Wednesday, February 29, 2012

554. செளதியும் அடிப்படைவாதிகளும் ...

Unveiled: As elsewhere in the Arab world,
the expansion in communication tools has deprived 

the Saudi regime of
the secrecy and deception its legitimacy relied.

*
சில ஆண்டுகளுக்கு முன் செளதியில் வேலை பார்த்து பின் கனடாவிற்குக் குடியேறிய பதிவர் செளதியைப் பற்றிக் குறையாக பதிவுகள் எழுதிய போது வழக்கம் போலவே இஸ்லாமியப் பதிவர்கள் அவர் எழுதியதை  வெறுத்தார்கள்; எழுதியதை மறுத்தார்கள். அந்த நாட்டில் இன்னும் அடிமைத்தனம் மாறவில்லை; இன்னும் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை தங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்கிறார்கள் என்று நான் சமீபத்தில் எழுதிய போது, நம்மவர்கள் ஏமாற்றுவதால் தானே அதனை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள் என்று இந்திய பாஸ்போர்ட்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளும் செளதிகளுக்கு நம்பிக்கையான பதிவர் சுவனப்பிரியன் சொன்னார். அமெரிக்கா போன்ற மற்ற நாட்டுக்காரர்களுக்கு இல்லாத இந்தச் சூழல் இந்தியர்களுக்கு மட்டும் ஏன் என்றும் அந்தப் பதிவர் சிந்திக்க மறுத்தார். அதையும் விட அவர் இஸ்லாமிய நாடுகளில் செளதியே இஸ்லாமியக் கொள்கைகளை முழுமையாகக் கையாளும் நல்ல அரசு; நாட்டை நன்கு ஆள்கிறது என்றார். நானும் இதையெல்லாம் கேட்டு அங்கு 'பாலும் தேனும் ஓடும்' என்றுதான் நினைத்தேன். ஆனால், அங்கு வேலை பார்த்த சில நண்பர்களிடம் கேட்ட போது வேறு கருத்துக்களே கிடைத்தன. மற்றவர்களுக்கு நரகம் என்பது இவர்களுக்கு சுவனமாகப் படுகிறது! (இந்த இடத்தில் வழக்கமாகப் பதிவர்கள் கேட்கும் கேள்வியை நானே கேட்டு விடுகிறேன்: நரகம் என்று நினைப்பவர்கள் ஏன் எங்கள் செளதியில் வந்து வேலை பார்க்க வேண்டும்?!!) என் மதத்துக்காரர்கள் என்பதாலோ, எனக்கு வேலை கொடுத்ததாலோ இப்படி சிலருக்கு அந்த நாட்டின் மீது பயபக்தியும், விசுவாசமும் வந்து விடுமோ என்னவோ?! 58 வயதில் இறக்கும் செளதி அரச குடும்பத்தவரைப் பற்றி எழுதும்போது கூட அதை ஒரு 'அகால மரணம்' என்று சொல்லுமளவிற்கு உள்ள பாசத்தினால் மட்டும் சிலருக்கு செளதியில் பாலும் தேனும் ஓடுகிறது என்று தோன்றுமோ?அதோடு அவரைப் போன்ற அடிப்படைவாதிகள் எப்போதும் தங்கள் மார்க்கம் பற்றி சில வழக்கமான cliche சொல்வார்களே அது போல்தான் இதுவும் என்பது இன்று இந்துவில் வந்த ஒரு கட்டுரையை வாசித்த போதுதான் புரிந்தது.

கட்டுரையின் தலைப்பு: Awaiting its spring. தலைப்பு புரிந்திருக்குமென நினைக்கிறேன். இப்போது இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் போராட்டங்களின் ஆரம்பமான எகிப்திய போராட்டத்திற்கு வைத்த பெயர்தானே spring! இதைப் போன்ற இன்னொரு spring செளதியில் நடக்கும் என்று ஒரு இஸ்லாமியர், Movement for Islamic Reform in Arabia என்ற அமைப்பின் தலைவர் Dr. Saad al-Faqih எழுதியுள்ளார். யார் பொய் சொல்லுகிறார்கள்; நம் பதிவர்களா, இல்லை இவரா?

அவர் சொல்லும் சில கருத்துகள்:

* "கடைசி மதக்குருவின் குடலை எடுத்து, கடைசி அரசனின் குரல் வளையைக் கட்டி ..  முடித்து விடுங்கள்". - Denis Diderot என்ற தத்துவ ஞானியின் கூற்று. இப்போது செளதி அரேபியா என்றழைக்கப்படும் அரேபியாவில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இப்போது அங்கு அடிக்கடி கேட்கும் குரல் இது.

* அரேபிய போராட்டங்களுக்கான வித்து இங்கேயும் உண்டு.

* தனிப்பட்ட குற்றச் சாட்டுகள் இல்லாமலேயே லட்சக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில்.

* ஊழல் மிகப் பெருமளவில் நடக்கிறது. சமீபத்திய பட்ஜெட்டில் 100 பில்லியன் டாலருக்கு கணக்கேதும் இல்லை.

* வேலையில்லாத் திண்டாட்டம் மிக அதிகம்.

* சராசரி மாத வருமானம் - எண்ணெய் பணம் குவிந்தாலும் - வெறும் 820 பவுண்டு.

* 22 விழுக்காட்டு மக்கள் ஏழ்மையில் இருக்கிறார்கள். ( ஆனால் நம் பதிவர்கள் சிலர் நம் நாட்டு மக்கள் மட்டுமே ஊழல்காரர்கள்; மக்கள் ஏழ்மையில் உழலுகிறார்கள்; எங்கே சிறுநீர் பெய்வது என்றுகூடத் தெரியாத மாக்கள் என்கிறார்கள்!)

