Wednesday, September 29, 2010

443. THE GOOD MAN JESUS AND THE SCOUNDREL CHRIST ...1

*

முதல் பதிவு: 1


இரண்டாம் பதிவு: 2


மூன்றாம் பதிவு: 3




இது இப்போது வாசித்து முடித்த புத்தகம்.

பெயரைக்  கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல். வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி, கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன்.
வாங்கிய பின் பின்னட்டையிலேயே 'இது ஒரு கதை' என்று தெளிவாகப் போட்டிருந்தது.(அந்தப் பக்கத்தை இணையத்தில் காண்பிக்காததும் ஒரு வியாபார தந்திரம் போலும்!)

கதைதான். மேம்போக்காக வாசித்தால் மிக எளிய ஒரு கதை தான்.

பைபிளில் வரும் நிகழ்வுகளை 'உல்ட்டா' செய்துள்ளார். JESUS CHRIST என்றிருக்கும் ஒருவரை JESUS & CHRIST என்று இருவராக, இரட்டைப் பிள்ளைகளாக ஆக்கியுள்ளார்.மரியாளுக்கு தேவதூதன் இளைஞனாக வந்து கடவுளின் விருப்பத்தைச் சொல்கிறார். அவள் குழந்தைகளைப் பெறுகிறாள். பெத்லேகம், தேவதூதர்கள் ஆட்டிடையர்களிடம் நல்ல சேதி சொல்வது, ஹெராது அரசனின் ஆணை ... எல்லாம் நடைபெறுகிறது.

ஜீசஸ் நல்ல சூட்டிகையான பையன்; கிறிஸ்து சிறிது அடங்கிய, சோர்வான பையனாக வளர்கிறான். இளம் வயதிலேயே ஜீசஸ் பல அதிசயங்கள் செய்கிறார். சாய வேலையில் இருக்கும் ஒருவரின் ஆலையில் எல்லா துணிகளையும் கருப்பு சாயத்தில் முக்கிவிட்டு, அதன் பின் அவர் விரும்பும் வண்ணங்களில் அந்த துணிகளை மாற்றித் தருகிறார்(பக். 23). ஓய்வு நாளில் குருவி பொம்மைகள் செய்து விளையாடிக்கொண்டிருக்கிறார். அது தவறு என்று கடிந்து கொள்ள குருமார்கள் விரைந்து வரும்போது அந்தக் குருவி பொம்மைகளைப் பார்த்து ஜீசஸ் கை தட்ட, அத்தனை குருவிகளும் வானத்தில் பறந்து செல்கின்றன. தண்டிக்க வந்தவர்களிடம் கிறிஸ்து தன்மையாகப் பேசி ஜீசஸைக் காப்பாற்றுகிறார் (24).


குழந்தைகளின் பனிரெண்டாவது வயதில் ஜெருசலேமிற்கு அவர்கள் குடும்பம் செல்கிறது. ஜீசஸ் காணாமல் போக, எல்லோரும் தேடிச்செல்கிறார்கள். கோவில் பக்கம் நிறைய கூட்டம். அங்குதான் ஜீசஸ் இருக்க வேண்டுமெனக் கூறி அங்கே செல்கிறார்கள்.  ஜீசஸ் தன் பெயரைக் களிமண்ணால் அந்தக் கோவிலின் சுவர்களின் மேல் எழுதி வைத்ததைக் கண்டு குருமார்கள் கோவித்து ஜீசஸை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது, கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் உள்ள வாசகங்களை மேற்கோள் காட்டி ஜீசஸைக் காப்பாற்றுகிறான்.(29)


யோவான் மூலம் இருவருக்கும் திருக்குளிப்பு (baptism) யோர்தான் நதியில் நடக்கிறது. ஜீசஸுக்குத் திருக்குளிப்பு நடக்கும்போது அவர் தலைமேல் புறாஒன்று பறந்து செல்வதைப் பார்த்த கிறிஸ்துவிற்கு அப்புறா மோட்சத்திலிருந்து பேசினால் எப்படியிருக்கும் என்று தோன்றியது. ஆனால் அவன் தன் அன்னையிடம் புறாவைப் பற்றி சொல்லி, அப்போது கடவுளின் ஏவுதலால்  அந்தப் புறா என்னிடம் பேசியது என்றார். (36-37)


ஜீசஸ் நாற்பது நாட்கள் தனியே ஒரு காட்டுக்குள் கடவுளை நோக்கி ஜெபம் செய்கிறார்.கிறிஸ்து அவரைப் பார்க்க காட்டுக்குள் சென்று பைபிளில் சைத்தான் எப்படி ஜீசஸை ஆசை காட்டியது போல், சோதிக்க நினைத்தது போல்,  'பசித்தால் கல்லை எடுத்து உணவாக்கி சாப்பிடு' என்று கேட்டுக் கொள்கிறார். இதுபோன்ற நிறைய அதிசயங்களை - miracles - செய்து காட்டினால்தான் நீ பேசுவதும் மக்களின் மனத்தில் ஆழமாகப் பதியும் என்று கிறிஸ்து ஜீசஸிடம் போதிக்கிறார். மக்களைக் கவர கடவுள் கையாளும் வழிதான் அது. அப்படி நம்பிக்கை வந்து விட்டால் அவர்கள் எல்லோரும் ஒரே சபையாகி ஆழ்ந்த  நம்பிக்கைகளோடு இருக்க முடியும். ஊழியம் செய்பவர்கள் இருண்ட உலகின் பாகங்களுக்கு உன் வார்த்தைகளைச் சொல்லி அங்குள்ள மக்களை கடவுளின் குடும்பத்திற்குக் கொண்டு வர முடியும். (41)



ஜீசஸ் மக்களிடம் தன் போதனையை ஆரம்பிக்கிறார். பேய்களை விரட்டுகிறார்; உடல் நலமுற்றவர்களை குணமாக்குகிறார் என்றெல்லாம் எங்கும் அவரது பெயர் பரவுகிறது. அவருடைய பேச்சுகள் மக்கள் மனதில் புரட்சிகரமான எண்ணங்களை உருவாக்குகிறது என்பதைக் கண்ட கிறிஸ்துவிற்கு மிக்க மகிழ்ச்சி. (51-55)

இந்த நேரத்தில் ஒரு புது மனிதர் கிறிஸ்துவிடம் வருகிறார். ஜீசஸைப் போல் உனது பெயரும் எல்லோராலும் நினைக்கப் பட வேண்டும் என்கிறார். ஆனால் அவர் யாரென்பது கிறிஸ்துவிற்குத் தெரியாது. தெரிந்து கொள்ள அவரிடம் கேட்டாலும் அதற்கு ஏதும் பதில் கிடைக்கவில்லை. (57)

கானாவூரில் தண்ணீரை ரசமாக (wine) மாற்றிய கதையும் வருகிறது. ஜீசஸ் தலைமை சமையல்காரரிடம் பேசுகிறார்; பின் ரசம் வருகிறது. ஒரு சாரார் 'ஆஹா! எப்படி தண்ணீரை ரசமாக மாற்றினார்' என்கிறார்கள். இன்னொரு சாரார் 'ஆஹா! சமையல்காரர் பதுக்கிய ரசத்தை வெற்றிகரமாக வெளியே கொண்டுவந்து விட்டார்' என்கின்றனர். அடுத்து ஒரு தொழுநோயாளியைச் சுகமாக ஆக்குகிறார். (61, 63) மலைப்பிரசங்கமும் நடக்கிறது. (69) எல்லாவற்றையும் கிறிஸ்து முழுமையாக எழுதி வைக்கிறார். இருந்தாலும், தான் இல்லாத போது ஜீசஸ் சொல்வதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள, கிறிஸ்து, ஜீசஸின் சீடர்களில் ஒருவரை ஒற்றனாக்கிக் கொள்கிறார் (informant). (91)

