Wednesday, November 26, 2014

804. ஒரு கட்டப் பஞ்சாயத்து







*


மொத மொதல்ல ஒரு ஒப்புதல் வாக்கு மூலத்தோடு (confession) இதை ஆரம்பிக்கிறேன்: எனக்கு சுத்தமா இசையறிவு கிடையாது. என்னென்னமோ சொல்லுவீங்களே… ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி (அனு பாடுற பல்லவியா இது?), சரணம் … இதெல்லாம் ”வீசை என்ன விலை”ன்னு கேட்கிற ஜென்மம் நான்.

பின் எந்த லட்சணத்தோடு பஞ்சாயத்து பண்ண வந்த அப்டில்லாம் கேக்கப்படாது. வந்தது வந்திட்டேன்.. சொல்ல நினச்சதை சொல்லிட்டு போய்றேன். அம்புட்டுதான் ………கொஞ்சம் பொறுங்க ... தோள்ல துண்டைப் போட்டுக்குறேன்... எங்கே அந்த சொம்பு...ம்.. இந்தா இருக்கு... ஆரம்பிப்போமா...

சார்லஸ் அப்டின்னு ஒரு புது பதிவர். பத்து பதிவு மட்டும் போட்டிருக்கார். அதில நாலு பதிவு இளைய ராஜா பற்றியது. தலைப்பே இசை ராட்சஷன் அப்டின்னு வச்சிட்டாரு. எப்படி சின்ன வயசில இருந்து பாட்டு கேட்டேன் … சர்ச்ல பாட்டு பாடினேன் … எப்படி என் இசை வளர்ந்தது. எப்படி ஒரு இசை அமைப்பாளரிடமிருந்து கடைசியில் ராஜாவின் ரசிகனானேன். எந்த பாட்டை எப்பெப்போ கேட்டேன். அது எப்படி என்னை ஈர்த்தது அப்டின்னு எழுதினார்.

இப்படி அவர் பத்த வச்சதும் சிலர் – குறிப்பாக இருவர் – அமுதவன், காரிகன் வந்து எதிர்க்கருத்து வைத்தார்கள். நானும் கூட அந்தப் பக்கம் போய் ஒன்று ரெண்டு பின்னூட்டம் போட்டேன். அங்க அவங்கவங்க பத்த வச்சதில ஒரேடியா புகையா வந்திச்சா. கண்ணும் மண்ணும் தெரியலைன்னு வெளியே வந்துட்டேன். ஆனால் அங்க ஒரேடியா இன்னும் புகை வந்து கிட்டே இருந்ததா … சரி .. நமக்கு தோன்றதைச் சொல்லலாமேன்னு ஒரு தைரியத்தில வந்திட்டேன் …

சாமிதான் என்னய காப்பாத்தணும்.

நான் பாட்டு கேட்பேன். ஆனாலும் என் வயசுக் காலத்தில வந்த தமிழ்ப்பாட்டுகள் ஒண்ணும் தேறலை. அனேகமா அப்போவெல்லாம் முழு கர்நாடக இசையே அதிகமா இருந்திருக்குமோ என்னவோ.. அதுனால சில தமிழ்ப் பாட்டுகள் பிடிக்கும். கைராசின்னு ஒரு படம். ஜெமினி நடிச்சதுன்னு நினைக்கிறேன். அதில் ஒரு காதல் பாட்டு. கதாநாயகன் பாடுற பாட்டு. அது தான் எனக்கு மொதல்ல முழுப் பாட்டும் மனப்பாடமா இருந்தது. என்ன பாட்டுன்னு இப்போ மறந்து போச்சு. பள்ளிப்பருவம் இப்படிப் போச்சு.

காலேஜ் வந்ததும் இந்திப் பாட்டுகள் தான் பிடிச்சிது. ‘பார்ரா..அம்பது, நூறு வயலின் வச்சி இழைக்கிறாண்டா இந்த சங்கர் ஜெய்கிஷன்’ அப்டினு சொல்லுக்குவோம். தெரிந்த இன்னொரு பெயர் லஷ்மண் – பியாரிலால் மட்டும் தான். அப்பா கூட ஒரு தடவை கேட்டார்; ஏண்டா! இந்தி வேண்டாம்னு போராட்டம்; ஆனால் கேக்குறது இந்திப் பாட்டா?’ நாங்க பதில் வச்சிருந்தோம்ல … இந்தி படிக்கிறது திணிப்பு; இந்தி கேக்கிறது இனிப்பு! 


கல்லூரி வந்ததும் சிலர் ஆங்கிலப்பாடல்கள் அப்டின்னு ஆரம்பித்தார்கள். நமக்கு அதெல்லாம் எட்டவில்லை. அன்னையிலிருந்து இன்னைக்கி வரை தெரிஞ்சதே நாலஞ்சு இங்கிலிபீசு பாடல்கள். அதுக்கு மேல ஏறலை. அதுக்கெல்லாம் இங்கிலிபீசு தெரியணுமாமே… நமக்கெதுக்கு வம்பு.


எம்.எஸ்.வி. வந்ததும் தமிழ்ப் பாட்டுகள் பிடிக்க ஆரம்பிச்சது. இதுவரை வார்த்தைகள் மட்டுமே பாடல்களின் முத்திரைகளாக இருந்தன. எம்.எஸ்.வி. பாடல்களில் இசை வார்த்தைகளோடு இணைந்தன. வார்த்தைகள் மெருகேறின. வார்த்தைகளும் புரிந்தன; இசையும் அவற்றோடு இணைந்தன. கேட்க இன்பமாக இருந்தது. அன்று கேட்ட பாட்டுகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. என்றும் இருக்கும்.

70களின் நடுவில் ராஜா வந்தார். அதன் பின் அவரது ராஜ்ஜியம் தான். நான் பார்த்த ஒரு திருப்பம்;- வெறும் வார்த்தைகளாக இருந்த பாடலில் இசையை இணைத்தார் எம்.எஸ்.வி.. அந்த இசையை மேலும் மேலும் மெருகேற்றி பாடலுக்குள் ஏற்றினார் ராஜா. 2000 வரை அவர் பாடல்கள் தான் காதில் ரீங்கரித்தன. ஆனால் இன்று ராஜாவின் புதிய பாடல்களைக் கேட்கும் போது பழைய பாடல்கள் தான் நினைவுக்கு வருகின்றன. அது போல் தல ஏன் இப்போ ஒரு பாடல் கூட போட முடியவில்லை என்ற ஏக்கம் தான் வருகிறது. 


ராஜாவிற்குப் பிறகு மற்ற இசை அமைப்பாளர்களின் நல்ல பாடல்கள் பிடித்தன. ’அன்னக்கிளி என்னைத் தேடுதே’ கேட்ட போது எழுந்த நினைப்புகளும் நினைவில் இருக்கு. ’சின்னச் சின்ன ஆசை’ பாட்டு முதல் முறை கேட்ட நேரம், இடம் எல்லாமே நினைவில் இருக்கிறது. ஆனாலும் ரஹ்மான் ராஜா போல் சிம்மாசனம் போட்டு அமர முடியவில்லை, வார்த்தைகள் புரிந்து பாடல் கேட்ட காலம் முடிந்து, இசைக்கு மட்டுமே முதலிடம் கொடுக்கப்பட்டதாலோ என்னவோ பழைய பாடல்கள் போல் புதுப் பாடல்களில் மனம் ஒன்று படவில்லை. இது நான் ரசித்த விதம்.

