Monday, April 30, 2007

214. என் வாசிப்பு - 2

முந்திய தொடர்புடைய பதிவு: 209. என் வாசிப்பு –1


திருட்டுத்தனமா வாசிக்க ஆரம்பிச்ச காலத்துக்கு முந்தி எப்பவாவது கல்கண்டு புத்தகம் வாசிச்சதுண்டு. வீட்டுக்கு வழக்கமா வர்ர அண்ணன் ஒருவர்தான் எனக்கு கல்கண்டு புத்தகத்தை அறிமுகப் படுத்தியவர். நான் தமிழ்வாணனின் விசிறியாகிப் போனதைப் பார்த்து அவர் வரும்போது பழைய கல்கண்டுகளை எடுத்திட்டு வருவார். அவர் வர்ரது அனேகமா ஞாயிற்றுக் கிழமையாகத்தான் இருக்கும். அப்போ அந்த நாள்தான் குமுதம், கல்கண்டு இரண்டுமே ஒன்றாக வரும். நிறைய பேர் அந்த இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே வாங்குவார்கள்; ஏனென்று தெரியாது. ஒரே பதிப்பாளர்களோ என்னவோ. நம்ம அண்ணனும் அப்படிதான். அவர்கூட சேர்ந்து கல்கண்டு தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். பைக்கில் போய்க் கொண்டிருந்தவன் லாரியில் இருந்த தகடு வெட்டியதால் தலை தனியாகப் போனாலும் அவன் முண்டம் மட்டும் பல மைல்தூரத்துக்கு பைக்கை ஓட்டிக் கொண்டே போனது என்று ஏதாவது ஒரு ஊர் பெயரைப் போட்டால் வாசிக்க எவ்வளவு நல்லா இருக்கும் ! கல்கண்டு முழுசுமே இதுபோல் டிட்பிட்ஸ்கள் தான். அதுக்குப் பிறகு கேள்வி-பதில். அதுவும் நல்லா பிடிக்கும்.

கல்கண்டு வாசிச்சா சங்கர்லால் பிடிக்காமல் போகுமா? பள்ளி நூலகத்தில் அப்பாவுக்குத் தெரியாமல் புத்தகம் எடுக்க ஆரம்பித்த காலத்தில் முதலில் ஐக்கியமானது தமிழ்வாணனின் புத்தகங்களில்தான். அதுவும் சங்கர்லால் ரொம்ப பிடிச்சிப் போனார். சங்கர்லால் பத்து கேள்விகள் கேட்பார்; ஒவ்வொன்றும் ஒரு கொக்கி மாதிரி அப்டின்னு கதை ஆரம்பிக்குமே, அதிலிருந்து அவர் லூசா டை கட்டிக் கிட்டு ஸ்டைலா இருக்கிறது ரொம்ப பிடிச்சிப் போச்சு. அதனால் மாது, கத்திரிக்காய், மாணிக்கம், வஹாப் என்று எல்லாரும் ரொம்ப நெருக்கமா ஆயிட்டாங்க. அது எவ்வளவு தூரம்னா, சங்கர்லால் காதலிச்சி இந்திராவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்குப் பிறகு இந்திராவிடமிருந்து டீ வாங்கிக் குடிக்கும்போதெல்லாம் எனக்கு அந்த அம்மா மேல கோபமா வரும். முந்தியெல்லாம் மாதுவிடமிருந்து அடிக்கடி டீ வாங்கிக் குடிப்பாரே அது மாதிரி இப்போ இல்லியேன்னு மாதுவுக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்னு நான் நினச்சி மாதுவுக்காக வருத்தப் படுவேன்.

இந்த சமயத்தில தொடர்கதை வாசிக்கிற பழக்கமும் தொத்திக்கிரிச்சி. பள்ளிக்குப் பக்கத்தில் திருமலை நாயக்கர் மஹாலுக்கு எதிரில் ஒரு சின்ன செளராஷ்ட்ர வாசகசாலை; நிறைய பத்திரிகைகள் இருக்கும். கல்கி, குமுதம், விகடன், அமுதசுரபி, சுதேசமித்ரன் – இப்படி நிறைய. எந்தப் பத்திரிகை என்றென்று வரும்னு தெரியும்; அன்னைக்கே போய் அந்தந்த தொடர்கதைகளை வாசித்தாகணும். பெரியவங்க யாராவது அந்தப் புத்தகத்தை வாசிச்சிக்கிட்டு இருந்தா, பக்கத்தில போய் உட்கார்ந்து கிட்டு அவரையே, ஏதோ ஒண்ணு எதுக்காகவோ அண்ணாந்து பாத்துக்கிட்டு உக்காந்து இருக்குமே , அதுமாதிரி பாத்துக்கிட்டு இருப்பேன். பாவப்பட்டு என்னப்பான்னு அனேகமா கேட்டிருவாங்க. ஒரே ஒரு கதைன்னு சொல்லிட்டு வாங்கி படிச்சிருவேன்.

ஒரு தடவை நண்பன் ஒருவன் எப்படிடா இத்தனை புத்தகத்தில் இவ்வளவு தொடர்கதை வாசிக்கிறாய் என்று கேட்டு எத்தனைத் தொடர்கதைகள் அந்த சமயத்தில் நான் வாசித்து வருகிறேன் என்று ஒரு கணக்குப் போட்டு, அது பத்து பதினைந்து என்று வந்தது. அன்றிலிருந்து இப்போதுவரை உள்ள ஒரு விஷயம் என்னவென்றால், எத்தனை தொடர்கதை வாசித்தாலும் திடீரென்று ஏதாவது ஒரு கதையைச் சொல்லி, போன வாரத்தில் எங்கு கதை முடிந்தது என்று கேட்டால் நினைவுக்கு வராது; ஆனால் அந்தப் பத்திரிகையைத் திறந்து அந்தக் கதையின் முதல் வரியை வாசிப்பதற்கு முன்பே போனவாரத்தில் விட்ட இடம் சரியாக நினைவுக்கு வந்துவிடும். அது என்ன மாயமோ தெரியாது …

பள்ளி முடிக்கும்போதே சங்கர்லாலை விட்டு வளர்ந்து அடுத்து மு.வரதராசனாரின் ரசிகனானேன். கரித்துண்டு அவரது நாவல்களில் முதலில் படித்து, தொடர்ந்து அப்போதைக்கு அவரது எல்லா நாவல்களும் படித்ததாக நினைவு. அப்போதிருந்தே ஒரு ஆசிரியர் பிடித்தது என்றால் ஏறக்குறைய அவரது படைப்புகள் எல்லாவற்றையும் முடிந்தவரை வாசித்துவிடுவது என்ற பழக்கம் வந்தது.

அடுத்து அகிலன். அவரது ஒரு நாவல் - தலைப்பு நினைவில் இருக்கிறது; ஆனால் வெளியே கொண்டுவர முடியவில்லை; அது திரைப்படமாகவும் சிவாஜி நடித்து பின்னால் வந்தது என்று நினைக்கிறேன். கதா நாயகனின் பெயர் தணிகாசலமோ, என்னவோ. அந்தக் கதை வாசித்த போதுதான் முதன் முதலில் கதை வாசித்து கண்ணீர் விட்டது என்பது மட்டும் நன்கு நினைவில் உள்ளது.

