Wednesday, August 26, 2009

332. காசியின் கேள்விகளும் தருமியின் பெனாத்தல்களும் ...

*

காசி சில பதில்கள் அப்டின்னு கேட்டு என்னென்னமோ கேட்டிருந்தார். நானும்
க.கை.நா.-க்கு இது கொஞ்சம் அதிகம்தான். இருப்பினும் முயற்சிக்கிறேன் என்று எழுதிவிட்டு, அதன்பின் காசிக்கு எந்தப் பதிலும் போடாமல் இருந்துட்டேன். விட்டார்னா அப்படியே இருந்திரலாம்னு ஒரு கணக்கு. ஆனா மனுஷன் விடலை. மறுமடல் வந்த பின்னால் ஒண்ணும் பண்ணாமல் இருக்க முடியலை. நமக்குத் தெரிந்ததை சொல்லிடுவோம்; அவர் அதை அட்ஜஸ்ட் பண்ணி ஏதாவது உருப்படியா மாத்தி கீத்தி எழுதிக்குவார்னு ஒரு நம்பிக்கையில அனுப்பினேன். ஆனால் மனுஷன் நீங்களே அதை பதிவிடுங்கள் அப்டின்னு சொல்லிட்டார். வேறு வழியில்லாததால்… நான் கொடுத்த பதில்கள்:

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்று எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

இந்த முதல் கேள்வியைப் பார்த்துட்டு அன்னைக்கி ஓடுனவன்தான்!! வசதிகள் இருக்கு அப்டின்றது மக்களுக்கு இன்னும் முழுசா போய்ச்சேரவில்லை என்றே நினைக்கிறேன். எனக்கு தெரிந்த பேராசிரியர்கள் பலருக்கும் இணையத்தில் தமிழ் என்பதே ஒரு விந்தையாக இன்னும் இருக்கிறது. அந்தச் செய்தி இன்னும் பரவ வேண்டும்.



2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம்
அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம்
தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

இன்னும் இல்லை. உதாரணமாக மின்னஞ்சல்களே இன்னும் விரிவடையவில்லை. நமது 'லெவலில்' இருப்பது மேலும் பரவ வேண்டுமே.அதிலும்அரசாளுமை விரிவாக்கப்பட்டால் மற்றவை தானாகவே விரிவடையும். ATM விரிவாக்கம் ஒரு நல்ல மாதிரி. இப்போதெல்லாம் அதைப் பயன்படுத்துபவர்கள் எல்லா 'லெவலில்' இருப்பது போல் மாற வேண்டும்.

3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின்
பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த
அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும்
முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

விக்கிபீடியாவில் சமீபத்தில் நடந்த விவாதங்களைப் பார்க்கும்போது அதில் மிக பெரிய அளவில் அரசியல் இருப்பதுபோன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது. ஆனால் கட்டாயம் விக்கிபீடியா போன்றவைகள் விரிவடைய வேண்டும். தன்னார்வலர்களின் தொண்டு அதிகமாக வேண்டும். விக்கிபீடியா விரிவடைந்தது பற்றாது என்றே நினைக்கிறேன்.மதுரைத் தமிழ் பற்றி அதிகமாகத் தெரியாது. அதுவும் அதிகமாக வளரவில்லை என்றே நினைக்கிறேன்.

இதில் நம் பதிவர்களின் பங்கு அதிகமாக ஆக வேண்டும். அவைகளில் இருக்கக்கூடிய பிரச்சனைகளைத் தீர்த்து, அவைகளை நாம் வளர்க்க கட்டாயம் ஏதும் உடனே செய்ய வேண்டும்.


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?

துண்டைத் தேடுவேன்!! தோளில் போட்டு ஓட......... !

முடியாட்டா ... இருக்கவே இருக்கு think tank. அப்படி ஒண்ணை அமைச்சிட்டு
காசிக்கு முதலிடம் போட்டுக் கொடுத்திருவேன்! அதுக்குப் பிறகு அதை அவரு பாத்துக்கட்டும். அதத்தான நம்ம வள்ளுவரய்யா சொல்லியிருக்கிறார்.

5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

மொக்கை எனக்குப் பிடிக்கும்; ஆனால் மொக்கை மட்டுமே இருப்பதுபோல் தெரிவது மாற வேண்டும்.
வெறும் பொழுது போக்காக இல்லாமல் இன்னும் கொஞ்சம் 'சரக்கு' கூடணும் என்பது ஆசை. அது படுக்கை, நீட்டு வசத்தில் நீளணும்.

6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

பரவாயில்லையே. ஐந்தில் நான்கு ஆண்டுகள் நானும் தமிழ்மணத்தோடு இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. என்னைப் பொறுத்தவரை என் ஓய்வு பெற்ற வாழ்வில் இருந்த ஒரு வெற்றிடம் நிச்சயமாகப் பலனுள்ள வகையில் மாற்றியது தமிழ்மணம் . நன்றி அதற்கும் உங்களுக்கும்.

பூங்கா போன்ற புது அமைப்புகள் தோன்றி இன்னும் சரக்கான பதிவுகள் வர ஊற்றுவிக்கப்படணும். 'நட்சத்திர அந்தஸ்து' மாதிரி பூங்கா போன்ற அமைப்புகள் இன்னும் நிறைய இருந்தால் ஒரு விதப் போட்டி மனப்பான்மையில் மேலும் நல்ல் பதிவுகள் வர வாய்ப்புகள் உண்டு.


தமிழ்மணம் பெரிய ஒரு நண்பனாகப் போச்சு. இதை உருவாக்கிய காசிக்கு என் நன்றிகள். தமிழ் இணையத்தில் அழகான இடம் பிடித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Monday, August 24, 2009

331. சிங்கப்பூர் போங்க ..........

*

சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணையதளம் நடத்தும்
மாபெரும் கருத்தாய்வுப் போட்டி


போட்டியின் முடிவு தேதி ஆகஸ்ட் 15-லிருந்து பின்னொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மூன்று வகைப் போட்டிகள். ஒவ்வொன்றிலும் தனித்தனிக் கட்டுரைத் தலைப்புகள்.


வெற்றி பெற்ற மூவருக்கு

ஒரு வார சிங்கப்பூர் பயணம்.






மேலும் தேவையான விவரங்களுக்கு ....

போட்டியில் வெல்லுங்க! சிங்கப்பூர் செல்லுங்க!!!


சிங்கை பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் இணையதளம் நடத்தும் மாபெரும் கருத்தாய்வு போட்டி


சிங்கப்பூர் பதிவர்களின் முதல் முனைப்புக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

Sunday, August 23, 2009

330. கடவுள் என்றொரு மாயை ... 8

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:


298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12

*




கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

Chapter: 6
THE ROOTS OF MORALITY:
WHY ARE WE GOOD?



ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:

இந்த பூமியில் நம் வாழ்க்கை வித்தியாசமான ஒரு விஷயம்தான். ஏதோ ஒரு சில காலத்திற்காக இங்கே வருகிறோம்; எதற்கென்று தெரியாது; சில சமய்ங்களில் ஏதோ ஒரு (Perceive intuitively or through some inexplicable perceptive powers)உள்ளார்ந்த காரணமாகக் கூட இருக்கலாம். ஆனாலும் தினசரி வாழ்க்கையில் நமக்குத் தெளிவாகத் தெரிவது ஒன்றுதான்: மனிதன் இருப்பது இன்னொரு மனிதனுக்காக - அதுவும் யாருடைய சிரிப்பிலும் நலத்திலும் நம் மகிழ்ச்சி அடங்கியுள்ளதோ அவர்களுக்காகவே.

*

பல நம்பிக்கையாளர்களுக்கு மதங்கள் இல்லாமல் எப்படி ஒருவன் நல்லவனாக இருக்கவோ, அல்லது இருக்கவேண்டுமென்ற நினைவோடு இருக்க முடியுமென நம்புவது மிகவும் கஷ்டம்.

*

சில மத நம்பிக்கையாளர்களுக்கு தங்கள் நம்பிக்கையோடு தொடர்பில்லாதவர்கள் மீது வெறுப்பு இருப்பதும் கண்கூடு.