சார்லஸ் ரசித்ததும் இதுபோல் தான் என்று நினைக்கிறேன். அதனாலேயே அவரது பதிவு எனக்கு உடந்தையாக இருந்தது. ஆனால் அமுதவனும் காரிகனும் முற்றிலும் வேற்றுச் சுவையோடு இருக்கிறார்கள். இதுவும் இயற்கையே…. Tastes differ.

ஆனால் அவர்கள் எனக்கு இந்த இந்த இசையமைப்பாளர்கள் பிடிக்கிறது; ராஜாவைப் பிடிக்கவில்லை  என்று சொன்னால் சரி தான். ஆனால் ராஜாவின் மேல் ஏதோ வன்மம் கொண்டது போல் எழுதுவது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது.

பஞ்சாயத்தில் இதைப் பற்றிப் பேசுவோமே …. 

காரிகனுக்கு … 

உங்கள் பதிவைப் பார்த்தால் நீங்கள் இசையில் நிறைய அறிவுள்ளவர் என்று தெரிகிறது. நல்லது.  மகிழ்ச்சி.

இருப்பினும் உங்கள் சில கருத்துகளுக்கான என் எதிர் கருத்துகள்: காரிகன் என்னிடம் -- //இணையத்தில் நீங்கள் இளையராஜா பதிவுகளைப் படிப்பதில்லை என்று தெரிகிறது.// என்று கேட்டிருக்கிறார். என் பதில் -- ஒரு வேளை நான் அதிகம் வாசித்திருக்க மாட்டேனாக இருக்கலாம். ஆனால் சில வாசித்திருக்கிறேன். அதிலும் மதுரைக்காரர் ஒருவர் - குமரன் - இளையராஜாவின் இயற்பியல் என்று எழுதுகிறார்.  அந்த தலைப்பில் அவர் எழுதிய அழகான பதிவுகளும் நினைவுக்கு வருகிறது. //இளையராஜாவின் பாடல்களைக் கேட்பது எப்படி? வாழ்க்கையை வாழ்வது எப்படி? இந்த இரண்டு கேள்விகளுக்குமே கிட்டத்தட்ட ஒரே விதமான பதில் இருக்கக்கூடும்.// இது போல் அழகாக எழுதிச் செல்வார். வாசிக்கவே இன்பம் வாசித்துப் பாருங்கள் காரிகன். (இப்போது எனக்குப் பின்னால் ‘சங்கீத ஜாதி முல்லை’ பாடல் கேட்கின்றது…. நல்ல பாட்டு …இல்லீங்களா?)இது போல் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். ஆனால் என் கண்பார்வையில் ராஜாவைப் ‘போற்றிப் பாடடி கண்ணே…’ பதிவுகள் தான் அதிகம் பட்டன. அதனாலேயே உங்கள் கருத்துகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன.

உங்களின் இன்னும் சில கருத்துகள் என் பதில்களோடு;

//உங்கள் இசைமேதையின் கறுப்புப் பக்கத்தை சமாளிக்கமுடியும்?// காரிகன் நாம் யாருக்கும் conduct certificate கொடுக்க வேண்டியதில்லை. யார் இசை யார் யாருக்குப் பிடிக்கிறது என்பது மட்டுமே ‘பஞ்சாயத்தின் முன் உள்ள கேள்வி’. ?/

ராஜாவின் இசையில்தான் கேட்கச் சகிக்காத அருவருப்பான ஓசைகள் மெட்டுகள் குரல்கள் வரிகள் எல்லாமே உண்டு.// ஓ! இசை அறிஞர் நீங்களே இப்படிச் சொல்லும் போது நான் என்ன சொல்ல? என் ஒரே பதில்: அப்படியா? //

ராஜா ரசிக மணிகளெல்லாம் ஒரே சுருதியில் அபஸ்வரம் வாசிப்பதைக் கேட்டபிறகு சரி இது அது போன்ற எல்லா மரமண்டைகளுக்கும் போய்ச் சேரட்டும் என்று எழுதுகிறேன்.// ஓ! நானும் ஒரு மர மண்டை தான். //

இளையராஜாவின் வதவதவென்ற எண்ணிலடங்கா பாடல்களில் ஒரு கைப்பிடி அளவே சிறந்த கிளாசிக் வகைப் பாடல்கள் என்றே நான் சொல்லிவருகிறேன்.// 
காரிகன் , This shows just how biased you are. 

காரிகன், உங்கள் இசையறிவைப் பார்த்து வியக்கிறேன்.இருப்பினும் இன்னும் சில பதிவர்களின் பதிவுகளை வாசித்த போது உங்களைப் போல், அல்லது - என் பார்வையில் உங்கள் அளவோ அல்லது அதற்கு சிறிது மேலோ உள்ள - சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தேன். படித்தவை எனக்கு மகிழ்ச்சியளித்தன. உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 செளந்தர் 
ராகங்களைக் கையாள்வதில் இசைமேதை ஜி.ராமனாதனையும் , இசைமேதை கே.வீ.மகாதேவனையும் , மெல்லிசைப்பாங்கில்உயர் பிரகோகங்கள் காட்டிய மேதைகள் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி , பின்னர் தனி ராஜ்ஜியம் அமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனையும் ஒன்று கலந்து ,அவற்றுடன் தனக்கேயுரிய சப்தஜாலங்களைக் காட்டி நம்மை தன் இசையோடு கட்டி வைத்து , நினைவில் நின்றகலாத பாடல்களைத் தந்த இசைஞானி இளையராஜா அமைத்த இன்னும் சில மாயமாளவ கௌளை ராகத்தில் அமைந்த பாடல்கள் வருமாறு ....

பால ஹனுமான்
ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து, பாடல் வரிகள் எழுதப்பட்டு, (ஹே ராம்) படமாக்கப்பட்டு விட்டது. அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி, இயக்க வேண்டும். அது மிகச் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும். உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்.

காரிகன், எனக்கும் இது மிகவும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

 செழியன்
ஒரு பொழுதுபோக்கு ஊடகத்துக்குள் சிக்கிக்கொண்டதால் மட்டுமே இளையராஜா என்கிற கலைஞனை இவ்வளவு பிரலாபிக்க வேண்டியிருக்கிறது. அவர் கலிபோர்னியாவில் இருந்து இசைத்தொகுதி எழுதுபவராகவோ, ஐரோப்பிய தேசத்தின் வயலின் கலைஞராகவோ இருந்திருந்தால் இவ்வளவு பிரயத்தனங்கள் தேவைப்படாது. (அமுதவன், இதே கருத்தை நாம் சிவாஜிக்கும் வைத்தோம்...)

இசை விதிகளுக்கு முரணான மீறல்களை தனது பாடல்கள் பெரும்பாலானவற்றில் நிகழ்த்துவதன் மூலம் விதிகளை திருத்தி எழுதியுள்ளார்.

 ஒரு கலைஞனின் ஆயுட்காலத்திற்கு பின், அவனது படைப்புகளை ஆய்வு செய்வதை விடவும், அவ்வாறான ஆய்வுகள் அவனது காலத்திலேயே நிகழ்த்தப்படுவது, அவன் திசைகள் கடந்து... தனது படைப்பின் எல்லைகளை, மேலும் விஸ்தரித்து செல்கின்ற வீச்சினை, அவனுக்குத்தரும். 

