Tuesday, March 14, 2023

1217. சூத்திரர்களின் கண்களுக்கு மட்டும் .... 1




“சூத்திரன்” என்றதொரு நூலை மொழிபெயர்த்து முடிக்கும் நிலைக்கு வந்துள்ளேன். வெளிவந்த பின் உங்களுக்குச் சொல்கிறேன். அனைத்து சூத்திரர்களும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல். மொழிபெயர்க்கும் போதே எனக்கு ...

சரி விடுங்கள். 

இந்த நூலை வாசித்த பிறகு எனக்கு ஒரு புதிய theory பிறந்தது. நான்கு சாதிகள் .. வர்ணாஸ்ரமம் ... சனாதனம் ... சாதிகளின் கிடுக்கிப் பிடி ... என்று பலவை பேசப்படுகின்றன.  நான்கு சாதிகள் பிரம்மாவின் உடலில் இருந்து தோன்றியவை என்று சொல்லப்படுகிறது. இது நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். பிராமணன், வைசியன், சத்திரியன், சூத்திரன் ... என்று நான்கு வர்ணமாக மனிதர்கள் படைக்கப்பட்டார்கள். புருஷ சூக்தம் (purusasukta) முதலில் சொல்லப்பட்ட நான்கு பிரிவினரும் தெய்வத்தால் படைக்கப்பட்டவர்கள்பிரஜாபதி என்ற பெருங்கடவுளிடமிருந்து உதித்தவர்கள் என்று கூறுகிறது

எனக்கு இதில் தோன்றிய புதிய விஷயம் என்னவெனில், பிரம்மாவிடமிருந்து இரண்டே இரண்டு சாதிகள் பிறந்தன; தலையிலிருந்து பிராமணன்; காலிலிருந்து சூத்திரன்.  இதில் பிராமணனாகப் பிறந்தவன் எப்போதும் ஒரு பிராமணனே. ஆனால் சூத்திரனாகப் பிறந்தவன் கடைசி வரை சூத்திரனாக இருக்க வேண்டும் என்ற “விதி” இல்லை. நாலு காசு பார்த்தால் அவன் வைசியனாகி விட முடியும். கையில் கத்தியை எடுத்தால் சத்திரியனாகி விட முடியும்.

இந்த வழியில் பல சூத்திரர்கள் கத்தியெடுத்து மன்னரானார்கள். ஆனால் இந்த ‘ex-சத்திரியர்கள் மன்னர்களாக முடிசூட்டக் கொள்ள அவர்கள் பிராமணர்களுக்கு  தட்சணை கொடுத்தால் அவர்கள் பல இட்டுக்கட்டப்பட்ட புராணக் கதைகள் மூலம் புனிதமாக்கப் படுவார்கள். புனிதமாக்கப்பட்ட பின் அவர்கள் மன்னவர்களாகவும், சத்திரியர்களாகவும் ஆகி விடுவார்கள்.. What a magic!

கடைசிப் பத்தியில் சொன்னவை சூத்திரன் புத்தகத்தில் மட்டுமல்ல; அதற்கு முன் நான் மொழிபெயர்ப்பு செய்து முடித்துள்ள ரொமிளா தாப்பரின் வரலாற்று நூலில் சான்றுகளோடு கொடுத்துள்ளார்.  பின்பு வரலாற்றின் நெடுகிலும் சூத்திரர்கள் சில புனைவுக்கதைகளோடு பெரும் வீர தீர சத்திரியர்களாக மாறிவிட்டனர் என்ற விவரங்களைத் தருகிறார். இதற்கான யாகத்தின் பெயர்: ஹிரண்யகர்பா’.  இவை எல்லாம் பிராமணர்கள் அருளிச் செய்த மாயம் தான்.

காஞ்சா அய்லய்யா இந்தப் புதிய சத்திரியர்களை – neo-shatriya –  என்று அழைக்கிறார். இன்றும் நமது சமூகங்களில் பல சூத்திரர்கள் புதிய சத்திரியர்களாக உருமாறி தங்களுக்கான புனைக்கதைகளின் ஜோதியில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

எவ்வளவு அழகான’, மிக விநோதமான சாதிய சமூகக் கட்டமைப்பு  வைத்திருக்கிறோம்.

என்னே நமது பெருமை!