* தகவல் தொடர்பு அதிகரித்துள்ளதால் அரசின் மீதான கசப்பு நாடெங்கும் விரைவாகப் பரவுகிறது.

* @mujtahidd என்ற டிவிட்டருக்கு 2,20,000 followers. இந்த டிவிட்டர் மூலம்  அரசரைப் பற்றியும், மற்ற அரசக் குடும்பத்தினைரைப் பற்றியுமான சரியான பல தகவல்கள் பரப்பப்படுகின்றன. கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இவை இப்போது அந்த நாட்டில் எல்லோருக்கும் தெரிந்த ஒரு டிவிட்டர்.

* இந்த அழிவுகளிலிருந்து மீள வேண்டும் என்ற ஆவல் மதக் காவலர்களின் மத்தியில் தான் அதிகமாகத் தென்படுகிறது. (நம் பதிவர்களைவிடவும் அவர்கள் பெரிய அடிப்படைவாதிகளா ... என்ன?)

* ஷியாவின் போராட்டங்கள் அதிகமாக நடக்கின்றன. ஆனால் அரசு இவைகள் ஷியாவின் போராட்டங்கள் என்று பெரும்பான்மையான சன்னிகளிடம் சொல்லி சமாளிக்கிறார்கள்.

* இரு பாலருமே அடிப்படை உரிமைகள் ஏதுமின்று இருக்கிறார்கள். இதைப் பற்றிப் பேசினாலே அது மேற்கத்தியக் கலாச்சாரம் என்று கூறப்படுகிறது.

* அரசு கட்டாயம் மாறும். அதற்கான போராட்டங்கள் கட்டாயம் வரும் என்றாலும், ஊடகத்தில் பரப்பப்படும் அச்சுறுத்தல்கள் இதனைச் சிறிது தள்ளி  வைத்துள்ளன.

* எதிர்ப்பாளர்களுக்குள் நிலவும் நம்பிக்கையின்மையினால் ஒத்த முனைப்பு ஏற்படவில்லை.

* ஆனால் நிச்சயம் எதிர்ப்பு வளரும். இளவரசர் Nayef மீது மரியாதை மிகக் குறைந்து போய்விட்டது. ஆனாலும், (நமது பதிவர்கள் அரச குடும்பத்தினர் மீது புகழை வாரி வழங்குவதுண்டே! More loyal than the king!!??)

* இளவரசர் மீது வழக்குகள் தொடுத்து அவரைக் கூண்டில் ஏற்ற வேண்டுமென்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* 90 வயதாகும் அரசரின் மரணத்திற்குப் பின் இளவரசர் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமடையும்.

* மத குருமார்கள் அரசக் குடும்பத்தோடு இணைந்து செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

* நிச்சயம் போராட்டம் வெடித்தே தீரும் - சரியான தருணத்திற்காகவே அது காத்திருக்கிறது.



பி.கு.:
தயவு செய்து இந்தப் பதிவை வாசிப்பவர்களில் 30 -35 பேர் இப்பதிவிற்கு ஓட்டு போட்டு, இப்பதிவை தமிழ்மண முகப்புப் பக்கத்தில் சிறந்த பதிவாக "மகுடம்" சூட்டி விடாதீர்கள். அதற்கான தரமே வேறு. Please ...!













.

Tuesday, February 14, 2012

553. நானும் photography-யும் .... 7 - ஒச்சப்பனும் நானும்




*
ஒச்சப்பனின் MAGIC

*

நான் கெடுத்த படம்
ஒச்சப்பன் சீர்திருத்தி கொடுத்த படம்


ஒச்சப்பனின் MAGIC-ல் வளர்ந்த எனது இரு படங்கள் ....



*

552. நானும் photogrphy-யும் ... 6 & "ஒச்சப்பனும் நானும்"





*
"ஒச்சப்பனும் நானும்"



இரு ஆண்டுகளுக்கு முன்பே ஒச்சப்பன் என்ற பெயரை இணையத்தில் பார்த்தேன். நிழல்படக்காரர். அவரது படங்கள், மதுரையை மிகவும் ரசித்து எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பாக, ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லிக்கொண்டு இருந்தன. வண்ணக் கலவைகளும், படம் சொல்லும் 'கதைகளும்', வாழ்வியல் படங்களும், நம் நாடும், நம் ஊரும், நம் மக்களும் வித விதமாக அவர் படங்களில் தோன்றினார்கள். candid  போட்டோக்கள் நிறைய. pose கொடுக்கும் படங்களில் கூட மக்கள் இயற்கையாக candid-ஆகத்   தோன்றினார்கள். மக்களின் வாழ்வியலோடு படம் எடுப்பது வித்தியாசமாக இருந்தது. 

அவர் படங்களை C & P செய்ய முடியாது. ஆகவே அவரது வலைப்பூவைப் பார்த்து வாருங்கள் ... http://www.oochappan.be/ 

இல்லாவிட்டால் அவரின் சில படங்களை இங்கு பாருங்கள்

http://www.pbase.com/oochappan/image/139709681 

ஒரு நாடகமே அல்லவா இங்கே நடக்கிறது. அதில் நாமும் நடிகர்களாக இருப்பதுபோல் தோன்றுகிறது!



http://www.pbase.com/oochappan/image/139709678 

சிகப்பு-மஞ்சள் குவியலுக்குள் ...

 நடுவில் அந்த எவர்சில்வர் பாத்திரம் கண்ணைச் சிமிட்டுகிறதே....

http://www.pbase.com/oochappan/image/131985122   
நவ ரசங்கள் ...

http://www.pbase.com/oochappan/image/140769267 

இப்படத்தை எடுத்த நிமிடம்:  ஒச்சப்பனோடு நானும் ரவியும் சேர்ந்து ஒரு சின்ன சந்தில் சென்று கொண்டிருந்தோம். ஒரு பள்ளியின் பின்பக்க தகரக் கதவு  ஒன்றின் வழியே ஒரு சின்னப் பெண் வெளியே இருந்த கடைக்காரரிடம் ஏதோ தின்பண்டம் வாங்கிக் கொண்டிருந்தாள். நானும் ரவியும் உடனே எங்கள் manual modeல் இருந்த எங்கள் பெட்டிகளைத் தூக்கி, என்ன diaphragm .. shutter .. என்று யோசித்து வைப்பதற்குள் பாப்பா காணாமல் போய்விட்டது. ஆனால், ஒச்சப்பன் அந்தப் படத்தை ஏற்கெனவே எடுத்து விட்டிருந்தார்.



இதுபோல் இடங்களில் பொட்டியை auto mode-ல் அல்லது  program mode-ல் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் எந்த வினாடியும் வீணாக்காது ஒரு படத்தை உடனே எடுக்க முடியும் என்றார்
.

http://www.pbase.com/oochappan/image/133248700
எங்கிருந்தோ வரும் 'தேவனுடைய ஒளிக்கதிர்கள்' மாதிரி இல்லை ...?!



சரி ... யாரோ நம்மூர்க்காரர் இப்போது வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து தன் நகரத்தின் அழகுகளைப் படம் பிடிக்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். இந்த ஆண்டு ஆரம்பத்தில் இன்னொரு நிழல்பட நண்பன் இவரைப் பற்றிய முன்னுரை கொடுத்து, இப்போது மதுரையில், அதுவும் எங்கள் கல்லூரிக்குப் பக்கத்திலேயே தங்கி இருக்கிறார் என்றான். இவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்; ஒச்சப்பன் என்பது அவரது புனைப்பெயர்; மதுரைக்குத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வருகிறார் என்பது போன்ற செய்திகள் கிடைத்தன.

யாதும் ஊரே ....
யாவரும் கேளிர்

மயிலில் தொடர்பு கொண்டேன். வரச் சொல்லியிருந்தார்.   முதல் முறை மதுரை வந்த போது கோடை செல்லும் பேருந்தில் அருகிலிருந்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவர் மூன்று சக்கர சைக்கிள் ஓட்டி பிழைக்கும் சாதாரண மனிதர். அவரின் பெயர் ஒச்சப்பன். அவரோடு நெருக்கமாகி, அவரது பெயரையே தனக்குப் புனைப்பெயராக வைத்துக் கொண்டுள்ளார். இன்றும் வரும் ஒவ்வொரு ஆண்டும் அவரைச் சந்தித்து நட்பை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.


அடுத்த நாள் மதுரையில், தங்கியிருக்குமிடத்திற்கருகில் படம் எடுக்கலாம் என்றார். அடுத்த நாள் நானும் பொட்டியோடு சென்றேன். நண்பன் ரவியும் என்னோடு சேர்ந்து கொண்டான். மூவரும் ஆளுக்கொரு பொட்டியோடு கரிமேட்டு சந்தை, பக்கத்திலுள்ள கடைகள், சந்து பொந்துகள் என்று சென்று வந்தோம். (அந்தப் படங்கள் பின்னால் அடுத்த பதிவுகளில் வரும்.)


நாம் பொட்டியோடு போனால் விரட்டியடிக்கும் நம்மூர் மக்கள் இவரோடு போனால் இன்முகத்தோடு ஒத்துழைத்தார்கள். படமெடுக்கத் தடையேதுமில்லை.

HOME WORK செஞ்சிட்டியா ...?

அடுத்த நாள் பக்கத்து கிராமங்கள் சிலவற்றிற்குச் செல்ல ஏற்பாடானது. அன்று காலையிலேயே புறப்பட்டு சில கிராமங்களுக்குச் சென்றேன். எனக்கு அவைகள் புது இடமாக இருந்தன. ஆனால் ஒச்சப்பனுக்கு எல்லாம் மிகப் பழகிய இடங்கள். இடங்கள் மட்டுமல்ல .. அங்குள்ள மக்களுக்கு அவர் மிகவும் தெரிந்தவராக, நண்பராக இருந்தார்.


கீழக்குயில் குடி என்ற ஊரில் ஏறத்தாழ முழு கிராமமுமே அவருக்கு மிகவும் பழகிப் போயிருந்தது. ஒவ்வொரு சந்தும் அவருக்குப் பழகிப் போயிருந்தன. மக்களிடம் அவரது மழலைத் தமிழுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.


படம் எடுக்கும்போது சில பாடங்களையும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். எனக்கு எப்போதும் profiles எடுப்பது பிடிக்கும். ஆனால் வெறும் முகம் மட்டும் இருந்தால் அது 'கதை ஏதும் சொல்லாது'; அந்தப் படங்களோடு பின்னணி போன்று ஏதாவது இருக்க வேண்டுமென்றார். முந்திய நாள் படம எடுக்கும்போதுகூட அதே போல் சில clues  கொடுத்தார். தலைக்கு மேல் பொட்டியைத் தூக்கி வைத்து படங்களை எடுப்பது journalists' style என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்படியில்லை என்றார். நானும் ஒரு சில படங்களை அது போல் எடுத்தேன். எடுத்தவைகளில் ஒரு படம நன்கு வந்திருப்பதாகச் சொன்னார்.


