Sunday, September 30, 2018

1005. அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை...தருமி



*

எனது இரண்டாம் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை

                       முனைவர் வா. நேரு அவர்கள் எழுதிய கட்டுரை










*


அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை...தருமி


ஆசிரியர்                   : தருமி
வெளியீடு                  : எதிர் வெளியீடு ,பொள்ளாச்சி- 624 002,99425 11302
முதல் பதிப்பு               : டிசம்பர் 2017
மொத்த பக்கங்கள்           :  328,  விலை ரூ 350 .

                                கடவுள் என்னும் மாயை என்னும் இந்தப்புத்தகம் அண்மையில் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது.இந்நூலை எழுதிய தருமி அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். தமிழ் வலைத்தளத்தில் சக பதிவாளர். தொடர்ந்து பதிவுகளைப் பதிவிடக்கூடியவர். ஓய்வு வாழ்க்கையை புத்தகங்களை வாசிப்பதிலும்,அதனை பதிவிடுவதிலும், ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும் செலவழித்து மிக அர்த்தமுள்ள வாழ்க்கையாக தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளவர். அவரால் அண்மையில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகம் இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம்.



                                நீங்கள் எந்த மதத்து நம்பிக்கையாளராகவும் இருக்கலாம். இந்துவாக, கிறித்துவராக,இஸ்லாமியராக இருக்கலாம்,நீங்கள் நேர்மையான,திறந்து மனதோடு இந்தப் புத்தகத்தைப் படித்தால், இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது உங்களுக்குள் உங்கள் கடவுள் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் வருவதை உணர்வீர்கள். எந்த வயதுக்காரராக நீங்கள் இருந்தாலும், இந்த வயதுவரை நமக்கு இருந்த கடவுள் நம்பிக்கை சரிதானா? என்னும் கேள்வி ஆழமாகப் பதிவதை நீங்கள் மறுக்க இயலாது. எல்லா மதங்களைப் பற்றியும் , எல்லாக் கடவுள்கள் பற்றியும் ஆதாரபூர்வமான கேள்விகளை வைக்கின்ற, நேர்மையானவர்களாக இருந்தால் கடவுள் நம்பிக்கையாளர்களிடமிருந்து கேள்விகளுக்கு பதிலினை எதிர்பார்க்கின்ற புத்தகம். இந்த நூலுக்கான வாழ்த்துரையை "புதிய வெளிச்சம் தரும் இந்நூலை எழுதியவரைப் பாராட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு என மகிழ்ந்தேன் " என ஜீவானந்தம் கொடுத்திருக்கின்றார்.

                               ஆசிரியர் முன்னுரையை ' புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் பிழைப்பு ' என ஆரம்பிக்கின்றார். அப்போது வாசிப்பதில் ஏற்படும் ஈர்ப்பு புத்தகத்தின் கடைசி வரை ஈர்ப்பாகவே இருக்கின்றது. தான் படித்த 12 புத்தகங்களைப் பற்றிய (9 ஆங்கில நூல்கள், 3 தமிழ் நூல்கள்) தொகுப்புதான் இந்த நூல் என்றாலும், ஒவ்வொரு நூலும் ஒரு நம்பிக்கையாளனின் கடவுள் நம்பிக்கையை போட்டு தாக்கித் தகர்க்கும் அணுகுண்டைப் போன்ற வலிமை மிக்க நூல்கள். மிகப் பொறுமையாகப் படித்து, அதன் கருத்துக்களைப் புரிந்து அதனை தமிழாக்கம் செய்து, தனது கருத்துக்களையும் இணைத்து இந்த நூலை நமக்குக் கொடுத்திருக்கின்றார் தருமி.

                  கிறித்துவமத நம்பிக்கைகளை  கேள்விகேட்கும் வகையில் வந்துள்ள 6 நூல்களை முதலில் நூல் ஆசிரியர் கொடுத்துள்ளார். நூல், நூல் ஆசிரியர் அறிமுகம், நூலில் உள்ள செய்திகள் பற்றிய விளக்கம் என்ற வகையில்தான் இந்த நூல் முழுக்க அமைந்துள்ளது.தருமி கொடுத்திருக்கும் முதல் நூல் 'கடவுள் என்னும் மாயை ' என்னும் ரிச்சர்டு டாக்கின்ஸ் நூல். தமிழில் கு.வெ.கி. ஆசான் அவர்களால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு,திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டு  இன்றும் விற்பனையில் சாதனை படைக்கும் நூல். ரிச்சர்டு டாக்கின்ஸ் அவர்களைப் பற்றிய குறிப்புகளை, அவர் எழுதிய புத்தகங்கள் பட்டியலைக் கொடுத்திருக்கின்றார். பின்பு அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை 10 தலைப்புகளில் கொடுத்திருக்கின்றார்.

                             இரண்டாவது நூல் அன்னை தெரசா அவர்களைப் பற்றியது. " அன்னை தெரசா ஒளியே வருவாய் என்னிடம் கொல்கத்தா புனிதையின் தனிப்பட்ட கடிதங்கள் .." என்னும் புத்தகம் ப்ரையன் கோலோடைசுக் M.C. என்பவர் எழுதியது. " இந்த நூலில் அன்னையின் வாழ்வின் பெரும்பகுதியில் ஆன்மிக வாழ்வில் அவருக்கு நடந்த கடினமான, மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டமான வாழ்க்கை தெளிவெனத் தெரிகிறது. இறை நம்பிக்கைகளில் இருந்த குழப்பத்தை அவர் தனது சமூக வாழ்க்கையில் வெளிக்காண்பிக்காது,தன் சேவைகளைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்......இப்பதிவை மிகவும் யோசித்தபிறகே வலையேற்றுகிறேன் " என இந்த நூல் ஆசிரியர் குறிப்பிடுவதும் வேறுபட்ட கோணத்தில் அன்னை தெரசாவின் ஆன்மிகத்தைப் பார்ப்பதுவும் வாசிக்கும் நமக்கு மிகவும் புதிய கோணமாக இருக்கின்றது.பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் ' நான் ஏன் கிறித்துவனல்ல '  என்னும் நூல் 3-வது நூலாகும். இது பெரும்பாலான நாத்திகர்கள் படித்திருக்கக்கூடிய புத்தகம்.நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பற்றியும் அவரின் கருத்துகள் பற்றியும் எழுதியுள்ளார்.

