Monday, March 30, 2009

302. மீண்டும் மீண்டும் தொடரும் அநியாயங்கள்.

சென்ற ஆண்டு ஏறத்தாழ இதே நேரத்தில் (06.06.2006) நான் இடப் பங்கீடு பற்றி எழுதிய ஒரு கட்டுரையில் U.P.S.C. தன் தேர்வு முறைகளில் நடத்தும் அநியாயங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். - இது எனது 14.7.2007 தேதியிட்ட பதிவில் எழுதியது.

ஆக, மீண்டும் மீண்டும் ஒரு அநியாயத்தைப் பற்றி 6.6.2006லும், பின் 14.7.2007லும் எழுதி, இதோ இப்போது இந்த ஆண்டும் அதே போன்ற ஒரு அநியாயத்தைப் பற்றி எழுதவேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். தொடர்ந்து ஒரு அநியாயத்தைச் சிலர் அரங்கேற்ற நாம் அதைப்பற்றி வெறுமனே எழுதிக்கொண்டேதான் இருக்கப் போகிறோமா?

பதிவர் புருனோ இதைப் பற்றி எழுதியிருப்பதை இங்கு நானும் பதிகிறேன்.

இதோ மறுபடியும் தொடரும் இந்த அநியாயத்தைப் பற்றிய விவரம்.

===========================================
"விடுதலை"
(09/25/2008 )
இதழில் வந்துள்ள செய்தியை இங்கு நகல் எடுத்துத் தந்துள்ளேன்.


அகில இந்திய அளவில் மருத்துவ மேற்படிப்பு மற்றும் “எய்ம்ஸ்”
நுழைவுத்தேர்வுகளில் இட ஒதுக்கீட்டுக்குச் சாவுமணி!


அதிக மதிப்பெண் பெறும் தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பிற்படுத்தப்பட்டோரை பொதுப் போட்டியில் தேர்வு செய்ய தடை!

மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களே இதற்குப் பொறுப்பு.

சமூகநீதியைக் காப்பாற்ற செயல்பட வேண்டும் அமைச்சர்.

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை



மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் இட ஒதுக்கீடுக்குச் சாவு மணி அடிக்கும் கொடுமையைச் சுட்டிக்காட்டி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதில் நியாயம் கிடைக்க வழி செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மருத்துவக் கல்வித் துறையில் பட்ட மேற்படிப்புக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வில், இட ஒதுக்கீடு அளிப்பதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் பெருந்தவறையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி அளிக்கிறது
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இதற்கான தேர்வு நடைபெறுவது வழக்கமாகும். அதற்கான விண்ணப்பம் இம்மாதம் (செப்டம்பரில்) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல் அறிக்கையில் (Prospectus)வெளியிடப்பட் டுள்ள விவரம் அதிர்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு எத்தனை விழுக்காடு என்று குறிப்பிடப்படவில்லை என்பது முதலாவது அம்சமாகும்.
இரண்டாவதாக அதில் காணப்பட்டிருப்பதாவது:
The Counselling shall only be done according to the category Rank (Unreserved, SC, ST, OBC & Other Physically handicapped) and not by the overall Rank.



உயர்ஜாதியினருக்கே தாரை வார்ப்பா?

கலந்தாய்வு என்பது அந்தந்தப் பிரிவினருக்கான தனிப்பட்ட தகுதி அடிப்படையில்தான் நடத்தப்படும் என்றும், ஒட்டுமொத்த மான தகுதி அடிப்படையில் அது இருக்காது என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது.

இதன் பொருள் - தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவர்கள் பொதுப் போட்டியில் கொண்டு வரப்படமாட்டார்கள். அவரவர்களுக்குரிய ஒதுக்கீட்டுப் பகுதியில் மட்டுமே கணக்கிடப்படுவார்கள். இதன்மூலம் சட்டப்படி இட ஒதுக்கீடு பெறாத பிரிவினரான உயர்ஜாதியினருக்கு மட்டுமே திறந்த போட்டியில் உள்ள அத்தனை இடங்களும் கிடைக்கும்.

இதுவரையில் கேள்விப்படாத ஒரு தனிப்பிரிவு U.R. (Unreserved) என்பது எங்கிருந்து குதித்தது என்று தெரியவில்லை. இதில் திட்டமிட்ட ஒரு சூழ்ச்சிப் பொறியிருக்கிறது. எந்த ஆணையின்கீழ் இது உள்ளே நுழைந்தது?

இவ்வாண்டு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 9 சதவிகிதம், தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் 22.5 சதவிகிதம் போக மீதியுள்ள 68.50 சதவிகித இடங்களும் உயர்ஜாதியினருக்குத் தாரை வார்க்கப்படும்.

(இந்தத் திட்டத்தின்படி மொத்தமுள்ள 3200 இடங்களில் தாழ்த் தப்பட்ட மக்களுக்கு 480 இடங்களும், மலைவாழ் மக்களுக்கு 240 இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 9 விழுக்காடு கணக்குப்படி 290 இடங்களும், முன்னேறிய ஜாதியினருக்கு 2190 இடங்களும் கிடைக்கும்).

பிற்படுத்தப்பட்டவர்களைப் புறக்கணிக்கும் போக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும்பொழுது இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு பல கட்டங்களாக (In Phased Manner) என்று குறிப்பிட்டிருப்பது தேவையில்லாத ஒன்றாகும். ஏனெனில், ஏற்கெனவே இருக்கும் இடங்கள் தவிர புதியதாக அதிக இடங்கள் என்ற பிரச்சினைக்கே இதில் இடமில்லை. ஏற்கெனவே இருக்கும் இடங்களை தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் என்று இடங்கள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், புதிய வசதிகள், ஏற்பாடுகள் (Infrastructure) என்ற பிரச் சினைக்கே இடமில்லை என்கிறபோது, பிற்படுத்தப்பட்டோர்களுக் கான 27 சதவிகித இடங்களை இவ்வாண்டே கொடுக்க வேண்டியதுதானே!

தீர்ப்பினை தங்கள் வசதிக்கேற்ற வகையில் பயன்படுத்திக் கொள்ளும் தந்திர உணர்வுதான் இதில் காணப்படுகிறதே தவிர, நேர்மையான அணுகுமுறை இதில் கிஞ்சிற்றும் இல்லை.
இதில் இன்னொரு திட்டமிட்ட விடுபடுதல் (Omission) நடந்தி ருக்கிறது. விவரக் குறிப்பு (Prospectus - Appendix-V) பகுதியில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில் தேதி வாரியாக தாழ்த்தப் பட்டோர், மலைவாழ் மக்கள், இட ஒதுக்கீடு இல்லாதவர்கள் (Unreserved) என்பவர்களுக்கான கவுன்சிலிங் விவரம் கொடுக் கப்பட்டுள்ளது; ஆனால், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான விவரம், தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

எந்த வகையிலும் மக்கள் தொகையில் மிகப்பெரும் பகுதியினரான இதர பிற்படுத்தப்பட்டவர்களைப் புறக்கணிக்கும் போக்கு, வஞ்சிக்கும் போக்கு வெளிப்படையாகவே தெரிகிறது.

