Showing posts with label கவுஜ மாதிரி... Show all posts
Showing posts with label கவுஜ மாதிரி... Show all posts

Wednesday, July 26, 2017

945. மாரியாத்தாவின் நற்கொடை





*



  மாரியாத்தாவின் நற்கொடை 











வீட்டு முற்றத்தில்
 கூடை கூடையாக
பொற்காசுகளை வாரி இறைத்த

 எங்கள் வீட்டு வேப்ப மரம், வாழி நீ!











 *

Saturday, October 01, 2005

77. கா.நூ.தா.நி. கவிதை...6

கண்கள் வழியே கனவுகள்
கனவுகள் தரும் நிழல்கள்
நிழல்களின் சட்டைகள்
நிஜங்களாய் உரிக்கப்படும்போது
நிஜங்கள் சுடுகின்றன.

Thursday, September 29, 2005

75. கா.நூ.தா.நி. கவிதை...5

சித்தாளாக இருந்த போது
துறைத் தலைவரிடம் எடுத்ததெற்கெல்லாம்
'வாங்கிக் கட்டிக் கொண்ட காலத்தில் எழுதியது...




முன்னால் வந்தால் முட்டி
பின்னால் போனால் உதைத்து
அருகில் வந்தால் குரைத்து
செக்குக்குள் போட்டு ஆட்டாதீரும், செட்டியாரே*!


* just rhyme-க்காக போட்ட வார்த்தை. உண்மைக்கும் அதற்கும் எந்தத் தொடர்புமில்லை

Thursday, September 22, 2005

73. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை..4

ட்ஸூ ஒரு பட்டாம்பூச்சி ஒன்றைக் கனவில் காண்கிறார். பின்பு, "நான் இப்போது ஒரு பட்டாம்பூச்சியாக இருந்து ஒரு மனிதனைக் கனவில் காண்கிறேனோ? இரண்டில் எது உண்மை?", என்று கேட்கிறார்.

எனக்கே என்னைப் பற்றிய ஆச்சரியம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் மேலே சொன்னது ஒரு பெரிய zen தத்துவ ஞானி. ஆனால் நான் எனது 8-12 வயதுகளில் இதைப்போன்று யோசித்திருக்கிறேனே; அது எப்படி? காலையில 5 மணிக்கே எழுப்பி கோயிலுக்கு விரட்டி விடுவார்கள். 'பூசை' பாத்துட்டு, அதன் பிறகு அங்கே பக்கத்திலேயே சாமியார்கள் நடத்தும் பால் பண்ணையில் வீட்டுக்குப் பால் வாங்கிட்டு வரணும். அப்படி காலங் கார்த்தால தனியா அந்த அரை இருட்டில ஒண்ணு எதையாவது எத்திக்கிட்டே நடந்து போகணும்; இல்லாட்டி எதையாவது நினச்சுகிட்டு - சில பேரு அதை 'கொசுவத்திச் சுருளு'ம்பாங்க; நம்ம parlance-ல 'குதிர ஓட்டுறது'ன்னு பேரு; ஏன்னா, அந்தக் கால கதையில எல்லாம் 'அவன் மனம் என்னும் குதிரையில் ஏறி...' அப்டின்னுதான எழுதுவாங்க - நடந்து போகணும். இது Frost கவிதையில வர்ர மாதிரி..

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep. - before I sleep அப்டிங்கிறதுக்குப் பதிலா, before i go home அப்டின்னு வச்சுக்க வேண்டியதுதான். அப்போ, நம்ம 'குதிர' அதுபாட்டுக்கு வாயு வேகத்தில, மனோ வேகத்தில பாஞ்சு பாஞ்சு போகும்.

அப்போ, அடிக்கடி வர்ர ஞாபகம் என்னன்னா, ' இப்போ இருக்கிற வாழ்க்கை, நடக்கிற நடப்புகள் எல்லாமே ஒரு கனவுதான்; முழிச்சி எழுந்திரிச்சா அம்மாவை நிஜமாவே பார்க்க முடியும்; அதுவரை கொஞ்சம் adjust பண்ணித்தான் ஆகணும்; அதுதான் உண்மையான வாழ்க்கையா இருக்கும். ' அப்டின்னு அடிக்கடி நினைப்பேன்.


