Tuesday, September 04, 2012

590. ராஜா .. காணாமல் போகலை; இல்லாமல் போய்ட்டான்...3

*

*
”அதீதம்”  இணைய இதழின் ..

செப்டம்பர் முதலிதழில் பதியப்பட்ட கட்டுரை.

*
ராஜா  .. காணாமல் போகலை;  
இல்லாமல் போய்ட்டான்.1954-ல் ……………..


நாங்கள் படிக்கிற காலத்தில் எங்கள் பள்ளியிலேயே இங்கிலிபீசு மீடியம் என்ற பாடத்திட்டம் ஏதும் கிடையாது. ஆறாம் வகுப்பு - அப்போ அதற்குப் பெயர் I Form - வரும்போது தான் A .. B.. C.. D எல்லாம் சொல்லித் தருவார்கள். ஆனால் நான் படிச்சது ஐந்தாம் வகுப்பு A பிரிவு. நல்லா படிக்கிற பசங்களுக்கான வகுப்பு என்று பள்ளிக்கூடத்தில் பெயர். அதனால் தானோ என்னவோ நாங்கள் ஐந்தாம் வகுப்பின் கடைசியிலேயே எங்களுக்கு A .. B.. C.. D  சொல்லிக் கொடுத்தார்கள். father, mother, brother sister ... இதெல்லாம் சொல்லிக் கொடுத்தார்கள். நாங்களும் மற்ற க்ளாஸ் பசங்க கிட்ட இதையெல்லாம் சொல்லி பெருமைப்பட்டுக்கிட்டோம். What is your name? What is your father's name? எம்புட்டு எம்புட்டு படிச்சோம்! மத்த பசங்களுக்கு நிச்சயம் காது வழி புகை வந்திருக்கணும்.

என் ஐந்தாம் க்ளாஸ் வாத்தியார் லூக்காஸ்.  நல்ல உயரம்; பயங்கர ஒல்லி; எப்பவும் சிரிச்ச முகம். தோள்பட்டை லேசா தூக்கி இருக்கும். அதனால் அவர் ரொம்ப வித்தியாசமா தோன்றுவார். என் மேலே அவருக்கு ரொம்ப பிரியம். பசங்களை அடிக்க வகுப்பு ஓரத்தில் ஒரு பிரம்பு வைத்திருப்பார். பசங்களை அடிக்க வேண்டுமானால் அந்த பிரம்பை என்னைத் தான்  எடுத்துத் தரச் சொல்வார். அதுவே ஒரு பெரிய கிரடிட். சில பசங்களுக்கு பொறாமையும் கூட. ஆனால் பிரம்பை எடுத்துக் கொடுக்கும் எனக்கே அந்த பிரம்பாலேயே ஒரு நாள் நல்லா அடிபட்டேன். அப்படி என்ன தப்பு செஞ்சி அடிவாங்கினேன்னு தெரிஞ்சுக்கணுமா ....  அந்தக் காலத்தில டிக்டேஷன் சொல்லுவாங்க .. அத நாங்க எங்க ஸ்லேட்ல எழுதணும். அதுக்குப் பிறகு வாத்தியார் தப்பு திருத்துவார். அப்போ ஸ்லேட்ல ஒரு பக்கத்துக்கு ரெண்டு தப்பு அனுமதி. அதுக்கு மேல இருந்தா பிரம்படி தப்பு எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி அடிக்கணக்கு உண்டு. நான்  இந்த தமிழ் டிக்டேஷனில் அடி வாங்கியது இல்லை. அதனால தான் பிரமபை எடுத்துக் கொடுக்கிற வேலையைக் கூட எங்க வாத்தியார் எனக்குக் கொடுத்திருந்தார். ஆனால் நானும் ஒரு நாள் ஓங்கி சில அடிகள் வாங்கினேன். அப்படி ஒரு பெரிய தப்பு ப்ண்ணிட்டேன். என்னது ... என்ன தப்புன்னு தெரியணுமா? அப்போ கொஞ்சம் அங்கே போய்ட்டு வாங்க. விவரம் அங்கதான் இருக்கு! 