இது எவ்வளவு பெரிய மோசடி, தில்லு முல்லு என்பது மட்டுமல்ல - முழுமையான சட்ட மீறலேயாகும்.

டில்லி எய்ம்சில் நடந்துள்ள மோசடி!

அதேபோல, டில்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) என்று அழைக்கப்படும் மருத்துவக் கல்லூரி நிறுவனத்தில் சேருவதிலும் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.
ஆண்டுக்கு இரண்டு முறை ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.
தகுதி மதிப்பெண்ணிலும் குளறுபடி!

இதில் தாழ்த்தப்பட்டவர்களானாலும், பிற்படுத்தப்பட்டவர்க ளானாலும், முன்னேறிய ஜாதியினர் ஆனாலும் தகுதி மதிப்பெண் (நுழைவுத் தேர்வில்) என்பது ஒரே அளவில் அதாவது 50 விழுக்காடு பெற்றிருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு நடைபெறும் அகில இந்தியத் தேர்வுக்குத் தாழ்த்தப்பட்டோருக்குத் தகுதி மதிப்பெண் 40 சதவிகிதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனிந்த வேறுபாடு? எய்ம்ஸ் மட்டும் நெய்யில் பொரிக்கப் பட்டதா? 24.8.2001 உச்சநீதிமன்ற தீர்ப்பு இதற்குச் சாதகமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அதேநேரத்தில், இவ்வாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி, உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் அமைந்த 5 நீதிபதிகளைக் கொண்ட ஆயம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான நுழைவுத் தேர்வில் மதிப்பெண் 10 சதவிகிதம் குறைக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளதே அது வசதியாக மறைக்கப்பட்டுள்ளது அல்லது மறக்கப்பட்டுள்ளது என்பது மறக்காமல் குறிப்பிடத்தக்க ஏமாற்று வேலையாகும்.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் மக்கள் போதிய எண்ணிக்கைக் கிடைக்கவில்லையென்றால், இந்த இரு பிரிவுகளுக் கிடையே பகிர்ந்து கொள்ளலாம். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் உடல் ஊனமுற்றோர் பிரிவுகளுக்கு உரிய எண்ணிக்கையில் விண்ணப்பதாரர் கிடைக்கவில்லையென்றால், அவை அத்தனை இடங்களும் பொதுத் தொகுதிக்கு (General Category) சென்று விடுமாம்.

இட ஒதுக்கீடு என்று வரும்போது எப்படி எப்படியெல்லாம் தடைக்கற்கள், குறுக்குச் சால்கள் தந்திரமாகச் செய்யப்படு கின்றன என்பதைக் கவனிக்கவேண்டும்.

மத்திய சுகாதாரத் துறையே பொறுப்பு

அகில இந்திய நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படும் இந்த இருவகை மருத்துவக் கல்லூரி சேர்க்கை என்பது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ்தான் வருகிறது. இந்தத் துறைக்கு அமைச்சராக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். சமூகநீதிபற்றி அவருக்கு நாம் வற்புறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதே என்பதுதான் நமது வேதனை!

எய்ம்ஸ் மருத்துவமனைப் பிரச்சினையில் அவருக்கு ஆதிக்க சக்திகளால் சோதனைகளும், தொல்லைகளும் ஏற்பட்ட நேரத்தில், நாம் அவருக்குத் துணையாக அவர் கரத்தைப் பலப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளோம்.
இந்த நிலையில், அவர் அமைச்சராக இருக்கும் இந்தத் துறைகளில் சமூகநீதிக்குச் சவக்குழி வெட்டப்படலாமா?

அதிக மதிப்பெண் பெறும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோரை பொதுத் தொகுதியில் சேர்க்காமல், அவரவர்களின் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் கணக்கிடுவதும், பொதுத் தொகுதி என்பது (Open Competition) முழுக்க முழுக்க பார்ப்பனர்களுக்கு - உயர் ஜாதியினர்க்குத் திருப்பப்படுவதும் எவ்வளவு பெரிய மோசடி!

டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்தானே பொறுப்பு
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதில் போதிய கவனம் செலுத்தாதது ஏன்? இதற்கான பொறுப்பு அவரைச் சார்ந்ததுதானே?
குற்றப் பத்திரிகை படிப்பது நமது நோக்கமன்று; சமூகநீதியில் இவ்வளவு பெரிய சதி நடந்திருக்கிறது - அதனைச் சரி செய்து தாழ்த்தப்பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதே நமது எதிர்ப்பார்ப்பு - செயல்படுவார் என்றும் எதிர்பார்க்கிறோம்.

இதற்குக் காரணமானவர்கள் எவராக இருப்பினும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதன்மூலம், குறுக்குவழியில் ஒடுக்கப்பட்டோரின் வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்கும் சூழ்ச்சி களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
சென்னை
25.9.2008

தலைவர்,
திராவிடர் கழகம்.

========================================

இக்கதை இப்படியே காலங்காலமாய் நடந்து கொண்டிருக்க நாம் வெறுமனே பதிவுகள் மட்டும் போட்டுக்கொண்டேதான் இருக்க வேண்டுமா? அதேபோல் தி.க.வினர் இதுபோல் வெறுமனே அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தால் போதுமா?

ஏதாவது உருப்படியாகச் செய்ய முடியாதா?


*

Friday, March 27, 2009

301. வாராரு .. வாராரு .. வோட்டாண்டி

*
300 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

பதிவு உலகத்துல என்னத்த பெருசா பேசிட போறாங்க? வெட்டி பயலுக .. எல்லாம் டீக்கடை பெஞ்சுல உக்காந்து பேசுறத இங்க கணிப்பொறி முன்னாடி உக்காந்து பேசிட்டு இருக்காங்கனு தான் நான் ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன். தருமி ஐயா பதிவ பத்தி விகடன் வரவேற்பறைல போட்டு இருந்தாங்க. சரி என்ன தான் இருக்குன்னு படிச்சு பாப்போமேன்னு ஒரு நாள் மனச திடமாக்கிட்டு ஓபன் பண்ணேன்.

முதல் பதிவு ஞானி-கலைஞர் சர்ச்சைய பத்தி இருந்துச்சு. அப்பறம் "கற்றது தமிழ" பத்தி இன்னொன்னு நெனைக்கிறேன். படிச்சு நல்லா இருந்துச்சுன்னு பீல் பண்ணதுனால (இத எழுதுறதுக்கு தருமி ஐயா எந்த சன்மானும் எனக்கு குடுக்கல என்பதை இந்த இடத்தில் தெரிவிச்சிக்கிறேன் ) நம்ப ஐயாவ பாராட்டி ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். அதுக்கு பதிலும் அனுப்பி இருந்தாரு.