அடுத்து நம்ம ஆளு கல்கி. ரொம்பவே மனுஷனைக் கெடுத்துட்டார். வெளியே சொல்ல கொஞ்சம் வெட்கமாதான் இருக்கு. அந்த அளவு “அந்த காலத்து” மேல் ஒரு காதலை ஏற்படுத்திட்டார். எவ்வளவு தூரம்னா, முதல் முறையா பொன்னியின் செல்வன் படித்து முடித்த பிறகு, எங்க பள்ளிக்கருகில் சாலையில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். அடியிலிருந்த மண் மேலாக குவிக்கப் பட்டிருக்குமல்லவா அதில் ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். பக்கத்தில் வந்த நண்பன் என்னடா என்று கேட்டதற்கு இது நம்ம பழைய மனுசங்க மிதித்த மண்ணாக இருக்கும்ல என்றேன். உனக்கு கிறுக்குதான் பிடிச்சிரிச்சி என்றான். உண்மைதான். அப்படி ஆகிப் போச்சு. வந்தியத் தேவனாக வாழ்ந்த நினைவுண்டு. பெரிய ஆளா ஆனதும் சைக்கிள், கார் வாங்கினாலும் ஒரு குதிரையும் வாங்கி அதில் வந்தியத்தேவன் மாதிரி போக வேண்டுமென்று ஆசைப்பட்டதை இப்போது வெளியே சொன்னால் எல்லோரும் சிரிப்பீர்களோ? போங்க .. போங்க .. சிரிச்சா சிரிச்சிட்டுப் போங்க!

அதென்னவோ இப்போ நினச்சாலும் வந்தியத்தேவன் அந்த முதல் அத்தியாயத்தில் குதிரையில் அந்தக் காவேரிக் கரையோரம் போறது கண்ணுக்கு முன்னால வருது. ஐந்து பாகத்தில் மூன்றாம் பாகம்தான் பெரியது என்று நினைக்கிறேன். அதில் நடுபாகத்தில்தான் வந்தியத் தேவனை சிறையில் பெரிய பிராட்டி குந்தவி போய் பார்ப்பார்கள். அடே! முதலில் ரசித்த காதல் ஜோடி வ.தேவன் – குந்தவி ஜோடிதான்! பெரிய பழுவேட்டரையர் இருக்காரே அவரைப் பார்த்தாலே ஒரு பயம் கலந்த மரியாதை.

இதுவரை தமிழில் ஒன்றும் ஆங்கிலத்தில் ஒன்றும் என இரு நாவல்களைத்தான் மூன்று முறை வாசித்துள்ளேன். தமிழில் பொன்னியின் செல்வன். அதை இரண்டாம் முறை வாசித்துக் கொண்டிருக்கும்போது, மேலே சொன்ன வந்தியத்தேவனைச் சிறையில் குந்தவி பார்த்து பேசிவிட்டுப் போகும் இடம் வரை படித்து விட்டு, அப்படியே மெய்மறந்து அண்ணாந்து படுத்துக் கிடக்கும்போதுதான் எனது S.S.L.C. தேர்வு முடிவுகள் செய்தித்தாளில் வெளிவந்து, அதில் தேர்வு பெற்றோர் பட்டியலில் என் எண் வராததால் நண்பர்கள் விழுந்தடித்து வீட்டிலிருந்த என்னை வெளியே இழுத்துக் கொண்டு போனது நினைவில் நிற்கும் இன்னொரு விஷயம்.

Thursday, April 26, 2007

213. பதிவர் சந்திப்பு - கொசுறுகள்

எத்தனை எத்தனை கோணங்கள். நடந்த நிகழ்வு ஒன்றுதான். ஆனாலும் எத்தனைக் கோணங்கள். என் பங்குக்கு என் கோணத்தை நான் சொல்ல வந்தேன். அவை கொஞ்சமே என்றதால் கொசுறுகள் என்றேன்.

இதற்கு முந்திய பதிவர் சந்திப்பில் ஒரு நல்ல உதயம் - தொழில் நுட்பம் சார்ந்த உதவிக்கென்றே ஒரு குழு அமைந்(த்)தது. இம்முறை நடந்து சந்திப்பில், அது இன்னும் மேலும் பதிவர் சார்ந்த அமைப்பாக இருக்க வேண்டுமென்ற உணர்வு தொடர்புள்ள பதிவர்களிடம் இருந்தமையும், அதனை மேலும் முன்னெடுத்து செல்ல வேண்டுமென்ற எண்ணம் வலுப்பட்டமையும் நல்ல ஒரு காரியம்.

அடுத்து, வளர்ந்து வரும் பதிவர்களின் எண்ணிக்கையும், பதிவுகளின் பொருட்செறிவும் பற்றாது என்பதால் மேலும் நம் தமிழ்ச் சமூகத்திலிருந்து பதிவர்களின் எண்ணிக்கையை கூட்ட வேண்டுமென்ற எண்ணத்தில் இலவசமாக மென்பொருளைப் பரவலாக மக்களுக்குக் கொடுக்க முயல வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தபோது, பதிவர் கெளதம் அதற்குரித்தான முதல் கட்ட பணியாக, பதிவுகளைப் பற்றியும், எளிதாக ஒரு பதிவை ஆரம்பிக்கும் நடைமுறை பற்றியும் மக்கள் தொலைக்காட்சி மூலம் செய்தியைப் பரப்புவதற்கு உதவுவதாகக் கூறியது மகிழ்ச்சியான காரியம். இப்பணி சிறப்பாக நடந்தால் மக்களிடையே பதிவுலகம் பற்றிய ஒரு தெளிவு பிறக்கும்; பதிவுலகின் வீச்சு நீளும்.

மூன்றாவதாக, மக்களிடையே பரவலாகத் தெரியப்பட்டுள்ள ஊடகங்களின் வெளிச்சம் நம் பதிவுலகத்தின் மேல் விழுவது இன்னும் இந்த உலகம் விரிவடைய ஏதுவாக இருக்கும். அந்த 'வெளிச்சத்தை' நம் ப்திவுலகம் மேல் விழவைப்பதற்காக உழைத்து, நடைமுறைப் படுத்திய சென்னைப் பதிவர்களுக்குப் பொதுவாகவும், சிறப்பாக யெஸ்.பா. விற்கும் என் நன்றிகள்.

Monday, April 16, 2007

212. அந்த அழகிய நிமிடங்கள்...

எந்த வேலைய யாரு செய்யணும்னு ஒரு விவஸ்தை வேணும். சும்மா ஒருத்தர் கேட்டதற்காக செய்றது அப்டிங்கிறது ஒரு பெரிய விஷப் பரிட்சைதான். இருந்தாலும் தலைவிதின்னு ஒண்ணு இருக்கே; விடுதா நம்மள அது....

இப்போ பாருங்க நம்ம கொத்ஸ் இந்த அழகு பத்திய ஒரு பதிவை ஆரம்பிச்சாரு ... அழகான ஆளுகளுக்கெல்லாம்தான் இப்படி அழகான ஐடியா வரும். அப்போ அவரு அழகாத்தான் இருக்கணும். அதுக்குப் பிறகு நம்ம ராம் என்னைய மாட்டி உட்டுருக்காரு ... அவர பத்தி நான் சொல்லணுமா ..இளஞ்சிங்கம்.. மதுரைக்கார பாசக்கார பயர் ..(பயர் அப்டின்னா என்னன்னு கேக்குறீங்களா? "பய" அப்டின்றத கொஞ்சம் மரியாதையா சொல்லணும்னா "பயர்" அப்டின்னுதான சொல்லணும்?! இல்லீங்களா?) இந்த மாதிரி ஆளுக 'அழகு' பத்தி பேசுனா அதில அர்த்தம் இருக்கு; காடு வா .. வா .. அப்டின்ற கட்டத்தில இருக்கிற என்னையக் கூப்பிட்டு, அழகு பத்தி சொல்லுடா அப்டின்னா என்னத்த சொல்றது. நமக்கும் அழகுக்கும் காத தூரம்; என்னத்தன்னு சொல்றது .. சொல்லுங்க .. ஒண்ணும் தெரியலை போங்க ... அழகுக்கும் நமக்கும் உள்ள தொலைவு ரொம்ப அப்டிங்கிறதினால. அழகான விஷயங்களைப் பத்தி சொல்றதை விடவும் என் வாழ்வின் சில அழகான தருணங்கள் பத்தி சொல்லலாமுன்னு நினைக்கிறேன் ...

