*
தொடர் பதிவுகள்:
......... 1,
......... 2,
......... 3,
........ 4.
*
காமிரா வாங்குவதற்கு முன்பேயே அந்த ஆசை கொஞ்சம் இருந்தது நினைவுக்கு வருகிறது. S.S.L.C. முடிப்பது அந்தக் காலத்தில் ஒரு முக்கிய கால கட்டம். அந்த விடுமுறையில் எதிர்த்த வீட்டு ஜாபர் தன்னை படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டு, எங்கிருந்தோ ஒரு டப்பா காமிரா வாங்கி வந்தான். நான் அவனைப் படமெடுக்க வேண்டுமென்றான். 'ஒரு கண்டிஷன்' என்றேன். என்ன .. உன்னையும் படம் எடுக்கணுமா என்றான். 'அதெல்லாம் என் ஆசை இல்லை'. ஆனால் ஒரே ஒரு படம் மட்டும் என் ஆசைக்கு உன்னை எடுப்பேன் என்றேன். சரியென்றான். எங்கள் பள்ளிக்கூடத்திற்கு சென்றோம். அந்தக் காலத்தில் கையை நீட்டிக் கொண்டு, அந்தக் கையில் பின்னாலிருக்கும் ஏதாவது ஒன்று உட்கார்ந்திருப்பது போல் படமெடுப்பது வழக்கம். அதே போல் கேட்டான். இன்னும் சில போஸ்கள். மொத்தம் எட்டோ பன்னிரண்டோ படம் என்று நினைக்கிறேன். கடைசிப் படம் .. என் ஆசைக்கு எடுக்கப் போகும் முதல் படம்!
எப்படி எடுக்க வேண்டுமென்றான். எங்கள் சைக்கிளை ஒரு வேப்ப மர நிழலில் நிறுத்தி, அதன் பின் சீட்டில் அவனை எறி நிற்கச் சொன்னேன். நான் கீழே படுத்து அவனை - cat's view என்பார்களே, அந்தக் கோணத்தில் - ஒரு படம் எடுத்தேன். உயரமான மரத்தின் கீழே அவன் உயரமா, சாமி மாதிரி பெருசா தெரிவான் என்று மனதுக்குள் ஒரு எண்ணம். கொஞ்ச நாள் கழித்து படத்தின் ரிசல்ட் தெரிய ஆர்வத்தோடு இருந்த என்னிடம் நாலைந்து படங்கள் மட்டும் காண்பித்தான். இதுதான் வந்ததாம் என்று சொல்லி விட்டு என் முதல் படத்தில் 'மண்ணைத் தூவி' விட்டுப் போய்விட்டான்.
அதற்குப் பிறகு 1971-ல் சொந்தக் காமிரா. எல்லா படமுமே ஸ்ரீதர் பின்னேயிருந்து சொல்ல, பக்கத்திலிருந்து வின்சென்ட் உதவ எடுத்த படங்கள் என்ற நினைப்புதான்! மழை, கிழட்டு முகங்கள், என்று ஏதேதோ ... அநேகமாக 1977-ல் முதல் S.L.R.. Mamiya Sekor .. சுடச் சுட அமெரிக்காவிலிருந்து வந்தது. அப்போது ஒரு டாலருக்கு 8 ரூபாய் எண்பது பைசா. 100 டாலருக்கு வாங்கியதை என்னைப் பார்த்துப் பரிதாபப்பட்டு உடன் வேலை பார்த்த ஆசிரியர் 800 ரூபாய்க்குக் கொடுத்தார். அடேயப்பா ..! அந்தக் காமிராவை வாங்கியதும் ஏதோ விண்ணைத் தொட்ட ஓர் உணர்வு. அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வர பஸ்ஸுக்காகக் காத்திருந்தது ... காமிராவைத் திருப்பித் திருப்பி பார்த்து மகிழ்ந்தது ... எதுவும் இன்னும் மறக்கவேயில்லை. அப்போதைக்கு ஒரு S.L.R. காமிரா ஒரு அபூர்வம். அதோடு எனக்கு அது அப்பொது மதிப்பேயில்லாததாகத் தோன்றியது. மதுரையில் அப்போது S.L.R. காமிராவுக்கு அப்படி ஒரு மவுசு. ஒரு S.L.R. காமிரா வைத்திருப்பதே பெரிய prestige!
வீட்டிற்கு வந்ததும் முதலில் மூத்த மகள் - அப்போது அவளுக்கு மூன்று வயது என்று நினைக்கிறேன் -மாடலாக மாறினாள். கதவுக்குப் பக்கத்தில் நிற்க வைத்து ஒரு படம் எடுத்தேன்.
