Tuesday, December 13, 2011

539. நானும், photography-யும் .. 1



*
தொடர் பதிவுகள்: 
......... 1,
......... 2,
......... 3,  
........  4.


சமீபத்தில்தான் புகைப்பட வல்லுனராக வேண்டுமென்ற வெறியில் இருக்கும் கதாநாயகனைக் கொண்ட 'மயக்கம் என்ன' படம் வேற பார்த்தேனா... தொடர்ந்து சில புகைப்படங்களை, அதுவும் நம் பதிவர்களின் படங்களைப் பார்க்க ஆரம்பித்தேனா ... சில இரவுத் தூக்கமே போய்விட்டது!

வயசான காலத்தில் வாழ்க்கையில் என்ன இப்படி ஒரு சோதனை ..?!

சில சுய பரிசோதனைகள் .......

வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை புதுசா கத்துக்கிடணும்னு சின்ன வயசில இருந்து அப்படி ஒரு ஆசை. ஏதாவது ஒண்ணுன்னா ... ஏதாவது ஒரு கலையைக் கத்துக்கிடணும்னு ஆசை. எங்க காலத்தில் அப்பா அம்மாக்களுக்கு இது மாதிரி ஆசைகளை பிள்ளைகளிடம் வளர்த்து விடணும்னு எல்லாம் தெரியாது. இப்போ கொஞ்சம் பரவாயில்லை.

இதில் ஒரு side track. எங்க கல்லூரிக்கு அமெரிக்காவிலிருந்து இளம் பசங்க வருடா வருடம் வருவாங்க. சில வருஷம் மொத்தமாகவும் வந்து சேருவாங்க. கல்லூரி வளாகத்தில் 'வெள்ளைத் தோல்கள்' சுற்றியலைவது மிகச் சாதாரணம். ஒரு முறை பார்க்க வந்த நண்பரை canteen-க்கு கூட்டிச் சென்றிருந்தேன். ஒரு சின்ன வயசுப்பொண்ணு - அமெரிக்க பொண்ணுதான் - ஒரு நீள பாவாடை கட்டிக் கொண்டு, கையில் ஒரு பீடியை வச்சி 'வலிச்சிக்கிட்டு' கடிதம் எழுதிக்கிட்டு இருந்ததைப் பார்த்து மனுசன் அசந்துட்டாரு. இப்படி அமெரிக்காவிலிருந்து வர்ர மக்களிடம் ஒரு விசயம் பார்த்தேன். ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு hobby-ல் நிச்சயம் தொடர்பும், அறிவும் இருக்கும். அங்க இருந்த வர்ர ஆளுங்களுக்கு மட்டும் எப்படி ஒரு 'கலைத்தேடல்' இருக்கு; நம்ம பசங்க கிட்ட அப்படியெதுவும் இல்லையே என்று அப்போது கவலைப்பட்டதுண்டு. ஆனால் இப்போது பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இளம் வயது திறமைகளை வளர்க்க ஆசைப்படுவது பார்த்து மிக்க மகிழ்ச்சி. அடிப்படைத் தேவைகளைத் தாண்டிய பின் தான் இப்படி நடக்கும் போலும்.

சரி ... என் கதைக்கு மறுபடியும் வருவோம்!

நாமளா ஒரு கலையைக் கத்துக்கணும்னா படம் வரையறது தான் எளிது. எனக்கும் 'கிறுக்குவது' மிகவும் பிடித்த ஒன்று. கிறுக்க ஆரம்பித்தேன். வாராந்தரிகளில் வரும் படங்கள் தான் நமக்கு மாடல். பார்த்து வரைந்து பார்க்க முயற்சித்தேன். ம்ம்..ம்.. வருவது போலில்லை. அடுத்த கட்டம் ... படங்களைக் கட்டமாகப் பிரித்து வரைவது .. ஒரு நாலைந்து படம் தேறியது. ஒன்று சிவாஜி கணேசன் படம். பார்த்ததும் சிலர் இது சிவாஜி 'மாதிரி' இருக்குதே என்றார்கள்! அப்போ லதா என்ற பெயரில் ஒரு ஓவியர் (சாண்டில்யன் கதைகளுக்குப் படம் வரைவதில் அவர் specialist! பெருசு பெருசா வரைவார்!) - அவரின் படங்களை வரைய ஆரம்பித்தேன். ஆனால் கட்டம் போட்டு வரைவதை விடவும் free hand - scribbling art தான் பிடித்தது. அதை முயற்சித்தேன். என் தலையில் கட்டிய பாடமான விலங்கியலிலும் படம் நிறைய வரைய வேண்டி வந்தது. அந்தப் படங்கள் எல்லாம் சுலபமாக வந்து விடும் - சும்மா காப்பியடிக்கிறதுதானே. ஆனால் அதைத் தாண்டிப் போக முடியவில்லை. பின்னாளில் water colour, paints-ல் படம் வரையறது எல்லாம் முயற்சித்தேன். தேறவில்லை.