சரி .. அடி வாங்கின அந்த ஒரு நாளை விட்டுருவோம். அதைத் தவிர நான் தமிழ் டிக்டேஷனில் தப்பு வாங்கினதில்லையல்லவா ... அதனால் வாத்தியார் பிரம்பை எடுத்துத் தரும் prestigious வேலையை எனக்குக் கொடுத்திருந்தார். அது மட்டுமல்லாமல் அவர் வகுப்பு எடுக்கும் போது சில பகுதிகளை வாசிக்க என்னைக் கூப்பிடுவார். நான் போய் அவர் மேசைக்குப் பக்கத்தில் போய் அந்தப் பகுதிகளை வாசிக்கணும். பசங்க மனசுல இதெல்லாம் ஒரு உறுத்தலா இருந்துச்சோ என்னமோ... ஆனால் ஒரு நாள் ஒரு மாணவன் ஆசிரியருக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினான்.

அவன் பெயர் ராஜா. பெரிய பையனாக இருப்பான். அவனுக்குப் பிறவியிலேயே ஒரு குறை உண்டு. அவனது கண் இமைகள் நம்மைப் போல் திறந்து குறுகாது. அவை எப்போதுமே முக்கால் வாசி மூடியே இருக்கும். சிறு பாகம் வழியாகத்தான் அவனால் பார்க்க முடியும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது அவனுக்குப் பார்வையில் கோளாறு ஏதுமில்லை. ஆனாலும் இந்தக் குறையினால் அவனுக்குப் பட்டப் பெயரெல்லாம் வைத்திருந்தார்கள். அந்தப் பெயரைச் சொன்னதும் சண்டைக்குப் போவான். பெரிய பையன் என்பதால் எல்லோருக்குமே அவனிடம் ஒரு பயம் உண்டு.  உயர்நிலைப்பள்ளிக்குச் சென்ற பின் ஒவ்வொரு வருஷமும் இந்தக் கோடை விடுமுறையில் கண்ணுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப் போகிறேன் என்று வழக்கமாக பல ஆண்டுகள் சொல்லி வந்தான்.ஆனால் கடைசி வரை அப்படியேதும் செய்யவில்லை.

அவன் ஒரு நாள் லூக்காஸ் வாத்தியாரிடம், ‘ஏன் சார் .. எப்பவும் ஜார்ஜை மட்டும் வாசிக்கக் கூப்பிடுகிறீர்கள்?’ என்றான். துணிச்சல்காரப் பயல் தான்.  

லூக்காஸ்,  ‘அவன் ஒழுங்காக வாசிப்பான்; அதனால் தான்என்றார்.  

நானும் நல்லா வாசிப்பேன். வேணும்னா அவனோடு போட்டி வச்சிக்கிறேன்’. 

ஆகா ... வச்சிக்கலாமேஎன்றார் லூக்காஸ்.

அவரே போட்டியும் விதிகளையும் சொன்னார். அவரது மேசைக்குப் பக்கத்தில் நாங்கள் இருவரும் ஆளுக்கொரு பக்கம் நிற்க வேண்டும். நடுவில் அவர் இருந்து ஒரே சமயத்தில் முதுகில் தட்டுவார். ஒருவன் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். அவரது அடுத்த தட்டில் வாசிப்பவன் நிறுத்த, அடுத்தவன் வாசிக்க ஆரம்பிக்கணும். நடுவில் திக்கல், தவறுகள் இருந்தால் மதிப்பெண் குறைவு. இந்தத் தப்புகளை முன் பெஞ்சில் சில மாணவர்களை வைத்துக் குறித்துக் கொள்ளலாம் என்றார். யாருக்கு குறைந்த தப்புகள் இருக்கின்றனவோ அவன் தான் வின்னர் என்றார்.