1. ... 74, செப்டம்பர் 12 மதியம் 2.20க்கு ஒரு சம்பவங்க ... மூத்தவளை மொதல்ல பார்த்தது .. அதுவரை புதுசா பொறந்த குழந்தைய அவ்வளவு close-up-ல் பார்த்ததுகூட கிடையாது; அப்படியே அதுவரை பார்த்ததும் கண்ணு சரியா திறக்காம, மூஞ்செல்லாம் ஒரு மாதிரியா சப்பையா அரைகுறை மூஞ்சுகளாகவே இருந்துதான் பார்த்து இருக்கேன். ஆனா இப்ப முழுமையான, ரோஸ்கலர்ல கன்னம், திறந்த கண்கள், நல்ல நீளமா மாமியார் கையில் இருந்த அந்தக் குழந்தைய பார்த்த அந்த நிமிடம் இன்னும் பச்சுன்னு மனசுல இருக்கு; எப்பவும் இருக்கும். ரெண்டு மணிக்குக் குழந்தையோட அழுகைச் சத்தம் கேட்டு, இரண்டு பத்துக்கு பெண் குழந்தைன்னு சேதி கேட்டு, இரண்டு இருபதுக்கு நேரில பார்த்த அந்த நிமிடம் வாழ்க்கையில் உறைந்து நின்று விட்ட அழகு நிமிடம்.

2... மூத்த பிள்ளையா பிறக்கிறதில ஒரு லாபம் இருக்கு. பெத்தவங்களுக்கும், மத்தவங்களுக்கும் அது ஒரு புது அனுபவம்தான். பிள்ளையா பிறந்த நேரமே மனசுல பசுமையா இருக்கிறப்போ அந்த பிள்ளைக்கு ஒரு பிள்ளை பிறக்கிறதும், அதை ஒவ்வொரு வினாடியும் உணர்ந்து பார்க்கிறதும் ... ம்..ம்ம்ம்... அதுக்கெல்லாம் ரொம்பவே கொடுத்து வைத்திருக்கணுமாம். எனக்கு அந்தக் கொடுப்பினை இருந்திச்சி .. 18 மணி நேர டென்ஷன் முடிந்து, முதல் பேரப் பிள்ளைய பார்த்த அந்த முதல் நிமிடங்களும் மனசெல்லாம் நிறைஞ்ச, உறைஞ்ச நிமிடங்கள். நினைக்கும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு விம்மலைக் கொண்டு வரும் நிமிடங்கள்.

இந்த இரு அழகிய நிமிடங்களைத் தவிர நினைத்துப் பார்த்தால் வேறு எந்த நிமிடங்களோ, விஷயங்களோ ரொம்ப பெரிதாகத் தோன்றவில்லை. ஆனாலும், 6 அழகிய விஷயங்கள் வேண்டுமாமே .. கொஞ்சம் முயற்சித்துப் பார்க்க வேண்டும் ...

3.... எப்போதுமே குளிர்னா ரொம்ப பிடிக்கும்; igloo-வில இருக்கிறதுமாதிரி கற்பனை பண்ணினாக் கூட நல்லாவே இருப்பதுண்டு. கொடைக்கானல் எத்தனையோ முறை சென்றிருந்தாலும் ஒரு தடவை டிசம்பர் மாதம் சென்றபோது, நடு இரவு தாண்டி குளிராடையைப் போட்டுக் கொண்டு, நண்பர்கள் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில், தனியாக இரவில் நிலவைப் பார்த்துக் கொண்டு நடுக் காடு ஒன்றில், சில்வண்டு - Cicada - வின் இறைச்சல் மிகச் சரியாக ஒவ்வொரு 18 வினாடிக்கு ஒரு முறை (மனசுக்குள் 36 எண்ணினால் சரியாக 18 வினாடி என்ற கணக்கு - photography darkroom-ல் பழக்கப் படுத்தியது ) ஆரம்பித்து, 6 வினாடிகள் தொடர்ந்து ... மறுபடி 18 வினாடிகள் காத்திருந்து அடுத்த அந்தச் சில்வண்டுகளின் ஒலியைக் கேட்டு ... தொடர்ந்த அந்த தனிமையான, வித்தியாசமான, கொஞ்சம் பயம் கலந்த அந்தக் குளிர் இரவின் அழகு - அது மற்றொரு உறைந்து மனதில் நின்று விட்ட அழகான தருணம்.

4.... நம்ம அமெரிக்கா போனதை எப்படிதான் நம்ம பதிவர் மக்களுக்குச் சொல்ல முடியும்; இந்த மாதிரி நேரத்தை உட்டுட்டா எப்ப முடியும்? அதனால் அங்க பார்த்த அழகு நிமிடம் பற்றிச் சொல்லி விட வேண்டாமா?

ஏற்கெனவே சொன்னது மாதிரி குளிர்னா ரொம்ப பிடிக்கும்.பனிமழை, பனியா உறைஞ்சி இருக்கிறதைப் பார்க்க அனுபவிக்க ஆசை. ஆனா மதுரக்காரனுக்கு இது நடக்குற வேலையா? திடீர்னு அமெரிக்கப் பயணம் அப்டின்னதும் நினைவுக்கு முதலில் வந்தது பனி உறைந்த சாலைகளும், பனி மூடிய மரங்களும்தான். ஆனால் பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் தரை இறங்கியவனுக்கு பனிக்காலமெல்லாம் முடிஞ்சி போச்சு அப்டின்னது ஒரே சோகமா போச்சு... இரண்டாவது நாளோ, மூன்றாவது நாளோ ஒரு ஒரு ரூபாய் நோட்டு (இன்னும் அது இருக்கிறதா என்ன?) அகலத்தில் இருந்த ஒரு உறை பனியைப் பார்த்த போது, ம்ம்.. இவ்வளவுதானா என்ற சோகம் மட்டுமே மிஞ்சி நின்றது. ஆனால் அதன்பின் ஒரு நாள் ... காலை பத்து மணியளவில் கல்லூரிக்குள் நுழைந்தவன் மதியம் மூன்று மணிக்கே வெளியே வந்தேன். காலையில் நுழையும்போது மித வெயில்; பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. மூன்று மணிக்கு வெளியே வந்தபோது எங்கும் ஐஸ்; எதிலும் ஐஸ் ... தரையெங்கும் வெள்ளை வெளேரென்று மூடியிருந்தது. ரொம்பவே வித்தியாசமான உலகமாக இருந்தது. அப்பாடா... ஐஸ் மூடிய உலகத்தைப் பார்த்து விட்டோம் என்ற நினைவில், கல்லூரிக் கட்டிட வாசலிலேயே நிறைய நேரம் நின்று அந்தப் புதிய உலகத்தை, உறைந்த பனியைப் பார்த்துக் கொண்டு உறைந்து நின்ற அந்த நிமிடங்கள்...

இதுபோல் இன்னும் சில பல நிமிடங்கள் உண்டுதான். ஆனால் பிரச்சனை என்னவென்றால், அதில நிறைய வெளியே சொல்ல முடியாத, சொல்லக் கூடாத நிமிடங்கள் அப்டின்னு வச்சுக்குங்களேன். அதனால் சாய்ஸ்ல விட்டதா வச்சுக்கிட்டு, ஆறுக்கு நாலு மட்டும் சொல்லிட்டு முடிச்சிக்கிறேன்.