கிறிஸ்துவிற்கும் அவரைத் தூண்டிக்கொண்டிருக்கும் மர்ம மனிதருக்கும் நடுவில் ஒரு நீண்ட உரையாடல் நடக்கிறது. ஜீசஸின் அரசு இந்த உலகிற்கு வந்துவிடும் என்கிறார் அந்த மர்ம மனிதர். ஆனாலும் அப்படி வருவதற்கு கிறிஸ்துவின் உதவி மிகவும் தேவை என்கிறார். மேலும், அப்படி ஒரு அரசு வருமாயின் அது நிறைய மக்களைக் கொண்டதாகவும், யூதர்கள் மட்டுமின்றி வேற்று மக்களும் இருக்குமாறு அமைய வேண்டும். அவர்கள் எல்லோரும் புத்திசாலித்தனமாக ஆளும் திறம் வாய்ந்த சில தலைவர்களின் கீழ் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். அத்தகைய ஒரு திருச்சபை (church) கட்டாயம் அமைய வேண்டும்'. (145). மேலும் அந்த மனிதர் 'பல பேர் வாழ ஒருவர் ஏன் தன் உயிரைக் கொடுக்ககூடாது' என்று கேட்கிறார். (146)  

நான் எனது பழைய பதிவில் மத்.10: 34,35 பற்றிய ஒரு விவாதம் வைத்திருந்தேன். அந்த விவாதத்தை இந்த நூலிலும் கண்டேன். (164). விவிலியத்தில் கேள்வி கேட்கக் கூடிய பகுதிதான் ...

ஜீசஸ் பரிசேயர்களுக்குச் சினம் வரும் வகையில் நடந்து கொள்கிறார். கோவிலில் வியாபாரம் செய்பவர்களை விரட்டி அடிக்கிறார். கிறிஸ்துவும் ஒற்றனும் சந்திக்கிறார்கள்.  ஜீசஸும் மற்ற சீடர்களும் ஏதேனும் ஆபத்து வரலாமென்று எதிர்பார்த்திருப்பதை அவர்  கிறிஸ்துவிடம் கூறுகிறார்.  அடுத்து அந்த மர்ம மனிதனும் கிறிஸ்துவும் சந்திக்கிறார்கள். கிறிஸ்து அந்த மர்ம மனிதன் யாரென்று தெரிந்து கொள்ள முயல்கிறார். நம்பிக்கையோடு இரு என்பது தான் பதிலாக இருக்கிறதேயொழிய வேறு சரியான பதில் கிறிஸ்துவுக்குக் கிடைக்கவில்லை. அவரென்ன ஒரு வான தூதரா? (angel?) இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது கிறிஸ்து அந்த மனிதனிடம் தான் தன் உயிரைக்கூட ஜீசஸுக்காகக் கொடுப்பேன் என்னும் போது, பதிலாக, "நீ சாக வேண்டியதில்லை; ஆனால் நீ ஜீசஸை அவர் எதிரிகளிடம் காட்டிக் கொடுக்க வேண்டும். அவர்தான் சாக வேண்டும்" என்கிறார். ஜீசஸ் வேண்டாம்; நானே சாகிறேன் என்ற கிறிஸ்துவின் பதிலை அந்த மனிதர் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து விவாதிக்கும் போது, அந்த மனிதர், "புதுமைகள் (miracles) இல்லாமல் போனாலோ, திருச்சபை (church) என்று ஒன்றில்லாமல் போனாலோ,  அவரது வார்த்தைகள் இல்லாமல் போனாலோ அவர் இந்த உலகிற்கு வந்ததற்கே பொருளில்லாமல் மண்ணில் ஊற்றிய நீர்போல் பயனின்று போய்விடும்". இதையெல்லாம் கூறி கிறிஸ்துவை முழுவதுமாக தன் விருப்பத்திற்கு மாற்றி விடுகிறார்.  அதுவே ஒரு திருச்சபையை நிறுவுவதற்குத் தேவையானது என்று கூறி, இதற்கு எப்போது உடன்படுகிறாயோ அப்போது என்னை காலிபாஸின் வீட்டில் வந்து பார் என்று கூறிவிட்டு அந்த வானதூதர் சென்றுவிடுகிறார். 