*

பசி, பயம், பாலியல் ஈர்ப்புகள் - இவை எல்லாமே நாம் வாழவும், வாழ்க்கைப் பாதையில் தொடரவும் தோதுவான விஷயங்கள். ஆனால், ஒரு அனாதைக் குழந்தை அழுவதைக் கேட்கும்போதும், தனித்து விடப்பட்டு அல்லல்படும் ஒரு ஏழை விதவையைக் காணும்போதும், வலியில் அல்லல்படும் ஒரு விலங்கினைக் காணும்போதும் நம் மனத்துள் ஏற்படும் வேதனைக்குக் காரணம் என்ன? எங்கோ, நம் கண்ணில் நிச்சயம் படக்கூடாத, நாம் செய்யும் உதவிக்கு நன்றி சொல்லக்கூட முடியாத, சுனாமியால் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவருக்கு உதவட்டும் என்று பணமும், உடையும் அனுப்புகிறோமே அது எதற்கு?
நல்ல சமாரித்தனாக இருக்க வேண்டும் என்ற நினைவு எப்படி நம்மிடம் வருகிறது?

*
வரலாற்றுக்கு முந்திய நம் முன்னோர்கள் தன் குழுவினரைப் பாதுகாத்து, அதே சமயத்தில் அடுத்த குழுவினரைப் பகைமையோடு பார்த்து, பொருது தங்கள் குழுவினரைக் காத்தார்கள். ஆனால் இப்போது நாமோ பெரும் நகரங்களில் வசிக்கும் பலரும் உறவற்ற, ஏனைய மக்களோடு இணைந்திருந்தும், இனி இவர்களைப் பார்க்க வாய்ப்பு ஏதுமில்லை என்று தெரிந்த மக்களிடமும் இணைந்த நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்கிறோமே – எப்படி இந்த நல்ல குணம் வந்தது?

*
இதுபோன்ற நல்ல பண்புகள் இந்த மதத்தினருக்கு மட்டுமே என்பது போலன்றி எந்த மத நம்பிக்கையாளர்களுக்கும், மத நம்பிக்கையற்றோர்களுக்கும் நடுவில் பொதுவாக எங்கும் விரவி இருக்கிறது.
(இவ்விடத்தில் Marc Hauser, a Harvard Biologist கேள்வித்தாள் மூலம் செய்த ஒரு திறனாய்வு இப்புத்தகத்தில் மேற்கோளிடப்படுகிறது.)

*
Hauser-ன் திறனாய்வு மூலம், மத நம்பிக்கையாளர்கள் அவர்கள் மதக் கோட்பாட்டின் படி மத நம்பிக்கையற்றோரை விடவும் தங்களது நன்முறைக் கொள்கைகளில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏதும் இருப்பது இல்லை.

அதோடு அவரது திறனாய்வின் வாக்கெடுப்பின் புள்ளிவிவரத்தில் மத மறுப்பாளர்கள், நம்பிக்கையாளர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடுமின்றி தங்கள் விடைகளைத் தந்துள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால், நம்மை நல்லவர்களாக வைத்திருக்கக் கடவுள் தேவையில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

*
ஐன்ஸ்டீன்: மக்கள் எல்லோருமே தண்டனைக்குப் பயந்தோ, அல்லது வெகுமதிக்கு ஆசைப்பட்டோ மட்டும் நல்லவர்களாக இருக்க முயற்சித்தால், அது மிகவும் வருத்தத்திற்குரியதாகும்.

*
தனிமனிதக் குற்றங்களை முன்னிறுத்தும் மதங்களை (ஆப்ரஹாமிய மதங்கள்?) நம்புபவர்கள் எப்போதும் தங்கள் மத நம்பிக்கைகள் மட்டுமே தங்களை மனிதநேயத்தில் முன்னிலைப் படுத்துகின்றது என்று நம்புகிறார்கள்.

*
நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள, சுய விழைவோடு தவறான காரியங்களில் இறங்காமலிருக்க கடவுளாலேயோ அல்லது வேறொன்றாலோ நமக்கொரு காவல்துறை – policing – தேவையா?

*
Steven Pinker கனடாவின் மோன்ரியாலில் 1960-ல் காவல்துறை ஒரு வேலை மறியல் நடத்திய போது நடந்தவைகளை விவரிக்கிறார்: காவல்துறை 10 மணிக்குத் தங்கள் வேலை நிறுத்தத்தை ஆரம்பித்ததும், 11.20க்கு முதல் வங்கிக்கொள்ளை; மதியத்திற்குள் எல்லா கடைகளும் மூடப்பட்டன; இரு கார்கள் தீவைப்பு; ஒரு காவல்துறையாளர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொலை; நாள் முடிவதற்குள் 6 வங்கிகளில் கொள்ளை; 12 தீவைப்புகள் --- இன்னும் பல.

கேள்விகள்: காவல் துறையினர் இல்லாமல் இருக்கட்டுமே .. ஏன் அவர்கள் இல்லையென்றதும் இத்தனை கட்டுப்பாடற்ற கலகங்கள்; ஏன் கடவுளின் பயம் அவர்களைக் கட்டுப் படுத்தவில்லை?

கடவுளின் மேலுள்ள பயம் மட்டுமே நம்மைக் கட்டுப்படுத்துமா என்ற கேள்விக்கான ஒரு பதிலை இந்த நிகழ்வு பதில் கொடுக்கவில்லையா?

மதங்கள் வேண்டும் மனிதனை நல்வழிப்படுத்த என்று பலர் சொல்லும்போது அவர்கள் நிஜமாகச் சொல்வது – எங்களுக்குக் காவல்துறை மிகவும் தேவை!

*
சிறைகளின் உள்ளே இருப்பவரில் கடவுள் மறுப்பாளர்கள் மிகக் குறைவே.

*
கடவுள் மறுப்பு மட்டுமே அவர்களை நல்லவர்களாக்குகிறது என்பதற்குப் பதிலாக நான் கூறுவது: மனித நேயம் எப்போதும் கடவுள் மறுப்பாளர்களோடு சேர்ந்து செல்கிறது.

அதோடு,
கடவுள் மறுப்பு இன்னொரு முக்கியமான விஷயங்களோடு ஒன்றிப் போகிறது; உயர் படிப்பு, புத்திக் கூர்மை, reflectiveness இவைகளோடு கடவுள் மறுப்பு ஒன்றிப் போவதால், குற்றம்புரியும் தன்மைகள் குறைகின்றன்.

*
Sam Harris என்பவர் Letter to a Christian Nation-ல் அமெரிக்க மக்களைப் பற்றி எழுதியது:
ரிபப்ளிக்கன் கட்சி பெரும்பானமையான அமெரிக்க மாநிலங்கள் சிகப்பு மாநிலங்கள் – red states – என்றும், குடியரசுக் கட்சி பெரும்பான்மையான மாநிலங்கள் நீல மாநிலங்கள் – blue states – என்று அழைக்கப்படும். இதில் ரிபப்ளிக்கன் கட்சி ஆட்கள் பெரும்பாலும் அடிப்படைக் கிறித்துவர்கள் (conservative Christians).

• குற்றங்கள் குறைவாக நடக்கும் 26 நகரங்களில் 62 விழுக்காடு நகரங்கள் ‘நீலம்’.
• குற்றங்கள் அதிகமாக நடக்கும் 25 நகரங்களில் 76 விழுக்காடு நகரங்கள் ‘சிகப்பு’.
• அதிலும் அங்கே மிகவும் மோசமான குற்றங்கள் நடக்கும் என்று கருதப்படும் 5 நகரங்கள் ‘பக்திப் பிரவாகம்’ மிகுந்த டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ளன.
• மிகவும் அதிகமான பூட்டுடைப்புக் குற்றங்கள் நடக்கும் 12 மாநிலங்களுமே ‘சிகப்பு’தான்.
• 29 மாநிலங்களில் நடக்கும் திருட்டுக் குற்றங்களில் 24 மாநிலங்கள் ‘சிகப்பு’.
• கொலைக்குற்றங்கள் அதிகமாக நடக்கும் 22 மாநிலங்களில் 17 மாநிலங்கள் ‘சிகப்பு’.


*

இது மட்டுமல்ல. மேலெழுந்தவாரியாக இல்லாமல், முழுவதுமாக ஆராய்ச்சி செய்து மேலே சொன்னவைகளுக்கு முழு ஆதாரம் கிடைக்கும் வகையில் Gregory S. Paul என்பவர் Journal of Religion and Society (2005)-ல் 17 வளர்ந்த நாடுகளைப் பற்றிய ஆராய்ச்சி ஒன்று செய்து வெளியிட்டுள்ள அறிக்கை:

அதிகமான மத நம்பிக்கையும் கடவுளை முழுவதுமாக நம்பும் நாடுகளில் அதிக அளவிலான மனிதக் கொலைகள், இளமையில் இறப்பு, பாலின வியாதிகள், இளம்வயதில் கர்ப்பமாகுதல், கருக்கலைத்தல் (homicide, juvenile and early mortality, STD infection rates, teen pregnancy, and abortion in the prosperous democracies) மிக அதிகமாக உள்ளன.

இந்த ஆராய்ச்சி பற்றி Dan Dennett என்பவர் Breaking the Spell என்ற நூலில் சொல்வதில் முக்கியமான ஒன்று: கடவுள் நம்பிக்கைக்கும், மனிதர்களின் நேர்மைக்கும் ஏதும் ஒரு நல்ல தொடர்பு இருக்குமாயின் அது மிக எளிதில் கண்டுபிடிக்கப்பட்டு விடும். ஏனெனில் பல மதக் குழுக்கள் தாங்கள் காலங்காலமாய் நம்புவது போல் அதுபோன்ற ஒரு நிலைகண்டால் அதை அறிவியல் மூலம் உலகுக்கே அறிவித்து விட மாட்டார்களா?

Monday, August 17, 2009

329. மதுரகாரங்கன்னா சும்மாவா? நவட்டிக்க முடியாதுல்ல ...

*
எங்க ஊரு போலீஸ் கமிஷனர் போன வாரமே செய்தித்தாள்களில் முக்கிய சேதியாகச் சொல்லிவிட்டார். சுதந்திர தினத்துக்குப் பின் இரட்டைசக்கர வண்டிக்காரர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றெல்லாம் போட்டாகி விட்டது. இனி காவல்துறை "சீரியசாக" தலைக்கவசம் அணியாதவர்களைப் பிடிக்கப் போவதாகச் சொல்லியாகி விட்டது.

நானும் 15ம் தேதியே அங்கங்கே தலைக்கவசம் இல்லாம போற மக்களைப் பிடிச்சி க்யூ வரிசையில் அங்கங்க நிக்க வச்சிருப்பாங்கன்னு பார்த்தேன். அப்படியெல்லாம் ஒண்ணும் காணோம். அப்புறம் நினச்சேன் .. ஒருவேளை சுதந்திர நாளன்று இதெல்லாம் வேண்டாம்; 'அனுபவிச்சிட்டுப்' போகட்டுமென்று விட்டிருப்பார்கள் என்று நினைத்தேன். நாளையில இருந்து - அதாவது 16-ம் தேதியிலிருந்து மறுபடி 'சீரியசாகப்' பிடிப்பார்கள் என்று நினைத்தேன். அன்றும் ஒன்றுமேயில்லை. சரி .. சரி.. இன்று ஞாயிற்றுக் கிழமை; அதான் இன்னைக்கும் போகட்டுமென்று விட்டு விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்று திங்கட்கிழமை. எல்லாரும் தலைக்கவசம் அணிந்திருப்பார்கள் என்று பார்த்தால் ஒருத்தருமே அப்படியெல்லாம் தலைக்கவசத்தோடு வரவில்லை. என்னமாதிரி மொடாக்குகள் எப்போதும் மாதிரி போட்டுப் போனதோடு சரி. அதிலும் வண்டி ஓட்டிச் சென்ற ஒரு பெண் போலீஸ் என் தலைக்கவசத்தை வேடிக்கை பார்த்ததுமாதிரி இருந்தது! போன வாரத்துக்கும் அறிவிப்பு வந்த இந்த வாரத்துக்கும் எந்த வித்தியாசமுமில்லை. அதான் தோன்றியது: நாங்கல்லாம் மதுரக்காரவிய அல்லவா. எங்கள அம்புட்டு ஈசியா நவட்டிக்க முடியுமா?

அப்போ இன்னொண்ணு நினைவுக்கு வந்தது. வாத்தியார் தொழிலில் ஒரு நாளும் நேரமும், கொடுத்து அன்று ஏதாவது submit பண்ண வேண்டும் என்று சொல்லி, யாராவது அந்த நேரத்தில் கொடுக்காவிட்டால் அந்த மாணவர்களைக் 'கடித்துத் துப்பியது' நினைவுக்கு வந்து தொலைத்தது.

நாம் ஒண்ணு சொல்றோம். கேக்க வேண்டியவங்க கேக்காம போனா அப்படி கோபம் வர்ரது உண்மை. ஆனால் எல்லா அதிகாரத்தையும் கையில் வச்சிக்கிட்டு ஒரு ஆர்டரும் போட்டுட்டு, அதுக்குப் பிறகும் எப்படி இந்த மாதிரி 'அக்கடா'ன்னு இருக்க முடியும்னு தெரியலையே. இந்த தலைக்கவசத்துக்கே எங்க ஊர்ல இந்த பாடுன்னா ....

1. ஒரு ஆளு உக்காந்து ஓட்டும் போதே நம்ம ஆட்டோக்காரர்கள் அப்படி போவார்கள். இதில இப்போ எங்க ஊர்ல எல்லாம் ஆட்டோ ட்ரைவருக்கு இரு பக்கமும் இன்னும் ரெண்டு பேரோடுதான் ஓட்டுகிறார்கள். ஆட்டோவுக்குள் எத்தனை எத்தனையோ!
இதில் சின்னப் பள்ளிப் பிள்ளைகளை வைத்து ஓட்டுவதைப் பார்க்கும் போது .. அட கடவுளே!

2. இந்த ஆட்டோதான் இப்படின்னா, ஷேர் ஆட்டோ கதைய நினைக்கவே பயமா இருக்கு.

3. இன்னும் வண்டி ஓட்டிக்கிட்டே கைப்பேசியில் பேசிக்கிட்டே போற .... களை என்னக்கி இந்த போலீஸ்காரங்க பிடிச்சி இப்படியெல்லாம் இல்லைன்னு ஆக்குவாங்க?

4. பள்ளிக்குப் போற பிள்ளைகள் அனேகமாக இரு சக்கர வண்டிக்கு உரிமம் எடுக்க முடியாது. ஆனால் யூனிபார்ம் போட்டுக்கிட்டு போற சின்ன பசங்க, பொண்ணுங்கள பிடிக்க காவல்துறைக்குத் தெரியாது; அதை நிறுத்த பள்ளிக்குத் தெரியாது; அப்படி பிள்ளைகளுக்கு வண்டி வாங்கிக் கொடுக்கிற பெத்தவங்களுக்கும் தெரியாது.

........இப்படியே நிறைய ஒரு 'வண்டி' இருக்கு. என்னத்த சொல்றது. நம்ம அமெரிக்க நண்பர்கள் அங்க உள்ள 'போலீஸ் மாமா'க்களைப் பத்திச் சொல்லும்போது கேட்க நல்லா இருக்கு. என்னமோ போங்க ...

=====================================

திடீர் பேருந்து பயணம். ஓசியில் ஒரு படம். நகுலன் படம் அப்டின்னதும் சரி ..தல முதல் முதலா படம் ஒண்ணு நடிச்சிருப்பாரேன்னு நினச்சா புதுசான மாசிலாமணி படம் போட்டாங்க. இம்புட்டு புதுப்படமெல்லாமா போடுவாங்க. போட்டாங்க .. பாத்துட்டேனே ... வேற வழி.

ஆமா .. ஒரே ஒரு சந்தேகம்தான். பெயரை வச்சி எடுத்த படம். இந்த மாதிரி ஒரு கதையை 'உண்டாக்குன' கதாசிரியர் யாரோ .. புண்ணியவான். எப்படி இவங்களுக்கு இந்த மாதிரி ஒரு கற்பனை. எம்புட்டு தைரியம் இருந்தா இந்த மாதிரி கதையை எடுத்துக்கிட்டு அந்த மனுசன் ஒரு டைரடக்கரைப் பிடிச்சிருக்கணும். (அனேகமாக ரெண்டும் ஒரே ஆளாதான் இருக்கணும்; மனுசன் பேரு என்னங்க. தெரிஞ்சவங்க சொல்லுங்க. அடுத்த படம் வந்தா ஓடணுமே, அதுக்காக.)

சரி ..டைரடக்கரைப் பிடிச்சாச்சி. இந்தக் கதையை சொல்ல ஒரு தயாரிப்பாளர் வேணுமே. அதுவும் எப்படிங்க கிடச்சுது. அதுவும் சன் தயாரிப்புதான். இந்த மாதிரி கதைக்கு ஓகே சொல்ற அளவுக்கு அவங்களுக்கு எப்படி தைரியம் வருது. (நம்மள மாதிரி ஆளுக இருக்கிறதினாலேயா?) சரி.. அடுத்தது, எப்படி அந்த நடிகர் ஒத்துக்கிட்டார்னு. அது வேணாம். பாவம் .. பையனுக்கு இரண்டாவது படம். அதோடு நடிகர்களுக்கும் கதைக்கும் என்ன தொடர்பு. சரி, டைரடக்கர், தயாரிப்பாளர் எப்படி இந்தப் பையனைப் பிடித்தார்கள். அப்படியே பிடிச்சாலும் குரலுக்கு வேற ஆளைப் போடக் கூடாதா? அந்தப் பையனின் தமிழ் அப்டி ஒரு அழகு.எக்கச்சக்க accented தமிழ்.

........ ஆண்டவா!

================================

Monday, August 10, 2009

328. HATS OFF, 108.

*

*

நண்பர் தனக்கு வந்த ஒரு மயிலை எனக்கு அனுப்பியிருந்தார். ஆச்சரியம் .. ஆனால் உண்மை என்ற தலைப்பிற்கேற்ப ஒரு நல்ல நிகழ்வு. எல்லோரும் தெரிந்து கொள்ள இங்கே பதிவிடுகிறேன்.

I am sharing my personal experience with “108” (EMRI) on their Quick response.

When I travel from Pondicherry to Coimbatore last Sunday (02-08-09) night by Bus, the bus met with an accident with lorry in National Highway nearby “Atthur” Landmark: “Paaventhar college of Arts and Science”.

Two of my co-passengers got injured.

One is a lady and second is her baby of 15 months old.

The lady had an injury in her hand and the baby was motionless. The First-Aid kit is missing in the bus.

The accident happened at mid-night 00:57am.

On seeing the condition of the baby and mother, I immediately called 108 at 00:59am. Explained the state of injured persons and location of the place, Village, District & Taluk (assisted by a local person). It took around 3minutes.

At 01:03am (within a minute) I got a call from 108 with a conference to the district level center explained the exact location and condition of the persons injured. It took around 3 minutes.

At 01:08 am again I got a call from the Ambulance saying that they are on the way to accident spot.

To my surprise, the Ambulance reached the spot at 01:17 am
and started the treatment. The baby was brought to the active state (may be due to timely attempt by 108-EMRI) and medicines were given for injured lady. At the end of their treatment both of them came to normal.

The EMRI 108 Ambulance reached the spot within 15 minutes from the receipt of information to them


Here I would like express one thing that except me, other co-passengers were not aware of 108.

As I am aware of 108 through training given for EMERGENCY EVACUATION DRILL conducted in June ’09, I could help the co-passengers.


Kindly share this experience, so that the people can make use of wonderful service provided by EMRI – “108” in TamilNadu.


இங்கே பதிவிடுவதற்கான காரணம்:

1. குறைந்த நேரத்தில் விரைந்து கிடைத்த மருத்துவ உதவிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்க ....
2. இப்படியொரு அமைப்பைத் தந்த அரசுக்கு நன்றி சொல்ல ....
3. 108 பற்றி பலரும் தெரிந்து கொள்ள ....



*

Wednesday, August 05, 2009

327. அன்புடன் ... புகாரியின் பதிவு - ஒரு மீள் பதிவாக ...

*

சில பதிவுகள் வாசிக்கும்பொழுது ஒரு உற்சாகம் பிறக்கிறது - ஏனெனில், நாம் வழக்கமாகக் கூறிவரும், ஆனால் பலத்த எதிர்ப்புகளுக்கு உள்ளாகும் ஒரு கூற்று - இன்னொருவராலும் சொல்லப் படும்போது ஏற்படும் ஒரு உற்சாகம்தான். சமீபத்தில் அன்புடன் புகாரி அவர்களின் இடுகையில் வந்த ஒரு பதிவு: மதமாற்ற எண்ணங்களின் மாற்றங்கள் - அதுபோன்ற ஒரு இடுகைதான்.

இந்தப் பதிவில் கூட எனக்குச் சில கேள்விகள் உண்டு. ஆனால் பொதுவாக அதில் பேசப்படும் கருத்துக்களில் பலவும் ஏற்கெனவே என் பதிவுகளில் நான் சொன்ன சில கருத்துக்களுக்கு முற்றிலும் உடன்பாட்டோடு இருப்பதால் அதை ஒரு மீள் பதிவாக அவரது அனுமதியோடு இங்கே இடுகிறேன். எனக்குப் பிடித்த வரிகளை அடிக்கோடிட்டிருக்கிறேன். என் சொந்த சில கருத்துக்களை அடைப்புக் குறிக்குள் வண்ணங்களில் இட்டுள்ளேன். புகாரிக்கு என் மனமார்ந்த நன்றி.


*

*
மதமாற்ற எண்ணங்களின் மாற்றங்கள்


மதங்கள் இறைவனை அடையாளம் காட்டுவதற்காகத் தோன்றின. வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று வரையறுத்துச் சொல்வதற்காக வந்தன. வேறு எதற்காகவும் மதங்கள் பிறக்கவில்லை.

இது செய்யலாம் இது செய்யக்கூடாது. இது செய்தால் பாவம், நீ நரகத்துக்குப் போவாய், இது செய்தால் புண்ணியம், நீ சொர்க்கத்துக்குப் போவாய் என்றெல்லாம் நீதிகளை வகுத்துத் தந்தது மதம். (எல்லா மதங்களுமே தீவினை செய்தால் கடவுளால் தண்டிக்கப்படுவாய்; நல்லவனாக இருந்தால் கடவுள் உனக்கு வெகுமதி தருவார் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கின்றன. இந்து மதம் கர்மவினைக்கேற்ப பிறவி பல எடுத்து, இறுதியில் ஸ்வர்க்கம் / முக்தி பெறவேண்டுமெனக் கூறுகிறது. கிறித்துவம் - பாவம், மோட்சம், நரகம் எனவும், இஸ்லாம் இஸ்முர், அல்-ஜன்னத், ஜன்னத் என்று முற்கூறிய அதே கோட்பாடுகளைக் கொண்டுள்ளன.)

இறைவன் மீது நம்பிக்கையை உருவாக்கி, நல்லது எது கெட்டது எது என்று வரையறை சொல்லி, சொர்க்கம் உண்டு நரகம் உண்டு, இறந்தபின் நீ வாழ்ந்த நாட்களில் நல்லது செய்திருந்தால் சொர்க்கம் புகுவாய், கெட்டது செய்திருந்தால் நரகம் புகுவாய். சொர்க்கம் சுகமானது. நரகம் கொடூரமானது. நரகத்தில் எண்ணெய்க் கொப்பரைகளில் இட்டு உன்னை நாளெல்லாம் வறுத்தெடுப்பார்கள் என்ற அச்சங்களைக் கற்றுத்தந்தது மதம். (முட்டாள் கழுதை இன்னும் ஓரடி நடந்தால் காரட் கிடைக்கும் என்று எண்ணி ஒவ்வொரு அடியாக நடந்து போய்க்கிட்டே இருந்ததாம்! இரண்டாவது, நல்லது செய்தால் காரட், தவறு செய்தால் குச்சி என்ற தத்துவம்.)

மதத்தைப் பின்பற்றுபவர்கள் பாவம் செய்ய அஞ்சவேண்டும். அடுத்தவனை அடிமைப்படுத்துவதற்குப் பயப்படவேண்டும். அரிவாள், கோடரி, கத்தி, வெடிகுண்டு போன்றவற்றை மனிதர்கள் மேல் பயன்படுத்துவது நரகம் செல்வதற்கான வழி என்று நம்பவேண்டும். நம்பி அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் சுய விருப்பு வெறுப்புகளோடு பிறந்திருக்கிறான். தன் குடும்ப சமுதாய மற்றும் நாட்டின் பழக்க வழக்கங்களால் தன்னைச் சில நிர்பந்தங்களுக்கு உள்ளாக்கிக் கொள்கிறான். சில நிர்பந்தங்கள் அவனுக்கு மகிழ்வினைத் தருகின்றன. சில நிர்பந்தங்கள் துயரத்தைத் தருகின்றன.

ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு வகையில் வாழ்க்கை நெறிகளை வகுத்து வைத்திருக்கிறது. ஒரு மதத்தில் பிறந்ததற்காகவே, அந்த மதக்காரர்களாய் வாழ்பவர்களே பெரும்பாலானோர்.

கந்தசாமி ஒரு முஸ்லிம் வீட்டில் பிறந்திருந்தால் அவன் அப்துல் காதராய் வாழ்ந்து கொண்டிருப்பான். அப்துல் காதர் ஒரு இந்து வீட்டில் பிறந்திருந்தால் அவன் கந்தசாமியாய் வாழ்ந்துகொண்டிருப்பான்.
(மதங்கள் எல்லாமே பொதுவாக பிறப்போடு வருவது. நம்பிக்கைகளின் மேல் கட்டப்பட்ட விஷயம். நம்பிக்கையென்றாலே, கேள்விகளுக்கு அப்பாற்பட்ட காரியங்கள். )

பிறந்து வளர்ந்து, தன் அறிவுக்கும் தேவைக்கும் ஏற்ப தன் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ளும் பலர், தன் மதத்தை மட்டும் மாற்றிக்கொள்ள விரும்புவதில்லை. தனக்குப் பிடிக்காத ஒரு மதத்துக்குள் கிடந்து சிலர் புழுங்குவார்கள். அந்த மதத்தின் வரையறைகளை இரகசியமாய் மீறுவார்கள். தொடக்கத்தில் எவருக்கும் தெரியாமல் மதத்துக்கு முரணான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், பின் பழகிப் போவதால், பலரும் அறியவே செய்வார்கள்.

ஒரு மதத்தில், பாவமும் புண்ணியமும் அளந்து பார்க்கப்படலாம். நீ செய்த பாவங்கள் உன் புண்ணியத்தைவிட அதிகமாக இருந்தால், நீ நரகம் புகுவாய் என்றும், மாறாக புண்ணியம் பாவத்தைவிட அதிகமாக இருந்தால் நீ சொர்க்கம் புகுவாய் என்றும் சொல்லலாம்.வேறொரு மதமோ, நீ செய்யும் பாவங்களையெல்லாம் மீண்டும் செய்யமாட்டேன் என்று கூறினால், உன் பாவங்கள் அத்தனையும் கழுப்பட்டுவிடும். நீ சொர்க்கம் புகுவாய் என்று சொல்லலாம்.

வேறொரு மதம், நீ செய்த பாவத்துக்கு உனக்குத் தண்டனை நிச்சயம் உண்டு. நீ செய்த புண்ணியத்துக்கு உனக்குச் சொர்க்கமும் நிச்சயம் உண்டு. நீ செய்த பாவங்களுக்காய் நீ கேள்வி கேட்கப்படுவாய், நீ செய்த புண்ணியங்களுக்காய் நீ பாராட்டப்படுவாய் என்று சொல்லக்கூடும்.

இப்படியாய் மதங்களின் சட்டதிட்டங்களிலும் வாழ்க்கை நெறிகளிலும் ஒவ்வொரு மதத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கும். தனக்குப் பிடிக்காவிட்டாலும், மதங்களின் வேறு எந்த சம்பிரதாயங்களையும் சட்டதிட்டங்களையும் பொறுத்துக் கொள்ளலாம்தான், ஆனால் மனிதமே அவமானப் படுத்தப்படுவதைக் காலங்காலமாய்ப் பொறுத்துக் கொள்வது கொடுமையிலும் கொடுமை. தீண்டாமை, பெண்ணடிமை என்பன அப்படியான கொடுமைகளுள் சில.

ஒரு மதத்தின் தத்துவங்களில் நேரடியாய், தீண்டாமையைப் போதிக்கும் வாசகங்களோ அல்லது பெண்ணடிமையைப் போதிக்கும் வாசகங்களோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் நீண்ட நெடுங்காலமாய் செயல்முறையில் தீண்டாமையோ பெண்ணடிமையோ அந்த மதத்தில் உண்டென்றால், இந்த மதம் தீண்டாமையைப் போதிக்கவில்லை அந்த மதம் பெண்ணடிமையைப் போதிக்கவில்லை என்று சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாது.

வெறுமனே சொல்லில் இருப்பதல்ல மதம்.செயல்பாடுகளில் இருப்பதுதான் மதம்.அரக்கன் என்ற பெயரில் ஒருவன் நல்லதை மட்டுமே செய்துவந்தால் அவன் நல்லவன்தான், அரக்கனல்ல. அதுபோல நல்லவன் என்ற பெயரில் ஒருவன் அட்டூளியம் செய்துவந்தால், அவன் அரக்கன்தான், நல்லவனல்ல.

ஒரு மதத்தில் ஒருவன் இழிவு படுத்தப்படுகிறான் என்றால், அவன் அதிலிருந்து விடுதலை அடையவேண்டும். விடுதலை அடைய எந்தெந்த வழிகள் உள்ளன என்று ஆராயவேண்டும். உயிர் காக்கப்படுவதற்காகவும், மனிதம் காக்கப்படுவதற்காகவும் எடுக்கப்படும் எந்த முடிவும் தவறாகாது.

எந்த மதமும் தனக்கான தீர்வு அல்ல என்றால் எல்லா மதங்களையும்விட்டு வெளியேறவேண்டும். எனக்குச் சொர்க்கமும் நரகமும் நான் வாழும் இந்த மண்ணில்தான் என்று தெளிவாகச் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரை மதம் ஒன்றும் கழட்ட முடியாத, கழட்டக் கூடாத கவச குண்டலமல்ல; பிடித்தால் போடவும், இல்லையென்றால் கழட்டிப் போடவும் கூடிய ஒரு சட்டை. அப்படி இருந்தமையால்தான் இந்துக்களாக இருந்த நம் முன்னோர் மாற்று மதங்களுக்குச் செல்ல முடிந்தது.

இப்படி மதமற்றோருக்கு இந்தியா போன்ற நாடுகளில் உள்ள சமுதாயங்களில் அங்கீகாரம் கிடையாது. அவமதிப்புகள் நிறைய உண்டு. அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில், இவர்களுக்கு ஒரு கவலையும் இல்லை.இந்நிலையில் முன்னேற்றம் காணாத சமுதாயத்தில் உள்ள மக்கள், தங்கள் கொடுமைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள உடனடி தீர்வாக, மதம் மாறுகிறார்கள். சற்றேனும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

இப்படி மதம் மாறுபவர்கள் இன்னொரு பேருண்மையைத் தெளிவாகக் காட்டுகிறார்கள். தங்கள் வாழ்க்கையின் இன்னொரு காலகட்டத்தில் இந்த மதமும் ஏற்புடையதல்ல என்னும் பட்சத்தில், இதிலிருந்தும் மாறுவோம் என்பதே அது. இப்படிப் படிப்படியாய், மதமற்ற நிலை உலகில் உருவாக வாய்ப்புகள் ஏராளமாய் உண்டு என்றாலும் அது சற்றுத் தொலைவில்தான் உள்ளது என்பதும் உண்மையே.(you open YOUR own eyes. உன் கண்களை நீயே திறந்து கொள். எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்; எனக்குள் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் பிறர் சொல்லிக்கொடுத்து வந்தது. எனக்கு நானே ஏன் உண்மை என்ன என்பதைக் காணக்கூடாது? காணக் கண் திறந்தேன்)

ஒரு மதத்தின் உண்மையான தத்துவங்களில் இல்லாத கீழ்த்தரமான செயல்கள், இடைக்காலத்தில் சிலரின் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டிருந்தால், அவை சீர் செய்யப்படவேண்டும். சீர் செய்துகொள்ள அதற்கு உடன்பாடு இல்லாவிட்டாலோ, அதனுள் இருந்து புழுங்குவோர் சீர்செய்யும் சக்தியற்று துயரத்திற்கு மட்டுமே ஆளாகுபவர்களாய் இருந்தாலோ, அவர்கள் மதம் மாறுவதிலோ, மதங்களையே நிராகரிப்பதிலோ எந்தத் தவறும் இல்லை. மனித வாழ்க்கை அத்தனை நீளமானதல்ல, இயலாததைப் போராடியே உயிர்துறக்க. போராடவும் வேண்டும், வாழவும் வேண்டுமென்பதே மண்ணில் பிறந்த மனித இதயங்களின் முடிவாய் இருக்கமுடியும்.

உள்நாட்டில் வேலை இல்லாதவர்கள்தாம் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள். வேலை எங்கே நான் அங்கே என்று செல்வோர்தான் இன்று உலகின் அதிக எண்ணிக்கையானோர். நாளை இதன் நிலை இன்னும் வளர்ச்சியடையும் என்பதை அனைவரும் அறிவோம். முன்பு ஊர் விட்டு ஊர் சென்றவர்கள், பின் மாநிலம் விட்டு மாநிலம் சென்றார்கள். இப்போது பெருமளவில் நாடு விட்டு நாடே செல்கிறார்கள். இவற்றுக்கான அடிப்படை என்னவென்றால் அது வாழ்க்கைதான். வாழ்க்கையைத் தேடிப்போவது வரவேற்கப்பட வேண்டியது.

அதேபோலத்தான் இந்த மதமாற்றங்களும்.மதம் மாறுவோர் அதிகமாக அதிகமாக எனக்கு ஒரு நம்பிக்கை பிறக்கிறது. விரும்பாததில் வீற்றிருக்க விரும்பாதோர், அதனுள்ளேயே சாகாமல் வெளியேறுகிறார்கள். அப்படி வெளியேறுவோர் அதிகரிக்க அதிகரிக்க எல்லா மதங்களையும்விட்டு மனிதர்கள் வெளியேறும் நாளும் விரைந்து வருகிறது.

துவக்கத்திலேயே சொன்னதுபோல, மதம் என்பது இறைவனை அடையாளம் காட்டவும் நல்ல வாழ்க்கை நெறிகளைச் சொல்லித்தரவும்தான். அப்படி இருப்பவற்றுள் எது சரி என்று ஒருவனுக்குப் படுகிறதோ அதில் அவன் மாறிக்கொள்வதே தனிமனித உரிமை, மற்றும் சுதந்திரம்.

ஒரே வீட்டில் ஏன் தாய் ஒரு மதமாகவும், தந்தை ஒரு மதமாகவும், மகன் ஒரு மதமாகவும் மருமகள் ஒரு மதமாகவும், மகள் மதமே அற்றவளாகவும் இருக்கக்கூடாது? யோசித்துப் பாருங்கள், அதில் என்ன தவறு இருக்கிறது? பிறந்துவிட்டால் அதிலேயே புழுங்க வேண்டும் என்றால், மதம் என்பதென்ன மாற்றிக்கொள்ளவே முடியாத ஊனங்களா? கிறித்துவமும், இஸ்லாமும் இரண்டிலிருந்து நான்கைந்து தலைமுறைக்கு முந்திய நம் தாத்தா-பாட்டி காலத்தில் வந்தது. மதம் மாறிய நம் தாத்தாவும் பாட்டியும் மதங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, பெரும் ஒப்பீடு செய்து மாறியிருக்க வேண்டும் என்று யாரும் சொல்ல முடியாது. பாவம் அவர்களுக்கு அந்த அளவுக்கு ஏது படிப்பறிவு. ஏதேதோ சமூகக் காரணங்களை வைத்து மதம் மாறியிருக்க வேண்டும்.

மதம் மாறுவதால் இனம் மாறாது நிறம் மாறாது தன் முகம் மாறாது, ஆனால் எது கொடுமை செய்ததோ அதிலிருந்து விடுதலை கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் என்றுதான் மதமே மாறுகிறார்கள். அங்கேயும் அது கிடைக்காவிட்டால், அதிலிருந்தும் வெளியேற சில் நிமிடங்களே போதும். ஆக மனிதன் மனிதனாக வாழ எந்த மரம் நிழல் தருகிறதோ அந்த மரம் நாடுவதே வாழ்க்கை.

ஒரு மதத்தில் தீண்டத்தகாதவர்களாய் இருப்பவர்கள் இன்னொரு மதம் மாறும்போது சகோதரகளாய் ஆகிறார்கள் என்றால் மதம் மாறுவது நல்ல விசயம்தான். ஒரு மதத்தில் அடிமைகளாய் இருக்கும் பெண்கள் இன்னொரு மதம் மாறும்போது சுதந்திரமாய் ஆவார்கள் என்றால் மதம் மாறுவது சிறந்ததுதான்.

மதம் ஒன்றும் பெற்ற தாய் இல்லை, அதை மாற்றாமலேயே வைத்திருக்க. வெறுமனே அது ஒரு கொள்கைதான்.(இப்படி மாற்றிக் கொள்ளக் கூடிய ஒன்றைப் பிடித்துக் கொண்டு மனிதநேயத்தைப் புறந்தள்ளுவது எந்த அளவு சரி -

பாம்புகள்கூட தங்கள்
தோல்களையே
சட்டைகளாக உரித்துப் போடுகின்றன.

ஏன் இந்த
மனிதர்கள் மட்டும்
தங்கள் சட்டைகளையே
தோல்களாக ஆக்கிக் கொள்கிறார்கள்.


அதன் நல்ல கொள்கைகள் ஈர்ப்பதைவிட அதன் மோசமான கொள்கைகள் வதைப்பது அதிகம் எனில் வெளியேறுவது நல்வாழ்வின் அடையாளம்.

எத்தனைதான் சிலர் கல்வி கற்றுவிட்டாலும், உயர் பதவிகளில் பணியாற்றினாலும், பணக்காரர்கள் ஆகிவிட்டாலும், பலர் அவர்களை வன்மையாய் சாதியின் பெயரால் கேவலப்படுத்துவார்கள். அவர்களை மோதிமிதித்துவிட்டு, முகத்தில் உமிழ்ந்துவிட்டு, மாற்றம் காணுவதே மீதி வாழ்வுக்கு அமைதி.

ஒரு மதத்திற்குள் இருந்துகொண்டே அதன் சாதிக்கொடுமைகளுக்காகப் போராட வலிமை பெற்றவர்களாய், நல்ல மனம் கொண்ட உயர்சாதிக்காரர்களாகவே இருந்திருக்கிறார்கள். தாழ்ந்த சாதிக்காரர்களில் பலர் போராடும் வலிமையும் இல்லாதவர்களாய், அதற்கான அறிவும் இல்லாதவர்களாகவே நெடுங்காலமாய் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். விழித்துக்கொண்ட தாழ்ந்த சாதிக்காரர்கள் போராடிப் போராடி மனம் வெறுத்து ஒரு காலகட்டத்திற்குப் பிறகு மதம் மாறித்தான் இருக்கிறார்கள்.

உயர் சாதிக்காரர்களுள் பலர் இன்றும், சாதியமைப்பு தீண்டாமை போன்றவற்றை மாற்றுவது அவசியமில்லை என்று வாதிடுவதும், ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்கள் பெண்ணடிமைத் தனத்தை மாற்றத் தேவையில்லை, பெண்கள் பாதுகாப்பாகவும் நலமாகவுமே வாழ்கிறர்கள் என்று கூறுவதும் வேடிக்கையான விசயங்கள். சுயநலத்தின் உச்சங்கள். வக்கிர எண்ணங்களின் எச்சங்கள்.

மதம் மாறினால் அடையாளம் தொலைந்துவிடுமே என்று சிலர் அடுத்தவர்களுக்காக வெகு அக்கறையாய்க் கவலைப்படுகிறார்கள். நல்ல அடையாளங்களையே பெற்றிருக்கும் இவர்களைப் போன்ற மேல் சாதியினருக்கும் சுதந்திர வர்க்கத்துக்கும் மாற்றம் ஏன் வேண்டும். அடுத்தவர்களை அடிமைகளாக்கி வாழ்வதுதானே இவர்களின் எண்ணம்.

நெருப்பில் நிற்பவனுக்குத்தான் வேதனை. வசதியாய் நிழலில் நின்று கொண்டு உபதேசம் செய்வது மிகவும் எளிதானதுமட்டுமல்ல அப்பழுக்கில்லாத சுயநலமானது. அப்படியே நீ நெருப்பிலேயே நின்றுகொண்டு போராடு, நிழலுக்கு ஓடிவந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ளாதே ஏனெனில் உன் அடையாளம் தொலைந்துவிடும் என்பது இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நகைச்சுவையாகும்.

அடையாளம் அடையாளம் என்றால் என்ன? தோட்டி என்பது ஓர் அடையாளமா? பறையன் என்பது ஓர் அடையாளமா? கீழ்ச்சாதி என்பது ஓர் அடையாளமா? அடிமை என்பது ஓர் அடையாளமா?இவற்றிலிருந்து வெளியேறாவிட்டால் நீ உன் மனித அடையாளம் தொலைக்கிறாய் என்பதை மறக்காதே. நெஞ்சு நிமிர்த்தி நான் மனிதன் என்று சொன்னால் அது உயிரினத்தின் அடையாளம். தமிழில் உரையாடி நான் தமிழன் என்று மார்தட்டினால் அது தாய்மொழியின் அடையாளம். நான் கீழ்ச்சாதி என்று சொன்னால் அது அடையாளமா? நான் அடிமை என்று சொன்னால் அது அடையாளமா?

நாம் யாருக்கும் அடிமைகள் இல்லை நாம் யாரையும் அடிமையாக்கவில்லை என்று நடைமுறையில் வாழ்ந்துகாட்டுவதே மனிதர்கள் அவசியமாகவும் அவசரமாகவும் அடையவேண்டிய அடையாளம்.

ஒரு காலத்தில் மதமாற்றம் என்றாலே அது கட்டாயத்தால் நிகழ்ந்த ஒன்றாய் இருந்தது. இன்று அப்படியல்ல, யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்து வைக்கமுடியாது. விரும்பியவர்களை யாரும் தடுக்கவும் முடியாது.திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்று பட்டுக்கோட்டையார் பாடினார்.

உண்மைதான், ஆனால், திருடனாய்ப் பார்த்து திருந்தவேண்டும் என்றால் அவனுக்கு நல்லவை கெட்டவைகளில் நம்பிக்கை வேண்டும். திருடுவது தவறு என்று தோன்றவேண்டும். ஆனால் அப்படி எண்ணுபவர்கள் திருடர்களாய் இருப்பதில்லை. நாட்டில் இருக்கும் சட்டங்கள் சரியாகச் செயல்பட்டால்தான் திருட்டைக் கட்டுக்குள் கொண்டுவர முடிகிறது.

அதே போலத்தான், பாவ புண்ணியங்களின் மீது பயத்தை உண்டு பண்ணி நல்லவர்களாய் வாழ வழி செய்தன மதங்கள். ஆயினும் மனிதர்கள் தவறுசெய்பவர்களாகவே இருக்கிறார்கள். அதற்கு நாட்டின் சட்டங்கள் சரியாகச் செயல்படுவதுதான் நடைமுறைத் தீர்வு.

நாட்டின் சட்டங்களை வகுத்தவர்கள், பல மதங்களிலும் சொன்னவற்றை அலசிப்பார்த்திருக்கிறார்கள், பல புரட்சியாளர்கள் சொன்னவற்றை அனுசரித்திருக்கிறார்கள், மக்கள் நலன், நாட்டின் முன்னேற்றம் இவை அனைத்துக்கும் எது சிறந்தவழி என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அனுபவத்தின் பலனால் அவ்வப்போது சட்டத்தை மாற்றியமைத்து இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றுள் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் செயல்படுத்துவதில் ஓட்டைகள் இருந்தால், இனி வரும் காலங்களில் நிறைவு படுத்திக்கொண்டும், ஓட்டைகளை அடைத்துக்கொண்டும் சட்டங்கள் வரும். அவை கடைபிடிக்கப்படும். நாடும் மக்களும் அமைதியாகவும் நிம்மதியாகவும், நாளுக்கு நாள் குறைந்துகொண்டே போகும் பிரச்சினைகளோடு சுகமாக வாழ்வார்கள்.

ஆக, மதமாற்றம் என்பது, கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கான தற்காலிக தீர்வுதான். ஆனால் அது அவசியமான தீர்வு. நிரந்தரத் தீர்வு என்பதை எட்டிப்பிடிக்க இதுபோன்ற மதமாற்றங்கள் அவசியமாகின்றன. மதமாற்றம் ஒரு மதத்தின் மீதுள்ள கண்மூடித்தனமான பற்றை அடித்து நொறுக்கி, எனக்கு வேண்டாம் என்றால் வெளியேறுவேன் என்று வீராப்பாய்ச் சொல்கிறது. இதை நான் வரவேற்கிறேன்.

பிறப்பால் ஒரு மதம் பழக்கத்தால் ஒரு மதம் விருப்பால் ஒரு மதம் அறிவால் நான் எந்த மதமும் இல்லை என்று எத்தனையோ பேர்கள் இன்று வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு மதத்துக்குள் இருக்கும் பெரும்பாலானோர் எந்த மதத்தையும் ஆதரிக்காதவர்களாய் அல்லது எல்லா மதங்களையும் ஆதரிப்பவர்களாய்த்தான் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

ஏதோ பிறந்தோம் இந்த மதத்தில் இருக்கிறோம். அப்படியே அதைப் பின்பற்றியா நடக்கிறோம், நடப்பதெல்லாம் நம் விருப்பம், இந்த சமுதாயத்துக்காக அந்த மத முகம், அவ்வளவுதான் என்று இருப்போர் பலரை பலரும் அறிவார்கள்.

சிலருக்கு மதம் ஓர் உணர்வுபூர்வமான அங்கம். அதைப் பற்றிப் பேசினாலே, கொதித்தெழுந்து அனைத்தையும் கொளுத்திப் போட்டுவிடுவார்கள். இந்த உணர்ச்சித் தளத்திலிருந்து மனிதனுக்கு விடுதலை தருகிறது மதமாற்றம்.

மனிதர்கள் அறிவாலும் அன்பாலும் முழு விடுதலை பெறவேண்டும். அதற்குத் தடையாய் இருப்பவற்றை மிதித்து உயர்வதே வாழ்க்கை.

கறுப்பு நிறத்தை வெறுத்து வெள்ளை நிறம் இரத்தவெறி கொண்டது ஒரு காலம். கறுப்பு நிறத்தைக் கண்டு அதில் மயங்கி வெள்ளை நிறம் காதல் கொள்வது இந்தக் காலம். நிறமாற்றம் ஈர்ப்பினைத் தருகிறது பலருக்கு. கறுப்பாய் இருப்பவர்கள் வெள்ளையாய் இருப்பவர்களை விரும்புவதும், வெள்ளையாய் இருப்பவர்கள் கறுப்பாய் இருப்பவர்களை விரும்புவதும் இயற்கை.

இன்று உலகின் பரப்பு சுருங்கிப் போய்விட்டது. இனங்களெல்லாம் ஒன்றாய்க் கலக்கின்றன. புதிய இனங்கள் தோன்றுகின்றன. அல்லது இன அடையாளங்கள் மறைகின்றன.

பண்பாடுகள் எல்லாம் ஒன்றாய்க் கலக்கின்றன. புதிய கலாச்சாரங்கள் உருவாகின்றன அல்லது பழைய கலாச்சாரங்களின் முகங்கள் வெளிறிப் போகின்றன.

மதங்களெல்லாம் ஒன்றாய்க் கலக்கின்றன.(ஒரு கேள்வி: அப்படியா சொல்கிறீர்கள்? இல்லையே. ஒவ்வொன்றும் தனித்தனியாயல்லவா, ஒன்றோடு ஒன்று ஒன்றாமலேயேதான் இருக்கின்றன என்பதுதானே சோகம்!) விருப்பமானதைத் தேர்வு செய்வதே வாழ்க்கை என்ற எண்ணம் ஒவ்வொரு இதயத்திலும் வலுக்கிறது.

இந்தச் சூழலில் மதமாற்றம் மட்டுமல்ல, மனித நலனை நோக்கிய எந்த மாற்றமும் நல்ல மாற்றம்தான்.

Tuesday, August 04, 2009

326. மதுரக்காரங்க - நாங்க ரொம்ப பொறுமைக்காரங்க ...

*

*

கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி எங்க ஊரு தமுக்கத்தில ஒரு பாட்டுக் கச்சேரி. வைரமுத்து பாடல்விழா. பெரிய மேடை அமைப்பு; 12 காமிராக்கள்; பெரிய இரு திரைகளில் மேடைக்காட்சிகளின் ஒலி/ளி பரப்பு; அதென்னவோ, ஜாலி ஜம்ப் என்றோ வேறென்னவோ ஒரு பெயர் சொன்னார்கள் - ஒரு காமிரா அங்குமிங்கும் ஆடி ஆடி படம் எடுத்தது.

வைரமுத்து தன் தலைமையுரையில் 'மழை நீக்கி வரம்' ஒன்று கேட்டார். பரவாயில்லை -- "சாமி' முழுசா கேட்காவிட்டாலும், (விழாவின் இறுதி அரைமணி நேரத்தில் மிக மிகச் சின்ன சாரலடித்து, key boardகாரகளையும், மற்ற ஒலி, ஒளிபெருக்கியாளர்களையும் மிரள வைக்க முயற்சித்தது.) ஓரளவு மழையின்றி மாலை 7 மணிக்கு ஆரம்பித்த விழா இரவு 11.30 வரை தொடர்ந்தது.

'தமுக்க மைதானம்' என்றால் அந்தக் காலத்து ராசாக்கள் தமுக்கு அடிக்கும் இடமாதலால் அந்தப் பெயர் என்பதுதான் எங்களுக்குத் தெரிந்த விஷயம். ஆனால், வைரமுத்து திருமலை நாயக்கர் காலத்து, தெலுங்குச் சொல் அது என்றும், அதன் பொருள் 'யானைப் போர் புரியும் இடம்' என்றும், அரசர்கள் யானைகளைப் போரிட வைத்துக் காணும் இடம் என்பதே பொ்ருள் என்றும் சொன்னார்.