அவர் சொன்னவை போல் எடுத்த படங்களைப் பின்னால் அடுத்த பதிவில் சேர்க்க எண்ணியுள்ளேன்.

CONTEMPORARIES



வட கிடச்சிருச்சே ..!

*
படங்களை எடுத்த பின் இன்னொரு நாள் post production session. அப்போது தான் ஒச்சப்பனின் magic புரிந்தது. ஒவ்வொரு படத்திற்கும் வெகுநேரம் எடுத்து அவைகளைச் சீர்படுத்துகிறார். அவர் செய்யும் முறையைக் கற்றுக் கொள்ள என் மூளை மிகவும் மறுத்து அட்டகாசம் செய்தது. ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து கொண்டேன். இனி பயிற்சியில் அவைகளை வளர்க்க வேண்டுமாம் ..
(கடவுளே...! நமக்கு எந்தக் கலையும் களவு படாது என்று அந்தக் கடவுளே என் தலையில் எழுதிட்டார் போலும்!!) ஒவ்வொரு சின்ன மாற்றங்களையும் மிக உன்னிப்பாகப் பார்த்து சீர் செய்கிறார். ஏற்படும் அந்தச் சின்ன மாற்றங்களை மிக உன்னிப்பாகப் பார்த்தால் தான் எனக்கு வித்தியாசமே புரிந்தது. .... பழகணும் :(


டீக்கடை with flash ...
ஒரு டீக்கடை. எங்களுக்காக டீ போட்டார். ஒரு படம் எடுத்திரலாமேன்னு ரெண்டு மூணு முயற்சித்தேன். கடையின் உட்பகுதி மிகவும் இருட்டாகப் போச்சு. சரின்னு ஒரு flash போட்டு ஒரு படம் எடுத்தேன். வெளிச்சம் வந்ததும் ஒச்சப்பன் என்னைப் பார்த்தார். அவருக்கு அது பிடிக்கவில்லை. வீட்டிற்கு வந்து படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். flash பிடிக்காதோ என்றேன். ஆமாம் என்றார்.
ஆனால் படங்களை வரிசையாகப் பார்த்தவர் இந்தப் படத்தைப் பார்த்து, உள்ளே கையில் இலையோடுஉட்கார்ந்திருக்கும் ஆளைப் பார்த்ததும் அந்த சின்ன மாற்றத்திற்காக இந்தப் படத்தையும் போனால் போகுதென்று 'நல்ல படங்கள்' என்று எடுத்துப் போட்ட என் folder-ல் சேர்த்துக் கொண்டார்.

*
அம்மாடி ...HEAVIEST smoker!!!

Friday, February 10, 2012

551. "வடக்கு வாசல்" இதழில் என் கட்டுரை: 1833 B.C.

*
தில்லியிலிருந்து வரும் "வடக்கு வாசல்" இதழில் வெளிவந்த என் கட்டுரை - 1833 B.C. அதனை இங்கு மீள்பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்..



*
கட்டுரையைப் பதிவிட்ட வடக்கு வாசலுக்கு மிக்க நன்றி.
*

Friday, February 03, 2012

550. நானும் photographyயும் ... 5




*
பதிவர்கள் பலர் எடுத்த நிழற்படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நெடுநாளாகப்  பார்க்காமல் விட்டுப்போன பொக்கிஷம் Naufal என்பவரின் படப் பதிவுகள். புகைப்படங்களை  வகை வகையாக எடுப்பதில் வல்லுனர்.  படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. நிறைய experimental shots எடுப்பதில் அவருக்கிருக்கும் ஆவல் அவர் படங்களின் கோர்வைகளைப் பார்க்கும்போதே தெரிகிறது - panning, intentional shake, intended out of focus, long exposure shots... பல படங்கள் இது எப்படி எடுக்கப்பட்டது என்ற கேள்விக் குறியுடன் எனக்குத் தோன்றின. இவரது தொகுப்பிலிருந்து எந்தெந்த படங்களை எடுத்துப் போடலாமென்பதே ஒரு கடினமான தேர்வு எழுதுவதுபோல் சிரமமாக இருந்தது.
NAUFAL
மூன்றாவது கண் எங்கேயோ இருக்குது!!

JUST A DROP, THAT IS ALL!
ஒரு துளி நீரும் ஜாலம் செய்கிறது;

LIGHT & SHADE 
விரிந்து பரந்த ஒரு பாலைவனமும் அழகுடன் பொலிகிறது.
A HIGH KEY PHOTO
high key photo - சரி .. ஆனால் அந்தக் கண்கள் எப்படி இவ்வளவு அழகாக பதியப்பட்டன? கேள்விதான் .. பதில் தெரியவில்லை.