அடித்துச்சொல்கிறேன்.. உலகின் தலை சிறந்த இசை அமைப்பாளர்களான ஜான் வில்லியம்ஸ், ஜெர்ரி கோல்ட் ஸ்மித், எனியோ மரிக்கோன் போன்றவர்களை தாண்டி இருக்கிறார் ராஜா. (ஹே ராமில்) இப்படி ஒரு காட்சியை லட்டு மாதிரி கமல் அமைச்சு கொடுக்க, கொடி பிடிச்சு ஆடியிருக்கார் நம்ம ஆளு. ஆஸ்கார் வாங்கிய இசை அமைப்பாளர்கள், தயவு செய்து இந்த தரத்தை எட்ட முயற்சிக்கவும்.

அமுதவனுக்கு ….
நீங்கள் சிவாஜி பற்றி எழுதி, அதற்கு வவ்வால் பதில் சொன்னது போல் இங்கு நீங்கள் எதிர்க் குரலில் பேசுவது போல் தெரிகிறது. சிவாஜி ஒரு பெரும் நடிகர்; அவரது ரசிகர் நீங்கள். வவ்வால் குறை சொன்னது உங்களுக்கு எந்த அளவு கோபம் தந்தது. இப்போது வவ்வாலின் ரோலை நீங்கள் இதில் எடுத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

பீத்தோவனின் சித்தப்பா எங்கள் ராஜா; மொசார்டுக்கு இசை சொல்லிக் கொடுத்தவர்; பாக்கிற்கு ட்யூஷன் எடுத்தவர் – இப்படியெல்லாம் ராஜாவின் ரசிகர்கள் சொல்கிறார்கள் என்பது உங்கள் குற்றச்சாட்டு. சிவாஜியைப் பற்றி நீங்கள் சொன்ன சில வாசகங்களைத் தருகிறேன். நம்மைப்போல் சிவாஜி மேல் பற்றில்லாத ஒருவருக்கு நீங்கள் சொன்னவை எப்படி பொருள் படும் என்று யோசித்துப் பாருங்களேன்.

சிவாஜி உருவானவரோ, உருவாக்கப்பட்டவரோ அல்ல,

சிவாஜிக்கு இணையாக இத்தனைப் பல்வேறு பாத்திரங்களை ஒருவரே ஏற்று நடித்த கதாநாயகர்களாகவும் அவர்கள் இல்லை.

அவர் நடிக்க ஆரம்பித்து ஒரு சில படங்களிலேயே ஒரு பரிபூரண படைப்பாளியாய் இருந்தார்.

உலகில் வேறு எந்த நடிகரைக் காட்டிலும் சிவாஜி கணேசன் நடித்த படங்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுத மனிதர்கள் மிக மிக அதிகம்.

வசன உச்சரிப்பில் சிவாஜியின் சாதனைக்கு ஈடு இணை கிடையாது. 

அத்தனையையும் குரலிலேயே கொண்டு வந்த மகா கலைஞன் உலகத்திரை வரலாற்றிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். இத்தனை வித்தியாசமான தொனிகளுடன் வசனங்களை உச்சரித்த நடிகன் சிவாஜியைத் தவிர யாருமே இல்லை.

அமுதவன்,  எனக்கும் மிக மிகப் பிடிக்கும் சிவாஜியைப் பற்றி நமது ஆர்வத்தில் சொல்லும் வார்த்தைகளாகத்தான் இவை இருக்க முடியும். இதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எதிர்க்கும் ஆட்களுக்கும் பஞ்சம் இருக்காது என்பது தெரியாதா உங்களுக்கு?

உங்களைப் போல் இங்கே ராஜாவை விரும்புவோர் சிறிது உயர்வுபடுத்திப் பேசினால் என்ன தவறு? அவர்கள் ரசிகர்கள் - நாம் சிவாஜிக்கு இருப்பது போல்.- உயர்த்திதான் பேசுவார்கள்.

தீர்ப்பு.........

நானே ஒரு கட்சிக்காரனாகப் போயாச்சு .. இதில் என்ன தீர்ப்பு!

ஒரு எம்.ஜி.ஆர். ரசிகனையோ, ரசினி ரசிகனையோ என்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. இவர்களையெல்லாம் எப்படிடா ரசிக்கிறாங்கன்னு தான் வருஷக் கணக்கா நினச்சிக்கிட்டு இருக்கேன். ஆனாலும் இந்த ஆளுகளுக்கு அதீத ரசிகர்கள் இருக்கிறார்கள். நிச்சயமாக இந்தப் பட்டியலில் ராஜைவைச் சேர்க்க அமுதவனும், காரிகனும் கூட சம்மதிக்க மாட்டார்கள். ராஜாவை மிக அதிகமாக நேசிப்பவர்கள் இருக்கிறார்கள் ... அதுவும் அவர்களில் பல விஷய ஞானத்தோடு இருக்கிறார்களும் என்பதும் உண்மையே.

சமீபத்தில் நண்பன் ஒருவனோடு காரில் செல்லும் போது அவன் சேமித்து வைத்திருந்ததில் Stanford Universityல் It's Different என்ற FM நிகழ்ச்சியைக் கேட்டேன். கேட்டுப் பாருங்கள். ராஜாவின் இசையை முழுக்க முழுக்க analysis செய்து, மற்ற பெரும் இசையமைப்பாளர்களோடு ஒப்பிட்டு.... மிக அருமையான நிகழ்ச்சி. இசையறிவு உள்ளவர்களுக்கு அது ஒரு உயர்ந்த விருந்து.

எனது வருத்தம் இரண்டு;
1. How to name it?, Nothing but wind போன்ற தனி இசைத்தட்டுகளை வெளியிடாமல் போய் விட்டாரே ...
2. இன்று போடும் பாடல்கள் அவரின் பழைய பாடல்கள் போல் கொஞ்சமும் இல்லையே என்ற வருத்தம் ...

ராஜா 142 ராகங்களிலோ, 846 ராகங்களிலோ பாடல்கள் அமைத்திருக்கலாம். அவர் ரசிகர்கள் அவரை ரசிக்கட்டும். முடியாதவர்கள் ஒதுங்கிக் கொண்டு, அவர்கள் ரசனையைத் தேடி செல்லட்டும்.. It is all so simple!

My reqyest:
//The perfect porn music director of the Tamil film music industry//..

—  My very sincere request: better all of you stop talking about this porno music. Who is to be condemned for this – the directors, lyricists, music directors or above all, WE, the audience? இதைப் பற்றி அப்பதிவில் பேசியது நமது தரத்திற்கு மிகவும் கீழான ஒன்று.


சொம்பை எடுத்து உள்ளே வைங்க’ப்பா ... !!

*












 *

Saturday, November 22, 2014

803. JIHADI COLLECTION (12)



DANGEROUS LESSONS: If the Islamic State is detonating shrines
,
 it is following the precedent set in the 1920s by the House of Saud. 

Picture shows the Prophet Younis Mosque 

after it was destroyed in a bomb attack by 

Islamic State militants in Mosul.





S. IRFAN HABIB
(S. Irfan Habib holds the Maulana Abul Kalam Azad Chair,
National University of Educational Planning and Administration, New Delhi.)
-----------------------------------------------------
செளதிய வஹாபியத்தின் கொடூர முகம்


ஹபிப் எழுதிய ஆங்கிலக் கட்டுரையிலிருந்து சில முக்கிய பகுதிகள் ….
(என்னுடைய வார்த்தைகள் ஏதுமில்லை இங்கே.)   