                          எலைன் பேஜல்ஸ் என்பவர் எழுதிய 'ஞான மரபு நற்செய்திகள் ' என்பது 4-வது நூல். என்னைப் போன்றவர்கள் கேள்விப்பட்டிராத நூல். "கிறிஸ்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் இருந்த உட்பிரிவினைகள்,யூத,கிறித்துவ சமயங்களின் ஆரம்பகாலத்தில் பெண்கள் கையாளப்பட்ட விதம் போன்றவைகளை இந்த நூலில் எழுதியுள்ளார். மிகவும் முக்கியமான ஓர் இடத்தை அந்த நூல் விரைவில் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் இதுவும் ஒன்று என Modern Library என்ற அமெரிக்க வெளியீட்டாளர் தேர்ந்தெடுத்தனர் " (பக்கம் 72 ) எனக்குறிப்பிட்டு அந்த நூல் எழுப்பும் கேள்விகள் கடந்த 2000 ஆண்டுகளாக இருப்பதை கடைசியில் சுட்டிக்காட்டுகின்றார்.

                          யூதாசின் நற்செய்தி என்பது அடுத்த நூல். இதனைத் தொகுத்தவர்கள் மூன்று பேர்.யூதாஸ் என்பவர் வில்லன் அல்ல, யேசுவின் மிக நெருங்கிய நண்பர். யேசுவால் மிகவும் நம்பப்பட்டவர். யேசு சொல்லியே அவர் எதிரிகளிடம் யேசுவை யூதாஸ்  காட்டிக்கொடுத்தார் என்பதற்கு ஆதாரமாகக் கிடைத்திருக்கும், 1600 ஆண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்து, இப்போது கிடைத்திருக்கும் புத்தகத்தின் வழியாகக் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றார்.

                          கிற்ஸ்டோபர் ஹிட்சன்ஸ் எழுதிய 'கடவுள் என்பது பெரிதொன்றுமில்லை( God is not great ) என்பது ஆறாவது நூலாகும்.அவரது நூலைப் பற்றி சில குறிப்புகள் எனக்குறிப்பிட்டு பக்கம் 125-ல் " கட்டுப்பாடுள்ள மதங்கள் மிகவும் வன்முறையான,அறிவுக்குப் பொருந்தாத, நல்லிணக்கமற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன.மேலும் அவை இனவெறி,குழுவெறி,மதவெறி போன்ற தேவையற்றவைகளைத் தூண்டி விடும் தன்மை வாய்ந்தவை.மதங்களின் முக்கிய முதலீடுகளே அறியாமையும், அறிவுத்தேடலுக்கு எதிர்ப்பும்,பெண்களை அடிமைப்படுத்துவதும், குழந்தைகளை வலிந்து இழுத்து வைத்திருப்பதும்தான்.பிளவுபடுத்துதலே அவைகளின் முதன்முதல் குறிக்கோளாக உள்ளது " விவரிக்கின்றார். நூலினைப் பற்றி சுருக்கமாக புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

                        இஸ்லாம் மதத்தை விமர்சனம் செய்யும் இரண்டு நூல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இப்னு வராக் என்பவர் எழுதிய " நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல? ' என்னும் புத்தகமும்,ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்பதுவுமாகும். நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல என்னும் புத்தகம் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் படிப்பவருக்கு பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் -இஸ்லாம் மதத்தைப் பற்றி இந்த நூலில் உள்ளன. " மதங்களில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை வராக் வலியுறுத்துகிறார். அவர் இஸ்லாத்தில் அம்மதத்தை விட்டு விலகும் சுதந்திரம் இல்லவே இல்லை. முஸ்லிமாகப் பிறந்தால் அதுவே முடிவு.அதை எதற்காகவும் உன்னால் மறுக்க, விட்டுச்செல்ல முடியாது. முயன்றால் நீ மரண தண்டனைக்குரியவனாக ஆகின்றாய் " என்று சொல்கின்றார். உண்மைதான். இன்றைக்கும் நாத்திகம் பேசினால் மரணதண்டனை கொடுக்கும் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால் உண்மை, உண்மைதானே.....சல்மான் ரஷ்டி பிரச்சனையின் மூலமாகவே எழுத வேண்டும் என்ற உணர்வு தோன்றியதாக இப்னு வராக் எழுதுகின்றார்.குரான் பற்றி, முகமது நபி அவர்களைப் பற்றி எழுப்பப்படும் பல கேள்விகளை இப்னு வராக் எழுதியிருக்கின்றார். அதனைத் தமிழில் தருமி அவர்கள் மொழிபெயர்த்து , இஸ்லாமிய மதம் எப்படி எப்படியெல்லாம்  மனித உரிமைகளுக்கும் , பெண் உரிமைகளுக்கும் எதிரானது என்னும் பட்டியலைத் தருகின்றார். ராகுல்ஜியின் 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்னும் புத்தகம் மிகச்சுருக்கமாக 5 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது.

                     இந்து மதத்தை விமர்சனம் செய்யும் காஞ்சா அய்லய்யா என்னும் தலித் தத்துவ அறிஞர் எழுதிய " நான் ஏன் இந்து அல்ல " என்னும் புத்தகமும், அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார் எழுதிய 'இந்து மதம் எங்கே போகிறது " என்னும் புத்தகமும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே என்னைப் போன்றவர்கள் படித்த புத்தகங்கள் இவை.மீண்டும் அதன் கருத்துக்களை சுருக்கமாகக் காண்பதற்கான வாய்ப்பாக இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம் அமைந்தது.