ஆனால் அடுத்து வர்ர, நான் அழைக்கிற மூன்று பேர்களும் அந்த ஆறு அழகுகளை அடுக்கி வைக்கும்படி கேட்டுக்கிட்டு ...
அழைக்கட்டுமா அந்த மூன்று பேரை ...

1. T.B.R. ஜோசப் ( நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி நம்ம ஜோட்டு ஆளைக் கூப்பிட வேண்டாமா, என்ன?)

2. மதுமிதா - கவிஞர்கள் சொல்ல, பேச வேண்டிய அழகான விஷயத்துக்கு ஒரு கவித்துவ பதிவரையாவது கூப்பிட வேண்டாமா..?

3. நல்லடியார் - பேசு பொருள் பலவும் இருக்கிறதல்லவா .. அதனால் இவரை அப்படி இதைபற்றிப் பேசுமாறு அழைக்கிறேன்.

வாருங்கள் ... உங்கள் பார்வையில், உங்களுக்குப் பிடித்த அழகான 6 விஷயங்களைச் சொல்லுங்களேன்.

Sunday, April 15, 2007

211. தருமியுடன் ஒரு உரையாடல் தொடங்குகிறது... நண்பன்

--------------------------------------------------------------------
நண்பன் என்னோடு ஓர் உரையாடலாக அவரது ப்ளாக்கில் இட்ட பதிவின் நகல் இது. அசல் அங்கே இருக்கிறது. பின்னூட்டம் இட விளைவோர் அங்கேயே இடுவதுதான் முறையாக இருக்கும் என்பதால் இப்பதிவில் இப்போதைக்கு பின்னூட்ட வசதியை நிறுத்தி வைத்துள்ளேன்.
--------------------------------------------------------------------


இனி நண்பன் ....



எங்காவது ஒரு புள்ளியில் இருந்து தொடங்க வேண்டியது தானே?

தருமிக்கு பதில் சொல்வதாக நான் வாக்களித்திருந்தது குறித்து தான் இந்த சிந்தனகைள். வெறுமனே அவர் கேட்ட ஆயிஷாவின் வயது எத்தனை என்பதற்கான பதிலாக மட்டும் இல்லாமல், அவர் பொதுவில் வைத்த கேள்விகளுக்கும் சேர்த்து பதில் சொல்லலாமே என்று தான் யோசனை. ஆனால், அவருக்குப் பதில் சொல்லுமுன், அவர் எத்தகைய மனிதர் என்பதற்காக அவர் எழுதிய பல பதிவுகளையும் வாசிக்க வேண்டியதாயிற்று.

Is he a proclaimed atheist ?

அப்படித்தானோ?

மதவிமர்சனங்கள் நிறையச் செய்தார் என்பதால், இறை நம்பிக்கை அற்றவர் என்று எடுத்துக் கொள்ளலாமா? நான் அவரை ஒரு atheist என்று சொன்ன பொழுது அதை அவர் மறுக்கவில்லை. அதனால், அவரை ஒரு இறை மறுப்பாளர் என்று ஏற்றுக் கொண்டே உரையாடலாம்.

எதையும் விமர்சிக்கும் பொழுது, உள்ளிருந்து கொண்டே விமர்சனங்களை வைப்பது சற்று சிரமமானது - காரணம், தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது மட்டுமல்லை, துரோகி என பட்டமும் கொடுக்கப்படலாம். மௌனமாக இருந்தால் கூட அத்தகைய சாத்தியங்கள் உண்டு என புரிந்து கொண்டேன். சரி, இனி பேசியே பட்டம் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்ததும் தான், மீண்டும் எழுதவே ஒரு ஆர்வம் வந்தது.

ஆனால், பாருங்கள், இறை மறுப்பாளன் என்று சொல்லிக் கொண்டால், இந்தப் பிரச்னைகள் எதுவுமில்லை அல்லவா? மதங்களை எந்த மன உறுத்தலுமின்றி, எளிதாக விமர்சிக்கலாம். மதங்களுக்குரிய சில விநோத குணங்களை, நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு பலவீனமான கொள்கையையும் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாம் சரி தான்?

ஆனால், ஒவ்வொரு மனிதனும் மதத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறானோ, இல்லையோ, சில நற்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது இல்லையா? அல்லது இறை மறுப்பாளர்களுக்கு, நற்பண்பு கொண்டவர்களாக இருப்பதினின்றும் விலக்கம் கோருகிறீர்களா? இல்லையென்று நினைக்கிறேன். அடிப்படை பண்புகளும், மனித மதிப்பீடுகளும், மதம் சார்ந்தவை அல்ல, அவை அடிப்படை மனித பண்பின் கூறுகள் என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டதாக வைத்துக் கொள்ளலாம்.

சரி, இப்பொழுது சொல்லுங்கள் - நீங்கள் ஒரு புதிய மதத்தை நிருவ முயற்சிக்கவில்லையா? இறைவன் இருக்கிறான் என்று ஒரு சாரார் சொல்லும் பொழுது, நீங்கள் இறைவன் இல்லை என்று கூறி, அதையே ஒரு வழிமுறையாக, வாழ்க்கைப்பயணத்திற்கான வழியாக முன் வைக்கும் பொழுது, எந்த மதங்களின் பயணப் பாதைகள் தவறானது என்று விமர்சிக்கிறீர்களோ, அந்த மதங்களுக்கு மாற்றாக நீங்கள் வைக்கும் நாத்திகமும், ஒரு நடைமுறை மதமாக உருமாறி விடும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது, இல்லையா?.

இறைவன் இருக்கிறான் என்ற பாதையில் - மதங்களின் பாதையில் - கிடக்கும் கழிவுகளை மட்டும் காட்டுகிறீர்கள். மனிதன் புழங்கும் எந்த ஒரு இடத்திலும், கழிவுகளும், தானாகவே வந்து சேர்ந்துவிடும் என்பது நடைமுறை. அவற்றைத் தவிர்த்து விட்டு, இலக்கை நோக்கிப் பாருங்கள் - நீங்கள், நான், மற்ற மனிதர்கள் - உயிர்கள் என அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டிய ஒருவன் இருப்பான் - இறைவனாக. ஆனால், அவனே இல்லை என்று கூறிவிட்ட பின்பு, உங்கள் பாதை எங்கே போகிறது, யாருக்காக பயணம், என்பதையெல்லாம் இறை மறுப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு புதிதாக நீங்கள் செல்லவிருக்கும் பாதையில், பரிசுத்தங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் என்று சொல்ல முயற்சிக்க வேண்டாம். முதலில் அங்கே கிடக்கும் நாற்றமடிக்கும் கழிவு - சுயநலம். தான் தன் வாழ்க்கை என்று தன்னைச் சுற்றி மட்டுமே பார்வைகளை நிறுத்திக் கொள்வது தான் முதலில் நிகழும். சமூக மதிப்பீடுகள் அனைத்தும் இரண்டாம் இடம் தான். சரி, விவாதம் இதை நோக்கிப் போக வேண்டாம். இதைக் குறிப்பிடக் காரணம் - மதங்கள் என்பது, முறைப்படியாக வடிவமைக்கப்பட்ட பயணப்பாதை. அதை மறுக்கும் பொழுது, அதை மறுப்பவர்கள், புதிதாக ஒரு பாதையை வடிவமைத்துத் தருகிறார்கள் - இலக்கற்ற, சுயதேவைகளே வழி நடத்திச் செல்லும் ஒரு பாதை. அதுவும் ஒரு பாதை என்ற வகையில், நிறுவனப்படுத்தப்பட்டு, ஒரு மதமாக மாறி விடுகிறதே தவிர, வேறெதுவும் சாதித்து விடுவதில்லை.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் -

கம்யூனிஸ்ட்டுகள்.

