*
எனது இரண்டாம் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர்சனப் பார்வை
முனைவர் வா. நேரு அவர்கள் எழுதிய கட்டுரை
*
அண்மையில் படித்த புத்தகம் : கடவுள் என்னும் மாயை...தருமி
ஆசிரியர் : தருமி
வெளியீடு : எதிர் வெளியீடு ,பொள்ளாச்சி- 624 002,99425 11302
முதல் பதிப்பு : டிசம்பர் 2017
மொத்த பக்கங்கள் : 328, விலை ரூ 350 .
கடவுள் என்னும் மாயை என்னும் இந்தப்புத்தகம் அண்மையில் புத்தகக் கண்காட்சியில் வாங்கியது.இந்நூலை எழுதிய தருமி அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர். தமிழ் வலைத்தளத்தில் சக பதிவாளர். தொடர்ந்து பதிவுகளைப் பதிவிடக்கூடியவர். ஓய்வு வாழ்க்கையை புத்தகங்களை வாசிப்பதிலும்,அதனை பதிவிடுவதிலும், ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதிலும் செலவழித்து மிக அர்த்தமுள்ள வாழ்க்கையாக தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளவர். அவரால் அண்மையில் எழுதப்பட்டு வெளிவந்துள்ள புத்தகம் இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம்.
நீங்கள் எந்த மதத்து நம்பிக்கையாளராகவும் இருக்கலாம். இந்துவாக, கிறித்துவராக,இஸ்லாமியராக இருக்கலாம்,நீங்கள் நேர்மையான,திறந்து மனதோடு இந்தப் புத்தகத்தைப் படித்தால், இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது உங்களுக்குள் உங்கள் கடவுள் பற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் வருவதை உணர்வீர்கள். எந்த வயதுக்காரராக நீங்கள் இருந்தாலும், இந்த வயதுவரை நமக்கு இருந்த கடவுள் நம்பிக்கை சரிதானா? என்னும் கேள்வி ஆழமாகப் பதிவதை நீங்கள் மறுக்க இயலாது. எல்லா மதங்களைப் பற்றியும் , எல்லாக் கடவுள்கள் பற்றியும் ஆதாரபூர்வமான கேள்விகளை வைக்கின்ற, நேர்மையானவர்களாக இருந்தால் கடவுள் நம்பிக்கையாளர்களிடமிருந்து கேள்விகளுக்கு பதிலினை எதிர்பார்க்கின்ற புத்தகம். இந்த நூலுக்கான வாழ்த்துரையை "புதிய வெளிச்சம் தரும் இந்நூலை எழுதியவரைப் பாராட்டுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு என மகிழ்ந்தேன் " என ஜீவானந்தம் கொடுத்திருக்கின்றார்.
ஆசிரியர் முன்னுரையை ' புலியின் வாலைப் பிடித்த கதையாகி விட்டது என் பிழைப்பு ' என ஆரம்பிக்கின்றார். அப்போது வாசிப்பதில் ஏற்படும் ஈர்ப்பு புத்தகத்தின் கடைசி வரை ஈர்ப்பாகவே இருக்கின்றது. தான் படித்த 12 புத்தகங்களைப் பற்றிய (9 ஆங்கில நூல்கள், 3 தமிழ் நூல்கள்) தொகுப்புதான் இந்த நூல் என்றாலும், ஒவ்வொரு நூலும் ஒரு நம்பிக்கையாளனின் கடவுள் நம்பிக்கையை போட்டு தாக்கித் தகர்க்கும் அணுகுண்டைப் போன்ற வலிமை மிக்க நூல்கள். மிகப் பொறுமையாகப் படித்து, அதன் கருத்துக்களைப் புரிந்து அதனை தமிழாக்கம் செய்து, தனது கருத்துக்களையும் இணைத்து இந்த நூலை நமக்குக் கொடுத்திருக்கின்றார் தருமி.