மனம் நொந்த கிறிஸ்து பெத்திஸ்டாவில் உள்ள ஒரு குளத்திற்குச் செல்கிறார். அங்குள்ள மூன்று பிச்சைக்காரர்களிடம் மாட்டிக் கொள்கிறார். அவர்களது பேச்சும் நடவடிக்கைகளும் இன்று நாம் பேசும் முதலாளித்துவம், சமூகம், exploitation போன்ற அனைத்தும் அவர்கள் பேச்சில் வெளிப்படுகிறது. மிகவும் ஆழமான விவாதங்கள் அவை. (177)


கிறிஸ்து அந்த மர்ம மனிதனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு கரியபாஸின் வீட்டிற்குச் செல்கிறார். கரியபாஸ் ஜீசஸைக் காட்டிக் கொடுப்பதற்காகக் கொடுக்கும் பணத்தையும் பெற்றுக் கொள்கிறார்.(189)  

ஜெத்சமேனி தோட்டத்தில் ஜீசஸ் தன் சீடர்களோடு சென்று அங்கே தனியாக "கடவுளிடம்" பேசுகிறார் - அவருக்கு கடவுளிடமிருந்து எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கவேயில்லை. அவர், "நான் பேசுவது எதையும் நீர் கேட்கவில்லை.  என் வாழ்நாள் முழுவதும் நான் உம்மோடு பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் எனக்கு மெளனமே பதிலாகக் கிடைத்துள்ளது. கடவுளே, நீ எங்கே இருக்கிறாய்? அதோ வானத்தில் தெரியும் அந்த நட்சத்திரங்களுக்கு நடுவே நீ இருக்கிறாயா? அங்கே உட்கார்ந்து கொண்டு மற்றொரு புதிய உலகைப் படைத்துக் கொண்டிருக்கிறாயா?  நீ படைத்த இந்த உலகம் உனக்கு சலித்து விட்டதா?  என்னைத் தத்தளிக்க விட்டுவிட்டு நீ எங்கோ போய் விட்டாய்."

தொடர்ந்து ஜீசஸ் பேசிக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவருக்கு எப்பதிலும் கிடைக்கவில்லை. "திருச்சங்கீதத்தில் (Psalms) "முட்டாள் தன் இதயத்துக்குள் சொல்லிக்கொள்கிறான் - கடவுள் இல்லையென்று." இந்த முட்டாளை எனக்குப் பிடிக்கிறது. ... எங்களையெல்லாம் ஏனிப்படி நடத்துகிறாய்? நல்ல தண்ணீரைப் படைத்து விட்டு அதனோடு களிமண்ணையும் சேர்த்து அதனை தன் குழந்தைகளுக்கு கடவுள் கொடுப்பானா?

எந்த பதிலும் இல்லை. எங்கும் மெளனம். 

ஒரு முட்டாள் கடவுளை நோக்கி செபம் செய்து ஏதும் பதிலில்லை என்றால் அவன் இந்த மெளனத்திற்குக் காரணம் கடவுள் இல்லையென்றுதான் நினைப்பான். 

நான் பேசுவதை நீ கேட்டுக் கொண்டிருந்தால், ஒன்றை கேட்டுக் கொள். உன் பெயரால் ஆரம்பிக்கப்படும் எந்த மதமும் ஏழ்மையானதாக, எந்த ஆளுமையும் இல்லாமல் சாதாரணமானதாக இருக்க வேண்டும். அன்பைத் தவிர வேறு எந்த வித ஆளுமையும் இல்லாமல் இருக்க வேண்டும். அதற்கென்று சொத்து, சட்ட திட்டங்கள் என்று ஏதுமிருக்கக் கூடாது. யாரையும் தண்டிக்கக் கூடாது; மன்னிக்க மட்டுமே செய்ய வேண்டும். ஆல மரமாய் தழைத்து பலருக்கும் தங்குமிடமாக இருக்க வேண்டும்.(201)


... ஜீசஸ் தன் செபத்தை முடித்துக் கொள்கிறார். இனி சொல்ல என்ன இருக்கிறது?

இப்பகுதியை வாசிக்கும்போது எனது 'அன்னை தெரஸா - Come Be My Light  என்ற நூலைப்பற்றிய என் இடுகையில் வரும் ஒரு பகுதியை மிகவும் ஒத்து வருகிறது. அதனை இங்கு அடைப்புக் குறிக்குள் கொடுக்கிறேன்: 

(என்னைச் சுற்றிலும் இருள் ...