                     கடைசி இரண்டு நூல்களும் புனைவுகள். பிலிப் புல்மேன் எழுதிய " ஜீசஸ் என்ற நல்லவரும் கிறிஸ்து என்னும் போக்கிரியும் " என்னும் புத்தகம் வாங்கிய கதையை தருமி விவரிக்கின்றார். " பெயரைக் கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல்.வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி,கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன். வாங்கிய பின் பின்னட்டையிலேயே 'இது ஒரு கதை ' என்று தெளிவாகப் போட்டிருந்தது " பக்கம் 309 எனக் குறிப்பிடுகின்றார். இந்த நூலின் கதையைச்சொல்லி விளக்கும் நூல் ஆசிரியர் தருமி தனது கருத்துக்களை மிகவும் மனம் திறந்து பேசும் பகுதியாக இந்தப் பகுதி இருக்கின்றது எனலாம்.

                  12-வது நூல் டான் பிரவுன் என்பவர் எழுதிய டா வின்சி கோட் என்னும் நூல். " 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு,8 கோடி நூல்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டு,அக்கதையை திரைப்படமாகவும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு மிகவும் புகழ் சேர்த்த புனைவு நூல் " என தருமி இந்த நூலை அறிமுகம் செய்கின்றார். " மிக முக்கியமானதாகவும்,கிறித்துவர்களுக்கு அதிர்ச்சி தரும் சேதியாகவும் கதையில் வருவது ;ஜீசஸ் திருமணமானவர் என்பது.திருமணம் என்பது தன்னிலே தவறாக இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கிறித்தவருக்கும் இது அதிர்ச்சி தரும் சேதி என்பதே உண்மையாக இருக்கும் " பக்கம் (325) எனக் குறிப்பிடுகின்றார்.

                  கட்டுடைத்தல் என்பது இன்றைய தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான கோட்பாடு. அந்தக் கட்டுடைத்தல் என்பது மனித நேயத்தினையும் அன்பையும் அடிப்படையாகக் கொள்ளும்போது பழமைகள் காற்றுப்போன டயர்கள் போல வலுவிழந்து போகின்றன. ஆனால் பழமைவாதிகள் தங்களிடம் இருக்கும் பிரச்சார பலத்தால் மட்டுமல்லாது, வன்முறையாலும் மதங்களைக் காப்பாற்றிட முனைகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் " மதவாதிகளின் கோட்பாடுகள், பிரச்ச்சாரம் எல்லாம் பெரிய பலூன் போன்றவை .அவற்றை பகுத்தறிவு என்னும் ஊசி கொண்டு குத்தும்போது எவ்வளவு பெரிய பலூனும் வற்றிப்போய்விடும் ' என்பார். உண்மைதான் இந்த நூலின் கட்டுரை ஒவ்வொன்றும் மிக வலிமையான பகுத்தறிவு ஊசிகள்தான்.அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் பகுத்தறிவு ஊசிகளைப் பயன்படுத்தும்போது மதங்கள் என்னும் பலூன்கள் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

                 இந்த நூலின் ஆசிரியர் தருமி அவர்கள் ஒரு காலத்தில் மிகுந்த நம்பிக்கையாளராக கிறித்துவ மதத்தில் இருந்தவர். இன்றைக்கும் உற்றார்,உறவினர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தில் பற்றுடைவர்களாக, பரப்புவர்களாக இருப்பவர்கள். ஆனால் தன்னுடைய மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காதபோது, கடவுள் என்னும் கருத்தினை சந்தேகிக்க ஆரம்பித்து, கேள்விகள் கேட்டு கேட்டு கடவுள் இல்லை என்னும் நாத்திகராக மாறியவர். தான் மாறியது மட்டுமல்லாமல் , தான் மாறியதற்கான காரணங்களை 'மதங்கள்-சில விவாதங்கள் ' என்னும் நூல் மூலம் மற்றவர்கள் மாறுவதற்கும் வழி காட்டியவர். இப்போது ஓர் அருமையான நூலினை 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகத்தை அளித்துள்ளார். எனது சார்பாகவும், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தொடரும் இவரின் எழுத்துப்பணி தொடர, நாம் அளிக்கும் ஆதரவு என்பது இவரது எழுத்துக்களைப் படிப்பதுவும், அதனை மற்றவர்களையும் படிக்க வைப்பதுமே ஆகும். செய்வோம்..



*


1004. மேற்குத் தொடர்ச்சி மலை





*



 மேற்குத் தொடர்ச்சி மலை படம் பார்த்ததும் அதைப் பத்தி நாலு வரியாவது எழுதணும்னு ஆசைப்பட்ட போது முகநூலில் புதிய பதிவுகள் ஏதும் போட முடியாத சூழ்நிலை. இப்போது நாட்கள் கடந்திருச்சு. ஆறின கஞ்சி பழங்கஞ்சியாகிப் போய்விட்டது. இருந்தாலும் சொல்லணும்னு நினச்ச ஒரு விஷயத்தை யாருமே இது வரை சொல்லததால் அதை மட்டுமாவது சொல்லி விட வேண்டுமென்று ஆசை வந்திருச்சு.


 அழகர்சாமியின் குதிரை என்ற படத்தைப் பார்த்து அதைப் பற்றி நல்லதா நாலு வார்த்தை சொல்லியிருந்தேன். படத்தைப் பார்த்து எழுதியவன் அதன் ஒளிப்பதிவாளர் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். இப்படம் பார்ப்பதற்கு முன்பே தேனி ஈஸ்வர் அவர்களின் புகைப்படங்களை நிறைய பார்த்து வியந்திருக்கிறேன். முதன் முதல் பார்த்தது ஒரு நாட்டியக் குழுவின் படம் என்று நினைக்கின்றேன். அதன் பின் அவரது வளர்ச்சியைத் தொடர்ந்து பார்த்து வந்து கொண்டிருந்தேன். அவர் சினிமா படம் எடுக்கிறார் என்பது தெரிந்ததும் மிக்க மகிழ்ச்சி. (என்னைப்போல் காமிராவைக் காலம் காலமாய் தூக்கிக் கொண்டு அலைந்து கொண்டிருந்து கடைசி வரை ஒன்றும் தேறாமல் போகாமல், பலர் அதில் உயர் இடத்திற்கு வரும் போது ஒரு சின்ன மகிழ்ச்சி வருவதுண்டு.) அந்த மகிழ்ச்சியோடு அந்தப் படம் பார்த்தேன். ஏனோ எனக்கு அதில் அவர் ஏறிய உயரம் போதாது என்று தோன்றியது. முதல் படம் இன்னும் முயன்றிருக்க வேண்டும் என்று நினைத்தேன். இருப்பினும் அப்படத்தில் எனக்குப் பிடித்த ஒளிப்பதிவு பற்றியும் பேசியிருந்தேன். ஆனாலும், //இரவுக் காட்சிகளாக நாலைந்து காட்சிகள். உண்மையான இருளில் படப்பிடிப்பு நடத்தியிருந்தார்கள். நன்றாக அந்தக் காட்சிகள் இருந்தன. ஈஸ்வரின் stills எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இப்படத்தில் படப்பிடிப்பு இன்னும் அவர் நன்றாக செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.// என்று எழுதியிருந்தேன். ஏன் அப்படி எழுதினேன் என்பதற்கான காரணங்கள் மறந்து போய்விட்டன. அடுத்த படம் தரமணி பார்த்தேன். ஓஹோ என்று சொல்ல மனம் வரவில்லை. 



