நேற்றைய நடையில் ஊரைப் பார்த்து
வியந்தேன்; இன்று (14.5.23) ஊரின்
வெளிப்பகுதியைப் பார்த்து அதன் அழகில் மயங்கி விழுந்தேன். சமீப காலத்தில்
நெட்பிளிக்ஸ், ப்ரைம் வீடியோ அருள்பாலித்ததில் நிறைய கேரளப் படங்களைப் பார்த்து, ஏற்கெனவே இருந்த கேரளக் காதல் அதிகமாக வளர்ந்துள்ளது. இப்போதும் இந்த ஊர்
கேரள எல்லையில் உள்ளது. இன்று நடந்த சாலையில் தொடர்ந்தால் ஓரிரு கிலோ மீட்டர்
தொலைவில் கேரளம் வந்து விடுமாம். எல்லைப் பகுதி மக்கள் என்பதால் தமிழும் கேரளமும்
எங்கும் நிரவிக்கிடக்கின்றன.
தெரியாத
சாலை. நல்ல சிமிண்ட் போட்ட சாலை. பெரிய சாலையிலிருந்து கிளைத்துச் சென்ற நல்லதொரு
சாலை. நடக்க ஆரம்பித்தேன். பச்சையழகில் அப்படியே குடை சாய்ந்து வீழ்ந்தே விட்டேன்.
வழுவழு சாலை. சாலையில் வலது பக்கத்தில் பெரும்பள்ளம். அது ஒரு கால்வாய். ஆனால்
தண்ணீர் கண்ணுக்குப் புலப்படவில்லை. அந்தப் பள்ளத்திலிருந்து பல்வேறு மரங்கள்; செடிகள். திரும்பும் இடமெல்லாம் பச்சைப் பசேலென்று
இருந்தது. சிறிது தூரம் வரை இடது பக்கத்தில் பல மாமரங்கள். காய்கள் காய்த்துத்
தொங்கின. அதன்பின் இடது பக்கம் ஆங்காங்கே சில கேரள வீடுகள்; சில
பாவப்பட்ட மக்களின் குடிசைகள். வலது பக்கமோ நான் நடந்த தொலைவு வரை செடிகளும்,
மரங்களும். எல்லோரும் வாழைத் தோப்பு பார்த்திருப்போம். ஆனால்,
இங்கே கால்வாய் பள்ளத்திலிருந்து உயர்ந்து வளர்ந்த பல வாழை மரங்கள்
கேட்பாரற்று காய்த்து, காய்ந்து, சாய்ந்து
ஒரு வாழைக்காடாக இருந்தது.
எதிரில்
வந்த சில மக்களும், குடிசை வாழ் மக்களும் என்னை ஓர் அபூர்வ பிராணி மாதிரி பார்த்தார்கள்.
நட்பாகப் பழகிய காவல் துறை ஆய்வாளரிடம் திரும்பி வரும்போது அவரது அவுட் போஸ்ட்டில்
காலாற உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எல்லையோரம் என்பதால்
அருகருகே அவுட்போஸ்ட்டுகள் இருக்கின்றன என்றார். அபூர்வ பார்வை பற்றிச் சொன்னேன். ‘இந்தப் பக்கம் யாரும் உங்களைப் போல் முக்கால் கால்சட்டை போடுவதில்லை;
அதனால் அப்படிப் பார்த்திருப்பார்கள் போலும்” என்றார். இன்னொன்றும்
நான் கவனித்தேன்: என்னைப் போன்ற ஒரு வயயயசான ஆள் காதில் எதையோ மாட்டிக் கொண்டு
பாட்டு கேட்பதையும் விநோதமாக ( வயது குறைவான இப்போதைய என் ரூம் மேட்டும்
அப்படிதான் பார்த்தார்; கேட்டார்!) பார்ப்பது போல்
தோன்றியது.
என்னமோ
போடா, குமாரு!
நான்
மயங்கிய இடங்களைக் காண்பிக்க இதோ ஓர் காணொளி:
காணொளி
போட முயற்சித்தேன். இரு நாளாக முயற்சித்தும் முடியவில்லை - இங்கே இணையத்தின் நிலை
இப்படி போலும். பின்னாளில் சேர்க்கிறேன். இப்போதைக்கு இப்பதிவு இவ்வளவே !!
No comments:
Post a Comment