DRAMATIC  (தனுஷ்கோடி)
தனுஷ்கோடியை நேரில் பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் உடைந்த கட்டிடங்களும், வானமும், கடலும், மணலும் பல கதைகள் சொல்லும். இயற்கையின் கொடூரம் இன்னும் அங்கே தங்கியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கொடூரத்தின் சில அடையாளங்களையும் அழகான வானத்தையும் நன்கு சிறைப்படுத்தியிருந்தார்.
A GRIPPING SHOT
இந்தப் படத்தைத் தயவு செய்து ஒவ்வொருவரும் அதன் ஒரிஜினலைப் பார்க்க வேண்டும். மேலேயுள்ள கிழிந்து தொங்கும் ஒவ்வொரு பழைய கீற்றும் மிக அழகாக இருக்கும். அந்தக் கீற்றுகளும், அமர்ந்திருக்கும் மனிதனும் படத்தை ஒரு ஆழமான படமாக மாற்றியிருக்கும். பார்க்கும் நம் மனதே இறுகும். ஆதரவற்ற ஒரு மனிதனின் பாவகரமான சூழல் நம்மை நிச்சயமாகத் தொடும்.
LOVELY CAPTURE
இது போன்ற படம் எடுக்க எத்தனை ஆண்டுகளாக எவ்வளவு ஆசை. gray tones மிக அழகாக படம் முழுவது விரவிக் கிடைப்பது எவ்வாறோ? பாப்பாவை இப்படி நிற்க வைப்பதற்காகவே 'படக்காரரைத்' தட்டிக் கொடுக்க வேண்டும்! குழந்தையும் பொறுமையாக நிற்க வேண்டும். நான் சொன்னது போல் படத்தின் எந்த இடமும் மறையாமல் gray tonesவரவேண்டும்.

அந்தக் காலத்தில் நிழற்படங்களைப் பற்றியெல்லாம்  நான் வகுப்பெடுத்திருக்கிறேனாக்கும்!!! ஆச்சரியப்படாதீர்கள். நானெல்லாம் 'அந்தக் காலத்து எக்ஸ்பெர்ட்!!!  அப்போது இதுபோன்று தனிப்பட்டவர்களை - profile or something like that -  எடுக்கும்போது, படத்தைப் பார்ப்பவர்கள் 'இந்தப் படத்தில் இருப்பது யார்? என்று கேட்டால் அந்தப் படம் நல்ல படமில்லை; ஆனால் படத்தைப் பார்த்ததும் இந்தப் படத்தை எடுத்தவர் யார்? என்று கேட்டால் மட்டுமே அந்தப் படம் சிறந்த படம்' என்று நான் define செய்தது உண்டு.

ஆமாம் ... இந்தக் குழந்தையின் படத்தை எடுத்தது யார்??!!  :-)


EVERYDAY SCENE BUT AN ARTIST'S LOOK!
நாம் பார்க்காத கூட்டங்களா .. இருப்பினும் அந்தக் கூட்டத்தை இப்படி ஒரு கற்பனையோடு பார்த்தது ஒரு கலைஞன். அது தான் இப்படி ஒரு அசையும் கூட்டத்தை எடுத்திருக்கிறார்.



20 வினாடிகள் அசையாமல் நின்று தன்னையே படமெடுத்துள்ளார். நீர் திரவ நிலையிலிருந்து கடின நிலைக்குப் போனது போல் 'கட்டித் தங்கமான' படம் இது.

எம்புட்டு படிச்சாலும் சிலதுகளுக்கு மண்டையில எதுவும் ஏற மாட்டேங்குது. இந்த மாதிரி ஆளுக படத்தைப் பார்த்தா ஒண்ணு பெட்டியைத் தூக்கிப் போடணும்னு சில சமயம் தோணுது; இன்னொரு நாள் நமக்காச்சு .. நம் பொட்டிக்காச்சுன்னு தோணுது.
எப்படியோ வண்டி ஓடுது ....

*
Another great credit to Naufal: பொதுவாக 'பொட்டி தூக்குபவர்கள்' தங்கள் தொழில் 'ரகசியங்களை' அக்கறையாகப் பாதுகாப்பார்கள். ஆனால் இவர் தன் பட்ங்களோடு விளக்கங்களையும் சேர்த்தே தருகிறார். All exposure details are there for most of the pix.  A special thanks to him for this.


*







549. I BOW TO YOU, SIR




*
 JUSTICE GANGULY

Justice Asok Kumar Ganguly at a farewell function organised for him at the Supreme Court in New Delhi on Thursday. Photo: PTI
 I BOW TO YOU,  SIR









*





*


Thursday, February 02, 2012

548. "பண்புடன்" இதழில் என் கட்டுரை -- மாணவர்கள்



*
"பண்புடன்" இதழில் வெளிவந்த என் கட்டுரை ...