அவை எல்லாவற்றிற்கும் ஈஸ்வரிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்று மே.தொ.ம. படம் பார்க்கும் போதே தோன்றியது. மிரட்டும் அழகு என்பார்களே... அதை இப்படத்தில் அங்குலம் அங்குலமாக உணர்ந்தேன். பல டைரடக்கர்கள் நினைவுக்கு வந்தார்கள். முதலில் வந்தவர் “ப்ரம்ம்மாண்ட ஷங்கர்”! அவரது பிரமாண்டத்தையெல்லாம் இப்படத்தின் சில காட்சிகளோடு மனம் ஒப்பிட்டது. காசை வாரி இறைப்பது தான் பிரமாண்டம் என்ற ஒரு தியரியை உருவாக்கி வைத்திருக்கும் ஷங்கர் இப்படத்தின் பிரமாண்டத்தோடு போட்டி போட முடியாது என்று தோன்றியது. முழுக்காரணமும் தேனி ஈஷ்வர் தான்.


படம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு காட்சி. மேகம் மூடிய ஒரு மலை உச்சி. காமிரா அந்த பனிக்குள்ளிருந்து reverseஆக வெளியே நகரும். உறைந்து போனேன். panoramic காட்சிகள் பிரம்மாண்ட உலகத்தில் நாம் எத்தனை சிறிது என்று கணத்திற்குக் கணம் காண்பித்துக் கொண்டிருந்தன. இப்படத்தின் வெற்றிக்கும், புகழுக்கும் பல காரணங்கள் இருந்தாலும் வெற்றியின் பெரும்பங்கிற்கு ஈஸ்வர் ஒரு பெரும் காரணம்.


மணிரத்தினம் படத்தில் சின்னச் சின்ன வசனங்கள் என்பார்கள். இந்தப் படத்திலோ வசனங்கள் பல நீண்டு இருக்கும். அந்த வித்தியாசம் பளிச்செனத் தெரிந்தது. ஆனால் தன் வீராப்பை வழி நெடுக வழவழவென்று பேசிக்கொண்டு சென்று, இருமி கீழே விழும் அந்த மனிதனின் நீண்ட பேச்சை மேலிருந்து கீழே நடந்து செல்வதைப் பார்த்த போதும், அம்மாவுடன் பத்திரம் எழுதச் செல்லும் கதாநாயகன் ரங்கசாமி ‘சீக்கிரம் நடந்து வா’ என்று அம்மாவிடம் சாதாரணமாகச் சொல்ல, பதிலாக அந்த அம்மா முழக்கணக்கில் திட்டிக் கொண்டே பதில் சொல்வதும் நிஜம் மட்டுமல்ல இயற்கை. நிஜ அம்மா. நிஜ கிராமத்து அம்மா. லெனின் சொல்லும் சமூகத்தின் இலக்கணமே அது தானே. 


இது ஒரு பிரம்மாண்டமான படம். பிரம்மாண்டமாக ஆக்கியது ஈஸ்வரின் பொட்டி தான்! எனக்கு ஒரு வருத்தம். நான் பார்த்த பல youtube படங்களிலோ. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ ஈஸ்வரின் படப்பிடிப்பு பற்றி யாரும் பேசியது என் கண்களிலோ காதுகளிலோ விழவேயில்லை. பெரும் வருத்தம். அதற்காகவே இப்பதிவு.


மணிரத்தினத்தின் முதல் படமான ப்ரியா ஓ ப்ரியா என்ற படம் பார்த்துக் கொண்டிருந்தேன் மதுரை மினிப்பிரியா தியேட்டரில். அப்போது மணிரத்தினம் பற்றி தெரியாது. படத்தில் என்னை மிகவும் மிரட்டியது காமிரா. சில ”நல்ல” தமிழ் வார்த்தைகளை மனதிற்குள் போட்டுக் கொண்டு ‘எவண்டா இந்த ஒளிப்பதிவாளர்” என்று நினைத்துக் கொண்டே படத்தின் முதல் பாதியை பார்த்து விட்டு, இடைவேளையில் வேகமாக வெளியே வந்து அங்கிருந்த போஸ்டர்களைத் தேடி ஓடினேன். பாலு மகேந்திரா. அதற்கு முன்பும் எனக்கு அவரைத் தெரிந்திருந்தாலும் அன்று அவர் அடிமையானேன்.


 இந்த நிகழ்வும் எனக்கு மே.தொ.ம. படம் பார்க்கும் போது நினைவுக்கு வந்தது.





*

Sunday, September 23, 2018

1003. சாதிகள் உள்ளதடி பாப்பா .....