வஹாபியிசத்தை உலகம் முழுமைக்கும் பரப்ப வேண்டுமென்ற குறிக்கோளோடிருக்கும் ஐ.எஸ். அமைப்பினை இன்று துருக்கி அரசு தாங்கிப் பிடித்துக் கொண்டிருப்பது வரலாற்றில் ஒரு விபரீதமான விதியின் விளையாட்டு என்று தான் சொல்ல முடியும். செளதி அரசால் இன்று நியாயப்படுத்தப்படும், வலிமைப்படுத்தப்படும் ஐ.எஸ். 19ம் நூற்றாண்டில் ஒரு அராஜக, தீவிரவாத அமைப்பாக உருவெடுத்தது. ஐ.எஸ்.அமைப்புக்கு தங்கள் கொள்கையை நிலை நிறுத்த எந்த வித கொடூரமான மனித குலத்திற்கே எதிரான முறைகேடுகளையும் அது கைக்கொள்ளும் என்பது அதன் ஆரம்பகால வரலாற்றிலிருந்தே தெரிய வரும் உண்மை.

வஹாபிய இஸ்லாத்தின் ஆரம்பத்தில் அதன் வெறியாட்டத்தை நேரடியாக அனுபவித்தது ஓட்டோமான் அரசு தான்.1988ம் நூற்றாண்டில் இஸ்லாமிய அறிஞராக இருந்த அப்துல் வஹாப் அப்போதிருந்த செளதி அரேபியாவின் முதல் மன்னனான இபுன் சாவுத் இருவரும் இணைந்து ஓட்டோமான் அரசிற்கு பெரும் தலைவலியாக உருவானார்கள். வழக்கத்திலிருந்த பல இஸ்லாமிய நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் இவர்கள் கேள்விக்குள்ளாக்கினார்கள்.  …  ஓட்டோமான் அரசு இவர்களைத் தோற்கடித்து அவர்களை பாலைவனத்திற்குள் விரட்டியடித்தார்கள். ….  வஹாபிய கொள்கைகள் மூடத்தனமானவை; இஸ்லாமியத்திற்கு எதிரானது என்பது துருக்கியரின் கருத்து. ஆனால் இன்று துருக்கியர்கள் ஐ.எஸ். அமைப்புடன் இருப்பது என்பது ஒரு பெரிய நகைமுரண்.

வெறுப்பின் எல்லைகள்
வஹாபின் தீவிரவாத, புனிதவாதக் கொள்கைகள் இபுன் சாவுத்தின் ஈவு இரக்கமற்ற மதத் தீவிரவாதத்தோடு இணைந்தது. …  பயங்கரங்கள் நடந்தேறின. … இந்த நிகழ்வுகள் இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்னெடுத்தன; பயங்கரவாதம் தலையெடுத்தது. இஸ்லாமியர் மட்டுமல்ல; உலகத்தின் ஒவ்வொரு மனிதனின் வாழ்வையும் அது வன்மத்தோடு தீண்டியுள்ளது. இன்று ஒவ்வொரு தீவிரவாத இஸ்லாமியக் குழுவும் இவர்களையே முன்னோடியாகக் கொண்டுள்ளது. செளதியின் பண பலமும், அதிகார வெறியும் இக்குழுவின் தத்துவங்களே உண்மையான இஸ்லாம் என்றும், மற்றவையெல்லாம் இஸ்லாத்திலிருந்து விலகியவை என்றும் பறை சாற்றுகின்றன.
வஹாபியம் பலப் புது மோசமான மாற்றங்களோடு வளர்ந்து விட்டது. இன்று அதன் வளர்ச்சி வளர்த்து விட்ட செளதியையே பயமுறுத்துகிறது. இதனால் தங்களை ஐ.எஸ். குழுவிடமிருந்து விலக்கிக் கொண்டு அதன் கொடூரம் ஷாரியத் சட்டங்களுக்குப் புறம்பானது என்று மெக்காவின் தலைமைக்குரு பொது அறிக்கை விட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளது. இது போன்ற இரட்டை வேடம் போடுவது செளதிக்கு பழகிப் போன விஷயம் தான்!
பழைய புனித இடங்களை அழித்தொழிப்பது ஐ.எஸ்., செளதிக்கும் 1920லிருந்தே உள்ள வழக்கம் தான்.  இதோடு, ஷியா இஸ்லாமியரை வெறுத்தொதுக்குவது இருவருக்கும் உள்ள மற்றொரு ஒற்றுமை. 19ம் நூற்றாண்டில் கர்பாலாவில் நடத்திய கொள்ளையும்,கொலையும், பின்னால் நபியின் பேரனான ஹுசைனின் நினைவிடத்தை அழித்ததும் மிகப் பழைய கதைகள். அன்று ஆரம்பித்த ஷியாக்களின் மீதுள்ள எதிர்ப்பு இன்றும் ஐ.எஸ்., அல் கொய்தா குழுவினரிடம் தொடர்ந்து இருப்பதும் உண்மை.
வஹாபியத்தின் புதிய தோற்றம்
ஏனிந்த வஹாபியம் இப்படி தலையெடுத்து ஆடுகிறது? 1970ல் நடந்த இரானியப் புரட்சி வஹாபியத்திற்கு எதிரான ஒன்றாக இருந்தது. இவைகளுக்கு எதிராக வஹாபியத்தை புதிதாக வளர்த்தெடுக்க செளதி முனைகிறது. இதன் பிரதிபலிப்புதான் போகோ ஹரம், அல் ஷாகேப். அல் கொய்தா, தாலிபன், இப்போதைய ஐ.எஸ்.  போன்றவைகளின் வளர்ச்சி. ஷியாக்களும் முன்பு போலில்லாமல் தீவிரவாதத்திற்குள் அயோத்தல்லா கொமேனி காலத்திற்குப் பின் மாற ஆரம்பித்து விட்டார்கள்.
செளதி, கத்தாரி அரசுகள் இப்போது ஐ.எஸ். மூலம் ஒரு அரக்க சக்தியை வளர்த்து விட்டோம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்; தங்கள் அரசின் அமைதிக்கு இது எதிரானது என்றும் உணர்ந்திருக்கிறார்கள். வஹாபியிலிருந்து ஐ.எஸ்.பிறந்திருந்தாலும் இன்று அது மிக அதிக்க் கொடூரத்துடன் வளர்ந்து விட்டது. இன்று ஐ.எஸ். குழுவை அடக்க ராணுவத்தால் மட்டுமே முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டது.


ஆனால் இஸ்லாமிய உலகத்தில் நிரந்தர அமைதி வேண்டுமாயின், இஸ்லாமியத்திற்குள் ஒரு புதிய போராட்டம் ஆரம்பிக்க வேண்டும். அங்கு ஒரு பெரும் மனமாற்றம் தேவை. இஸ்லாமிய ஆதரவு, இஸ்லாமிய எதிர்ப்பு என்பதைத் தாண்டியும் நம் பார்வைகள் இன்னும் விசாலமாக வேண்டும்.










Friday, November 21, 2014

802. பெங்களூரு உலா






*



 போன முறை பெங்களூரு சென்ற போது ஆங்கிலத்தில் எழுதிய தன் கதையை உறவினர் என்னிடம் கொடுத்தார். வாசித்தேன். இருவருமாக உட்கார்ந்து கதை பற்றிய எங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.