எனதருமை ஆண்டவனே, என்னை ஏன் கைவிட்டு விட்டீர்? நான் உமது அன்பின் குழந்தை ... ஆனால் இப்போது மிகவும் வெறுக்கத்தக்கவளானேன் ... வேண்டாமென நீர் தூக்கி எறிந்தவள் ... விரும்பப்படாதவள் ... நான் அழைக்கிறேன் ... ஏங்குகிறேன் ... விரும்புகிறேன் … ஆனால் எனக்கோ யாரிடமிருந்தும் ஒரு பதிலும் கிடைக்கவில்லை ... யார் மீது நான் சாய்வது?.... யாருமில்லை ...… தன்னந்தனியே நிற்கிறேன். வெருட்டும் இருட்டு .... நான் மட்டும் தனியே ... தேவையற்றவளாக, கைவிடப்பட்டவளாக. தனிமைப் படுத்தப்பட்ட என் இதயத்தின் முழு தாகமும் அன்பிற்காக ஏங்கி நிற்கிறது. என் நம்பிக்கைகள் எல்லாம் என்னாயிற்று? இதயத்தின் ஆழத்திலும் கூட எல்லாமே இருள் சூழ்ந்த வெற்றிடமாக ... என் கடவுளே ... பொறுக்க முடியாத வேதனை. இந்த வலி எங்கும் எப்போதும் ... எனது தெய்வ நம்பிக்கைகளை நான் இழந்து விட்டேன் ... மனத்தில் தோன்றுவதையெல்லாம் வார்த்தைகளாக்கி வெளியில் கொட்ட முடியாதவளாக இருக்கிறேன் ... மனத்தில் சூழும் எண்ணங்கள் எனக்கு சொல்ல முடியாத வேதனையைத் தருகின்றன. எத்தனை எத்தனை பதிலில்லா கேள்விகள் என் மனத்துக்குள் ... அவைகளை வெளியில் சொல்லவும் வழியில்லை ... கேட்டால் அவைகள் எல்லாமே தேவதூஷணமாகவே இருக்கும் ... கடவுள் என்று ஒன்றிருந்தால் ... தயவு செய்து என்னை மன்னித்து விடு, … இறுதியில் ஏசுவோடு எல்லாமே நல்லவிதமாக, மோட்சத்தில் முடியும் என்று நம்புகிறேன் … என் நினைவுகளை மோட்சத்தை நோக்கி நான் எழுப்பினால் முழுமையான எதிர்நிலைக்கருத்துக்கள் என்னை நோக்கி பாய்கின்றன; என் ஆத்மாவைக் காயப்படுத்துகின்றன ... அன்பு ... இந்த வார்த்தை ... எனக்குள் எதையும் கொண்டு வரவில்லை ... கடவுள் என் மேல் அன்பு கொண்டுள்ளார் என்று சொல்கிறார்கள் ... ஆனால் என் மனதுக்குள் இருக்கும் இருட்டும், வெற்றிடமும் எல்லாவற்றையும் வாரிச் சுருட்டி என மனதிற்குள் வேறு எதுவும் என்னைத் தொட அனுமதிப்பதைல்லை.(187)
)

ஜீசஸ் கிறிஸ்துவால் அடையாளப்படுத்தப் பட்டு ரோமர்களால் கைது செய்யப்பட்டு, பிலாத்துவின் முன்னால் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்த பிறகு ஒரு குகையில்  துணி சுற்றப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறார். குகை ஒரு பெரிய கல்லால் மூடப்படுகிறது. சீடர்கள் யாரும் கல்லறை முன் இல்லை. (222) 

கிறிஸ்து தன் அறையில் அமர்ந்து கொண்டு செபமும் அழுகையோடும் இருக்கிறார். இருளும் மாலையில் அவர் ஜீசஸின் கல்லறை அருகே சென்று ஒரு இருண்ட இடத்தில் அமர்கிறார். அப்போது அவர் அருகில் அந்த மர்ம மனிதனும் வந்து அமர்கிறார். அவர் கிறிஸ்துவிடம், 'உனக்குக் கஷ்டமாகத் தானிருக்கும் ஆயினும் நாம் நமது கடமையின் முதல் பாகத்தை முடித்து விட்டோம்.' என்கிறார்.