*


இணைய நண்பர் ஜி.எம். பாலசுப்ரமணியன் அவர்களின் பதிவை நேற்று மாலை வாசித்தேன்.   எனக்கும் சீனியர். நெடுநாளைய பதிவர். சாதியில்லா உலகம் வேண்டி ஒரு பதிவிட்டிருக்கிறார். ”இது நம் ரத்த அணுவில் ஊறிய சமாச்சாரம். எளிதல்ல நீக்குவது என்கிறார் ஜி.எம்.பி ஐயா.. அப்பதிவுக்கு நான் ‘முறை’ கட்டாயம் செய்ய வேண்டுமல்லவா! என்ன எழுதுவது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளை - 23.9.18 தமிழ் இந்துவில் அழகிய பெரியவன் என்ற எழுத்தாளரின்  - சாதியம் மேலும் கூர்மைஅடைந்திருக்கிறது என்ற தலைப்பில் வந்திருந்த பேட்டி  என் கண்ணில் பட்டது.
அதில் ‘சாதியை ஒரு மனநிலை’ என்ற அம்பேத்கரின் வார்த்தையை மேற்கோளிடுகிறார். அதோடு இப்போது நான் மொழியாக்கம் செய்து கொண்டிருக்கும் நூல் - அம்பேத்கரின் உலகம் (Eleanor Zelliot). இவைகளோடு ஏற்கெனவே என் கருத்துகள். எல்லாம் ஒன்றோடு ஒன்றிணைந்து ... மண்டைக்குள் சிறிது குழப்பம். என் கருத்தும் என்னவென்று பார்த்து விடலாமே என்றெண்ணி இப்பதிவை எழுத ஆரம்பித்தேன். 


தலித் பிரச்சனை பற்றி மனதுக்குள் பல ஆண்டுகளாக பல எண்ண ஓட்டங்கள் உண்டு. ஒரு வேளை நான் சின்ன வயதில் நேசித்த “ஏமன்” இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்,. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள நீங்கள் என் பழைய பதிவு ஒன்றை  கட்டாயம் வாசிக்கணுமே! 

சாதி வித்தியாசங்களில் என் சிந்தனை ஒரு வழியில் போனதற்கு ஏமன் ஒரு காரணமாக இருக்கலாம். ப்ளாக் எழுத ஆரம்பித்து மதங்களைப் பற்றி எழுத ஆரம்பித்த போது இந்து மதமே ஒரு இரட்டை மதம், என்றும் அதில் பிராமணர்கள் சிறு பான்மையினர்; மற்றோர் (ஆங்கிலேய அரசின் போது எடுத்த மக்கள் கணிப்பின் மூலமாய்) இந்து மதத்திற்குள் தள்ளப் பட்டவர்கள் / இழுத்து வரப்பட்டவர்கள் என்றும் எனக்குப் புரிந்தது. ஆயினும் சிறுபான்மையினரான பிராமணர்கள் இந்து மதத்தை மட்டுமல்லாது அதற்குள் இழுத்து வரப்பட்டவர்களையும் தங்கள் H.R. திறமையினால் தங்கள் (மதக்) கட்டுக்குள் வைத்திருப்பதாகவும் அறிந்தேன். முன்னோரை குலச்சாமியாக்கி வணங்கியவர்கள் பின்னாளில் மும்மூர்த்திகளைக் கடவுளாகக் கொண்டதாக அறிந்தேன்.

இதில் நடந்த ஒரு பெரும் சோகம் .. இந்து மதத்தின் வர்ணாசிரமக் கொள்கைகள் மக்கள் மீது பற்றிப் படர்ந்து அவர்களை முழுமையாக ஆட்கொண்டன. என் தலை மீது வலியவனின் கால் இருக்கிறதென்றால் நான் அதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும் என்றில்லாமல், என் கீழ் யார் இருக்கிறார்கள்; அவர்கள் தலை எங்கே இருக்கிறது என் கால்களை வைக்க என்ற நோக்கம் பரந்து பட்டு அனைத்து இந்தியர் மேலும் ஆதிக்கம் கொண்டு விட்டது. ப்ராமணியம் என்பது அனைத்து சாதியினரும் படிநிலையை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக மாறி விட்டது. இன்று பிராமணர்கள் வெளிப்படையாக (overt) மற்ற சாதியினரை மட்டம் தட்டுவதில்லை என்றாலும், மற்ற சாதியினர் ‘நான் ஆண்ட சாதி ... நீ அடிமை சாதி’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு சாதியைக் கட்டி அழுகிறார்கள். இது தான் இன்றைய பிராமணியம். நடுமட்ட சாதிகள் புதியதாகப் பிறந்த ’நவீன சத்திரியர்களாக’ மாறிவிட்டனர். (காஞ்சா அய்லய்யா) இதனால் தான் இன்று அழகிய பெரியவன் என்ற எழுத்தாளர் “சாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது” என்று தனது பேட்டியில் சொல்லியிருப்பது எனக்கு இதுவரை ஏன் தோன்றியதில்லை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

நானும் பல ஆண்டுகளுக்கு முன்பே இடப்பங்கீடுபற்றிய ஒரு நீண்ட நெடிய கட்டுரை ஒன்றினை எழுதிப் பதிவிட்டேன். ஆனால் அழகிய பெரியவன் கூறிய ஒரு கூற்று இதுவரை என் மனதில் படவேயில்லை. “தமிழ்நாட்டில் இட ஒதுக்கீட்டில் (இடப்பங்கீட்டில்!) 30% பிற்படுத்தப்பட்டவர்க்கு, 20% மிகவும் பிற்படுத்தப்பட்டவர்க்கு, 18% பட்டியலினத்தார்க்கு, 1% பழங்குடியினர்க்கு என்று இட ஒதுக்கீடு இருக்கிறது. இட ஒதுக்கீட்டிற்கு அப்பாற்பட்டு (இன்னும்) 31% இடங்கள் இருக்கின்றன. இதில் தலித்துகளுக்கான 18% ஒதுக்கீட்டை மட்டும் சுட்டி எப்படி ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டையும் தலித்துகளோடு இணைத்துப் பேசுகிறார்கள்?எனக்கு இந்த உண்மை இதுவரை உரைக்கவில்லை. இடப்பங்கீடு என்றாலே அது தலித்துகளுக்கு மட்டும் கொடுக்கப்படும் ஒரு ”கொடை” என்ற நினைப்பு தான் எல்லோருக்கும். இதில் வேடிக்கை என்னவென்றால் பிற்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் இடப்பங்கீடு தலித்துகளுக்கு மட்டும் என்ற நினைப்பில் கொந்தளிப்பார்கள். வேதனையான  வேடிக்கைதான். தங்கள் முதுகு தங்களுக்குத் தெரியாதே!

