இப்போதுதான்
ஆரம்பித்தது போலிருந்தது ... அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.வழக்கம் போல்
ப்ரேசில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆவலோடு ஆரம்பித்து வேறு நாடு வென்றது. அதிலும்
அர்ஜென்டினா வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியே.
எப்படி
நேற்றைய இறுதிப் போட்டி இருந்தது என்று உலகத்தில் அனைவருக்கும் தெரிந்ததாகி
விட்டதால் அந்த ஆட்டத்தைப் பற்றி எதுவும் பேசப் போவதுமில்லை; தேவையுமில்லை.
ஆனால் பாவம் ... யாராவது கால்பந்தில் சிறிதேனும் ஆர்வம் உள்ளவர்கள் இருந்து, அவர்கள் நேற்றைய போட்டியைப் பார்க்காமல் தவற விட்டிருந்தால் அவர்களுக்கு
என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கலாமே என்று தான் இப்பதிவையிட நினைத்தேன். பாவம்
... அவர்கள் வாழ்வின் பொன்னான 90+30+ பெனல்ட்டிக்கான நேரம் (10 நிமிடம்
இருந்திருக்கலாமா?) 130 நிமிடங்களை அப்படியே முழுமையாக
இழந்து விட்டார்களே என்று தோன்றுகிறது. இனி அந்த ஆட்டத்தைத் திரும்பிப் பார்த்தாலும்
அதை நேற்று பார்த்தவர்களின் உணர்வில், கவலையில், ஆதங்கத்தில், எதிர்பார்ப்பில், அச்சத்தில் … நூற்றில் ஒரு பங்கைக் கூட அவர்களால் உணர
முடியவே முடியாது. என்ன பாவம் பண்ணினார்களோ .. அவர்களால் நாங்கள் – போட்டியைப்
பார்த்த புண்ணியவான்களான நாங்கள் – அனுபவித்த வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு
போட்டியை வினாடிக்கு வினாடி நாங்கள் பார்த்து “அனுபவித்தது” போல் அனுபவிக்க
முடியாது. முடிவுகள் வெளியான பின் இந்தப் போட்டியைப் பார்ப்பதில் எங்கள் “வாழ்நாள்
அனுபவம்” மாதிரி நிச்சயமாக இருக்க முடியவே முடியாது.
யாரோ
ஒரு நண்பர் எழுதியதை வாசித்தேன். கிறிஸ்டினா ரொனால்டோ இருப்பதால் பலருக்கு
போர்த்துகல் மீது ஆவல் இருக்கும்;
Mbappe (எனது மொழிபெயர்ப்பில் ம்பாப்பே!!) இருப்பதால் ப்ரான்ஸ் மீது
மக்களுக்கு ஈர்ப்பு இருக்கலாம். மெஸ்ஸி இருப்பதால் அர்ஜென்டினா மீது
அன்பிருக்கலாம். ஆனால் எப்போதும் நம்மால் நேசிக்கப்படுவது ப்ரேசில் மட்டும் தான்.
தனி நபர் என்று மட்டுமல்லாமல் எப்போதும் ப்ரேசிலை இந்தியர்கள் நேசிக்கிறார்கள்
என்று அவர் எழுதியிருந்தார். என்னைப் பொருத்தவரை இது முற்றிலும் உண்மையே. இன்னும்
கொஞ்சம் சேர்ப்பதென்றால், ப்ரேசில் இல்லாவிட்டால் அரைகுறை
மனத்தோடு அந்த இடத்தில் அர்ஜென்டினாவை வைப்பது வழக்கம் தான் என்று நினைக்கின்றேன்.
இதற்கான காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை நாம் எல்லோருமே தொலைக்காட்சி
மூலம் இந்தப் போட்டிகளைப் பார்க்க ஆரம்பித்த போதும், ஏன் .. அதற்கு
முன்பேயும், பீலே அவர்களைப்
பற்றி தெரிந்து கொண்டதால் ஏற்பட்ட ஒரு பந்தமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
அர்ஜென்டினாவில்
மெஸ்ஸி மட்டும் தான் இருக்கிறார்;
(ஆனால் எனக்கு அவரை விட left winger டி
மரியாவின் ஆட்டம் முதலிலிருந்தே பிடித்தது.) ஆனால் ப்ரான்ஸ் நாட்டு வீரர்களில்
பலரும் இளைஞர்கள். ஆகவே அதுவே நிச்சயமாக இறுதியில் வெல்லும் என்ற கணிப்பு
இருந்தது. அதாவது மூளை ப்ரான்ஸ் வெற்றி பெரும் என்று சொன்னாலும், இதயமோ அர்ஜென்டினாவிற்காகத் துடித்தது. அப்படிப்பட்டவர்களுக்கு நேற்றைய
ஆட்டம் ஒரு பெரிய, வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது.