ஓவியம் கைவிட்டு விட்டதே என்று, அடுத்து ஏதாவது இசைக் கருவி ஒன்று பழகணும்னு ஆசை. கிட்டார் தொட்டுப் பார்த்தேன். கை மட்டும்தான் வலித்தது. இசை ஒன்றும் பிறக்கவில்லை. புல்லாங்குழல் கேட்க நிரம்ப பிடிக்கும். ஊதிப் பார்ப்போமே என்று ஊதிப் பார்த்தேன். அடுப்புக்குப் பக்கத்தில் வந்து அதைச் செஞ்சா கொஞ்சமாவது பிரயோஜனமாயிருக்கும் என்றார்கள். அப்படி ஊதியிருக்கிறேன்! முயற்சியில் தோல்வியடைந்தும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக அடுத்த முயற்சியில் இறங்கினேன். புல்புல் தாரா என்று ஒரு இசைக்கருவி. யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்களே .. அதே தான்! அந்தக் கருவியில் எளிதாகப் பழகலாம் என்று நண்பர் ஒருவர் அறிவுரை சொல்லி ஒன்று வாங்க வைத்தார். வாங்கியதும் அவர் 'என்ன என்ன பார்வைகளோ...' அப்டின்னு வெண்ணிற ஆடையில் வரும் ஒரு பாட்டு மிக எளிது என்று சொல்லி முதலடியை மட்டும் போட்டுக் காண்பித்தார். நானும் நாலஞ்சு நாள் கஷ்டப்பட்டு, 'என்ன என்ன பார்வைகளோ...' என்பதை மட்டும் போட்டுக் கொண்டே இருந்தேன். அடுத்த அடிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நண்பரிடம் கேட்டேன். அடுத்தடுத்து நீயே கண்டுபிடிச்சி வாசிக்கணும் என்றார். நானும் கண்டுபிடிக்கலாம் என்று கம்பிகளைத் தட்டிக்கொண்டே இருந்தேன். 'சீ .. போடா ..' என்றது புல்புல் தாரா! அடுத்த முயற்சியும் தோல்வியா ..? மனம் தளரவில்லை; இருப்பதிலேயே எளிது mouth organ என்றார்கள். அது ஒன்று வாங்கினேன். அதில் படித்தது ஒன்றே ஒன்றுதான். நம்ம படத்தில வர்ர ஹீரோக்கள் ஒற்றைக் கையில் அதை வைத்துக் கொண்டு வாசிப்பார்களே அதெல்லாம் சுத்த ஹம்பக் என்று மட்டும் தெரிந்து கொண்டேன். இரண்டு கையில் எப்படியெல்லாம் அதைப் பிடிக்க வேண்டுமென்று கற்றுக் கொண்டேன். ஆனால் இசை மட்டும் வரவேயில்லை.

கடைசி முயற்சி. சினிமா பாட்டை விசிலில் அடிப்பது சுத்தமான சொந்த முயற்சியால் என்று ஒருவர் சொல்ல அதையும் முயன்றேன். விசிலடித்தேன்; காற்று நன்றாக வந்தது. இசை .. ம்ம் .. அது எப்படி வரும்! சரி ... ஓவியக் கலைக்கும்,இசைக் கலைக்கும் நமக்கும் உள்ள தொலைவு ரொம்ப அதிகம் என்று உள்ளுணர்வு சொல்லித் தொலைத்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துப் பார்த்தேன். சரி .. நாம் முயற்சி செய்த கலைகளுக்கான ஆற்றல் இரத்தத்திலேயே இருக்க வேண்டும் போலும்; நம்ம ரத்தத்தில் அதெல்லாம் இல்லைன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து, இனி விளையாட்டு வீரனாகி விட வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். இதற்குள் மூன்று கழுதை வயது (8 x 3 = 24) முடிவடைந்திருந்தது. பள்ளியில் பிடித்தது கால்பந்து. ஏதோ கொஞ்சம் .. இப்போது கால்பந்து விளையாட முடியாது. indoor games தான். bachelor life வேறு. (இரண்டையும் சேர்த்து வைத்து ஏதாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்!)