என் கட்டுரையின் இறுதியில் இடப்பங்கீடு எதுவரை என்பதற்கு ஒரு எல்லைக்கோட்டையும் கொடுத்திருந்தேன். ஆனால் அந்த மாற்றங்களைக் கொண்டுவர நல்ல அரசும், சமூக முன்னேற்றத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு அமைச்சரவையும் வர வேண்டும். நடப்பவைகளை வைத்துப் பார்க்கும் போது அப்படி ஒரு ‘நல்ல காரியம்’ நம் திருநாட்டில் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை.

ஆனால் ஜி.எம்.பி. ஐயாவுக்கு எப்படியோ கொஞ்சம் நம்பிக்கை. ஆனால், என்னைப் போல் எழுபதைத் தாண்டிய ஆட்களுக்கு இந்த நம்பிக்கை வரும் வாய்ப்பு மிகக் குறைவு. நாங்கள் படித்த காலத்தில் என் வகுப்புத் தோழர்களின் சாதி என்ன என்று எந்த ஆராய்ச்சியும் நாங்கள் யாரும் செய்ததாக நினைவில்லை, ஆனால் இன்று கலர் கலர் கயிறுகள் கட்டி சாதியைப் பிரகடனம் செய்யும் சின்னப் பசங்களை நிறைய பார்க்க முடிகிறது. அந்த வயதில் சாதி மேல் ஒருவனுக்குப் ‘பாசம்’ பிறந்து விட்டால் எப்போது அது அவனை விட்டுப் போகும்?


நம் தமிழ் சினிமா முன்னேறவே முடியாது என்றும் எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது வரும் பல படங்கள் எனது அந்தப் பழைய கருத்தை முறித்துக் கொண்டுள்ளன. நல்ல தமிழ்ப்படங்கள் மெல்ல மெல்லப் பெருகும் என்ற நம்பிக்கை வருகிறது, அது போலவே சாதி மறையும் காலம் பக்கத்தில் இல்லை என்பது என் எண்ணம். சினிமாவைப் பொறுத்த வரையில் நான் தோற்றது போல் இக்கருத்திலும் விரைவில் தோற்க ஆசைப்படுகிறேன்.

ஆனாலும் அப்படி எளிதில் தோற்க முடியுமான்னும் தெரியவில்லை. ஏனெனில் யார் யாரைத் தூக்கி விடுவது என்று யோசித்தால் பதில் தெரியவில்லை. அதோடு பாழாய்ப் போன இந்தப் படி நிலை எல்லாவிதத்திலும், எல்லா நிலையிலும் இருப்பதால் எப்படி இந்த நிலை மாறும்? தலித்துகளுக்குள்ளும் உள்ள இந்தப் படி நிலை அவர்களையும் ஒரே அணியாய் நிற்க விடாதே.









 *

Thursday, September 06, 2018

1002. எனக்குப் பிடித்த சீரியல்







*



 Bigg boss பார்க்கிறேன் என்றதும் நிறைய பேர் நேரிலும் வேறு வழியிலும் திட்டித் தீர்த்தார்கள். அவர்களிடம் இன்னொன்றை சொன்னால் இன்னும் திட்டுவார்கள். திட்டிட்டு போகட்டுமேன்னு நினச்சு, சொல்றேன்.

நான் சீரியலும் பார்க்கிறேன்.

 ”அடச் சீ .. இந்த ஆளு சீரியல் பாக்கிறான் பாரு”

 ”சுத்த அறிவு கெட்ட மனுசனா இருக்கானே ...”

 ”பரவாயில்லை ... ரிட்டையர்ட் ஆய்ட்டா இந்த மாதிரி ஜாலியா டிவி பாத்துக்கிட்டு பொழப்ப ஓட்டலாம் போல ...”

 “மடத்தனமான சீரியல்னு சொல்லிக்கிட்டே அத எப்படித்தான் பாத்துத் தொலைப்பாங்களோ!”

 “ஒரு சமுக அக்கறையுள்ளவனா இருந்தா இப்படி சீரியல் பாத்துக்கிட்டுக் கிடப்பானா?”

 “சுத்தமா அறிவே கிடையாதா?”

டெம்ப்ளேட் கொடுத்தாச்சு. அதில் எதை வேணும்னாலும் டிக் பண்ணிட்டு திட்டிக்கிங்க. . SET-UP BOX (சரிதானே .. அல்லது அது SET OF BOX ஆ?) மேல சத்தியமா ... S.C.V. மேல சத்தியாம நான் டிவி அதுவும் சீரியல் கூட பார்ப்பேன் என்பதை ஒத்துக் கொள்கிறேன்.

 சீரியல்னா .. அதில ஒரே ஒரு சீரியல் மட்டும் கட்டாயம் பாத்திருவேன் - மெளனராகம். சில லாஜிக் தகராறுகள். ஒரே ஒரு சஸ்பென்சை வச்சி எத்தனை நாளைக்கு இழுக்குறதின்னு இல்லையா? ஆனாலும் சீரியல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

 முதலில் அந்த இயக்குனருக்கு - தாய் செல்வம் - ஒரு பாராட்டு சொல்லணும். படப் பிடிப்பும் நல்லா இருக்கு. இடது பக்கம் இருட்டில் ஒரு கண்ணாடி chandelier .. அதன் பின்னால் ஒரு கதவு...அதன் பின்னால் நல்ல இருட்டு. அந்த இருட்டில் விளக்கொளியில் ஒரு பாக்கு மரம். வாவ் ...

 அதில வர்ர எல்லார் நடிப்பும் ரொம்ப பிடிச்சிருக்கு. வில்லி கண்ணை கண்ணை உருட்டுறதுல இருந்து, அவங்க அம்மா பண்ற உடை, ஸ்டைலில் இருந்து எல்லாமே பிடிக்குது. இந்த சீரியலில் நன்றாக நடிக்காதவரென்று யாருமே இல்லை. பாப்பாவும் பெரியப்பாவும் நல்லா பண்றாங்க. இயக்குனரின் முதுகில் ஒரு தட்டு, பாராட்டாக.