தமிழக கழகங்கள் (செல்லும் பாதை.)

ஆனால், நீங்கள் முன் வைக்கும் பாதை இவை எல்லாவற்றையும் விட உன்னதமாயிருக்கும். மேற்கொண்டு சொல்லுங்கள் - உங்கள் பாதை எது, எவ்வாறு இருக்கும் என்று!!!

இந்த இறைவன் உண்டா, இல்லையா, என்ற கேள்விகள் எப்பொழுதுமே, நியாயமாக சிந்திக்கக் கூடிய மனித மனதில் எழாமல் இருக்காது. அந்த விதத்தில், உங்கள் மனதில் எழும், எழுந்த சிந்தனைகள் என் மனதிலும் எழுந்திருந்திருக்கின்றன. இதைப் பற்றிய தர்க்கங்கள் என்னுள்ளும் நிகழ்ந்திருக்கின்றன. அதை நான் ஒரு கவிதையாகக் கூட எழுதி இருந்தேன் -2003ஆம் வருடத்தில், திசைகள் இதழில் வெளிவந்திருக்கிறது. பின்னர் மற்ற தளங்களிலும் அதை எழுதி இருக்கிறேன் - இறுதியாக, வலைப்பூவிலும் எழுதி வைத்தேன் - ஜூன் 10, 2005ல். நீங்கள் மதங்கள் குறித்து எழுப்பிய கேள்விகள் அனைத்தும், தனி மனிதன், தான் அதை அனுஷ்டிக்கும் முறையில் எழக்கூடிய தவறுகளையும், தர்க்க ரீதியாக, சில குறைபாடுகளும் தான்

ஆனால், அதற்கு மாற்றாக நீங்கள் வைக்கும் பாதை, மிக மிக ஆபத்தானது, இல்லையா? இறைவனை மறந்து விட்டு, மனிதனாகிய என்னைத் துதி, என்று கோரிக்கை வைக்கும் ஆபத்துகள் நிறைந்த பாதையில் அல்லவா, எங்களைப் பயணம் செய்ய அழைக்கிறீர்கள், இல்லையா?

கொஞ்சம் விளக்குங்கள்.

அதற்குள், நான் 4 வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதை இதோ:


கடவுளைக் காட்டு......


கடவுளைக் காட்டு
என்று ஒரு போர் -
நண்பர்களுக்குள்...


நம்பிக்கையின்
எல்லையில் நிற்கிறார்
கடவுள்.


நம்பிக்கைகள்
உண்டாவது
முயற்சியால்!


முயற்சிக்க வேண்டுமே
ஓர் மனதின்
சிந்தனை -
அங்கே
கடவுளின் வாசம்....


சிந்தனை எழுவது
என் தலையில் -
மூளையின்
மெல்லிய திசுக்களில்....


திசுக்கள்
துடித்தால் தான்
சிந்தனை.


ஓர் துடிப்பை
தூண்டியவர்
கடவுள்...

துடிப்பது
உண்டானது
பிறப்பின்
நியதி.


பிறப்பிற்கு
நியதி
வைத்தவன் யார்?
அவர் தானே -
கடவுள்?


கடவுளைக் காட்டு
என்ற போரின் விவாதம்
சூடாக தொடர்ந்தது
நண்பர்களுக்குள்.


பக்கத்து பள்ளியில்
இறைவணக்கப் பிரார்த்தனை -
'என் மதம் எனக்கு....
உன் மதம் உனக்கு...'


இது உரையாடலின் துவக்கம் தான்... நீளும்.

பின்னூட்டங்கள் தெளிவாக எழுதிய பொருளைப் பற்றி மட்டும் இருக்கட்டும். தனி மனிதர்களைத் தாக்கும் ஊடகமாக என் வலைத் தளம் அமையாது என்பதை மீண்டும் ஒரு முறை நண்பர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

பண்புடன் எழுதுங்கள்.

அன்புடன்
நண்பன்.

----------------------------------------------------------------------


நண்பன் என்னோடு ஓர் உரையாடலாக அவரது ப்ளாக்கில் இட்ட பதிவின் நகல் இது. அசல் அங்கே இருக்கிறது. பின்னூட்டம் இட விளைவோர் அங்கேயே இடுவதுதான் முறையாக இருக்கும் என்பதால் இப்பதிவில் இப்போதைக்கு பின்னூட்டங்களை அனுமதிப்பதாக இல்லை. ஆயினும் அங்கு இடப்படும் பின்னூட்டங்களை இங்கே நானே தொடர்ந்து இட்டு வருவேன் - copy & paste மூலம்.
26.06.2007 - இன்று பின்னூட்டப் பெட்டியை திறந்தாகி விட்டது.

----------------------------------------------------------------------

Tuesday, April 10, 2007

210. (இஸ்லாம்) சுல்தானுக்கு மட்டும் ... அல்ல

சுல்தானுக்கு மட்டும் ... அல்ல

சுல்தான் அவர்களின் "பகுத்தறிவு தீர்ப்பளிக்கட்டும்" என்ற பதிவொன்றின் பின்னூட்டப் பகுதியில் நான் கேட்ட சில கேள்விகளுக்காக மூன்று தனிப் பதிவுகள் மூலம் மிகவும் பொறுமையாகவும், விளக்கமாகவும், தன்மையாகவும் பதிலளித்துள்ளார். காலம் மிகவும் தாமதித்து அவரது பதில்களின் மேல் எழும் என் கேள்விகளை இப்பதிவில் இட்டுள்ளேன். அவர் ஏற்கென்வே பதிலாக எழுதிய மூன்று பதிவுகளின் தொடுப்பு இவை:

1.தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-1)
2.தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் (பகுதி-2)
3.தருமி ஐயாவின் வினாக்களுக்கு என் விளக்கங்கள் கடைசி பகுதி

முதல் கேள்வி:
//வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை. இது உங்கள் (சுல்தான்) கருத்து.
எனது கேள்வி:
ஹ்ல்ரத் அலீ (ரலி): "உலகினில் ஏற்படுகின்ற குழப்பங்களுக்குத் தீர்வு காண அல்லாஹ்வின் வேதந்தான் சிறந்த வழி. ...(தன் அறிவைக்கொண்டு) பெருமையடிக்கிறவன் இதனை (அமல் படுத்தாமல்) விட்டு விட்டால், அல்லாஹ் அவனைத் துண்டு துண்டாக ஆக்கிவிடுவான்."

உங்களது வார்த்தைகளுக்கும், இந்த மேற்கோளுக்கும் உள்ள வித்தியாசம் ஏன்?//

சுல்தானின் பதில்: - //முஸ்லீம்கள் தங்களிடையே ஏற்படும் எல்லா பிணக்குகளுக்கும் பூசல்களுக்கும் தீர்வை, அடிப்படையான குர்ஆனைக் கொண்டே பெறச் சொல்கின்றனர். அவ்வாறு தீர்ப்பளிக்காவிட்டால் மக்கள் சிதறுண்டு விடுவார்கள். அதனால் அவ்வாறு தீர்ப்பளிக்காதவர்கள் இறப்பிற்கு பின்னுள்ள மறுமை வாழ்வில் இறைவனால் தண்டிக்கப்படுவார்கள் (நொறுக்கப்படுவார்கள்) என்று எச்சரிக்கிறார்கள்.//
ஏற்கெனவே சொன்னது போலவே இது இறைவன் - மனிதர்கள் நடுவில் உள்ள வன்முறைதானே? அவர்கள் அல்லாவை நம்புபவர்களோ, இல்லை, மற்றையோரோ யாராயிருப்பினும், அது இந்த பிறவிக்குரியதாயினும் இல்லை மறுமை வாழ்விலாயினும் இந்த வசனத்தில் உள்ள வன்முறையைப் பற்றிதான் நான் பேசினேன். அதுவும் நீங்கள் சொல்லிய "வன்முறைக்கும் துவேசத்துக்கும் இங்கே இடமேயில்லை" என்ற கூற்றுக்கு முழுமையாக எதிராக இருப்பது பற்றித்தான் என் கேள்வி..

