Monday, March 30, 2020

1088. கூட்டுப் பிரார்த்தனை





*


 கொரோனாவிற்காகக் கடவுளிடம் ஜெபம் / தூவா / பிரார்த்தனை செய்ய எல்லா மதத்தினரும் ஒரே நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடத்த நாளும் நேரமும் குறித்துள்ளனர். அதுவும் அனைத்து நாடுகளையும் ஒன்றிணைத்து கத்தோலிக்க கிறித்துவ மதத் தலைவர் போப் பிரான்சிஸ் ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட நேரம் குறித்துக் கொடுத்திருக்கிறார்.

சில கேள்விகள்:
1.
மத்: 10:30; லூக் 12:7 -- உன் தலைமுடிகள் கூட எண்ணப்பட்டு விட்டன என்கிறது கிறித்துவர்களின் வேதங்கள்.
.
“நடப்பதெல்லாம் நாராயணன் செயல்” என்கிறார்கள் இந்துக்கள்.

யாராவது சரியாக குரானிலிருந்து ஒரு மேற்கோள் கொடுத்து உதவினால் தன்யவனாவேன்!

ஆக. அனைத்து சாமிகளும் அவர் படைப்பான நமது உலகத்தில் நடப்பதை Big Brother போல் பார்த்துக் கொண்டிருபார்க்(கள்). கொடுத்ததும் அவரென்றால் எடுப்பதும் அவராகவே எடுக்க வேண்டும், கொடுக்கும்போது  நம்மைக் கேட்டு விட்டுக் கொடுக்கவில்லை. ஆகவே எடுப்பதும் ‘அவன் செயல்’ அல்லவா? பின் எதற்காகக் கடவுளிடம் இறைஞ்ச வேண்டும்? பதில் தெரியவில்லை; சொல்லிக் கொடுத்தால் தெரிந்து கொள்கிறேன்.

2

நாம் யார்? வெறும் அற்ப மனிதர்கள்! நமக்கு காலமும் இடமும் கட்டாயம் வேண்டும். ஆனால் சாமிகளுக்கு…? ஒலிம்பிக் இத்தனை மணிக்கு ஜப்பானில் ஆரம்பிக்கிறது என்றால் எல்லோரும் at least டி.வி. முன்னால் சரியாக அந்த நேரத்தில் - நம் நாட்டு நேரத்தோடு கணக்கிட்டு - உட்கார்ந்து கொள்வோம். ஆனால் இப்படி ஒரு கட்டுப் பாட்டை மனிதர்கள் ஏன் நம் சாமிகளுக்குக் கொடுக்கிறார்கள். எல்லோரும் அவரவர் நாட்டு நேரத்திற்கேற்றது போல் ஜெபம் / தூவா / பிரார்த்தனை செய்து கொண்டால் எப்படியும் கடவுளுக்கு அது தெரியாமலா போய்விடும். 

3.
எதற்காக கூட்டுப் பிரார்த்தனை .. தனித்தனி பிரார்த்தனை … எப்படி செய்தாலும் சாமிக காதில் விழாதா? எல்லோரும் ஒரே மாதிரி சத்தம் போட்டுக் கேட்டால் தான் சாமி காதில் விழுமா? ஏதோ ஒரு அரசுக்கு எதிராக / ஆதரவாக கோஷம் போட்டால் எல்லோரும் ஒரே நேரத்தில் சத்தம் கொடுத்தால்தான் அரசின் காதில் விழும். (அல்லது எல்லோரும் மாலை 5 மணிக்கு சத்தம் கொடுங்கள் என்பார் அமைச்சர். நாமும் ஐந்து மணிக்கு சத்தம் கொடுத்துவிட்டு, ஐந்தே கால் மணிக்கு எல்லோருமாக ஊர் சுற்றக் கிழம்பி விடுவோம். நம்ம வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம் தானே!) ஆனால் சாமிக்கு முன்னால் இதெல்லாம் தேவையில்லை தானே?

வேண்டுவதே வேண்டாம் - டவுள் மேல் “உண்மையான” நம்பிக்கை இருந்தால்! 

நம்மள படச்சவன் .. தண்ணி ஊத்துவான் அப்டின்ற நம்பிக்கை இருந்தா நாம் எதுக்கு சாமிட்ட அது.. இதுன்னு .. எதுக்கு கேக்கணும்?

ஆச்சா …அதோட ஒரே நேரம் பாத்துக் கேக்கிறதுக்கு காலம் என்ற சக்கரத்தோடு நாம் கட்டுண்டு இருக்கோமே அது மாதிரி தானா சாமியும் காலத்தோடு கட்டுண்டு இருக்காரா என்ன? 

‘இங்கே நல்ல மீன் விலைக்குக் கிடைக்கும்” என்று போர்டு வைத்த வடிவேலுவை பார்த்திபன் கலாய்ச்சி போர்டையே எடுக்க வச்சிருவாரே அந்தக் கதை நினைவுக்கு வந்தது.

1. காலம் கடந்த கடவுளுக்கு ஒரே நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனை  தேவையா?

2. தனித்தனியா கேட்டா கடவுளுக்குப் புரியாதா?

3. முழு நம்பிக்கை கடவுள் மேல் இருந்தால், பிரார்த்தனை தேவையா?


பதில்கள் தெரியவில்லை; 
சொல்லிக் கொடுத்தால் 
தெரிந்து கொள்கிறேன்.