 கதாநாயகியா வர்ர சின்ன பொண்ணு ரொம்பவே நல்லா நடிக்குது. நல்ல பாடல்கள். பாடல்களுக்கு அந்தச் சின்னப் பொண்ணு அழகா வாயசைக்குது. இப்போ சில நாளைக்கு முன்னால் ஒரு பாட்டு பாடுவது போல் ஒரு சீன். அழகான வாயசைப்பு. சிவாஜியின் வாயசைப்பை அந்தக் காலத்தில ரசிச்ச ஆளு நானு. இப்போ இந்தப் பொண்ணைப் பார்த்ததும் மனசுக்குள்ள ’அட .. நம்மாளுக்கு அடுத்தபடியா உதட்டசைக்கிறதில இந்தப் பொண்ணுதான் டாப்புன்னு’ நினச்சேன். என்ன ஆச்சரியம் .. பக்கத்திலிருந்த வீட்டம்மா, ’சிவாஜி மாதிரி பாட்டுக்கு உதட்டை அசைக்குதுல்ல?’ அப்டின்னாங்க. என்னா ஒரு சின்க்!





 ********** 


இதோட வேற சீரியல்களில் சில சீன்கள் .. சில ஆட்களின் மொகறைகள் இதையும் பார்க்க வேண்டிய சூழல் நிலை வந்து தொலைச்சிருது.
புதுசா ஒரு தியரியை மேக்கப் ஆட்கள் உருவாக்கி இருப்பாங்க போலும். அரை இஞ்சி அளவுக்கு கண்மை போட்டா நல்ல பொம்பிளை... ஒரு இஞ்ச் அகலத்துக்குப் போட்டா அது ஒரு வில்லி.

 வில்லின்னா கழுத்து நிறைய இரவு பகல் எந்நேரமும் நகைகள். ராத்திரி திருடன் வர்ரான். அந்த வீட்டு அம்மா தூங்குது - அழகான பட்டுச் சேலை .. கழுத்தெல்லாம் நகை. தலை நிறைய மல்லிப்பூ!

neutral ஆன ஆட்களையே பார்க்க முடியலை. கொடுமைன்னா .. உங்க வீட்டு எங்க வீட்டு கொடுமை...  ஆட்கள், அதுவும் பெண்கள் / மாமியார்கள்.. நாத்தனார்கள். யாராவது நல்லவங்களா இருந்தா அந்த ஊரு நல்லவங்க இந்த ஊரு நல்லவங்க எல்லாம் தெறிச்சி ஓடணும். அந்த மாதிரி தெய்வீகப் பிறவிகள். பொதுவா அந்தத் தெய்வீகப் பிறவிகள் முட்டாள் நம்பர் ஒண்ணா இருப்பாங்க. மடிக்கணினி அழுக்கா இருக்குன்னு சோப்பு போட்டு கழுவி கொடியில் காய வச்சிருவாங்க.

 அவுங்க அடிச்சிக்கிட்டே இருப்பாங்க .. இவங்க வாங்கிக்கிட்டே இருப்பாங்க. 

புதுசா ஒரு #நயந்தாராeffect ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. உதட்டைச் சுத்தி எங்காவது ஒரு கருப்பு மச்சம். அவங்க எல்லாரும் உடனே அப்படியே நயன்தாராவா மாறிடுறாங்க. என்னமோ போங்க!

 சொளவு அகலத்தில eye lashes வச்சிக்கிட்டு ...

கடவுளே! நம்ம சீரியல் டைரடக்கர்களுக்கு அழகுணர்ச்சி ரொம்ப ரொம்ப கம்மி போலும். கொஞ்சம் நல்ல மூஞ்சி உள்ளவங்களை நடிக்கக் கூப்பிட்டா நல்லது. சில மூஞ்சிகளைப் பார்த்தாலே ஓடத் தோணுது. அதிலேயும் இவங்க கதாநாயகிகளாகவும் இருந்து தொலைக்கிறாங்க.





 *

Wednesday, September 05, 2018

1001. பிக் பாஸ்




*


என்னவென்று புரியவில்லை. முகநூலில் ஏதும் பதிவிட முடியவில்லை. பிக் பாஸ் பற்றி எழுதணும்னு கை ஊறியது என்றாலென்ன செய்வது. இருக்கவே இருக்கிறது ப்ளாக்.


 டேனியை எலிமினேட் பண்ணணும் என்பது பொது மக்கள் சொன்னதாம். சொல்றார் பிக் பாஸ்!!! அந்த மூணு பேர்ல டேனி மட்டும் தான் கொஞ்சம் ஒழுங்கோடு இருந்ததாக எனக்குத் தோன்றியது. வெளிய அனுப்பியாச்சு. மனுசனும் போய் உடனே சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டார். நல்லா இருக்கட்டும்.

 இப்போது மீதி இருப்பதில் ரித்விகா புத்திசாலியாகவும், நல்ல தீர்வுகளோடும் இருக்கிறார். யாரிடமும் பொருதவில்லை. ஆனால் போகும் போக்கில் டேனியை இந்த வாரம் தூக்கிய அநியாயம் போல் சீக்கிரம் ரித்விகாவை மக்கள் சொன்னார்கள் என்று தூக்கி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். உண்மையிலேயே “மக்கள்” சொன்னதைத்தான் பிக் பாஸ் பண்றாரா?

(ரித்விகா, நம்மூர் பெண் இறுதிச் சுற்றுக்கு வர வேண்டுமென்று வேறு சொல்லியிருக்கிறார்.)

 யாருக்கு ரோடு போடுவதற்காக பிக் பாஸ் இப்படிச் செய்கிறார் என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது.






 *

1000. பேத்தியும் நானும் ....


நித்தம் நித்தம் புத்தகம் வாசிப்பது மிக நல்ல பழக்கம். ஆங்கிலப் புத்தகமானாலும் அதுவே.  சரி. ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல் ... நானும் என் ஆசிரியப் பணியில் ஒன்றைப் பார்த்து விட்டேன். நன்றாக வாசிப்பவர்கள் .. அதிலும் ஆங்கிலப் புத்தகங்கள் நிறைய வாசிப்பவர்கள் ... அதுவும் அவர்கள் பெண்களாக இருந்தால் ... அவர்கள் ஒரு தனி ரகம் தான். நிச்சயமாக பாரதி கண்ட பெண் போல் நிமிர்ந்த நடை .. நேர்கொண்ட பார்வை ... etc., ..etc. இருக்கும். தங்கள் முடிவுகளை தாங்களே எடுப்பார்கள்; யாரும் வலிய தங்கள் கருத்தை அவர்கள் மீது திணிக்க முடியாது. . இது போல் பல விஷயங்கள் இருக்கும். அவைகளை  + என்றும் சொல்ல முடியாது; -- என்றும்  சொல்ல முடியாது. பொதுவாக சின்னப் பிள்ளைகள் தானே. (அப்படியும் நம்மை நினைக்க விட மாட்டார்கள்! முதிர்ந்தவர்கள் போன்றே நம்மிடம் காட்டிக் கொள்வார்கள்.)