கிறிஸ்து அவரிடம், 'ஆபிரஹாம் தன் மகனைப் பலிகொடுக்க நினைத்த போது கடவுள் அப்பலியைத் தடுத்து நிறுத்தியது போலவே இப்போதும் நடந்துவிடும் என்றல்லவா நினைத்தேன். ஏனப்படி நடக்காது ஜீசஸ் இறந்து போனார்?' என்று கேட்கிறார். ஜீசஸ் உயிரோடு எழுந்திருப்பார் என்கிறார் அந்த மனிதர். எப்போது என்று கிறிஸ்து கேட்கிறார். உண்மையும் வரலாறும் வேறு வேறு என்கிறார் அவர். இதில்தான் உனது பங்களிப்பு இருக்கிறது. நீயே ஜீசஸின் மறுபக்கம். நீயில்லாவிட்டால் ஜீசஸின் இறப்பு எத்தனையோ இறப்புகளில் இதுவும் ஒன்று என்று சாதாரணமாகிவிடும். ஆனால் உன் பங்களிப்பால் உண்மை என்னும் ஒளி, வரலாற்றின் இருண்ட பக்கங்களின் மேல் விழும். ஜீசஸும் கிறிஸ்துவும் ஒன்றாக இணைந்து ஒரு புதிய அதிசயம் தோன்றும். பல மேன்மையான காரியங்கள் இதிலிருந்து உற்பத்தியாகும்.


அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது கல்லறையின் அருகே சில நடமாட்டம். குகையைத் திறந்து சிலர் ஜீசஸின் உடலை வெளியே எடுத்து வந்து தூக்கிக் கொண்டு போகிறார்கள்.

கிறிஸ்து, 'அவர்கள் என்ன செய்கிறார்கள்?"' 

"கடவுளின் வேலையைச் செய்கிறார்கள்."

"அது ஜீசஸின் உடல் அல்லவா?"

"ம்ம்..ம்.."

அவர் உயிர்த்தெழுந்ததாக நம்ப வைக்க இந்த ஏற்பாடா?"
"அவர் உயிர்த்தெழுந்து விட்டார்."

"இது தவறு; ஏமாற்றுகிறீர்கள்." கிறிஸ்து கீழே விழுந்து அழுகிறார். 


"அழு ... உனக்கு அது ஆறுதலைத் தரும்."


மீண்டும் அந்த மனிதர், "உனக்கு நான் இப்போது பரிசுத்த ஆவியைப் பற்றிக் கூற வேண்டும். உயிர்த்த ஜீசஸ் எல்லோரிடமும்  இருக்க முடியாது. ஆனால் பரிசுத்த ஆவியால் அது முடியும்."

"அப்படிப்பட்ட ஆற்றல் உள்ள பரிசுத்த ஆவி இருக்கும்போது எனக்கென்ன வேலை?"


தேவ தூதர் கிறிஸ்துவிடம் மேலும் விளக்கங்கள் கொடுக்கிறார். அதனால் கிறிஸ்து, "எனக்குப் பிடிக்கவில்லை; இருந்தும் ஜீசஸுக்காக இதைச் செய்கிறேன்' என்கிறார்.


அதன்பின் பீட்டர், ஜான், ஜேம்ஸ் என்ற சீடர்களுக்கு மரிய மக்தலேனா மூலம் ஜீசசின்  குகை திறந்திருப்பதும், ஜீசஸின் உடல் காணாமல் பபோயிருப்பதுவும், கிறிஸ்துவைப் பார்த்து அவரே ஜீசஸ் என்று முதலில் மக்தலேனாவும், பின் அவரது சீடர்களும் முடிவு செய்துகொள்கிறார்கள். சிலுவையில் அவருக்கு ஏற்பட்ட காயங்களின் வடுக்களைப் பார்க்க நினைத்த சீடரை மற்றவர்கள் தடுத்து விடுகிறார்கள். 