Wednesday, March 25, 2020

1087. தோரணம்




*


வடநாட்டு இறக்குமதி இங்கே நல்லா போணியாகுது. வடக்கில தான் fashion உருவாகும் போலும். நானும் கூட இந்தி ஆராதனா படம் பார்த்துதான் 70-ல் ஜிப்பா போட ஆரம்பித்தேன் - அதுவும் கலர் கலரா! (முதல் ஜிப்பா பின்க் கலர் தான்!) சாப்பாட்டில் கூட பாணிபூரி எல்லாத்துக்கும் பிடிச்சிப் போச்சு.(எனக்கில்லை.) ஏதோ ஒரு பாக்கை எடுத்து உதட்டுக்குக் கீழ போட்டுக்குறாங்களே … அதுவும் வட இந்திய சரக்கு தான்.  

இது மாதிரி  பொறுத்தமில்லாத fashions காத்தோடு நமக்கும் வந்திருதே. அட .. அவுக செவத்த தொலிக்காரவுக. முழுசா முதுகு தெரியறது மாதிரி ஜாக்கெட் எல்லா வயசுக்காரங்களும் ரொம்ப கீழ வரைக்கும் வர்ர மாதிரி போட்டுக்குறாங்க .. நம்ம ஆளுகளும் follow  பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. என்னத்த சொல்ல … ?

ஆனா ஒண்ணு பாருங்க .. அவங்க செவத்த தோலுக்கு மெகந்தி வச்சிக்கிட்டா எடுப்பா தெரியுது. நம்ம ஆளுக - என் பிள்ளைகளையும் சேர்த்து - மெகந்தி போட்டுக்கிட்டா போட்டதே தெரிய மாட்டேங்குது. நம்ம ஊர் பொண்ணுகளுக்கும் நம்ம தோலுக்கும் மருதோன்றி இலையை அரைச்சி வச்சிக்க்ட்டா தான் பளிச்சின்னு நல்லா இருக்கு. பிறகு ஏன் மெகந்தி?



இப்படிப் பல கேள்விகள் 








*

Sunday, March 15, 2020

1086. சிறுமலையில் ஒரு நாள்




*

37 ஆண்டுகளுக்கு முன் என் மாணவன் காமாட்சி. 12 மார்ச் மாதம் நண்பன் காமாட்சியின் மகள் திருமணம். திண்டுக்கல்லில். அழைத்திருந்தான். சென்றிருந்தேன். முந்திய நாள் காலையிலேயே மதுரையிலிருந்து சேவுகன் என்னைக் காரில் “கொத்திக் கொண்டு’ (pick up செய்துகொண்டு) திண்டுக்கல் சென்றோம். சென்னையிலிருந்து மூவர் - அழகுராமன், குமார், பாஸ்கர் - வந்திறங்கினர். காமாட்சி வரவேற்கக் காத்திருந்தான். அங்கிருந்து அருகிலுள்ள சிறுமலை விடுதி ஒன்றிற்கு எங்களை அனுப்பி வைத்தான்.
சின்ன மலைதான். ஆனால் 18 கொண்டைப் பின் வளைவுகள். காலை ஒன்பது மணிக்கு அங்கு அடைந்ததும் நாங்கள் தங்குமிடத்திலிருந்து பார்த்தால் எங்களுக்குக் கீழே வெண்மேகம் குடைபிடித்திருந்தது. பார்க்க அருமை. வெயில் வந்தும் நமக்குக் கீழே மேகம் பார்த்தது ஆச்சரியமாக இருந்தது.
மாலை திண்டுக்கல்லிற்கு நிச்சயதார்த்த விழாவிற்காகக் கீழிறங்கினோம். ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு உயரத்தில் வரும் போது ஒரு கொண்டைப் பின் வளைவில் திரும்பினோம். எங்களின் இடது பக்கம் ஒரு காட்டெருமை நின்று கொண்டிருந்தது. தன்னையறியாமல் சேவுகன் வண்டியின் வேகத்தைக் குறைக்க, இடது பக்கம் முன்னல் அமர்ந்திருந்த எனக்கும் அந்த அழகு பைசனுக்கும் இருந்த இடைவெளி ஐந்தாறு அடிகள் இருந்திருக்கும். என்ன ஒரு ராயல் லுக்! அத்தனை அழகு .. கம்பீரம் .. மொழு மொழுவென்று லட்சணமாக நின்று கொண்டிருந்தது. தீர்க்கமான கண்கள் . எல்லோரும் சேவுகனை வண்டியை விரைவு படுத்தச் சொன்னோம். வண்டிக்கு முன்னால் ஒரு பெண் எருமை கன்றுடன் அமைதியாக நின்று கொண்டிருந்தது. தாண்டியதும் தான் எங்களிடமிருந்து ஒரு பெருமூச்சு வந்தது.
வேறென்ன .. நல்ல திருமண விழா. சுவையான உணவு. அன்பான உபசரிப்பு. மீண்டும் மலையேறி காலையில் கல்யாணத்திற்கு வந்திருந்து உண்டு கழித்து வீட்டுக்கு விரைந்தோம் - ஆனால் எல்லாம் சிறுமலைக்கே உரிய மலைப்பழம் ஆளுக்குக் கொஞ்சம் வாங்கிக் கொண்டு தான். அதேபோல் திண்டுக்கல் போய் பிரியாணி சாப்பிடாமல் வர முடியுமா? முதல் நாள் மதிய உணவிற்கு வேணு பிரியாணி தேடி வந்தது.
சில படங்கள். அவைகளில் மோசமான படங்கள் - நான் எடுத்தவை. நன்றாக உள்ள படங்கள் எடுத்தது குமார் & அழகுராமன்.




























*