பெரிய பேத்தியும் நிறைய்ய்ய்ய வாசிக்கிறாள். ஆனால் அவளுக்குப் பிடித்தவைகளை மட்டும். P.G. Wodehouse,  Sherlock Holmes வாங்கிக் கொடுத்தேன். பயனில்லை. எந்த குண்டு புத்தகமாக இருந்தாலும் ஆச்சரியப் படும்படி வெகு விரைவாக முடித்து விடுகிறாள். நிறைய எழுதுகிறாள். ஆனால் யார் கண்ணுக்கும் காட்டுவதில்லை. ஏதோ ஒரு குழுவாக இணையத்தில் நண்பர்கள் இருக்கிறார்களாம். அவர்களுக்குள் விவாதிப்போம் என்கிறாள். ஒரு சில சின்னப் பகுதிகள் கண்ணில் பட்டன. நன்றாக இருந்தன. சிலவற்றை அவளுக்காக ஆரம்பித்த ப்ளாக்கில் போட்டு வந்தேன். நன்றாகப் படம் வரைகிறாள். மிக எளிதாக வரைகிறாள். வரைந்ததை ப்ளாக்கில் போட்டேன். அதற்காகவே மதுரை வரும்போது ஓரிரு படங்களோடு வருவாள். அல்லது நான் சென்னை செல்லும் போது 

படங்கள் தருவாள்இப்போதெல்லாம் நிறுத்தியாகி விட்டது. ப்ளாக் ... படம் ... என்றால் தானே ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதில் போட்டுக் கொள்கிறேன் என்றாள். சொன்னாள் .. ஆனால் இது வரை ஏதும் செய்யவில்லை. அழுத்திக் கேட்கவா முடியும்!

சென்ற முறை சென்னை சென்றிருந்தேன். அவளது அறைக்குப் போனேன். பழைய சில படங்களோடு அவளது மர அலமாரிக் கதவுகளில் சில புதிய படங்கள் இருந்தன. It was sort of 'houseful'!




NOT EVERY GIRL WANTS TO BE A PRINCESS, 'COZ I'M A QUEEN.   .... சரி...  இந்த வயதில் தனிக்காட்டு ராஜா’ Lonely guy போன்ற நினைப்பு எனக்கு இருந்தது நினைவுக்கு வந்தது. சரி .. அது போல் இன்று இவளுக்கு என்று நினைத்துக் கொண்டேன்.



அடுத்து ஒரு செல்ஃபியைப் படமாக வரைந்து வைத்திருந்தாள். head phone கூடவே வந்து விட்டது. அதில் அவளது தத்துவம் ஒன்றும் இணைந்திருந்தது. Karma is real and I believe it. நான் மத மறுப்பாளன் என்பதும், எனது முதல் நூல் பற்றியும் அவளுக்குத் தெரியும்


ஒரு சின்ன சந்தோஷம். அவளுக்கு பல பிறப்புகள் பற்றி நம்பிக்கை இல்லையாம். ஆனால் அவளுடையகர்மாமுற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது மாதிரியும், உன் வினை உன்னை உறுத்தி வந்து ஊட்டும் என்பது மாதிரியும் சொன்னாள். அதைப் போல் வகுப்பில் நடந்த ஒரு நிகழ்வையும் சுட்டிக் காட்டினாள். அவளது கர்மா அன்றன்றைக்கு உள்ளது போலிருந்தது.


மூன்றாம் வகுப்பு வரை அமெரிக்கக் கல்வி. இன்னும் அது அவள் மனதை விட்டு அகலவில்லை. அது அவ்வளவு பிடித்தது என்று ஆறு ஆண்டுகள் கழித்து இன்னும் நினைவில் வைத்திருக்கிறாள்..  who knows .. you can go for higher studies என்றேன். ம்ம்... என்றாள். நாமென்ன அதையெல்லாம் பார்க்கிறது வரை இருக்கவா போகிறோம். சும்மா சொல்லி உற்சாகப் படுத்தலாமேவென சொன்னேன்.

எனக்கு என் மேல் ஒரு சின்ன வருத்தம். என் potentials  என்னவென்று தெரியாமலேயே வாழ்ந்து முடிந்து விட்டதாக ஒரு நினைவு. அதுவும் இந்த எண்ணம் என் பணிக்காலத்தில் என்னைச் சுற்றிச் சுற்றி வந்தது. ஆனால் .. இப்போது, ஓய்வு பெற்ற பிறகு மொழியாக்கம் செய்யக் கிடைத்த வாய்ப்பும், அதில் கிடைத்த கொஞ்சம் ‘நல்ல பெயரும்’ மட்டும் தான் என் வாழ்க்கையின் சாதனை என்ற நினைப்பு என்னை ஆசுவாசப் படுத்தியது. 

பேத்தியிடம் திறமைகள் - potentials - நிறைய இருக்கின்றன. அதை முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை மட்டும் மனதில் நிறைய இருக்கிறது.
Let me wish her all the best .......





 இந்தச் சின்னத்தோடு வரைந்த படத்தின் பின்னணியில் பல ஆங்கிலச் சொற்கள்.. ஒன்றொன்றோடு தொடர்பில்லாதவை. ஆனால் எல்லாம் ஒரு வரிசையாக எழுதியிருந்தாள். என்னவென்று கேட்டேன். முதலில் ஒரு background வண்ணத்தில் கொடுத்திருக்கிறாள். அதில் திருப்தியில்லையாம். அதனால் வார்த்தைகளை background ஆக்கி விட்டாளாம். smart...!