கிறிஸ்து அந்த இடத்தை விட்டே அகன்று போய், வேறொரு ஊரில் மார்த்தா என்ற பெண்ணை மணந்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அவரைப் பார்க்க திடீரென்று தேவதூதர் வந்து விடுகிறார். கிறிஸ்துவோடு இருந்து உணவருந்தி விடை பெறுகிறார். மார்த்தா ஏன் அவர் பெயரைக்கூட கேட்கவில்லை என்று கிறிஸ்துவிடம் கேட்கிறார்.


திருச்சபைக்கு ஏற்றதாக இருப்பதற்காகவே நான் அவருக்கு உடந்தையாக இருந்தேன். திருச்சபையும் இந்த நம்பிக்கைகளை ஏற்று நடந்தால் நல்லதே. ஆனால் திருச்சபை தனது அதிகாரத்தால் ஜீசஸின் கதையை தன் போக்கிற்கு மாற்றிவிடலாம். ... ஆனாலும் இந்தக் கதை இல்லாவிட்டால் திருச்சபை தான் ஏது? திருச்சபை இல்லாவிட்டால் ஏது ஜீசஸ்?



















கதை முடிந்தது ......
.......   இன்னும் 'என் பார்வை' தொடரும்



முதல் பதிவு: 1
இரண்டாம் பதிவு: 2
மூன்றாம் பதிவு: 3

9 comments:

மதுரை சரவணன் said...

super sir. really i enjoyed in ur writing. it reflect bible in modern way. thank u for sharing.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

நூல் அறிமுகத்துக்கு நன்றி சார். இயக்குனர் Martin Scorsese இயக்கத்தில் Willem Dafoe இயேசுவாக நடித்து வெளியான 'The Last Temptation of Christ' திரைப்படத்தை பார்த்துள்ளீர்களா? நம்ம நாட்டில் தடை செய்யப்பட்ட்டது என நினைக்கிறேன். எல்லோரையும் அதிர வைக்கக் கூடியப் படம்! பார்த்து இருந்தால் அதைப் பற்றியும் எழுதுங்களேன்.

Anonymous said...

ஐயா, இது என் பழைய நினைவுகளைத் தூண்டி விட்டது.

நான் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் இப்படி ஒரு கதை எழுத வேண்டும் என நினைத்ததுண்டு. அதாவது பிர் அவ்னின் உடல் சில ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கெட்டுப்போகாமல் கடலிலிருந்து மீட்கப்பட்டது. இது குரான் இறை வேதம் என்பதற்கு சான்று என முதன் முதலில் நான் செவியுற்றபோது, அதற்கு எதிராக வேற்றுக்கிரக மனிதர்கள் பூமியில் இஸ்லாமிய மத நம்பிக்கையை கண்காணித்து வழி நடத்துவது போலவும், அவ்வப்போது ஆதாரம் காட்டுவதற்காக இதுபோன்ற வெளிப்பாடுகளை நடத்திக்காட்டுவதுபோலவும் ஒரு கற்பனையை சிந்தித்து வைத்திருந்தேன். பின்னர் அது கட்டுக்கதை என அறிந்தது வேறு விசயம் என்றாலும், அந்த நினைவை உங்களின் இந்த நூல் விமர்சனம் ஞாபகப் படுத்திவிட்டது.

செங்கொடி

தருமி said...

நன்றி சரவணன்

தருமி said...

M.S.E.R.K.,
Last Temptation of Christ' திரைப்படம் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்கள் பின்னூட்டம் அதை மறுபடி பார்க்கத் தூண்டுகிறது.

தருமி said...

செங்கொடி,

//நான் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில்..//

அப்பவே ஆரம்பிச்சிட்டீங்களா! எனக்கெல்லாம் அப்பல்லாம் ஒண்ணுமே தெரியாதுங்க ..!

//அதாவது பிர் அவ்னின் உடல் ..//

இது பற்றி தெரியாது. நல்ல தொடுப்பு இருந்தால் கொடுங்க .. பார்த்துக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

சுவாரசியமான புத்தகம் மாதிரி தெரியுது.. முடிவை இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லி உங்க பார்வைகளையும் சொல்லுங்க அய்யா..:-))

Unknown said...

Very well narrated sir. http://madurabeats.blogspot.com/2010/10/jesus-of-india.html read this post sir its bit confusing to me

வால்பையன் said...

செம!

Post a Comment