"பதிவு உலகத்துக்கு என்ன மாதிரி ஒரு சிறந்த(?) வாசகன அறிமுக படுத்தி வைத்தவர்னு" நம்ப தருமி ஐயா மதுரை பூரா ரவுசு உட்டு சுத்திட்டு இருக்குறத பத்தி இப்ப சொன்னா நல்ல இருக்காது.

seriousana matter-க்கு வருவோம். இவர் பதிவுல இருக்குற highlight-ஆன topic -- இட ஒதுக்கீடு(இடப் பங்கீடு), மற்றும் பகுத்தறிவு சமாச்சாரங்கள். anti-reservationista இருந்த என்ன slighta pro-reservationist side-யைப் பத்தி கொஞ்சம் சிந்திக்க வைத்ததற்கு நம்ப ஐயா பதிவுகள் தான் காரணம். இட ஒதுக்கீட பத்தி இவர் போட்டு இருக்கும் பதிவுகளை தொகுத்து ஒரு புத்தகம் வெளியிடலாம். ஆனால் follow-up பதிவுகள் ரொம்ப கம்மி. ஆரம்பத்துல இருந்த சூடு போக போக இல்லாம போயிடுச்சு. இட ஒதுக்கீடு பற்றிய செய்திகள் எல்லாம் நான் இவருக்கு அனுப்பி வச்சி, இத பற்றியும் பதிவு போடுங்கனு கெஞ்சுற அளவுக்கு கொண்டு வந்துட்டார்.

அப்பறம், என்னை வேற பதிவு போட சொல்லி கொஞ்சம் காலத்துக்கு மிரட்டிட்டு இருந்தார். அப்பறம் ஞானி சாயல்ல எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப softa deal பண்றது எனக்கு பிடிக்காத ஒரு விஷயம். சோதிடம், மதங்கள் பற்றி எல்லாம் நல்ல விதமாவே விமர்சனம் பண்ணி இருந்தாலும் அதுல காரம் ரொம்ப கம்மியாக இருந்துச்சு. ஆனா ஒரு point-க்கு value add பண்ண பல இடங்கள்லேந்து facts குடுத்து அசத்துவாரு. எந்த ஒரு சமூக பிரச்சனைய பத்தி details வேணும்னாலும் மொதல்ல இவர் கிட்ட "நீங்க இத பத்தி எதாவது பதிவு போட்டு இருக்கீங்களா?" னு கேட்டு வாங்கி படிச்சி இருக்கேன். (இத சாக்கா வச்சிக்கிட்டு archives-ல இருக்கிற பழைய பதிவுகள எல்லாம் படிக்க சொல்லி தள்ளி விட்டு இருக்கார்) .

இன்னொரு பிடித்த விஷயம் என்னன்னா எந்த ஒரு mattera பத்தி பேசும்போதும் அதை deepa analyze பண்ணிட்டு தான் எழுதுவார். ஆனால் சில சமயம் stereo-type-ஆ ஒரே mattera மறுபடி மறுபடி போடுவார். eg:anti-hindutva பதிவுகள்.

மணிரத்தினம்-ரஹ்மான் பிடிக்காதுன்னும் பாலா-இளைய ராஜா பிடிக்கும்னும் சில பதிவுல சொல்லி இருக்கார். அதனால ரஹ்மான் oscar வாங்குனப்ப அவர பாராட்டி ஒரு பதிவு கூட போடல!!

அப்பறம் serious matter பேசுறப்ப திடீர்னு நடுவுல nicea சொந்த கதைய சொருகிடுவார்.
eg: ஹிந்தி எதிர்ப்பு பற்றிய பதிவுகள்ல விமானத்துல போயிட்டு வந்த கதைய நேக்கா நுழைத்து இருப்பார். ஹிந்தி எதிர்ப்பு பதிவுகளையும் இவரோட காரம், கோபம் ரொம்ப கம்மி. (அந்த நேரத்துல பிறக்காத எனக்கு இருக்கற கோபம் கூட அந்த பதிவுகள்ல missing).
பதிவு போடறதோட நம்ப வேலை முடிஞ்சிடுசுனு இல்லாம சமூக அக்கறையோட சில காரியங்கள் செய்வதற்காக இவர பாராட்டியே ஆவணும். eg: department of adminstrative reforms and public grievance-க்கு இவர் அனுப்பின சில புகார்கள். மதுரை காவல் துறைக்கு இவர் சற்றும் மனம் தளராமல் அனுப்பின சில குறுஞ்செய்திகள். பதிவர் கூட்டத்தில் விவாதிக்கும் விஷயங்கள்......

மதுரை style-லில் சில விஷயங்கள கமுக்கமா கிண்டல் பண்ணி இருப்பார்.
eg:
//ஒரு சீரியலை இரண்டு தடவை பார்த்துவிட்டு, பிறகு எத்தனை நாள் கழித்துப் பார்த்தாலும் கதை புரிகிறது. (அப்படி ஒன்று இருந்தால்தானே!) //-- நெனைச்சி நெனைச்சி சிரிக்க வைத்த கிண்டல்.

சொல்ல வர்ற விஷயத்த நேரடிய சொல்லாம சில சமயம் சொந்த கதை, சம்பந்தமே இல்லாத சில பல விஷயத்த எல்லாம் ஒரே பதிவுல cover பண்ணாலும் இறுதி வரைக்கும் tempo maintain பண்ணி interestingave பதிவ முடிப்பார்.

திடீர்னு சொல்லாம கொள்ளாம பத்து-இருபது நாளுக்கு பதிவே போடாம காணாம போயிடுவார். பதிவு உலகத்துல உங்க presence இருக்கணும்னா வாரத்துக்கு ஒரு பதிவாவது போடுங்கனு தாழ்மையோட கேட்டுக்கொண்டு (retire ஆயிட்டு வீட்ல சும்மா தான உக்காந்து இருக்கீங்க) என்னோட விமர்சன மடல முடித்து கொள்கிறேன்.

--வோட்டாண்டி

*

Monday, March 23, 2009

300. கடவுள் என்றொரு மாயை ... 2

*

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12




*


கடவுள் என்றொரு மாயை



THE GOD DELUSION

THE GOD DELUSION


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


==========================================

இனி வருபவை அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================



மதங்களுக்கு நம் சமூகம் தரும் அதீத மரியாதையைத் தெளிவாகக் காண்பிக்க கீழ்வரும் நிகழ்வைத் தருகிறேன்.

2006 பிப்ரவரியில் நடந்த ஒரு உலகளாவிய நிகழ்வு வேடிக்கையும் வேதனையும் கலந்தது. 2005 செப்டம்பரில் டென்மார்க் நாட்டுச் செய்தித்தாள் – Jyllands-Posten – முகமது நபியின் படங்கள் பன்னிரண்டை வெளியிட்டன. அதிலிருந்து அதற்கு அடுத்த மூன்று மாதங்களுக்கு டென்மார்க்கில் அரசியல் அடைக்கலம் பெற்ற இரு இமாம்களும், அங்கு வாழும் சில இஸ்லாமியர்களின் குழுவும் இணைந்து இஸ்லாமிய நாடுகள் முழுவதிலும் டென்மார்க்கிற்கும் அந்த செய்தித்தாளுக்கும் எதிராக பெரும் புரளியைக் கிளப்பி விட்டனர்.

2005-ன் கடைசியில் இந்தத் தீய எண்ணங்கொண்ட குழு தாங்களே தயாரித்த சுற்றறிக்கை ஒன்றோடு எகிப்துக்கு சென்றனர். அங்கிருந்து அவர்களின் அந்த அறிக்கை உலகின் பல இஸ்லாமிய நாடுகளுக்கும்,குறிப்பாக இந்தோனேஷியாவிற்கும் பரப்பப்பட்டன. அந்த அறிக்கையில் டென்மார்க்கில் இஸ்லாமியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகவும், Jyllands-Posten டென்மார்க் அரசு நடத்தும் செய்தித்தாளென்ற பொய்யான செய்தியையும் பரப்பின. அதோடு அச்செய்தித்தாளில் வந்ததாக 12 படங்களும் இருந்தன. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில், அதில் இருந்த 12 படங்களில் ஒன்பது மட்டுமே அந்தச் செய்தித்தாளில் ஏற்கெனவே உண்மையில் வந்த படங்கள். புதிதாகச் சேர்க்கப்பட்ட மூன்று படங்கள் எங்கிருந்து வந்தன என்பது ஒரு பெரிய கேள்வியாக முதலில் இருந்தது. இந்த மூன்று படங்களுமே எல்லோரும் நினைத்தது போல் முகமதின் படங்கள் என்று உலகம் முழுமைக்கும் பரப்பப்பட்ட அந்த படங்கள் நிச்சயமாக அவரை இழிவுபடுத்தும் படங்களாக இருந்தன. அந்த மூன்று படங்களிலும் ஒரு படம் மற்ற படங்கள் போல் கார்ட்டூனாக இல்லாமல் ஒரு புகைப்படமாக இருந்தது. அது, தாடி வைத்த ஒரு மனிதன் பன்றி முகமூடியோடு இருப்பது போன்றது. பின்னால் அது Associated Press-ன் ப்ரான்ஸ் தேசத்து ஆள் ஒருவன் (pig-squealing contest) பன்றி போல் கத்தும் போட்டியில் ஈடுபட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் என்பது தெரியவந்தது. அந்தப் படம், இஸ்லாமுக்கும், நபிக்கும், நபியைப் பற்றி வந்த மற்ற புகைப்படங்களுக்கும், டென்மார்க்குக்கும், டென்மார்க்கின் Jyllands-Posten-க்கும் எந்த தொடர்பும் இல்லாத ஒரு புகைப்படம். ஆனால் கெய்ரோவில் ஆரம்பித்து இஸ்லாமிய நாடுகள் முழுமைக்கும் இந்தப் பொய்த்தகவல் பரப்பப்பட்டது; பரப்பியவர்கள் எதிர்பார்த்தது போலவே எல்லாமே நடந்தேறியது.

Jyllands-Posten-ல் 12 கேலிச்சித்திரங்கள் பதிப்பிக்கபட்ட பின் 5 மாதங்கள் கழித்தே இந்த பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது.

முக்கியமாக பாகிஸ்தானிலும், இந்தோனேஷியாவிலும் டென்மார்க் நாட்டின் கொடிகள் எரிக்கப்பட்டன. (எப்படி அவர்களுக்கு அந்நாட்டு கொடிகள் எல்லாம் கிடைத்தனவோ?) டென்மார்க் அரசு மன்னிப்பு கேட்கவேண்டுமென்ற கோரிக்கைகள் வலுத்தன. ( எதற்காக அந்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்? கேலிச்சித்திரங்களை அரசா வரைந்தது? இல்லை அவர்களா அதைப் பதிப்பித்தார்கள்? இஸ்லாமிய நாடுகளில் இல்லாத, அவர்களில் பலரால் புரிந்து கொள்ள முடியாத சுதந்திரமான அச்சு ஊடகம் உள்ள நாடு அது.) டென்மார்க் நாளேட்டிற்கு ஆதரவு தரும் வகையில், இங்கிலாந்து தவிர்த்து, நார்வே, ஜெர்மன், ப்ரான்ஸ், அமெரிக்க நாட்டு அச்சு ஊடகங்கள் அந்த கேலிச்சித்திரங்களைத் தங்கள் ஊடகத்திலும் அச்சேற்றின. இது எரிகிற எண்ணெயில் எண்ணெய் ஊற்றியது போலாயிற்று. டென்மார்க் தூதரகங்கள் உலகெங்கும் தாக்கப்பட்டன; அவர்களது இறக்குமதிப் பொருட்கள் புறந்தள்ளப்பட்டன.டென்மார்க் மக்கள் மட்டுமல்லாமல் பல மேற்கத்திய நாட்டு மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள கிறித்துவ ஆலயங்கள் தாக்கப்பட்டன - அவர்களுக்கும் இச்சம்பவத்திற்கும் ஏதும் தொடர்பில்லாவிட்டாலும். லிபியாவில் ஒன்பது பேர் கொல்லப்பட்டார்கள்.

பாகிஸ்தான் இமாம் ஒருவரால் கேலிப்படம் வரைந்தவரின் தலைக்குப் பத்து லட்சம் அமெரிக்கன் டாலர்கள் பரிசு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அந்தக் கேலிப்படங்கள் பன்னிரண்டு கார்ட்டூனிஸ்டுகளால் வரையப்பட்டன என்பதோ, அந்தப் பன்னிரண்டு கேலிப்படங்களில் முக்கியமான மூன்று படங்கள் டென்மார்க்கில் வரையப்படவோ, அச்சிடப்படவோ இல்லை என்பதோ தெரியாது.(அதோடு அவர் அறிவித்த பத்து லட்சம் அமெரிக்க டாலர் அவரிடம் ஏது?)

நைஜீரியாவில் பல கிறித்துவக் கோயில்கள் தாக்கப்பட்டன; கிறித்துவ கருப்பின மக்கள் தெருக்களில் தாக்கப்பட்டனர். பிரிட்டனில் நடந்த எதிர்ப்பு ஊர்வலங்களில் மக்கள் தாங்கிவந்த பதாகைகளில் சில: "இஸ்லாமைப் பழித்தவர்களை வெட்டு"; "இஸ்லாமைக் கேலி செய்தவர்களை வெட்டு"; "ஐரோப்பா இதற்கு தங்கள் அழிவின் மூலம் பதில் சொல்லியாக வேண்டும்".

இந்த நேரத்தில் நம் அரசியல்வாதிகள் பலர் எப்படி இஸ்லாம் ஒரு அமைதியையும், இரக்கத்தையும் கொண்டாடும் மதம் என்பதை நமக்கெல்லாம் நினைவூட்டிக் கொண்டிருந்தார்கள்.

பாகிஸ்தானில் நடந்த ஒரு ஊர்வலத்தில் ஒரு பெண்மணி தாங்கியிருந்த பதாகையில் எழுதப்பட்ட வாசகம்: "ஹிட்லரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்"!