சில நாளில் மறுபடியும் பெங்களூரு. இப்போது அவரது அடுத்த கதை ரெடி. நானோ இந்தக் காலக்கெடுவிற்குள் ஒரு புத்தகத்தில் சில பக்கங்களை மட்டும் தமிழ்ப்படுத்தியிருந்தேன். அதற்கே அவ்வளவு சிரமம்.

யாரோ எழுதியதைத் தமிழ்ப்படுத்தவே எனக்கு அவ்வளவு பாடு. ஆனால் மக்கள் சொந்த கதை ஒன்றை உருவாக்கி அதற்கு எழுத்துருவும் கொடுக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு கதையை உருவாக்குகிறார்கள் என்றே தெரியவில்லையே. எல்லாம் மேஜிக் மாதிரி தான் எனக்குத் தோன்றுகிறது.

 அடுத்த ஜென்மத்திலாவது கதை எழுதும் ஆற்றல் கைவரப் பண்ணணும்!!

 ************

எங்கள் ஊரில் நான்கு சீசன்களையும் ஒரே நாளில் பார்க்க முடியும் என்றார் உறவினர். சொன்னது மாதிரி இருந்த நாலு நாட்களும் வித விதமான நாட்களாகவே நகர்ந்தன. திடீரென்று வெயில். அடுத்த சில நேரம் கழித்து மழை. மாலையில் பனி..குளிர்.

ஆனாலும் நல்ல குளிரை எதிர்பார்த்து ஆசையோடு சென்றேன். குளிரவில்லை.

 ************

போகிற வழியில் விதான் செளதாவைப் பார்த்ததும் நம்மூரில் கட்டிய கட்டிடம் நினைவுக்கு வந்தது. பல எரிச்சல்கள். அழகில்லாத ஒரு கட்டிடம். கட்டிய பிறகு இடிக்கவா முடியும்? ஆனாலும் அதற்காக ‘அந்த ஆள் கட்டிய கட்டிடத்தில் நான் உட்காரவா?’ என்று வீண்பிடிவாதம் பிடிக்கும் அடுத்த அமைச்சர். ஒரு வீட்டைக் கட்டி விட்டு அததற்கு என்று சில இடங்களை வைத்து விடுகிறோம். ஒரு சின்ன வீட்டில் அதன் பிறகு கூட அதைக் கூட மாற்ற முடிவதில்லை. ஆனால் எதற்கோ கட்டிய ஒரு கட்டிடத்தை மருத்துவ மனையாக்குவேன் என்ற வீண்பிடிவாதம் ஒரு அரசியல்வாதியின் ஆணவமாகத் தான் தெரிகிறதேயொழிய அதில் எந்த அர்த்தமும் இல்லை.

 ம்ம் ... எல்லாம் நம் தலையெழுத்து!

 *************

விதான்செளதாவிற்கு எதிர்த்த நீதிமன்றங்களைப் பார்த்ததும் சென்னை நீதி மன்றமும், எங்கள் கல்லூரியும் நினைவிற்கு வந்தன. எல்லாம் Indo-Saracenic architecture. ஒரே ஆள் ... நிறைய கட்டிடங்களுக்கு டிசைன் போட்டிருக்கிறார். அதே சிகப்பு கலர்; வளைவுகள்; ஆர்ச்சுகள் .......

 ************* 

பெங்களூரு ஆட்களிடம் punctuality இருக்குமா? இருக்க முடியுமா?ன்னு கேள்வி எழுந்தது. இருக்க முடியாதுன்னு தான் தோன்றியது. எப்படி முடியும்? ஊர் முழுவதும் திரும்பும் இடத்திலெல்லாம் jam தான் ... traffic jam தான்! இந்த லட்சணத்தில் எப்படி அவர்களிடம் punctuality இருக்க முடியும் என்பது என் கேள்வி.

 ****************

சென்னையை விட விளக்கு அலங்காரங்கள் பெங்களூரில் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. கடைகள், தெருக்கள் எல்லாம் வெளிச்ச மயமாக இருந்ததாகத் தோன்றியது.  அதுவும் Elevated Express way-ல் இரவில் போகும் போது சாலை மேலும் கீழுமாய் சென்றது. ஒரு பக்கம் நம் முன்னால் சிகப்பு விளக்குக்ள் அலங்காரமாகச் செல்ல, எதிரிப்பக்கம் வெள்ளை விளக்குகள் கண்ணைக் கூச வைக்கின்றன. படம் எடுக்க ஆசை. கொஞ்சம் க்ளிக்கினேன்.







நல்ல படம் தான் கிடைக்கவில்லை!

 ******************

 Meet Up என்று ஒன்றை புதிதாக கணினியில் காண்பித்தார் உறவினர்; அப்படி ஒன்று இருப்பதை அப்போது தான் அறிந்தேன்.

அட... மதுரையை ஒரு பெரிய கிராமம் என்பார்கள். உண்மைதான் போலும்! சென்னை, பெங்களூரு ஊர்களோடு மதுரையை ஒப்பிட்டுப் பார்த்தால் மதுரை ரொம்பவே பாவமாக இருக்கிறது. சான்றாக ஒரே ஒரு குழுவை எடுத்து பார்த்தேன். புகைப்படக்காரர்கள் குழு. மொத்தம் நான்கு பேர். அதில் ஒருவர் மட்டுமே மதுரைக்காரர்.

 மதுரையில் நிலமை ரொம்பவே மோசமாக உள்ளது. கஷ்டப்பட்டு மதுரை Meet Up-யின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டும்.

*****************

பெங்களூரில்  நல்ல விஷயம் ஒன்று கேள்விப்பட்டேன்.

ஒரு  கூட்டு வீடு - apartments - கட்டினால், அதன் கழிவு நீர் எல்லாம் ஒரு தொட்டியில் தேக்கப்பட்டு, recycle செய்யப்பட்டு அந்தக் கூட்டு வீடுகளின் கழிவறையில் மீண்டும் பயன் படுத்தப் படுகிறதாம். இந்த அமைப்போடு தான் வீடு கட்ட முடியும். கட்ட அரசின் உத்தரவும் கிடைக்குமாம்.

ஏனிந்த ஏற்பாட்டை நமது மாநிலத்தில் செயல்படுத்தப் படுவதில்லை. அட...நீதி தெய்வத்தை சிறையில் அடைத்த அநீதிக்காரர்கள் தான் அவர்கள்; இதய தெய்வத்தை இருட்டறையில் பூட்டியவர்கள் தான் அவர்கள். இருந்தாலும் அவர்கள் செய்வதில் உள்ள நல்லவைகளை நாமும் கடைப்பிடிக்கலாமே... இல்ல...

******************

பல இடங்களில் மம்மி படங்கள் ஒட்டியிருந்தார்கள். மறுபடியும் அதே மாதிரி நிறைய படம் ஒட்ட வேண்டிய நிலை வரட்டும் என்று நினைத்துக் கொண்டேன்.


*****************
22.11.14

இன்னொன்று சொல்ல மறந்து போனேனே,,,, பெங்களூருக்குள் சுற்றிக் கொண்டிருந்தோம். எங்கும் ட்ராபிக்... வண்டிக்குள் சிறை ... பொறுமை காக்க திறமை தேவை ... அங்கே வண்டியோட்டவும் பெருந்திறமை தேவை....

அசந்து போய் உட்கார்ந்திருந்த போது அந்தத் தெரு முக்கில் ஒரு பெரிய போர்டு வைத்திருந்தது.