கிறித்துவமத நம்பிக்கைகளை கேள்விகேட்கும் வகையில் வந்துள்ள 6 நூல்களை முதலில் நூல் ஆசிரியர் கொடுத்துள்ளார். நூல், நூல் ஆசிரியர் அறிமுகம், நூலில் உள்ள செய்திகள் பற்றிய விளக்கம் என்ற வகையில்தான் இந்த நூல் முழுக்க அமைந்துள்ளது.தருமி கொடுத்திருக்கும் முதல் நூல் 'கடவுள் என்னும் மாயை ' என்னும் ரிச்சர்டு டாக்கின்ஸ் நூல். தமிழில் கு.வெ.கி. ஆசான் அவர்களால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு,திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டு இன்றும் விற்பனையில் சாதனை படைக்கும் நூல். ரிச்சர்டு டாக்கின்ஸ் அவர்களைப் பற்றிய குறிப்புகளை, அவர் எழுதிய புத்தகங்கள் பட்டியலைக் கொடுத்திருக்கின்றார். பின்பு அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை 10 தலைப்புகளில் கொடுத்திருக்கின்றார்.
இரண்டாவது நூல் அன்னை தெரசா அவர்களைப் பற்றியது. " அன்னை தெரசா ஒளியே வருவாய் என்னிடம் கொல்கத்தா புனிதையின் தனிப்பட்ட கடிதங்கள் .." என்னும் புத்தகம் ப்ரையன் கோலோடைசுக் M.C. என்பவர் எழுதியது. " இந்த நூலில் அன்னையின் வாழ்வின் பெரும்பகுதியில் ஆன்மிக வாழ்வில் அவருக்கு நடந்த கடினமான, மனதுக்குள் நடந்த நீண்ட போராட்டமான வாழ்க்கை தெளிவெனத் தெரிகிறது. இறை நம்பிக்கைகளில் இருந்த குழப்பத்தை அவர் தனது சமூக வாழ்க்கையில் வெளிக்காண்பிக்காது,தன் சேவைகளைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளார்......இப்பதிவை மிகவும் யோசித்தபிறகே வலையேற்றுகிறேன் " என இந்த நூல் ஆசிரியர் குறிப்பிடுவதும் வேறுபட்ட கோணத்தில் அன்னை தெரசாவின் ஆன்மிகத்தைப் பார்ப்பதுவும் வாசிக்கும் நமக்கு மிகவும் புதிய கோணமாக இருக்கின்றது.பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர்களின் ' நான் ஏன் கிறித்துவனல்ல ' என்னும் நூல் 3-வது நூலாகும். இது பெரும்பாலான நாத்திகர்கள் படித்திருக்கக்கூடிய புத்தகம்.நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் பற்றியும் அவரின் கருத்துகள் பற்றியும் எழுதியுள்ளார்.
எலைன் பேஜல்ஸ் என்பவர் எழுதிய 'ஞான மரபு நற்செய்திகள் ' என்பது 4-வது நூல். என்னைப் போன்றவர்கள் கேள்விப்பட்டிராத நூல். "கிறிஸ்துவ மதத்தின் ஆரம்ப காலங்களில் இருந்த உட்பிரிவினைகள்,யூத,கிறித்துவ சமயங்களின் ஆரம்பகாலத்தில் பெண்கள் கையாளப்பட்ட விதம் போன்றவைகளை இந்த நூலில் எழுதியுள்ளார். மிகவும் முக்கியமான ஓர் இடத்தை அந்த நூல் விரைவில் பெற்றது. 20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் இதுவும் ஒன்று என Modern Library என்ற அமெரிக்க வெளியீட்டாளர் தேர்ந்தெடுத்தனர் " (பக்கம் 72 ) எனக்குறிப்பிட்டு அந்த நூல் எழுப்பும் கேள்விகள் கடந்த 2000 ஆண்டுகளாக இருப்பதை கடைசியில் சுட்டிக்காட்டுகின்றார்.
யூதாசின் நற்செய்தி என்பது அடுத்த நூல். இதனைத் தொகுத்தவர்கள் மூன்று பேர்.யூதாஸ் என்பவர் வில்லன் அல்ல, யேசுவின் மிக நெருங்கிய நண்பர். யேசுவால் மிகவும் நம்பப்பட்டவர். யேசு சொல்லியே அவர் எதிரிகளிடம் யேசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார் என்பதற்கு ஆதாரமாகக் கிடைத்திருக்கும், 1600 ஆண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்து, இப்போது கிடைத்திருக்கும் புத்தகத்தின் வழியாகக் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டுகின்றார்.