யாரையும் கேலி செய்யவோ,துன்புறுத்தவோ யாருக்கும் அதிகாரமில்லைதான். ஆனால்,மதங்களுக்குக் கொடுக்கப்படும் அதீத சலுகைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியல்வாதிகள் அவர்களது கேலிச்சித்திரங்களை நித்தம் நித்தம் ஊடகங்களில் பார்க்கிறார்கள். அதை யாரும் எதிர்த்து பெருங்குரலேதும் எழுப்புவதில்லை. ஆனால் மதத்தொடர்பானவைகளுக்கு மட்டும் ஏனிந்த தனிச்சலுகைகள். மெங்கன் (H.L. Mencken) சொன்னதை இங்கு நினைவுபடுத்துகிறேன்: "ஒருவன் தன் மனைவிதான் அழகு என்றோ, அவன் தன் பிள்ளைகள்தான் புத்திசாலிகள் என்றோ சொல்லும்போது அவனது கூற்றை எந்த அளவுக்கு நாம் மதிப்போமோ அந்த அளவிற்கு மட்டுமே மற்றவர்களின் மதக்கோட்பாடுகளை நாம் மதிக்க வேண்டும்".(pp 46-50)


*

ஆக, இந்தப் பதிவில் என் தனிக்கருத்துக்கள் ஏதுமில்லை; தேவையுமில்லை.


*

Friday, March 20, 2009

299. கதைக் கரு ஒன்று தேடி ...

*

சென்ற மாதத்தில் ஒரு நாள் காலை அமெரிக்க தூதரகத்தின் முன்னால் தேவுடு காக்க வேண்டியதிருந்தது. பக்கத்தில் இருந்த ஒரு போன் பூத்துக்கு அருகில் இரு சக்கர வாகனத்தில், நண்பர் ரிச்சர்ட் டாக்கின்ஸ் உடன் இருக்க இரண்டு மணி நேரம் அங்கிருந்தேன். அவ்வப்போது வாசித்துக் கொண்டும், சுற்றி நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டும் காலம் கடத்தினேன்.

அமெரிக்கா செல்ல விசா வாங்க வந்த மக்கள் தங்கள் நேர்காணல் முடித்துவிட்டு, தெரிந்துவிட்ட முடிவுகளோடு வந்து கொண்டிருந்தார்கள். தனியாக வந்தவர்களில் பலரும் நானிருக்கும் இடத்திற்கருகிலிருந்த போன் பூத்துக்கு வந்து தொலைபேசினார்கள்.ஒட்டுக்கேட்க முடியாத தூரம். ஆனால் பலருக்கும் வெளியே யாராவது காத்திருந்தார்கள் என்னைப் போலவே. அவர்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது ரொம்ப interesting ஆக இருந்தது. (இந்த interesting-க்கு ஒரு நல்ல தமிழ்ச்சொல் தேடிக்கொண்டே இருக்கிறேன்; உதவி கேட்டும் இன்னும் யாரும் உதவவும் வரவில்லை!) பார்த்தவைகளை வைத்து அவர்களின் பின்புலம், விசா கிடைத்தவர்கள் கிடைக்காதவர்கள், அவர்களின் reactions எல்லாம் பார்க்க நன்றாயிருந்தது. பார்த்தவைகளை வைத்து, தெரியாதவைகளை நானே கற்பனை செய்து பார்த்தேன். இரண்டு மணி நேரமும் விரைந்து ஓடிவிட்டது. நான் பார்த்தவைகள் கருப்பிலும், என் கற்பனைகள் வண்ணத்திலும் கீழே ...

*
பாவம் அந்த இளைஞர். தூதரகம் தாண்டி, பேருந்து நிறுத்தம் தாண்டி வந்தவருக்கு அதற்குமேல் பொறுமை இல்லை. கழுத்துப் பட்டையை ( tie), 'அடப் போங்கடா! நீங்களும் ஒங்க அமெரிக்காவும் ..' என்பதுபோல் உருவி கால்சட்டைப் பைக்குள் திணித்துக் கொண்டு தனக்குள் ஏதோ பேசிக்கொண்டே சென்றார்.

*
இன்னொரு இளைஞர். கழுத்துப் பட்டி ஏதுமில்லைதான். ஆனால் அசத்தலாக உடை அணிந்திருந்தார். கையில் ஐ-போன் இருந்தது. அடிக்கடி அதில் பேசிக்கொண்டிருந்தார். ஒரு இடத்திலும் இருப்புக் கொள்ளாமல் தவிப்போடு இருந்தார். பிரசவ வார்டு முன்னால் அங்குமிங்கும் அலையும் மனிதர் போல் இருந்தார்.

கையில் ஐ-போன்; ஆகவே அமெரிக்காவிலிருந்து வந்தவராக இருக்க வேண்டும். புது மாப்பிள்ளையாக இருக்க வேண்டும். தன்னோடு புது மனைவியை அழைத்துச் செல்ல, மனைவியை விசாவிற்காக அனுப்பி விட்டு, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற தவிப்பில் மனுசன் இருந்திருக்க வேண்டும். என்ன ஆச்சோ; முடிவு தெரியவில்லை.

*
இரு இளம் பெண்கள். ஒருவர் முகத்தில் பரவசம்; அடுத்த பெண் முகம் இருளடைந்திருந்தது. முதல் பெண் தன் மகிழ்ச்சியை முழுவதுமாகக் காட்ட முடியாத நிலை. அடுத்த பெண்ணுக்கு ஏதோ சமாதானம் சொல்லிக்கொண்டு வந்தார் என்று நினைக்கிறேன்.

அந்தப் பெண்கள் ஒரே இடத்தில் வேலை செய்பவர்களாகவோ அல்லது விசாவுக்கு வரிசையில் நிற்கும்போது நன்கு பேசி அதனால் தோழமை கொண்டவர்களாகவோ தோன்றியது. விட்டால் விசா கிடைத்த பெண் தெருவிலேயே துள்ளிக் குதித்துக் கொண்டாடியிருப்பார்; ஆனால்,அடுத்த பெண்ணின் சோகத்தில் கட்டாயமாகப் பங்கெடுக்கும் நிலை.

*
இன்னொரு இளம் பெண். She was in a very formal and official attire. கோட்டு போட்டுக்கொண்டு வந்திருந்தார். தனியாக வந்தவர் முகத்தில் மகிழ்ச்சி. நேரே தொலைபேசப் போனார்.

சில மாதங்களுக்காக இங்கு வேலைபார்க்குமிடத்திலிருந்து அமெரிக்கா செல்லும் பெண்ணாக இருக்க வேண்டும். நேரே அலுவலகத்திலிருந்தே வந்திருப்பாரென நினைக்கிறேன்

*
அடுத்தது, ஒரு குடும்பம். தாய், தந்தை, 8-10 வகுப்புகளில் படிக்கக்கூடிய ஒரு மகன், மகள். தாய் விசாவிற்காக வந்திருக்கிறார்; கிடைத்தும் விட்டது.

நடுத்தரக் குடும்பம்; தாய் அமெரிக்கா செல்ல இருக்கிறார். விசா கிடைத்ததில் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி; அந்த அம்மாவுக்கும்தான். ஆனால் அந்த ஆளுக்கு அதில் விருப்பமில்லை போலும். முகத்தில் மகிழ்ச்சி இல்லை. பொறாமையா, ஆற்றாமையா தெரியவில்லை. அவரால் தடுக்கவும் முடியாது என்பதும் நன்கு தெரிந்தது. சரியான MCP ஆக இருப்பார் போலும்! மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாத அவஸ்தையில் இருந்தார். அதனால் அந்த அம்மா தன் மகிழ்ச்சியை தன் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்ளாது இருந்தார்.



*
அடுத்து இரு பெரியவர்கள். தம்பதிகள். இருவருக்குமே என்னைவிட வயது அதிகம் இருக்கும்.

வழக்கமாக பெற்றோர்களை அழைப்பதே baby sitting என்பதற்காகத்தான் என்று சொல்வதுண்டு. இவர்கள் போனால் இவர்களை யார் கவனிப்பது என்று தோன்றியது. இங்கிருந்து செல்லும் பெற்றோர்கள் அங்கே இருப்பது ஒரு golden cage-ல் இருப்பது போன்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நான்கு சுவர்களுக்குள் மாதக்கணக்காக இருந்து ஓடிவந்ததாகச் சொன்னவர்களும் உண்டு. 'ஞாயிற்றுக் கிழமை கோவிலுக்குப் போவோம்; அன்றுதான் மற்ற மனிதர்களைப் பார்ப்பது பேசுவது எல்லாமே' என்ற ஒரு நண்பன்; 'சாயந்தரம் ஆச்சா .. அப்படியே வெளியே போய் ஒரு டீ அடிச்சிட்டு நாலு நண்பர்களோடு அரட்டை அடிச்சிட்டு வீட்டுக்கு வர்ர சுகம் இல்லை'டா' என்று சொன்ன நண்பன்; 'வேற வழியே இல்லையா; எத்தனை நாள் சும்மா உக்காந்துகிட்டே இருக்கிறதுன்னு பிள்ளையாண்டானோட கணினியில் உக்காந்து மயில் அனுப்பப்பழகி, இப்போ ப்ளாக் எழுதுற அளவுக்கு வந்தாச்சு' என்ற நண்பன் -- இவர்களெல்லோரும் நினைவுக்கு வந்தார்கள்.

*
கடைசியில் மகளும் வந்தாள் மகிழ்ச்சியாய் தலையை ஆட்டிக் கொண்டே ...

*
எத்தனை எத்தனை மனித உணர்வுகள். நல்லா கதை எழுதுற ஆள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலே அவருக்குப் பல கதைக் கரு அங்கே கிடைக்குமென்று தோன்றியது. என்னைப் போன்ற மொடாக்குகள் வெறுமனே வேடிக்கை பார்க்க மட்டும்தான் லாயக்கு என்றும் தோன்றியது.


********************

எங்க ஊரு ஆளுகதான் அந்த விஷயத்தில ரொம்ப மோசம் அப்டின்றது என் நினைப்பு. வரிசை அப்டின்ற தத்துவமே பிடிக்காத ஆட்கள் எங்க ஊரு ஆட்கள். ATM-ல் அனேகமாக மாதத்திற்கு இரண்டு தடவையாவது யாருடனாவது சண்டை போட்டே ஆக வேண்டியதிருக்கிறது. அதென்னவோ தெரியவில்லை ... வரிசையில் ஒருத்தனுக்குப் பின்னால நான் நிக்கலாமா அப்டின்ற 'தன்மான' உணர்வு மிக்க ஆளுக எங்க ஊரு ஆளுக! அப்படி ஒண்ணும் பெரிய வரிசையாக இருக்காது. ஆனாலும் ஏற்கெனவே நிற்பவரின் பின்னால் வந்து நின்றால் அது ஒரு பெரிய பிரஸ்டீஜ் விஷயமாகப் போகிறது எங்க ஆளுங்களுக்கு. ஏதாவது சொன்னால், 'நீங்க போங்க சார்; உங்களுக்குப் பிறகுதான் நான் போவேன்' என்பார்கள்; ஆனால் வரிசையில் மட்டும் நிற்க மாட்டார்கள். நான் கேட்டால் இந்த வசனம். கேட்காமல் விட்டால் முடிந்தால் நம்மைத் தாண்டி போக முற்படுவார்கள். இந்த மாதிரி ஆட்களுடன் கட்டாயமா சண்டைதான். அதென்னமோ இந்த மாதிரி ஆட்களைக் கண்டால் அப்படி ஒரு எரிச்சல். இதில் என்ன வயித்தெரிச்சல் என்றால், வயசு, படிப்பு, சமூக நிலை இதுபோன்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் நிறைய மனிதர்களை இப்படிப் பார்க்க முடிகிறது.

சரி, நம்ம ஊர் மக்கள்தான் இப்படி என்ற நினைப்பில் இருந்த எனக்கு சென்ற வாரம் சென்னை விமான நிலையத்தில் உள்ளே போவதற்கு சீட்டு வாங்குமிடத்தில் இன்னொரு அனுபவம். கூட்டமேயில்லை. ஒருவர் சீட்டு வாங்கிக்கொண்டிருக்கிறார். நான் அவருக்குப் பின்னால் போய் நிற்கிறேன். அப்போது என்னைவிட ஓரிரு வயது குறைந்த மனிதர் வந்து என்னைத் தாண்டிப் போய் ஓரமாக நின்றார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். மனிதர் ஓரக்கண்ணால் என்னை இருமுறை பார்த்தார்; சரியான திருட்டிப் பார்வையாகத் தோன்றியது. என்ன செய்கிறார் என்று பார்த்தேன். முன்னால் இருந்தவர் சீட்டு வாங்கிச் சென்றதும் இந்த மனிதர் சீட்டுக்கு காசைக் கொடுத்தார். 'ஹலோ! சினிமா டிக்கெட்டு எடுக்கிற பழக்கமோ' என்றேன். மனிதர் என் பக்கமே இப்போது திரும்பவில்லை. கையிலிருந்த ரூபாய் நோட்டால் அவர் கையைத் தட்டி, 'ஹலோ உங்களத்தான் கேட்டேன்' என்றேன். மனுசன் கண்டுக்கவேயில்லை. இங்கிலிபீசுல மூணு வார்த்தை செமையா சொல்லித் திட்டினேன் அவர் காதுபட. சும்மா சொல்லக் கூடாது. கல்லுளி மங்கன். அதுக்கும் அசையவேயில்லை. சீட்டை வாங்கிட்டு நடையைக் கட்டினார். உள்ளே போனால் என் குடும்பத்திற்குப் பக்கத்திலேயே அவர் குடும்பமும் நிற்க, என்னைப் பார்த்ததும் கொஞ்சூண்டு ஒதுங்கிக்கொண்டார்.

எப்படி பணம்,பதவி, படிப்பு, அந்தஸ்து, அது இதுன்னு சொல்லுவாங்களே அதெல்லாம் இருக்கிற ஆளுக கூட இப்படி நடந்துக்கிறாங்கன்னு தோன்றியது.

அதே சமயத்தில, 'இதில என்ன இருக்குன்னு இந்த ஆளு இப்படி நடந்துக்கிறான்; ஒரு நிமிஷம் நான் வாங்கப் போறேன்; அடுத்த நிமிஷம் அவன் வாங்கிட்டு போறதை விட்டுட்டு இப்படி indecent-ஆக நடந்துக்கிறான்' அப்டின்னு அவர் என்னையப் பத்தி நினச்சுக்கிட்டு போவாரில்ல என்றும் தோன்றியது.

ஆமா, அவரா அல்லது நானா ... யாரு நல்லவரு ... யாரு கெட்டவரு..?


*

Saturday, March 07, 2009

298. கடவுள் என்றொரு மாயை --- 1

*

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:

298. கடவுள் என்றொரு மாயை ... 1
300. கடவுள் என்றொரு மாயை ... 2
303. கடவுள் என்றொரு மாயை ... 3
305. கடவுள் என்றொரு மாயை ... 4
306. கடவுள் என்றொரு மாயை ... 5
309. கடவுள் என்றொரு மாயை ... 6
317. கடவுள் என்றொரு மாயை ... 7
330. கடவுள் என்றொரு மாயை ... 8
339. கடவுள் என்றொரு மாயை ... 9
344. கடவுள் என்றொரு மாயை ... 10
346. கடவுள் என்றொரு மாயை ... 11
347. கடவுள் என்றொரு மாயை ... 12


*


கடவுள் என்றொரு மாயை


THE GOD DELUSION


*


*


RICHARD DAWKINS
First Mariner Books edition 2008


According to the dictionary supplied with Microsoft Word: delusion = a persistent false belief held in the face of strong contradictory evidence, especially as a symptom of psychiatric disorder" (pp28)


delusion: தவறு என நிரூபிக்கப்பட்ட போதும் தொடர்ந்து அவைகளை நம்புதல்; ஒரு மனநோய்க்கான அறிகுறி.



இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் இது. வாசிக்க ஆரம்பித்ததுமே மிகவும் பிடித்துப் போனது. இருக்காதா, பின்னே! நம்ம 'சைடு' ஆளாச்சே. ஆரம்பித்திலிருந்தே நிறைய கருத்துக்கள் பிடித்துப் போக, அதிலும் அவர் ஒன்று சொல்கிறார்: இப்போதைய உலகத்தில் வெளியே தெரிவதைவிடவும் நிறைய பேர் கடவுள் மறுப்பாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.(பக்:26) ஆனாலும் தனிப்பட்ட காரணங்களாலும், சமூகக் காரணிகளாலும் இதில் பல பேர் வெளிப்படையாக தங்கள் கருத்தை (தங்களுக்கே கூட) காண்பித்துக் கொள்வதில்லை. இப்படி இருக்கிற ஆளுககிட்ட இந்த நூல் சொல்ற சேதிகளை பண்டமாற்று செய்துகொள்ள வேண்டுமென்ற ஆவலில் இந்தத் தொடர் பதிவுகளை இட நினைத்துள்ளேன்.

அவ்வப்போது, அங்கங்கே பிடிக்கிற இடங்களை தமிழ்ப்படுத்தி இங்கு இடலாமென ஆவல். சொல்கின்ற கருத்துக்கள் எல்லாமே ஆசிரியர் ரிச்சர்ட் டாக்கின்ஸின் கருத்துக்களாகவே இருக்கும். நான் ஏதாவது சொல்ல ஆசைப்பட்டால் அதைக் கருப்பில்லாத வேறு வண்ணத்தில் தருவதாக உத்தேசம். அப்போதுதானே கேள்வி-பதிலுக்கும் வழியிருக்கும்.

==========================================

இனி வருபவை அப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:

=========================================

ROBERT M. PIRSIG (Author of ZEN AND THE ART OF MOTORCYCLE MAINTENANCE:

WHEN ONE PERSON SUFFERS FROM A DELUSION, IT IS CALLED INSANITY. WHEN MANY PEOPLE SUFFER FROM A DELUSION IT IS CALLED RELIGION. (pp 28)

புரிஞ்சிருக்குமே; அதான் தமிழில் சொல்லலை!!

========================================



ஐன்ஸ்டீன் கூற்றுக்களில் சில:

* நான் கடவுள் நம்பிக்கையற்ற, ஆனால் ஓர் ஆழமான ஆன்மீகவாதி. இது ஒரு புதுவகையான மதம்தான். (I am a deeply religious nonbeliever. This is somewhat new kind of religion.)

* கடவுள் என்னும் கோட்பாடு எனக்கு ஏற்புடைத்ததல்ல; அது அறிவுக்குப் புறம்பானது.

* இயற்கைக்கு ஏதோ ஒரு குறிக்கோளோ அர்த்தமோ இருப்பதாக நான் நினைக்கவில்லை. இயற்கையின், இந்தப் பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும், அதில் இன்னும் நம் அறிவுக்கு எட்டாதிருக்கும் அறிவியல் உண்மைகளையும் நினைத்து, அறிவுள்ள எவனும் தன்னை மிகவும் அற்பமான ஒன்றாக உணரவேண்டும்.இதுவே உண்மையான சமயச் சார்பான சிந்தனையாகும். இந்த சமய உணர்வுக்கும் மதங்கள் பேசும் இறைத்தன்மைக்கும் ஏதும் தொடர்பில்லை. (pp 36)


ஐன்ஸ்டீனின் மத மறுப்பு அறிக்கைகளுக்குப் பிறகு அவரைக் கண்டித்து பலரும் எழுதியும் பேசியும் வந்தனர். எல்லா பெரிய மனிதர்களையும் போலவே ஐன்ஸ்டீனும் கடைசிக் காலத்தில் கிறித்துவரானார் என்ற புரட்டுச் செய்திகளும் அவர் காலத்திற்குப் பிறகு பரப்பப்பட்டன!
====================================


CARL SAGAN in his book, "PALE BLUE DOT":

எந்த ஒரு பெரிய மதமாவது அறிவியல் உண்மைகளை அறிந்து, பின், "அடே! நாம் நினைத்தவைகளை விடவும் இந்தப் பிரபஞ்சம் பெரியது; நம் நபி / தூதுவர் / (புத்தகத்தில்: prophet) சொன்னதைவிடவும் மகத்தானது; பிரமிப்பூட்டுவது" என்று ஏன் சொல்வதில்லை? அதற்குப் பதிலாக, "இல்லை .. இல்லை ..! என் கடவுள் அப்படி ஒன்றும் பிரமாண்டமானவரில்லை; (அவர் இந்த உலகுக்கானவர் மட்டுமே)" என்றுதான் சொல்கிறது. (நம் மதங்கள் யாவுமே பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்பதை நினைவில் கொள்வதில்லை; மனிதகுலம், இந்த நமது உலகம் இதைத்தாண்டி யோசிப்பதில்லை.) (pp 33)

=====================================
DOUGLAS ADAMS:

இந்த தடவை எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடணும் அல்லது போடக்கூடாது; நீ ஓட்டு போட்டது சரியான முடிவல்ல - இப்படி எதைப் பற்றியும் நாம் விவாதிக்கலாம். ஆனால் (sabath day for jews)சனிக்கிழமை நீ எந்த வேலையும் செய்யக்கூடாது என்றால் அதைப்பற்றி விவாதிக்கக் கூடாது; ஏனெனில், அது மதம் தொடர்பானது; கேள்வி கேட்காமல் அதை மதிப்பதே சரி! என்பது எவ்விதத்தில் சரி.

