Sunday, September 05, 2021

1199. ஆசிரியர் தின பதிவு



*

எப்படியும் பத்து படிகளாவது இருக்கும். இப்போது அந்தக் கட்டிடம் இல்லை. புனித மரியன்னை கோவிலுக்குப் பின்புறம் தனியாக ஒரு கட்டிடம் நின்றது. கிழக்குப் பக்க வாயில். அதில் தான் இத்தனை படிகள் ஏறி வகுப்பிற்குள் போக வேண்டும். (வடக்குப் பக்கத்து வாயிலுக்கு நாலைந்து படிகள் மட்டும் இருந்தது. அங்குதான் பின்னாளில் கத்தோலிக்க இளைஞர் மன்றம் இருந்தது. எப்படி ஒரு பக்கம் 10 படிகள் ..இன்னொரு பக்கம் நாலைந்து படிகள் என்று “அந்தக் காலத்திலிருந்து” யோசித்துக் கொண்டிருக்கிறேன்.)

அப்பா கைப்பிடித்து அழைத்துக் கொண்டு படிகளில் ஏறியது நினைவில் நிற்கிறது. படியேறி போனதும் மாணிக்கம் சார் எங்களை (அப்பாவை) சிரித்துக் கொண்டே வரவேற்றார். இப்போதும் நினைவில் நிற்பது மாணிக்கம் சாரின் சிரித்த முகம் தான். எப்போதும் அந்த சிரிப்பை அவர் உதடுகளில் காணலாம்.

அப்பாவிற்கு சாரை நன்கு தெரியும். அதனால் எனக்கு படிக்கத் தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு அதிர்ஷ்டம் கிடைத்தது. அங்கு மாணவர்கள் உட்கார குட்டி பெஞ்ச் போட்டிருந்தார்கள். முதல் பெஞ்ச் மட்டும் ‘சாய்மான பெஞ்ச்’. மாணிக்கம் சார் என்னிடம் எங்க உட்கார்கிறாய்? என்று கேட்டார். மெல்ல சாஞ்சுகிட்டே படிக்கலாமே என்று ஓர் உயர்ந்த நினைப்பில் அந்த பெஞ்சைக் கை காட்டினேன். பாவம் …யாரோ ஒரு மாணவனை அங்கிருந்த பெஞ்சில் இருந்து காலி பண்ணி விட்டு எனக்கு இடம் கொடுத்தார். (என்னவொரு அதிகார ஆக்கிரமிப்பு!!)

ஆனால் படிக்க எளிய வழியை நான் பார்த்தேன். ஆனால் பின்னே போன மாணவனுக்கு இதனால் மனதிற்குள் ஒர் வெறி எழுந்து (என்னை மாதிரி இல்லாமல்) நன்றாகப் படித்து நிச்சயமாக பெரிய ஆளாக எழுந்திருந்திருப்பான் என்றே நம்புகிறேன்.

அது ஏனோ 2,3,4ம் வகுப்பு ஆசிரியர்கள் சுத்தமாக மறந்து போய் விட்டார்கள். ஆனால் முதல் வகுப்பு மாணிக்கம் சாரும், ஐந்தாம் வகுப்பு லூக்காஸ் சாரும் எப்போதும் நினைவில் நிலைத்து நின்று விட்டார்கள்.

 

பி.கு. லூக்காஸ் சார் பற்றி இங்கு வாசிங்களேன். -  





*




1 comment: