Friday, April 28, 2017

905. சினிமாவுக்குப் போன சின்னப் பையன்

*

'திண்ணையில உட்காரச் சொன்னா கெடக்கி இரண்டு ஆடு கேட்பானாம்' அப்டின்னு ஒரு பழமொழி உண்டு அல்லவா? நம்ம கேசும் அதே தான். இதுவரைக்கு வாழ்க்கையில் கிடைக்காத ஒரு வசதியான அறை. ஏற்கெனவே சொன்னது போல் இது வரை பார்க்காத மேசை, நாற்காலி வசதி, தலைக்குமேல் சுற்றும் விசிறி … இப்படி எல்லா வசதியும் கிடைத்தது.இத்தனை வசதிக்கு நல்லா படிக்கிற ஒரு நல்ல பையனுக்குக் கிடச்சிருந்தா .. .. படிப்பில பின்னியிருந்திருப்பான்.

நான் இந்த அறைக்கு வந்த பின் என் சீனியர் ஒருவரும் வந்து சேர்ந்து கொண்டார். அவர் ரொம்ப நல்லவரு. அதிகம் பேசமாட்டார். அவர் வீட்டில் ஐந்து பிள்ளைகளாம். இவர் தான் மூத்தவர். இவர் மட்டும் படிப்பில் மட்டம். மற்ற பிள்ளைகள் எல்லோரும் மகா சுட்டிகளாம். வீட்டில் இதனால் இவருக்கு ‘திகுடு ..முகுடா’ நிறைய கிடைக்கும் போலும். ஆகவே இப்படியாவது படிப்போம் என்று சாமியாரிடம் கேட்டு சேர்ந்து கொண்டார்.

எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறை அந்த காம்பஸின் கடைசியில், மேற்கு மூலையில் இருந்தது. அதை ஒட்டி காம்பவுண்டு சுவர். எங்கள் ‘முன்னோர்கள்’ எங்களுக்கு வைத்து விட்டுப் போயிருந்த இன்னொரு வசதி என்னவென்றால், எங்கள் அறையை ஒட்டிய காம்பவுண்ட் சுவற்றில் ஏறிக் குதிப்பதற்குரியவாறு அங்கங்கே செங்கல்கள் பெயர்ந்திருக்கும். நாங்கள் அந்த காம்பஸுக்குள் வருவதற்கு இதுவே சுலப வழி எங்களுக்கு. ஒரு டீ குடிக்கணுமா, ஒரு ‘இழுப்பு’ இழுக்கணுமா, சும்மா ஒரு ஜம்ப்; அவ்வளவுதான். எங்களுக்குத்தான் அத்தனை சுலபம். எல்லாருக்கும் அப்படியெல்லாம் முடியாது. எங்கெங்கே செங்கல்லில் ஓட்டை, இன்னும் பல விஷயம் அதில…லேசுப்பட்ட டெக்னிக் இல்ல.

இப்படியெல்லாம் ஏறிக் குதித்து, டீ & தம் அடித்து அதோடு சேர்த்து ஏதோ போனா போகுதுன்னு, அப்பப்போ கொஞ்சம் படிக்கவும் செய்வேன். இதுக்கும் மேலே இன்னொரு சோதனையும் சேர்ந்து கொண்டது. பள்ளிப்படிப்பு முடியும் வரை வீட்டுக்குத் தெரியாமல் கள்ளத் தனமாக சினிமா ஏதும் பார்த்த்தில்லை. கல்லூரி வந்த பிறகும் இதே மாதிரி ‘நல்ல பிள்ளை’யாகத்தானிருந்தேன். வீட்டிலும் ‘படிக்கப்’ போனாலும் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்து விட வேண்டுமென்ற கண்டிப்பு உண்டு. சினிமாவிற்குப் போக வேண்டுமெனில் வீட்டிலிருந்து 6 மணிக்கு முன்பே புறப்படணும் … படம் முடிந்து வீட்டுக்கு எவ்வளவு வேகமாக சைக்கிளில் வந்தாலும் ஒன்பதரையைத் தாண்டி விடும்.

இந்தப் பிரச்சனையை நண்பன் ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்த போது அவனுக்கு ஒரு ‘ஞானோதயம்’! ஆங்கில சினிமாவின் நல்லதும் கெட்டதும் அப்டின்னு ஒரு பிரசங்கம் கொடுத்தான். அப்போதெல்லாம் ஆங்கிலப்படம் என்றால் ரீகல் தியேட்டர் மட்டும் தான். நியூஸ் போட்டு 7 அல்லது ஏழே கால் மணிக்குப் பிறகு தான் மெயின் படம் ஆரம்பிக்கும். எப்படியும் எட்டேமுக்காலுக்குள் படம் முடிந்து விடும். என் வீட்டுக்கும் தியேட்டருக்கும் அந்தக் காலத்தில் 10 நிமிஷத்தில் விரட்டிப் போய்ச் சேர்ந்து விடலாம். இப்படி ஒரு ஐடியா கொடுத்தான். எனக்கு ஒரு பெரிய சந்தேகம். ஒன்றிரண்டு ஆங்கிலப் படம் பார்த்த போது வர்ர ஆளுக மூஞ்சியெல்லாம் ஒரே மாதிரியாகவே தெரியும். ஆக, போன சீன்ல செத்துட்டான்னு நினச்சவன் அடுத்த சீன்ல தலையைக் காட்டுவான். இந்தக் குழப்பம் வேற இருந்தது. அதெல்லாம் பார்க்க சரியாகி விடும் என்றான் நண்பன்.

அதோடு நிற்காமல் ஒரு படம் இப்போ ஓடுது. கட்டாயம் பார்த்து விடு என்றான். நானும் முதன் முதல்ல ஒரு ஆங்கிலப் படம் வீட்டுக்குத் தெரியாமல் ரீகல் தியேட்டருக்குப் போனேன். இந்த தியேட்டரில் அந்தக் காலத்தில் படம் பார்ப்பதே ஒரு பெரிய experience. நிறைய ஆச்சரியங்கள் அங்கிருக்கும். அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள இங்கே கொஞ்சம் போய்ப் பாருங்களேன்.  Rank Organization… Norman Wisdom நடித்த On The Beat  என்ற படம் தான் வீட்டுக்குத் தெரியாமல் நான் பார்த்த முதல் ஆங்கிலப்படம்.
பார்த்த்துமே ‘பச்சக்’குன்னு படம் பிடிச்சிப் போச்சு … என்னா காமெடி .. நாகேஷ் காதலிக்க நேரமில்லை படத்தில் தன் மேசையில் இன்னொரு பெரிய ஹாலிவுட் காமெடி நடிகரான Jerry Lewis பட்த்தை மட்டும் தான் வைத்திருப்பார். ஆனால் அவரின் நடிப்பில் Norman Wisdom சாயல் நிறையவே இருக்கும். A stitch in time என்று நினைக்கிறேன். Norman Wisdom நர்ஸாக நடித்திருப்பார். நாகேஷின் நீர்க்குமிழி படம் என்றும் நினைக்கிறேன். ஏறத்தாழ அதே கதை… ஒரு சிறு குழந்தையோடு – குட்டி பத்மினி? ரொம்ப ஒற்றுமையாக இருக்கும். 

அடேயப்பா … On The Beat ஆங்கிலப் படம் பார்த்ததே முதல் பெரிய வெற்றி. நல்ல ஆரம்பம். படம் பிடித்துப் போய் அப்பாவுடன் அடுத்த நாள் மதிய சாப்பாடு சாப்பிடும் போது ஒரு நல்ல சீன் நினைவுக்கு வந்து நான் சிரிக்க … அப்பா என்ன என்று கேட்டதும் எதையோ ஒரு பொய் சொல்லிச் சமாளித்ததும் நினைவுக்கு வருகிறது. முதல் வெற்றிக்குப் பிறகு அடிக்கடி ரீகல் போவது பழக்கமாகி விட்டது.

இப்போது தமிழ்ப்படம் ஓடுவது போல் அப்போது ஆங்கிலப்படங்கள் ஓடின. அதாவது இப்போதெல்லாம் தமிழ்ப்படங்கள் வெள்ளிக்கிழமை வெளிவரும். அடுத்த திங்கட்கிழமை அதே படம் ஓடுமா என்பது நிச்சயமில்லை. இது மாதிரி அந்தக் காலத்தில் வெள்ளி வரும் ஆங்கிலப் படம் ஒரு வாரப் படமாக இருக்கலாம். அல்லது இரு நாட்களுக்கோ மூன்று நாட்களுக்கோ ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஆங்கிலப்படம் ஓடுவது கிடையாது. ஆக வாரத்தில் எப்படியும் ஒரு படமாவது பார்த்திடலாம்.

 கல்லூரி வாழ்க்கையில் ஆங்கிலப்படம் பார்ப்பது மாமூல் விஷயமாகிப் போனது. காமெடி பட்த்தில் ஆரம்பமாகி, war படம் அது இதுன்னு வளர்ந்து போச்சு.

படிப்பு ஒரு ஓரமா ஒதுங்கி நடந்து வந்தது.
*

Thursday, April 27, 2017

ஒரு பிரலாபத் தொடர்


* வயதாகி விட்டதில் ஒரு லாபம்.

உலகத்தில் பல கஷ்டங்கள்; அடுத்த யுத்தமே தண்ணீருக்காக என்கிறார்கள்; நாட்டில் பல பிரச்சனைகள்; ஒரு ஆறு, கண்மாய் என்றும் ஒன்றையும் காணோம்; அவை எல்லாவற்றையும் காக்கா தூக்கிக் கொண்டு போய் விட்டதாமே; தாய்மொழிக்குக் கடும் சோதனை; எங்கும் இந்தி தான் தலையெடுத்து நிற்கிறது; நீட் தேர்வுகள் வேறு தலை நீட்டுகிறது; ……. நீண்ட பட்டியல்.

 இத்தனைக்கும் கவலைப்படணுமோன்னு நினைக்கிறப்போ… அட போப்பா .. உனக்குத்தான் வயசாயிருச்சில்ல … எத்தனை நாளைக்கு? பேசாம இருப்பியான்னு ஒரு வயசான வாய்ஸில் ஒரு சத்தம் உள்ளேயிருந்து வருது. 


முந்தியெல்லாம் ஆங்கில இந்துப் பத்திரிகை எடுத்தால் ஒண்ணு ஒன்றரை மணி நேரம் ஆகும். இப்போவெல்லாம் ஒரே ஸ்கேன் தான். என்னத்தப் படிச்சி என்ன பண்ண? வட கொரியா பாத்து, ட்ரம்ப் பார்த்து பயந்தாலும் எல்லாமே ’டேக்கிட் ஈசி’ பாலிசி தான். பொழுது போகுது.

 ஆனாலும் வயசான ஆளுகன்னா எப்போதும் ஏதாவது ஒண்ணைப் பத்தி பிரலாபம் பண்ணிக்கிட்டே இருப்பாங்களாமே … எனக்கும் பிரலாபம் பண்ண ஒரு பெரிய பட்டியல் இருக்கு. அத ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன் …… 


ஆனாலும் ஒரு சின்ன ஆறுதல்.

ஒரு காலத்தில் ப்ளாக் ஒழுங்காக எழுதும் காலத்தில் நம்ம ஊர் தமிழ் சினிமா பற்றி நிறைய கவலைப்பட்டதுண்டு. காதலைத் தவிர வேறு எதுவும் ஏன் நம் சினிமாவில் வருவதே இல்லை. வேறு வேறு genres-ல் ஏன் படம் வருவதில்லை. ஏன் படம் இரண்டே கால் மணி நேரம் ஓடணும். கட்டாயம் பாட்டுகள் வேணுமா? ……. இப்படியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சமீபமாக வரும் படங்கள் நிறைய வித்தியாச வித்தியாசமாக வருகின்றன. ’செட்’ போட்டு எடுத்த படங்களை வித்தியாசமாக இயற்கைச் சூழலோடு ’16 வயதினிலே’ படம் எடுத்து ஒரு மாற்றத்தைப் பாரதிராஜா கொண்டு வந்தது போல் இப்போது நான் இந்தக் காலத்திற்கு “பீட்சாவிற்குப் பிறகு” என்ற ஒரு எல்லைக்கோட்டைக் கொண்டு வந்துள்ளேன். அப்படத்தை ஒட்டியும், பின்னும் வந்த பல நல்ல படங்கள் தமிழ் சினிமா மீது ஒரு நல்ல நம்பிக்கையைக் கொண்டு வந்தன.


இதே போல் தமிழ்ச் சமூகத்திலும் நல்ல மாறுதல்கள் நான்கு வந்து விடாதா என்ற ஒரு நம்பிக்கையும் மனதின் ஓரத்தில் சின்ன ஒரு மொட்டாக இருக்கிறது.

மலருமா ….?
 கடவுளுக்கே வெளிச்சம் !

 பிரலாபம் 1 … இனி வரும்

 *

Monday, April 03, 2017

A CUP AFTER MANY A SLIP

*
முன்கதை ...

27 ஆண்டுகளுக்கு முன்பே 7.8.92 அன்றே அரசினால் கையெழுத்திடப்பட்ட லே அவுட் உள்ள பகுதியில், approved plots என்பதால் அதிக விலைக்கு வீட்டடி மனைகள் வாங்கினோம். மனைகளை விலை பேசி முடித்த பின், அரசின் ஆணைப்படி பூங்காக்கள் என்று அடையாளம் காட்டப்பட்ட இடங்களை விலை பேசி விற்க முனைந்தனர். குடியிருப்போர் கடந்த 20 ஆண்டுகளாக இதனை எதிர்த்துப் போராடி வந்தோம். 

அந்தக் கதையின் தொடர் இது .....

*
இன்று - 3.4.17 - நடந்தது .....


நாடெல்லாம் சுற்றினோம்.
மாநகராட்சியைச் சுற்றிச் சுற்றி வந்தோம்.
அதிகாரிகளை ஒருவர் பின் ஒருவராகச் சந்தித்தோம்.

ஆண்டுகள் பல கடந்தன.

விடியும் என்று காத்திருந்தோம்.

செடிகள் நட்டோம் ... மரங்களாக வளர்ந்தன.
திட்டங்கள் போட்டோம் .. ஆனால் ஒன்றும் நகரவில்லை.

  


நீதி மன்றங்கள் ஏறினோம்.
சட்டங்கள் எங்கள் பக்கம் நின்றது.
சட்டங்கள் அளித்த நீதி எங்களோடு நின்றது.
ஆயினும் நீதிக்குள் நடப்புகள் அடங்கவில்லை.
புதிய தீர்ப்புகளோடு அதிகார மையத்தை இணைக்க முயன்றோம்.
தடைகள் ... தடுப்புகள் ... சோகங்கள் தான் மிஞ்சின.

எங்கள் ராசி.
எங்கள் நியாயத்தைக் கேட்க மூவர்
துணைப் பொறியாளர்.. மூத்த பொறியாளர் ... ஆணையர்


எங்கள் குரல் அவர்கள் காதில் விழுந்தன.
மூவருக்கும் எங்கள் நியாயம் புரிந்தது.
வாழி நீவீர்.காவல் துறை காவலுடன் சட்டம் நிறைவேறுகிறது.


இதில் எங்களுக்கு ஒரு பெரும் ஆச்சரியம்.
இந்த மூவரின் தார்மீக ஆவேசம்
எங்களையே கதி கலங்க வைத்தது.

மகிழ்ச்சியில் மக்கள்சட்டம் கை கொடுக்க,
அதிகாரம் இடம் கொடுக்க,
காவல் படையின் உதவியோடு
இன்று
எங்கள் பூங்கா எங்கள் கண்முன் மலர்கிறது.
வேலையில் தீவிரம்

      துணைப் பொறியாளர்  திரு. மணியன்

முழு உதவியைத் தந்த துணைப் பொறியாளர்
இனியும் தடங்கல் ஏதும் வாராது என்ற துணிவில் நிற்கிறோம்.
எங்கள் எல்லோர் கனவுகளிலும் வளர்ந்த பூங்கா
இனி
நிஜமாகவே எங்கள் கண்முன் உருப்பெருகிறது.பூங்காவை மீட்ட இரு சிங்கங்கள்
பி.கு. 

இறுதியாக எங்களுக்காக வாதாடிய எங்கள் அன்புக்கும் நன்றிக்கும் உரியவரான வக்கீலய்யா அவர்களுக்கு எங்கள் நன்றி.  (அவர் உத்தரவு கிடைத்தால் அவர் பெயரையும் பகிர்கிறேன்.) 

எங்கள் பூங்காவைப் பார்க்க மூத்த பொறியாளரும், ஆணையரும் வருவார்கள் என்ற செய்தி  வந்தது. அவர்கள் இருவரையும் ’பொட்டிக்குள்’ அடைத்துவிட ஆவலுடன் இருந்தேன். வரவில்லை இன்று. வரும்போது அடைத்து விடுவேன்!!!*

Monday, March 27, 2017

ஆவியில் வந்த என் ஆசை ...3
***
ஆவியில் வந்த என் ஆசை ...1  

ஆவியில் வந்த என் ஆசை ... 2  

***           
ஆவியின் ”ஆசைஎன்ற ஒரு தொடர் நிகழ்வுக்கு என் பெயரையும் கொடுத்திருந்தேன். எல்லாம் ஒரு சின்ன ஆசை தான். நம் பக்கம் “சீட்டுவிழுந்து விடாதா என்ற ஒரு  நப்பாசை. ஆனால் நப்பாசை நடந்தே விட்டது. ஓவியர் மருது மிகவும் பெரிய மனது வைத்து, தன் சுறுசுறுப்பான நேரத்தில் எனக்கும் நேரம் ஒதுக்கினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி.


***


 
என் நல்லூழ் ...  இந்நிகழ்விற்குப் பொறுப்பாளராக இருந்தவரின் பெயர் கொஞ்சம் முகநூலில் எனக்குப் பரிச்சயமான பெயர் - பரிசல்காரன் கிருஷ்ணா. அவரோடு உடன் வந்தவர் ஆவியின் தலைமைப் புகைப்படக்காரர் - கே.ராஜசேகரன். இவரைப் பற்றியும், அவரின் ஒரு புகைப்படம் ஒன்றைப் பற்றியும் தெரியும் – பின்னால் சொல்கிறேன் அதைப் பற்றி.  அவரோடு  காணொளிப் பொறுப்பாளராக இன்னொரு இளைஞர்- நாகமணி – வந்திருந்தார். நாங்கள் நால்வரும் மருது அவர்களின் வீட்டிற்குச் சென்றோம்.
ஓவியர் எனது கல்லூரிக்கு ஒரு முறை வந்த போது அந்த நாள் முழுவதும் அவரோடு இருந்திருக்கிறேன். அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது. என்னை அவர் வீட்டில் பார்த்ததும் என் முகம் நினைவுக்கு வந்ததாகச் சொன்னார்.

இனிய முகம் ஓவியருக்கு. பேச்சிலும் இனிமை. புகழ் பெற்ற மனிதர்களைப் பார்க்கப் போகும் போது பல சமயங்களில் அவர்கள் நம்மிடமிருந்து மிகவும் விலகியே இருப்பது வழக்கம் தான். ஆனால் ஓவியரிடம் அந்த குணம் சிறிதும் இல்லை. நல்ல விருந்தோம்பல். எங்களோடு சமதையாக அமர்ந்து பலவற்றைப் பற்றிப் பேசினார்.

ஒரு ஓவியராக அவரது  professional work (!!)  அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே ஆரம்பித்து விட்டது என்றார்.  இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் அவர் பெரிய சுவர்களில் பிரம்மாண்டமாக, பெரிய படங்கள் வரைய கிடைத்த வாய்ப்புகள் பற்றிப் பேசினார். அதனால்  ஓவியத்தில் ”space" பற்றிய அனுபவம் அந்த சிறிய வயதிலேயே கிடைத்தது பற்றிக் கூறினார்.  இந்தி திணிப்பு எதிர்ப்பு பற்றிக் கூறியதும் நானும் அந்தப் போராட்டத்தில் என் பங்கைப் பற்றிக் கூற ஆரம்பித்தேன்.

அடுத்து அவர் சிறு வயது முதல் அவர் தந்தையோடு ரீகல் தியேட்டரில் ஆங்கிலப்படங்கள் ஆரம்பித்ததைக் கூறினார். நானும் விடுவேனா .... எப்படி வீட்டில் படிக்கப் போவதாகச் சொல்லி ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்த என் வரலாற்றை எடுத்து விட்டேன்! அந்த தியேட்டருக்கு என்றே ஒரு தனி நாகரிகம் இருந்தது. ஏனைய தியேட்டர்களில் காணும் அசுத்தமான பழக்கங்கள் இங்கே நடக்காது. எப்படி அங்கு வரும் மக்கள் அப்படி ஒரு நனி நாகரிகத்தைக் கடைப்பிடித்தார்கள் என்பது இன்று வரை ஒரு அதிசயமே! வரும் மக்களும் கோலிவுட்டின் வரலாறும், ஆங்கிலப்படங்களின் இயக்குனர்கள், நடிகர்கள் என்று பெரும் பட்டியல்களை அள்ளித் தெளிப்பது இன்னொரு அதிசயம். இதில் பலரும் அதிகம் படித்திராத மக்கள் தான். அந்தத் தியேட்டரின் மகிமை பற்றிப் பேசினோம்.

ஒரு மணி நேரம் ஓடி விட்டிருந்தது. பேசிய சுவாரசியத்தில் அந்த நேரம் போனதே தெரியவில்லை. படம் வரையலாமா என்றார். நிலத்திலிருந்து சில இஞ்சுகள் மேலெழும்பியது போல் நான் உணர்ந்தேன். அந்த அனுபவம் எப்படியிருக்குமென மனதிற்குள் பல கேள்விகள். லைட்டிங்க் செய்ய வேண்டுமென்றார். ஆவி மக்கள் தயாராக வந்திருந்தார்கள். ஒரு லைட்டை என் முகம் நோக்கி வைத்தார்கள். ஒளிவெள்ளத்தில் நான். அப்போதே அரைகுறை நினைவு என்னிடமிருந்து கழன்று போனது போன்று இருந்தது. ஒரு மேஜையின் பாதிப் பரப்பில் பல தூரிகைகள், பல விதப் பேனாக்கள் .. அதில் சிலவற்றோடு என் எதிரில் அமர்ந்தார். என்னை அவருக்கெதிராக வசதியாக உட்கார வைத்து வரைய ஆரம்பித்தார். அவர் தலைக்குப் பின்னால் சுவற்றில் ஒரு கடிகாரம் இருந்தது. கடிகாரத்தின்பெரிய முள் ஏழாம் எண்ணில் இருந்தது. நல்ல பிள்ளையாக, தலையை ஆட்டாமல் என் பெரிய தொந்தியோடு  பிடித்து வைத்த பிள்ளையாராக  அப்படியே அமர்ந்திருந்தேன். பெரிய முள் பதினொன்றைத் தொடுவதற்குள் படம் வரைந்து முடித்து விட்டார்.
 


படம் முடிந்ததும் பேச்சு ஓவியக்கலை பற்றியதாக மாறியது. தனது படங்கள் பலவற்றை எங்களுக்குக் காண்பித்தார். நால்வருக்கும் அதுவே பெரும் விருந்தாக இருந்தது.    தன் அயல் நாட்டு அனுபவங்கள், அங்கு மறைந்த ஓவியர்களுக்கு அவர்கள் தரும் மரியாதை ... அதன் பின் கணினி வைத்து ஓவியம் வரையும் தற்கால முன்னேற்றம், இந்த முன்னேற்றத்திற்கு அவர் முன்பே எடுத்த முயற்சிகள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.
 
திடீரென்று என்னை வேறு ஒரு கோணத்தில் அமர்த்தி, அதற்கும் ஒளி அமைப்பு கொடுத்தார். ஆனாலும் ஒளி போதுமான அளவில் இல்லை என்றார். இந்த இரண்டாம் படம் வரைய அனேகமாக நான்கு நிமிடங்கள் மட்டுமே எடுத்தார். படத்தை என்னிடம் கொடுத்தார்.நோ்த்தியான வெகு சில கோடுகளுக்கு நடுவே நான் இருந்தேன். மனதில் உடனே தோன்றிய சொல் “MAGIC". முதல் படத்தை விட இது எனக்குப் பிடித்தது. அவரிடம் இந்தப் படம் ஒரு “MAGIC" என்றேன். மகிழ்ச்சியோடு பெரிதாகச் சிரித்தார்.

அதன் பின்னும் பேசிக்கொண்டிருந்தோம். கம்பன் வீட்டுக் கட்டுத் தறி போல் அவரது படங்களில் உள்ள சிறு கிறுக்கல்கள் கூட அழகாக இருக்கிறது என்று நானும் பரிசல்காரனும் அவரிடம் சொன்னோம்.
 
மூன்று மணி நேரத்தை எங்களுக்காகச் செலவிட்டார். நிச்சயமாக அது அவர் ஆவியோடு கொண்டிருக்கும் நேசத்திற்கு இது ஒரு அடையாளம் என்றே நினைக்கின்றேன். அந்த மணித்துளிகள் மிகவும் பயனுள்ளதாகவும், நிறைய அனுபவங்களையும் தந்தன. ஒரு பெரிய ஓவியரோடு இணைக்கு இணையாக அமர்ந்து அளவளாவியது ஆவி தந்த கொடை. வாழி.

ஓவியர் வீட்டை விட்டு வெளிவந்ததும் புகைப்படக் கலைஞர் ராஜசேகரனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன். நான் மருதுவோடு பேசிக்கொண்டிருக்கும்  போது தொடர்ந்து பல படங்கள் எடுத்துத் தள்ளினார். ஒவியர் வரைந்த படங்கள் போலவே இன்னொரு புகைப்பட ஓவியர் எடுத்த படங்களும் கிடைத்தால் நலமே என்று எண்ணிக் கேட்டேன். அவர் மறுப்பேதும் சொல்லாமல் எல்லா படங்களையும் கொடுப்பதாகச் சொன்னார்.
 
அவரின் படங்களை நான் கேட்டுப் பெற ஒரு காரணம் இருந்தது.  மிகப்பல ஆண்டுகளுக்கு முன்  மதுரை சட்டக்கல்லூரி மாணவனாக இருக்கும் போது ஆவியின் மாணவ புகைப்படக்காரராக இருந்தார். அப்போது அவர் எடுத்த ஒரு படம் என் மனதில் இன்னும் தேங்கி நின்று விட்டது. சீவலப்பேரி பாண்டி என்ற ஒரு தொடரை ’செளபாஎன்ற எங்கள் கல்லூரி மாணவ நண்பன் ஜூனியர் விகடனில் எழுதி, அது வெளியாகி, பின்னாளில் திரைப்படமாகவும் வெளி வந்தது. அதில் இறுதி அத்தியாயங்களில் சீவலப்பேரி பாண்டியன் காவல்துறையினர் ஒருவரின் தலையைத் தனியாகச் சீவி வெட்டியதாக வரும்.


 

இதனை மிக அழகாகப் கொடூரமாகப் புகைப்படத்தில் ராஜசேகரன் காண்பித்திருப்பார்.  ஒரு குழியை வெட்டி, ஆளை உள்ளே இறக்கி, பாதுகாப்பிற்கு வாழை மட்டைகள் கொடுத்து எடுத்த படம். தரையில் தலை ஒன்று தனியாக உருண்டு கிடக்கும். படமே பார்க்க பயங்கரமாக இருக்கும். அந்தப் படம் வந்த போது அதைப் பற்றி நண்பர்களோடு பேசியிருந்திருக்கிறோம். அதன்பின் அவர் ஆவியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவர் எடுத்த படங்களை சிரத்தை எடுத்து பார்க்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது. அன்று  Portrait எடுப்பதற்கு வசதியான இடத்தில் அவர் எடுக்கும் படங்கள் கிடைத்தால் நல்லதே என்று ஆசைப்பட்டேன். அன்று என் ‘ஆசைகள்’ எல்லாமே நிறைவேறும் என்ற ‘விதி  இருந்திருக்கும் போலும். அவரிடம் என் ஆசையைச் சொன்னேன். அவர்படங்களை எந்தவித மறுப்பின்றி கொடுத்துதவினார். நன்றி.


என்னை யூ ட்யூபில் காணொளியாகக் காண்பிக்க என்னைச் சுருள்  படமெடுத்த நாகமணிக்கும் மிக்க நன்றி. (என்னதொப்பையை மறைக்க நாகமணி ‘ஏதாவதுசெஞ்சிருக்கலாமோவென நானே என்னைக் காணொளியில் பார்க்கும் போது தோன்றியது!)   
 *

Friday, March 24, 2017

ஆவியில் வந்த என் ஆசை .. 2*


//என் ஆசை ... எனக்கு ஆ.வி. “இறவாமை”யைத் தர வேண்டும். கடினமோ? உங்களுக்கு அது எளிது தான் என்று நினைக்கின்றேன்.

எனக்குப் பிடித்த ஓவியர் மருது அவர்கள் என்னை நேரில் பார்த்துப் படம் வரைந்தால் - பெரிய படமல்ல, 1.5’ x 2’ போதும்! – பரம்பரையாக என்றும் பேணுவோம். நான் உங்களிடம் கேட்கும் இறவாமை அதுவே ... //

இது நான் ஆவிக்கு எழுதிய ‘ஆசை மனு’!


 ஆசையை நிறைவேற்றிய ஆவிக்கும், பொறுப்போடு இதனை ஏற்று நடத்திய பரிசல்காரன் கிருஷ்ணாவுக்கும், ஆவியின் முதன்மை புகைப்படக்காரர் கே. ராஜசேகரன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றியும், பாராட்டும்.
 *
 * *

Monday, March 20, 2017

பூங்கா காப்பு போராட்டம்

அந்தக் காலத்தில ....

ஏறத்தாழ 17 - 19 ஆண்டுகளுக்கு முன், நான் எங்களது பகுதியில் புதிதாகக் குடியேறியதும் ஒரு சங்கம் ஆரம்பித்தோம். 20-25 வீடுகள் மட்டும் இருந்தன. ஒரே குடும்பம் போல் இருந்தது. 
                                            

அப்போது எப்படியோ  எங்கள் பழைய போன் விரைவாக எங்கள் வீட்டுக்கு வந்து விட்டது. அத்தனை வீட்டுக்கும் ஒரே போன் எங்களுடைய போன் தான். வீடுகளும் தூர தூரத்தில் இருக்கும். மழைக்காலங்களில் எங்கும் சகதி. போன் வந்தால் சில நிமிட வித்தியாசத்தில் மறுபடியும் போன் செய்யச் சொல்லி விட்டு, போன் வந்தவர்கள் வீட்டிற்குப் போய் செய்தி சொல்லி விட்டு வருவது வழக்கம். 

அதில் ஒரு வீடு மிகவும் தொலைவில் இருக்கும். எங்கள் இரு வீட்டுக்கும் நடுவில் நெல் வயல். மழையில் இருட்டில் சென்று கூப்பிட முடியாது. அப்போது எங்கள் மாடியிலிருந்து அவர் வீட்டுப் பிள்ளையின் பெயர் சொல்லிக் கூப்பிடுவோம். அந்த போன்கள் சிம்லாவில் இருந்து வரும்.   அவர்கள் வீட்டுப் பிள்ளை - பட்டாளத்துப் பிள்ளை - கூப்பிடுவார். அதுவும்  இரவில் தான் வரும். அதுவும் 10 மணிக்கு மேல் தான் அழைப்பு வரும். 
பட்டாளத்துப் பையன். புதிதாகத் திருமணமாகி மனைவியோடு அங்கிருந்து பேசுவார். அவருக்கு உதவுவதில் ஒரு மகிழ்ச்சி எங்களுக்கு. ஆனாலும் போன்
 வந்ததும் அவர்களைக் கூப்பிடக் கஷ்டமாக இருந்தது. அதனால் ஒரு ஹை-டெக் ஒன்றிற்கு மாறினோம். ஒரு லேசர் லைட் அப்போது கீ-செய்னாக வந்தது. அது ஒன்று வாங்கி வந்தேன். எங்கள் வீட்டிலிருந்து அதை அடித்தால் அவர்கள் வீட்டு ஜன்னல் வழியாக அவர்கள் வீட்டு தொலைக்காட்சி ஸ்க்ரீனில் அடிக்கும்.  கூப்பிட மிக வசதியாக இருந்தது!
மரங்கள் நட்டோம். வீட்டுக்கு வீடு மரங்களைத் தத்து எடுத்தார்கள். அவ்வப்போது கூட்டம் போடுவோம். வழக்கமான பொங்கல் நாளன்று கோலப்போட்டிகள், சுதந்திர தின, குடியரசு தின விழாக்கள் போன்றவைகள் 
உறவுகளை வளர்த்தன. இதையெல்லாம் விட pot luck dinner ஒன்று மிகவும் எங்களை நெருங்கியிருக்க வைத்தது. அவரவர் வீடுகளில் உணவுகள் சமைத்து யாராவது ஒருவர் வீட்டு மாடியில் இரவு விருந்து நடக்கும். தாய்க்குலத்தை இது நெருங்கி வரச் செய்தது. சிறு பிள்ளைகளுக்குப் பாடல் போட்டிகள் என்று பல நிகழ்வுகள் எங்களின் உறவுகளை வளர்த்தன.  
அப்படியெல்லாம் இருந்த குடியிருப்புப் பகுதி நன்கு வளர்ந்தது; பெரியதானது. இப்போது முன்பு போல் கூட்டங்களோ, விருந்துகளோ நடப்பது அரிதாகி விட்டது. இதற்கு முடிவு கட்டவே வந்தது எங்கள் பூங்காப் பிரச்சனை. விலகியிருந்த எங்களை இப்போது ஒன்றாக்கி விட்டிருக்கிறது.

எங்கள் பகுதியில் எங்களுக்கே உரித்தான பூங்கா பகுதி ...  ஒன்றுக்கு இரண்டு தீர்ப்புகளும் உயர்நீதி மன்றத்தில் இருந்து  வந்து விட்டன. ஆயினும் இன்னும் சிலர் அப்பகுதி எங்களுடையது என்று மாநகராட்சி ஆரம்பித்த வேலைகளையும் நிறுத்த முயன்று கொண்டிருக்கின்றனர்.
எல்லோருக்கும் எல்லாமும் தெரியவேண்டுமென்றால் ஒரு கூட்டம் தேவையென 19.3.17 அன்று ஒரு கூட்டம் கூட்டினோம். குடியிருப்புப் பகுதி முழுவதும் பங்கெடுத்துக் கொண்டார்கள். திரண்ட கூட்டம்; பெரும் ஆர்வம்.

பழைய கால நினைவுகள் வந்தன. எல்லாவற்றையும் பற்றிப் பேசினோம்.


புதிதாக என்ன செய்வது என்பது பற்றியும் ஆர்வத்தோடு பேசினோம்.


                     

போராட்டங்கள் தொடரும் ... வெற்றியை எட்டும் வரை என்று ஒருமித்து முடிவு செய்தோம்.

யார் கண்டது ... இன்று எதிர்க்கும் ஆட்கள் இன்னும் சில நாட்களில் ஓட்டு போடணும்னு நம்ம முன்னால் வந்து நிற்கலாம். யார் கண்டது!!


**