இரண்டாம் கேள்வி:
////"அது அல்லாத (வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்." இஸ்லாத்தில் எவ்வித நிர்பந்தமுமில்லை என்பதும் இதன் அடிப்படைகளில் ஒன்று.//

இதற்குரிய தங்கள் விளக்கம் எனக்குப் பொருத்தமானதாய் தோன்றவில்லை. "பல கிரந்தங்களில் நேர்வழியைத் தேடும் ஒருவனால் வழி தவறத்தான் முடியுமே ஒழிய..."..சரி...மனிதன் தேடும்போது நீங்கள் சொல்வது போலவே வழிதவறுவான என்று சொன்னால் பிரிந்துகொள்ள முடியும்; ஆனால் கடவுளே "...(வேறு கிரந்தத்)தில் நேர்வழியைத் தேடுபவரை வழிதவறச் செய்து விடுவான்" என்பது (god himself would MISLEAD some one who tries to find his own way to god) சரியாகவா இருக்கிறது.
இதற்குப் பதிலாகத்தான் "my Q is based on the VIOLENCE in the words. whether it is aimed at fidels or infidels it is a very violent statement - a divine violence towards human beings.
a god need and should not bother whether a man reaches him through path A or B ... man should reach him, that is all what it should be. " என்று பின்னூட்டத்தில் கேட்டிருந்தேன்.


மூன்றாம் கேள்வி:

3. //"மனிதனுக்கு மேலாக சர்வ வல்லமை பொருந்திய ஒரு சக்தி உண்டென்று பகுத்தறிவு சொல்கிறது"
இந்தக் கூற்று எனக்குத் தவறாகத்தெரிகிறதே. பொதுவாக பகுத்தறிவு சொல்கின்றது என்று எதை ஒன்றையும் குறிப்பிடுவது தவறாக ஆகிவிடும் என்று நினைக்கிறேன். ஆளாளுக்கு மாறுபடக்கூடிய விஷயமாக பார்க்கிறேன்.//

மிக அழகாக பல உதாரணங்கள் கொடுத்துள்ளீர்கள். அண்ட சராசரத்தையும், நம் உடல் உறுப்புகளின் தொழில் நேர்த்தி பற்றியும் எழுதியுள்ளீர்கள். இத்தனை உதாரணங்கள் கூடத் தேவையில்லை. ஒரு சின்ன பூவை எடுத்து அதன் அழகை, மணத்தை, மென்மையை, அமைப்பின் நேர்த்தியைப் பார்த்தாலே போதும்; நீங்கள் சொன்ன பிரமிப்பு ஏற்பட்டுவிடும்.

இத்தகைய பிரமிப்புகளைப் பார்க்கும் கடவுள் நம்பிக்கையளர் உடனே, ஆஹா! என்னே கடவுளின் "திறமை" என்று சொல்வது இயல்பே! ஆனால் என்னைப் போன்ற கடவுள் மறுப்பாளனுக்கு நிறைய வேறு கேள்விகள் பதில்கள். பதில்கள் இல்லாவிட்டாலும் கேள்விகள் எங்களுக்கு நிறையவே உண்டு. நான் அடிக்கடி சொல்வது - இத்தகையக் பிரமிப்புகளால் எழும் கேள்விகளுக்கு அடுத்து நீங்களும் உங்களைப் போன்ற நம்பிக்கையாளர்களும் ஒரு முற்றுப் புள்ளியோ, அல்லது ஒரு ஆச்சரியக் குறியோ இடுவீர்கள்; என்னைப் போன்றோர் ஒரு கேள்விக் குறி இடுகிறோம்.

சான்றாக, "பத்து நிறங்களில் பல கோலி குண்டுகளை எடுத்து, ஒவ்வொரு நிறத்துக்கும் ஒரு எண்ணாக 1 முதல் 10 வரை இலக்கமிட்டு, ஒரு பையினுள் போட்டு, கண்ணை மூடிக்கொண்டு, ஒழுங்கான வரிசையில் ஒன்றன் பின் ஒன்றாக 1 முதல் 10 வரை எடுப்பதற்கு உண்டான வாய்ப்பு, நிகழ்தகவு (Probability) படி, சுமார் இரண்டரை கோடி தடவைகளில் ஒன்று என்று சொல்கிறார்கள்" என்று கூறியுள்ளீர்கள்.

இது பரிணாமக் கொள்கைக்கு எதிராக, D.N.A.- வில் ஏற்படும் சிறு சிறு வேதியல் மாற்றங்களே நிறமிகளின் மாற்றங்களுக்குக்( mutations) காரணிகளாக இருந்து, பரிணாம வளர்ச்சி நடந்தது என்பதற்கு எதிராகச் சொல்லும் விவாதம் என்பது உங்களுக்குத் தெரிந்தேயிருக்கும். இல்லையா? நீங்கள் சொல்வதுபோல நடக்க முடியாது அல்லது இரண்டரை கோடி தடவைகளில் நடக்கக் கூடும் என்று சொல்லும் அந்த விஷயம், சில ஆயிரம் தடவைகளிலேயே எப்படி நடக்க முடியும்; நடந்திருக்க வேண்டும் என்று அறிவியல் பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும் சிம்ஸன் என்பவர் மிக அழகாக Simpson alphabet analogy என்ற விளக்கத்தைக் கொடுத்துள்ளார். அதை இங்கு நான் விளக்கிக் கொண்டிருப்பதை விடவும் எந்த நல்ல பரிணாமப் புத்தகத்திலும் கொடுக்கப் பட்டிருக்கக்கூடிய இதை வாசித்துத் தெரிந்து கொள்வது நலமாயிருக்கும்.

பிரமிப்புகளோடு நில்லாது அதை மேலும் மேலும் கேள்விக்குறியதாக்குவதே அறிவியலின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம்.


நாலாவது கேள்வி:
4) "//"அவன் படைத்த மனிதர்களாகிய நமக்குள்ளேயே பிறப்பாலோ, செல்வத்தாலோ அல்லது தொழிலாலோ உயர்வும் தாழ்வும் கற்பிக்காதவனாக இறைவன் வேண்டும்."
இக்கூற்றும் சரியாக எனக்குத் தோன்றவில்லை. பார்க்குமிடமெல்லாம் வேற்றுமைகள் நிறைந்த உலகமாகத்தானே இருக்கிறது. படைப்பினில் எல்லோரும் ஒரே மாதிரியாகவா இருக்கிறோம்? இல்லையே!//"

கடவுள் நம்மையெல்லாம் பேதமின்றி எந்த வித்தியாசமில்லாமல்தான் பார்ப்பார் என்று நீங்கள் கூறுவதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் நான் கேட்டது படைத்தவன் பல வேற்றுமைகளோடுதானே நம்மைப் படைத்திருக்கிறான் என்பதே.


ஐந்தாம் கேள்வி:
5)//"பூமியும் வானமும் அவனது ஒரே வார்த்தைக்குள் ஆகும்"
பின் எதற்கு 6 நாட்கள் படைப்பிற்கு - அதுவும் ஒவ்வொன்றாய்? பின் கடவுள் ரெஸ்ட் எடுத்ததாகவும் உள்ளதே!//
இதற்கு உங்கள் பதில்: ஏன் அவ்வாறு செய்தான் என்பது அவனுக்கே வெளிச்சம்...