All that we see or seem
Is but a dream within a dream. .....................அப்டீங்கிற Alan Poe-வின் கவிதையும் நினைவுக்கு வருகிறது.


zen master நினச்சதுக்கும், நான் நினச்சதுக்கும் என்ன பெரிய வேறுபாடு சொல்லுங்க.

ஆனா, பாருங்க இப்ப என்னய. எப்படியிருந்த நான் . . . இப்படி ஆயிட்டேன்...

இதுக்கும், கீழே வர்ர கவிதைக்கும் என்ன தொடர்புன்னு கேக்காதீங்க; சரியா...?



கரும்பெடுத்து ஆலையிட்டேன்.
சாறும் வந்தது.
சக்கையும் மீந்தது.

கனியெடுத்துப் பிழிந்திட்டேன்.
சாறும் வந்தது.
சக்கையும் மீந்தது.

இப்பிறவியெடுத்து
வாழ்ந்து களித்தேன்;
வாழ்ந்து கழித்தேன்.

என்னதான் மிஞ்சியது ?


no...no...கை தட்றதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்ல...!

Wednesday, September 21, 2005

72. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை...3

அடி ராக்கம்மா!

இல்லாதவைகள்
இருந்தவைகளாக ஆனபோது
இருந்தவைகள் இனித்தன.

இருந்தவைகள்
இல்லாதனவாக ஆனபோது
இருந்தவைகள் எரிக்கின்றன.






பி.கு: நிச்சயமாக இம்முறை பதவுரை, பொழிப்புரை தருவதாயில்லை.

Monday, September 19, 2005

71. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை...2

அடி ராக்கம்மா!

என்ன ஆரம்பம் இது என்று யோசிக்கிறீர்களா? 'கண்ணம்மா' என்ற பெயர் பிடிக்கும். ஆனால் அந்த 'முண்டாசுக்கவிஞன்' எனக்கு முன்பே பிறந்த ஒரே காரணத்தால் அதை லவட்டிக்கொண்டு போய்விட்டான். என்ன செய்யலாமென யோசிச்சுக்கொண்டிருந்த போது ' பட்டிக்காடா பட்டணமா?'ன்னு ஒரு படம் வந்தது - என்னடி ராக்கம்மா என்றொரு பாட்டோடு. இதில் இன்னொரு விதயம் சொல்லணுமே! சிவாஜி கணேசனுக்கு ஒரு பட்டிக்காடா பட்டணமா? படம்; அவர் மகன் பிரபுவுக்கோ 'சின்னத்தம்பி'ன்னு ஒண்ணு. இந்த இரண்டு படமும் ஏன் இப்படி பிச்சுக்கிட்டு ஓடிச்சின்னு இன்னைக்கு வரை யாருக்கும் பதில் தெரியாது.

எந்த சிறப்பம்சமும் இல்லாமல் - வழக்கமா சிவாஜிக்கின்னாவது இரண்டு மூன்று சீன்கள் இருக்கும் நடிக்கிறதுக்காகவே' அப்படியும் ஏதும் இல்லாமல் - காரணம் தெரியாமலே ஓடிய படம். அதைப்போலவே இந்த 'சின்னத்தம்பி'யும். கதவிடுக்கில மாட்டின எலி கத்துமே அதுமாதிரி பாடுமே ஒரு பொண்ணு, அதாங்க, ஸ்வர்ணலதா- ஆஹா, கருத்தம்மா பாட்டு கேட்டதில்லையான்னு சண்டைக்கு வராதீங்க, ஏதோ அது மாதிரி ஒண்ணு இரண்டு தேரும்; இல்லைன்னு சொல்லலை - அந்தப் பொண்ணு பாடின பாட்டு 'போவோமா?..' அதுவும், 'தூளியிலே..' பாட்டும் தேறும். வேற என்ன இருந்திச்சு அந்தப் படத்தில. வேணும்னா இன்னொண்ணு சொல்லலாம்; குஷ்பூ கடைசி சீன்ல சாமான் செட்டு எல்லாம் போட்டு உடைச்சு ரகளை பண்ணுமே, அப்போ காமிக்கிற அந்த வீட்டுத் தரை ரொம்ப நல்லா இருக்கும் பள பளன்னு. அதென்னமோ ஒரு ராசிங்க இந்த பி. வாசுவுக்கு. அவரு குப்பை நிறைய நல்லா ஓடிருக்கு; நான் ஒண்ணும் 'சந்திரமுகி' பற்றிச் சொல்லலை. பாருங்களேன்; சந்தான பாரதிகூட சேர்ந்து 'பன்னீர்ப் புஷ்பங்கள்'ன்னு ஒரு படம் -நல்ல matured movie ' வந்திச்சு. இரண்டு பேரும் பிரிஞ்சாங்க. அவரு பாவம் அவுட்டு; இவருக்கு ஒரே வெற்றிக் குப்பைதான்.