கிற்ஸ்டோபர் ஹிட்சன்ஸ் எழுதிய 'கடவுள் என்பது பெரிதொன்றுமில்லை( God is not great ) என்பது ஆறாவது நூலாகும்.அவரது நூலைப் பற்றி சில குறிப்புகள் எனக்குறிப்பிட்டு பக்கம் 125-ல் " கட்டுப்பாடுள்ள மதங்கள் மிகவும் வன்முறையான,அறிவுக்குப் பொருந்தாத, நல்லிணக்கமற்ற தன்மைகளைக் கொண்டுள்ளன.மேலும் அவை இனவெறி,குழுவெறி,மதவெறி போன்ற தேவையற்றவைகளைத் தூண்டி விடும் தன்மை வாய்ந்தவை.மதங்களின் முக்கிய முதலீடுகளே அறியாமையும், அறிவுத்தேடலுக்கு எதிர்ப்பும்,பெண்களை அடிமைப்படுத்துவதும், குழந்தைகளை வலிந்து இழுத்து வைத்திருப்பதும்தான்.பிளவுபடுத்துதலே அவைகளின் முதன்முதல் குறிக்கோளாக உள்ளது " விவரிக்கின்றார். நூலினைப் பற்றி சுருக்கமாக புரிந்துகொள்ளும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மதத்தை விமர்சனம் செய்யும் இரண்டு நூல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. இப்னு வராக் என்பவர் எழுதிய " நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல? ' என்னும் புத்தகமும்,ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்பதுவுமாகும். நான் ஏன் ஒரு இஸ்லாமியனல்ல என்னும் புத்தகம் மிக விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. முதலில் படிப்பவருக்கு பல அதிர்ச்சியூட்டும் செய்திகள் -இஸ்லாம் மதத்தைப் பற்றி இந்த நூலில் உள்ளன. " மதங்களில் இருக்க வேண்டிய சுதந்திரத்தை வராக் வலியுறுத்துகிறார். அவர் இஸ்லாத்தில் அம்மதத்தை விட்டு விலகும் சுதந்திரம் இல்லவே இல்லை. முஸ்லிமாகப் பிறந்தால் அதுவே முடிவு.அதை எதற்காகவும் உன்னால் மறுக்க, விட்டுச்செல்ல முடியாது. முயன்றால் நீ மரண தண்டனைக்குரியவனாக ஆகின்றாய் " என்று சொல்கின்றார். உண்மைதான். இன்றைக்கும் நாத்திகம் பேசினால் மரணதண்டனை கொடுக்கும் பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. ஆனால் உண்மை, உண்மைதானே.....சல்மான் ரஷ்டி பிரச்சனையின் மூலமாகவே எழுத வேண்டும் என்ற உணர்வு தோன்றியதாக இப்னு வராக் எழுதுகின்றார்.குரான் பற்றி, முகமது நபி அவர்களைப் பற்றி எழுப்பப்படும் பல கேள்விகளை இப்னு வராக் எழுதியிருக்கின்றார். அதனைத் தமிழில் தருமி அவர்கள் மொழிபெயர்த்து , இஸ்லாமிய மதம் எப்படி எப்படியெல்லாம் மனித உரிமைகளுக்கும் , பெண் உரிமைகளுக்கும் எதிரானது என்னும் பட்டியலைத் தருகின்றார். ராகுல்ஜியின் 'இஸ்லாமியத் தத்துவ இயல் ' என்னும் புத்தகம் மிகச்சுருக்கமாக 5 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தை விமர்சனம் செய்யும் காஞ்சா அய்லய்யா என்னும் தலித் தத்துவ அறிஞர் எழுதிய " நான் ஏன் இந்து அல்ல " என்னும் புத்தகமும், அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியார் எழுதிய 'இந்து மதம் எங்கே போகிறது " என்னும் புத்தகமும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.ஏற்கனவே என்னைப் போன்றவர்கள் படித்த புத்தகங்கள் இவை.மீண்டும் அதன் கருத்துக்களை சுருக்கமாகக் காண்பதற்கான வாய்ப்பாக இந்த 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகம் அமைந்தது.
கடைசி இரண்டு நூல்களும் புனைவுகள். பிலிப் புல்மேன் எழுதிய " ஜீசஸ் என்ற நல்லவரும் கிறிஸ்து என்னும் போக்கிரியும் " என்னும் புத்தகம் வாங்கிய கதையை தருமி விவரிக்கின்றார். " பெயரைக் கேள்விப்பட்டவுடன் வாங்கிய நூல்.வாங்கிய பிறகே இது ஒரு கதை என்பது தெரிந்தது. கிறிஸ்துவைப் பற்றி,கிறித்துவத்தைப் பற்றிய நூலாக இருக்குமென நினைத்தேன். வாங்கிய பின் பின்னட்டையிலேயே 'இது ஒரு கதை ' என்று தெளிவாகப் போட்டிருந்தது " பக்கம் 309 எனக் குறிப்பிடுகின்றார். இந்த நூலின் கதையைச்சொல்லி விளக்கும் நூல் ஆசிரியர் தருமி தனது கருத்துக்களை மிகவும் மனம் திறந்து பேசும் பகுதியாக இந்தப் பகுதி இருக்கின்றது எனலாம்.