எனக்குக் கொஞ்சம் பயம் தான். இருந்தாலும் சரியென்று சொல்லி விட்டேன். ராஜா அதோடு விடுவானா?  போட்டிக்கு நாங்கள் இருவரும்  பந்தயம் கட்டணும் என்றான். அவனே பந்தயப் பணத்தையும் சொன்னான். ஆளுக்கு ஓரணா பந்தயம் என்றான். அப்போ ஒரு அணா அப்டின்னா அது பெரிய காசு. நமக்கேது அம்புட்டு பாக்கெட் மணி. என்னால முடியாதுன்னேன். அப்போ இரண்டு நண்பர்கள். எனக்கு உதவி செய்வதாகச் சொன்னார்கள். அனேகமாக அவர்கள் பெயர் வெற்றிவேல்,. கதிரேசன் என்று நினைக்கிறேன். வெற்றிவேல் அழகாக, கருப்பாக என் உயரத்தில் இருப்பான். கதிரேசன் ஒல்லியான உயரமான பையன். பாவம் அவர்கள்! வாழ்க்கையில் அப்பவே அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்தார்கள். அவ்ர்கள் இருவரும் எனக்காக ஓரணா ஆசிரியரிடம் கொடுத்தார்கள்.

சார் முன் பெஞ்சில் நாலைந்து மாணவர்களை உட்காரவைத்து அவர்களிடம் எப்படி தப்புகளைக் குறிப்பது என்றெல்லாம் சொல்லிக் கொடுத்து தயாராக்கினார். வெற்றிவேல்,. கதிரேசன் இருவரும் ஜட்ஜாக இருக்க்க் கூடாது என்றும் சொல்லி விட்டார்.  வகுப்பே களை கட்டி இருந்தது. போட்டி ஆரம்பித்தது. பாடப் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி. இருவரும் வாசித்தோம். தவறுகள் குறிக்கப்பட்டன. போட்டி முடிவடைந்தது. ஜட்ஜூகள் ஆசிரியரின் மேசைக்கு பக்கத்தில் அழைக்கப்பட்டார்கள். நாங்கள் எங்கள் இடத்திற்கு வந்து விட்டோம். ஜட்ஜுகள் கணக்குப்படி எங்கள் தப்புகள், தடுமாற்றங்கள் எல்லாம் கணக்கிடப்பட்டன.
பயத்தோடு இருந்தேன். ஆனாலும் வெற்றி எனக்குத்தான்என்று  ஆசிரியர் சொன்னது தெரிந்தது. வகுப்பில் எனக்காக ஒரு கை தட்டல் இருந்தது. அந்தக் காலத்தில் நமக்கு சப்போர்ட் பண்ணக் கூட ஆள் இருந்திருக்கு! ராஜா ரொம்ப ஜென்டிலாக முன் வந்தான். எனக்குத் தெரியாத  மரியாதையெல்லாம் அவனுக்குத் தெரிந்திருந்தது. கை கொடுத்தான். பந்தயக் காசு ஓரணாவை வாத்தியாரிடம் இருவருமே கொடுத்திருந்தோம். சார் அதில் ஓரணாவை என்னிடம் ராஜாவைக் கொடுக்கச் சொன்னார். இன்னொரு ஓரணாவை எனது பைனான்சியர்களிடம்’  திருப்பிக் கொடுத்தார். அதிலும் ஒரு சிக்கல் வந்தது. பைனான்சியர்கள்என் பந்தயக் காசில் பங்கு கேட்டார்கள். சார் தீர்ப்பு சொல்லிட்டார்: அந்தக் காசு அவனுக்கு மட்டும் தான்’. ராஜாவிடம் சார் கேட்டார்: என்னடா ... இனிமே அவனையே வாசிக்கச் சொல்லட்டுமா?’ என்று கேட்டார். ராஜா உற்சாகமாக சரி என்றான்.

