Tuesday, May 24, 2011

504. அழகர்சாமியின் குதிரை

*


‘என்னடா இது? நம்ம தமிழ் திரைப்பட இயக்குனர்கள் - ’திலகத்’திலிருந்து ’இமயம்’ - வரைக்கும் யாருக்கும் காதல் என்பதைத் தவிர மையப்புள்ளியாக வேறு ஏதாவது வாழ்க்கைப் பிரச்சனையை வைத்து படம் இயக்கவே தெரியாதா?” என்பது எனது பல காலத்து பிலாக்கணம். அப்பாடா ... கொஞ்சம் நல்ல முடிவுகள், வளர்ச்சிகள் தெரியுது.

யுத்தம் செய்
நந்தலாலா
பயணம்
ஆடுகளம்
அழகர்சாமியின் குதிரை

.......... வரிசையாகப் பார்த்த இப்படங்களில் காதலை வெறும் ஊறுகாயாக, அல்லது முற்றிலும் காதல் இல்லாத ஒன்றாக ஆக்கிய படங்கள்.

வளர்கிறோம் ... மிக்க மகிழ்ச்சி.

அழகர்சாமியின் குதிரை

இரண்டு  காதல் ஜோடிகள் - ஊறுகாய் மாதிரி.

கதை என்னவோ ஒரு கிராமத்தின் மத நம்பிக்கைகளும், அவர்களின் நம்பிக்கைக்களுக்குத் தீனியாக ஒரு குதிரையும், குதிரைக்காரனின் அன்பும் அவசரமும் கதையாக, அழகாக அமைந்துள்ளன. 

நல்ல சிறுகதை வாசித்து முடிந்ததும் அப்பாடா ... என்று காலை நீட்டி, மறுபடி அதே கதைக்குள் மீண்டும் முங்கி, மூழ்கி, முக்குளிப்போமே அந்த உணர்வு படம் பார்த்ததும் வந்தது.

சின்ன ஊர், சின்ன நிகழ்வுகள், சின்ன சிக்கல்கள் ... ஆனால் சொன்ன விஷயங்கள் நிறைய. கிராமங்களில் விரவி நிற்கும் தெய்வ நம்பிக்கைகள், நல்ல மனிதர்கள், ஏழ்மை, வறுமை, பண்டிகைகளில் கொப்பளிக்கும் உற்சாகம், நம்பிக்கைகளிலிருந்து விலகி நிற்கும் ஒரு சின்ன இளைஞர் கூட்டம் ... எல்லாமே இனிமை. அதுவும் அந்தக் கடைசி சீனில் கிராமத்து பிரசிடென்ட் தன் மகன் வேற்று சாதியைச் சார்ந்த பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் என்றதும், இந்த ஊருக்கு மழையே வராது என்று சாபம் கொடுத்தவுடனேயே, மழை கொட்டோ என்று கொட்ட ... முதலில் பெண்ணின் தகப்பன் முகத்தில் புன்முறுவல், சிறிது நொடிகளில் சாபமிட்டவரும் முறுவல் செய்ய ... நம் முகத்திலும் நல்ல முறுவல்!

யாரும் நடிக்கவில்லை; குதிரை மட்டும் எல்லோரையும் விரட்டும் இடத்தில் கொஞ்சம் ஓவர்! மைனரைப் ‘பதம் பார்க்கும்’ இடமும்தான்! ‘போலீஸ்காரர் ஜோக்’ கொஞ்சம் சில இடங்களில் ஒட்டாக இருந்தன; ஆனாலும் அவரது உடல்மொழியால் நன்கு ரசிக்க முடிந்தது.

ஆடுகளத்திலும், அழகர்சாமி குதிரையிலும் ஒரு குறை மனதில் தோன்றியது. ஆடுகளத்தில் காதல் இல்லாமல் இருந்திருந்தால் மிகவும் அப்படம்

பிடித்திருக்கும். அதிலும் டாப்ஸி மாதிரி ஒரு பொண்ணு ’தரைடிக்கெட்’ கதாநாயகனுக்கு ஜோடியா வந்தது நெருடியது. இந்தப் படத்திலும் சரண்யா கதாநாயகியாக வந்தது நெருடியது.
தனுஷையும், இப்பட நாயகனையும் (அவ்ர் பெயர்?) நாம் கதாநாயகர்களாக ஒத்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். நல்லது. அதே போல் அவ்வளவு அழகு குறைவான, சாதாரணமான ஒரு பெண்ணை கதாநாயகியாக ஒத்துக் கொள்ள மாட்டோமா என்ன? at least கொஞ்சம் தோல் இவ்வளவு சிகப்பில்லாமல் ஒரு திராவிட வண்ணத்தோடு இருந்திருந்தால் இன்னும் பொருத்தமல்லவா?

படத்தில் டைட்டில் போடும்போது நடிகர்கள் பெயரெல்லாம் காணோம்? எடுத்ததும் கார் ஓட்டுனர்கள் என்றெல்லாம் ஆரம்பித்தது.

’அவளுக்கென்று ஒரு மனம்’ ஸ்ரீதரின் படம். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன் பார்த்தது.  ஜெமினி ஒரு பாடலுக்கு மழையில் நனைந்து கொண்டே பாடுவார். அந்தப் படத்தில் வந்த அந்த மழை எனக்குப் பிடித்தது. அதற்கு அடுத்து நம் தமிழ்ப்படங்களில் இந்த படத்தில் கடைசியில் பெய்த மழை  பிடித்தது. வழக்கமாக நம் தமிழ்ப்படங்களில் பெய்யும் மழை செங்குத்தாக கோடு போல் விழும். இப்படத்தில் சாய்வாக நீரை அடித்தது இயல்பான மழை போல்  நன்றாக இருந்தது. படப்பிடிப்பு இயக்குனர் தேனீ ஈஸ்வருக்குத்தான் அந்த பெருமையோ என்னவோ? இரவுக் காட்சிகளாக நாலைந்து காட்சிகள். உண்மையான இருளில் படப்பிடிப்பு நடத்தியிருந்தார்கள். நன்றாக அந்தக் காட்சிகள் இருந்தன.  ஈஸ்வரின் stills எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்படத்தில் படப்பிடிப்பு இன்னும் அவர் நன்றாக செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

படத்தில் இன்னொரு ஏமாற்றம் ராஜா தான். ஏனோ பாடலோ, அதைவிட பின்னணி இசையோ என்னை ஏமாற்றின.

ஒரு நாவலை எடுத்துப் படமாக்குவதற்கு தனி தைரியம் வேண்டும். அதுவும் ஒரு கிராமத்துக் கதை. தமிழ்ப்படத்திற்கான எந்த வித சிறப்பம்சங்கள் - காதல், கண்ணீர், சண்டை, அருவாள் ... - ஏதுமில்லை. மேலும், கதாசிரியர் பாஸ்கர் சக்தியை துணிந்து  துணை இயக்குனராக வைத்துள்ளார்.   இது போன்ற  கதைகளை இயக்க துணிச்சலும் தன் திறமையில் நம்பிக்கையும், மக்களின் ரசனை மீது  மிக நம்பிக்கையும்  அவசியத் தேவை.  இந்த மூன்றில் முதல் இரண்டை மட்டுமின்றி மூன்றாவதான நமது ரசனையையும் நம்பி எடுத்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

அவரது மூன்றாவது நம்பிக்கையையும் நாம் காப்பாற்றி விட்டோம்.






*

8 comments:

Anonymous said...

Planning to catch this movie. Every body is giving good reviews about.

Please watch Vanam also, Very good movie.

thamizhparavai said...

நல்ல பகிர்வு ஐயா...
ஜெமினியின் அந்த மழைப்பாடல் எனக்கும் பிடிக்கும், அனுபவித்துப் பாடியிருப்பார். இவரும் அனுபவித்து நடித்திருப்பார்.
அதேபோல் இப்படத்தின் மழையும். ரசித்தேன்.
இளையராஜா கிராமிய இசை கொடுத்திருந்திருக்கலாம்தான்....
ஹீரோயின் திராவிட வண்ணத்தில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.(பாலுமகேந்திரா படநாயகி போல்)...
மற்றபடி படமும், பகிர்வும் ரசித்தேன்...

நாகை சிவா said...

//படத்தில் டைட்டில் போடும்போது நடிகர்கள் பெயரெல்லாம் காணோம்? எடுத்ததும் கார் ஓட்டுனர்கள் என்றெல்லாம் ஆரம்பித்தது.//

படம் முடிந்த பிறகு நடிகர்கள் பெயர் போடப்பட்டது.

//இப்பட நாயகனையும் (அவ்ர் பெயர்?) நாம் கதாநாயகர்களாக ஒத்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விட்டோம். நல்லது. //

அப்பு. (வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்தவர்)

தனிப்பட்ட நாயகர் என்று யாரும் இப்படத்தில் இல்லை என்றே கருதுகிறேன். இதை போன்று நாயகர்களை மையப்படுத்தாலும் படங்கள் தொடர்ந்து வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

Philosophy Prabhakaran said...

கதாநாயகனின் உண்மையான பெயர் என்னவென்று தெரியவில்லை... எனினும் முந்தய படத்தின் தாக்கத்தின் காரணமாக அப்புக்குட்டி என்றே அழைக்கபடுகிறார்...

சின்ன கண்ணன் said...

மிக அருமையான ஊருகாய் விமர்சனம்.
வாழ்த்துகள்.

தருமி said...

teabench
தமிழ்ப்பறவை
நாகை சிவா
Philosophy Prabhakaran
chinna kannan

......... மிக்க நன்றி

hariharan said...

good movie also your post...

Jeevan said...

Must watch it sometime. good review about a good movie.

Post a Comment