12-வது நூல் டான் பிரவுன் என்பவர் எழுதிய டா வின்சி கோட் என்னும் நூல். " 44 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு,8 கோடி நூல்கள் உலகம் முழுவதும் விற்கப்பட்டு,அக்கதையை திரைப்படமாகவும் வெற்றிகரமாக எடுக்கப்பட்டு மிகவும் புகழ் சேர்த்த புனைவு நூல் " என தருமி இந்த நூலை அறிமுகம் செய்கின்றார். " மிக முக்கியமானதாகவும்,கிறித்துவர்களுக்கு அதிர்ச்சி தரும் சேதியாகவும் கதையில் வருவது ;ஜீசஸ் திருமணமானவர் என்பது.திருமணம் என்பது தன்னிலே தவறாக இல்லாவிட்டாலும் ஒவ்வொரு கிறித்தவருக்கும் இது அதிர்ச்சி தரும் சேதி என்பதே உண்மையாக இருக்கும் " பக்கம் (325) எனக் குறிப்பிடுகின்றார்.
கட்டுடைத்தல் என்பது இன்றைய தமிழ் இலக்கியத்தில் மிக முக்கியமான கோட்பாடு. அந்தக் கட்டுடைத்தல் என்பது மனித நேயத்தினையும் அன்பையும் அடிப்படையாகக் கொள்ளும்போது பழமைகள் காற்றுப்போன டயர்கள் போல வலுவிழந்து போகின்றன. ஆனால் பழமைவாதிகள் தங்களிடம் இருக்கும் பிரச்சார பலத்தால் மட்டுமல்லாது, வன்முறையாலும் மதங்களைக் காப்பாற்றிட முனைகின்றனர். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் " மதவாதிகளின் கோட்பாடுகள், பிரச்ச்சாரம் எல்லாம் பெரிய பலூன் போன்றவை .அவற்றை பகுத்தறிவு என்னும் ஊசி கொண்டு குத்தும்போது எவ்வளவு பெரிய பலூனும் வற்றிப்போய்விடும் ' என்பார். உண்மைதான் இந்த நூலின் கட்டுரை ஒவ்வொன்றும் மிக வலிமையான பகுத்தறிவு ஊசிகள்தான்.அந்தந்த மதத்தை சார்ந்தவர்கள் பகுத்தறிவு ஊசிகளைப் பயன்படுத்தும்போது மதங்கள் என்னும் பலூன்கள் காணாமல் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இந்த நூலின் ஆசிரியர் தருமி அவர்கள் ஒரு காலத்தில் மிகுந்த நம்பிக்கையாளராக கிறித்துவ மதத்தில் இருந்தவர். இன்றைக்கும் உற்றார்,உறவினர்கள் எல்லோரும் கிறித்துவமதத்தில் பற்றுடைவர்களாக, பரப்புவர்களாக இருப்பவர்கள். ஆனால் தன்னுடைய மனதில் எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காதபோது, கடவுள் என்னும் கருத்தினை சந்தேகிக்க ஆரம்பித்து, கேள்விகள் கேட்டு கேட்டு கடவுள் இல்லை என்னும் நாத்திகராக மாறியவர். தான் மாறியது மட்டுமல்லாமல் , தான் மாறியதற்கான காரணங்களை 'மதங்கள்-சில விவாதங்கள் ' என்னும் நூல் மூலம் மற்றவர்கள் மாறுவதற்கும் வழி காட்டியவர். இப்போது ஓர் அருமையான நூலினை 'கடவுள் என்னும் மாயை ' என்னும் புத்தகத்தை அளித்துள்ளார். எனது சார்பாகவும், மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும். எத்தகைய அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தொடரும் இவரின் எழுத்துப்பணி தொடர, நாம் அளிக்கும் ஆதரவு என்பது இவரது எழுத்துக்களைப் படிப்பதுவும், அதனை மற்றவர்களையும் படிக்க வைப்பதுமே ஆகும். செய்வோம்..
*