SMALL FAMILY 

HAPPY FAMILY

என்று எழுதியிருந்ததைச் சத்தமாக வாசித்தேன். சில நொடி கழித்து ...

SMALL CITY

HAPPY CITY

என்று சொன்னேன். காருக்குள் இருந்த ‘மக்கள் கூட்டம்’ அனைத்தும் ஒரு சேர கை தட்டி சந்தோஷம் என்றார்கள் -- இருந்தவர்கள் அனைவரும் ‘மதுரைக் கூட்டம்’ !

வாழ்க மதுரை !!!



*




Saturday, November 15, 2014

801. பழைய மொந்தையில் பழைய கள்ளும் புதிய கள்ளும் ...




*










*


 2008ம் ஆண்டு மேலே உள்ள தலைப்பில் ஒரு இணையப் பூ ஒன்றை நாங்கள் ஆறு பேர் இணைந்து ஆரம்பித்தோம்.

 SurveySan 
O.R.B Raja 
தருமி 
Santhosh Kumar 
Anandha Loganathan 
நக்கீரன்

சமுக நல சீர்திருத்தங்கள் வேண்டுமென்று கேட்கவும், மத்திய அரசாங்கத்திடம் நம் கருத்துகளை, வேண்டுகோள்களைப் பதிய ஒரு இணைய தளம் இருந்ததைக் கண்டதும் அதை முறையாக தமிழ்ப் பதிவர்கள் பயன்படுத்த ஒரு இணையப் பூஒன்றை நாங்கள் ஆறு பேரும் ஆரம்பித்தோம். சில பதிவுகளை அந்த ஆண்டில் தொடர்ந்து இட்டோம். அதன்பின் அப்பதிவை நாங்கள் தொடர்ந்து பயபடுத்தாமல் விட்டு விட்டோம். இந்த இணையத்திற்கான logo ஒன்றினை SurveySan அவர்கள் படைத்தார். ( I MISS YOU, SURVEY SAN). இப்போது அந்த ஐவரும் இணையத்தில் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை!  :(

இந்த இணைய இதழில் எங்களின் பல கருத்துகளைப் பதிவிட்டோம்.

ரயில்களில் கழிப்பறைகள் தொடர்பாக... என்ற தலைப்பில் நான் இப்பதிவுகளை ஆரம்பிப்பதற்கு முன்பே அரசுக்கு ஒரு விண்ணப்பம் ஒன்றை எழுதியிருந்தேன்(30.12.2007 - ( Registration No. DARPG/E/2007/08851) இந்தவிவரங்களை என் பதிவுகளிலும் பதிவிட்டிருந்தேன். - http://dharumi.blogspot.in/2007/12/246.html

இதற்குப் பதில் அரசிடமிருந்து வந்திருந்தது.http://fixmyindia.blogspot.in/2008/02/blog-post_1634.html- முயற்சி எடுப்பதாக அதில் தகவல் வந்திருந்தது.


ஆனால் அப்படி ஏதும் நடைமுறைக்கு வரவில்லை.

ஆனால் சென்னைக்கு சென்ற சில தினங்களுக்கு முன் செல்லும் போது பாண்டியன் துரித வண்டியில் கழிவறைக் கதவில் BIO-BATHROOM என்பதைப் போன்ற ஒரு அறிக்கை பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. பெய்த சிறு நீர் வழக்கம் போல் கீழே விழுந்து மதுரை மண்ணை அசிங்கம் செய்யாம்ல் அமைக்கப்பட்டிருந்தது.


என்றோ எழுதிய ஒரு விண்ணப்பத்திற்கு இன்று பதில் கிடைத்தது போன்ற ஒரு மகிழ்ச்சி வந்தது. காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதை தான் இது. இருந்தாலும் நாம் என்றோ எடுத்த ஒரு முயற்சி இன்று பலனடைந்திருப்பது பார்த்து ம்கிழ்ச்சி.


நம் கடன் பணி செய்து (சும்மாகிடப்பது  கூட ஒரு மகிழ்ச்சி தான் போலும்.

விட்டதை விட்ட இடத்தில் தானே தேட வேண்டும். ஆகவே மீண்டும் அந்த பழைய்ய்ய்ய்ய இணையப் பூவில் இன்றைய தேவையான, பார்களை ஒழிப்பதற்கான தமிழக அரசிற்கான விண்ணப்பத்தையும் இதில் பதிவிட்டுள்ளேன்.  -   http://fixmyindia.blogspot.in/2014/11/blog-post.html

இளைஞர்கள் யாரேனும் (அல்லது மனதில் இளையோரான முதியவர்களும்) இப்படி பதிவெழுத விரும்பினால் இப்பதிவில் அவர்கள் தங்களை இணைத்துக் கொள்ள அழைக்கிறேன்.

ஏதாவது எழுதுவோமே .... நடப்பது நடக்கட்டுமே .....!


 *
பழைய பதிவர்கள் அந்த ஐந்து பேரும் இங்கே இப்பதிவிற்கு வருகை தந்தால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் ........!

*

இதே போன்ற கருத்தை வைத்தபோது எத்தனைத் தமிழ்ப் பதிவர்கள் ஆவலோடு இதில் கலந்து கொண்டார்கள் என்பதை இப்பதிவையும் பின்னூட்டங்களையும்  பார்த்துப் புரிந்து கொள்ளுங்களேன்...........






Monday, November 10, 2014

800. எண்ணூறாம் பதிவில் ஒரு சின்ன விசேஷம்






*

ஒன்பதரை ஆண்டு ... எண்ணூறு பதிவுகள்.

போன பதிவு போடும் போதே சொல்ல வேண்டிய செய்தி. ஹிட்சுகளுக்காக எழுதிய காலம் முந்தியே முடிந்து போனது. அதுவும் மதங்களைப் பற்றி அதிகம் எழுதியதால் ஓரளவு தொடக்கூடாத ஒரு பதிவனாகவும் ஆனேன். reality புரியாதா என்ன? ஆனாலும் எழுத வேண்டும் என்ற ஆவல் இதுவரை குறைய வில்லை. பழைய நல்ல பதிவர்கள் நின்று போனது கொஞ்சம் கவலை தான். அதில் பலரும் சமுக வலைத்தளங்களுக்குச் சென்று விட்டார்கள். அதற்கும் நண்பர்களுடனான chatக்கும் அதிக வித்தியாசமில்லை. நண்பர் ஒருவர் கூறுவது போல் அதெல்லாம் வெறும் டீக்கடை பேச்சு என்பது போல் தோன்றி விட்டது. டீ குடிக்கும் போது ரெண்டு ஜோக் .. குடிச்சி முடிச்சதும் ’பை’ போய்ட்டு வர்ரேன்னு காலேஜ் கான்டீன்ல சொல்லிட்டு போவோமே அது மாதிரி ....

பதிவுகள் எல்லாம் quite solid ! எழுதும் போதும் சீரியஸ் ... எழுதுவதும் சீரியஸ் .. .. முடித்ததும் ஒரு திருப்தி. இது போதும்! யாருமே வாசிக்காமல் போவதில்லை. எனக்கு எழுதியதில் திருப்தி ... நாலைந்து பேர் படித்ததில் திருப்தி. இது போதும். அதுவும் வழக்கமான பின்னூட்டக்காரர்கள். என் பதிவுகளை விட அதை  வாசித்து அவர்கள் எழுதும் பின்னூட்டங்கள் அர்த்தம் பொதிந்தவைகளாக இருப்பதிலும் ஒரு பெருமை; மகிழ்ச்சி.