சமயம் தொடர்பான நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக்கூடாது என்று நாம் நமக்குள் ஒரு வழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறோம் என்பதைத் தவிரவும், பகுத்தறிவோடு சிந்தித்தால் எல்லாவற்றையும் போல் இந்த மத நம்பிக்கைகளையும் நாம் ஏன் வெளிப்படையாக விவாதிக்கக்கூடாது? (pp 43)
=====================================

மதம் என்றால் சட்டமும் வளையும்.

மதம் என்றாலே சும்மா அதிருதில்ல ...!

2006-ம் ஆண்டு, பிப். 21-ம் தேதி வழக்கு ஒன்று அமெரிக்க உச்ச நீதி மன்றத்திற்கு வந்தது.
Centro Espiritia Beneficiente Uniao do Vegetal என்ற ஒரு கிறித்துவ மதக் குழு தடை செய்யப்பட்ட dimethyltryptamine என்ற வேதிப்பொருள் அடங்கிய hoasca tea-யைக் குடித்தால்தான் தங்கள் கடவுளோடு தாங்கள் ஐக்கியமாக முடியும் என்றும் அதனால் அந்த டீயை அருந்த தங்களுக்கு உரிமை வேண்டும் என்று ஒரு வழக்குத் தொடர்ந்தனர். மதத்தின் பெயரே இங்கு ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்பட்டது. வழக்கும் வென்றது! மதம் என்னும் தாயத்து செய்த மாயம் அது!

2004-ம் ஆண்டு ஜேம்ஸ் நிக்சன் என்ற மாணவன் ஒரு டி-சட்டையைத் தன் பள்ளிக்கு அணிந்து வந்தான். அதில், "ஓரினச்சேர்க்கை பாவம்; இஸ்லாம் ஒரு பொய்; கருச்சிதைவு கொலைக்குச் சமம்" என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. பள்ளி அவன் அந்தச் சட்டை அணிவதை அனுமதிக்க மறுத்தது. பெற்றோர்கள் வழக்கு மன்றத்திற்குச் சென்றனர். அவர்கள் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் என்ற அடிப்படையில் வழக்கை நடத்தவில்லை. பதிலாக, "மதச் சுதந்திரம்" என்பதே வழக்கின் அடிப்படையாக எடுக்கப் பட்டது; வழக்கும் வெற்றி கண்டது.

இதுபோல் பல வழக்குகள். அதிலும் ஓரினச்சேர்க்கைக்கு எதிர்த்து பல வழக்குகள். இந்த வழக்குகள் எல்லாமே 'நான் கிறித்துவனாக இருப்பதால் எனக்கு அடுத்தவனின் தனிப்பட்ட செயல்களிலும்கூட மூக்கை நுழைக்க உரிமையுள்ளது' என்ற நினைப்பில்தான் தொடுக்கப் பட்டன; வெற்றியும் பெற்றன. (pp44-46)



*

இன்னும் வரும் ...





*

Monday, March 02, 2009

297. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும் ... 3

*

தொடர்புடைய ஏனைய பதிவுகள்:
1.289. கூடல் நகரின் பதிவர் கூட்டம்.
2.290. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 1
3.293. தமிழார்வலர்களுக்கு ஓர் அறைகூவல்!
4.291. கூடல் நகரின் பதிவர் கூட்டமும் "தொடர் ஓட்டமும்" - 3

*


தமிழ் விடுதலை ஆகட்டும் !

சி. ஜெயபாரதன், கனடா

பதிவர் ஜெயபாரதன் என் முந்தைய பதிவிற்குப் பின்னூட்டமாக பின்வரும் கட்டுரையை அனுப்பியிருந்தார். ஆனால் அது பல பின்னூட்டங்களோடு பத்தோடு ஒன்றாகப் போய்விடக் கூடாதென்பதற்காக அவருடைய அனுமதியோடு தனிப் பதிவாகவே இங்கு அளிக்கின்றேன்.

தமிழ்மொழியில் பிற மொழிக் கலப்புகளைப் பற்றி, அதன் அவசியத்தைப் பற்றி எழுதுவதற்கு இவருக்கு முழுமையான தகுதியுள்ளது. ஏனெனில் அணு ஆய்வில் பல்லாண்டுகால அனுபவமும், அதே நேரத்தில் இலக்கிய ஆர்வமும், படைப்பாற்றலும் பெற்ற இவரைவிடவும் யாருக்கு அந்த தகுதி இருக்கப் போகிறது.


===================================
அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லவும்.

அவரது வலைப்பூவின் முகவரி:
http://jayabarathan.wordpress.com/

==========================



புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! …

சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! ….

என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!

மகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)

தலைமுறை ஒரு கோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்! ….
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

பாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)


மின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்

உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாச்சாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தூய தமிழரும், தூய தமிழும்

ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றைப் புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?

அன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசி யிருக்கலாம்! திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.

2500 ( ?) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!

தூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்!

நண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் (Pathivukal.com)[2] என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார்! என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார்! அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன்! வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்! வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ? நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.

தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!

பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த நுட்ப விஞ்ஞானப் பொறியியற் திறங்களையும், புத்தம் புதிய கலைகளையும் தமிழ்மொழியில் படைத்திடப் பின்வரும் பாடலில் நமக்கெல்லாம் கட்டளை யிட்டுச் சென்றிருக்கிறார்.

புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!

என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!

ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் பெண் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரியா வித்தியாலய உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது! தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது! ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன! இதே போல் எத்தனையோ தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை! புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன்! திரு இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்!

இதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடைகளில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம்! ஆயினும் அது ஒற்றைப் பணிதான்! நூறு பணிகள் அல்ல! அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார்! ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்! தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்!

போலித் தமிழர்கள் ! தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !

தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ் நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !

தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள்! தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன! இது போன்று வங்காளத்தில் உண்டா ? பஞ்சாப்பில் உண்டா ? மகாராஷ்டிராவில் உண்டா ? தமிழ் நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு! அவர்கள்தான் போலித் தமிழர்கள்!

ரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்; உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.

சலுகை போனால் போகட்டும்! என்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒருகோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!

என் உயிர் போனால் போகட்டும்!
என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும்‘, என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.

***********

தகவல்:

1. http://www.geotamil.com/pathivukal/jeyabarathan_on_buhari_oct2005.html

2. http://www.geotamil.com/pathivukal/response2_on_jeyabarathan.html

3. http://www.geotamil.com/pathivukal/response3_by_jeyabarathan.html

4.http://www.geotamil.com/pathivukal/response6_jeyabarathan_barathithasan.html