Sunday, May 14, 2023

1220. இது ஆறாம் திணையோ ...?

                                     

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித்திணையில் வருமாமே? அப்படியென்றால் ஒரே ஊரில் நகரமும், கிராமியமும் இணைந்தால் அதன் பெயர் என்ன? ஏழ்மையும், வளமையும் அருகருகே அடுத்தடுத்து இருந்தால் அதன் பெயர் என்ன? நாடும் காடும் ஒரே தெருவில் அடுத்தடுத்து இருந்தால் அதன் பெயர் என்ன? ஆளே இல்லாத இடத்தில் பெரிய கடைகள் நடுநடுவே இருந்தால் அதன் பெயர்  என்ன? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

நாஞ்சில் நாட்டுக்கு ஒரு மருத்துவப் பயணம். தமிழ் நாடு- கேரளம் இரண்டும் இணையும் இடத்தில் – இப்படி சொல்லணுமா அல்லது இரண்டும் பிரியும் இடத்தில் – ஒரு சிற்றூர். மாலை நேரம். சற்றே நடக்கலாமென்று நேற்று ஒரு சாலையில் சென்றேன். சின்ன குறுகலான சாலை; ஆள் நடமாட்டம் மிகவும் குறைவு. ஆனால் எதிரும் புதிருமாக நிறைய வண்டிகள். அதனால் இன்று(13.5.23) சாலையை மாற்றி நடக்க ஆரம்பித்தேன். நீண்ட நெடும் பாதை. சிறிது ஏற்றமும் இறக்கமுமாக இருந்த சாலை.


பல வியப்புகள் ...

·         சாலையில் இருமருங்கிலும் தொடர்ந்து வீடுகள் இருந்தன. இருந்தும் ஆள் நடமாட்டம் அதிகமில்லை. இரு சக்கர வண்டிகள் மட்டும் பறந்து கொண்டிருந்தன. இப்போது தான் வாசித்த ஒரு செய்தி உண்மையெனத் தெரிந்தது. சில பெரிய வீடுகள் ஆளில்லாத வீடுகள் மாதிரி இருந்தன. இப்படிக் காலி வீடுகள் நிறைய கேரளாவில் இருப்பதாகவும் வெளிநாட்டுக்குக் குடியேறிவிட்டார்கள் எனவும் சமீபத்தில்  வாசித்திருந்தேன். வீடுகளைப் பார்த்த போது அச்செய்திதான் நினைவுக்கு வந்தது. இதில் ஆச்சரியப்பட வைத்த ஒன்றும் இருந்தது. பெரிய வீடுகள் .. அலங்கார வீடுகள். ஆனால் அடுத்த வீடு ஒரு ஓட்டைக் குடிசையாக இருந்தது. சாலைகள் மேடும் பள்ளமுமாக இருப்பது போல் மக்களும் ஏழ்மையும் வளமையும் மாறி மாறி இருந்தார்கள்.  இருண்ட ஒரு வீட்டின் முன் உட்கார்ந்திருந்த ஒரு வயதான் அம்மையார் என்னைக் கவர்ந்தார். படம் எடுக்க உத்தரவு வாங்கிப் படம் எடுத்தேன். மொழியில்லாமல் இருவரும் பேசிக்கொண்டோம்.

                                                                  



                                                                              



                                                                                                         


·         சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தபோது பார்த்த ஒரு அதிசயம்; இரு மருங்கிலும் வீடுகள். அதிகமாக மரங்கள் சூழ்ந்த வீடுகள். மாமரங்கள் காய்த்துத் தொங்கின. பலாமரங்கள் கைக்கெட்டும் அளவில் காய்த்துத் தொங்கின. சிறு வயதில் எங்காவது கண்ணில் படும் மாமரங்களில் அல்லது புளியமரங்களில் கல்லெறிந்து விரட்டுப்பட்ட நினைவு வந்தது. இங்கே யாரும் கல்லை விட்டு கூட அல்ல, எட்டியும் மாங்காயைப் பறிக்க மாட்டார்கள் போலும். நான் படமெடுத்த போது காய் பிடுங்கும் ஆவலைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டேன்.




·         வீடுகள் நிறைய உள்ள தெரு என்றால் அங்கு வீடுகளை மட்டும் தான் நாம் பார்க்க முடியும். ஆனால் வீடுகளின் நடுவே ஒரு காடும் இருக்கிறதே என்று வியப்போடு பார்த்தேன். அடுக்கடுக்காக நீள் வரிசையில் ஒரு பெரும் காட்டையும் அந்தத் தெருவில் பார்த்தேன். அடுத்த ஆச்சரியமாக அது இருந்தது.                                                                                     

                                                          


    



·         மரங்கள் அடர்ந்த காடு இருந்தது. ஆட்கள் அதிகமில்லாத வீடுகள் இருந்தன. ஆனால் அந்தத் தெருவில் அங்கங்கே பல கடைகள். ஒரு ரெடிமேட்  கடை; இன்னொரு பெரிய பழக்கடை. கவரிங் கோல் கடையும் கூட ஒன்று; ஓர் இருசக்கர பணிமனை. யார் இங்கு வந்து வியாபாரம் செய்வார்கள் என்ற கேள்வி மனதில் எழுந்தது.


                                                                             

·         இவ்வூரின் ஊராட்சி அலுவலகமும், நூலகமும் அதே தெருவில் பார்த்தேன். இது அவ்வூரின் முக்கிய தெருவாக இருக்குமோ?
















1 comment:

  1. பெரியமனிதர்களின் சின்னவீடாக இருக்குமோ

    ReplyDelete