உண்மையைச் சொல்லியாக வேண்டுமல்லவா? சில சமயங்களில் பொதுக் காரியங்களைப் பற்றி எழுதும் போது பதிவர்களிடமிருந்து கட்டாயம் வரவேண்டிய firm support வராமல் போகும் போது ‘என்னடா ..இது?’ என்ற எண்ணம் வந்து விடுகிறது. தமிழ்மணத்திற்கு இன்னொமொரு கோரிக்கை  என்று ஒரு பதிவு எழுதினேன். நிச்சயமாக எல்லோருக்கும் உகந்த கோரிக்கைகள் தான் அதில் வைத்திருந்தேன். அதில் எதுவும் எல்லோருக்கும் உகந்தவைகளாகத்தான் இருக்க வேண்டும். 467 பேர் பார்த்திருக்கிறார்கள். பொது விசயத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அதை பலர் ஆதரித்திருக்க வேண்டுமென நினைத்தேன். “எது நடந்தாலும் கண்டு கொள்ள மாட்டேன்” என்ற தத்துவத்தில் பலரும் இருப்பதைப் பார்த்தால் எரிச்சல் வருமா வராதா....? நன்றாகவே வந்தது.

******

800 பதிவுகள் போட்டதை நான் கொண்டாட வேண்டாமா...? எப்படிக் கொண்டாடுவது என்று நினைத்தேன். ஏதாவது ஒரு பொதுக்காரியத்தை எடுத்துச் செய்ய வேண்டுமென நினைத்தேன்.

சாராயக் கடைகளின் கேடு பற்றி இப்போது அடிக்கடி போராட்டங்கள், விண்ணப்பங்கள் என்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பக்கத்து வீடு கேரளாவில் முழுவதுமாக குடிக்கடைகளை நிறுத்துவது பற்றி ஆவன செய்து கொண்டிருக்கின்றது. ( யார் கண்டது ... அந்தக் கூட்டமெல்லாம் இனி டாஸ்மாக் பக்கம் வந்து வரிசையில் நிற்கப் போகிறதோ என்னவோ...!) நான் டாஸ்மாக்கை விட அதிகம் அஞ்சுவது பக்கத்திலிருக்கும் பார்களை. அதுவும் அவர்கள் வண்டிகளை நிறுத்தும் இடத்திற்கு அருகில் இரு முறை நின்ற அனுபவமும் உண்டு - பக்கத்திலிருந்த ப்ரோட்டா கடையில் நின்ற அனுபவம் தான். அதில் இரு குடிமகன்கள் வண்டி எடுத்த ‘கண் கொள்ளா காட்சியைக் காணும் அனுபவம்’ ..... வண்டி எடுக்கும் போதே இன்று எத்தனை பேரை இவன் சாய்ப்பானோ என்றே தோன்றியது.

இரண்டாவதாக, பார் வைத்திருப்பது இரட்டிப்பு சந்தோஷம் மக்களுக்கு. யார் வேண்டுமானாலும்,எப்போது வேண்டுமானாலும் குடித்துக் கொள்ளலாம் என்ற “சுதந்திரம்” குடிமக்களுக்கு.

நானும் குடிப்பேன் என்பதால் குடியை ஒழிக்க வேண்டும் என்பதற்கு எதிராக இருக்க மாட்டேன். ஆனால் இந்த “சுதந்திர குடி” எளிதாய் ஒழிக்கக் கூடியது. அதில் நிச்சயமாக  பலருக்கு ஏற்படும் தடையால் அவர்களது குடி குறையும். நிச்சயமாக விபத்துகள் குறையும் என்று உறுதியாக நம்புகிறேன். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தான் விபத்துகள் அதிகம் என்ற செய்தி மனதை உறுத்துகிறது. பார்களை எடுத்தால் குடியை நிறுத்த முடியாது. ஆனால் நிச்சயமாக குறைக்க முடியும். அரசுக்கும் காசு நட்டம் ஏதும் கிடையாது.

மது விலக்கிற்கு எதிரான சிறிய ஆனல் முதல் படியாக இது இருக்கட்டுமே!

ஆகவே தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு விண்ணப்பம் எழுதியுள்ளேன். நம்பினால் ஓட்டளியுங்கள். அதோடு இதே விண்ணப்பத்தை உங்கள் பதிவிலும் பதிப்பித்து மேலும் இச்செய்தி பலரையடைந்து, விண்ணப்பத்திற்கு நிறைய கையெழுத்து வர உதவ கேட்டுக் கொள்கிறேன்.




*

Please join this campaign:

https://www.change.org/p/tamil-nadu-ministerial-cabinet-close-down-the-bars-in-all-tasmac-shops?recruiter=5035702&utm_campaign=mailto_link&utm_medium=email&utm_source=share_petition




*




Friday, November 07, 2014

799. சில உண்மைகள் - உங்களுக்கு மட்டும் ! வெளியில சொல்லிடாதீங்க ....







*




’அவர்கள் உண்மைகள்’ பதிவர் தனது பதிவில்  படங்களோடு எத்தனை பதிவர்கள் தன் பதிவைப் படிக்கிறார்கள் என்பதைத் தெரிவித்து மற்ற சமுகத் தளங்கள் இணையப் பதிவுகளை புறந்தள்ளி விடவில்லை என்று நிருபித்திருந்தார்.

 அதனைத் தொடர்ந்த வருண் தன் பதிவில் அது எப்படி என் போன்ற “மூத்த” பதிவர்களுக்கு மனச்சோர்வு அளிக்கும் என்று எழுதியிருந்தார்.


இந்த இரு விவாதங்களையும் நீங்கள் விவாதிக்க உங்களுக்கு உண்மையான ‘பிக்சர்’ தெரிய வேண்டுமே ... அதனால் உண்மையான ‘பிக்சரை’ இங்கே தருகிறேன். (யார் வந்து நம் பதிவை எல்லாம் வாசிக்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் தான் இந்தப் பதிவையே போடுகிறேன்!!)






பதிவர்களை சாதா, பிரபல, மூத்த பிரபல, வெறுமனே மூத்த பதிவர்கள் என்று பிரிக்கலாம்.

இந்தப் பதிவின் moral of the story என்னன்னா ... நான் ஒரு வெறுமனே மூத்த பதிவர் மட்டும் என்பதே ...!






அ.உ. காரருக்கு 42,782  அப்டின்னா வெறுமனே மூத்த பதிவருக்கு  6490

அ.உ. காரருக்கு 3402  அப்டின்னா வெ.மூபதிவருக்கு 167.

பதிவர்கள் எல்லோருக்காகவும் வைத்த பதிவுகள் கூட 484 பேர் தான் வாசித்திருகிறார்கள் என்பது ஒரு சோகம் தான்!

இத வாசிக்கிற நாலஞ்சு பேரும் இத ரகசியமா வச்சுக்கங்க ... வெளியில் சொல்லிக்கிட்டு திரிய வேணாம்.  சரியா ?

எனக்கு இன்னொரு சந்தேகம் ...

எனக்கு வாசிக்க வர்ரவங்க இம்புட்டு குறைச்சலா இருந்தும் எப்படி தமிழ்மண traffic rankல் 47 வது rankல் என் பதிவு வரும்?


*



798. தோரணம்







*



 ’க்ரிக்கெட் இருக்கிறது வரை எந்த விளையாட்டும் இந்தியாவில் வளரவே வளராது.’