எப்போதுமே படங்களின் பின்னணி கறுப்பாக இருப்பதுதான் எனக்குப் பிடிக்கும். இப்படத்தில் அதே போல் அமைந்தது. அவள் போட்டிருந்த உடையின் இழைகள் நன்கு focus-ல் இருந்தன. முகத்தில் அவளது இடது பக்கத்தில் இருந்து வலது பக்கத்திற்கு ஒரு நேர்கோடு வரைந்தால் வெளுப்பிலிருந்து கறுப்பாக grey tonal gradation கிடைத்திருந்தது. (இந்த கடைசி பாய்ன்ட் மதுரையில் அப்போது மிகவும் புகழ்பெற்ற கிறிஸ்டோபர் என்ற பெரிய, எனக்கு மிகவும் பிடித்த புகைப்படக்காரர் சொன்னது.) முதல் ரோலிலேயே நல்ல படம் கிடைத்ததால் mamiya காமிரா மீது காதலில் விழுந்தேன்.
(இந்தப் படத்திற்கு இன்னொரு கிளைக் கதை உண்டு! இந்தப் படத்தை என்னிடமிருந்து வாங்கிச் சென்ற பழைய இயல்பியல் மாணவன் BARC - பாபா அட்டாமிக் ஆராய்ச்சிக் கூடத்தில் Ph.D. செய்யச் சென்றான். அதனைப் படம் வரைவேன் என்று சொல்லி வாங்கிச் சென்றவன் ஓராண்டிற்குப் பிறகு என்னைப் பார்க்க வந்தான். படம் வரைந்து விட்டேன். என் வீட்டிற்கு வந்து பாருங்கள் என்றான். ஒரு மாலை சென்றேன். என்னை அமர வைத்து விட்டு ஏதேதோ ஏற்பாடுகள் செய்தான். உங்கள் பிள்ளையின் படத்திற்குப் பக்கத்தில் ஒரு விளக்கு வைக்கலாமா என்று கேட்டேன். ஓகே சொன்னேன். ஒளி மங்கிய நேரத்தில் வீட்டிற்குப் பின்னால் கூட்டிச் சென்றான்.
இதே படத்தை வெறும் பென்சிலால் மிக மிக அழகாக வரைந்திருந்தான். பெரிய் அளவு. அனேகமாக 16 x 24 இருக்கும். அவளின் உடையில் இருந்த இழைகள் கூட அவ்வளவு தெளிவாக அழகாக வந்திருந்தன. விளக்கு வெளிச்சத்தில் அவ்ளோ அழகு. அந்தப் படம் வரைந்த பின் அவனது டைரக்டர் நூலகத்தில் அதை மாட்டச் சொன்னாராம். என்னிடம் காட்டுவதற்காகவே எடுத்து வந்தேன். மீண்டும் திரும்பிய பின் எங்கள் துறையில் நூலகத்தில் வைத்து விடுவேன் என்றான். அப்படத்தோடு மகளை நிற்க வைத்து எடுத்த படம் மிஸ்ஸிங்!)
கல்லூரியில் இரு dark rooms இருந்தன. என் ஈடுபாட்டைப் பார்த்த பின் இயல்பியல் துறைத் தலைவர் எனக்காக புதிய dark room ஒன்றை ஆரம்பித்தார். அதோடு புகைப்படத்திற்காக ஒரு elective course ஒன்றையும் உருவாக்கினார். சில நாளில் dark room முழுவதும் என் வசமே இருந்தது. அதற்குக்காரணமான படம் இதுதான். சாலையில் போய்க்கொண்டிருந்த ஒருவரை அவரின் அனுமதி கேட்டு எடுத்த படம். (தனுஷ் 'மயக்கம் என்ன' என்ற படத்தில் ஒரு பாட்டியை எடுத்தது மாதிரின்னு வச்சுக்கோங்களேன்!! ஆனால் அதில் மாதிரி நிறைய படம் எடுக்க முடியுமா? இரண்டு படம் எடுத்த நினைவு. அதில் ஒன்று இது.) புதியதாக போட்ட பிரிண்டுகளை அவரிடம் காண்பிப்பதுண்டு. அப்படி காண்பித்த இந்தப் படம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் அதை அவரது துறை தகவல் பலகையில் அந்தப் படத்தைப் பற்றிய குறிப்புகள், என்னைப் பற்றிய குறிப்புகள் என்று போட்டு வைத்தார். கல்லுரியில் எனக்கு இது ஒரு தனியிடத்தைப் பெற்றுத் தந்தது. ஒரு புதிய dark room முழுச் சுதந்திரத்தோடு என் வசமாச்சு! காமிராவைத் தூக்கும் மாணவர்கள் எல்லோருக்கும் பொது ஆளானேன். எனக்குத் தெரிந்து, என்னோடு 'சுற்றித் திருந்த' இரு மாணவர்கள் அடையாறு திரைப்படக் கல்லூரியில் cinematography course-ல் சேர்ந்தார்கள்.)
காமிராக் கூட்டம் கல்லூரியில் பெருகவே இயல்பியல் துறையில் U.G. & P.G. துறைகளில் இரு இரு dark rooms கிளைத்தன. அது பற்றாது என்று விலங்கியல் துறை, தாவர இயல் துறைகளிலும் புது dark rooms முளைத்தன. மொத்தம் கல்லூரியில் ஆறு dark rooms! ஆச்சரியம்தான். தாவர இயல் dark rooms முழுவதும் என் கையில்! இரவு, பகல், கல்லூரி நாள், விடுமுறை நாள் என்று எந்த வித்தியாசமும், கட்டுப்பாடும் கிடையாது. அப்போது கிடைத்த உற்சாகத்திற்கு அளவேயில்லை. இயல்பியல் துறைத் தலைவர் V.சீனிவாசன், தாவரவியல் தலைவர் Dr. ஜேம்ஸ் இருவருக்கும் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
WHAT'S STILL BEYOND ...? |
முதன் முதலாக அண்ணாமலைப் பல்கலைக் கழகம் நடத்திய புகைப்படப் போட்டி ஒன்றிற்கு ஒரு படம் அனுப்பினேன். முதன் முதல் போட்டிக்கு அனுப்பிய அந்தப் படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது. நூர் முகமது என்ற என் கல்லூரி நண்பனின் தந்தை அவர். நண்பன் படிப்பு முடித்து இரு சக்கர வண்டி பட்டறை வைத்திருந்தான். அவன் தான என் ஜாவாவிற்கு மெக்கானிக். அவனை மாதிரி என்னையும் அவன் தந்தை வாடா .. போடா..ன்னுதான் கூப்பிடுவார். அவரும் எனக்கு 'அத்தா' தான். படத்திற்குப் பரிசு என்றதும் அத்தாவுக்கு பயங்கர பெருமை. ஒரு படம் ப்ரேம் செய்து கொடுத்தேன். ஒரு வாரம் பட்டறையில் இருந்தது. அதன்பின் காணோம். 'எங்கே அத்தா படம்?' என்றேன். 'உங்க அம்மா கடையில் வேண்டான்னு சொல்லிட்டா ... என் மேல் கண்ணு பட்டுருமாம்' என்று சொல்லிச் சிரித்தார். வீட்டிற்குள் பத்திரமாக மாட்டியிருந்ததைக் காண்பித்தார். எனக்கு புகைப்படத்தில் அலுப்பு வரும் போதெல்லாம் - எப்போவெல்லாம் படங்கள் சரியாக வரலையோ அப்போவெல்லாம் - எனக்கு பயங்கரமாக தைரியமூட்டுவார். இந்தப் படத்தை விட அதற்கு நான் கொடுத்த தலைப்பு பலருக்கு மிகவும் பிடித்தது!
........... தொடரும்
*
கலக்கல் படங்கள்ங்க. உங்களை இப்படி ஒரு கோணத்துல பார்க்கிறதே ஆச்சர்யமா இருக்குங்க. தொடரவும்.. சுவாரஸ்யமா போகுது
ReplyDeleteபாட்டைக் கேட்டு மயங்கி படங்கள் வரலாற்றையும் ரசித்தேன் தருமி சார். அருமை.
ReplyDeleteடைட்டானிக் இசை எப்படி உங்கள் பதிவில் வைத்தீர்கள்??
உங்கள் அத்தா படம் மிக மிக தத்ரூபம்..வாழ்த்துகள்.
தேறிட்டீங்க !!!!!!!!!!!!!
ReplyDeleteஅதுவும் நல்லாவே தேறிட்டீங்க தருமி:-)
//உங்களை இப்படி ஒரு கோணத்துல பார்க்கிறதே //
ReplyDeleteஅப்போ இதுவரை 'எந்தக் கோணத்தில்' பார்த்தீங்கன்னு சொல்லுங்களேன்!
//பாட்டைக் கேட்டு மயங்கி //
ReplyDeleteபிறகு என்ன என் எழுத்தைப் பார்த்து மயங்கவா போறாங்க.. அதுக்குத்தான் இசை.
//டைட்டானிக் இசை எப்படி உங்கள் பதிவில் வைத்தீர்கள்??//
http://widgetindex.blogspot.com/ - இங்கே போனால் கிடைக்கும்.
வாழ்த்துகளுக்கு நன்றி.
நீங்களுமா என்னை 'சார்' போட்டுப் பேசணும்!
என்ன சொல்றீங்க, துளசி !!!???
ReplyDeleteபடங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு ..
ReplyDelete\\தனுஷ் 'மயக்கம் என்ன' என்ற படத்தில் ஒரு பாட்டியை எடுத்தது மாதிரின்னு வச்சுக்கோங்களேன்//
:)) தனுஷ் தானே இப்ப இந்த தொடர் எழுதவும் வச்சிருக்கார்..
பரிசு கிடைத்த படம் அருமையாக உள்ளது.
ReplyDelete