தஞ்சை வாசம். நாலு நண்பர்கள் ஒன்றாயிருந்தோம். என் ஆவலை அவர்களிடம் கிளப்பி விட செஸ் பழகுவதென்று முடிவு செய்து ஒரு போர்டு ஒன்று வாங்கினோம், அதுவரை தெரிந்ததை வைத்துக் கொண்டு விளையாட ஆரம்பித்தோம். அப்போது இந்தியன் எக்ஸ்பிரஸில் white wins in two moves என்று வாரத்திற்கொரு போட்டியிருக்கும். அதையும் விளையாட ஆரம்பித்தோம். நால்வருமே துவக்க ஆட்டக்காரர்கள் தான். சமமாக இருந்தோம். சில நாட்களில் என்னை அடிக்க அங்கே ஆளில்லை என்று ஆயிற்று. அதனால் மற்ற மூவரும் அவர்களுக்குள் விளையாடி அதில் வெல்பவர் என்னோடு விளையாட வேண்டுமென்று வைத்துக் கொண்டோம். சில வாரங்களுக்கு நானே முடிசூடா ராசா! கொஞ்ச நாள் தான். ஒவ்வொருவராக என்னை முந்த ஆரம்பித்தார்கள். சில மாதங்களில் நான் தான் கடைசி ஆளாகிப் போனேன். வாழ்க்கை வழக்கம் போல் வெறுத்தது. ஆனாலும் .. முயற்சி .. அதைக் கைவிடுவோமா?

அடுத்து ரயில்வே கிளப்பில் எங்களைச் சேர்த்துக் கொண்டார்கள். table tennis விளையாட ஆரம்பித்தோம். மலேஷியாவிலிருந்து ஜப்பான் butterfly bat எல்லாம் வாங்கினோம். செஸ் கதை இங்கும் தொடர்ந்தது. சில நாட்களிலேயே எல்லோரையும் அடித்துத் 'தூள் பரத்தினேன்'. கொஞ்ச நாளில் பழைய கதை போல் மற்றவர்கள் என்னை முந்த ஆரம்பித்தார்கள். நல்ல வேளை விளையாட்டை மாற்றினோம். கொஞ்சூண்டு billiards .. carrom  ( ivory striker தொலைந்ததும் இந்த விளையாட்டு நின்னு போச்சு.) என்று தொடர்ந்தோம் சின்னாட்களுக்கு.

மதுரைக்கு வந்தபின் அமெரிக்கன் கல்லூரியில் டென்னிஸ். முப்பது முப்பத்தைந்து வயது வரை விளையாட முடிந்தது. அதன் பின் நாக்கு தள்ளவே அடுத்த ஆட்டம் - shuttle cock - ஆரம்பமானது.

நான் தான் ...! போஸ் குடுத்து எடுத்தோம்ல ...!!


எல்லாம் எங்க ஏரியா டீம் தான்!


அது இன்றும் தினமும் காலையில் தொடர்கிறது.

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் எங்கள் துறை மக்களுக்கு scrabble  ஆட்டத்தை அறிமுகப் படுத்தினேன். மக்களுக்கு இருந்த உற்சாகத்தால் துறைக்குள்ளேயே ஒரு tournament நடத்திக்கொண்டோம். எங்கள் ஆசிரியர்கள் போராட்டத்தில் பல முறை சிறைக்குச் சென்றேன். அதில் ஒரு தடவை 28 நாட்களோ என்னவோ சிறைவாசம். அப்போது இந்த விளையாட்டு ஏறத்தாழ 20 பேராசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுத்து, சிறை வாழ்க்கையை scrabble வாழ்க்கையாக மாற்றிய புண்ணியம் உண்டு.

அடுத்த ஆட்டம் - இந்துவில் வரும் Crossword puzzle. தினமும் மெனக்கெட்டு அந்தப் பக்கத்தை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தேன். இரு பேராசிரியர்களுக்கும் அது மிகவும் பிடித்துப் போச்சு. அப்போ நான் 30 - 40 விழுக்காடு வார்த்தைகளைக் கண்டுபிடித்த நேரம். அவர்கள் ஆரம்பித்தார்கள்.  60 வார்த்தைகளோடு நான் போராடும்போது அவர்கள் எழுபதைத் தாண்டி விட்டார்கள். வழக்கம்போல் நான் கழண்டு கொண்டுவிட்டேன். இப்போது அவர்கள் முழுவதும் முடிக்கும் அளவிற்கு வந்து விட்டதாகச் சொன்னார்கள்.

இப்படியாக 'ஆடிய ஆட்டங்கள்' நடந்தேறின. அதன் பின் .........

ஸ்ரீதர் படம் அந்தக் காலத்தில் மிகவும் பிடிக்கும். பாட்டு வந்தால் கூட தம்மடிக்க அவர் படத்தில் வெளியே செல்ல முடியாதபடி இருக்கும் அவர் படங்கள். அவரது படத்தின் போஸ்டர்கள், costumes எல்லாமே அழகு. அதைவிட அவர் படங்களுக்கு வின்சென்ட் காமிராமேன். இருவரின் கூட்டு மிக நன்றாக இருக்கும். அதை மிகவும் ரசிப்பதுண்டு. அவரது படங்களைப் பார்த்து விட்டு வித்தியாசமான கோணங்களைப் பாராட்டுவது வழக்கமாயிருந்தது. இது ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தது - அடுத்த ஆசைக்கு!