இதைத்தான் என் பதிவில் 'எல்லாம் அவன் திருவிளையாடல்.." என்பதுபோன்ற ஒரு பதிலைத்தவிர வேறு ஏதாவது இருந்தால் கூறுங்கள் என்று கூறியுள்ளேன். பலப்பல அறிவியல் உண்மைகளை எல்லாம் கடவுள் அன்றே குரானிலோ, பைபிளிலோ, வேதங்களிலோ தந்துள்ளான் என்று அடிக்கடி கூறும் நம்பிக்கையாளர்கள் இது போன்ற கேள்விகளுக்குச் சொல்லும் இப்பதில் எனக்கு ஒப்பவில்லை. இன்றைக்குக் கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை எங்கள் வேதத்தில் / பைபிளில் / குரானில் ஏற்கெனவே அன்றே சொல்லப்பட்டு விட்டன என்று ஒரு பக்கம் சொல்லுகிறீர்கள். அப்படியெல்லாம் சொல்லப்பட்டிருந்தால் இன்னும் முழுமையாகவே "எல்லாமே" சொல்லப் பட்டிருக்கலாமே என்றுதான் எனக்குக் கேள்வி எழுகிறது. இன்றைக்கு இன்னும் விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருக்கும் alternative energy, semiconductor, cloning, stem cell therapy, gene therapy - என்பது போன்ற விஷயங்களை பேசாமல் முழுவதுமாகக் கொடுத்திருக்க வேண்டியதுதானே என்று தான் தோன்றுகிறது. லேசு பாசாக ஏதாவது ஒரு விஷயம் இன்றைய விஞ்ஞானத்துக்குத் தொடர்புள்ளதாக வேதப் புத்தகங்களில் இருந்துவிட்டால் அறைகூவும் எல்லா மத நம்பிக்கையாளர்களுமே, இதுபோல் uneasy questions என்று வந்துவிட்டால் இறைவனின் 'திருவிளையாடல்' இது என்று கூறுவது என்னைப் பொறுத்தவரை ஒரு escapism தான்.

மேற்கண்ட கருத்து தொடர்பான என் விவாதங்களை எனது 59-ம் பதிவில் கிறித்துவத்திற்கு எதிராக நான் எழுப்பியுள்ள கேள்விகளில் ஐந்தாவது கேள்வியாக இதை வைத்து உட்கேள்விகளாகவும் சிலவற்றை வைத்துள்ளேன். அதில் கூறியிருப்பது: "இவை எல்லாமே கடவுளின் "திருவிளையாடல்" என்று மட்டும் கூறிவிடக்கூடாது." அந்தக் கேள்விகளை அங்கே வந்து கொஞ்சம் வாசித்துக் கொள்ளுங்களேன்.


ஆறாம் கேள்வி:
6)(அ)//"தாடி வைக்க வேண்டுமென்று இறை கட்டளை உள்ளதால்..."
இதையும் கூடவா கட்டளையாகக் கடவுள் கொடுப்பார்// ஒரு உம்மைத்தொகையைச் சேர்த்துள்ளேன் அழுத்தத்திற்காக ..
இதற்கு நீங்கள் கொடுக்கும் காரணம் எனக்குக் கொஞ்சமும் பொருத்தமாகத் தெரியவில்லை. அப்படி ஆணுக்கும் பெண்ணுக்கும் வேற்றுமை காண்பிக்கக் கடவுள் நினைத்திருந்தால் அதை அவரே செய்திருக்க வேண்டியதுதானே - நீங்கள் சொல்லும் விலங்கினங்களில் இருப்பது போலவே !

அதோடு சிறுநீர் கழிப்பதைப் பற்றிக்கூட நபிகள் மூலமாகக் கடவுள் நிபந்தனைகள் விதித்துள்ளார் என்பதை நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். உட்கார்ந்துதான் சிறு நீர் கழிக்க வேண்டும் என்பதுவும், ஒரே ஒரு முறை நபிகள் நின்று கொண்டே சிறுநீர் கழித்து ஒரு exceptional clause ஏற்படுத்தியதையும் கேள்விப்பட்டதுண்டு. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: அன்றைய அராபியர் அணிந்திருந்த லூசான ஆடை, அங்கே திறந்த வெளியில் அடிக்கக் கூடிய வலுவான காற்று - இவையெல்லாமே உட்கார்ந்து சிறுநீர் கழிப்பதை புத்திசாலித்தனமான ஒரு விஷயமாக ஆக்கியிருக்கும். ஆனால் இன்று இருக்கும் public water closet-களில் நின்றுகொண்டே சிறுநீர் கழிக்க அமைக்கப் பட்டிருக்கும் கழிப்பறைகளில், நாம் அணியும் இறுக்கமான உள்ளாடையும், அதற்கு மேலணியும் ஜீன்ஸும் நம்மை உட்கார அனுமதிக்குமா என்று யோசியுங்கள். இப்படி அந்தக் காலத்துக்குப் பொருந்திய அப்போதைய நடைமுறைகளைக் காலாகாலத்துக்கும் பொருத்தமானதாகவும் எங்கள் புத்தகங்களில் சொல்லப்பட்டு விட்டதால் அதைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதும் முறையா என்ற கேள்வி எனக்கு. அதோடு ஏதோ ஒரு காலகட்டத்துக்கும், ஒரு நாட்டின் அப்போதைய பழக்க வழக்கங்களுக்கும் சரியாக இருந்த விஷயங்களை பொதுவாக எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஆக்குவதாலுமே no religion is universal என்ற விவாதத்தை என் பதிவு 68; பத்தி: 9-ல் வைத்துள்ளேன்.

இதை ஒட்டியே //...அன்று நபி சொன்னது எல்லாருக்கும் எல்லா காலத்துக்கும் பொதுவான விஷயங்களாக இல்லை, இருக்கவும் முடியாது என்பது தெளிவாகிறதல்லவா? // - என்று என் பதிவு 67:பத்திகள் 16 & 17 -ல் சொன்னேன். அதையும் கொஞ்சம் பார்த்து விடுங்கள். அதோடு இக்காரணம் பற்றியே அன்றைக்குப் பொருந்தி வந்திருக்கக் கூடிய பர்தா, தாடி, சிறுநீர் கழிக்கும் முறை, பலதாரச் சட்டம், ஹஜ் யாத்திரை, அடிமை முறை, அடிமைகளை நடத்தவேண்டிய முறை என்று நீண்ட பட்டியல் தரக்கூடும். இவைகள் இன்றும் என்றும் எப்போதைக்கும், எல்லோருக்கும் பொருந்திய ஒன்று என்பதில் எனக்கு ஒப்பில்லை.