’க்ரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம். இந்த மதம் குறைந்தால் தான் மற்ற விளையாட்டுகள் வளரும்.’

 ஒவ்வொரு விளையாட்டுப் போட்டிகள் வரும் போதும் இப்படி சொல்வர் பலர். ஆனால் இப்படி சொன்னவர்கள் கூட (என்னையும் சேர்த்து தான்!!) I.S.L. விளையாட்டு நடக்கிறதே .. அதைப்பற்றி ஏதாவது எழுதுவோம்னு ஒரு பதிவருக்கும் (என்னையும் சேர்த்து தான்!!) ஏன் தோன்றவில்லை?

 அம்புட்டு தான் உங்க கால் பந்து ரசிப்பு அப்டின்னு கிரிக்கெட் தீவிர ரசிகர்கள் சொல்வதும் கேக்குது!

நியாயம் தான். ஏன் யாருமே அதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை. சரி ... நம்மளாவது நாலு வரி எழுதிடுவோம் ...

விளையாட்டு நல்லாவே இருக்கு. international level இல்லாவிட்டாலும் நல்லா சுறுசுறுப்பான விளையாட்டு. பார்க்க நல்லாவே இருக்கு. அதைவிட பார்க்க வர்ர ஆளுக நான் எதிர்பார்த்ததை விட மிக அதிகம். இதற்கும் கிரிக்கெட்காரர்களின் விளம்பரங்களும், நடிகர்களின் அரவணைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியானால் .. அவர்களுக்கும் நன்றி.

 சூழல் கொஞ்சம் மாறியிருப்பது போலும் தோன்றுகிறது. அங்கங்கு கால்பந்து விளையாடும் பையன்களைப் பார்க்க முடிகிறது.

 ஒரு குறை - நம்மூர் ஆட்களின் முகத்தை ஆட்டக்காரர்களில் மத்தியில் பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது. எல்லாம் வெளி நாட்டு ஆட்களின் ஆட்டமாகத்தானிருக்கிறது. ஒரு வேளை வரும் வருஷங்களில் நம்மூர் ஆட்கள் அதிகமாகலாம்; அதிகமாக வேண்டும்!


 *****


 ரெண்டு வாரத்துக்கு முந்தின இரு பிரபல நீள் தொடர்களில் - நாதஸ்வரம் & சரவணன் மீனாட்சி - ஒரே வாரத்தில் இரு சிறு பெண்கள் தற்கொலை. .... பரவாயில்லை .. நல்ல பாடங்கள் சொல்லித் தருகிறார்கள்.


 *****

டாஸ்மாக் பத்தி இப்போதைக்கு ஒண்ணும் சொல்லலை. ஆனால் அந்தக் கடைகளை ஒட்டி நடத்தும் பார்களை மட்டுமாவது முதலில் நிறுத்தலாமே..

பார் முன்னால் நிறுத்தியிருக்கும் வண்டிகளை குடிமக்கள் எடுத்துக் கொண்டு போவதைப் பார்க்கும் போது இன்னைக்கி எத்தனை பேர் பலியோ என்று தான் தோன்றுகிறது.

அப்புறம் ஏன் தமிழ்நாட்டில் தான் இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் வராது?

யாராவது சமுகத் தளங்களில் பார்களை முதலில் எதிர்க்க ஏதாவது ஒரு ஏற்பாடுஆரம்பியுங்களேன்....ப்ளீஸ்.

அதற்குப் பிறகு கேரளா மாதிரி ஏதாவது பண்ணலாமே! அம்மாட்ட கேட்டு ஓபிஎஸ் ஏதாவது பண்ணுவாரான்னு பார்ப்போம்!


 *****


யாராவது அந்த sleep well அப்டின்னு ஒரு விளம்பரம் டிவியில வருதே... அதில் கடைசியில் கையில் டீ தம்ளரோடு மீசை வச்ச ஒரு ஆளு என்னமோ சொல்றாரே ... அது என்னன்னு கேட்டு எனக்குச் சொல்லுங்களேன்.

இரண்டு வாரமா முயற்சி பண்றேன் - அவர் என்ன சொல்றார்னு கண்டு பிடிக்கிறதுக்கு.

மனுஷன் பிடி கொடுக்க மாட்டேங்கிறாரே ...!


******

ரேடியோவில ஒரு விளம்பரம். வீட்ல கக்கூஸ் கட்டணும்னு. அகில இந்திய விளம்பரம் போலும். அதில் பேசும் தமிழ் எந்த ஊர் தமிழ் அப்டின்னு தெரியலை. நல்ல வேளை எங்க ஊர் சீத்தலைச் சாத்தனார் இல்லை. அவர் எழுத்துப் பிழைக்கு தலையைப் பிய்த்துக் கொள்வாராம், இங்கே பேச்சுத் தமிழுக்கு வந்த நிலையைக் கேட்டார்னா தலையையே பிய்த்துக் கொள்வார் என நினைக்கிறேன்.

அந்தந்த மொழிக்காரங்க கிட்ட கொடுத்து அந்தந்த மொழியைப் பேச வைக்கக் கூடாதா? கொல்றீங்களே’ப்பா ...!


 *
நம் சமுகத்தில்  half brother,  half sister  என்பவைகளுக்குஇது வரை தமிழ்ச் சொல் ஒரு வேளை தேவையில்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் இரண்டு காரணம் பற்றி இனி அது தேவை என்றே நினைக்கிறேன்.

முதல் காரணம்:
பழைய சமுகத்தில் இந்த வார்த்தைகள் தேவையில்லாததால் அதற்குரிய தமிழ்ச் சொற்கள் தேவையில்லாமல் இருந்தது. ஆனால், இன்று சமுக மாற்றங்கள் நிறைய வந்து விட்டன. இனி இந்த வார்த்தைகள் இனி நம் சமுகத்திற்கும் தேவை தான்.

இரண்டாம் காரணம்:
வெளிநாட்டுக் கதைகளை மொழியாக்கம் செய்யும் போது இதற்கான வார்த்தைகள் தமிழில் இல்லையென்பதால் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியதுள்ளது!

புது வார்த்தைகளைக் கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்!


*****

cinthol சோப்புக்கு ஒரு விளம்பரம். சில உடம்புக்கார சிப்பாய்கள் ... நம்புகிறோம் அப்டின்னு ஒரு பாடல்.
சாமிகளா... இந்த பின்னூட்டத்தை ஆக்கிய, தமிழாக்கிய புண்ணியவான்களே!  போதுமய்யா .. முடிஞ்சா இந்த பின்னூட்டத்தை எடுத்திட்டா அந்த சோப்புக்கு நல்லது.

*****


ஆங்கில இந்து வில் ஒரு செய்தி வந்திருந்தது - ஓரிரு நாட்களுக்கு முன்.

ஆங்கில இணையப் பதிவுகளின் தீரம் மிகவும் குறைந்து போய் விட்டதாம். எழுதுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகப் போய் விட்டதாம். இப்படியெல்லாம் எழுதிய செய்தியில் தமிழ் இணையப் பூக்கள் நன்றாக, நிறைய, எண்ணிக்கை குறையாமல் வருகிறது என்ற செய்தி இருந்தது.

பரவாயில்லையே ... நல்ல பெயர் வாங்கியிருக்கிறோம். எனக்கென்னவோ ப்ளாக் மாதிரி மற்ற சமுகத்தளங்கள் மீது விருப்பம் இல்லை.

தொடருவோம் .................


*****