முதல்
90 நிமிடங்களில் 80 நிமிடங்களுக்கு அர்ஜென்டினா கொடிகட்டிப் பறந்தனர். அதன் பின் எக்கச்சக்கமான
ஏற்ற இறக்கங்கள். தாங்க முடியவில்லை. ப்ரான்ஸ் சமன் செய்ததும் பேசாமல் படுத்துத்
தூங்கி விடலாமென நினைத்தேன். ஏனெனில் கால்பந்து விளையாட்டைப் பார்ப்பதில் இரண்டு
விஷயம் சுத்தமாகப் பிடிக்காது. முதல் விஷயம்,
அதென்னவோ ஆட்டக்காரர்களின் முகத்தை மட்டும் க்ளோசப்பில்
காண்பிக்கும் நேரம் பார்த்து, அவர்கள் எச்சில் துப்பித்
தொலைப்பார்கள். ..ஏதோ நம்மீதே விழுந்தது
போல் தோன்றும்; கஷ்டமாக இருக்கும்; பிடிக்காது.
(க்ரிக்கெட்டில் பந்தையே நக்கி எடுப்பார்களே அது போல் அத்தனை அசிங்கமாக
இல்லாவிட்டாலும், கால் பந்து விளையாட்டில் இது ஓர்
அருவருப்பான ஒன்று.) பிடிக்காத இன்னொன்று என்னவென்றால், பெனல்டி
மூலம் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது. இதை விட sudden death என்ற முறை எனக்குப் பிடித்தது. அதாவது 45 + 45 நிமிடம் விளையாடி
முடிவில்லாதிருந்தால், அடுத்து 15 +15 என்று மொத்தம் 120 நிமிடம் விளையாடியும் முடிவு
வராவிட்டால் இப்போது அடுத்து பெனல்டி கிக் என்பதே இப்போதைய முறை. ஆனால் sudden
death என்ற முறையில் 90 + 30 நிமிடங்களுக்குப் பிறகு இரு அணிகளும்
தொடர்ந்து விளையாட ஆரம்பிக்கும். எந்த அணி கோல் போடுகிறதோ அப்போது ஆட்டம்
முடிவிற்கு வந்து விடும். இதில் ஆட்டத்தின் வீரர்கள் அனைவரின் பங்கும் உண்டு. ஆனால்
பெனல்ட்டியில் ஏறத்தாழ முழுப் பொறுப்பும் இரண்டு வீரர்களின் மேல் மட்டுமே விழுகிறது
– கோல் கீப்பர் & பெனல்டி ஷாட் அடிப்பவர். அதிலு ஷாட் அடிப்பவர்
தவறு செய்து, அதனால் தோல்வி ஏற்பட்டால் ...பாவம் அந்த மனுஷன்...
அவரே தன்னை மன்னித்துக் கொள்ள முடியாது. வரலாற்றிலும் அவர் பெயர் பதிந்து விடுகிறது.
ஏறத்தாழ தோல்வியின்முழுப்பொறுப்பும் அவர் மேல் தான் ஏற்றி வைக்கப்படும். மெஸ்ஸி போலந்தோடு
விளையாடியபோது ஒரு பெனல்டி பந்தை வெளியே அடித்து விட்டார். ‘இவனெல்லாம்
பெரிய ஆட்டக்காரன் என்று பெயர்; ஆனால் ஒரு பெனல்டியைக் கூட ஒழுங்காக உள்ளே அடிக்கத் தெரியவில்லை’ ….
இது போன்ற வசுவுகள் அவர்கள் மீது பாயும். அதையும் விட என்னைப் பொறுத்த
வரை அந்த “ஒன்றுக்கு ஒன்று” என்று இருவர் மட்டும் மீது அத்தனை
சுமையை ஏற்றுவதை விட sudden death பரவாயில்லை என்று தோன்றுகிறது.
முன்பில் வழக்கிலிருந்ததை ஏன் மாற்றித் தொலைத்தார்களோ!?
விளையாட்டை
நேற்று பார்க்கும் போது தொலைக்காட்சியை அணைத்து விட்டுப் படுக்கப் போய் விடலாமா
என்று தோன்றியது. ஆனால் அர்ஜென்டினா வென்றதும் மிச்சம் மீதிக் காட்சிகளைச் சந்தோஷமாகப்
பார்க்கத் தோன்றியது.
ஆனால்
ம்பாப்பேவுடன் தரையில் உட்கார்ந்து ஆறுதல் சொன்ன பிரான்ஸ் நாட்டு அதிபரின் படம், மகா சோகத்துடன்
தன் பரிசை வாங்கிச் சென்ற ம்பாப்பேவைப் பார்த்த போது ஒன்று சொல்லத் தோன்றியது: ”அட
.. போப்பா ... உனக்கு இன்னும் நிறைய வயசிருக்கு. இந்த தடவை போனா அடுத்த தடவை பார்த்துக்கோ.” ( அதுவ்ரைபொழச்சிக் கிடக்கிறவங்க பார்த்துக்குவாங்க !!!)
No comments:
Post a Comment