*
37 ஆண்டுகள் கல்லூரி ஆசிரியராக இருந்து, இன்று அந்த நீண்ட நாட்களைத் திரும்பிப் பார்க்கிறேன். ஆசிரியராகவே ஆக வேண்டும் என்று நினைத்து அதனாலேயே ஆசிரியனாகவில்லை. தந்தை ஒரு ஆசிரியர். நான் படிக்கும்போது எவ்வித முனைப்புமின்றி, குறிக்கோளின்றி படித்தேன். படித்ததும், அது என்னவோ தெரியவில்லை, எந்த வேறு வேலைக்கும் முயற்சிக்காமல் கல்லூரி ஆசிரியர் வேலைக்கு மட்டுமே முயற்சித்தேன். படித்த கல்லூரியிலேயே என் பேராசிரியர் வேலை பார்க்க அழைத்தார். அது எனக்கு அப்போது பிடிக்கவில்லை. இருந்தும் அவர் சொல்கிறாரே என்று விண்ணப்பமிட்டேன். வேலை கிடைக்கவில்லை. என்னைவிட என் பேராசிரியருக்கு வருத்தம். இன்னொரு பேராசிரியர் என்னை சென்னைக்கு ஆராய்ச்சி மாணவனாகக் கூப்பிட்டார். எனக்கு இரண்டாவதுதான் பிடித்தது. ஆனால் வேலைக்குப் போகவேண்டுமென்ற கட்டாயம் இருந்ததால் ஆராய்ச்சி இரு ஆண்டுகளுக்குத் தள்ளி வைப்பதாக எண்ணி, விரிவுரையாளர் வேலைக்கு முயற்சித்தேன். எப்படியாவது மதுரையிலிருந்து குறைந்தது 100 கி.மீ. தாண்டி வேலை வேண்டுமென்று நினைத்திருந்தேன். அதே போல் ஐந்தாறு மாதங்கள் கழித்து தஞ்சையில் வேலை கிடைத்தது. அதுவும் அப்போதெல்லாம் முதுகலை படித்திருந்தால் நேரே விரிவுரையாளராகலாம்; அல்லது இன்னொரு சித்தாள் வேலை - demonstrator / tutor - வேலையில் சேர வேண்டும். என் ராசி .. விரிவுரையாளர் வேலை காலி இல்லாததால் அக்கல்லூரியில் 'சித்தாள்' வேலைக்கே சேர்ந்தேன். நல்ல கல்லூரி; மிக நல்ல தலைமைப் பேராசிரியர்; துறையின் செல்லப்பிள்ளை ... இப்படியாக அங்கே வேலை பார்த்தேன்.ஏனோ தெரியவில்லை .. வேறு கல்லூரி .. வேறு வேலை என்ற நினைவே வராத தற்குறியாக இருந்து விட்டேன். மூன்று ஆண்டுகள் வரை ஆராய்ச்சிப் படிப்பில் நாட்டம் வைத்து வேலைபார்த்தும் அது முடியாது போயிற்று. அப்போதுதான் எனக்குப் புத்தி லேசாக எட்டிப் பார்த்தது. ஆனால் வயதோ இருபத்தைந்து தாண்டிக்கொண்டிருந்த நேரம். சில முயற்சிகள் எடுத்தேன். எதுவும் பலனில்லாது போயிற்று, ஆசிரியர் வேலை என்பதே நிச்சயமாயிற்று.



ஓரிரு ஆண்டுகளிலேயே ஆசிரியர் வேலை மிகவும் பிடித்துப் போயிற்று. காரணம் வேறு எங்குமில்லை; என் மாணவர்கள்தான். 'சின்னூண்டு சைஸி'லிருந்த எனக்கு பெரிய பெரிய பையன்கள் மாணவர்களானார்கள். 1966-ல் ஆரம்பித்த அந்த ஆசிரிய-மாணவ உறவு முறை 1990 வரை மிகவும் அழகான உறவாக இருந்து வந்தது. வாத்தியாருக்கு இல்லாத பட்டப் பெயர்களா? எனக்கும் நிறைய இருந்தன. அதில் எனக்கு மிகப் பிடித்தது - ரெளடி! அதற்கு அடுத்துப் பிடித்தது - அடைக்கலசாமி: மாணவர்கள் தங்கள் ரகசியங்களை, கவலைகளைப் பகிர்ந்து கொள்வதால் வந்த பெயர். அடைக்கலசாமியாக இருந்ததால் தான் atleast நான்கு மாணவ, மாணவியர்களை தற்கொலையிலிருந்து தடுக்க முடிந்தது. இதைப் பற்றி இன்னும் அதிகம் பேசினால் ஒரு வேளை என் 'சுய பீற்றல்கள்' அதிகமாகத் தெரியலாம்! சுருக்கமாகச் சொன்னால், எனக்கு என் மாணவர்களைப் பிடித்தது; அம்மாணவர்களில் பலருக்கும் நான் மிகவும் பிடித்தவனாக இருந்ததாக உணர்ந்தேன். இந்த அளவு என் மாணவர்கள் என்னிடம் கொண்டிருந்த அன்புக்கும், மரியாதைக்கும் நான் தகுதியானவன் தானா என்ற எண்ணம் எப்போதும் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த 'அலைவரிசை' மிகவும் பிடித்துப் போனது.



என் ஆசிரியர்களிடமெல்லாம் எனக்கு ஒரு வருத்தம் உண்டு. எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்களும் இதில் அடக்கம் எப்போதுமே எந்த ஒரு ஆசிரியரும் வாழ்வில் மாணவர்கள் முனைப்போடு முன்னேற வேண்டும் என்ற தாக்கத்தை, வேகத்தை அளிக்கவில்லை என்ற குறைபாடுதான் அது. கல்லூரி வாழ்க்கையில் மாணவர்கள் அடுத்து என்ன முடிவெடுக்க வேண்டும்; எப்படிப்பட்ட வாழ்க்கை அவர்களை எதிர்நோக்கியுள்ளது என்பவைகளை கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நான் குறிப்பின்றி வாழ்க்கையின் போக்கை அப்படியே ஏற்றுக் கொண்டவன். அது போலவே என் மாணவர்களும் இருந்திடக் கூடாது என்று நினைத்தேன். நான் கல்லூரி ஆசிரியனாகச் சேர்ந்து தேர்வுகள் எழுதும் வயது முடிந்த பின் (!), just for the heck of it, ஐ.ஏ.எஸ். போன்ற தேர்வுக்கு அமரும் உடன் வேலைபார்க்கும் நண்பர்களோடு மாதிரித் தேர்வுகளில் ஈடுபடுவதுண்டு. அப்போதுதான் இப்படிப்பட்ட துறைகள், வேலை வாய்ப்புகள் போன்றவை இருப்பதே எனக்கு நன்கு தெரிந்தது. எதுவுமே தெரியாது, வெறும் புத்தகங்களை மட்டும் கட்டிக்கொண்ட ஒரு 'தர்த்தியான' மாணவனாக நான் இருந்திருக்கிறேன். வாழ்க்கையின் பல வழிகள் ஏதும் எனக்குத் தெரியாது போயிற்று. என் ஆசிரியர்கள் எவரும் எனக்கு அவைகளைப் பற்றிய விழிப்புணர்வைத் தரவில்லை. இந்த ஏக்கத்தின் வெளிப்பாட்டால் நான் என் மாணவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றியவைகளை அடிக்கடி பேசும் ஆசிரியராக இருக்க முயற்சித்தேன். LUKAT - Let Us Know And Think என்று ஒரு சிறு அமைப்பை ஏற்படுத்தி, மாலை நேரங்களில் சில மாணவர்களோடு மரத்தடியில் அமர்ந்து, எதைப் பற்றியும் ஆங்கிலத்திலோ, தமிழிலோ பேசலாமென ஒரு அமைப்பை பல வருடங்கள் தொடர்ந்து நடத்தியும் வந்தேன். ஐ.ஏ.ஏஸ். தேர்வுகளை மனதில் வைத்து இதனை ஆரம்பித்தேன்; பலனும் இருந்தது.