ஏழாம் கேள்வி (அ):
7அ). "புஷ்ஷின் கருத்திற்கும், .. இஸ்லாமியக் கருத்திற்கும் .. இரண்டுமே கருத்துக்கள் என்ற வரையில் ஒன்றுதானே? ஆனால் ஒன்றை தவறென்று கூறி, இன்னொன்றை எப்படி புனித வார்த்தையாகக் கொள்ளுவது?//

சுல்தான், நல்ல விவாதம் கொடுத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். ஆனாலும் நீங்கள் கவனிக்கத் தவறிய ஒன்று: நீங்கள் கொடுத்த நான்கு விவாதங்களில் ஆசிரியர், திருடன் இரண்டை மட்டும் கொள்வோமே. ஆசிரியர் சொல்வதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது - எல்லோருமே - முழு மனித வர்க்கமே - நீங்கள் சொல்லியுள்ளபடியே ஆசிரியரது வார்த்தையை ஒத்துக் கொள்வோம்; அதே போல திருடனனின் கருத்தை எல்லோரும் ஒதுக்கி விடுவோம் தவறென்று. no second opinions on these two. no cotroversies in them. ஆனால் இஸ்லாமியக் கருத்து அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்குச் சரியாகப் படுவது போல் எல்லோருக்குமா இருக்கும்? இல்லையே! "இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் கூறுகிறது." - இது எப்படி மற்றைய மதத்தவருக்கு சரியான கருத்தாக இருக்கும்? இது உங்கள் நம்பிக்கை; ஒரு கிறித்துவனுக்கு " நானே வழியும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னைத் தவிர உனக்கு வேறு கடவுள் இல்லை" என்பது சரியாக இருக்காதா? என் வழிக்கு வா என்பதுகூட பரவாயில்லை; வராவிட்டால் ... (நொறுக்க) தண்டிக்கப் படுவாய் என்பது..? இந்த இரு வேறுபாடுகளால்தான் புஷ்ஷின் கூற்றையும், குரானின் வார்த்தைகளையும் ஒத்து நோக்குகிறேன்; இரண்டுமே தவறென்கிறேன்.


ஏழாம் கேள்வி (ஆ):

//மனிதனை விடவும் பலகோடி மடங்கு ரோஷமானவன். "அல்லாஹ்//

- Man created gods in his own image என்றும், If triangles have gods, they will be triangles என்றும் வாசித்த இரு மேற்கோள்கள்தான் நினைவுக்கு வருகின்றன. மனிதனுக்குக் கடவுளை இன்னொரு (பெரீய்ய்ய) மனிதனாகவேதான் பார்க்க முடியும் என்பதே இந்த மேற்கோள்களின் பொருள். நீங்கள் சொல்லும் 'ரோஷக்காரன்" என்பது அதைத்தான் நினைவு படுத்துகிறது!

// "அல்லாஹ் எதை வேண்டுமானாலும் தான் நாடினால் மன்னிப்பான் ஆனால் படைத்தவனாகிய தன்னை விடுத்து, வேறெதையும் இறைவனாக எடுத்துக் கொள்வதை மட்டும் மன்னிப்பதேயில்லை" என்று இஸ்லாம் கூறுகிறது.// அப்படிக் கூறும் "ஒருவன்" இறைவனாக இருக்க மாட்டான்; இருக்க முடியாது. அப்படித்தான் இருப்பானென்றால் அவன் கடவுளாக இருக்க முடியாது என்பது என் கருத்து. (இப்படி சொல்வது ஒவ்வொரு நம்பிக்கையாளனுக்கும் வருத்தத்தைத் தரும் என்பது தெரிந்தும் என் கருத்தைக் கூற வேண்டியதுள்ளது...) அதோடு இந்தக் கூற்றில் உள்ள வன்மத்துக்கு, வன்முறைக்கு 'ரோஷம்' என்ற excuse ஒரு நொண்டிச் சாக்கு என்பதாகவே தோன்றுகிறது.


மிகவும் பொறுமையாக, விளக்கமாக அதைவிடவும் எதிர்க் கேள்விகளால் கோபம் கொள்ளாமல் தன்மையாகப் பதில் சொன்ன சுல்தான் அவர்களுக்கு மீண்டும் என் நன்றியும் பாராட்டுக்களும். எதிர்க் கருத்துக்கள் வைப்பதாலேயே கேள்வி கேட்பவரை விரோதியாகப் பார்க்காததற்கு நன்றி.

உங்களுக்கு விருப்பமானால் இன்னும் தொடர்வோம்.

Tuesday, April 03, 2007

205.(Repeat) மகிழ்ச்சி - வேடிக்கை - வேதனை

இது ஒரு மீள் பதிவு.

முதலில் போட்ட போது யார் கண்ணிலும் படாமலே போய்விட்ட காரணத்தை நினைத்து ஏற்பட்ட ஆச்சரியத்தாலும், இப்போது தலைமை நீதிமன்றத்துத் தடை பற்றிய சேதிக்கு ஒட்டி, மறுபடியும் "திறமை"களைப் பற்றிய பேச்சு வழக்கம்போல் எழுந்துள்ளதாலும் இந்த மீள் பதிவு

13th March இந்து தினசரியில் கண்ணில் பட்ட இரண்டு செய்திகள்:


1. AIIM-A –வில் இந்த ஆண்டில் படிப்பை முடிக்கும் 224 மாணவர்களுக்கு நடந்த campus interviews பற்றியது:

• சிலர் (11/224)சம்பளத்திற்கு வேலை பார்க்க விருப்பமில்லாமல், சுய தொழில் செய்ய முடிவு செய்தது;
• 72% பேர் வெளிநாட்டு வேலை வேண்டாமென்று உள்நாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்தது;
• வெளிநாட்டு வேலைக்குக் கொடுக்கப்பட்ட வருட சம்பளம் 1 கோடி – 1.35 கோடி வரை இருந்தது;
• உள்நாட்டில் வருடத்திற்கு சம்பளம் 60 லட்சத்திலிருந்து ஒரு கோடிவரை இருந்தது;

மேலும் இக்கல்லூரியின் டைரக்டர் பாகுல் தோலாக்கியா சொன்ன மற்றொரு செய்தி:

• “சாதி அடிப்படையில் நடந்த இடப்பங்கீட்டினால் எவ்வித “திறமைக் குறைவும்” நடக்கவில்லை.

• இந்த ஆண்டில் படிப்பை முடித்தவர்களில் S.C., S.T. மாணவர்களான 42 பேரும் மற்ற மாணவர்களைப் போலவே நன்றாகப் படித்து முடித்ததோடல்லாமல், மற்ற மாணவர்களுக்குச் சமமாக வேலையும் பெற்று விட்டார்கள்”.

மேலே சொன்ன எல்லாமே மகிழ்ச்சி தரும் செய்திகள்தான்.




2. வித்யா சுப்ரமணியம் என்ற செய்தியாளர் தந்துள்ள வேதனை தரும் செய்தி:
ஹரியானாவில் உள்ள பிபிபுர் என்ற கிராமத்தில் தலித்துகளுக்கு எதிராக நடக்கும் அடக்கு முறை பற்றியது. வழக்கமாக நம் ஊர்களில் பிற்படுத்தப் பட்டோர்களே தலித்துகளை அடக்கு முறையில் வாட்டுவது மாதிரி இல்லாமல், இங்கு உயர்த்திக் கொண்ட சாதியினரே தலித்துகளின் அடிப்படை உரிமைகளில் தலையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக நீதி கிடைக்க வாதிடச் சென்ற இந்தப் பத்திரிகையாளருக்குக் கிடைத்த பதில்கள் வேடிக்கையானதும் வேதனையானதுமாயுள்ளன.

வேடிக்கை: பஞ்சாயத்தில் முடிவு செய்து தலித்துகள் கட்டிய கோவிலை இடித்ததை எதிர்த்து முறையிடச் சென்ற இப்பத்திரிகையாளரிடம் மாலிக் என்ற அதிகாரி ‘தலித்துகள் அவர்கள் இஷ்டப்படி எப்படி கோவில் கட்டலாம்? ‘என்றதோடல்லாமல் ‘தலித்துகளால் அந்த ஊரில் உள்ள ப்ராமணர்களுக்குத்தான் ஆபத்து’ என்றும் கூறியுள்ளார்.

வேதனை: இப்படிச் சொன்ன மாலிக் யார் தெரியுமா? தாழ்த்தப்பட்டோர் நலன் காக்க வேண்டிய தேசிய குழுமத்தின் – NATIONAL COMMISSION FOR SCHEDULED CASTES –ன் உதவி கமிஷனர் !


பாலுக்குக் காவல் நல்ல ஒரு பூனை …


AND MILES TO GO ….