1971-ல் Yashica J என்று ஒரு range finder 35 mm வாங்கினேன். புகைப்படக் கலையை ஒரு கை பார்த்து விடுவது என்று இறங்கினேன் .........

...............தொடரும்

17 comments:

  1. சுவாரஸியமா இருக்கு. தொடர்கின்றேன்.

    ReplyDelete
  2. நல்லா இருக்கு... தொடருங்கள்.

    ReplyDelete
  3. இத்தனை கலைகளா? படிக்கவே மலைப்பாயிருக்கே?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. துளசி,
    வெண்புரவி

    ........... நன்றி

    ReplyDelete
  6. Prof. DrPKandaswamyPhD,
    //இத்தனை கலைகளா?//

    ஒரு கலையும் கைப்படவில்லை என்பதுதானே சோகம்!

    ReplyDelete
  7. தருமி, ஆரம்பிச்சிட்டீங்களா? எப்படா எழுத ஆரம்பிப்பீர்கள் என்று எதிர்பார்த்த ஒரு விசயமிது.

    இந்த தவிப்பு தான் தருமி, உங்கள அப்படியே மாற நெஞ்சோட காலத்தின் சுழற்சிக்கு ஏற்ப ஏற்று, அரவணைத்து, விட்டுக் கொடுத்தின்னு வைச்சிருக்கிற ஒரு precursor in you ;-) ...

    ஆமா, இங்கே புகைப்படக் கலையில் நிறைய பேரு அசத்துறாங்க. நீங்கதான் சொல்லுறீங்க உங்களுக்கு இன்னும் அதனை கையகப் பெற வைக்க முடியலன்னு. ஆனா, உங்க பொண்ணை வைச்சு அரை நிலா ரேஞ்சிற்கு முகக் கோடுகளை மட்டும் வைத்து பிடித்த ஒரு புகைப்படம் மற்றும் அந்த புகை மட்டும் மேலேழும்பும் இன்னொரு கருப்பு வெள்ளை படங்களை மறக்க முடியுமா?

    ஓவர் தன்னடக்கம்தேய்ன் உங்களுக்கு... சரி, தொடர்ந்து கிடுகிடுன்னு எழுதி முடிங்க இந்தத் தொடரை ...

    ReplyDelete
  8. \\ஒரு கலையும் கைப்படவில்லை என்பதுதானே சோகம்!// அவற்றை எல்லாம் முயற்சித்துப்பார்த்தோம் என்பதில் தான் இருக்கு..
    நம் வெற்றி ..
    அப்படி சொல்லிக்கொள்வது தானே என் ’சிறுமுயற்சி’ :)

    ReplyDelete
  9. முத்துலெட்சுமி/muthuletchumi,

    'விழுந்தான் .. எழுந்தேன் .. ஓடினேன்' என்றால் பெருமை.
    ஆனால், 'விழுந்தேன் .. மீண்டும் மீண்டும் விழுந்தேன்' என்பதில் என்ன பெருமை?

    ReplyDelete
  10. ஓ அது தெரியாதா உங்களுக்கு.. :)ஒவ்வொருமுறையும் மீண்டும் விழ ஒவ்வொருமுறையும் அங்கேயே தங்கிடாம எழுந்திருக்க வேண்டுமே..அப்பத்தானே விழமுடியும்

    வேறு வேறு முயற்சிகள் என்றாலும் அந்த முயற்சிகளைக்கூட செய்யாத ஒருவருடன் ஒப்பிடும்போது இது ஒரு அனுபவம் தானே..

    ReplyDelete
  11. ஓ அது தெரியாதா உங்களுக்கு.. :)ஒவ்வொருமுறையும் மீண்டும் விழ ஒவ்வொருமுறையும் அங்கேயே தங்கிடாம எழுந்திருக்க வேண்டுமே..அப்பத்தானே விழமுடியும்

    வேறு வேறு முயற்சிகள் என்றாலும் அந்த முயற்சிகளைக்கூட செய்யாத ஒருவருடன் ஒப்பிடும்போது இது ஒரு அனுபவம் தானே..

    ReplyDelete
  12. //கடைசி முயற்சி. சினிமா பாட்டை விசிலில் அடிப்பது சுத்தமான சொந்த முயற்சியால் என்று ஒருவர் சொல்ல அதையும் முயன்றேன்.//

    இதை புரட்சி தலைவர் படங்களுகு சென்று தியேட்டரில் விசலடித்திருந்தால் மேம்படுத்தியிருக்கலாம்..

    உங்களின் மார்கண்டேயன் தோற்றத்திற்கு காரணம் இவ்வளவு கலைகளா!!!!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. பதிவில் இன்னும் கொஞ்சம் படங்களும் செய்திகளும் சேர்த்திருக்கிறேன் .......

    ReplyDelete