படிப்பில் நான் ஜெயிச்ச ஒரே நிகழ்வு இது ஒன்றுதான் என நினைக்கிறேன்.

அதன் பின் ராஜா ஒரே பள்ளியில் இருந்தாலும் வேற வேற செக்‌ஷன். நல்ல பெரிய உருவமாக வளர்ந்தான். கொஞ்சம் முரட்டுப் பையலாகவே தெரிந்தான். அவன் கண்ணை வைத்துப் பலரும் அவனைக் கேலி செய்வதுண்டு. அவர்களிடம் முரட்டுத்தனமாக இருந்தான்.ஆனால் உண்மையிலேயே அவன் பயங்கர சாப்ட் என்பது எனக்கு 29 வயதிற்குப் பிறகுதான் தெரிந்தது.  அதாவது என் மாமனார் வீட்டிற்கு பக்கத்தில் தான் அவன் இருந்தான். என் மாமனாருக்கு அவன் ஒரு நண்பன் மாதிரி. முரட்டுத்தனமா  ஒரு மீசை வைத்திருப்பான்.பெரிய மீசை. முனைகள் பிரஷ் மாதிரி பெருசா கன்னத்தை மூடியிருக்கும். என் முதல் மகள் அவனைப் பார்க்கும் போதெல்லாம் முதலில் கத்தினாள். சில நாட்களில் இருவரும் பயங்கர நண்பர்களாகி விட்டார்கள், மீசையை வைத்தே அவளைச் சிரிப்பு மூட்டுவான். அவளுக்கு அது ஒரு பெரிய விளையாட்டாகிப் போனது.  

அவன் கண்கள் சிறு வயதிலேயே தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டன. பள்ளிப் படிப்பு முடியும் வரை அதிகமாக ஏதும் இல்லை. அதன் பின் பார்வை குறைய ஆரம்பித்து விட்டது. எதையும் கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் பார்த்தால் தான் தெரியும். கண்ணாடி போட்டுக்கோ என்று எல்லோரும் வற்புறுத்துவோம். ஆனால் கடைசி வரை போட்டுக் கொள்ளவேயில்லை. என் திருமணத்திற்கு முன் நாங்கள் அவ்வப்போது பார்த்துக் கொண்டது உண்டு. ஆனால் அதிகமாக நட்பு பாராட்டியதில்லை. அதன் பின் அடிக்கடி சந்திப்பதுண்டு. எங்கள் போட்டியை எனக்கு முழுவதுமாக நினைவு படுத்தியதே அவன்தான். நாங்கள் அன்று போட்டியில் வாங்கிய மதிப்பெண்களில் என்னைவிட அவன் இரு மடங்கு தப்புகள் செய்ததாகச் சொன்னான். உண்மை என்னவோ .. சும்மா என்னைத் தூக்கி வைப்பதற்காகக் கூட சொல்லியிருப்பான். பயல் அப்படிப்பட்டவன். என் மாமனார் வீட்டில் வைத்து இதைச் சொல்லி என்னைப் பெருமைப்படுத்துவது அவனுக்கு மிகப் பிடித்த ஒன்று. கொஞ்ச நாள் என்னை கேரம் விளையாட ஒரு கிளப்பிற்கு அழைத்துச் செல்வான். கண் பார்வையில் கோளாறு இருந்தும் அவன் மிக நன்றாக விளையாடுவான். செஞ்சுரி போடுறதெல்லாம் அவனுக்கு எளிது. 

அவன் திருமணமாகாத அக்காவிற்குத் துணையாக இருக்க வேண்டுமென்று திருமணமே வேண்டாமென்றிருந்து விட்டான். எல்லோருக்கும் உதவுவதில் மன்னன். யாருக்காகவும் எங்கே வேண்டுமானாலும் அலைந்து கஷ்டப்பட் தயாராக இருப்பான். என் மாமனாரின் கடைசி காலத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தான். மருத்துவ மனையில் எல்லோரையும் போகச் சொல்லிவிட்டு இரவில் அவரோடு இருந்து நன்கு கவனித்துக் கொண்டான். அவருக்கும் அவன் இருப்பதே பிடித்தது. மாமனார் காலத்திற்குப் பிறகு எப்போதாவது அவனிடமிருந்து தொலை பேசி வரும். பேசிக் கொள்வோம்.