ஒரு மணிநேர வகுப்பில் ஒரு மணி நேரமும் வகுப்பெடுக்கும் 'நல்ல' வாத்தியாராக நான் இருந்ததில்லை; வகுப்பில் பாடம் ஒரு பக்கம் என்றால் மற்ற பலவற்றையும் பேசும் கெட்ட ஆசிரியனாக இருந்திருக்கிறேன். படித்து முடித்தபின் இங்கு கல்லூரியில் படிக்கும் பாடங்கள் வாழ்க்கைக்கு எந்த அளவில் பயன் இருக்குமோ தெரியாது; ஆனால் பேசும் மற்றவைகளில் நிச்சயம் வாழ்க்கைக்குத் தேவையானவை இருக்கும் என்ற நினைப்புண்டு. After graduation, most of them need not remember anything about how a cockroach digests or a frog reproduces but choosing opportunities for future and having a humane life become essential என்பது என் ஆழமான கருத்து. சரியோ ... தவறோ .. அப்படியே நடந்தும் வந்தேன். பலன் இருந்ததாக என் பழைய மாணவர்களிடமிருந்து கிடைக்கும் செய்தி பெருமையாக இருக்கும்; என்னைத் தொடரச் செய்யும்.



ஆசிரிய-மாணவ உறவு என்னைப் பொறுத்தவரை கடைசி வரை நன்றாக இருந்தது. இருப்பினும் 1990-களுக்குப் பிறகு அந்த இறுக்கம் குறைந்ததாக நினைத்தேன். ஒரு வேளை எனக்கு வயதாகிப் போனதால் அப்படி இருந்ததோ என்றும் நினைத்தேன். ஆனால் நிச்சயமாக மாணவர்களின் மனதில் பரவலாக ஏற்பட்டிருந்த பிளவை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் மாணவனாக இருந்த காலம் தொட்டு இதுவரை மாணவர்களின் மன ஓட்டங்களில் முக்கிய சில மாற்றங்களை என்னால் அனுமானிக்க முடிந்தது.



நாங்கள் மாணவர்களாக இருந்த போது நிச்சயமாக நாங்கள் உணர்ச்சிபூர்வமானவர்களாக இருந்தோம். கல்லூரிகளில் மூன்று மாதத்திற்கொரு முறையாவது ஒரு வேலை நிறுத்தம் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. குழு மனப்பான்மைக்கு - mass psychology - அடிமையாகி இருந்தோம். Students were mostly emotional beings. வேலை நிறுத்தங்கள் கல்லூரியின் பாடத்திட்டத்தோடு இணைந்த ஒன்று போலிருந்தது. அளவுக்கு மீறி வீர உணர்வுகள் 'பொங்கிப் பிரவாகமெடுக்கும்' நேரங்களும் உண்டு. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் ஒரு அரசையே மாற்றி வைத்தது. அது பெரும்பாலும் மாணவர்களால் உண்டான மாற்றமே.



கல்லூரிகளில் தேர்தல் இருக்கக்கூடாது என்று ஒரு புதிய முடிவை அரசு எடுத்தது. மாணவப் பேரவை இறந்ததும் மாணவர்களின் தீவிர உணர்வுகள் மிகவும் குறைந்து போயின. அடுத்து இன்னொரு மாற்றம் - semester system with internal marks. இதனாலும் மாணவர்களின் உணர்வுகள் மிகவும் நீர்த்துப் போயின. மாணவர்களின் நினைவெல்லாம் மதிப்பெண் பட்டியலில் மட்டுமே என்று மாறிப் போனது. Students are totally now intelligent beings. அது எந்த அளவிற்குப் போனதென்றால் ஆசிரிய-மாணவ உறவே மதிப்பெண்களின் உறவாக மாறிப் போனது. இந்த செமஸ்டருக்கு இந்த வாத்தியார் .. முதலில் இருந்தே சலாம் போடு; அடுத்த செமஸ்டர் .. இனி இந்த வாத்தியார் நமக்கு வரமாட்டார் .. உடு ஜூட்; இனி நான் யாரோ .. அவர் யாரோ! 'எங்க சார்' என்றிருந்த உறவுகள் இல்லாமல் மறைந்து போயே போய்விட்டன. 90களில் இந்த நிலை ஆரம்பித்தது. இன்னும் அது மேலும் மேலும் வளர்ந்து, ஆசிரிய-மாணவ உறவை இன்னும் அதிகமாக பிரித்தன. போதாமைக்கு இன்னொரு காரணியும் வந்தது. self-financing courses. இதனால் கல்லூரி வாழ்க்கை மாணவர்களுக்கே துண்டாகிப் போனது. முதலில் காலை முதல் மாலை வரை கல்லூரி நடந்தது. மாலையில் கலைவிழாக்கள், நான் நடத்தியது போன்ற அறிவுசார் கூட்டங்கள் இவைகள் எல்லாமே மிகவும் குறைந்து போயின. வழக்கமான கல்லூரி நேரம் மாறி, aided courses மாணவர்கள் மதியமே வீடு திரும்ப, மாலை self financing courses மட்டும் மதியத்திலிருந்து மாலைவரை என்றானது. இரு வேறு மாணவர்களுக்குள்ளும் வேறுபாடு. ஆசிரியர்களுக்குள்ளும் இரு வேறு அமைப்புகள். ஒருவருக்கொருவர் ஒட்டுமில்லை; உறவுமில்லை என்றானது.