பாடல்கள் பாட உன்னி கிருஷ்ணன், சீனிவாசன், சுஜாதா, அவரது மகள் ஸ்வேதா என்ற நான்கு பாடகர்கள். முதலில் உன்னி கிருஷ்ணன் பாட வந்தார். அவருக்கு ஒரு மலைப்பு. இதுவரை இந்த மாதிரி "அமைதியான" கூட்டத்தில் பாடியதாக எனக்கு நினைப்பில்லை என்றார்! ஏறத்தாழ இரு வருடங்களுக்கு முன் எங்கள் கல்லூரியில் நடந்த எஸ்.பி.பி. கச்சேரியிலும் இதே கருத்தை பாடகர்கள் சொன்னது நினைவுக்கு வந்தது. அதான் சொல்றேன்: எங்க மதுரக்காரவுக எல்லோரும் ரொம்ப பொறுமைக்காரங்க .. சும்மா சத்தம் போடுறது; கைதட்டுறது; விசிலடிக்கிறது -- இதெல்லாம் என்னென்னே எங்களுக்கெல்லாம் தெரியாது; அம்புட்டு சுத்தம். கடைசிவரை கூட்டம் அப்படியே - அதாவது அந்த பொறுமைக்கார மூடிலேயே - இருந்தது. நானும் அப்பப்ப திரும்பி கூட்டத்தின் கடைசி, பக்க ஓரங்களில் ஏதாவது இளைஞர் கூட்டம் ஏதாவது டான்ஸ் அது இதுன்னு ஏதாவது செய்யுமான்னு பார்த்தேன். என்னே ஒரு அமைதி ! :)

விழா கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் நடுவிலும் வைரமுத்து தன் பாடல் எழுதிய அனுபவங்களைப் பற்றிச் சொல்லி, சில விளக்கங்கள் கொடுத்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார். முதன் முதலில் எம்.எஸ்.வீ.க்கு ஒரு பாடல் எழுதியதற்கு ஒரு விளக்கம் கொடுத்தார். கண்ணதாசன் மருத்துவ விடுதியில் இருந்ததால் தன்னை அழைத்து, மனதில்லாமல் எம்.எஸ்.வீ. கொடுத்த இசைக்குப் பாட்டெழுதியதைக் கூறினார்.

பாடகர்கள் இனிதாகப் பாடினார்கள். ஆனால், நாங்க மதுரக்காரவுக ... எம்புட்டு நல்லா பாடினாலும் மெல்லிதாகக் கை தட்டினோம். முதலில் எல்லாமே melodies தான். பின் சில பாடல்கள் விரைவுப் பாடல்கள். எல்லாவற்றையும் ஒரே சீராக ஒரே தட்டில் வைத்து அடக்கமாகக் கை தட்டினோம்!

முன்பு சொன்னேனே .. அதுபோல் வைரமுத்து முதலில் எம்.எஸ்.வீ. பெயரை ஒரு முறை சொன்னாரா .. அதன் பின் ஒரே ஒரு இசையமைப்பாளரைப் பற்றி மட்டுமே பேசினார் - ரஹ்மான். வேறு எந்த இசையமைப்பாளருக்கும் அவர் பாட்டே எழுதவில்லையோ என்று எனக்குத் தோன்ற ஆரம்பித்தது. நடுவில் சீனிவாசன் ஒரு பாட்டைப் பாடும் முன் 'இது ராஜா சார் பாடல்' என்றார். கூட்டத்தில் அதற்காகத் தனியாக ஒரு கைத்தட்டல்கள் இருந்தன. எனக்கு தோன்றியதுபோலவே வேறு சிலருக்கும் தோன்றியிருக்க வேண்டும். இறுதி நேரத்தில் தங்ஸிடம் 'பாரேன்; இளையராஜா பெயரைக்கூட இந்த ஆள் சொல்லலை பார்த்தியா?' என்று மெல்ல கேட்டேன். அப்போது கூட்டமும் வெகுவாகக் குறைந்திருந்தது. நான் அப்படிச் சொன்ன ஒரு சில நிமிடங்களில் எங்களுக்கு முன்பு இருந்த ஒரு குழுவில் ஒருவர் விரைவாக அடுத்த நபரிடம் சத்தமாகப் பேசியது என் காதில் விழுந்தது. நான் சொன்னதை ஏறத்தாழ அவர் அவரது நண்பரிடம் கூறிக்கொண்டிருந்தார். accusations ...

காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கிழக்கே போகும் ரயில் -- இப்படி பல படங்கள் என் மனதில் நினைவுக்கு வந்தன. அந்த மூவரும் - பாரதி ராஜா, இளையராஜா, வைரமுத்து - போட்டியிட்டு நடத்திய அந்த அழகான பாட்டுக்களை எப்படி இவரால் இப்படி மூட்டை கட்டித் தூக்கிப் போட முடியுது என்று தோன்றியது. இளையராஜாவின் பாடல்களைப் பற்றி ஏதும் கூறாமலேயே வைரமுத்து பேசிக்கொண்டிரு்ந்தார். ரொம்பவே நெருடலாக இருந்தது. அப்படி உங்களுக்குள் என்னதான் தகராறு? ego-வா .. இல்லை .. சாதியா .. எது உங்களைப் பிரித்துப் போட்டு .. எங்களைப் பட்டினி போட்டது? வருத்தமாக இருந்தது.

மழை சிறு தூறலாகப் போட ஆரம்பித்த போது கூட்டம் சிறிது கலைந்தது. இருந்தும் கடைசிப் பாட்டு வரையும் உட்கார்ந்திருந்தோம். கூட்டம் குறைந்த அந்த நேரத்தில் பேச வந்த வைரமுத்து, தன் வேண்டுகோளுக்கிணங்கி உட்கார்ந்திருந்த கூட்டத்தைப் பார்த்துப் பேச ஆரம்பித்த போது, நடுவில் உங்களுக்கெல்லாம் நான் 'முதல் மரியாதை' செய்ய வேண்டும் என்றார். ஏனென்ன்று தெரியவில்லை; கூட்டத்திலிருந்து 'அந்த வார்த்தைக்கே' தனி மரியாதை கிடைத்தது. என்னைப் போலவே பலரும் நினைத்திருந்தார்கள் என்பது தெளிவாயிற்று. அதனால்தானோ என்னவோ, எம்.எஸ்.வீ. பற்றிச் சொல்லிவிட்டு, அதன்பின் ரஹ்மானைப் பற்றி மட்டும் பேசியவர், முதல் மரியாதை படத்திற்கு தனக்கு முதல் தேசிய விருது கிடைத்தது பற்றிச் சொன்னார். அந்த மரியாதை மதுரைத் தமிழுக்குக் கிடைத்த பேரு என்றார். 'வீரபாண்டித் தேரு' என்று அந்த பாடலில் எழுதி தன் மண்ணின் பெயரை பாட்டில் ஏற்றியதற்குக் கிடைத்த பரிசு என்றார். கடைசியாக, அதுபோன்ற ஒரு காவியத்தை உருவாக்கிய பாரதிராஜாவுக்குப் பாராட்டும், பாடல்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு நன்றியும் என்றார். அப்பாடா ...! என்னமோ போங்க .. எல்லோரும் இம்புட்டு பெரிய மனுஷங்களா இருந்திட்டு ... :(

கூட்டம் குறைந்த பின் 12 தொலைபேசிப் பொட்டிகளுக்கு முன்னால் உட்கார்ந்து ஒளிக்காட்சியை ஒழுங்குபடுத்துவதையும், அந்த தொட்டில் காமிராவை இயக்குவது பற்றியும் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தேன்.



Z TV முக்கியமான ஸ்பான்சர் போலும். நல்லதாகப் போயிற்று. அதனால்தானே, அதில் வேலை பார்க்கும் நம்ம தல பாலபாரதி எனக்கு இரு அனுமதிச் சீட்டுக்களை கூரியரில் அனுப்பி வைத்தார்! வாழ்க தல. எங்கள் குடும்பமும், சில சீரியல்களுக்கும் இப்போது ஒரு திரைப்படத்திற்கும் இசையமைக்கும் நண்பனின் குடும்பமும் சேர்ந்து பார்க்க வைத்த தலைக்கு மீண்டும் நன்றி.



*