அறுபதை நாங்கள் எட்டிப் பிடித்த பின் எப்போதாவது பார்த்துக் கொள்வோம். பெரிய உருவம். திடகாத்திரமான உடம்பு. பெரிய மீசை. ஆனால் ஐம்பதுகளிலேயே சர்க்கரை வியாதி. அறுபதுகளின் ஆரம்பத்தில் அவனது பழைய தோரணை ஏதுமில்லாமல் போய் விட்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் திடீரென்று போய்ச்சேர்ந்திட்டான் என்ற செய்தி சில நாட்கள் கழித்து வந்து சேர்ந்தது..
*


* 

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ராஜாவை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்... இப்போது இல்லை என்று நினைக்கும் போது மனம் சங்கடப்படுகிறது...

ராஜா... இருக்கும் வரை ராஜாவாகத் தான் இருந்திருக்கிறார்...

ராமலக்ஷ்மி said...

/ எல்லோருக்கும் உதவுவதில் மன்னன். யாருக்காகவும் எங்கே வேண்டுமானாலும் அலைந்து கஷ்டப்பட் தயாராக இருப்பான்./

நல்ல மனிதர் நண்பர் ராஜா.

ஜெயித்த பந்தயம் சுவாரஸ்ய அனுபவம்:)!

Rasan said...

ராஜா என்ற அருமையான மனிதரை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. தன் சகோதரிக்காக திருமணம் செய்து கொள்ளாமால் பல பேருக்கு உதவும் குணம் பெற்று இருந்தார் என்றீர்கள். இக்காலத்தில் இதுமாதிரி யார் உள்ளர்?

என்னுடைய தளத்தில்

தன்னம்பிக்கை -3

தன்னம்பிக்கை -2

சார்வாகன் said...

வணக்கம் அய்யா,
நட்பு என்பது மறக்க முடியா விடயம். அத்னை இழப்பது பெரும் சோகமே. வருந்துகிறேன்.
****

ஆசிரியர் தினத்துக்கு பதிவு போடுவீர்கள் என பார்த்தால் ??????

சரி சரி!!!

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் அய்யா!!!

நன்றி

Jenil said...

He will live in this post forever :)

தருமி said...

சார்ஸ்,

//ஆசிரியர் தினத்துக்கு பதிவு போடுவீர்கள் என பார்த்தால் ??????
//

அதுதான் லூக்காஸ் வாத்தியார் ஞாபகமா இந்த பதிவு போட்டிருக்கோம்ல ...!

delphine said...

well narrated...
"So long as the memory of certain beloved friends lives in my heart, I shall say that life is good". ~by Helen Keller

delphine said...

well narrated...
"So long as the memory of certain beloved friends lives in my heart, I shall say that life is good". ~by Helen Keller

ராஜ நடராஜன் said...

மறுபடியும் மலரும் துயர நினைவுகளா!

ஆசிரியர்களையே மறந்தாச்சு.அது போலவே ஆசிரியர் தினம் என்பதும் கூட சகோ.சார்வாகன் சொல்லித்தான் தெரியும்.பின்னூட்டத்திலாவது நினைத்துக்கொள்கிறேன்.

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

தருமி said...

ராஜ நடராஜன்

வாழ்த்துகளுக்கு நன்றி

சதீஷ் செல்லதுரை said...

உங்களுக்கு அடுத்த தலைமுறை?மூனாப்புல a b c d பள்ளிகூட மணி அடிக்க நானும் வெங்கட்டுன்னு ஒரு பையனும் போட்டி போடுவோம்...ரிவர்ஸ் கியரை தட்டி விட்டுடீங்க..

Post a Comment