ஆசிரிய-மாணவ உறவு முறிந்ததும், அழகான அந்தப் பிணைப்புகள் காலத்தோடு காலமாகக் காணாமல் போயின. குரு-சிஷ்யன் எனபது போய், ஆசிரியர் - மாணவர் என்ற நிலைக்கு மாறி, நான் காசு கொடுக்கிறேன் .. நீ படிப்பு சொல்லிக் கொடு .. என்ற வியாபார நிலைக்கு வந்தாகி விட்டது. உணர்வுகள் அறுந்த பின் ஏது பாசமும் பிணைப்பும். மாணவர்கள் தனித்தனியாகி விட்டார்கள். குழு மனப்பான்மை தான் அவர்களை ஒன்று படுத்தும் ஒரே காரணி. அது அறுந்து போனபின் அவர்கள் எல்லாம் தனித்தனி தீவுகளாகி விட்டார்கள். போராட்டக் குணம் என்பதன் பொருளே புரியாமல் போய்விட்டார்கள். தங்களில் ஒருவனுக்கு அநீதி என்றாலும் குரல் கொடுத்த மாணவர்கள் இன்று தனக்கே ஒரு பிரச்சனை என்றாலும் அதைத் தாண்டிப் போகப் பழகிக் கொண்டு விட்டார்கள். எங்கும் எதிலும் மதிப்பெண்கள் .. அதைத் தவிர வேறு எதுவும் அவர்கள் மனதில் தங்குவதில்லை.



ஒரு சிறு உதாரணத்தை, நான் ஏற்கெனவே என் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட ஒன்றை இங்கே தருகிறேன். ராணி மேரி கல்லூரியை இடம் மாற்ற அரசு முடிவெடுத்தது. அக்கல்லூரி மாணவிகள் போராட ஆரம்பித்தார்கள். இப்படி ஒரு போராட்டம் நடக்கிறதென்றால் நான் மாணவனாக இருந்த அறுபதுகளில் மாநில மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த ஒரு போராட்டம் நடந்திருக்கும். ஒன்று அல்லது இரண்டு நாட்களில் போராட்டம் வென்றிருக்கும். எண்பதுகளில் இது நடந்திருந்தால் நிச்சயம் சென்னை மாணவர்கள் ஒன்றிணைந்திருப்பார்கள். ஆனால் இந்தப் போராட்டம் அந்தக் கல்லூரி மாணவிகள் மட்டுமே நடத்திய ஒரு போராட்டமாக இருந்தது. இதை என் மாணவர்களிடம் நான் சொல்லியபோது இன்னொன்றும் சொன்னேன். வெறுமனே அழகிற்காக சே குவேராவின் படத்தைப் போட்ட டி-ஷர்ட் போடுவதால் மட்டும் போராட்ட குணம் உண்டாகி விடாது என்றேன். போராட்ட குணம் இப்படி முழுவதுமாக முடங்கிப் போவதைப் பார்க்கும்போது, இந்த இளைஞர்கள் எப்படி தங்கள் வாழ்நாளில் தங்கள் வாழ்க்கையை நடத்துவார்கள் என்ற எண்ணம் எனக்குள் எழுவதுண்டு. அடிமைத் தனத்தில் ஊறிப் போனவர்களாகத்தான் நான் அவர்களைப் பார்க்கிறேன். நியாயமான உணர்வுகள் இந்த வயதிலேயே செத்துப் போய்விட்டால் .. எதிர்காலத்தில் இவர்களால் என்ன பெரிதாகச் சாதிக்க முடியும் என்ற கேள்வி என் மனதிற்குள்.



நரி வலம் போனால் என்ன .. இடம் போனால் என்ன .. என் மேல் விழுந்து கடிக்காமல் இருந்தால் சரி - இதுதான் இன்றைய மாணவனின் தத்துவம்.

*
பி.கு.
இக்கட்டுரையை இங்கு மீள்பதிவு செய்யும்போதுதான் நான் குறை சொன்ன வயதில் - 1990க்குப் பிறகு மாணவர்களாக இருந்த, இப்போது 40 வயதிற்கு உட்பட்ட - பதிவர்கள் அதிகமாகப் புழங்குமிடமாச்சே... என்ற யோசனை வந்தது. சரி .. அவர்கள் என்னதான் இக்கட்டுரை பற்றிச் சொல்கிறார்கள் என்றும் தெரிந்து கொள்ளலாமேவென தோன்றியது. இதிலும் நான் எழுதியிருப்பது கலைக்கல்லூரி மாணவர்களை மனதில் வைத்து தான். ஆனால் வழக்கமாக தொழில்முறைக் கல்லூரிகளில் ஆசிரிய - மாணவ உறவுகள் கலைக்கல்லூரி அளவிற்குக் கூடச் செழுமையாக இருக்காதென்றே நினைக்கிறேன். எப்படியிருப்பினும் 40 வயதிற்குட்பட்டவர்களின் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள ஆவல்.



*