சரி..சரி... இப்ப என்ன சொல்லவந்தேன். ஆங்...என்னடி ராக்கம்மா பத்தியில்ல. ஆமாங்க...அப்பல்லாம் நான் "கவிதை" எழுதினப்போ (அதையெல்லாம் 'வாக்கியங்களை உடைச்சுப் போட்டுட்டா கவிதையான்னு' ஒருத்தங்க பின்னூட்டத்தில் பின்னிர்ராங்க..என்ன பண்றது. இப்படிதான் பெரிய கவிஞர்களை அவங்க life time-ல் பலர் புரிஞ்சிக்கிறதே இல்லை..போனாப் போகட்டும், விட்டிருவோம் அவங்களை - பொறாமையில் பேசுறாங்கன்னு!) பட். பட். படத்திற்குப் பிறகு ராக்கம்மாதன் நம்ம standard கதாநாயகி..இல்ல..இல்ல..கவிதாநாயகி. ஆச்சா, புரிஞ்சு போச்சுங்களா. இனிமே கவிதைக்கு வருவோமா?



அடியே ராக்கம்மா!

நம் கண்களுக்கு
மட்டுமே தெரியும்
வண்ணங்களில்
நான் வரைந்த சித்திரங்கள்
இன்று
உன் கண்களுக்கே
புரியாமல் போனதென்ன ?

Saturday, September 17, 2005

70. கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கும் கவிதை...

எல்லாரும் கவிதை எழுதுறீங்க; நாங்களும் அந்தக் காலத்தில் எழுதியிருக்க மாட்டோமா; பழைய குப்பையைக் கிளறும்போது அது தற்செயலாகக் கையில் சிக்காதா; தொட்டால் ஒடியறது மாதிரி இருந்ததில் உள்ள அந்தக் கவிதைக்கு வயசு 25-30 வயசுன்னா, அப்போ அந்தக் கவிதை கால் நூற்றாண்டையும் தாண்டி நிற்கிற கவிதைதானே ?

அரங்கேற்றத்திற்கு நம்ம ஏரியா (அதாங்க, மீனாட்சி கோவில் மண்டபம்) பக்கத்தில இருக்கிற பொற்றாமரைக் குளம் பக்கம் போகலாமாவென நினச்சேன்...சரி, அங்க தண்ணில்லாம் அவ்வளவு நல்லா இல்ல...ஒரே பாசி. அதனால, நம்ம தமிழ்மணத்திற்குப் போய்விடுவோமின்னு வந்திட்டேன். ஏதோ..பாத்து...



ஊரெல்லாம் போலித்தனம்;
மனித மனமெல்லாம் போலித்தனம்.

ஞானிக்கு
இது கண்டு
மனமெல்லாம் வேதனை.
வேதனையில் வதங்கி
உள்ளம் உருகி
ஊசிமேல் ஒற்றைக்கால் தவமிருந்து
கடவுளைக் கண்முன் கொணர்ந்த ஞானி
மனமுருகிக் கேட்டார் கடவுளிடம்:
மனித வாழ்விலிருந்து போலித்தனங்கள்
மறைவதெப்போ?

வந்த இறைவன்
பதில் சொல்லாது
சிரித்து நழுவினான்.

காடுவிட்டு நாடு ஏகிய ஞானி
தண்டோரா போட்டுச் சொன்னான்:
கடவுளைக் கண்டேன்;
கேட்டதெல்லாம் பெற்றேன்;
சித்தியும் அடைந்தேன்;
முக்திக்கு அச்சாரமும் பெற்றேன், என்று.

ஊரெல்லாம் போலித்தனம்;
மனித மனமெல்லாம் போலித்தனம்.


யார் கண்டது; அடுத்த பதிவுகளில் ரொமாண்டிக் கவிதைகள் கூட வரலாம்!