் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணமாகி விட்டது.

அம்பேத்கர் ”இந்து மதத்தில் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்றார். காரணம் தாழ்ந்த சாதியினராகப் பிறந்து, அவமானத்தில் உழன்றதால் ஏற்பட்ட கசப்பு அது. இந்து மதம் சாதி வேற்றுமைகளை எப்போதும் நீட்டித்துக் காத்திருக்கும். அம்மதமே பிறப்பால் மக்களைப் பிரித்து அவர்களைப் பல படிநிலைகளில் வைத்திருக்கும் என்பதாலேயே வேறு மதத்திற்கு மாற முடிவெடுத்தது மட்டுமின்றி அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களும் அதையே பின்பற்ற வழிகாட்டினார்.

இதில் காந்தியின் நிலைப்பாடு எனக்கும் ஒரு கேள்விக்குரியதாகி விடுகிறது.


*
பல ஆண்டுகளுக்கு முன்னால் வலைப்பூக்களில் இது பற்றிய விவாதம் ஒன்று நடந்தது. அதில் கூறப்பட்ட ஒரு கருத்து: இந்து மதமும் ஒரு சிறுபான்மை மதம் தான். ஏனெனில் அது ஒரு பிராமணிய மதம்; அந்த சாதியினரின் மதம். ஏனைய சாதியினர் தங்கள் பழைய குலதெய்வ வழிபாட்டிற்கு முழுமையாகத் திரும்ப வேண்டும்; இந்து மதத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று நண்பர் ஒருவர் எழுதினார். சூடான விவாதங்கள் எழுந்தன. இந்து நண்பர்களில் பலர் இக்கருத்தை எதிர்த்தும் நிறைய எழுதினர்.  ஒன்று புரிந்தது - உலகில் எதில் வேண்டுமானாலும் மாற்றம் கொண்டுவரலாம்; ஆனால் மதங்களிலும், மத நம்பிக்கைகளிலும் அதைக் கொண்டு வருவது ‘பிரம்மப் பிரயத்தனம்’ தான்! (கிறித்துவ மதத்தில் நடந்த மாற்றம் மட்டும் - கத்தோலிக்கம் & பிரிவினைக் கிறித்துவம் -Catholics & Protestants - மட்டும் ஒரு விதி விலக்கு போலும். )

*

இதையும் வாசித்துப் பாருங்கள். ஆமாம்... கமல் பிக் பாஸில் சென்ற வாரம் அறிமுகப்படுத்திய பேரா. தொ.பரமசிவம் எழுதிய நூலிலிருந்து நான் கொடுத்த சில மேற்கோள்கள்:





*


No comments:

Post a Comment